MNMN 12

MNMN 12
இன்று சாகித்யாவும் நரேஷும் அவர்களின் தேனிலவு பயணத்திற்கு கிளம்புகின்றனர். அவர்கள் தேனிலவு பயணம் முடிந்ததும், அங்கிருந்து அப்படியே டெல்லிக்கு செல்வது தான் அவர்களின் திட்டம். அதாவாது இப்போதே சாகித்யா மறுவீடு சடங்கு முடிந்து புகுந்த வீட்டிற்கு செல்வதாக அர்த்தம். அதனால் அனைவருமே ஒருமாதிரி நெகிழ்வான மனநிலையில் இருந்தனர்.
யாரும் சாகித்யா முன் அழுதுவிட கூடாது என்பதில் கவனமாக இருக்க, நிவேத்யாவால் அது முடியவில்லை. அவளையும் மீறி அவள் அழுதுவிட்டாள். இதற்கும் இந்த ஒன்றரை வருடமாக தான் இவர்கள் சேர்ந்து இருக்கின்றனர். ஆனாலும் சகோதரிகள் என்பதை விட, தோழிகள் போல் மூவரும் ஒன்றாக சுற்றி கொண்டிருக்க, அதில் இப்போது சாகித்யா பிரிந்து செல்வதால் நிவேத்யாவால் அதை தாங்கி கொள்ள முடியவில்லை.
“என்ன நிவி இது, சாகி கிளம்பும்போது அழக் கூடாதுன்னு சொன்னேனா இல்லையா?” என்று ஜானகி அவளை கடிந்து கொள்ள,
அவள் அழுவதை பார்த்து அவள் அருகில் சென்று அவளுக்கு ஆறுதல் கூற மனம் துடித்தாலும் சிவாதித்யனால் அது முடியாமல் அமைதியாக அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்.
“என்ன நிவி இது, நாம தான் முன்னமே பேசிக்கிட்டோமே, நாங்க டெல்லிக்கு வந்ததும், நீங்க எல்லாம் அங்க வாங்க, எல்லாம் ஜாலியா ஊர் சுத்தலாம், அதுக்குப்பிறகும் அடிக்கடி வீக் என்ட்க்கு நாம சந்திக்கலாம், அப்புறம் எதுக்கு அழற,” என்று சாகித்யா தான் அவளை சமாதானப்படுத்த,
“ஆமாம் அது உங்க ஃப்ரண்ட்க்காக தானே சொன்னீங்க, அவங்க போனப்பிறகு எங்களை பார்க்கல்லாம் அடிக்கடி வருவீங்களா?” என்று நிவேத்யா கேட்கவும்,
“பேசாம உன்னையும் டெல்லியில் ஒரு மாப்பிள்ளை பார்த்து கட்டி கொடுக்க சொல்றேன்.” என்று கஸ்தூரி அதற்கு பதில் கூறினார்.
மறுவீட்டு சடங்கு முடிவதால் சில முக்கிய உறவினர்கள் வந்திருக்க, அவர்களுடன் அவரும் வந்திருந்தார். நிவேத்யா அழுவதை பார்த்து அப்படி சொன்னவர், “என்ன இருந்தாலும் பொண்ணா பிறந்தவ இன்னொரு வீட்டுக்கு போகத்தானே வேண்டும், உனக்கும் கல்யாணம் ஆனா நீயும் இன்னொரு வீட்டுக்கு போகத்தானே வேண்டும், இதெல்லாம் காலகாலமா நடக்கறது தானே,” என்று வழக்கம்போல் அவர் இருப்பை காட்டுவதற்காக அவர் பேச,
“ஏன் அது அது அப்படியே தான் நடக்கணுமா? நாங்க மாத்துவோம், எனக்கு இந்த ஏரியாவிலேயே எங்க அப்பா மாப்பிள்ளை பார்ப்பார். அந்த வீட்டில் இருப்பதை விட நான் இங்க தான் அதிகம் இருப்பேன். முடிஞ்சா வீட்டோட இருப்பது போல கூட அவர் எனக்கு மாப்பிள்ளை பார்ப்பார். உங்களுக்கு என்ன வந்துச்சாம்?” என்று நிவேத்யாவும் அவருக்கு இணையாக பதில் பேசவும்,
“நிவி,” என்று ரவிச்சந்திரன் அழைத்ததிலேயே உடனுக்குடன் பேசாதே, என்ற அவரின் கண்டிப்பு தெரிந்தது.
“ம்ம் உன்னோட அப்பா வீட்டோட மாப்பிள்ளை பார்க்கப் போறானா? நானும் அதை பார்க்கத் தானே போறேன்.” என்று கஸ்தூரி சொல்லி கொண்டிருக்க, அதை கேட்டுக் கொண்டிருந்த சிவாதித்யனுக்கு அந்த பேச்சு இனிக்கவில்லை.
இத்தனைநாள் எப்படியோ, ஆனால் இப்போது நிவேத்யாவிற்கும் அவன் மேல் காதல் இருப்பது அவன் அறிந்த ஒன்றே, இருவரும் வெளிப்படையாக சொல்லிக் கொள்ளவில்லையென்றாலும் ஒருவருக்கொருவர் காதலை நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். அப்படியிருக்க அவள் ஏன் இப்படி பேசுகிறாள்? என்று அவன் புரியாத பார்வை பார்க்க,
இதில் ஆத்யா வேறு, “நிவி எப்படி பேசுறான்னு பாரு ஷிவ், அவளும் உன்னை காதலிக்கிறது போலத்தானே தெரியுது, அப்படியும் ஏன் இப்படி பேசுறா,” என்று அவன் நினைத்ததையே சொன்னவள்,
“நீ இதுக்கு மேலேயும் டிலே செய்யாத, சீக்கிரம் வெளிப்படையா நிவியிடம் பேசு, நாளைக்கு என் மனசில் அப்படி எதுவுமில்லைன்னு அவ சொல்லிட்டா அதை உன்னால தாங்கிக்க முடியாது. நீ கஷ்டப்பட்டா, எனக்கும் அது ரொம்ப கஷ்டமாயிருக்கும்,” என்று கூற, சிவாதித்யனுக்கும் அதேதான் உள்ளுக்குள் ஓடி கொண்டிருந்தது.
ஆனால் நிவேத்யாவை தனியாக அழைத்து பேசுவது தான் சாத்தியமில்லாத ஒன்றாக இருந்தது. ஆத்யா முன்பு சொன்னது போல் அவள் கல்லூரிக்கு சென்றுவிட, சிவாதித்யன் உடனான தனிமையை நிவேத்யா தவிர்த்து வந்தாள். ஆனால் அவனுமே அவளை தனியாக அழைத்து பேச எந்த முயற்சியும் எடுக்காமல் தான் இருந்தான்.
நிவேத்யாவின் அந்த பேச்சு மனதில் ஒரு ஓரமாக அவனுக்கு உறுத்தி கொண்டேயிருக்க, அதுதான் அவனை அமைதியாக இருக்க வைத்திருந்தது. முதலில் நிவேத்யா அதை உணரவில்லையென்றாலும், அதன்பின் அவனது ஒதுக்கத்தை அவள் உணர ஆரம்பித்தாள்.
ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவளுடன் பேசுபவன், இப்போது அப்படி எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் தேடவில்லை என்பது அவளையும் உறுத்தியது. அவளால் அவனை தேடி போய் அதை கேட்கவும் முடியவில்லை.
இப்படியிருக்க அன்று ஜானகி, கோமளா, வனிதா, தேவ் அனைவரையும் ரவிச்சந்திரன் சென்னையை தாண்டி புறநகர் பகுதியில் அமைந்துள்ள கோவிலுக்கு அழைத்து சென்றிருந்தார். சிபி அலுவலகத்திற்கு சென்றுவிட, ஆத்யாவும் கல்லூரிக்கு சென்றிருந்தாள். நிவேத்யா வேலையை விட்டு நின்றதால் அதுகுறித்து அவளுக்கு அலுவலகத்தில் கொஞ்சம் வேலை இருந்ததால் அவள் காலையிலேயே சென்றிருந்தவள், மதியம் போல் வீட்டிற்கு வந்துவிட்டாள்.
அவள் வந்த நேரம் அறிந்து கோமளா அவளை அழைத்தவர், “திவாகரன் அண்ணா ஏதோ வேலை இருந்துச்சுன்னு எங்களோட வரல, அவரும் சிவாவும் வீட்டில் இருக்காங்க, அவங்களுக்கு மதிய சாப்பாடு அங்கேயே கொண்டு போய் கொடுத்திடு, உங்க சித்தப்பாவும் ஒருவேளையா வெளியில் போனவர் மதியம் வீட்டுக்கு வந்து சாப்பிட்றதா சொல்லியிருக்காங்க பார்த்துக்க, ஆத்யா வந்தா அவளே பார்த்துப்பா,” என்று அவளிடம் சொல்ல,
“நானே பார்த்துக்கறேன் சித்தி,” என்று கோமளாவிடம் பேசிவிட்டு வைத்தவள், சிவாதித்யனுக்கும் திவாகரனுக்கும் சாப்பாடை எடுத்து கொண்டு அவர்கள் வீட்டிற்கு சென்றாள்.
வீட்டினுள் சென்றவள், “அங்கிள் அங்கிள்,” என்று குரல் கொடுக்க, சிவாதித்யன் தான் வந்தான்.
“உங்க ரெண்டுப்பேருக்கும் சாப்பாடு எடுத்துட்டு வந்திருக்கேன். அங்கிள் எங்கே?” என்று நிவேத்யா அவனிடம் கேட்க,
“ஜெயச்சந்திரன் அங்கிள் வந்திருந்தாங்க, ரெண்டுப்பேரும் வெளியில் போயிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.” என்று அவன் பதில் கூறினான்.
“ஓ சாப்பிடும் நேரத்தில் எங்க போனாங்க?” என்று அவளாகவே கேட்டு கொண்டவள்,
“சரி நீங்க சாப்பிட வாங்க,” என்று அழைக்க,
“நீ வச்சிட்டு போ, நான் சாப்பிட்டுக்கிறேன்.” என்றான் அவன்,
எப்போதும் அவளை பார்க்கும்போது இருக்கும் பார்வையோ, செய்கைகளோ எதுவுமே அவனிடத்தில் இல்லை. ஏன் என்று கேட்காமல் போகவும் மனமில்லாததால், “என்னாச்சு, ஒருமாதிரி டல்லா இருக்கீங்க, ஏதாச்சும் உடம்பு சரியில்லையா?” என்று அவனிடம் கேட்க,
“அப்படியெல்லாம் ஒன்னுமில்லையே, நான் நல்லா தான் இருக்கேன்.” என்றான் அவன்,
“அப்புறம் ஏன் என்னவோ போல இருக்கீங்க, இது உங்க இயல்பு கிடையாதே, சாகி அக்காவும் ஆத்யாவும் இல்லாம தனியா இருக்க மாதிரி ஃபீல் செய்றீங்களா?” என்று கேட்க,
“எப்போதும் அவங்க கூடவா இருக்கேன். அதெல்லாம் ஒன்னுமில்ல,” என்றவனுக்கு அவன் மனதின் உறுத்தலை அவளிடம் கேட்காமல் இருக்க முடியவில்லை.
“ஆமாம், அன்னைக்கு சகி, நரேஷ் கிளம்பும்போது உங்க கஸ்தூரி அத்தையிடம் ஏன் அப்படி பேசின?” என்று கேட்க,
முதலில் புரியாமல் விழித்தவள், பின் ஞாபகம் வந்தவளாக, “ஓ அதுவா, அவங்களுக்கு இப்படி ஏதாவது பதில் கொடுத்தா தான் கொஞ்சமாச்சும் வாயை வச்சிட்டு சும்மா இருப்பாங்க, இல்லை யார் மனசாவது கஷ்டப்படுவது போல ஏதாவது பேசிடுவாங்க,” என்றாள்.
“ஓ அப்போ அதுக்காக தான் இப்படி பேசீனியா?” என்றவனுக்கு இப்போது தான் மனதின் உறுத்தல் நீங்கியது. அவளுக்குமே அவன் எதற்காக இதை கேட்கிறான் என்பது புரியவில்லை. எதற்காக இருக்கும் என்று அவள் யோசித்தும் பார்க்கவில்லை.
சிவாதித்யனின் உறுத்தல் நீங்கியதும், இதுதான் அவளிடம் மனதில் இருப்பதை வெளிப்படையாக பேச சரியான நேரமென்பதை உணர்ந்தவன், “எனக்கு உன்னிடம் கொஞ்சம் பேசணும் நிவி, பின்னால இருக்க கார்டனுக்கு வர்றீயா?” என்று கேட்க,
அப்போது தான் அவனுடனான தனிமையை உணர்ந்தவள், “இப்போ இங்க பேசறது சரியா இருக்காது. இன்னொருநாள் பேசலாம்,” என்று சொல்லி நழுவ பார்க்கவும்,
“இந்த விஷயத்தை எல்லோரையும் வச்சிக்கிட்டு பேச முடியாது. இதுதான் சரியான நேரம் வா,” என்று அவளை கைப்பிடித்து அழைத்து கொண்டு பின்னால் தோட்டம் போல் அமைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்றான்.
இப்போது அவர்கள் மட்டும்தான் இங்கு இருப்பதாக நினைத்து கொண்டு தான் அவளை அங்கு அழைத்து சென்றான். ஆனால் திவாகரனும் ஜெயச்சந்திரனும் எங்கும் வெளியில் செல்லவில்லை. அந்த வீட்டின் மொட்டை மாடியில் தான் இருக்கிறார்கள்.
ஜெயச்சந்திரன் ஒருவேலையாக வெளியில் சென்றிருந்தவர் திரும்ப வந்ததும், திவாகரன் கோவிலுக்கு போகாமல் வீட்டிலிருப்பது தெரிந்து நேராக நண்பனை பார்க்க வந்தார். திருமண வேலைகளால் இருவராலும் சரியாக கூட பேசி கொள்ள முடியாமல் இருந்ததால், சிறிதுநேரம் இருவரும் மனம்விட்டு பேசலாம் என்று மொட்டை மாடிக்கு சென்றிருந்தனர்.
ஜெயச்சந்திரன் வீட்டிற்கு வந்தது மட்டும்தான் சிவாதித்யனுக்கு தெரியும், அவர்கள் மொட்டை மாடிக்கு சென்றதை அறியாதவன், அவர்கள் வெளியில் சென்றுவிட்டதாக நினைத்து நிவேத்யாவிடம் சொல்லிவிட்டான்.
மொட்டை மாடியிலிருந்து தோட்டத்தை நன்றாக பார்க்க முடியும், ஆனால் அவர்கள் இருவரும் மாடியில் வேறு திசையில் நின்று பேசி கொண்டிருந்ததால் இவர்கள் இங்கு இருப்பதை அறியவில்லை. இவர்களுக்கும் அவர்கள் மாடியில் இருப்பது தெரியாததால் மனம் விட்டு பேச நினைத்தனர்.
நிவேத்யாவை தோட்டத்திற்கு அழைத்து வந்தவன், “இதுக்கு மேலேயும் என்னால காத்திருக்க முடியாது நிவி, என்னோட மனசுல என்ன இருக்குன்னு உனக்கு தெரியும், அதுபோல என்னாலயும் உன்னோட மனசுல என்ன இருக்குன்னு நல்லாவே புரிஞ்சிக்க முடியுது. ஆனாலும் வெளிப்படையா எதுவும் பேசாததால எதுவும் பிரச்சனயோ குழப்பமோ வந்துட கூடாது.
அதனால நான் வெளிப்படையாகவே சொல்லிட்றேன். ஐ லவ் யூ நிவி. ஐ லவ் யூ சோ மச். நாம பார்த்து கொஞ்சநாள் தான் இருக்கும், ஆனா என்னவோ ஜென்ம ஜென்மமா பார்த்துக்கிட்டது போல ஒரு ஃபீலிங். உன்னைப்பத்தி சகியும் ஆதுவும் நிறைய பேசியிருக்காங்க, போட்டோவில் பார்த்திருக்கேன். ஆனா அப்போல்லாம் எதுவும் தோணினதில்ல, ஆனா உன்னை நேரில் பார்த்த செகன்ட்ல இருந்து இப்படியெல்லாம் தான் எனக்கு தோனுது.
என்னடா இவன் இப்படி டயலாக்லாம் விட்றான்னு நினைக்காத, நிஜமா இப்படியான ஃபீலிங்க்ஸ் தான் எனக்கு இருக்கு, உனக்கும் இப்படியான ஃபீலிங்ஸ்லாம் இருக்கா, உனக்கும் என்னை பிடிக்கும் தானே, நீயும் என்னை காதலிக்கிற தானே, இதை நான் தெரிஞ்சிக்கணும்னு ஆசைப்பட்றேன் நிவி,” என்று சொல்லிவிட்டு அவள் பதிலுக்காக அவன் காத்திருக்க,
அவளும் தயங்கவோ தாமதிக்கவோ செய்யாமல், “ம்ம் எனக்கும் அந்த ஃபீலிங்ஸ்லாம் இருக்கு,” என்று உடனே ஒத்து கொண்டாள்.
அவளின் அந்த பதிலில் மகிழ்ச்சியடைந்தவன், “இப்படி பட்டும் படாம சொன்னா எப்படி? நீயும் என்ன காதலிக்கிற என்பதை என் கண்ணை பார்த்து சொல்லு, அதுமட்டுமில்ல இதுவரை நீ என்னோட பேர் சொல்லி பேசினதே இல்லை. அதனால என்னை நேரா பார்த்து சிவா ஐ லவ் யூன்னு சொல்லு பார்க்கலாம்,” என்று சொல்ல,
அவளோ, “ஐ லவ் யூ ஆதி,” என்றாள்.
அதில் வியந்தவன், “என்ன சொன்ன? என்ன சொன்ன? ஆதின்னா கூப்பிட்ட, எல்லாம் என்னை சிவா, ஷிவ்னு தான் கூப்பிடுவாங்க, நீ என்னை டிஃபரன்டா ஆதின்னு கூப்பிட்டது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, அப்புறம் உன்னோட ஃபீலிங்ஸை ஷேர் செஞ்சதுக்கும் நன்றி.” என்று பேசியப்படியே, அவள் எதிர்பார்க்காத நேரம் அவள் இதழை தன் இதழுக்கு சொந்தமாக்கியிருந்தான்.
அது ஒரு ஆழ்ந்த முத்தமாக மாறியிருக்க வேண்டியது. ஆனால் அவனை உடனே விலக்கிய நிவேத்யாவோ தன் கண்கள் கலங்க, “என்ன செய்றீங்க ஆதி, இப்படி எல்லோரும் பார்ப்பது போல ஒரு இடத்தில் வச்சு எப்படி நீங்க இப்படி செய்யலாம்?” என்றாள் கோபத்தோடு,
“அப்போ வீட்டுக்குள்ள வச்சு கிஸ் பண்ணா ஓகே வா?” என்று அவன் கிண்டலாக கேட்க, அவளோ அழுதாள்.
“ஹே சாரி நிவி, சாரி சாரி. நான் ரொம்ப எக்ஸைட்மென்ட் ஆகிட்டேன். நீ எனக்கானவ, மை லவ். அதான் உரிமையா கிஸ் பண்ணிட்டேன். இதில் உனக்கும் விருப்பமான்னு கேட்காம செஞ்சது தப்பு தான், சாரி.” என்றான்.
“இது நீங்க வாழற நாடு இல்ல, இது இந்தியா. இங்க எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு, நாம காதலை வெளிப்படுத்திக்கிட்டதால இப்படியெல்லாம் நாம நடந்துக்கணும்னு இல்லை. கல்யாணம் வரை நாம ஒரு எல்லையோட பழகறது தான் நமக்கு நல்லது. நம்ம காதலுக்கும் கௌரவம். இதெல்லாம் நீங்க இருக்க நாட்டில் வச்சிக்கோங்க,” என்று நிவேத்யா அழுதப்படியே கோபமாக கூறினாள்.
“அப்போ நான் வேற பொண்ணுங்களை கிஸ் பண்ணா உனக்கு எந்த பிரச்சனையுமில்லையா?” என்று அவன் பாவமாக முகத்தை வைத்து கொண்டு கேட்கவும்,
“கொன்னுடுவேன். உங்க நாட்டில் இதெல்லாம் சகஜமா இருக்கலாம்னு சொல்ல வந்தேன். நீங்க கேட்பதை பார்த்தா, அப்போ பொண்ணுங்களை கிஸ் பண்ணியிருக்கீங்க, அப்படித்தானே? அதான் ஆது சொல்லியிருக்காளே உங்களுக்கு நிறைய கேர்ள் ஃப்ரண்ட்ஸ்னு, அப்போ இதெல்லாம் நடந்திருக்கும் தானே?” என்று அவள் அழுகையை நிறுத்தி விட்டு கோபத்தோடு கேட்க,
“ச்சேச்சே நீ ஆது சொன்னதை வச்சு என்னை இப்படியெல்லாம் நினைக்காத, இதுவரைக்கும் எந்த பொண்ணுங்களையும் நான் கிஸ் பண்ணதேயில்லை தெரியுமா? ஆனா ரெண்டு பொண்ணுங்க மட்டும் என்னை கிஸ் பண்ணியிருக்காங்க, அதுக்கு நான் என்ன செய்ய முடியும்?” என்று சிவாதித்யன் சொல்லும்போதே நிவேத்யா கோபம் அதிகமானது.
“அவங்க அந்த நாட்டுக்காரங்க, அந்த கிஸ் கூட அவங்க அன்பின் வெளிப்பாடு அவ்வளவு தான், ஆனா இனி எந்த பொண்ணும் என்கிட்ட கூட வர முடியாது. எனக்காக ஒருத்தி இருக்கா, தட் கேர்ள் மை லவ். அவளுக்கு இதெல்லாம் பிடிக்காது. இந்த உரிமை அவளுக்கு மட்டும்தான்னு கண்டிப்பா சொல்லிடுவேன்.” என்று அவன் கூறினான்.
“சொல்லாம இருந்து பாருங்களேன். அப்புறம் இருக்கு உங்களுக்கு,” என்று சொல்லி அவனை அடிக்க ஆரம்பித்தவள்,
“ஹே வலிக்குது நிவி,” என்று அவன் சொல்ல சொல்ல கேட்காமல்,
“அந்த பொண்ணுங்க கிஸ் செஞ்சப்ப எஞ்சாய் செஞ்சீங்கல்ல, இப்போ இதையும் வாங்கிக்கோங்க, எவ்வளவு தைரியமா இதை என்னிடம் சொல்றீங்க, என்கிட்ட இருந்து கிஸ்லாம் கிடைக்காது. உதை தான் கிடைக்கும், என்னை கல்யாணம் செஞ்சுக்கணும்னா இதுக்கு தயார் ஆகிக்கோங்க,” என்று சொல்லியப்படி அவனை அடித்து கொண்டிருந்தவள், அப்போது தான் எதைச்சேயாக மேலே பார்த்தாள்.
அங்கே திவாகரனும் ஜெயச்சந்திரனும் இவர்களை பார்த்து கொண்டிருக்க, அதிர்ச்சியில் சிவாதித்யனை அடிப்பதை நிறுத்தியவளுக்கோ, ‘இவர்கள் வெளியில் போகவில்லையா? இங்கு நடந்த அனைத்தையும் பார்த்திருப்பார்களா?” என்ற சிந்தனையில் பதட்டம் கூடியது.
ஆனால் அவள் நினைத்தது போல் அவர்கள் முன்னமே அவர்களை பார்க்கவில்லை. நிவேத்யா அடிக்க ஆரம்பித்ததும் சிவாதித்யன் கொஞ்சம் சத்தமாக கத்தவும், அப்போது என்ன சத்தம் என்று இந்த திசையில் வந்து கவனித்தவனர்.
அதுதெரியாமல் நிவேத்யா பயத்தில் பதட்டத்துடம் அவர்களை பார்க்கவும், அடிப்பதை நிறுத்துவிட்டு எதற்கு அதிர்ச்சியானாள்? எதை பார்க்கிறாள்? என்பது தெரியாமல் சிவாதித்யன் அந்த திசையில் பார்த்தவன், ஜெயச்சந்திரன், திவாகரனை கவனித்துவிட்டு,
“ஹாய் அங்கிள், ஹாய் ப்பா,” நீங்க வீட்டில் தான் இருக்கீங்களா? நீங்க கீழே இல்லைன்னதும் நீங்க ரெண்டுப்பேரும் வெளியில் போயிருக்கீங்கன்னு நினைச்சு நிவியிடம் சொல்லிட்டேன். நிவி நமக்கு சாப்பாடு கொண்டு வந்திருக்கா,” என்று சர்வ சாதாரணமாக கூறினான்.
‘எப்படி ஒன்றுமே நடக்காது என்பது போல் பேசுகிறான்.’ என்று நிவி அவனையும் ஒருபார்வை பார்த்தாள்.
“இதோ வரோம்,” என்று திவாகரன் சிவாதித்யனுக்கு பதில் கூற, பின் அவர்கள் அங்கிருந்து வேறு பக்கம் சென்றனர்.
அதன்பின் ஜெயச்சந்திரனோ, “இங்க என்னடா நடக்குது?” என்று நண்பனிடம் கேட்க,
“தெரியல பேசிட்டு இருக்காங்க, ஆனா சும்மா ஃப்ரண்ட்ஷிப்போட பேசிட்டு இருக்கோம்னு அவங்க சொன்னா அதை நம்ப முடியாது. அதையும் தாண்டி அவங்களுக்குள்ள என்னவோ இருக்கு?” என்று திவாகரன் பதில் கூறினார்.
“என்னவோன்னா என்னடா?” என்று இப்போதும் ஜெயச்சந்திரன் புரியாமல் கேட்க,
“அவங்க ஒருத்தருக்கொருத்தர் காதலிக்கிறாங்கன்னு நினைக்கிறேன். ஆனா இப்போ அவங்க பேசிட்டு இருப்பதை வச்சு எந்த முடிவுக்கும் நாம வரக் கூடாது. முதலில் அவங்கக்கிட்ட பேசி தெளிவு படுத்திப்போம், ஆனா இப்போ உடனே வேண்டாம், நாம இங்க இருப்பது தெரியாம பேசிட்டு இருந்திருக்காங்க,
இப்போ ஏதாவது கேட்டா, கண்டிப்பா சிவா பயப்பட மாட்டான். நம்மளை பார்த்ததும் எவ்வளவு சாதாரணமா பேசினான்னு பார்த்தல்ல, ஆனா நிவி பயந்துடுவா, ஆல்ரெடி ரொம்பவே பயந்துட்டான்னு தெரியுது.” என்று திவாகரன் சொல்ல, ஜெயச்சந்திரன் அமைதியாக கேட்டு கொண்டிருந்தார்.
“நாம என்னல்லாம் ஆசைப்பட்டோம், சிவாக்கு சகி, இல்லை ஆதுவை கட்டி வைக்கணும், நாம சம்மந்தி ஆகணும், இப்படியெல்லாம் நினைச்சோம், ஆனா நாம நினைச்சது எதுவும் நடக்கல இல்ல,” என்று திவாகரன் கூற,
“இப்போ மட்டும் என்னடா? இப்போதும் நாம சம்மந்தியா தான் ஆகப் போறோம், எனக்கு சாகித்யா, ஆத்யா வேற, நிவி வேறன்னு இல்லடா, என் அண்ணன் பொண்ணு எனக்கும் பொண்ணு தானே, ஏன் திவா, உனக்கு நிவியை பிடிக்கலையா?” என்று ஜெயச்சந்திரன் கேட்டார்.
“ஹே அப்படியெல்லம் இல்ல ஜெய், நிவியும் ரொம்ப தங்கமான பொண்ணு, நீ சொல்றதும் சரிதான், இப்போ நாம சம்மந்தி ஆகிட்டோமே, ஆனா இதுக்கு உங்க அண்ணன் ஒத்துக்குவாரா?” என்று திவாகரன் கேட்க,
“சிவா மாதிரி ஒரு பையனை வேண்டாம்னு சொல்வாரா? ஏற்கனவே சாகி, சிவா கல்யாணம் விஷயமா நான் பேசினப்போ, உனக்கு இந்த சம்மந்தம் திருப்தின்னா அதையே முடிக்கலாம்னு சொன்னாரு, அதேசமயம் சாகிக்கு நரேஷை தான் பிடிச்சிருக்குன்னு தெரிஞ்சப்ப, நானே கொஞ்சம் தயங்கின போதும், அவர் தான் சாகித்யா விருப்பத்துக்கு தடையா நிக்க கூடாதுன்னு என்கிட்ட எடுத்து சொன்னாரு, அதனால நிவி விஷயத்திலும் இப்படித்தான் நடந்துப்பாரு,” என்று ஜெயச்சந்திரன் சொல்லவும்,
“அப்போ ரொம்ப சந்தோஷம், சீக்கிரமா இந்த விஷயத்தை கன்ஃபார்ம் செய்துக்கிட்டு உன் அண்ணனிடம் பேசினா, நாங்க கிளம்பறதுக்குள்ள இவங்க கல்யாணத்தை முடிவு செய்து, சிம்பிளா ஒரு எங்கேஜ்மென்ட் நடத்திடலாம்,” என்ற திவாகரன்,
ஆனா நான் முன்ன சொன்ன மாதிரி இப்போ எதுவும் அவங்களிடம் கேட்க வேணாம், நீ ஒன்னும் இதை தப்பா நினைக்கல இல்லை. இதைப்பத்தி தனியா நிவியிடம் ஏதாவது பேசி அவளை திட்டிடப் போற,” என்று ஜெயச்சந்திரனிடம் கேட்டார்.
“இல்லடா, நம்ம பிள்ளைங்களிடம் நாமளே நம்பிக்கையில்லாம நடந்துக்கலாமா? நிவி எல்லை மீறி நடந்துக்கும் பொண்ணு இல்லன்னு எனக்கு நல்லாவே தெரியும், இப்போ நாம வேற பார்த்துட்டது தெரிஞ்சு அவ இன்னும் ஜாக்கிரதையா தான் இருப்பா,” என்று ஜெயச்சந்திரன் அதற்கு பதில் கூற,
“சரி வா கீழே போகலாம்,” என்று திவாகரன் சொல்ல, இருவரும் கீழே சென்றார்கள்.
இவர்கள் இங்கு பேசி கொண்டிருந்த நேரத்தில் சிவாதித்யனும் நிவேத்யாவும் வீட்டிற்குள் வந்தனர். இன்னுமே அவர்கள் அனைத்தையும் பார்த்திருப்பார்களா? என்ற பதட்டத்தில் நிவேத்யா இருக்க, “கூல் நிவி, அவங்க பார்த்திருக்க மாட்டாங்க, நீ அடிச்சதும் நான் கத்தினேனே, அந்த சத்தத்தில் தான் அவங்க அங்க வந்திருப்பாங்க,” என்று சிவாதித்யன் அவளுக்கு சமாதானம் கூறினான்.
“நீங்க சொன்ன மாதிரியும் இருக்கலாம், இருந்தாலும் நாம தனியா பேசினதை பார்த்துட்டு என்ன நினைச்சிருப்பாங்க, உங்களுக்கு இதில் கொஞ்சம் கூட பதட்டமோ பயமோ இல்லையா?” என்று நிவேத்யா கேட்க,
“இதுக்கு எதுக்கு பயப்படணும்? நாம காதலிக்கிறோம், காதலிக்கிறது தப்பான விஷயமா? அவங்க என்னன்னு கேட்டா, நாங்க காதலிக்கிறோம், கல்யாணம் செய்துக்க ஆசைப்பட்றோம்னு சொல்ல வேண்டியது தான்,” என்றான் அவன்,
“இருந்தாலும் நம்ம மேல உள்ள நம்பிக்கையில் தானே நம்மளை பழக விட்டாங்க, அந்த நம்பிக்கையை நாம காப்பாத்தணும் தானே,” என்று அவள் கேட்டதற்கு,
“அவங்க நம்பிக்கைக்கு எதிரா நாம எதுவும் செய்யல, ம்ம் உன் சம்மதம் இல்லாம உன்னை கிஸ் பண்ணது தப்பு தான், அதுக்கு முழு பொறுப்பு ஏத்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு. அதுக்கு அவங்க என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்கிறேன். ஆனா நம்ம பேரண்ட்ஸ் நம்மளை புரிஞ்சிப்பாங்க, அந்த நம்பிக்கை உனக்கு இல்லையா?” என்று அவன் பதிலுக்கு கேட்டான்.
“இருக்கு, இருந்தாலும் மனசுல கொஞ்சம் பயமும் இருக்கு,” என்று அவள் பதில் சொல்லிக் கொண்டிருக்கும்போதே பெரியவர்கள் இருவரும் கீழே வந்தனர்.
“நீ கோவிலுக்கு போகலையாமா?” என்று திவாகரன் நிவேத்யாவிடம் கேட்க,
“இல்லை அங்கிள், ஒரு முக்கியமான வேலைன்னு வெளிய போயிட்டு இப்போ தான் வந்தேன். சித்தி தான் உங்களுக்கு சாப்பாடு எடுத்துட்டு வரச் சொன்னாங்க, மணியாகுது வாங்க வந்து சாப்பிடுங்க,” என்று அவரிடம் கூறியவள்,
“சித்தப்பா நீங்களும் இங்கேயே சாப்ட்றீங்களா? கொஞ்சம் எக்ஸ்ட்ராவே எடுத்துட்டு வந்திருக்கேன்.” என்று அவரிடமும் கூறினாள்.
“ஹே எல்லாம் இங்க தான் இருக்கீங்களா? மதியம் அப்பாவும் நிவியும் வந்துடுவாங்கன்னு அம்மா போன்ல சொன்னாங்க, ஆனா வீட்டில் யாரையும் காணோமே, சரி நீங்கல்லாம் வரல போல, அதுவரை ஷிவ்வோட மொக்கை போடலாம்னு பார்த்தா ரெண்டுப்பேரும் இங்க என்ன செய்றீங்க,” என்று தந்தையிடமும் சகோதரியிடமும் கேட்டப்படி ஆத்யா அங்கு வந்தாள்.
“நீ சாப்பிட்டீயா ஆது,” என்று ஜெயச்சந்திரன் கேட்க,
“இன்னும் இல்லப்பா,” என்று அவள் பதில் கூறினாள்.
நிவேத்யாவிடமும் அவர் அதே கேள்வியை கேட்க, அவளும் அதே பதில் கூற, “சரி அப்போ நீங்க மூனு பேரும் இங்க சாப்பிடுங்க, நானும் திவாவும் அங்க போய் சாப்பிட்றோம்,” என்று ஜெயச்சந்திரன் கூற, திவாகரனும் அதையே ஆமோதித்தார்.
பின் இருவரும் கிளம்பிடவும், நிவேத்யா படப்படப்பு நீங்கி அங்கிருந்த சோஃபாவில் ஆசுவாசமாக அமர, “நான்தான் சொன்னேனே, அவங்க நம்மளை தப்பா நினைச்சிருக்க மாட்டாங்கன்னு, இருந்தாலும் நீதான் ரொம்ப பயப்பட்ட நிவி,” என்று சிவாதித்யன் கூறியப்படி அவள் அருகில் நெருக்கமாக அமர்ந்தான்.
அதை ஆத்யாவும் கவனித்தவள், அவன் பேசுவது புரியாமல்,”ஆமாம் என்ன தப்பா நினைப்பாங்க, என்ன நடந்துச்சு?” என்று ஆர்வமாக கேட்க,
“அப்பாவும் ஜெயச்சந்திரன் அங்கிளும் மொட்டை மாடியில் இருக்காங்கன்னு தெரியாம, நாங்க கார்டனில் பேசிட்டு இருந்தோம், அவங்க மாடியிலிருந்து அதை பார்த்துட்டாங்க, அதான் நிவி கொஞ்சம் பயந்துட்டா,” என்று சிவாதித்யன் கூறினான்.
“பேசிட்டு தானே இருந்தீங்க, இதுக்கு ஏன் பயப்படணும்?” என்று சாதாரணமாக கேட்டவள்,
பின் என்னவோ நடந்திருக்கு என்று யூகித்தவள், “நிஜமாவே பேசிட்டு தானே இருந்தீங்க, இல்ல வேற ஏதாச்சுமா?” என்று சந்தேகத்துடன் கேட்க,
நிவேத்யா சிவாதித்யனை பார்த்த பார்வையிலேயே எதுவும் சொல்ல கூடாது என்பதாக இருந்தது. அதை ஆத்யாவும் கவனித்தாள்.
“என்ன நீங்க அமைதியா இருப்பதை பார்த்தா நீங்க சாதாரணமா பேசிக்கிட்ட மாதிரி தெரியலையே,” என்று ஆத்யா மீண்டும் கேட்கவும்,
“நாங்க லவ்வர்ஸ், எப்படி சாதாரணமா பேசியிருப்போம், இதெல்லாம் உனக்கெதுக்கு?” என்று சிவாதித்யன் ஆத்யாவிடம் பதிலுக்கு கேட்க, நிவேத்யாவோ அவனை முறைத்தாள்.
“நம்ம ஆது தானே நிவி,” என்று அவன் சமாதானம் பேச,
“அப்போ ரெண்டுப்பேரும் காதலை சொல்லிக்கிட்டீங்களா? ஒருத்தருக்கொருத்தர் காதலை சொல்லிக்காம இன்னும் எத்தனை எபிசோட் இழுத்தடிப்பீங்களோன்னு நினைச்சேன். நல்லவேளை சீக்கிரம் சொல்லி என் வயித்துல பாலை வார்த்தீங்க,” என்று ஆத்யா அவர்களை கேலி செய்தாள்.
“ஷிவ் ஒருவழியா உன்னோட காதலை வெற்றிக்கரமா சொல்லிட்ட வாழ்த்துகள். என்னோட அக்காவை கல்யாணம் செய்துக்க போற, ஆனா அதுக்காகல்லாம் உன்னை மாமான்னுல்லாம் கூப்பிட மாட்டேன். எப்போதும் போல ஷிவ், வாடா போடா தான்,” என்று ஆத்யா அவனிடம் கூற,
“அம்மா தாயே மாமான்னுல்லாம் கூப்பிட்டு எனக்கு ஹார்ட் அட்டாக் வர வச்சிட போற,” என்று பதிலுக்கு அவனும் ஆத்யாவை கேலி செய்தான்.
பின் நிவேத்யாவை பார்த்தவள், “நிவி என்னால இப்போக்கூட நம்ப முடியல, ஷிவ்க்கு உன்மேல இன்ட்ரஸ்ட் இருக்குன்னு சொன்னப்ப, அதை நீ அக்சப்ட் செய்துக்க மாட்டேன்னு தான் நினைச்சேன். நீதான் வெளிநாட்டு மாப்பிள்ளை வேணாம்னு சொல்வியே, ஆனா காதல் எல்லாத்தையும் மாத்திடும் இல்ல, இப்போ தான் எனக்கு சந்தோஷமா இருக்கு,” என்று மகிழ்ச்சியோடு ஆத்யா சொல்ல,
அப்போது தான் காதலைப்பற்றி பகிர்ந்து கொண்டதுமே இதைப்பற்றி சிவாதித்யனிடம் தெளிவாக பேச வேண்டுமென்று நினைத்திருந்ததை திவாகரன், ஜெயசந்திரனை பார்த்த அதிர்ச்சியில் பேச முடியாமல் போனது நிவேத்யாவிற்கு இப்போது நினைவிற்கு வந்தது.
முரண்படும்..