MNMN 11

MNMN 11
அந்த மினி பஸ் வேலூர் மாவட்டத்தை நோக்கி பயணித்து கொண்டிருந்தது. அந்த மாவட்டத்தின் ஒரு கிராமம் தான் ரவிச்சந்திரன், ஜெயச்சந்திரன் பிறந்த ஊர். அங்கே அவர்களுக்கு சொந்த தோப்பு ஒன்று உள்ளது. அந்த தோப்பில் தான் அவர்கள் குடும்பத்தின் குலதெய்வ கோவில் இருக்கிறது.
சாகித்யா, நரேஷ் திருமணம் நல்லப்படியாக நடந்து முடிந்ததால் அங்கு சென்று பூஜை போட்டு வழிபட்டு வரவேண்டுமென்று அவர்கள் குடும்பத்துடன் சேர்ந்து நரேஷின் பெற்றோரும், திவாகரன் குடும்பமும் அங்கே பயணித்து கொண்டிருக்கிறார்கள்.
ஆத்யா பிறந்தநாள் அன்று நடந்த சம்பவம் இப்போது வரை மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி தான் இருந்தது. வீட்டில் வந்து அந்த விஷயத்தை அவர்கள் சொன்னபோது, “நைட் ஆகிடுச்சே, கிளம்பி வராம உங்களை யார் ஈ சி ஆர் பக்கம் போக சொன்னது.”
“சரி ஆக்ஸிடெண்ட் பார்த்துட்டு ஆம்புலன்ஸ்க்கு போன் செஞ்சதோட வீட்டுக்கு வந்திருக்க வேண்டியது தானே, எதுக்கு ஹாஸ்பிட்டல் வரை போனீங்க, இப்போ எவ்வளவு மனக்கஷ்டம்.” இப்படி ஆளாளுக்கு ஒவ்வொன்று சொல்ல, விஷயத்தை கேள்விப்பட்டு வீட்டில் உள்ளவர்களுக்கு மனதில் பாரம் ஏறிப் போனது தான் உண்மை.
மறுநாள் சிவாதித்யனும் நரேஷும் மட்டும் மருத்துவமனைக்கு சென்று அங்கு உள்ள நிலவரத்தை தெரிந்து கொண்டு வந்தனர். எதிரில் வந்த காரில் உள்ளவர்களுக்கு உயிர் சேதம் எதுவுமில்லையென்றாலும் அந்த விபத்துக்கு காரணமான நான்கு இளைஞர்களில் ஏற்கனவே இருவர் இறந்துவிட்ட நிலையில், மற்ற இருவரின் நிலையிலும் சொல்லி கொள்வது போல் எந்த முன்னேற்றமும் இல்லை.
அந்த தாக்கத்தில் அனைவருமே உற்சாகம் இழந்து காணப்பட்டனர். அதனால் சாகித்யா நரேஷை அழைத்து கொண்டு அவர்கள் இருவரின் பெற்றோர் மட்டும் குலதெய்வ கோவிலுக்கு போய் வரட்டும் என்றுதான் முதலில் நினைத்தார்கள்.
ஆனால் அனைவருக்கும் இந்த பயணம் ஒரு மனமாற்றமாக இருக்குமென்பதால் அனைவருமே கிளம்பி சென்றனர். பெரியவர்கள் அனைவரும் முன்பக்கம் அமர்ந்திருக்க, சிறியவர்கள் பின் பக்கத்தை ஆக்கிரமித்து கொண்டனர். சாகித்யாவும் நரேஷும் இருவர் அமரும் இருக்கையில் அமர்ந்து கொள்ள, சிபி அவர்களுக்கு எதிரில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து கொண்டான். நிவேத்யா அண்ணனோடு அமர்ந்து கொள்வதற்கு அங்கு அமர போக,
சிவாதித்யன் ஆத்யாவை சீண்டவும், “நிவி, என்னோட பக்கத்தில் வந்து உட்காரு,” என்று ஆத்யா அவளை பின் இருக்கையில் இருந்து அழைத்தாள்.
அங்கு நால்வர் அமர்ந்து வருவதுபோல் இருக்கைகள் இருந்தது. அதில் இடதுபக்க ஜன்னலோர இருக்கையில் தேவ் அமர்ந்திருக்க, அவனருகில் சிவாதித்யனும் அவனுக்கு அருகில் ஆத்யாவும் அமர்ந்திருந்தார்கள். வலதுபக்க ஜன்னல் இருக்கை காலியாக இருந்தது.
ஆத்யா அழைத்ததற்கு, “இல்ல நீ ஜன்னல் சீட்ல தானே உட்கார ஆசைப்படுவ, நீயே அங்க உட்காரு, நான் இங்கேயே உட்கார்ந்துக்கிறேன்.” என்று நிவேத்யா சொல்ல,
“எனக்கு ஜன்னல் சீட்லாம் வேண்டாம் நிவி, நீயே இங்க வந்து உட்காரு, ஜாலியா இருக்கும்,” என்று ஆத்யா பதில் கூறவும்,
“அப்புறம் வந்து உட்கார்ந்ததும், எனக்கு ஜன்னல் சீட் வேணும், நீ மாத்தி உட்காருன்னுல்லாம் சொல்லக் கூடாது. என்ன சரியா?” என்று நிவேத்யா திட்டவட்டமாக கூறினாள்.
“அதெல்லாம் சொல்லமாட்டேன் வா,” என்று ஆத்யா அவளிடம் கூறியவள்,
“உன்னால பாரு ஷிவ், என்னோட ஜன்னல் சீட்டை விட்டு கொடுக்கறது போல ஆகிடுச்சு,” என்று நிவேத்யாவிற்கு கேட்காதபடி சிவாதித்யனிடம் முனுமுனுக்க,
“எனக்காக தானே, இன்னைக்கு ஒருநாளைக்கு அட்ஜஸ்ட் செஞ்சுக்க ஆது,” என்று சிவாதித்யன் அதற்கு கெஞ்சலாக பதில் கூறினான்.
அதற்குள் நிவேத்யா ஆத்யாவிற்கு அருகில் வந்து அமர்ந்தவள், “என்ன சத்தமே வராம பேசிக்கிறீங்க, உனக்கு ஜன்னல் சீட் வேணும்னா சொல்லு, நான் முன்ன போய் அண்ணனோட உட்கார்ந்துக்கிறேன்.” என்று சொல்ல,
“இருக்கட்டும் நிவி,” என்றவள், சிவாதித்யனை முறைக்கவும் தவறில்லை.
ஏற்கனவே ஜன்னல் இருக்கை கிடைக்காத கடுப்பில் ஆத்யா இருக்க, இதில் குலதெய்வம் கோவிலுக்கு செல்வதால் வண்டியில் பக்தி பாடல்களாக வேறு பாடி கொண்டு வரவும், “இப்படி கோவிலுக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லி, வழியிலும் இப்படி சாமி பாட்டா போட்டு டார்ச்சர் செய்றாங்களே,” என்று அவள் வெளிப்படையாகவே புலம்பினாள்.
“என்ன ஆதும்மா, பாட்டு நல்லா தானே இருக்கு,” என்று ரவிச்சந்திரன் முன்னிருந்து குரல் கொடுக்க,
இது அவரின் வேலை என்பது அவளுக்கு நன்றாக புரியவே, “போங்க பெரியப்பா,” என்று சலித்து கொண்டாள்.
“இந்த கொடுமையெல்லாம் என்னால தாங்க முடியாதுன்னு தான் காதில் ஏர்டோப்ஸ் போட்டு பாட்டு கேட்டுட்டு வரேன். நீயும் அதையே ஃபாலோவ் செய் ஆதுக்கா,” என்று தேவ் சொல்ல,
“நீ வேற கடுப்பை கிளப்பாத தேவ், எடுத்துட்டு வந்திருந்தா கேட்டிருக்க மாட்டேனா? என்னோட ஏர்டோப்ஸை வீட்டிலேயே மறந்து வச்சிட்டேன் டா,” என்று ஆத்யா வருத்தமாக கூறினாள்.
“இது தான் உன்னோட பிரச்சனையா? இந்தா என்னோடதை வச்சு பாட்டு கேளு, எனக்கு பொதுவா டிராவலில் இதெல்லாம் உபயோகிக்க பிடிக்காது. எதுக்கும் தேவைப்படுமேன்னு தான் எடுத்துட்டு வந்தேன்.” என்று சொல்லி நிவேத்யா தனதை எடுத்து ஆத்யாவிடம் கொடுக்க,
“தேங்க்ஸ் நிவி,” என்று சொல்லி, அதை வாங்கி ஆத்யா பாட்டு கேட்க ஆரம்பித்தாள்.
இப்படியே இன்னும் சிறிது நேரம் பயணம் தொடர, பாட்டு கேட்டு கொண்டு வந்த ஆத்யாவிற்கு உறக்கம் வரவும், நிவேத்யாவின் மடியில் தலை வைத்து கொண்டவள், காலை தொங்க போட்டு வருவது கஷ்டமாக இருந்ததால், காலை சுருக்கியப்படி சிவாதித்யனின் மடியில் காலை வைத்தப்படி உறங்கினாள்.
ஆத்யா மூலம் நிவேத்யாவை இங்கு அமர வைத்துவிட்டாலும், அவள் பெரும்பாலும் ஜன்னலில் வேடிக்கை பார்த்தப்படி இருக்க, நடுவில் ஆத்யாவும் இருந்ததால், அவளை பார்க்க முடியாமல் சிவாதித்யன் தவித்து கொண்டிருந்தான். இப்போது ஆத்யா படுத்து கொள்ளவும் அவனுக்கு வசதியாக இருக்கவே நிவேத்யாவை அவ்வப்போது பார்த்தப்படி வர, அவளுமே அதை விரும்பியவள், சிலசமயம் அவளும் பதில் பார்வையை தொடர, என்று அந்த பயணம் அவர்களுக்கு இனிமையாக கழிந்தது.
விடியற்காலையிலேயே கிளம்பியதால் பத்து மணிக்கெல்லாம் அங்கு போய் சேர்ந்துவிட்டனர். சுற்றிலும் மரம், செடி, கொடி நடுவில் வீடு என்று அந்த தோப்பு ரம்மியமாக காட்சியளித்தது.
அங்கிருந்த மற்ற நிலபுலன்களை விற்றுவிட்டாலும், குலதெய்வ கோவில் இருப்பதால் அந்த தோப்பை மட்டும் விற்காமல் ஆட்களை வைத்து பராமறித்து வந்தனர். அதில் விளையும் காய்கறிகள், பழங்களை குத்தகைக்கு விட்டிருந்தனர். பிள்ளைகள் பள்ளி படிப்பில் இருக்கும்போது வருடா வருடம் கோடை விடுமுறையில் இங்கு வந்து பத்து நாட்களாவது தங்கிவிட்டு செல்வார்கள். இப்போது ஆத்யாவை தவிர அனைவரும் படிப்பு முடிந்து வேலைக்கு சென்றுவிட்டதால், முன்போல் அனைவராலும் வரமுடியவில்லையென்றாலும், பெரியவர்கள் மட்டும் வருடத்திற்கு ஒருமுறை குலதெய்வத்திற்கு வந்து பூஜை செய்துவிட்டு செல்வர்.
அங்கு வந்து இறங்கியதுமே பயண களைப்பை நீக்க, அந்த தோப்பில் பறித்த இளநீரை ஆளுக்கொன்றாய் அருந்திவிட்டு, அந்த இயற்கையை சிறிதுநேரம் ரசித்தப்படி அனைவரும் ஓய்வாக அமர்ந்திருந்தார்கள். பின் குலதெய்வ வழிபாட்டிற்கு படையல் போட வேண்டுமென்பதால், சமையல் மற்றும் இதர வேலைகள் என்று ஆளுக்கொரு வேலையை பகிர்ந்து நிறைவான மனதுடன் குலதெய்வத்திற்கு மதியம் படையல் போட்டு பூஜையை முடித்தனர்.
பின் தேவ் தனியாக அலைபேசியில் கேம் விளையாட, சிபியை தவிர மற்ற ஐவரும் வழக்கம் போல் ஒரு மரத்தடியில் சேர்ந்து அமர்ந்து பேசியபடி இருந்தனர். அப்போது, “ஆமாம் நம்ம ஆல் அப்பாக்களையும் காணோமே, இன்னும் சாப்பிட கூட இல்ல போல, எல்லாம் எங்க போனாங்க?” என்று சிவாதித்யன் கேட்க,
“அதுவா, பக்கத்து தோப்பில் ஃப்ரஷ்ஷா தென்னங்கள்ளு கிடைக்குதாம், அதான் உங்கப்பாவும் எங்கப்பாவும் போயிருக்காங்க, அதில்லாம கூட நரேஷ் மாமாவோட அப்பாவையும் அழைச்சிட்டு போயிருக்காங்க,” என்று ஆத்யா ரகசிய குரலில் அனைவரிடமும் கூறியவள்,
“பெரியப்பா சிபி அண்ணாவை அழைச்சிட்டு இந்த ஊர் தலைவரை பார்க்க சாமி கும்பிட்ட உடனே போயிட்டாரு, இதான் சான்ஸ்னு இவங்களும் கிளம்பி போயிட்டாங்க, இவங்க எல்லாம் வந்ததும் சேர்ந்து சாப்பிடலாம்னு ஆல் அம்மாக்களும் வெயிட்டிங்,” என்றாள்.
“அப்போ நாம மட்டும் தான் சாப்பிட்டோமா? மத்தவங்கல்லாம் இன்னும் சாப்பிடலையா?” என்று நரேஷ் கேட்க,
“ஏன் டா, முதலிலேயே விஷயம் தெரிஞ்சிருந்தா பக்கத்து தோப்புக்கு போயிருக்கலாம்னு நினைக்கிற தானே?” என்று சிவாதித்யன் நரேஷை கேலி செய்தான்.
“நீ வேறடா, ஆத்யா பிறந்தநாளுக்கு முன்ன இங்க வந்திருக்க கூடாதான்னு தான் நினைச்சேன். அந்த ஆக்ஸிடென்ட் பார்த்ததும் அன்னைக்கு நைட் சகி புலம்புன புலம்பலில் இனி குடிக்கிறதை பத்தி நினைச்சு கூட பார்க்க மாட்டேன்னு சத்தியம் செஞ்சுட்டேன். இப்போ அதை மீற முடியாதே,” என்று நரேஷ் போலியான வருத்தத்தோடு சொல்ல, சாகித்யா அவனை முறைத்தாள்.
அதைகேட்டு, “நீயுமாடா? அப்போ அன்னைக்கு உனக்கும் நிறைய அர்ச்சனை விழுந்திருக்கும்னு சொல்லு,” என்று சிவாதித்யன் கேட்க,
“நீயுமாவா? உனக்குமாவா? இதுக்கு என்னடா அர்த்தம்? அப்போ நீயும் யாருக்கோ சத்தியம் செஞ்சு கொடுத்திருக்க போல? இன்னும் கல்யாணம் கூட ஆகல அதுக்குள்ளேயாவா? ஆமா யாருடா அது?” என்று இப்போது நரேஷ் சிவாதித்யனை கேலி செய்யவும், சாகித்யாவும் ஆத்யாவும் சுவாரசியமானார்கள்.
“சத்தியமெல்லாம் செஞ்சு கொடுக்கல, ஆனா அவங்க பேச்சை மீற விரும்பல, ஏன் கல்யாணமானா தான் மாறணுமா? நம்ம மேல அக்கறை வச்சு யாரு சொன்னாலும் அவங்க பேச்சை கேட்க வேண்டியது தான்,” என்று சிவாதித்யன் அதற்கு பதில் கூற,
“அதான் அந்த அக்கறை உள்ள ஆள் யாருன்னு கேட்கிறோமே சொல்ல வேண்டியது தானே,” என்று நரேஷ் கேட்டான்.
சிவாதித்யன் என்ன சொல்ல போகிறானோ என்பதுபோல் நிவேத்யா படபடப்பாய் அமர்ந்திருக்க, “ஏன் அது என்னோட அம்மா, அப்பாவா இருக்கலாம், நம்ம ஆதுவா இருக்கலாம், ஏன் சகி உன்கிட்ட மட்டும் தான் சத்தியம் கேட்பாளா? என்னை வச்சு தான் அவளுக்கு உன்னை தெரியும், முதலில் என்மேல தான் அவளுக்கு அக்கறை இருக்கு தெரிஞ்சிக்கோ,” என்று சிவாதித்யன் விடாமல் பேச,
“எது, உன்னோட அம்மா, அப்பா சொன்னா நீ அப்படியே கேட்டுப்பியா? நீ அவ்வளவு நல்லவனாடா? இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு,” என்று நரேஷ் கூறினான்.
“ஆமாம் நாங்க சொன்னதும் இவன் அப்படியே கேட்டுடுவானா நரேஷ், நாங்க சொல்றதுக்கு மறுப்பா செய்யணும்னு தான் நினைப்பான்.” என்று சாகித்யா கூற,
“சரியா சொன்ன க்கா, அப்படியே நாம சொல்லி கேட்கும் மூஞ்சியை பாரு, இவனுக்கெல்லாம் சொல்ற ஆள் சொன்னா தான் கேட்பான்.” எந்து ஆத்யாவும் பேசினாள்.
“அதான் அது யாரு, எங்களுக்கு இப்பவே தெரிஞ்சாகணும் சிவா, சொல்லு சொல்லு யாரது?” என்று நரேஷ், தெரிந்தும் தெரியாதது போல் கேட்க,
“அக்கா, அம்மா கூப்பிட்றது போல இருக்கு, நான் என்னன்னு கேட்டுட்டு வரேன்.” என்று சொல்லி நிவேத்யா அங்கிருந்து நழுவினாள்.
அவள் போனதும், “ஷிவ், அது நிவி தானே, நீ நிவியை காதலிக்கிறீயா? என்கிட்ட சொல்லவே இல்லை பார்த்தீயா? நானே தெரிஞ்சிக்க வேண்டியதா இருக்கு,” என்று சாகித்யா கூற,
“எப்படியோ நீ தெரிஞ்சிப்பன்னு எனக்கு தெரியும் சகி, அதான் நானும் உன்கிட்ட சொல்லல,” என்று நரேஷ் அதற்கு பதில் கூறினான்.
“ம்ம் அதான் அப்பப்போ பூடகமா பேசினீங்களா? எனக்கு கொஞ்சம் லேட்டா தான் புரிஞ்சுது,” என்று சாகித்யா கூறவும்,
“நீ என்னோட அக்கான்னு வெளிய சொல்லிக்காத சாகி அக்கா, நான்லாம் ஷிவ் இங்க வந்த முதல்நாளே நிவிக்கிட்ட விழுந்துட்டான்னு கண்டுபிடிச்சுட்டேன்.” என்று ஆத்யா பெருமையாக சொல்ல,
“இதுல உனக்கு பெருமை வேறயா?” என்று சிவாதித்யன் அவளது தலையில் கொட்டியவன்,
“உங்க எல்லோருக்கும் தெரிஞ்சு என்ன? தெரிய வேண்டியவங்க தெரிஞ்சிக்கிட்டாங்களான்னு தெரியலையே,” என்று சொல்லி அவன் பெருமூச்சு விட்டான்.
“எல்லாம் தெரியாமலா நிவி இங்க இருந்து நழுவிட்டா,” என்று ஆத்யா பதில் கூற,
“இருந்தாலும் எதுவும் காண்பிச்சிக்க மாட்டேங்கிறாளே, இன்னும் அவக்கிட்ட வெளிப்படையா நான் எதுவும் சொல்லல, அதுக்குள்ள இப்படியெல்லாம் கலாய்க்கிறன்னு சொல்லி எங்க குடும்பத்தில் கும்மியடிச்சிடாதீங்க,” என்று சிவாதித்யன் கெஞ்சலாக கூறினான்.
“அடப்பாவி இன்னும் காதலையே சொல்லல, அதுக்குள்ள குடும்பமா?” என்று கேட்ட சாகித்யா,
“நீயும் நிவியும் காதலிக்கிறீங்கன்னு என்னால நம்பவே முடியல ஷிவ், நீ இங்க வந்ததும் உங்க ரெண்டுப்பேருக்கும் ஒருத்தருக்கொருத்தர் செட் ஆகாது. உங்களை எப்படி சமாளிக்கப் போறேனோ? அப்படியெல்லாம் யோசிச்சிட்டு இருந்தேன். இப்போ நீங்க காதலிக்கிறீங்க? நினைக்கவே ஆச்சர்யமா இருக்கு, உங்க ஜோடி பொருத்தம் ரொம்ப சூப்பரா இருக்கு,” என்று சாகித்யா நெகிழ்ச்சியாக பேசவும்,
“இப்படி பேசும் உன்னோட வாயில் சக்கரை தான் கொட்டணும், இதை நிவி சீக்கிரமா வெளிப்படையா ஒத்துக்கணும், அதுவரை கொஞ்சம் திக் திக்னு தான் இருக்கு,” என்று சிவாதித்யன் கூறினான்.
“அதுக்கென்னடா, எல்லாம் நல்லப்படியா தான் நடக்கும், வீட்டிலும் ஒத்துப்பாங்க, ஆனா அதுவரை இப்படி எல்லாம் கண்டுப்பிடிக்கறது போல வெளிப்படையா காட்டிக்காத, கொஞ்சம் அடக்கி வாசி,” என்று சாகித்யா சொல்ல,
“நான் கவனமா தான் இருக்கேன். இருப்பேன். உங்களுக்கு தெரியறதால பிரச்சனை இருக்காதுன்னு நினைச்சேன். வேற ஏதாவது பிரச்சனைன்னாலும் உங்க சப்போர்ட் எனக்கு வேணுமில்ல, மத்தப்படி நான் அடக்கி தான் வாசிக்கிறேன்.” என்றான் சிவாதித்யன்.
விடியற்காலையிலேயே கிளம்பி வந்ததால் அன்று மாலையே வீடு திரும்பும் திட்டம் இருப்பதால், அனைவரும் மதியம் சிறிதுநேரம் ஓய்வெடுத்தனர். சிவாதித்யனோ உறக்கம் வராததால் அவனது அலைபேசியை பார்த்தப்படி இருக்க, அப்போது நிவேத்யா வீட்டின் பின்புறம் செல்வதை கவனித்தவன், சிறிதுநேரம் கழித்து அவனும் அங்கு சென்றான்.
அவளோ அவனை கவனிக்காமல் எதிலோ லயித்தப்படி ஒரு தாழ்வான மரக்கிளையில் அமர்ந்திருந்தாள். “என்ன எல்லாம் தூங்கறாங்க, நீ தூங்கலையா?” என்ற அவனது குரல் கேட்டு அவன்புறம் திரும்பியவள்,
“ஏன் நீங்க தூங்கலையா?” என்று அவனிடம் பதில் கேள்வி கேட்டாள்.
“ம்ஹூம் தூக்கம் வரல, அதான் சும்மா மொபைல் பார்த்துட்டு இருந்தேன். அப்போதான் நீ இந்தப்பக்கம் வந்ததை பார்த்தேன். ஆமா இங்க உட்கார்ந்து என்ன யோசனை?” என்று அவன் கேட்க,
மரக்கிளையிலுருந்து எழுந்து அவன் எதிரில் வந்து நின்றவள், “ம்ஹூம் யோசனையெல்லாம் இல்லை. சும்மா உட்கார்ந்து இந்த தோப்பை பார்த்துட்டு இருந்தேன். உங்களுக்கு தெரியுமா? படிக்கும்போது வருஷா வருஷம் இங்க வருவோம், பத்துநாளும் செம ஜாலியா போகும், அப்புறம் இங்க இருந்து போகணும்னா எனக்கு மனசே வராது. ஆனா போய் தானே ஆகணும்,
அப்போல்லாம் எனக்கு என்ன தோனும்னா இதுதானே நம்ம அப்பா பிறந்த ஊர். இங்கேயே ஏன் இருக்க கூடாது? அப்படியெல்லாம் கேள்விகள் தோனும், ஆனா அப்பாக்கு அங்க தானே வேலை. நாங்களும் அங்க தானே படிக்கிறோம் அப்படின்னு மனசை தேத்திப்பேன். பத்து நாளுக்கே இப்படின்னா, இன்னைக்கு வந்ததுமே போகணும்னா, எவ்வளவு கஷ்டமா இருக்கும், அதான் தூக்கம் வரல,” என்று அவள் சொல்லவும்,
“ம்ம் உண்மை தான், ஆனா என்ன செய்ய முடியும்? இங்க இருக்க வரைக்கும் அப்படித்தான் தோனும், ஆனா அங்க போய் நம்ம வேலையை பார்க்க ஆரம்பிச்சிட்டா, நாம சகஜமா ஆகிடுவோம்,” என்றான்.
“ம்ம் நீங்க சொல்றதும் உண்மை தான்,” என்று ஒத்து கொண்டவள்,
“அப்புறம் உங்கக்கிட்ட ஒன்னும் கேட்கணும், அப்போ நீங்க பேசினது உண்மையா?” என்று கேட்க,
“என்னது?” என்று அவன் புரியாமல் கேட்டான்.
“அதான் இனி ட்ரிங்ஸ் சாப்பிட மாட்டேன்னு முடிவு எடுத்திருக்கறதா சொன்னீங்களே அதான், சொன்னீங்க தானே, அதாவது அது உண்மை தானே?” என்று அவள் கேட்க,
“நான் சொன்னது பொய் மாதிரி தோனுதா?” என்று அவன் கேட்டாள்.
“இல்லை,” என்று தலையாட்டியவள்,
“நான் சொன்னதுக்காகவா உங்களை மாத்திக்கிட்டீங்க, உங்கக்கிட்ட அப்படி பேசினதுக்கு பிறகு தான், ஏன் அப்படி பேசினோம், எந்த உரிமையில் அப்படி பேசினோம், நீங்க அதுக்கு கோப்படுவீங்களோ, அப்படியெல்லாம் யோசிச்சேன். ஆனா என்னோட பேச்சுக்கு மரியாதை கொடுப்பீங்கன்னு நான் நினைக்கல,” என்று அவள் சொல்லவும்,
“என்கிட்ட நீ இப்படி பேச உனக்கு எல்லா உரிமையும் இருக்கு, என்மேல உள்ள அக்கறையில் பேசினதா தானே அப்போ சொன்ன, அப்போ அது உண்மையில்லையா?” என்று கேட்டான்.
“அக்கறை இருக்கு, ரொம்பவே அக்கறை இருக்கு,” என்று அவள் பதில் கூற,
அவள் அருகில் வந்து அவளது கைகளை பிடித்து கொண்டவன், “வெறும் அக்கறை மட்டும் தானா? வேறெதுமில்லையா?” என்று கேட்க, அவளுக்கோ இதயம் வேகமாக துடிப்பது வெளியில் கேட்டது.
“இது அக்கறை மட்டும் தான்னு சொல்லிடாத, இது வெறும் அக்கறை மட்டும் இல்லைன்னு எனக்கு தெரியும், அது என்னன்னு நீ வெளிப்படையா சொல்லணும்னு நினைக்கிறேன்.” என்று அவன் சொல்லவும்,
“அது என்னது?” என்று கேட்டவளுக்கு சத்தம் வர மறுத்தது.
“அது என்னன்னு தெரியாதா? சும்மா தெரியாத மாதிரி நடிக்கிற தானே, அது என்னன்னு நான் சொல்லட்டுமா?” என்று அவன் சொல்லவும்,
“அய்யோ பேச்சு குரல் கேட்குது, எல்லாம் எழுந்துட்டாங்க போல,” என்று அவன் கைகளிலிருந்து தன் கைகளை நிவேத்யா விடுவிக்க பார்க்க,
“சும்மா சொல்லாத,” என்று சிவாதித்யன் கூறினான்.
ஆனால் உண்மையாகவே பேச்சு குரல் அவனுக்கும் கேட்க, “நிஜம் தான், நாம இங்க தனியா இருந்தா தப்பா தெரியும், விடுங்க கையை,” என்று அவள் சொல்லவும், அவனுக்குமே அது புரிந்ததால், அவளது கைகளை விடுவிக்க, அங்கிருந்து அவள் வேகமாக ஓடிவிட்டாள்.
“ச்சே நல்ல சான்ஸ், எப்படியும் இன்னைக்கு லவ்வ சொல்லிடலாம்னு பார்த்தேன். அது மிஸ்ஸாகிடுச்சே, இனி எப்போ இந்த சான்ஸ் கிடைக்குமோ,” என்று சிவாதித்யனால் பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது.
முரண்படும்..