MNMN 1

 MNMN 1

சந்திர நிவாசம் என்ற பெயர் பலகையோடு வாழை மர பந்தலும் மாவிலைத் தோரணுமுமாய் அந்த இல்லம் விழாக் கோலமாய் காட்சி அளித்தது. அந்த இல்லத்தின் உரிமையாளர்கள் சகோதரர்களான ரவிச்சந்திரன் மற்றும் ஜெயச்சந்திரன். அதில் ஜெயச்சந்திரனின் மூத்த மகள் சாகித்யாவின் திருமணத்தை முன்னிட்டு தான் இந்த விழாக்கோலமே, திருமணத்திற்கு இன்றோடு சேர்த்து இன்னும் ஐந்து நாட்களே இருக்க, அதை முன்னிட்டு இன்று காலை தான் சொந்த பந்தங்களை அழைத்து இல்லத்தில் பந்தக்கால் நட்டு முடித்திருந்தனர்.

விஷேஷம் என்பதால் வீடு முழுவதும் உறவுக்காரர்களின் வருகையால் பரப்பரப்போடு காணப்பட, சாகித்யாவிற்கு மாலை நேரம் நலங்கு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரவிச்சந்திரனின் மனைவி ஜானகியும், ஜெயச்சந்திரனின் மனைவி கோமளாவும் குங்கும சிமிழோடு அக்கம் பக்கத்து வீட்டாரை நலங்குக்கு அழைக்க சென்றிருந்தனர்.

உறவுக்காரர்களோ சாகித்யாவின் உடன்பிறந்த தங்கை ஆத்யாவிடம் நலங்கு பாத்திரங்கள் எங்கே என்று கேட்டுக் கொண்டிருக்க, அவளுக்கு எங்கே இருக்கிறது என்பது தெரியாததால், தன் அன்னையும் பெரியன்னையும் வீட்டில் இல்லாததால் தன் சகோதரியிடம் கேட்கலாம் என்று நினைத்து பார்த்தால், சாகித்யாவோ கிடைக்கும் நேரத்தில் தன் வருங்கால கணவன் நரேஷிடம் அலைபேசியில் பேசியப்படி இருக்க, அதைப்பார்த்த்து சலித்துக் கொண்டவளோ,

உடனே தன் ஒன்றுவிட்ட சகோதரி, நம் கதையின் நாயகி நிவேத்யாவை தேடி மேல் வீட்டிற்குச் சென்றாள். நிவேத்யா ரவிச்சந்திரனின் இளைய மகள். செல்ல மகள். அவள் தனது அறையில் தீவிரமாக ஏதோ எழுதிக் கொண்டிருக்க,

“நிவி, கொஞ்சம் கீழே வந்து இந்த நலங்கு பாத்திரங்கள் எங்கே இருக்குன்னு எடுத்துக் கொடேன். அம்மாவும் பெரியம்மாவும் வேற இல்லை. இந்த அத்தை என்னை டார்ச்சர் செய்றாங்க,” என்று ஆத்யா கூறவும்,

“போய் சாகி அக்காக்கிட்ட கேளு, அவ எடுத்துக் கொடுப்பா,” என்று நிவேத்யா பதில் கூறினாள்.

“அய்யோ அவ நரேஷ் மாமாவிடம் கடலைப் போட்டுட்டு இருக்கா, நீ கொஞ்சம் வா,” என்று ஆத்யா அவளையே அழைக்க,

“நான் முக்கியமான வேலையில் தானே இருக்கேன். ப்ளீஸ் என்னை தொந்தரவு செய்யாத ஆது, சிபி அண்ணா இருந்தா அவனை எடுத்துக் கொடுக்க சொல்லு,” என்று  அப்போதும் நிவேத்யா தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கவும்,

“சிபியண்ணாவை ஏதோ வேலையா பெரியப்பா வெளிய அனுப்பியிருக்கார். கல்யாண வீட்டில் வேலை எவ்வளவு இருக்கு, நீ பக்கத்து வீட்டு பையனுக்கு ஐ லவ் இந்தியா என்கிற தலைப்பில் கட்டுரை எழுதிட்டு இருக்க, இப்போ இது ரொம்ப முக்கியமா? அவனுக்கு அப்புறமா எழுதி கொடுக்கலாமில்ல, ப்ளீஸ் நிவி வந்து எடுத்துக் கொடு,” என்று ஆத்யா கெஞ்சிக் கேட்டாள்.

“ஆமாம் எனக்கு இது முக்கியம் தான், இது எனக்கு பிடிச்ச டாப்பிக், அதனால இதை முடிச்சிட்டு தான் மத்த வேலை. நீ கீழே போய் பாரு, அங்க தான் எங்கேயாச்சும் தெரியறது போல வச்சிருப்பாங்க,” என்று அவளை துரத்தி விட்டுவிட்டு நிவேத்யா கட்டுரையை தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தாள்.

ஆத்யாவோ புலம்பியப்படியே கீழே வர, அவள் அங்கு இல்லாததால் சாகித்யாவை தொல்லை செய்ததில் அவள் நலங்கு பாத்திரங்களை எடுத்துக் கொடுத்திருந்தாள். ஆத்யாவை கண்டதும் அவளை முறைத்தவள், “எங்கடி போயிட்ட, உன்னை காணும்னு இந்த அத்தை என்னை நரேஷ் கூட பேசவே விடல, ஒரே தொல்லை. நீ இதெல்லாம் கவனிக்கக் கூடாதா? ஆமாம் நிவி எங்க?” என்று சாகித்யா கேட்க,

“எனக்கு நலங்கு பாத்திரம் எங்க இருக்குன்னு தெரியல, அதான் நிவிக்கிட்ட கேட்க போனேன். அவ பக்கத்து வீட்டு பையனுக்கு கட்டுரை எழுதுவதில் பிஸியா இருக்கா,” என்று ஆத்யா பதில் கூறவும்,

“நேத்தே அம்மாவும் பெரியம்மாவும் அந்த பாத்திரத்தை எடுத்து துலக்கி வச்சிட்டாங்க, அதெல்லாம் பூஜை ரூமில் தான் இருந்துச்சு, அதை கூட கவனிக்கலையா?” என்று சாகித்யா கேட்டாள்.

“ஓ அப்படியா? எனக்கு இது தெரியாதே, பரவாயில்லை எப்ப பார்த்தாலும் நரேஷ் மாமா கூட கடலை போட்டுட்டு இருந்தாலும், இதெல்லாம் கவனிச்சு வச்சிருக்க க்கா, உன்னை நினைச்சு நான் பெருமையா உணருறேன்.” என்று ஆத்யா கூற, 

“உன்னை,” என்று சாகித்யா அவளை அடிக்க போக, அதற்குள் நரேஷ் மறுபடியும் அவளை அழைக்கவும்,

“அப்புறம் இருக்கு உனக்கு,” என்று ஆத்யாவை எச்சரித்துவிட்டு அந்த அழைப்பு ஏற்று அவள் பேசவும், ஆத்யா அவளுக்கு ஒழுங்கு காட்டி சிரித்தாள்.

சிறிது நேரத்தில் நலங்குக்கான ஏற்பாடுகள் செய்து முடித்ததும், சாகித்யாவை அழைத்து வந்து மனையில் அமர வைக்க, “மங்கள வாத்தியத்தை போட்டு விடுங்க,” என்று ரவிச்சந்திரன் மற்றும் ஜெயச்சந்திரனின் ஒன்றுவிட்ட அக்கா கஸ்தூரி சொன்னவர், 

“சிபி உன்னோட போனில் எல்லாத்தையும் போட்டோ எடு,” என்று அவனுக்கு அவர் கட்டளை பிறப்பிக்க,

“நம்ம நிவி அவளோட கேமராவில் நல்லா போட்டோ எடுப்பாளே, எங்க அவ?” என்று கேட்ட ரவிசந்திரன்,

“நிவி ம்மா,” என்று இங்கே அழைத்தப்படியே அவர் வாசலுக்கு சென்று பால்கனியை பார்த்து மீண்டும் ஒருமுறை அழைத்தார்.

“பெரியப்பா, அவ பிஸியா பக்கத்து வீட்டு பையனுக்கு கட்டுரை எழுதிட்டு உட்கார்ந்திருக்கா, அவ இப்போதைக்கு வரமாட்டான்னு நினைக்கிறேன்.” என்று ஆத்யா சொல்லிக் கொண்டிருந்த நேரம்,

“கூப்பிட்டீங்களா ப்பா,” என்றப்படி நிவேத்யா அங்கு வந்தாள்.

“என்ன நிவி ம்மா, வீட்டில் விசேஷம் நடக்குது, நிறைய வேலை இருக்கும், கூடமாட உதவியா இருக்காம, இப்போ கட்டுரை எழுதுவது முக்கியமா?” என்று ரவிச்சந்திரன் கேட்க,

“நாளைக்கு கட்டுரை போட்டியாம் ப்பா, கரணுக்கு பிரிப்பேர் செய்ய நேரம் குறைவு. இதில் நான் லேட்டா எழுதி தந்தா எப்படி ப்பா? அதான் சரியான நேரத்துக்கு வந்துட்டேனே? சரி ஆரம்பிங்க நான் போட்டோ எடுக்கிறேன்.” என்று அவள் சொல்லவும், விஷேஷம் ஆரம்பித்தது.

வந்திருந்தவர்கள் ஒவ்வொருவராக நலங்கு வைத்து முடித்ததும், கடைசியாக நலங்கு வைத்து முடித்த கஸ்தூரியோ, “என் பொண்ணுக்கு தெரிஞ்சவங்க ஒருத்தவங்க, அவங்க பையனுக்கு ஒரு நல்ல பொண்ணா கேட்டுருந்தாங்க, நான் நம்ம சாகித்யாவை தான் சொல்லலாம்னு இருந்தேன். பையன் இஞ்சினியரிங் முடிச்சிட்டு வெளிநாட்டில் வேலை செய்றானாம், நல்ல குடும்பம். ஆனா அதுக்குள்ள தான் சாகித்யாவிற்கு டெல்லி மாப்பிள்ளையை பேசி முடிச்சிட்டதா சொன்னீங்க, ஆமாம் இந்த வரன் யார் மூலம் வந்துச்சு?” என்று அவர் கேட்க,

ஜெயச்சந்திரன், கோமளா, ஜானகி மூவரும் என்ன சொல்வதென்று தடுமாறவும், ‘ஹா ஹா அத்தை அவங்க வேலையை ஆரம்பிச்சிட்டாங்க,’ என்பது போல் சிறியவர்கள் நினைத்தனர்.

“நம்ம ஜெயச்சந்திரனோட ஃப்ரண்ட்க்கு தெரிஞ்ச குடும்பம் தான் மாப்பிள்ளை வீடு, பெங்களூரு வீட்டுக்கு அவங்க வந்திருந்தப்ப மாப்பிள்ளையும் அங்க வந்திருக்காரு, அவருக்கு நம்ம சாகித்யாவை பார்த்ததும் பிடிச்சிருக்கு, நேரம் வரும்போது கல்யாணத்துக்கு கேட்டிருக்காரு, நல்ல குடும்பம் அதான் நாங்களும் ஒத்துக்கிட்டோம்,” என்று ரவிச்சந்திரன் பதில் கூறினார்.

சாகித்யா நரேஷின் திருமணம் காதல் திருமணம் என்றாலும், அதை அனைவரிடமும் சொல்லிக் கொண்டிருக்க அவசியமில்லை. அதிலும் கஸ்தூரியிடம் கூறினால் போதும் அதில் என்ன குறை கண்டுப்பிடிக்கலாம் என்று தேடுவார். அதனால் அவரிடம் இது பெரியவர்கள் பேசி முடிவு செய்த திருமணம் போலவே ரவிச்சந்திரன் கூறிவிட்டார். அவரது பதிலில் அனைவரிடமும் ஒரு நிம்மதி வந்து போனது.

“மாப்பிள்ளை குடும்பம் டெல்லியில் நல்ல வசதியான குடும்பம்னு கேள்விப்பட்டேன். இத்தனை பெரிய சம்பந்தம் கிடைச்சது நம்ம அதிர்ஷ்டம் தான், ஆனா நான் சொன்ன குடும்பமும் இவங்களை போல வசதி தான், இன்னும் அவங்களுக்கு வரன் அமையல, நல்ல பொண்ணா இருந்தா சொல்லுங்கன்னு கேட்டுட்டு தான் இருக்காங்க, பேசாம அந்த வரனை நம்ம நிவேத்யாவுக்கு பார்க்கலாமா?” என்று கஸ்தூரி கேட்க,

“அத்தை, சாகித்யா அக்கா கல்யாணத்துக்கு வந்தீங்களா? சந்தோஷமா கல்யாணத்தில் கலந்துக்கிட்டு போங்க, என்னை ஏன் கோர்த்து விடப் பார்க்கறீங்க,” என்று நிவேத்யா கூறவும்,

“ஏன் டீ வேணாம், மாப்பிள்ளை வெளிநாட்டுல லட்ச கணக்கில் சம்பாதிக்கிறான் தெரியுமா? நீயும் கல்யாணம் ஆகி அவனோட வெளிநாட்டுக்கே போகலாம்,” என்று கஸ்தூரி சொல்லிக் கொண்டிருக்க,

“எனக்கொன்னும் வெளிநாட்டுக்கெல்லாம் போக வேண்டாம், எனக்கு இந்தியாவை விட்டு எங்கேயும் போக விருப்பமில்லை. அதனால இதோட இந்த பேச்சை விடுங்க, உங்களுக்கு யாருக்காச்சும் கல்யாணம் செய்து வைக்கணும்னு ஆசையா இருந்தா இதோ சிபி அண்ணாக்கு நல்ல பொண்ணா பார்த்து சொல்லுங்க,” என்று நிவேத்யா கூறினாள்.

அதை கேட்ட சிபிச்சந்திரனோ, “ஹே எதுக்கு என்னை கோர்த்து விடப் பார்க்கிற, எனக்கு இப்போதைக்கு கல்யாணமெல்லாம் வேண்டாம், முதலில் உனக்கு முடியட்டும்,” என்றான்.

“ஏன் இந்த வீட்டுக்கு நீதானே மூத்த பையன். சாகி அக்காவுக்கு முடிஞ்சதும், அடுத்து உனக்கு தான் பொண்ணு பார்க்கணும்,” என்று நிவேத்யாவும் விடாமல் பேச,

“ரெண்டுப்பேரும் பேசாம இருக்கீங்களா?” என்று ரவிச்சந்திரன் இருவரையும் அதட்டியவர், 

“இப்போதைக்கு நிவிக்கோ இல்லை சிபிக்கோ நாங்க வரன் பார்க்கும் எண்ணமில்ல க்கா, முதலில் இந்த கல்யாணம் நல்லப்படியா முடியட்டும், அடுத்து ஒருவருஷமாச்சும் போகட்டும்னு நிவிக்கு பார்க்கலாம்,” என்று ரவிச்சந்திரன் கஸ்தூரியிடம் உறுதியாக கூறிவிட்டார். கஸ்தூரியும் அதன்பின் அதைப்பற்றி பேசவில்லை.

உறவுக்காரர்களெல்லாம் சென்னையில் இருக்கும் காரணத்தால் விசேஷம் முடிந்து அனைவரும் கிளம்பிவிட, அவர்களுடன் கஸ்தூரியும் கிளம்பிவிட்டார். அதன்பின், “பெரியவங்க பேச்சுக்கு இப்படித்தான் எதிர் பேச்சு பேசுவியா நிவி,” என்று ரவிச்சந்திரன் மகளிடம் கேட்க,

அவருக்கு கோபமென்றால் நிவிம்மா நிவியாக மாறிவிடும் என்பது நிவேத்யாவிற்கு நன்றாகவே புரியுமென்பதால், “எனக்கு இந்தியால அதுவும் சென்னையில் தான் கல்யாணம் செய்துக்கணும், எனக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை எல்லாம் வேண்டாம், இது உங்களுக்கே தெரியுமில்ல, அப்புறமும் அவங்க அப்படி சொன்னா அதை கேட்டுட்டு அமைதியா இருக்க சொல்றீங்களா ப்பா,” என்று கேட்டாள்.

“ஆமாம், பிடெக் ஐடி தான் படிப்பேன்னு படிச்சுட்டு, அதுக்குப்பிறகு கார்ப்பரேட் கம்பெனில வேலை செய்ய மாட்டேன். ஆன்சைட் வேலைன்னு அப்ராட் போக மாட்டேன்னு இவளே ஒரு சாதாரண கம்பெனியில் வேலை பார்த்துட்டு இருக்கா, இது தெரிஞ்சும் நீங்க அத்தைக்கு சப்போர்ட் செய்றீங்களே பெரியப்பா,” என்று ஆத்யாவும் கேட்க,

“எனக்கு தெரியாதா நிவியை பத்தி, நம்ம நாட்டில் இல்லாததா? இங்க படிச்ச படிப்பை இங்க உபயோகிக்காம வெளிநாட்டில் போய் ஏன் வேலை செய்யணும்னு சட்டமெல்லாம் பேசுவா, இப்போ என்ன கஸ்தூரி அத்தை சொன்னதும் நாங்க கல்யாணத்துக்கா பேசிட்டோம், என்னைப்பத்தி இவளுக்கு தெரியாதா? அப்படியிருக்க அக்காக்கிட்ட எதிர் பேச்சு பேசிட்டு இருக்கா, அவங்களை பத்தி தெரிஞ்சும் அவங்கக்கிட்ட ஏட்டிக்கு போட்டி பேசலாமா?” என்று ரவிச்சந்திரன் கூறினார்.

“நீங்களும் சித்தப்பாவும் வேணும்னா அத்தைக்கு பயப்படுங்க, இப்படி யாராச்சும் பதிலுக்கு பேசினா தான் அவங்களுக்கும் இப்படி மத்தவங்க விஷயத்தில் அனாவசியமா மூக்கை நுழைக்க கூடாதுன்னு புரியும்,” என்று நிவேத்யா விடாமல் பேச,

“இப்போ அவங்க என்ன சொல்லிட்டாங்க, கல்யாண வயசு வந்துட்டா இப்படித்தான் இங்க வரன் இருக்கு, அங்க வரன் இருக்குன்னு நாலுபேர் சொல்வாங்க, உன்னோட அப்பா சொல்றது போல உன்னோட விருப்பமில்லாமலா கல்யாணம் செய்து வச்சிடுவோம், சும்மா ஏட்டிக்கு போட்டி பேசிக்கிட்டு,” என்று ஜானகி கேட்டார்.

“விடுங்க பெரியம்மா, இன்னும் அதே டாபிக்கையே விடாம பேசிக்கிட்டு,” என்ற சாகித்யா,

“ரிஸப்ஷன்க்கு போட வேண்டிய ஜுவல்ஸ் வாங்க போனோம்னு சொன்னேனே, வாங்க போகலாம்,” என்று தங்கைகள் இருவரையும் அங்கிருந்து அழைத்து சென்றாள்.

அவர்கள் மூவரும் சென்றதும், ஜானகியும் கோமளாவும் தங்களது வேலையை பார்க்கச் சென்றுவிட, ஆண்கள் மூவர் மட்டும் தான் அங்கிருந்தனர்.

அப்போது ஜெயச்சந்திரனோ, “அண்ணா, என்னோட ஃப்ரண்ட் திவாகரன் குடும்பத்தோட நம்ம சாகி கல்யாணத்துக்கு வரான். இன்னைக்கு அவங்களுக்கு ஃப்ளைட் நாளைன்னுக்கு காலையில் இங்க வந்திடுவாங்க, கல்யாணம் முடிஞ்சாலும் சாகி புகுந்த வீட்டுக்கு போகற வரை நம்ம சொந்தக்காரங்க வந்து போயிட்டு இருப்பாங்க, அதனால அவங்க தங்கறதுக்கு வேற இடம் ஏற்பாடு செய்ய சொன்னேனே?” என்று ரவிச்சந்திரனிடம் கேட்க,

“ம்ம் நான் சிபிக்கிட்ட பார்க்க சொல்லியிருந்தேனே,” என்று ரவிச்சந்திரன் பதில் கூறியவர் மகனை பார்க்கவும்,

“இங்க நாலு பில்டிங் தள்ளி ஒரு வீடு இருக்குப்பா, ஃபுல்லா ஃபர்னிஷிங் செஞ்ச வீடு தான், அந்த வீட்டு ஓனர், வருஷத்தில் பாதிநாள் இங்க, பாதிநாள் வெளிநாட்டில்னு மாத்தி மாத்தி இருப்பாரு, இப்போ வெளிநாட்டில் தான் இருக்காராம், நானே அவர்க்கிட்ட போனில் பேசிட்டேன். அவர் வர ரெண்டு மூனு மாசம் ஆகுமாம், அதனால அவங்கல்லாம் வந்தா அங்கேயே தங்கிக்கலாம், எவ்வளவோ ரென்ட்டோ அதை நாம அவரோட அக்கவுண்ட்க்கு டிரான்ஸ்பர் செய்திடலாம், சாவி பக்கத்து வீட்டில் வாங்கிக்கலாம், எல்லாம் பக்கா,” என்று சிபிச்சந்திரன் விளக்கமாக கூறி முடித்தான்.

“என்ன ஜெய், இந்த ஏற்பாடு உனக்கு ஓகே தானே,” என்று ரவிச்சந்திரன் தம்பியிடம் கேட்க,

“ரொம்பவே திருப்தி ண்ணா, நான் கூட அவங்களை ஏதாவது ஹோட்டலில் தங்க வைக்கலாமான்னு பார்த்தேன். ஆனா அதைவிட இதுதான் வசதி. நம்ம பக்கத்திலேயே இருப்பாங்க, ஹோட்டல்னா டக்குன்னு வந்து போக முடியாது. இந்த ஏற்பாடே சரியா இருக்கு ண்ணா,” என்று ஜெயச்சந்திரன் சொல்லி மகிழ்ந்தவர்,

“சிபி, வீடெல்லாம் சுத்தமா இருக்கா, இல்லை சுத்தம் செய்யணுமா?” என்று கேட்க,

“நாளைக்கு அவரே ஆள் ஏற்பாடு செய்து சுத்தப்படுத்தி கொடுத்திட்றதா சொல்லியிருக்காரு  சித்தப்பா,” என்று சிபிச்சந்திரன் சொல்லவும், 

“ரொம்ப நன்றி சிபி, இங்க வந்து ஒரு வருஷம் ஆகப்போகுது, ஆனாலும் இன்னும் இந்த இடம் பழகல, இதுவே பெங்களூர்னா யாருக்கும் கஷ்டம் கொடுக்காம நானே பார்த்துக்குவேன்.” என்று ஜெயச்சந்திரன் கூற,

“அதில் என்ன இருக்கு, பொதுவா கல்யாணம்னா நிறைய வேலை இருக்கும், எல்லாம் பகிர்ந்து தான் செய்யணும், இதுக்கு நன்றியெல்லாம் சொல்லிக்கிட்டு, தங்கச்சி கல்யாணம்னா சிபி இது கூட செய்யலன்னா எப்படி?” என்று ரவிச்சந்திரன் கூறினார்.

ஆமாம் ஜெயச்சந்திரன் வேலை நிமித்தமாக இத்தனை வருடம் குடும்பத்தோடு பெங்களூருவில் வசித்திருந்தார். ரவிச்சந்திரன் இங்கு அவர்களின் தாத்தா காலத்தில் கட்டிய வீட்டில் வசித்து கொண்டிருக்க, ஜெயச்சந்திரனோ வேலை இடத்தை மாற்றி கொண்டு சென்னை வரவிருப்பதை சொல்லவும், வசித்திருந்த வீடும் பழமையாகி விட்டதால், இருவரும் சேர்ந்தே கீழே ஜெயச்சந்திரனுக்கும் மேலே ரவிச்சந்திரனுக்கும் என்று இந்த சந்திர நிவாசத்தை ஒன்றரை வருடத்திற்கு முன்பு கட்டி முடித்திருந்தனர். ஜெயச்சந்திரனும் அதன்பின் குடும்பத்தோடு இங்கு வந்துவிட்டார்.

ஜெயச்சந்திரனோடு கல்லூரியில் ஒன்றாக படித்த உயிர் தோழன் தான் திவாகரன். அவர் வசிப்பது அமெரிக்காவின் நியூஜெர்ஸியில், சாகித்யாவின் திருமணத்திற்காக அவர் குடும்பத்துடன் இந்தியா வரவிருப்பதால் தான் அவருக்கென இந்த ஏற்பாடு. அந்த குடும்பத்தில் ஒருவனாக வரவிருப்பது நம் கதையின் நாயகனும் தான், 

முரண்படும்..