MNMN 10

MNMN 10

சிவாதித்யன் கூறியது போல் அன்று ஆத்யாவின் பிறந்தநாள் என்பதால் அன்று முழுவதும் சென்னையை சுற்றுவது என்பது தான் அவர்களின் திட்டம். முன்னால் இரவு திரைப்படம் பார்த்துவிட்டு வந்ததும் சிவாதித்யன் இதைப்பற்றி வீட்டு பெரியவர்களிடம் கூற,

“என்னடா சிவா, இந்த பிறந்தநாளுக்கு தான் நாம ஆத்யாவோட இருக்கோம், இப்படி நீங்க ஊர் சுத்த போயிட்டா எப்படி?” என்று வனிதா குறைபடவும்,

“அதைத்தான் நானும் சொல்றேன் ம்மா, இத்தனைநாள் ஆத்யா கேக் வெட்றதை வீடியோ காலில் பார்த்து விஷ் செஞ்சுட்டு இருந்தோம், நாளைக்கு தான் அவளோட இருக்க சான்ஸ் கிடைச்சிருக்கு, அதை அமர்க்களப்படுத்திட வேண்டாமா?” என்று சிவாதித்யன் பதில் கூறியவன்,

“வேணும்னா நீங்களும் அப்பாவும் வாங்க, நீங்களும் வந்ததிலிருந்து எங்கேயும் போகலையே, எல்லாம் ஜாலியா ஊர் சுத்திட்டு வரலாம் வாங்க,” என்று அவன் சொல்ல,

“இப்போ தானே கல்யாணம் முடிஞ்சுது, சாகித்யாவை புகுந்த வீட்டுக்கு அனுப்பற வரை இங்க நிறைய வேலை இருக்கும், ஜானகியும் கோமளாவும் தனியா கஷ்டப்படுவாங்க, அதனால இதெல்லாம் விட்டுட்டு நாங்க எப்படி வர்றது? நீங்க போயிட்டு வாங்க, நானும் அப்பாவும் ஒருவாரம் கழிச்சு ஊரை சுத்தி பார்த்துக்கிறோம்,” என்று வனிதா கூறினார்.

“சரி ஊர் சுத்தறதுன்னு முடிவு செஞ்சுட்டீங்க, நாளைக்கு முதலில் கோவிலுக்கு போயிட்டு அப்புறம் எங்க வேணா சுத்துங்க,” என்ற கோமளா,

“சாயந்தரம் கேக் வெட்றதுக்கு வீட்டுக்கு வந்துடுவீங்க தானே,” என்று கேட்க,

“அதுக்கெல்லாம் சான்ஸே இல்ல ஆன்ட்டி, நாங்க வர நைட் ஆகிடும்,” என்று சிவாதித்யன் பதில் கூறினான்.

“அப்போ ஆத்யா பிறந்தநாளை வீட்டில் செலப்ரேட் செய்ய வேண்டாமா?” என்று ஜானகி கேட்க,

“வேணும்னா இன்னைக்கு நைட் பன்னிரெண்டு மணிக்கு ஆத்யா பர்த்டேவை கேக் வெட்டி செலப்ரேட் செய்திடுவோம்,” என்று அதற்கும் அவனே யோசனை கூறினான்.

“இப்போ சொன்னா எப்படி? கேக் வாங்க வேண்டாமா? இப்பவே மணி 9 ஆகப் போகுது, இந்தநேரம் எந்த பேக்கரி திறந்திருக்கும்?” என்று ஜானகி கேட்க,

“மெயின்ரோட்ல இருக்குமே ஒரு பேக்கரி அது திறந்திருக்கும் ம்மா, நான் போய் வாங்கிட்டு வந்துட்றேன்.” என்று சிபி கூறினான்.

“அங்க ஃப்ரஷ்ஷா இருக்காது சிபி, பழசை வச்சிருப்பாங்க, அதனால அங்க வாங்க வேண்டாம், 12மணி வரை டைம் இருக்கே, நாம வீட்டிலேயே கேக் செய்யலாம், அதான் நிவி நல்லா கேக் செய்வாளே, கூட நானும் உதவி செய்றேன்.” என்று சாகித்யா சொல்ல,

“சூப்பர், அம்மாவும் நல்லா கேக் செய்வாங்களே, ரெண்டுப்பேரும் சேர்ந்தே செய்யட்டும், கூட நாம உதவி செய்யலாம்,” என்று சிவாதித்யன் கூறினான்.

இப்படியாக வனிதாவும் நிவேத்யாவும் கேக் செய்ய ஆரம்பித்தனர். சாகித்யா அவர்களுக்கு உதவியாக இருக்க, சிவாதித்யனோ நிவேத்யா அருகில் இருக்க வேண்டும் என்பதால் அங்கு உதவி செய்வது போல் காட்டி கொண்டு அவளை சைட் அடித்து கொண்டிருந்தான்.

“அதான் நாங்க 3 பேரும் இருக்கோமில்ல, நாங்களே செஞ்சுக்கிறோம், நீ இங்க வந்து எங்களை தொல்லை செய்யாம கிளம்பு,” என்று சாகித்யா அவனை போகச் சொல்ல,

“இல்ல நானும் உங்களுக்கு ஹெல்ப் செய்வேன். என்ன செய்யணும் சொல்லுங்க,” என்றான் அவன்,

“நீங்க கண்டிப்பா எங்களுக்கு ஹெல்ப் செய்யணுமா? ஆதுக்கு நட்ஸ் போட்ட கேக்னா ரொம்ப பிடிக்கும், அதனால மேல நட்ஸ் வச்சு டெகரேட்ஸ் செய்ய இந்த நட்ஸை ரொம்ப பொடியா வெட்டி வைங்க,” என்று சொல்லி நிவேத்யா அவனிடம் அந்த வேலையை கொடுக்க,

“ஓ ஆத்யாக்கு நட்ஸ் வச்ச கேக்கே தான் வேணுமா? அவளே கேட்டாளா?” என்று அவன் பரிதாபமாக கேட்டான்.

“ஆது கேட்கல, ஆனாலும் அவ பர்த்டேக்கு அவளுக்கு பிடிச்ச கேக் செய்ய வேண்டாமா? உங்களால உதவி செய்ய முடியுமா? முடியாதா?” என்று நிவேத்யா கேட்கவும்,

“யாரு முடியாதுன்னு சொன்னா, கொடு நான் வெட்றேன்.” என்று வாங்கி அவன் வெட்ட ஆரம்பிக்க, சாகித்யாவும் வனிதாவும் அவன் வாய் கொடுத்து மாட்டி கொண்டதை நினைத்து சிரித்தனர்.

அதிலும் வனிதாவோ, “இவனுக்கு நீதான் சரி நிவி,” என்று வேறு சொல்ல,

‘இப்பவே மாமியாரும் மருமகளும் கூட்டு சேர்ந்திடுவாங்க போலவே,” என்று அவன் நினைத்தாலும்,

அவனது அன்னையின் வார்த்தையை கேட்டு அவன் நிவேத்யாவை காதலோடு பார்க்க, அவளும் அவனை அப்படித்தான் பார்த்தாள். ஆனால் அவர்களை சாகித்யாவும் கவனித்து கொண்டிருப்பதை அவர்கள் கவனித்தார்களா தெரியவில்லை.

பனிரெண்டு மணிக்கு கேக் தயாராக இருக்க, அதனுடன் கொஞ்சம் கொரிக்க பலகார வகைகளும் குளிர்பானங்களும் கூட தயார் செய்து வைத்திருந்தனர்.

குடும்பம் முழுவதும் தன் பிறந்தநாளை கொண்டாட இரவு பனிரெண்டு மணி வரை விழித்து இருப்பதை பார்த்து ஆத்யாவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. வருடாவருடம் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினாலும், இந்தமுறை சிவாதித்யன், தேவ், திவாகரன், வனிதா, அத்துடன் நரேஷ் அனைவரும் உடனிருந்ததால் இது அவளுக்கு சிறப்பான பிறந்தநாளாக திகழ்ந்தது.

“சரி வா வா கேக் வெட்டலாம், ஆனா இங்கப்பாரு உனக்கு நட்ஸ் கேக் பிடிக்கும்னு உனக்காக நான்தான் இந்த நட்ஸெல்லாம் வெட்டி தந்தேன். அதனால ஃபர்ஸ்ட் எனக்கு தான் கேக் ஊட்டணும்,” என்று சொல்லியப்படியே, சிவாதித்யன் கேக் மீது மெழுகுவர்த்தியை வைத்து ஏற்ற,

நட்ஸ் வெட்டி தந்ததை குறிப்பிட்டு சொன்னதை கேட்டு நிவேத்யா சிரித்து கொண்டவள், அந்த நிகழ்வுகளை படம் பிடிப்பதற்காக தயாராக நின்றாள்.

ஆத்யா மெழுகுவர்த்தியை அணைத்து கேக் வெட்டவும், அனைவரும் கைத்தட்டி பிறந்தநாள் வாழ்த்து பாடினர். பின் சிவாதித்யன் சொன்னதனால் ஆத்யா முதலில் அவனுக்கு கேக்கை ஊட்ட, அதை வாங்கி கொண்டவன், அவளுக்கு கொஞ்சம் கேக் துண்டை எடுத்து ஊட்டி விட்டவன், அவளது முகத்திலும் அந்த க்ரீமை எடுத்து பூசி விட,

“போடா எரும, என்னடா செஞ்சு வச்சிருக்க,” என்று ஆத்யா அவனை திட்டியவள், அவனது முகத்திலும் க்ரீம் பூச போக, அவனோ அவன் முகத்தை காட்டாமல் போக்கு காட்டினான்.

“என்னம்மா, தம்பிக்கு உன்னைவிட அதிக வயசில்ல, போடா வாடான்னு பேசலாமா? இதில் எருமன்னுல்லாம் பேசற, இப்படியெல்லாம் பேசக் கூடாதுடா,” என்று ரவிச்சந்திரன் ஆத்யாவை கண்டிக்க,

“இவங்க இப்படித்தான் ண்ணா, பின்ன இவன் சீண்டிக்கிட்டே இருந்தா ஆத்யாவுக்கு கோபம் வராதா? இவங்க விஷயத்தில் நாம கண்டுக்க கூடாது.” என்று வனிதா சப்போர்க்கு வந்தார்.

அனைத்தையும் தன் கேமராவில் படம்பிடித்து கொண்டு நிவேத்யா அந்த காட்சிகளை ரசித்து கொண்டிருந்தாள். அவளுக்கு தெரியும் ஆத்யாவும் சாகித்யாவும் சிவாதித்யனுக்கு எத்தனை முக்கியமென்று, அவர்களுக்காக எதையும் செய்ய தயாராக இருப்பான் என்பதையும் அவன் வந்த இத்தனைநாளில் அவள் புரிந்து கொண்டாள்.

அதிலும் நட்ஸ் வகைகளை பொடியாக நறுக்குவதென்பது எத்தனை பொறுமையோடு செய்ய வேண்டிய வேலை. என்னத்தான் சிவாதித்யன் கேம் டெவலப்பராக இருந்தாலும், மற்ற விஷயங்களில் அவனிடம் அத்தனை பொறுமை இல்லை என்பது அவளுக்கு தெரிந்த விஷயம் தான், ஆனாலும் ஆத்யாவிற்காக அவன் அதை செய்தான்.

இதையெல்லாம் பார்த்து அவர்களது அன்பில் அவளுக்கு பொறாமை என்றெல்லாம் இல்லை. இப்படியான விஷயங்கள் தான் அவன்பால் அவளை ஈர்க்க வைக்கிறது. அவனுக்கும் அவளுக்கும் எத்தனையோ விஷயங்களில் முரண்பாடுகள் இருப்பது அவளுக்கு புரிந்தாலும் மனம் அவனிடம் செல்வதை தடுக்க முடியாமல் தவிக்கிறாள்.

கோமளா சொன்னது போல் அனைவரும் முதலில் கோவிலுக்கு தான் சென்றனர். சன்னதியினுள் சென்று மூலவர் தரிசனத்தை முடித்து அனைவரும் கோவிலை சுற்றி வந்து ஒரு இடம் பார்த்து அமர்ந்ததும், தேவ் கேட்டான் என்பதால் நரேஷும் சிவாதித்யனும் கோவிலின் உள்ளே பிரசாத கடையில் சர்க்கரை பொங்கலும் புளியோதரையும் வாங்கி வந்தனர். அதை அனைவரும் பகிர்ந்து உண்டப்படி பேசி கொண்டிருக்க,

“சிபி அண்ணாவும் நம்மளோட வந்திருந்தா நல்லா இருந்திருக்கும்,” என்று ஆத்யா கூறினாள்.

“அவனுக்கு தான் இன்னையிலிருந்து ஆஃபிஸ் போகணுமாமே, என்ன செய்ய அவனுக்கு நிறைய நாள் லீவ் கிடைக்காதுன்னு தான் முதலிலேயே சொன்னானே,” என்று சாகித்யா அதற்கு விளக்கம் சொல்ல,

“எனக்குமே இன்னும் 3 நாள் தான் லீவ், அப்புறம் நானும் காலேஜ் போகணும்,” என்று ஆத்யா வருத்தமாக கூறவும்,

“என்ன சொல்ற ஆதுக்கா, நீயும் காலேஜ் போயிடுவியா? நரேஷ், சகி அக்காவும் 3 நாளில் கிளம்பிடுவாங்க, அப்புறம் எனக்கு ரொம்ப போர்.” என்று தேவ்சரணும் வருத்தப்பட்டான்.

“இது கடைசி செமஸ்டர் தேவ், ப்ராஜக்ட்டும் முடிக்கிற ஸ்டேஜ்ல தான் இருக்கு, அதனால டெய்லி காலேஜ் போகணும்னு இல்லை. அப்பப்ப போனா போதும், என்ன இந்த ஒருவாரத்துக்கு தொடர்ந்து போறது போல வரும்,” என்று ஆத்யா தன்னிலையை விளக்கமாக சொல்ல,

“அதுக்குள்ள நாங்களும் ஹனிமூன் போயிட்டு வந்து டெல்லிக்கு போனதும், நீங்க எல்லாம் அங்க வந்து கொஞ்சநாள் இருங்க, ஜாலியா எஞ்சாய் செய்யலாம்,” என்று நரேஷ் சொல்லவும்,

“ஆமாம், டெல்லிக்கு போனதும் நீ லீவ் முடிஞ்சு ஆஃபிஸ்க்கு போகணும், சகியும் புது வேலையில் போய் சேரணும், ஆத்யாக்கு அப்பப்ப காலேஜ் போகணும்னு வேற சொல்றா, அப்புறம் எங்க வந்து அங்க இருக்கறதாம்? இதில் நான் ஒருமாசம் தங்கணும்னு வேற தொல்லை செஞ்சுட்டே இருந்தீங்க,” என்றான் சிவாதித்யன்.

“எப்படியோ டெல்லிக்கு போய் ஒருவாரம் கழிச்சு தான் டா வேலைக்கு போகறது போல இருக்கும், அதுவரைக்கும் டெல்லியை சுத்தி வருவோம், அதில்லாம அப்புறம் வீக்கெண்ட் வருமில்ல, அப்போ ஒன்னு நீங்க வாங்க, இல்லை நாங்க இங்க வரோம், இப்படியே ஒருமாசம் ஓடி போயிடும்,” என்ற நரேஷ்,

“அதான் நாங்க இருடா இருடா சொன்னதுக்கு ஓவரா சீன் போட்டு இருக்க மாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சியே, அதுக்குப்பிறகு நீயே தானே இங்க இருக்கப் போறதா சொன்ன, இப்பவும் நாங்க உன்னை கட்டாயப்படுத்தலப்பா, உனக்கு போகணும்னா போ.” என்றான்.

“நான் போகமாட்டேன்னு தெரிஞ்சே இப்படி பேசறல்ல, என் நிலையை பார்த்தா உங்களுக்கெல்லாம் சிரிப்பா இருக்குல்ல,” என்று சிவாதித்யன் கூறவும்,

வழக்கம்போல் அமைதியாய் அவர்கள் பேசியதை கேட்டப்படி நிவேத்யா அமர்ந்திருக்க, “என்ன நிவிக்கா, நீங்களும் ஜாப் போறீங்க தானே, உங்களுக்கு எத்தனைநாள் லீவ்,” என்று தேவ் அவளை பார்த்து கேட்டான்.

“நிவி அந்த வேலையை விட்டுட்டா, இனி புது வேலை கிடைச்சதும் தான் அவ வேலைக்கு போகணும், அதனால அவ வீட்டில் தான் இருப்பா,” என்று ஆத்யா அதற்கு பதில் சொல்ல,

“என்ன ஆச்சு நிவி, ஏன் வேலையை விட்டுட்ட? என்கிட்ட சொல்லவே இல்லை.” என்று சாகித்யா கேட்டாள்.

“நேத்து தான் இந்த வேலை எனக்கு செட்டாகல, நின்னுடலாம்னு இருக்கேன். அப்படின்னு அப்பாக்கிட்ட சொல்லிட்டு இருந்தேன். அப்போ ஆத்யாவும் இருந்தா, அதை வச்சு தான் நான் வேலையை விட்டது போல சொல்லிட்டு இருக்கா, ஆனா இன்னும் ரெண்டு நாளில் ப்ராப்பரா அதுக்கான ரிஸைன் லெட்டர் அனுப்பிடுவேன். அப்போ மத்த எல்லாரிடமும் சொல்லலாம்னு இருந்தேன்.” என்று நிவேத்யா அதற்கு விளக்கம் அளிக்கவும்,

‘ஆஹா சிவா, அதிர்ஷ்ட காத்து உன்னோட பக்கம் வீசுதுடா, ஆது, சகி, சிபி யாரோட டிஸ்டபர்ன்ஸும் இருக்காது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நிவியிடம் வெளிப்படையா உன்னோட காதலைப்பத்தி பேசிடு,” என்று அவனது மனசாட்சி அவனுக்கு எடுத்துரைக்க,

அதேநேரம், “ஐ அப்போ நிவிக்கா வீட்டில் தான் இருப்பாங்களா?” என்று கேட்ட தேவ்,

“அக்கா, என்கிட்ட நிறைய கேம்ஸ் இருக்கு, நாம ரெண்டுப்பேரும் விளையாடலாம்,” என்று நிவேத்யாவிடம் கூறினான்.

அதைகேட்டு தேவின் தலையில் அடித்த சிவாதித்யன், “இங்க வந்தும் விளையாட்டு தானா? எப்படியோ அம்மாவும் அப்பாவும் இன்னும் ரெண்டுநாளில் ஊர் சுத்திப் பார்க்க கிளம்பிடுவாங்க, நீயும் அவங்களோட போகத்தானே போற, அப்புறம் உனக்கு ஏன் போர் அடிக்க போகுது,” என்று சொல்ல,

“நான் ஒன்னும் சின்ன பசங்க விளையாட்டு விளையாடல, பஸ்ஸில் கேம் தான் விளையாடுவேன். அம்மா, அப்பாவோட ஊர் சுத்திட்டு மத்த நேரத்தில் விளையாடுவேன். உனக்கென்னடா வந்துச்சு, நிவிக்கா என்னோட விளையாட வருவாங்க,” என்ற தேவ்,

“அப்படித்தானே நிவிக்கா,” என்று அவளிடமும் கேட்க, அவள் ஆமாம் என்பதுபோல் தலையசைத்தாள்.

“அது ஒன்னுமில்லக்கா, நானும் சில புதுசு புதுசா கேம்ஸ் கண்டுபிடுச்சு விளையாடுவதை பார்த்து, எங்க இவனுக்கு நான் போட்டியா வந்துடுவேனோன்னு இவனுக்கு பொறாமை.” என்று தேவ் சொல்ல,

“என்ன தேவ், அப்படியெல்லாம் நான் நினைப்பேனா? சரி சமாதானம். என்னையும் உன்னோட கேம்ல சேர்த்துப்பியா சொல்லு,” என்று சிவாதித்யன் தம்பியிடம் சாமாதானம் பேசினான்.

“ஏன் என்னோட கேம்ஸ்ல இருந்து ஐடியாஸ் திருடவா? போடா உன்னை கேம்ல சேர்த்துக்க மாட்டேன். இரு வீட்டுக்கு போனதும் அம்மாக்கிட்ட நீ என்னோட தலையில் அடிச்சேன்னு சொல்றேன்.” என்று தேவ் கூற,

“ஹே இவங்க எல்லாம் இல்லன்னா எனக்கும் போர் அடிக்கும்டா, அதுக்கு தான் டா சொன்னேன். என்னையும் கேம்ல சேர்த்துக்கோடா,” என்று இப்போது சிவாதித்யன் தன் தம்பியிடம் கெஞ்ச ஆரம்பிக்கவும்,

அவன் நிவேத்யாவோடு இருக்கவே இப்படி தம்பியிடம் சமாதானம் பேசி கொண்டிருக்கிறான் என்பதை மற்றவர்கள் புரிந்து கொண்டவர்கள், “ஹே சிவா, நீ சொன்னாலும் சொல்லலன்னாலும் உன்னோட நிலையை பார்த்தா எங்களுக்கு சிரிப்பு தான் டா வருது.” என்று நரேஷ் சொல்ல, ஆத்யாவும் சாகித்யாவும் சிரிக்க, அவர்களோடு நிவேத்யாவும் சிரித்தாள்.

அடுத்து கோவிலிலிருந்து கிளம்பியவர்கள், ஆத்யா சொன்ன இடத்தையெல்லாம் சுற்றி வந்தார்கள். நரேஷும் சிவாதித்யனும் மாற்றி மாற்றி கார் ஓட்டியப்படி களைப்பாகமல் பார்த்து கொண்டனர். அப்படியே ஆத்யா கேட்ட ஐபோனையும் வாங்கி தர சிவாதித்யன் மறக்கவில்லை.

கடைசியாக கிழக்கு கடற்கரை (ECR) சாலையில் ஒரு பயணத்தை முடித்து கொண்டு வீடு திரும்புவது தான் அவர்களின் திட்டம். அதன்படி போகும்போது நரேஷ் காரை ஓட்டி கொண்டு செல்ல, அந்த சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் தங்களின் இரவு உணவை முடித்து கொண்டு கிளம்பினார்கள்.

மீண்டும் திரும்பி வரும்போது சிவாதியன் காரை ஓட்டி கொண்டு வர, அனைவருமே காலையில் கிளம்பும்போது இருந்த உற்சாகத்துடனே அந்த பயணத்தை ரசித்தனர். அப்போது அவர்களுக்கு இணையாக வந்த கார் அவர்களை முந்துவதும் பின் பின்னடைவதுமாக இருந்தது.

அந்த காரிலிருந்த நாலைந்து இளைஞர்கள் பார்த்தாலே நன்றாக குடித்துவிட்டு வண்டியை ஓட்டுகிறார்கள் என்பது தெரிந்தது. இவர்களது காரை முந்தும்போது அவர்கள் உற்சாக கூச்சலிடுவதும், பின் அவர்கள் பின்னடையும்போது இவர்களை கெட்ட வார்த்தைகளில் திட்டுவதும் என அந்த பயணம் தொடர்ந்து கொண்டிருக்க,

“ஷிவ், அவங்களை பார்த்தாலே ஓவரா குடிச்சிருக்காங்கன்னு தெரியுது, நீ எதுக்கும் மெதுவாகவே போ. அவங்க நம்மளை ஓவர் டேக் செஞ்சுட்டு போகட்டும்,” என்று சாகித்யா சொல்ல,

“ஆமாம் சிவா, நம்ம மட்டும்னா பரவாயில்லை. இவங்களும் நம்மளோட இருக்காங்க,” என்று மூன்று பெண்களையும் நரேஷ் குறிப்பிட்டு சொன்னவன்,

“அதனால நீ ஸ்லோவாகவே போ,” என்றான்.

சிவாதித்யனும் அதை ஏற்று கொண்டு வண்டியை மெதுவாக ஓட்ட, அந்த வண்டி அவர்களை முந்தி கொண்டு வேகமாக போனது. அதுமட்டுமில்லாமல் போகும்போது இவர்களை கேலி செய்துவிட்டு வேறு சென்றனர்.

சிறிதுநேரம் வண்டியை மெதுவாகவே ஓட்டிய சிவாதித்யன் அந்த வண்டி வேகமாக கண்ணிலிருந்து சென்று மறைந்ததால், கொஞ்சம் வண்டியை வேகமெடுத்தான். அதன்பின் சிறிது தூரம் சென்றதும் பார்த்தால் இவர்களை முந்தி கொண்டு போன வண்டி விபத்துக்குள்ளாகி இருந்தது. அதுமட்டுமில்லாமல் அந்த வண்டி எதிரில் வந்த இன்னொரு வண்டியில் மோதி அந்த விபத்து ஏற்பட்டிருந்தது.

அதை சிவாதித்யன் கவனித்தவன், “நரேஷ், இங்கப்பாருடா நம்மளை ஓவர்டேக் செஞ்சுட்டு போன கார் ஆகிஸ்டெண்ட் ஆகியிருக்கு,” என்று சொல்ல,

“அதுவும் எதிரில் வந்த வண்டியில் மோதியிருக்கு போலவே,” என்று அவன் அருகில் அமர்ந்திருந்த ஆத்யா கவனித்து சொல்லவும்,

“ஆமாம், இன்னொரு காரில் மோதியிருக்கு,” என்றான் சிவாதித்யன்,

உடனே வண்டியை நிறுத்தி அனைவரும் அந்த விபத்தான வண்டிகளுக்கு அருகில் சென்று பார்த்தனர். அந்த இளைஞர்கள் இரத்த வெள்ளத்தில் பேச்சு மூச்சு இல்லாமல் கிடக்க, எதிரில் இருந்த காரில் ஒரு தம்பதியரும் அவர்களின் இரு பிள்ளைகளும் வந்திருக்க, அதில் காரை ஓட்டி கொண்டு வந்ததால் அந்த கணவருக்கும் அவருடன் அமர்ந்து வந்த அவரின் ஒரு பிள்ளைக்கும் பலத்த காயங்கள்.

இத்தனை பெரிய கொடூர விபத்தை பார்த்து கண்டும் காணாமல் போக மனமில்லாததால் அவர்களே ஆம்புலன்ஸ்க்கு அழைத்து விஷயத்தை சொன்னது மட்டுமில்லாமல், ஆம்புலன்ஸ் வந்து விபத்துக்குள்ளானவர்களை அழைத்து செல்லும்வரை உடனிருந்து அந்த ஆம்புலன்ஸ் உடன் சேர்ந்து அவர்களும் மருத்துவமனைக்கு சென்றனர்.

பின் விபத்துக்குள்ளானவர்களின் அலைபேசி வைத்து அவர்களது உறவினர்களுக்கு சிவாதித்யனும் நரேஷும் தகவல்களை தெரிவித்துவிட்டு, மருத்துவர் என்ன சொல்கிறார் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் காத்திருந்தனர்.

“ஹே நரேஷ், எல்லாம் ரொம்ப நேரம் இங்க இருக்க வேண்டாம், வீட்டில் நாம இன்னும் வரலையேன்னு தேட ஆரம்பிச்சு இருப்பாங்க, அதனால நீ எல்லோரையும் கூட்டிட்டு வீட்டுக்கு போ, நான் இங்க என்ன நிலவரம்னு பார்த்துட்டு மெதுவா வரேன்.” என்று சிவாதித்யன் கூற,

“இல்லடா, உனக்கு இங்க ரொம்ப பழக்கமில்ல, அதனால உன்னை மட்டும் விட்டுட்டு எப்படி போக, இன்னும் கொஞ்சநேரம் பார்ப்போம், அதுக்குள்ள டாக்டர் ஏதாச்சும் வந்து சொல்வாங்க, ஆக்ஸிடென்ட் ஆனவங்க ரிலேடிவ்ஸும் யாராச்சும் வந்துடுவாங்க, அப்புறம் நாம கிளம்பிடலாம்,” என்று நரேஷ் கூற, மற்றவர்களும் அதையே ஆமோதித்தனர்.

அப்போது தான் அங்கு நிவேத்யா இல்லாததை சிவாதித்யன் கவனித்தவன், “நிவி எங்கடா?” என்று பதட்டமாக கேட்க,

“அதோ அங்க இருக்கா, அவளுக்கு இந்த ஆக்ஸிடென்ட்லாம் பார்த்தா ரொம்ப கஷ்டப்படுவா,” என்று ஆத்யா பதில் கூறினாள்.

ஆத்யா காட்டிய திசையில் அவன் திரும்பி பார்த்தபோது, அங்கு வைக்கபட்டிருந்த விநாயகர் சிலை முன்னே நின்று நிவேத்யா பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள்.

சிவாதித்யன் அருகில் போனதும் அவளும் அவளது பிரார்த்தனையை முடித்து கண்களை திறந்தாள். அவனை அருகில் கண்டதும், “டாக்டர் வந்து ஏதாவது சொன்னாங்களா?” என்று அவனிடம் கேட்க, அவன் இல்லையென்பது போல் தலையசைத்தான்.

“அவங்களை அங்க போய் பார்த்தப்பவே பேச்சு மூச்சில்லாம கிடந்தாங்கல்ல, அதுவும் எவ்வளவு ரத்தம். அதுவும் ஆல்கஹால் சாப்பிட்டிருந்தா மெடிசன் கூட வேலை செய்யாதுன்னு சொல்வாங்கல்ல, இவங்களை என்னென்ன கனவோட ஆசையா அவங்க பேரண்ட்ஸ் வளர்த்திருப்பாங்க, ஆனா இந்த குடியால இவங்களுக்கு இந்த நிலை. இதில் இவங்களுக்கு கல்யாணம் கூட ஆகியிருக்கலாம், குழந்தை இருக்கலாம், அப்போ அவங்க நிலை?

இவங்களை விடுங்க, அவங்க தெரிஞ்சே அவங்க வாழ்க்கையை சீரழிச்சிக்கிறாங்க, ஆனா அந்த இன்னொரு காரில் வந்தவங்க என்ன தப்பு செஞ்சாங்க, எவ்வளவு அழகான குடும்பம். அவங்களுக்குன்னு எத்தனை கனவுகள் இருக்கும், எதிர்காலத்தை குறிச்சு என்ன திட்டமெல்லாம் போட்டிருப்பாங்க, அவங்களில் யாருக்காச்சும் ஏதாச்சும் ஆனா, அந்த குடும்பத்தோட சந்தோஷம், எதிர்காலம் இதெல்லாம் என்னாகும், நினைச்சு பார்க்கவே கஷ்டமா இருக்கு,” என்று நிவேத்யா கண்கள் கலங்க பேச,

“அப்படியெல்லாம் ஒன்னும் ஆகாது. கார் ஓட்டிட்டு வந்தவருக்கும், கூட உட்கார்ந்திருந்த பையனுக்கும் மட்டும் தான் ரொம்ப அடி, ஆனா அவங்க உயிருக்கு எந்த ஆபத்தும் இருக்காதுன்னு தான் மனசு சொல்லுது. ஆனா அந்த 4 பசங்களை பத்தி தான் எனக்கு நம்பிக்கையே இல்லை.” என்று சிவாதித்யன் கூறினான்.

“அவங்களோட கொஞ்சநேர சந்தோஷத்துக்கு அவங்களுக்கு கிடைச்ச பரிசை பார்த்தீங்களா? இதில் அவங்களுக்கு மட்டும் பாதிப்பில்ல, அதனால எத்தனைபேருக்கு கஷ்டம். இதெல்லாம் உணர்ந்தா இவங்க ஏன் இப்படி செய்ய போறாங்க,” என்று கோபத்தோடு பேசியவள்,

“இதெல்லாம் உஙக்கிட்ட சொல்லிட்டு இருக்கேன் பாருங்க, நீங்க, நரேஷ் மாமா எல்லாம் இப்படித்தானே, இது ஜஸ்ட் சந்தோஷத்துக்கு, என்னோட லிமிட் எங்களுக்கு தெரியும், இப்படியெல்லாம் பேசி ஈஸியா மத்தவங்களை சமாதானம் செய்திடுவீங்க, ஆனா அந்த லிமிட் கொஞ்சம் எல்லை மீறினாலும் அதனால என்னாகும்னு பார்த்தீங்களா? இதனால பாதிப்பு உங்களுக்கு மட்டுமில்ல, உங்களை சுத்தி இருக்க எங்களுக்கும் தான்,

எந்த உரிமையில் இதெல்லாம் நீ பேசற, இதை கேட்க நீ யாரு? இப்படியெல்லாம் நீங்க நினைக்கலாம், ஆனா உங்க மேல உள்ள அக்கறையில் தான் இதெல்லாம் சொல்லிட்டு இருக்கேன். அதே அக்கறை எங்க எல்லார் மேலேயும் உங்களுக்கு இருந்தா, ப்ளீஸ் இந்த பழக்கத்தை விட்டுடுங்க,

நீங்க வாழும் நாட்டில் இதெல்லாம் சகஜமான ஒன்னா இருக்கலாம், அந்த சூழ்நிலைக்கு அது தேவையான ஒன்னாகவும் இருக்கலாம், ஆனா அது உடல் நலத்திற்கு எப்போதும் நல்லது கிடையாது. அது உங்களை சுத்தி இருப்பவங்களுக்கு நல்லது செய்யாது. இப்படி யாருக்கும் நன்மை தராத அந்த சந்தோஷத்தில் என்ன பயன் இருக்கு? இதெல்லாம் யோசிச்சு பாருங்க உங்களுக்கே புரியும்,” என்று அவள் பேசி கொண்டிருக்கும்போதே,

“ஹே சிவா, போலீஸ் வந்திருக்காங்கடா,” என்று நரேஷ் வந்து அவர்களை கூப்பிட்டான்.

பின் காவல்துறை அதிகாரி விபத்தை பற்றி விசாரிக்க, அவர்களுக்கு தெரிந்த தகவல்களை கூறினர். பின் விபத்துக்குள்ளானவர்களின் உறவினர்களும் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர்.

அதற்குள் மருத்துவர் வந்து நான்கு இளைஞர்களில் இருவர் இறந்துவிட்டதாகவும், இருவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறினார். எதிரில் வந்த காரில் விபத்தானவர்களில் காரை ஓட்டி வந்த கணவருக்கும் அருகில் அமர்ந்திருந்த பிள்ளைக்கும் உயிருக்கு ஆபத்தில்லை என்றும் சொல்ல, அத்தனையையும் கேட்டு வருத்தம், நிம்மதி என்று கலவையான கனத்த மனதோடு அனைவரும் வீட்டிற்கு கிளம்பினர்.

முரண்படும்..