KPEM 22
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
மௌனம் 22
ஏதேதோ நினைவுகளும், முகங்களும் கண்களுக்குள் வந்து வந்து போக, திடிரென்று மிக அருகில் கோரமாய் வெற்றியின் முகம் தெரிய, ஆ..ஆ என்று நீரஜா அலறி எழுந்தாள்.
இரவின் அமைதியை கடன் வாங்கி, அந்த அறையின் ஜன்னல் வழியாக இரவை வெறித்தப்படி, ரசித்தப்படி நின்றிருந்த சஞ்சய், அவளின் அலறல் சத்தம் கேட்டு கட்டிலில் அவள் அருகே வந்து அமர்ந்தவன்,
“நிரு… என்னாச்சுடா..” என்றுக் கேட்டதும், ஏதோ கெட்டக் கனவு கண்டதுப் போல் பயத்தில் இருந்தவள், அவனைப் பார்த்ததும்… “ஜெய்..” என்று அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.
அவனுக்கும் அவளின் நிலை புரிய, மெதுவாக அவளின் முதுகை வருடிக் கொடுத்தான். உண்மையிலேயே ஏதோ கெட்ட கனவுக் கண்டதுப் போல், பயத்தில் அவன் அணைப்பில் இருந்தாலும், நடுங்கிக் கொண்டிருந்தவளுக்கு, மெதுவாக தனக்கு நேர்ந்தது கொஞ்சம் கொஞ்சமாக நினைவுக்கு வந்தது. வெற்றி வீட்டுக்கு வந்ததும், அவன் இவள் மூக்கில் கைக்குட்டையை வைத்ததால் இவள் மயங்கியதும், ஞாபகத்திற்கு வர, அவன் அணைப்பிலிருந்து வெளிவந்தவள், மீண்டும்… “ஜெய்… ஜெய்… வெற்றி.. வெற்றி..” என்று திணறியப் படி நடந்ததை சொல்ல வந்த போது,
அவளின் முகத்தை தன் கைகளால் ஏந்தியப் படி சஞ்சயோ… “நிரு உனக்கு ஒன்னுமில்லடா… உனக்கு ஒன்னுமே ஆகல… நீ ஸேஃபா தான் இருக்க… வெற்றிக்கிட்ட இருந்து உன்னை காப்பாத்தியாச்சு… நம்ம மந்த்ரா தான் உன்னை காப்பாத்த ஹெல்ப் பண்ணா… இப்போ மந்த்ரா இந்த ஹோட்டல்ல தான் வேலை செய்றா.. அவ தான் திரும்ப உனக்கு ஹெல்ப் செஞ்சுருக்கா” என்று அவள் காப்பாற்றப்பட்டதைப் பற்றி கூறியதும், தான் பாதுகாப்பாகத் தான் உள்ளோம் என்பதை உணர்ந்தவள், திரும்ப “ஜெய்..” என்று அவனை அழைத்தப்படியே, மீண்டும் அவனை இறுக்கமாக கட்டிக் கொண்டாள்.
அன்று சஞ்சயிடம் மந்த்ரா பேசிவிட்டு சென்றதும், இன்டர்வியூவை அட்டண்ட் செய்தாள், சஞ்சயின் சிபாரிசாலும், அவள் ஏற்கனவே வேலை செய்த அனுபவத்தாலும், அவளுக்கு அந்த ஹோட்டலில் வேலை கிடைத்தது, எப்போது வேண்டுமானாலும் வேலையில் வந்து சேர்ந்துக் கொள்ளலாம் என்று ஹோட்டல் அனுபமாவில் சொல்லியிருந்தார்கள். அவள் ஏற்கனவே வேலை செய்த பெங்களூர் ஹோட்டலிலும் உடனே வேலையை விட்டு நின்றிட முடியும் என்ற காரணத்தால், இரண்டு நாட்களிலேயே அந்த வேலையை விட்டு, இந்த ஹோட்டலில் வந்து வேலையில் சேர்ந்துக் கொண்டாள்.
அந்த விவரத்தை சஞ்சயிடம் தெரிவிக்க அவனை அலைபேசியில் அழைத்த போது, அவன் நீரஜாவிடம் பேசினானா என்றும் கேட்டு தெரிந்துக் கொண்டாள். அவன் இங்கு நடந்த சொதப்பலைப் பற்றி கூறியவன், நிகேதனோடு சேர்ந்துப் போட்ட சர்ப்ரைஸ் ப்ளான் பற்றியும் அவளுக்கு தெரிவித்தான்.
நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெறும் வரை சஞ்சய் நீரஜாவிடம் காதலை சொல்லப்போவது சஸ்பென்ஸாக இருக்க வேண்டும் என்று சஞ்சய் கூறியிருந்ததால், அதற்குப் பிறகே நீரஜாவை நேரில் சந்தித்துக் கொள்ளலாம் என்று மந்த்ரா முடிவுச் செய்திருந்தாள்.
சஞ்சய் தன் காதலை நீரஜாவிடம் சொல்லியதும் அன்றே அவர்களின் நிச்சயதார்த்தம் நடைப்பெற வாய்ப்பிருப்பதாக அவன் தெரிவித்திருந்ததால், அன்றைய தினம் அவளின் வேலை நேரம் எப்படி இருக்கும் என்பது தெரியாததால், அந்த நிகழ்ச்சிக்கு வருவதை அன்று தான் தீர்மானிக்க வேண்டும் என்றும், அப்படி வர முடியவில்லையென்றால், நேரம் கிடைக்கும்போது நீரஜாவையும், அவனையும் வந்து பார்த்துவிட்டு செல்வதாக மந்த்ரா கூறியிருந்தாள்.
மொத்தத்தில் அவள் சென்னைக்கு வந்தும், சஞ்சயிடம் மட்டுமே அவள் தொடர்பில் இருந்தாள். அதுவும் அலைபேசி வழியாக மட்டுமே, அவள் சென்னையில் ஹாஸ்டலில் தங்குவதற்கு கூட, சஞ்சய் அலைபேசி வழியாகவே அவளுக்கு உதவி செய்தான். அதனால் பெங்களூரில் தன் வேலைக்கு இடைஞ்சலாக வந்த மந்த்ரா, இங்கே சென்னையிலும், அதுவும் திட்டமிட்டு செய்ய நினைத்த காரியத்திற்கு, மந்த்ராவே திரும்ப இடைஞ்சலாக வருவாள், என்று வெற்றி சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
அதிலும், தான் செய்யப் போகும் காரியத்திற்கு அவன் தங்கியிருந்த ஹோட்டலை பயன்படுத்தாது. தன் நண்பனுக்கு தெரிந்த ஹோட்டல் அனுபமாவில் பணி புரியும் ஊழியர் ஒருவரின் உதவியோடு, அந்த ஹோட்டலிலேயே நீரஜாவை சீரழித்து, அவளையும் அவள் சகோதரனையும் பழி தீர்க்கும் வெறியோடு காத்திருந்தவன், அந்த ஹோட்டலுக்கு இரண்டு, மூன்று முறை அந்த ஊழியரை சந்திக்க சென்றும் கூட, அங்கே மந்த்ராவை அவன் பார்க்கவில்லை.
அன்று மந்த்ராவிற்கு பகல் நேர வேலை, மாலையோடு வேலை முடிந்துவிடும் என்பதால், சஞ்சய் வீட்டிற்கு செல்லலாம் என்று அவள் முடிவு செய்திருந்தாள். சஞ்சயிடமும் அதை தெரிவித்தாள். கொஞ்சம் முன்னதாகவே கிளம்ப திட்டம் தீட்டியவள், தான் அணிந்திருந்த சீருடையை மாற்றுவதற்காக அதற்காக இவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்றாள்.
எப்போது உடை மாற்ற மந்த்ரா அந்த அறைக்குச் சென்றாலும், அங்கிருக்கும் ஜன்னல்கள் மூடப்பட்டிருக்கிறதா?? என்று சரிப் பார்த்துவிட்டே உடை மாற்றுவாள். அன்றும் அப்படி சரிப் பார்த்த போது, திறந்திருந்த அந்த அறையின் ஜன்னல் கதவை மூடப் போன போது தான் வெற்றியை ஜன்னலின் அந்த பக்கம் பார்த்தாள்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
அந்த ஜன்னலின் வழியாக பார்த்தப்போது வெற்றியின் முகம் தெள்ளத் தெளிவாக தெரிந்தது. அது மறக்கக் கூடிய முகமா..?? ஒருமுறை பார்த்திருந்தாலும் அவன் செய்த காரியத்தால், அவனின் முகம் அவள் மனதில் பதிந்துப் போனதே, அன்று நீரஜா மட்டும் இவளை தடுக்காமல் இருந்திருந்தால், இவளே அவனை ஏதாவது செய்திருப்பாள்.
“வெற்றியா.?? அவன் சிங்கப்பூர் சென்றுவிட்டதாக தானே கேள்விப்பட்டோம், இப்போது இங்கே என்ன செய்கிறான்…?? என்ற கேள்வி அவள் மனதில் எழாமல் இல்லை, மூடியிருந்த கார் கதவில் சாய்ந்தப்படி சுற்றும் முற்றும் பார்த்தப்படி அவன் நின்றிருந்தான். ஆனால் அவன் இயல்பாக இல்லை என்பது தெள்ள தெளிவாக தெரிந்தது. அதுவும் கார் நின்றிருந்த இடமே, அவன் ஏதோ தவறு செய்யப்போவதை சுட்டிக் காட்டியது.
அந்த ஹோட்டலின் முகப்பு வரையே கார்கள் வர அனுமதியுண்டு. ஹோட்டலுக்கு வரும் விருந்தினரை முகப்பில் இறக்கி விட்டதும், கார் அந்த ஹோட்டலின் இடப்பக்கம் இருக்கும் கார் பார்க்கிங்கிற்கு செல்ல வேண்டும், ஆனால் வெற்றி நின்றிருந்த இடம் ஹோட்டலுக்கு வலப்பக்கத்தில் உள்ள பாதையில், பொதுவாக அந்த ஹோட்டலின் உணவு தயாரிப்பதற்கான மளிகைப் பொருட்கள், தண்ணீர், இன்னும் பல தேவைகளுக்காக வரும் வண்டிகளுக்கு மட்டுமே அங்கு அனுமதியுண்டு. அந்தப்பக்கமாக இருக்கும் பாதை வழியாக ஹோட்டலின் பின் பக்கம் சென்று தேவையானவற்றை இறக்குவர். கார்கள் அந்தப் பக்கம் செல்ல, செக்யூரிட்டி அனுமதிப்பதில்லை.
இங்கு வந்த இந்த சில நாட்களில் மந்த்ரா இதை தெரிந்துக் கொண்டிருந்தாள். இப்போதோ வெற்றியின் கார் இங்கு நிற்பதில் சந்தேகம் கொண்டு, அவனை கூர்ந்து கவனித்தாள். அப்போது தான் அந்த ஹோட்டலில் வேலை பார்க்கும் ஊழியர், பொதுவாக கொஞ்சம் அனைவரையும் அதட்டி வேலை வாங்கும் ஊழியர், இந்த ஹோட்டல் நிறுவனத்தாரின் உறவினர், அதனால் தான் இப்படி என்று அவளே கேள்விப்பட்டிருக்கிறாள்… அந்த ஊழியர் தான் வெற்றியின் அருகே வந்து அவரோடு பேசிக் கொண்டிருந்தார். இருவரும் காரின் உள்ளே அடிக்கடி பார்த்தப்படி பேசிக் கொண்டிருந்தனர்.
சந்தேகமே இல்லை, வெற்றி ஏதோ தவறான நோக்கத்தோடு தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறான் என்பதை மந்த்ரா புரிந்துக் கொண்டாள். ஆனால் என்ன என்பது தான் தெரியவில்லை, அவன் என்ன நோக்கத்தோடு வந்திருக்கிறான் என்று எப்படி தெரிந்துக் கொள்வது..?? அந்த காரில் என்ன இருக்கிறது..?? யாரையாவது கடத்திக் கொண்டு வந்திருக்கிறானா..?? இதைப்பற்றி யாரிடமாவது சொல்லலாமா?? இல்லை போலீஸிக்கு போன் செய்யலாமா..?? என்று இவள் யோசிக்கும் போதே..
ஒருவேளை நீரஜாவிற்கு பிரச்சினை கொடுக்க வந்திருக்கிறானா..?? என்பதும் மனதில் தோன்றியது. வெற்றி சஞ்சயிடம் பேசியதைப் பற்றியும், நீரஜாவிற்காக அவள் அண்ணன் பார்த்து வைத்திருந்த மாப்பிள்ளை வீட்டாரிடம் நீரஜாவை பற்றி அவன் தவறாக பேசியதையும் சஞ்சய் இவளிடம் முன்பே சொல்லியிருந்தான். அதெல்லாம் இப்போது ஞாபகத்திற்கு வந்ததும், நீரஜாவின் பாதுகாப்பை பற்றி அறிய நினைத்தாள். எனவே சஞ்சயின் அலைபேசிக்கு அவள் தொடர்புக் கொண்டாள்.
இங்கு நிகேதன் வீட்டில் அமைக்கப்பட்டிருக்கும் நவீன பாதுகாப்பு கருவிகளின் உதவியால் , நீரஜாவை கடத்தியது வெற்றி என்று இவர்கள் அறிந்துக் கொண்டனர். ஆனால் அவன் நீரஜாவை எங்கு கொண்டு சென்றிருக்கிறான் என்பது தான் தெரியவில்லை, வெற்றி வீட்டுக்குள் வந்தது மட்டுமே கேமராவில் பதிவாகியிருக்க, அவன் எடுத்து வந்த காரைக் கூட வெளியே நிறுத்தியிருந்ததால், மேற்கொண்டு நீரஜாவை அவன் எங்கே அழைத்துச் சென்றிருப்பான் என்பதை அறிந்துக் கொள்ள முடியவில்லை.
தன் தந்தையின் நண்பர் உதவியோடு போலீஸ் கமிஷ்னரை பார்க்க நிகேதன் சென்றிருக்க, இங்கு ஜானவியும், சஞ்சயும் நீரஜாவிற்கு தெரிந்த சிங்கப்பூர் நண்பர்கள் மூலமாக வெற்றியை பற்றி ஏதாவது தகவல்கள் கிடைக்குமா..?? என்று முயற்சி செய்துக் கொண்டிருந்தனர். ஆனால் குறிப்பிடும்படி வெற்றியைப் பற்றி எந்த தகவல்களும் இவர்களுக்கு கிடைக்கவில்லை,
திட்டமிட்டு தான் வெற்றி நீரஜாவை கடத்தியிருக்கிறான். ஆனால் அவனால் தப்ப முடியாது, போலீஸ் உதவியோடு எப்படியும் அவனை பிடித்துவிடலாம், நீரஜாவையும் மீட்கலாம், ஆனால் அதற்கு எவ்வளவு நேரமாகுமோ, அதற்குள் நீரஜாவிற்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்ற கவலையில் சஞ்சயும், ஜானவியும் இருந்தனர். அப்போது தான் மந்த்ராவிடம் இருந்து சஞ்சய்க்கு அழைப்பு வந்தது.
இவன் காதலை நீரஜாவிடம் உரைத்தானா.?? என்றுக் கேட்கவே அவள் போன் செய்வதாக சஞ்சய் நினைத்தப்படியே அவளின் அழைப்பை ஏற்றான்.
“ஹலோ.. சொல்லு மந்த்ரா..”
“சஞ்சய்… அங்க எல்லாம் ஓகேவா.. நீரஜா சேஃபா தான இருக்கா..”
எடுத்த எடுப்பிலேயே அவள் நீரஜாவின் பாதுகாப்பை பற்றி கேட்டதும், மந்த்ராவிற்கு நீரஜா பற்றி ஏதாவது தெரிந்திருக்குமோ என்று தோன்றியது.
“மந்த்ரா… நீரஜா பத்தி உனக்கு ஏதாச்சும் தெரியுமா..?? எதுக்காக அப்படி கேக்குற..??”
“அப்போ, நீரஜாக்கு ஏதாச்சும் பிரச்சனையா சஞ்சய்..??”
“நீ எதுக்காக அப்படிக் கேட்ட..?? முதல்ல அதுக்கு பதில் சொல்லு..??”
“சஞ்சய்… நான் வொர்க் பண்ற ஹோட்டல்ல வெற்றிய பார்த்தேன்… அவன் நடவடிக்கையை பார்த்தா.. ஏதோ சரியில்லன்னு தோனுச்சு… சிங்கப்பூர்ல இருக்க வேண்டியவன் இங்க இருக்கான்… அதான் நீரஜா பத்தி கேக்க நினைச்சேன்.. நீரஜா வீட்ல தான இருக்கா..??”
“மந்த்ரா… வெற்றி நீரஜாவை கிட்நாப் பண்ணிட்டான்… எங்கக் கூட்டிட்டுப் போனான்னு தெரியாம டென்ஷன்ல இருந்தோம்… நீ நிஜமாவே வெற்றிய தான பார்த்த..??”
“என்ன சஞ்சய்… அவனோட முகம் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு… நான் அவனை தான் பார்த்தேன்… பார்த்தது என்ன.. இப்பவும் அவன் என்னோட கண் பார்வையில தான் இருக்கான்… ஜன்னல் வழியா பார்க்கிறேன்… கூட எங்க ஹோட்டல் ஸ்டாப் ஒருத்தர் இருக்காரு… அவர் அவ்வளவா நல்ல ஆள் இல்ல… ரெண்டுப்பேரும் ஏதோ பேசிக்கிட்டு இருக்காங்க… அடிக்கடி காரை பார்த்து பேசறாங்க… சஞ்சய்.. எனக்கென்னவோ நீரஜா அந்த கார்ல தான் இருப்பான்னு தோனுது.. இப்போ என்ன பண்றது சஞ்சய்..?? நான் வேணா இங்க யாரையாவது ஹெல்ப்க்கு கூப்பிடட்டுமா..??”
“இல்ல மந்த்ரா.. அப்படி எதுவும் செய்யாத.. கூட வேற அந்த ஹோட்டல் ஸ்டாப் இருக்கார்னு சொல்ற… எந்த அளவுக்கு உனக்கு அங்க ஹெல்ப் கிடைக்கும்னு தெரியாது…
இங்கப் பாரு… நான் இப்போ கிளம்பிட்டேன்… உடனே நிக்கிக்கும் கால் பண்றேன்… அவன் போலீஸை பார்க்கத்தான் போயிருக்கான்… கொஞ்ச நேரத்துல நாங்க அங்க இருப்போம்… அதுவரைக்கும் வெற்றிக்கு தெரியாம அவன் என்ன பண்றான்னு கவனி… அவன் கண்ல பட்றாத… அப்புறம் வெற்றி உஷார் ஆயிடுவான்… அவனை தப்பிக்க விடக் கூடாது மந்த்ரா.. ஏதாவது பிரச்சனைன்னா உடனே எனக்கு கால் பண்ணு..” என்றான்.. அவளும் சரி என்று சொல்லி அலைபேசியை நிறுத்தினாள்.
சஞ்சய் அலைபேசியில் நீரஜாவைப் பற்றி பேசும்போதே ஜானவி என்ன என்று பரிதவிப்போடு நின்றிருந்தாள். அவன் அலைபேசியை துண்டித்ததும், “சஞ்சய் யார் பேசுனது, நீரஜாவ அந்த வெற்றி எங்க கூட்டிட்டுப் போனானாம்.. நீரஜாவுக்கு ஒன்னுமில்லையே..” என்று பதட்டத்தோடு கேட்டாள்.
“ஜானு… நீரஜா ப்ர்ண்ட் மந்த்ரா தான் பேசினா… வெற்றி அவ வேலைப் பார்க்கும் ஹோட்டல்ல தான் இருக்கானாம்.. நீரஜாவை அவன் அந்த ஹோட்டலுக்கு தான் கூட்டிட்டுப் போயிருக்கான்… நான் உடனே அங்கப் போகணும்… நிக்கிக்கும் அப்படியே கால் பண்ணி அங்க வரச் சொல்றேன்..” என்றப்படியே அவசரமாக வீட்டிலிருந்து கிளம்பினான்.
சஞ்சய் சொல்லியப்படி வெற்றிக்கும் அந்த ஹோட்டல் ஊழியருக்கும் தெரியாமல் அவர்களை கண்காணிக்க தொடங்கினாள் மந்த்ரா. வெற்றியோடு பேசிக் கொண்டிருந்த ஊழியர் திரும்பவும் அந்த வலது பக்க வாயில் வழியாக சென்றுவிட்டார். பின் சிறிது நேரம் வெற்றி தனியாக நின்றிருக்க, பின் வேகமாக வந்தவர், வயதானவர்கள் வந்தால் கூட்டிச் செல்லும் வீல் சேரில் நீரஜாவை உட்கார வைத்து, அந்த வழியாகவே அவளை கூட்டிச் சென்றனர்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
ஊழியர்களுக்காக இருந்த லிஃப்ட் வழியாக நீரஜாவை கூட்டிச் சென்றவர்கள், அங்கே வரும் விருந்தினர்கள் தங்க இயலாமல் maintenance work நடைபெறும் அறைக்குள் அவளை அழைத்துச் சென்றனர்.
அதுவரைக்கும் அவர்களை பின் தொடர்ந்துக் கொண்டிருந்த மந்த்ராவிற்கு, அதற்குப் பின் என்ன செய்வது என்று தெரியவில்லை, இன்னும் சஞ்சயும், நிகேதனும் வரவில்லையே என்று பதட்டமானாள். அவர்கள் வருவதற்குள் நீரஜாவை வெற்றி ஏதாவது செய்துவிட்டால், என்ன செய்வது என்று பயந்தாள். அந்த ஹோட்டல் ஊழியரும் அந்த அறைக்குள் இருக்கவே, அவன் வெளியே வரும் வரை அந்த வெற்றி நீரஜாவை எதுவும் செய்யமாட்டான், என நினைத்தாள்.
இருந்தும் இருவருமே சேர்ந்து நீரஜாவை ஏதாவது செய்தால் என்ன செய்வது…?? பேசாமல் உள்ளே சென்றுவிடலாமா..?? என்றுக் கூட தோன்றியது. சரி சஞ்சய் முதலில் எங்கு வருகிறான் என்று கேட்கலாம் என்று நினைத்தவள், சஞ்சயின் அலைபேசிக்கு தொடர்புக் கொள்ள முயல, அதற்குள் சஞ்சயே அங்கு வந்தான்.
மந்த்ரா அவர்கள் இருக்கும் அறையை அவனுக்கு காட்டியதும், வேகமாக சென்று அந்த கதவை தட்டினான். கதவை திறந்தது தான் தாமதம், கதவை அந்த ஊழியர் திறக்க, நேருக்கு நேராக அங்கே நின்றிருந்த வெற்றியை உடனே அடிக்க தொடங்கிவிட்டான் சஞ்சய், நீரஜாவோ மயக்கத்தோடு கட்டிலில் படுத்திருந்தாள். அந்த ஊழியரோ மாட்டிக் கொண்ட பயத்தில் அங்கிருந்து வெளியேறிவிட்டார்.
வெற்றியை சஞ்சய் கண்மண் தெரியாமல் அடிக்க, மந்த்ரா அவனை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டாள். அந்த நேரத்தில் போலிஸோடு அந்த அறைக்குள் நுழைந்த நிகேதனும் கூட போலீஸ் அங்கிருப்பதை பொருட்படுத்தாமல் வெற்றியை கோபமாக அடிக்க ஆரம்பித்தான். பின் போலீஸார் தான் வெற்றியிடம் இருந்து இருவரையும் விளக்கி விட்டனர்.
இருவரும் அவனை அடிப்பதை நிறுத்திய பிறகு தான் வெற்றி போலீஸை கவனித்தான். இப்படி உடனே மாட்டிக் கொள்வோம் என்று அவன் துளியும் நினைக்கவில்லை,
அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வெற்றியின் கனவு நாளுக்கு நாள் வளர்ந்துக் கொண்டே இருந்தது. இங்கு நீரஜாவின் வீட்டுக்கு வந்து அவளின் செல்வ செழிப்பை பார்த்ததும், கஷ்டம் இல்லாமல் அவளை மணந்தால், எளிதாக அவளின் சொத்து தன் கைவசம் வரும் என்ற எதிர்பார்ப்பே அவனை வானத்தில் பறக்க வைத்தது. ஆனால் அவனின் எண்ணமெல்லாம் தவிடுபொடியாக, அப்போதே அவனுக்குள் இருந்த ஆசைகள் வெறியாக மாறியிருக்க, இதில் தேவையில்லாமல் அவனை நிகேதன் சீண்டிவிட, ப்ரோமோஷன் இல்லையென்று அலுவலகத்தில் சொல்லியதுமே அந்த வேலையை விட்டவன், இவர்களை பழிவாங்க திட்டம் வகுத்து, அதில் மாட்டாமல் தப்பித்து வேறு நாடு செல்ல கூட திட்டமிட்டிருந்தான்.
செய்தது இவன் தான் என்று தெரிய வேண்டும், ஆனால் மாட்டிக் கொள்ளக் கூடாது. எப்படியும் இவனைக் கண்டுப்பிடிக்க நேரமாகும், அதற்குள் நினைத்ததை முடித்துவிட்டு, அவளை காரிலேயே ஏதாவது ஒரு இடத்தில் விட்டுவிட்டு, உடனே வெளி மாநிலம் சென்று அங்கிருந்து விமானம் ஏறிவிட வேண்டும் என்றெல்லாம் திட்டம் தீட்டியிருந்தான். ஆனால் தீட்டிய திட்டம் எதுவும் செயல்படுத்துவதற்கு முன்பே இப்படி மாட்டிக் கொண்டதை நினைத்து அதிர்ந்தான்.
“சார்… ஏதோ கோபத்துல செஞ்சுட்டேன் சார்… என்னை விட்டுடுங்க… இனி இவங்க இருக்க திசைப் பக்கமே வர மாட்டேன்… என்னை விட்டுடுங்க…” என்று கெஞ்சினான்.
“சார்… இவன் அப்பாவி மாதிரி பேசினா விட்றாதீங்க சார்… இவனை என்கிட்ட விடுங்க… என்னோட தங்கச்சிக் கிட்டயே தப்பா நடந்துக்கப் பார்த்திருக்கான்… இவனையெல்லாம் கொன்னுப் போட்டாக் கூட ஆத்திரம் தீராது..” என்று நிகேதன் கோபப்பட்டான்.
“Mr. நிகேதன்… சட்டப்படி என்ன ஆக்ஷன் எடுக்கணுமோ, கண்டிப்பா எடுப்போம்… இப்போ இவரை ஸ்டேஷன்க்கு கூட்டிட்டுப் போறோம்… நீங்களும் வந்து முறையா ஒரு கம்பெளியிண்ட் எழுதிக் கொடுங்க…” என்றார் அந்த போலீஸ் அதிகாரி.
“சார்… வெற்றிக்கு இங்க இருக்க ஒரு ஸ்டாஃபே ஹெல்ப் பண்ணியிருக்கான் சார்… நான் உள்ள வந்தப்போ… அவன் எஸ்கேப் ஆகிட்டான்…. அவனையும் பிடிங்க சார்..” என்று சஞ்சய் கூறினான்.
“நீங்க இந்த ஹோட்டல்ல தான வேலைப் பார்க்கிறீங்க.. அவர் யாருன்னு டீடெயில் தெரியுமா..??” என்று அந்த அதிகாரி மந்த்ராவிடம் கேட்டார்.
“சார்… நான் இப்போ தான் இங்க வேலைக்கு சேர்ந்தேன்… எனக்கு அவர் பேரும், அவர் போஸ்டிங் டீடெயில்ஸும் தான் தெரியும்..”
“ம்ம் ஒகே..” என்றவர், உடன் வந்த போலீஸ் கான்ஸ்டபிளிடம், “நீங்க… இந்த ஹோட்டல் மேனேஜரை போய் உடனே பாருங்க… அந்த ஸ்டாப் பத்தின டீடெயில் கேளுங்க…” என்று சொல்லிவிட்டு.. “மிஸ் மந்த்ரா… நீங்களும் அவர் கூட போய் அந்த ஸ்டாஃப் பேரை சொல்லுங்க..” என்றார்.
“Mr. நிகேதன் நம்ம போலாமா..??” என்றுக் கேட்க,
“சார்… ஒரு நிமிஷம்” என்றான் அவன்,
வெற்றியைக் கூட்டிக் கொண்டு அவர்கள் வெளியே செல்ல, மந்த்ராவை பார்த்து நிகேதனோ, கையெடுத்துக் கும்பிட்டு…
“ரொம்ப தேங்க்ஸ்ம்மா… நீ எங்களுக்கு ரொம்ப பெரிய உதவி செஞ்சுருக்க… என்னோட தங்கச்சிக்கு மட்டும் ஏதாச்சும் ஆகியிருந்துச்சு… அப்புறம் நான் என்ன ஆயிருப்பேன்னே சொல்ல முடியாது…” என்றதும்,
“டேய்… என்னடா.. கடவுள் துணை நமக்கு இருக்குடா… அதான் மந்த்ரா இருக்க ஹோட்டல்க்கு வெற்றி வந்திருக்கான்…” என்ற சஞ்சய்.. மந்த்ராவை பார்த்து,
“இருந்தும் மந்த்ரா… நீ மட்டும் வெற்றிய பார்க்கலன்னா, எங்களால அவனை கண்டுப்பிடிச்சு, நீரஜாவை காப்பாத்தியிருக்க முடியாது… ரொம்ப தேங்க்ஸ்..” என்றான்.
“எனக்கெதுக்கு இப்போ நீங்க ரெண்டுப்பேரும் தேங்க்ஸ் சொல்லிக்கிட்டு இருக்கீங்க.. நீரஜா என்னோட ஃப்ரண்ட்… அவளுக்கு ஹெல்ப் பண்ண கடவுள் எனக்கு ஒன்னுக்கு ரெண்டு முறை வாய்ப்பு கொடுத்ததை நினைச்சு சந்தோஷப்பட்றேன்… நீங்க சொன்ன மாதிரி எல்லாம் கடவுளோட அருள் தான் சஞ்சய்…” என்றாள்.
“மந்த்ரா… இப்போ நீ செஞ்ச காரியத்தால, இந்த வேலை கூட உனக்கு இல்லாம போலாம்.. இருந்தும் ஹெல்ப் பண்ணியிருக்க… இங்கப் பாரு வொர்க்ல ஏதாச்சும் ப்ராப்ளம் வந்தா கவலைப்படாத… உனக்கு வேற வேலைக்கு நான் ஏற்பாடு செய்றேன்..” என்று நிகேதன் கூறினான்.
“சரி நிகேதன் அப்படி ஏதாவது பிரச்சனை வந்தா, நான் உங்கக்கிட்ட கண்டிப்பா கேக்கறேன்..” என்றாள் அவள்,
பின் நிகேதன் கட்டிலில் நீரஜாவின் அருகே உட்கார்ந்தான். அவளின் தலையை கோதியவன், “என்ன சஞ்சய்..?? இன்னும் நீரஜா கண் விழிக்கல.. ஏதாச்சும் ப்ராப்ளமா..?? வேணும்னா டாக்டர் கிட்ட கூட்டிட்டு போவோமா..??” என்றுக் கேட்டான்.
“இவளுக்கு சீக்கிரம் மயக்கம் தெளியக் கூடாதுன்னு ஹெவி டோஸ் கொடுத்திருப்பாங்க… இல்ல வர வழியில திரும்ப மயக்கமடைய வச்சிருக்கலாம்… கொஞ்ச நேரத்துல இவளுக்கு மயக்கம் தெளிஞ்சுடும்… அதுவரைக்கும் நீங்க இங்கேயே இருங்க சஞ்சய்… இந்த ரூம்ல டாய்லட்ல தான் மெயிண்டனென்ஸ் வொர்க் நடக்குது… அதனால பிரச்சனையில்ல… ஒருவேளை மயக்கம் தெளிஞ்சு, டாக்டர் ஹெல்ப் தேவைப்பட்டா, இங்கயே டாக்டரை வர வைப்பாங்க..” என்று மந்த்ரா கூறினாள்.
“மந்த்ரா சொல்றதும் சரி தான் மாப்ள.. நீ நீரஜாக் கூட இங்கேயே இரு… நான் ரிஷப்ஷன்ல நீங்க இங்க தான் கொஞ்ச நேரம் இருக்கப் போறீங்கன்னு சொல்லிட்டு, போலீஸோட போய் ஃபார்மாலிட்டிஸை முடிச்சுட்டு வரேன்..” என்று நிகேதன் சொன்னதும், மந்த்ராவும்..
“அப்போ நானும் போய் போலிஸோட மேனேஜர பார்த்துட்டு அப்புறம் வரேன் சஞ்சய்..” என்று விடைப் பெற்றாள்.
இருவரும் கிளம்பியதும் சிறிது நேரம் நீரஜாவின் அருகே உட்கார்ந்த சஞ்சய், பின் ஜன்னலருகே சென்று இரவை பார்த்தப்படி நின்றான்.
சஞ்சயின் அணைப்பில் இருந்த நீரஜாவிற்கு, கொஞ்சம் கொஞ்சமாக நடுக்கமும், பதட்டமும் குறைந்து மெல்ல இயல்புக்கு திரும்பினாள். அப்போது தான் அவள் அவனின் அரவணைப்பில் இருக்கிறாள் என்பதையே உணர்ந்தாள். அதை உணர்ந்த அந்த நொடி, சடாரென்று அவனிடம் இருந்து விலகினாள்.
அவள் அப்படி விலகியதுமே, இன்னும் பயத்தில் இருக்கிறாளோ? என நினைத்து, அவளின் முகத்தை தன் கைகளில் ஏந்தி, “என்னாச்சுடா..” என்றுக் கேட்டான்.
“ம்ம் ஒன்னுமில்ல பாஸ்.. என்று அவனிடமிருந்து கொஞ்சம் விலகி உட்கார்ந்தாள் அவள்,
அவனை பாஸ் என்று அழைத்ததிலேயே அவள் இயல்புக்கு வந்துவிட்டாள் என்பதை தெரிந்துக் கொண்டான்.
“ம்ம் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னை யாரோ ஜெய்னு கூப்பிட்டா மாதிரி இருந்துச்சே..” அவன் அப்படிக் கேட்டதும் தான், அவனை ஜெய் என்று அழைத்ததே அவளுக்கு நினைவுக்கு வந்தது. சஞ்சய் என்றாலும் பரவாயில்ல, அவனை அப்படி கூப்பிட வேண்டுமென்று மனதில் நினைத்ததுப் போல் ஜெய் என்று கூப்பிட்டுவிட்டாளே என்று திரு திருவென்று விழித்தாள்.
அவனோ அவளின் அந்த செய்கையை ரசித்தப்படியே, அவளை நெருங்கி உட்கார்ந்தவன், “பாஸ், சஞ்சயை விட… எனக்கு இந்த ஜெய் தான் ரொம்ப பிடிச்சிருக்கு..” என்றான் புன்னகையோடு,
“ம்ம் என்னோட ஞாபகமா தான் ஜெய்க்குட்டிக்கு அந்த பேரை வச்சியா..??”
“ம்ம் அப்படில்லாம் ஒன்னுமில்ல..” என்று பதட்டத்தோடு சொன்னவள், “இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியல..” என்றுக் கேட்டாள்.
“ம்ம் நம்பிட்டேன்..” என்று கண்ணடித்து கூறினான்.
சஞ்சய் இப்படிக் கூட பேசுவானா?? என்று ஆச்சர்யமாக இருந்தது அவளுக்கு, அவனுக்கே அது ஆச்சர்யமாக தான் இருந்தது. அவள் மயக்கத்தில் இருந்த போது அவன் யோசித்துக் கொண்டிருந்ததே வேறு, அவன் காதலை நீரஜாவிடம் தெரிவிக்க நினைக்கும் போதெல்லாம் இப்படி ஏதாவது தடை வருவதை நினைத்து வருத்தப்பட்டான். அதுவும் இந்த முறை வெற்றி செய்தக் காரியத்தால், நீரஜா மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பாளோ என்று நினைத்தான். இதிலிருந்து அவள் மீண்டு வர எத்தனை நாள் ஆகுமோ, இந்த நேரத்தில் காதல், கல்யாணம் பற்றியெல்லாம் அவளிடம் பேச முடியுமா? என்று குழம்பினான். ஆனால் மயக்கத்திலிருந்து விடுபட்டவளோ, “ஜெய்” என்று அழைத்து, இவனை அணைத்துக் கொண்டதே… இவன் குழப்பத்திற்கான விடையாக இருந்தது.
“நீ இப்படி ஜெய்னு உரிமையா கூப்பிட்றது தான் பிடிச்சிருக்கு நிரு… நான் கூட உனக்கு செல்லமா ஒரு பேர் வச்சிருக்கேன் தெரியுமா..?? எல்லோரும் கூப்பிட்றது போல, நிரு இல்ல நீரஜான்னு கூப்பிடாம, பின்னாடி இருக்க ரஜாவ எடுத்து ரஜு இல்ல ரஜின்னு கூப்பிடலாமான்னு யோசிச்சு, அப்புறம் அதையே கொஞ்சம் மாத்தி ராஜின்னு கூப்பிட முடிவுப் பண்ணேன். எதுக்காக அப்படி கூப்பிட நினைச்சேன்னு சொல்லுப் பார்க்கலாம்?” என்றுக் கேட்டான்.
அவளோ எதற்காக என்று பார்வையாலே கேள்வியை கேட்க, “எதுக்காகன்னா..?? நீ தான் என்னோட மனசுல சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கும் ராஜகுமாரியாச்சே… அதான் அதை சுருக்கி ராஜின்னு கூப்பிட ஆசை..” என்றான்.
அவளுக்காக அவன் வைத்த செல்லப் பேரை கேட்டதும், மகிழ்ச்சியிலும், வெட்கத்திலும் அவள் முகம் சிவந்துப் போய் அவனை பார்த்துக் கொண்டிருந்தவள், அப்போது தான் அவனின் உடையை கவனித்தாள். அது அவனின் நிச்சயதார்த்ததிற்காக அணிந்திருந்த ப்ரத்யேக உடை, அவள் மயக்கம் தெளிந்து இயல்புக்கு வந்திருந்தாலும், வெற்றி வீட்டுக்கு வந்தது தான் முதலில் நினைவுக்கு வந்ததே தவிர, இன்று சஞ்சயின் நிச்சயதார்த்தம் என்றோ, அதற்காக தான் அவள் தயாராகிக் கொண்டிருந்தாள் என்பதையோ மறந்துப் போனாள். ஒருவேளை மயக்கம் தெளிந்து அவள் எழுந்ததிலிருந்து அவன் அவளுடன் இருப்பதால் கூட மறந்திருக்கலாம், இப்போது அவன் அணிந்திருந்த உடையை பார்த்ததும் அனைத்தும் ஞாபகத்திற்கு வந்தது.
“எப்படி இருக்கு உன்னோட செல்லப் பேர்.. பிடிச்சிருக்கா..??” என்றுக் கேட்டப்படி அவள் கையை அவன் பிடிக்க, அவன் கையிலிருந்து அவளின் கையை உதறி பிரித்தெடுத்தாள் அவள்,
“செல்லப்பேருக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல… உங்களை கட்டிக்கப் போற பொண்ணுக்கு போய் செல்லப் பேர் வைக்க வேண்டியது தானே.. என்ன மாப்ள சார்.. நிச்சயதார்த்தமெல்லாம் நல்லப்படியா முடிஞ்சுதா..?? இல்ல என்னால தடைப்பட்டுப் போச்சா..??” கோபமாக கேட்க நினைத்தால் கூட அவளால் முடியவில்லை. இந்த சூழ்நிலைக்கும் கோபத்துக்கும் நெடுந்தூரமிருந்தது, ஒருவித சினுங்கலோடு, செல்லக் கோபத்தை தான் அவனிடம் காட்டினாள்.
“ம்ம் பொண்ணு இங்க இருக்கும்போது, அப்புறம் நிச்சயதார்த்தம் எப்படி நடக்குமாம்..??”
“ஏன் உங்க மாமாப் பொண்ணு தான் உங்களுக்காக காத்திருக்கிறாளே.. அப்புறம் என்ன..??”
“அவ தான் என்னை வேண்டாம்னு சொல்லிட்டாளே.. அப்புறம் எப்படி நிச்சயம் நடக்குமாம்..??”
“ஓ மாமாப் பொண்ணு வேண்டாம்னு சொன்னதுக்கு அப்புறம் தான் இந்த நீரஜாவோட ஞாபகம் வந்துச்சா..??”
“நீ வேற.. என்னை வேண்டாம்னு சொன்னதுக்காகவே அந்த பொண்ணுக்கு கோடி முறை நன்றி சொல்லணும்..” என்றான்.
இந்த நிச்சயதார்த்தம் நின்றுவிட்டது என்பது நன்றாகவே இப்போது தெரிகிறது. அவன் செய்கைகளும் பேச்சுமே அவன் காதலை நன்றாக உணர்த்துகிறது. இருந்தும் எல்லாம் விளக்கமாக கேட்க மனம் ஏங்கியது.. “ஏன் உங்க மாமாப் பொண்ணு உங்களை வேண்டாம்னு சொன்னா..” என்றுக் கேட்டாள்.
அவனும் எல்லாவற்றையும் அவளுக்கு விளக்கினான். நிகேதன் சொன்ன சர்ப்ரைஸ் ப்ளான் பற்றியும் கூறினான். வெற்றி செய்த காரியத்தால் இந்த நாள் சங்கடமாக மாறிவிட்டது. இல்லையென்றால் கண்டிப்பாக அந்த சர்ப்ரைஸ் இவள் வாழ்நாளிலேயே மறக்க முடியாத ஒன்றாய் மாறியிருக்கும், ஆனால் இப்போது மட்டும் என்ன?? இவள் அருகில் சஞ்சய், அதுவும் காதலோடு பேசுகிறான். இந்த நாளுக்காக தானே அவள் காத்திருந்தாள்.
சஞ்சய் சொன்னதிலிருந்து இதையெல்லாம் மனதில் நினைத்துக் கொண்டிருந்தாள். அவள் முகமோ ஆயிரம் வாட்ஸ் பல்ப் போல பிரகாசமாக ஜொலித்துக் கொண்டிருக்க, திடிரென அந்த பிரகாசம் குறைந்து அவள் முகம் வாடியது. அவளையே கவனித்துக் கொண்டிருந்த அவன், அவள் முகவாட்டத்தைப் பார்த்து, “என்ன நிரு..??” என்றுக் கேட்டான்.
“ஜெய்… ஆன்ட்டி, வித்யாவை உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டாங்கல்ல.. அவங்களுக்கு நீங்க சத்தியம் கூட செஞ்சு கொடுத்தீங்க… இப்போ அது நடக்கலன்னு தெரிஞ்சு ரொம்ப ஃபீல் பண்ணியிருப்பாங்கல்ல..” என்று சொன்னதும் அவன் சிரித்தான்.
“அம்மா முதல் முதல்ல எனக்காக பார்த்தப் பொண்ணே நீதான்… நீ தான் அவங்க மருமகளா வரனும்னு அம்மா ரொம்ப ஆசைப்பட்டாங்க.. இப்பவும் அந்த ஆசை அவங்களுக்கு அப்படியே இருக்கு.. என்கிட்ட இதைப்பத்தி கேட்டப்போ, நமக்குள்ள பிரச்சனை இருந்துச்சு… அம்மா கேட்டதுக்கு நான் அப்படியெல்லாம் என்னோட மனசுல எதுவும் இல்லன்னு சொல்லிட்டேன்… அம்மாவுக்கும் என்னை கட்டாயப்படுத்தக் கூடாதுன்னு ஃபீல்… சீக்கிரம் கல்யாணம் செஞ்சு பார்க்கணும்னு ஆசை… அதான் தீவிரமா பொண்ணு தேட ஆரம்பிச்சிட்டாங்க…
அம்மாக்கு பிடிச்சப் பொண்ணு நீதான்னு தெரிஞ்சதால தான், உங்களுக்கு பிடிச்ச பொண்ணையே நான் கல்யாணம் செஞ்சுக்கிறேன்னு அவங்களுக்கு ப்ராமிஸ் பண்ணேன்… இன்னைக்கு நம்ம லவ் பத்தி அம்மாக்கிட்ட சொன்னதும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க… சீக்கிரம் மருமகளை கூட்டிட்டு வான்னு அவசரப்படுத்திட்டாங்க..” என்று அவன் சொன்னதும், அவளின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
அவன் அவளை காதலிக்கிறான் என்ற சந்தோஷத்தை விட, அம்பிகா அவளை மருமகளாக ஆக்க ஆசைப்பட்டாள் என்பது தான் நீரஜாவிற்கு அதிக சந்தோஷத்தை கொடுத்தது.
மயக்கம் தெளிந்ததிலிருந்தே அவன் பேசுவதயெல்லாம் கேட்டு, அவள் கண்களும், முகமும் மகிழ்ச்சியையும், ஆச்சர்யத்தையும், காதலையும் என எல்லாவற்றையும் படம் பிடித்து காட்டிக் கொண்டிருக்க,
“ஹப்பா… இந்த கொஞ்ச நிமிஷத்துக்குள்ள, உன்னோட கண்ணும், முகமும் எத்தனை expression அ ஒரே டைம் ல காட்டுது… இதுல கொஞ்சமாச்சு முன்னாடி காட்டியிருந்தா, எவ்வளவு நல்லா இருந்திருக்கும்… கிட்டத்தட்ட 3 வருஷத்துக்கு மேல வேஸ்ட் பண்ணிட்டோம்..” என்றான் சஞ்சய்,
“ம்ம் அங்க மட்டும் என்னவாம்… எப்போப் பாரு உம்மனாம்மூஞ்சியாவே சுத்தறது… இதை நீங்க சொல்ல வர்றீங்களா..??” என்று அவள் சொல்ல,
“கன்னி கடைக்கண் பார்வையை கொஞ்சமாவது காட்டினா தானே காதலை சொல்றதுக்கு எனக்கு கொஞ்சமாவது துணிவு வந்திருக்கும்… நீ என்னை பார்த்தாலே முறைச்சுக்கிட்டு இருந்தா எப்படியாம்..” என்றப்படி அவள் கைகளோடு அவன் கைகளை திரும்ப கோர்த்துக் கொண்டான்.
சிறிது நேரம் அங்கே மௌனமே சூழ்ந்திருந்தது. பின் நீரஜாவே முதலில் மௌனத்தைக் கலைத்தாள், “ஜெய்… வெற்றியோட காதலை நான் ஒத்துக்கிட்டேன்னு அவன் சொன்னதால தான், நீங்க உங்க மாமாப் பொண்ணை கல்யாணம் செஞ்சுக்க ஒத்துக்கிட்டீங்களா..?? அதை எப்படி நீங்க நம்புனீங்க..??” என்றுக் கேட்டாள்.
இன்று வெற்றி அதை சொன்னப்போது அவளுக்கு கோபம் தான் வந்தது. எப்படி அவள் வெற்றியை காதலிப்பாள், என்று அவன் தீர்மானிக்கலாம் என்று சஞ்சயிடம் கேட்க மனம் துடித்தது. ஆனால் இந்த சூழ்நிலையில் தான் கோபம் வருவேனா என்றிருக்கிறதே..!! அப்படியே கோபமே வந்தாலும் அதை வெளிப்படுத்தி, மீண்டும் அவர்களுக்குள் இடைவெளி வருவதை அவள் விரும்பவில்லை, அதுவுமில்லாமல் சஞ்சய் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய ஒத்துக்கொண்டதால், வீம்புக்காக அவளும் வேறொருவனை திருமணம் செய்துக் கொள்ள ஒத்துக் கொண்டவள் தானே, அதனாலேயே சாதாரணமாகவே அவனிடம் இதைக் கேட்டாள்.
“சாரி நிரு…”
“என்னது நிருவா..??”
“ம்ம் ராஜி.. போதுமா..??” உனக்கு தெரியாது ராஜி.. உன்னைப் பார்த்தே 3 வருஷமா ஆச்சு… உன்கிட்ட அந்த டைம்ல பேசவும் இல்ல… ஆவலா உன்னை பார்க்க வந்தா, நீ வெற்றியோட வந்து இறங்குற… உன்னோட மனசுல என்ன இருக்குன்னு தெரியாத நிலைமையில, உன்கூட வெற்றிய பார்த்தப்ப, அவன் உன்னோட ஃப்ரண்டா மட்டும் இருக்கனும்னு நான் வேண்டாத கடவுள் இல்லை தெரியுமா..?? இதுல இந்த வைஷு வேற, நீங்க ரெண்டுப்பேரும் லவ்வர்ஸ்னு சொல்லி என்னை வெறுப்பேத்தப் பார்க்குறா.. அப்பக்கூட அப்படி இருக்காதுன்னு நான் நம்பிக்கையோட இருந்தேன்… அப்படி இருக்கறப்போ தான் மகாபலிபுரம் போனோம்… அங்க நைட் நல்லா இருந்த நீ காலையில் முகத்தை உம்முன்னு வச்சிக்கிட்டு இருந்த… ஆனா அந்த குறி சொல்றவங்க, வெற்றியை பேரா கொண்டவனே கணவனாக வருவான்னு சொன்னதும், உன்னோட முகம் எப்படி பிரகாசமா ஆச்சு தெரியுமா..?? அப்போ தான் கொஞ்சம் குழம்பிட்டேன்..” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள்ளேயே அவன் தலையில் லேசாக கொட்டினாள் அவள்,
“ஹே எதுக்கு இப்போ கொட்ன..” தலையில் தேய்த்தப்படியே கேட்டான் அவன்,
“உங்கப் பேர் என்ன..??”
“சஞ்சய்..”
“அந்த பேருக்கு என்ன அர்த்தம்??”
“யாருக்கு தெரியும்..??”
“அடக் கடவுளே.. உங்கப் பேரோட அர்த்தம் உங்களுக்கே தெரியாதா..??”
“நானா இந்தப் பேரை வச்சேன்… அம்மா, அப்பா வச்சாங்க.. அதுக்கு என்ன அர்த்தம் இருக்கும்னு தெரிஞ்சிக்க தோனல..”
“உங்களுக்கு உங்கப் பேருக்கான அர்த்தம் தெரியலைன்னாலும், எனக்கு தெரியும்… சஞ்சய்னா வெற்றிப் பெற்றவன்னு அர்த்தம்.. அன்னைக்கு காலையில ஆன்ட்டி, உங்களுக்கும் வைஷுக்கும் கல்யாணம் செய்யலாமான்னு கேட்டாங்க… அதுல தான் எனக்கு மூட் அப்சட்டா இருந்துச்சு… அதே மூடோட இருந்தப்ப தான் அந்த குறி சொல்றவங்க சொன்னதைக் கேட்டு சந்தோஷப் பட்டேன்… அந்த சமயம் அவங்க சொன்னதும் உங்க பேர் தான் ஞாபகத்துக்கு வந்துச்சே தவிர, வெற்றியை பத்தியெல்லாம் நான் யோசிச்சுக் கூட பார்க்கல..”
“இதுக்காகவே என்னோட பேருக்கு அர்த்தம் தெரிஞ்சு வச்சிருக்கலாம்… ஆனா அந்த சமயம் குழம்பினாலும் மனசுல ஒரு நம்பிக்கை இருந்துச்சு… சீக்கிரம் உன்கிட்ட என்னோட காதலை சொல்லணும்னு இருந்தேன்… அதுக்காக தான் ட்ரீட் வக்கறேன்னு ஒரு காரணம் தேடி, உன்னை கூப்பிட்டேன்… ஆனா நீ பெங்களூர் போக வேண்டியதாப் போச்சு… சரி, வந்ததும் சொல்லிக்கிலாம்னு நினைச்சா, வெற்றியும் உன்கிட்ட காதலைச் சொல்லப் போறேன்னு சொன்னான்… அப்பக்கூட நீ அதுக்கு ஓகே சொல்லமாட்டேன்னு தான் நினைச்சேன்..
ஆனா அவன் நீ ஓகே சொன்னதா சொன்னதும், நான் நம்பிட்டேன்… தப்பு தான், ஆனா என்னை என்னப் பண்ண சொல்ற… வெற்றி உன்னோட ப்ரண்டா தான் இங்க வந்தான்… அவனோட தான் நீ பெங்களூர் போயிருக்க, அவனோட பழகனுதுல அவன் இவ்வளவு மோசமான கேரக்டரா இருப்பான்னு நான் நினைக்கவேயில்ல… அவன் சொன்னது உண்மையான்னு உன்கிட்ட கேக்கவும் தோனல… நீ ஆமான்னு சொல்லிட்டாலும் என்னால தாங்கிக்க முடியாது… நீ இல்லன்னு சொன்னா, ஒருவேளை நான் சந்தேகப்பட்றதா நீ நினைச்சுக்கவும் கூடாதுன்னு பயம்… நிக்கிக் கிட்டயாவது கேட்டு கிளியர் பண்ணியிருக்கலாம்… ஆனா அம்மா அதுக்குள்ள சென்டிமென்ட்டா பேசவே, நான் கல்யாணத்துக்கு ஒத்துக்கட்டேன்… அப்போ தான் நான் ஓகே சொன்னேனே தவிர, என்னோட மனசு வேறொரு பொண்ணை ஏத்துக்க தயாரவே இல்ல… அம்மாக்கிட்டயும் கல்யாணத்தை பத்தி அப்புறம் பேசிக்கலாம்னு சொன்னேன்… இருந்தும் நான் செஞ்சது தப்பு தான்… சாரிடா..”
“என்ன ஜெய்… இதுக்கெல்லாம் சாரி கேட்டுக்கிட்டு, நானும் தானே நீங்க உங்க மாமாப் பொண்ணை மேரேஜ் செய்ய ஒத்துக்கிட்டீங்கன்னு, வேற ஒருத்தரை கல்யாணம் செஞ்சுக்க ஒத்துக்கிட்டேன்… ஆனா நானும் நிக்கி சென்டிமென்ட்டா பேசவே தான் அப்படி செஞ்சேன்… அதே போல வைஷுவோட உங்களை பார்க்கும் போதெல்லாம் எனக்கும் பொறாமை வரும்… ஆனா நீங்க அவக் கூட எப்படி பழகுறீங்கன்னு என்னால அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்க முடிஞ்சுது… ஆனா வைஷு உங்கக் கூட எந்த எண்ணத்துல பழகறான்னு நீங்க புரிஞ்சுக்கலையேன்னு அதுக்கும் உங்க மேல கோபப்பட்டுட்டேன் சாரி…
“ம்ம் வைஷு விஷயத்துல என்னை புரிஞ்சுக்கிட்டது எனக்கு உண்மையிலேயே சந்தோஷமா தான் இருக்கு… அதேபோல மந்த்ரா விஷயத்துலேயும் நீ என்னை புரிஞ்சுக்கிட்டு இருந்தீன்னா நல்லா இருந்திருக்கும்… 3 வருஷம் உன்னைப் பார்க்காம, பேசாம எவ்வளவு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா..??”
“உங்களுக்கு தெரியாது ஜெய்… உங்களை தன் பக்கம் இழுத்துக் காட்றதா மந்த்ரா என்கிட்ட சவால் விட்டா… உன்னால அது முடியவே முடியாதுன்னு நானும் ஸ்டாராங்கா சொன்னேன்… அப்போக் கூட நான் உங்களை லவ் பண்றேன்னு எனக்கே தெரியல… அதுக்கப்புறம் தான், நான் அதை ரியலைஸ் பண்ணேன்… அதேபோல மந்த்ராவால உங்களை அவப் பக்கம் இழுக்க முடியாதுன்னு உறுதியா இருந்தேன்… நீங்க அன்னைக்கு அவ வீட்டுக்கு வரப்போறதா மந்த்ரா சொன்னப்பக் கூட நான் நம்பல… ஆனா நீங்க யாருக்காகவும் வேலைக்கு ரெகமண்ட் பண்ணதில்ல, மந்த்ராக்காக பண்ணீங்கன்னு நிக்கி பேசனதை கேட்டதும் தான், நான் அங்க வந்தேன்… அங்க மந்த்ரா கூட நெருக்கமா இருந்ததைப் பார்த்து கோபப்பட்டேன்… ஆனா அன்னைக்கு நீங்க செஞ்ச காரியம் தான், என்னை ரொம்ப கோபப்படுத்துச்சு தெரியுமா..??”
“இன்னைக்கு வரைக்கும் ஏன் அப்படி செஞ்சோம்னு நான் வருத்தப்பட்ற ஒரே விஷயம் அது தான் ராஜி… என்னைக்கு உன்னைப் பார்த்தேனோ அப்ப இருந்து, எனக்கு உரிமையானவளா உன்னை நினைக்க ஆரம்பிச்சிட்டேன்னு சொல்லலாம்… நீ என்னை புரிஞ்சுக்காம இன்னொரு பொண்ணுக் கூட சேர்த்து பேசறன்னுதும் ஏதோ ஒரு கோபம், என்னோட காதல் உனக்கு மட்டும் தான் தெரியப்படுத்த நினைச்சு அப்படி செய்துட்டேன்… ஆனா அது தப்புன்னு அடுத்த செகண்டே உணர ஆரம்பிச்சிட்டேன்….
அந்த நேரம் வரை நீயும் என்னை காதலிக்கிறேன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்… ஆனா, அண்ணனோட ப்ரண்ட்னு உங்ககிட்ட பழகுனா, இப்படி நடந்துக்கிறீங்களேன்னு சொன்னப்போ, அப்போ தான் உனக்கு என்மேல காதல் இல்லையோன்னு மனசுக்கு தோன ஆரம்பிச்சிடுச்சு… அப்பவும் உன்கிட்ட மன்னிப்பு கேட்டு உன்னை சமாதானப்படுத்த முடியும்னு நான் நினைச்சேன்… ஆனா நீ நான் ஊர்ல இல்லாதப்ப, என்கிட்ட சொல்லாமையே சிங்கப்பூர் போனப்போ நீ என்னை காதலிக்கவேயில்லையோன்னு முடிவுப் பண்ணிட்டேன்…”
“அது அப்படியில்ல ஜெய்… அம்மா, அப்பா இல்லாம வளர்ந்தப் பொண்ணு, அதான் இப்படி இருக்கான்னு யாரும் சொல்லிடக் கூடாதுன்னு நான் எல்லோர்க்கிட்டேயும் ஒரு லிமிட்டோட தான் பழகுவேன்… வெற்றிக்கிட்ட கூட அப்படித்தான், ஆனா அப்படி இருக்கும்போதே அவன் என்ன செஞ்சான்னு பார்த்தீங்கல்ல… அப்படி எல்லோர்க்கிட்டயும் லிமிட்டோட பழகற நான், உங்கக் கூட எப்படி பழகினேன்னு உங்களுக்கே தெரியும்…
உங்களை பார்க்கலன்னாலும், சின்ன வயசுல இருந்து நிக்கி உங்களை பத்தி நிறைய சொல்லியிருக்கான்… அப்படி அவன் பேசுனத வச்சு உங்களை நான் ஒரு உயரத்துல வச்சிருந்தேன்… அதெல்லாம் தான் முதல் மீட்டிங்ல உங்கக் கூட நான் சகஜமா பழக காரணமாயிருந்தது… அது தான் எனக்கு உங்க மேல காதல் வர காரணமாகவும் இருந்துச்சு… அப்படிப்பட்ட நீங்க, அன்னைக்கு என்கிட்ட நடந்துக்கிட்டதை என்னால சாதாரணமா எடுத்துக்க முடியல… நீங்க கிஸ் பண்ணப்போ அதுல உங்க காதல் எனக்கு தெரியவுமில்ல… அதான் கோபத்துல அப்படி சொன்னேன்…
அந்த நிகழ்வை என்னால சீக்கிரம் மறக்கவும் முடியல… உங்களை பார்க்கறப்போ எனக்கு அதெல்லாம் ஞாபகத்துக்கு வந்துச்சு… அதான் சிங்கப்பூர் போனேன்… நீங்க போன் பண்ணாலும் பேசாததுக்கும் அதான் காரணம்… ஆரம்ப காலத்துல தான் அப்படியெல்லாம் இருந்துச்சு… ஆனா போக போக என்னோட மனநிலை மாறுச்சு… மந்த்ரா வேணும்னே சதி செஞ்சுருப்பான்னு புரிஞ்சுக்கிட்டேன்… நீங்க செஞ்சது காதலால கூட இருக்கலாம் அப்படியெல்லாம் யோசிக்க ஆரம்பிச்சேன்…
அப்படி யோசிக்கும் போது, நீங்க போன் பண்ணுவீங்க, என்னை பார்க்க வருவீங்கன்னெல்லாம் எதிர்பார்த்தேன்… ஆனா அப்படி எதுவும் நடக்கல… ஒருவேளை நீங்க என்னை காதலிக்கலையோன்னெல்லாம் தோன ஆரம்பிச்சுடுச்சு… அங்க இருந்தாலும் எனக்கு உங்க ஞாபகமாவே தான் இருந்துச்சு… அதான் நான் திரும்ப இந்தியா வரனும்னு முடிவு செஞ்சேன்…”
“இதை கேக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்குடா… ஆனா அந்த நேரம் என்னோட மனநிலையே வேற மாதிரி இருந்தது… என்னைப் பார்க்கக் கூட பிடிக்காம, நீ ஒதுங்கிப் போனதும், என்கிட்ட போன்ல கூட நீ பேசாம இருந்தது எல்லாம் யோசிச்சப்ப, நீ என்னை காதலிக்கலையோன்னு நினைச்சேன்… அப்படியிருக்க, உன்கிட்ட திரும்ப திரும்ப பேச நினைச்சு, அதை நீ தொந்தரவா நினைக்கக் கூடாது… என்னை தப்பானவனா நீ நினைச்சுக்க கூடாதுன்னு தான், நான் அதுக்கப்புறம் உன்கிட்ட பேசல… ஆனா உன்னை பார்க்காம, உன்கிட்ட பேசாம இருக்கறது எவ்வளவு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா..??”
“இப்படி மொத்தத்துல ரெண்டுப்பேரும் எல்லாத்தையும் தப்பு தப்பா புரிஞ்சுக்கிட்டு, இத்தனை நாள் விலகி இருந்துட்டோம்… ஆனா இனி நமக்குள்ள இடைவெளி வேணாம் ஜெய்… ஐ லவ் யூ… ஐ லவ் யூ சோ மச்…” என்று அவனை இறுக்கக் கட்டிக் கொண்டாள். சஞ்சயும் அவளை இன்னும் இறுக்கி தன்னில் புதைத்துக் கொண்டு, “ஐ லவ் யூ ராஜி..” என்றான்.
இந்த நிலையில் எவ்வளவு நேரம் இருந்தார்களோ, அவர்களுக்கே தெரியவில்லை. கதவு தட்டும் ஓசையில் தான் இருவரும் விலகினர். சஞ்சய் கட்டிலில் இருந்து எழுந்துக் கொண்டான்.
“உள்ள வரலாமா..??” மந்த்ராவின் குரல் கேட்டது…
“வா மந்த்ரா..” சஞ்சய் பதில் குரல் கொடுக்க, அவள் உள்ளே வந்தாள். நீரஜா கட்டிலில் உட்கார்ந்திருந்தாள்.
“முழிச்சுக்கிட்டியா நிரு… இப்போ பெட்டரா ஃபீல் பண்றியா..??”
“ம்ம் இப்போ பரவாயில்ல மந்த்ரா… அப்புறம் ஜெய் எல்லாம் சொன்னாரு… ரெண்டாவது முறையும் நீ என்னை காப்பாத்தியிருக்க, தேங்க்ஸ்னு சொன்னா அது கூட சின்னதா தான் இருக்கும்… நீ மட்டும் இல்லன்னா, இன்னைக்கு என்ன ஆகியிருக்கும்… வெற்றி மட்டும் ஏதாவது செஞ்சிருந்தா, அது தெரிஞ்ச அந்த நொடியே நான் செத்து போயிருப்பேன்..”
“நிரு..” “ராஜி..” என்று மற்ற இருவரும் ஒரே நேரத்தில் அதிர்ந்து அவளை அழைத்தனர்.
ஜெய், ராஜி என்று இருவரும் ஒருவரையொருவர் அழைத்துக் கொண்டதிலேயே அவர்கள் மனம் திறந்து பேசிக் கொண்டனர், என்பது மந்த்ராவிற்கு நன்றாக புரிந்தது.
“என்ன நிரு… செத்துப் போயிடுவேன்னெல்லாம் சொல்ற… எதையும் துணிஞ்சு எதிர்க்க வேண்டாமா..?? கடவுளோட துணை உனக்கு இருக்கு, அதான் திரும்ப வெற்றி என் கண்ணுல மாட்னான்… அதனால இப்போ ஒன்னும் பிரச்சனை இல்லல்ல… அப்படியெல்லாம் பேசாத…”
“ம்ம்..” என்று நீரஜா தலையாட்டினாள்…
“ஆமாம் மந்த்ரா… நீ எப்போ சென்னை வந்த… வெற்றி பத்தி நிக்கிக்கும், ஜெய்க்கும் எப்படி தெரிஞ்சுதுன்னு நான் யோசிச்சேன்… ஆனா இப்போ தான் நீ சொல்லியிருப்பேன்னு தெரிஞ்சுக்கிட்டேன்… ஆமாம் நீ சென்னை வந்ததைப் பற்றி என்கிட்ட ஏன் சொல்லல… ஜெய்க்கு மட்டும் தெரிஞ்சுருக்கு…”
“ஒருநாள் உனக்கு போன் பண்ணேனே, அப்போ தான் இந்த ஹோட்டல்க்கு இண்டர்வியூக்கு வந்தேன்… எதேச்சயா சஞ்சய் ஐ இங்கு பார்த்தேன்… சஞ்சய்க்கிட்டேயும் மன்னிப்பு கேக்கணும்னு நினைச்சு தான் பேசப் போனேன்… சஞ்சய் கோபத்தைப் பார்த்து, நீ என்னைப்பத்தி எதுவும் அவர்க்கிட்ட சொல்லலன்னு தெரிஞ்சுது… ஆனா சஞ்சய்க்கிட்ட பேசனதும் தான், நீயே சஞ்சய்க்கிட்ட பேசலைன்னு புரிஞ்சுது… அதான் பெங்களூர்ல நடந்ததை எல்லாம் சஞ்சய்க்கிட்ட சொன்னேன்… சஞ்சய் பக்கத்துல வச்சிக்கிட்டு, ஸ்பீக்கர் ஆன் பண்ணி தான் உன்கிட்ட பேசினேன்…. ஆனா என்ன அழுத்தம் உனக்கு… அப்போக்கூட நீ சஞ்சய் ஐ காதலிக்கிற விஷயத்தை சொல்லவே இல்லை.. சஞ்சய் எவ்வளவு ஆர்வமா, நீ சொல்லப் போறத கேக்க காத்திருந்தாரு தெரியுமா..?? ஆனா நீ அப்படியே பல்டி அடிச்சுட்டியே..”
“இல்ல மந்த்ரா… ஜெய்க்கு கல்யாணம்னு சொன்னதால, இதுக்கு மேலேயும் என்னோட காதலை வெளிய சொல்ல வேணாம்னு தான்..” என்று தயங்கியப்படியே சொன்னாள்.
“அப்புறம் சஞ்சய் தான் எனக்கு இந்த வேலைக்கு ரெகமண்ட் பண்ணாரு… நானும் வேலையில ஜாயின் பண்ணதும் உனக்கு சொல்லலாம்னு நினைச்சேன்… ஆனா சஞ்சயும், நிகேதனும் ஏதோ சர்ப்ரைஸ் ப்ளான் இருக்குன்னு சொன்னதால தான் உன்கிட்ட பேசல… இன்னைக்கு லீவ் போட்டுட்டு உங்களை பார்க்க வரணும்னு நினைச்சேன்… சரி டே ஷிப்ட் தானே, போய்ட்டு வரலாம்னு நினைச்சு வேலைக்கு வந்தேன்… அப்படி வந்ததால தான் இங்க வெற்றிய பார்க்க முடிஞ்சுது…”
“ஆமாம் மந்த்ரா… நீ போன விஷயம் என்னாச்சு… அந்த ஸ்டாஃப பிடிக்க முடியும்ல…”
“நான் போனப்போ இந்த ஹோட்டல் எம்.டி யும் வந்திருந்தாரு சஞ்சய்… அந்த ஆளோட டீடெயில்ஸ் ல்லாம் போலீஸ் கலெக்ட் பண்ணிக்கிட்டாங்க… அவரை எப்படியும் பிடிச்சுவோம்னு சொன்னாங்க… எம்.டி யோட தூரத்து ரிலேஷனாம் அந்த ஆளு… அதனால தான் இந்த ஹோட்டல்க்கு வேலைக்கு வச்சிருக்காங்க… அவர் இந்த மாதிரி வேலையெல்லாம் செய்வாருன்னு யாருக்கும் இதுவரைக்கும் தெரியலையாம்… இப்போ என்னால அது தெரிஞ்சதால எம்.டி தேங்க்ஸ் சொன்னாரு… போலீஸ்க்கு போகாம இதை எங்கக்கிட்ட சொல்லியிருக்கலாம்னு அவர் சொன்னாரு… நீங்க ஏற்கனவே போலீஸ்க்கு போய்ட்டத பத்தி சொன்னதும், அதுவும் நல்லதுக்கு தான், இது பெரிய இஷ்யூ ஆகியிருந்தா, ஹோட்டல்க்கும் கெட்டப் பேருன்னு அவர் சொன்னாரு… என்னோட வேலைக்கும் எதுவும் பிரச்சனையில்லன்னு சொல்லிட்டாரு… அப்புறம் நிகேதன் போன் பண்ணாரா சஞ்சய்… அங்க என்ன நிலவரம்னு தெரிஞ்சுதா..??”
“அவன் இன்னும் போன் பண்ணல… எப்படியும் அந்த வெற்றியை போலீஸ் லாக்கப்க்குள்ள வச்சிட்டு தான் அவன் வருவான்… கண்டிப்பா அவனுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்குற வரைக்கும் நாங்க சும்மா இருக்க மாட்டோம்..”
“ஜெய்… நான் ஒன்னு சொல்லட்டுமா..??”
“என்ன ராஜி..”
“ஜெய்… அந்த வெற்றி செஞ்சது தப்பு தான், ஆனா அவன் நம்மல பழி வாங்க தான் இப்படி செஞ்சுருக்கான்… இதுமாதிரி ஏதாவது ஆகும்னு தான், நான் பெங்களூர்ல நடந்த விஷயம் உங்க ரெண்டுப்பேருக்கும் தெரிய வேணாம்னு நினைச்சேன்… இப்போ நீங்க கோபத்துல ஏதோ செய்யப் போக, அவன் இந்த அளவுக்கு வந்திருக்கான்… இப்போ திரும்ப அவன் ஜெயிலுக்கு போன கோபத்துல ஏதாவது செஞ்சுடுவான்னு பயமா இருக்கு…
அதுவும் இல்லாம வெற்றியோட ஃபேமிலியும் இப்போ அவன் சாலரிய நம்பி தான் இருக்காங்க… அவங்க அப்பா கொஞ்ச நாளா உடம்பு சரியில்லாம இருக்காருன்னு கேள்விப்பட்டேன்… ஏற்கனவே நம்மை அறியாமலேயே வைஷு, மந்த்ராக்கு நாம ஒரு கஷ்டத்தை கொடுத்திருக்கோம்… இப்போ வெற்றியை தண்டிக்கிறதால அவங்க ஃபேமிலிக்கும் நாம சங்கடத்தை கொடுக்கணுமா..?”
“ராஜி… மந்த்ரா, வைஷு போல இல்ல வெற்றியோட கதை… வெற்றியோட ஃபேமிலி கஷ்டப்படுதுன்னா, அதுக்கு காரணம் வெற்றி மட்டும் தான்… வெற்றிக்கு தண்டனை கிடைச்சாகணும் ராஜி…
இங்கப்பாரு அவன் முதல் முறை உன்கிட்ட தப்பா நடந்துக்க நினைச்சப்பவே, நீ அவனை சும்மா விட்ருக்கக் கூடாது… அப்படி விட்டதால தான், மறுபடியும் அவன் இந்த தப்பை செய்ய துணிஞ்சிருக்கான்… இப்போ திரும்பவும் அவனை மன்னிச்சு விட்டா, நம்மக்கிட்ட பிரச்சனை பண்ணாம வேணா அவன் இருக்கலாம்… ஆனா வேற ஒரு பொண்ணுக்கிட்ட இது மாதிரி செய்யமட்டான்னு என்ன நிச்சயம்..??
நாங்க அவன் மேல இருக்க கோபத்துல, குறுக்குதனமா ஏதோ செய்ய நினைச்சது தப்பு தான்… திரும்ப வேணும்னா அவனுக்கு ப்ரோமோஷன் கொடுக்க சொல்லி பேசலாம்.. ஆனா பொண்ணுங்க கிட்ட தப்பா நடக்க நினைக்கிறவனை திரும்ப வேலைக்கு வச்சிப்பாங்களா?? இங்கப் பாரு அவனுக்கு இப்போ செஞ்ச தப்புக்கான தண்டனை கிடைச்சு ஆகணும்… அதனால நீ சொல்றதை என்னால ஏத்துக்க முடியாது…”
“நிரு… சஞ்சய் சொல்றது தான் சரி… அந்த வெற்றிக்கு கண்டிப்பா தண்டனை கிடைக்கணும்… நீ குழம்பிக்காத, திரும்ப வெற்றி உங்க லைஃப்ல வர மாட்டான்… அப்படியே ஏதாவது பிரச்சனை பண்ண நினைச்சாலும்… சஞ்சயும், நிகேதனும் இருக்காங்கல்ல… அப்புறம் ஏன் பயப்பட்ற..??
அப்புறம் தேவையில்லாம எனக்காக ஃபீல் பண்ணாத… எனக்கு உன்னால எந்த கஷ்டமும் இல்ல… நான் தான் உங்களுக்கு கஷ்டத்தை கொடுத்திருக்கேன்… புரிஞ்சுதா..?? இப்போ தான் எனக்கு நீ, சஞ்சய், நிகேதன்னு நல்ல ஃப்ரண்ட்ஸ் கிடைச்சிருக்கீங்களே அப்புறம் என்ன..?? இங்கப்பாரு, இப்போ நீ அடுத்ததா உங்களோட நிச்சயதார்த்தம், கல்யாணம் அதைப்பத்தி தான் யோசிக்கணும்… சரியா..?? அப்போ சஞ்சய் நான் கிளம்பட்டுமா..?? லேட்டா போனா ஹாஸ்டல்ல சேர்க்க மாட்டாங்க.. அதான்..”
“நீ தனியாவா போகப் போற, கொஞ்ச நேரத்துல நிக்கி வந்துடுவான்.. அப்புறம் எல்லாம் ஒன்னா போகலாம்… அப்படி லேட்டானா, இன்னைக்கு நீ ராஜி கூட அவ வீட்ல தங்கிக்க… நாளைக்கு ஹாஸ்டல்ல விஷயத்தை சொல்லிக்கிலாம் சரியா??”
“சரி சஞ்சய்… ஆனா அதுவரைக்கும் நான் கீழ இருக்கேன்… இப்போ தான் நீங்க மனசுவிட்டு பேசியிருக்கீங்க, கிடைச்ச டைம வேஸ்ட் பண்ண வேண்டாம்… ஏதாவது பேசுங்க, நான் நிகேதன் வந்ததும் வரேன்..” என்று அவள் வெளியே போக,
அவள் சென்ற இடத்தைப் பார்த்தப்படி நீரஜாவோ, “மந்த்ரா ரொம்ப நல்லப் பொண்ணு தான், கூட சேர்ந்த ஆளுங்க சரியில்லாம தான் அதுபோலல்லாம் நடந்துக்கிட்டா… பாவம் கொஞ்ச நாளுக்குள்ள ரொம்ப கஷ்ட்ப்பட்டுட்டா… அவளுக்கு ஏதாச்சும் செய்யணும் ஜெய்..” என்று சொல்லியப்படி சஞ்சய் ஐ திரும்பி பார்க்க, அவனோ இவளையே கண் கொட்டாமல் பார்த்திருந்தான்.
என்ன என்று அவள் பார்வையாலேயே கேட்க, ஒன்னுமில்ல என்று வார்த்தைகளால் இல்லாமல் தலையை மட்டும் ஆட்டி அவன் பதிலை தெரிவித்தான். ஆனால் கண்கள் மட்டும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தது.
அவனின் பார்வை வீச்சு தாங்காமல், அவள் தலைக் குனிந்துக் கொண்டாலும், அவனை பார்க்கச் சொல்லி அவள் மனம் சொல்ல, தலையை நிமிர்த்தி அவன் விழிகளோடு, அவள் விழிகளை கலக்கவிட்டாள்.
இதுவரை மௌனமாக இருந்த இந்த நான்கு கண்களும் பேசிக் கொள்ளும் போது, இனி அங்கே வாய்மொழிக்கு என்ன வேலை இருக்கிறது.
மௌனம் தொடரும்..