KPEM 20
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
மௌனம் 20
காலையில் அலுவலகத்திற்கு வந்ததும் சஞ்சய் நேராக நீரஜாவை அவளது அறையில் போய் பார்த்தான். நேற்று மாலை மந்த்ராவை சந்தித்ததும் அவன் அலுவலகத்திற்கு செல்ல, நீரஜா வீட்டிற்கு கிளம்பி சென்றுவிட்டது தெரிந்தது. நேராக வீட்டிற்குச் சென்றே அவளை பார்க்கலாம் தான், நிகேதனோ இல்லை ஜானவியோ ஒன்றும் சொல்லமாட்டார்கள். இருந்தாலும் நீரஜா இவன் மேல் ஏதோ கோபமாக இருக்கிறாள் என்று புரிகிறது. ஆனால் என்ன கோபம் என்று தான் தெரியவில்லை, அதை இவனிடம் எப்படி காட்டுவாளோ? அதனால் மறுநாள் வரை அவன் காத்திருக்க வேண்டியதாக போயிற்று.
திடிரென சஞ்சய் அறைக்குள் வந்ததில் நீரஜாவிற்கு அதிர்ச்சி தான், இத்தனை நாள் அவனை தவிர்த்து வர, இன்று எதிரே வந்து நிற்பவனிடம் என்ன பேச வேண்டும் என்று கூட புரியவில்லை.
“வாங்க பாஸ்… ஏதாச்சும் முக்கியமான விஷயமா..??” என்று கேட்பதற்குள் வார்த்தைகள் தந்தியடித்தன,
“நிரு… அன்னைக்கு என் சார்பா ட்ரீட் வக்கறதா சொன்னேனே ஞாபகம் இருக்கா.. கொஞ்சம் வேலையிருந்ததால அதை மறந்துட்டேன்… இன்னைக்கு ஈவ்னிங் போவோமா..?? அன்னைக்கு சொன்ன மாதிரி உன்னோட கொஞ்சம் பேச வேண்டியிருக்கு…” என்றான்.
அவன் திருமண விஷயம் கேட்டு அவளும், வெற்றி சொன்னதைக் கேட்டதிலிருந்து அவனும் குழப்பமான மனநிலையில் இருக்க, இந்த ட்ரீட் விஷயத்தை இருவரும் மறந்தே போயிருந்தனர்.
மாமன் மகளை மணமுடிப்பதாக சொன்னவன், தன்னிடம் காதலையா சொல்லப் போகிறான் என்று அவள் அந்த சந்திப்பை ஒதுக்கி வைக்க, வெற்றியை காதலிப்பதாக சொன்னவளிடம் தன் காதலை எப்படி சொல்வது என்று அவனும் அவளை அழைக்க மறந்தான்.
இதில் இன்று அவன் இவளை அழைக்க என்ன காரணம்? ஒருவேளை காதலை சொல்லத் தானோ..? என்று அவள் மனம் யோசிக்கத் தான் செய்கிறது. மீண்டும் அவள் மனதில் நம்பிக்கை துளிர்த்தது. இருந்தும் அதிகமாக ஆசைப்படாதே என்று மனசாட்சி எச்சரிக்கவும் செய்தது. சரி அவனுடன் சென்றால் தெரியப் போகிறது, அவன் என்ன பேசப் போகிறான் என்பதை அவனுடன் சென்றுப் பார்த்தாள் தானே தெரியும் என்பதால் அவனிடம் வருவதாக தலையை ஆட்டினாள்.
“சரி… நான் நிக்கிக்கிட்ட சொல்லிட்டு வரேன்… நீயும் ரெடியா இரு…”
“என்னது இப்பவேவா..” என்றுக் கேட்டாள்.
அவன் உள்ளே வந்ததிலிருந்தே அவள் ஒரு படபடப்போடு இருந்தாள். தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள கொஞ்சம் தனிமை அவளுக்கு தேவைப்பட்டது.
“இப்போ கொஞ்சம் வேலையிருக்கு பாஸ்… ஈவ்னிங் போவோமா..??”என்றாள்.
இதற்கு மேலும் நேரத்தை கடத்த அவன் விரும்பவில்லை, இருந்தும் மாலை வரை பொறுத்திருப்போம் அதற்குள் என்ன ஆகப் போகிறது என்று நினைத்தவன்,
“சரி ஈவ்னிங் போகலாம்..” என்று அரை மனதாக சொல்லிவிட்டு சென்றான்.
அவளுக்குமே உடனே அவனுடன் சென்று அவன் சொல்லப் போகும் விஷயத்தை கேட்க ஆர்வமாக தான் இருந்தது. ஆனால் அவள் எதிர்பார்த்தது போல் இல்லையென்றால் அந்த ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள தன்னை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டுமே, அதற்கான அவகாசம் அவளுக்கு தேவைப்பட்டது அதனால் தான் அப்படி கூறினாள். இருந்தும் அந்த மாலை நேரத்தை ஒருபக்கம் அவள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.
இருவரும் காத்திருந்த மாலை நேரமும் வந்தது. அதற்கு மேல் பொறுமையில்லாத சஞ்சய், நேராக அவளைப் பார்க்க வந்தான். அவளுமே அவனாக வந்து அழைக்கட்டும் என்று காத்திருந்தாள்.
“கிளம்பலாமா?” என்று அவன் கேட்டதும், சரி என்று தலையை ஆட்டியவள் கைப்பையை எடுத்துக் கொண்டு அவனுடன் வெளியே வந்தாள்.
அலுவலக நேரம் முடிந்துவிட்டதால், ஒரு சிலரை தவிர மற்றவர்கள் கிளம்பியிருந்தனர். அவளுடைய அறையிலிருந்து அவர்கள் இருவரும் வெளியே வந்ததும், “நிக்கிக் கிட்ட சொல்லிட்டு வந்துட்றேன்…” என்று நீரஜா அவனிடம் சொல்லிவிட்டு நிகேதனின் கேபினை நோக்கி அடியெடுத்து வைக்க, ஏதோ ஒன்று தடுக்கி விழப் போனவளை சஞ்சய் தாங்கிப் பிடித்தான்.
இரண்டு ஜோடிக் கண்களும் ஒன்றையொன்று சந்தித்துக் கொண்டது. கொஞ்ச நேரம் அப்படியே விட்டிருந்தால், இருவரும் பேசுவதற்கு முன், அவர்களின் கண்களாவது காதல் மொழி பேசியிருக்குமோ என்னவோ, அதற்கும் அங்கு ஒரு தடை வந்தது.
“இதைப் பார்க்க தான் என்னை இங்க கூட்டிட்டு வந்தியா டா..” என்று யாரோ கோபத்தோடு கத்திய சத்தம் கேட்டு, இருவரும் விலகி நின்றனர். அங்கு நீரஜாவிற்கு பார்த்த மாப்பிள்ளை விஜயுடன், யாரோ ஒரு பெரியவர் நின்றுக் கொண்டிருந்தார்.
அந்த பெரியவரை அடையாளம் தெரியவில்லையென்றாலும், அந்த விஜய்யை நீரஜாவிற்கு அடையாளம் தெரிந்தது. சஞ்சய்க்கோ இருவரையும் தெரிந்தது. அந்த பெரியவர் விஜயின் தந்தை.
“நான் சொல்லல இந்த சம்பந்தம் செட் ஆகாதுன்னு… என்னோட பேச்சை கேக்காம இங்க வந்த… இப்போ நேர்ல பார்த்ததும் சந்தோஷமா..??” விஜயிடம் அவர் இன்னும் கோபமாகவே பேசிக் கொண்டிருந்தார்.
இருவரும் அவர் என்ன சொல்கிறார் என்று புரியாமல் நிற்க, அங்கிருந்த ஒன்றிரண்டு ஊழியர்களும் கூட அவர் சத்தத்தை கேட்டு அங்கு கவனிக்க ஆரம்பித்தனர். அதற்குள் தன் கேபினிலிருந்து வெளியே வந்த நிகேதன், அவர்களை பார்த்ததும்.. “வாங்க வாங்க..” என்று வரவேற்றான்.
“இந்த வரவேற்புக்கு ஒன்னும் குறைச்சலில்ல… ஏண்டா இங்க வந்தோம்னு இருக்கு..” என்று அந்த பெரியவர் வாய்க்குள்ளேயே புலம்பினார்.
நிகேதனுக்கோ ஒன்றும் புரியவில்லை, “என்னாச்சு சார்… எதுவா இருந்தாலும் உள்ள வாங்க பேசிக்கலாம்..” என்று தன்னுடைய அறைக்கு அழைத்தான்.
“அப்பா வாங்க.. உள்ள போய் பேசலாம்..” அந்த விஜயும் அவனுடைய தந்தையை அழைத்தான்.
“உள்ளப் போய் பேச என்ன இருக்கு விஜய்… எதுவா இருந்தாலும் இங்கேயே பேசிட்டுப் போவோம்..” என்றவர்,
நிகேதனைப் பார்த்து, “இங்கப் பாருங்க நிகேதன்… எங்க அந்தஸ்துக்கு சரி சமமா நீங்க இருக்கறதால தான் நாங்க இந்த சம்பந்ததத்துக்கு ஒத்துக்கிட்டோம்… அதுக்காக எல்லாத்தையும் பொறுத்துக்கணும்னு இல்ல… உங்க தங்கச்சிய பத்தி அவ வேலைப் பார்த்த சிங்கப்பூர் கம்பெனியில விசாரிச்சோம்… அவ கேரக்டர் ஒன்னும் சொல்லிக்கிடும்படி இல்லையே..” என்றார் அவர். அதைக்கேட்டு சஞ்சய், நிகேதன், நீரஜா மூவருமே அதிர்ச்சியாயினர்.
“சார் பார்த்து பேசுங்க..” என்று நிகேதன் கோபப்பட்டான்.
“என்னப் பார்த்து பேசு… உண்மையை சொன்னா, இப்படி தான் இருக்கும்… ஆனா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்..?? உன் தங்கச்சியோட வேலைப் பார்த்த வெற்றி எல்லா விஷயத்தையும் சொன்னான்.. அங்க வேலைப் பார்த்த வரைக்கும் வெற்றி கூட தான் உன்னோட தங்கச்சி சுத்துகிட்டு இருந்தாளாம்… இங்க உன்னோட ப்ரண்ட் சஞ்சய்க்கூட ஏற்கனவே சுத்திக்கிட்டு இருந்தாளாமே… அது தெரிஞ்சு நான் விலகிட்டேன் சார்… இப்போ சஞ்சயை விட்டுட்டு உங்க வீட்டு பையனை கல்யாணம் பண்ணிக்கப் போறாளா..?? அந்த பொண்ணு உங்க குடும்பத்துக்குள்ள வராம இருப்பதே நல்லதுன்னு வெற்றி என்னோட மச்சான்க்கிட்ட சொல்லியிருக்கான்…
நான் இதெல்லாம் கேள்விப்பட்டதும் இந்த சம்பந்தம் வேண்டாம்னு சொன்னேன்… ஆனா இவன் தான் நான் சொன்னதை கேக்காம யார் சொல்றதையும் நம்பக் கூடாதுப்பா, நேர்ல போய் Mr. நிகேதன் கிட்ட பேசலாம்னு சொல்லிக் கூட்டிக்கிட்டு வந்தான்.. ஆனா இந்த கன்றாவியெல்லாம் நேர்ல பார்த்ததும் எல்லாம் இவனுக்கு புரிஞ்சிருக்கும்..” என்று சஞ்சயையும் நீரஜாவையும் பார்த்துக் கொண்டே கூறினார்.
நிகேதனுக்கோ ஒன்றும் புரியாமல் எல்லோரையும் மாறி மாறி பார்த்தான்.
விஜயோ, “நிகேதன்.. வெற்றி சொன்னதை நான் நம்பல… இருந்தாலும் அப்பா நம்பனுமேன்னு நான் உங்களை பார்க்க அவரை கூட்டிட்டு வந்தேன்… இருந்தாலும் இங்க நடக்கறத பார்த்தா, வெற்றி சொன்னது உண்மையா இருக்குமோன்னு தோனுது… இப்படி ஆஃபிஸ்லயே இவங்க நெருக்கமா நிக்கறாங்க… இதைப் பார்த்ததுக்கு பிறகும் நான் எப்படி உங்க தங்கச்சிய கல்யாணம் செஞ்சுக்க முடியும்..” என்றான்.
அவன் சொல்வதை கேட்ட சஞ்சய்க்கு வந்த ஆத்திரத்தில் அவர்கள் இருவரையும் ஏதாவது செய்திருப்பான். இருந்தும் இவனை நீரஜாவோடு சேர்த்து தவறாக பேசியதால், இந்த சமயத்தில் அப்படி ஏதாவது செய்தால் அதனால் நீரஜாவை மற்றவரும் தவறாக நினைக்கக் கூடும் என்பதால் அமைதியாக,
“சார்.. நீங்க பார்த்ததை வச்சு தப்பா பேசக் கூடாது… கீழ விழப் போனவளை..” முழுதாக அவன் சொல்லவில்லை அதற்குள் நிகேதன் அவனை தடுத்தான்.
பொதுவாக திருமண பேச்சு வந்தாலே இருதரப்பிலும் நன்றாக விசாரித்து தான் திருமணத்தை முடிவு செய்வர். அதிலும் ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொடுப்பதற்கு முன் அந்த மாப்பிள்ளை எப்படி என்பதை நன்றாக விசாரிப்பர். இந்த காலக்கட்டத்தில் பெண்களைப் பற்றியும் விசாரிக்கும் நிலையில் தான் இந்த உலகம் உள்ளது.
இருந்தாலும் நேற்று தான் நிகேதன் தரப்பில் அவர்கள் குடும்பத்தில் தன் தங்கையை மணம் முடிக்க அவன் சம்மதத்தை தெரிவித்திருந்தான். ஆனால் அதற்குள் சிங்கப்பூர் வரையிலும் அவளைப் பற்றி விசாரித்திருக்கின்றனர். அப்படியே விசாரித்து அவர்கள் தவறாக கேள்விப்பட்டிருந்தாலும், அதை இப்படி பொது இடத்தில் வைத்து அவர்கள் பேசுவதை பார்க்கும் போது, தன் தங்கை தப்பியதாக தான் அவன் நினைத்தான். அதனால் அவர்களுக்கு அவன் எந்த விளக்கமும் கொடுக்க விரும்பவில்லை.
“தெரிய வேண்டியதெல்லாம் உங்களுக்கு தெரிஞ்சிடுச்சுல்ல.. இதுக்கு மேலேயும் உங்கக் கூட சம்பந்தம் பண்ண நாங்களும் தயாராயில்ல… நீங்க போகலாம் ப்ளீஸ்..” என்றான்.
“இன்னும் என்னடா இங்க நின்னுக்கிட்டு வா போகலாம்..” என்று அவரும் தன் மகனை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார்.
அதுவரையிலும் அங்கு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஊழியர்கள் கூட, “ச்சே எவ்வளவு சீப்பா பிகேவ் பண்றாங்க… நீரஜா மேம் தப்பிச்சிட்டாங்கன்னு தான் சொல்லணும்..” என்றனர். பின் அவரவர் வேலையை கவனிக்க சென்றதும்,
நிகேதனோ, “நிரு சாரிடா… அண்ணன் கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன்னு தோனுது… அவங்கப் பேசினதை எல்லாம் கேர் பண்ணிக்காத என்ன..??” என்றான்.
“விடு நிக்கி… அவங்க பண்ணதுக்கு நீ என்ன பண்ணுவ…” என்றவள் மீண்டும் தன் அறைக்குச் சென்றாள்.
சஞ்சயோ, “டேய் மச்சான்… அது நிரு விழப் போனாடா.. அதுக்கு தான்..” என்றதும்,
“டேய் நான் உங்கிட்ட விளக்கம் கேட்டேனா.. அவங்க எண்ணமே தப்பா இருக்குடா.. அதான் பார்க்கறதெல்லாம் தப்பாவே தெரியுது… அவங்களுக்குப் போய் விளக்கம் சொல்லிக்கிட்டு இருக்க..??” என்று நிகேதன் கூறினான்.
“எனக்கு பயங்கர கோபம் வந்துச்சு நிக்கி… அவங்க தான் எந்த இடத்துல என்ன பேசறோம்னு தெரியாம பேசறாங்கன்னா.. நாமளும் ஏன் அப்படி நடந்துக்கணும்.. அதுவும் நீரஜாவை பத்தி தப்பா பேசும்போது அமைதியா இருந்தா… நாங்க அவங்க சொன்ன மாதிரி நடந்துக்கிட்டதால தான் அமைதியா நிக்கறோம்னு தப்பா புரிஞ்சிக்கக் கூடாதில்ல..”
“சரி விட்றா.. அவங்களைப் பத்தி ஏன் பேசிக்கிட்டு, அது முடிஞ்சுப் போன விஷயம்… ஆனா வெற்றியா அப்படியெல்லாம் சொன்னான்னு நம்ப முடியலடா.. நீரஜா அவனை வேண்டாம்னு சொல்லிட்டாங்கிறதால, இப்படியெல்லாமா சொல்றது..” என்று நிகேதன் குறைப்பட,
“நீ வேறடா.. அவன் என்னல்லாம் பண்ணியிருக்கான்… இதைப் போய் பெருசா சொல்ற..” என்றவன், அவர்கள் நின்றிருக்கும் இடத்தை உணர்ந்து, அவன் கையைப் பிடித்து அறைக்குள் கூட்டிச் சென்றான்.
உள்ளே சென்றதும் “என்னடா சொல்ற..??” என்று நிகேதன் கேட்டான்.
“நிக்கி… வெற்றி என்ன செஞ்சான் தெரியுமா..?? அவன் நம்ம நீரஜாக்கிட்ட.. நம்ம நீரஜாக்கிட்ட.. என்றவன் அதற்கும் மேலே சொல்ல முடியாமல் டேபிளின் மீது தன் கோபத்தைக் காட்டினான்.
“டேய் அவன் என்ன செஞ்சான்டா..? சொல்லுடா..? நீ கோபப்பட்றதை பார்த்தா, ஏதோ பெரிய விஷயமா இருக்கும் போல இருக்கே..”
“மச்சான்… வெற்றி பெங்களூர்ல வச்சு நம்ம நீரஜாக்கிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணியிருக்கான்டா.. நல்லவேளை அந்த நேரம் மந்த்ரா அந்த ஹோட்டல்ல வேலைப் பார்த்ததால, அவ நீரஜாவை காப்பாத்தியிருக்கா…”
“டேய் என்னடா சொல்ற… இதைப்பத்தி நீரஜா என்கிட்ட எதுவும் சொல்லலையே டா.. வெற்றியா அப்படி செஞ்சான்… ஆமாம் யாருடா மந்த்ரா.. கொஞ்சம் விளக்கமா சொல்லு..??”
“நமக்கு தெரிஞ்சா கோபப்படுவோம்னு நீரஜா நம்மக்கிட்ட எதுவும் சொல்லல டா.. நேத்து எதேச்சையா மந்த்ராவை பார்த்தேன்… அவ தான் சொன்னா.. மந்த்ரா வேற யாருமில்ல… நம்ம மோகன் ஒரு பொண்ணை லவ் பண்றான், அவனையும் அந்த பொண்ணையும் நானும் நீரஜாவும் ரெஸ்ட்டாரன்ட்ல பார்த்தோம்னு நான் ஏற்கனவே சொன்னேன் இல்ல..
அவ தான் மந்த்ரா… அவ நீரஜா படிச்ச காலேஜ்ல தான் படிச்சிருக்கா.. அதனால நீரஜாக்கு அவளை முன்னாடியே தெரியும்..” என்றவன், அவள் பெங்களூரில் நடந்ததைப் பற்றி இவனிடம் சொன்னதை, நிகேதனிடம் சொன்னான்.
“வெற்றி அப்படியா செஞ்சான் மாப்ள… செய்யறதெல்லாம் செஞ்சுட்டு தைரியமா வீட்டுக்கு வேற வந்தான்டா.. நிருவை கூட்டிக்கிட்டு வரலையான்னு கேட்டதுக்கு என்னென்ன கதை சொன்னான் தெரியுமா..?? இதெல்லாம் தெரிஞ்சிருந்தா அவனை சிங்கப்பூர் போகவே விட்ருக்க மாட்டேன்டா.. ச்சே நிரு ஏன் இதை முதலிலேயே சொல்லல..” என்று கோபப்பட்டான்.
“ஆமான்டா… நேத்து மந்த்ரா விஷயத்தை சொன்னப்போ எனக்கு வந்த கோபத்துக்கு வெற்றி மட்டும் இங்க இருந்திருக்கணும்… சிங்கப்பூர் போனதால தப்பிச்சான்…”
“டேய் சிங்கப்பூர் போனா என்னடா..?? அவனை அப்படியே விட்டுட்றதா… பண்றதையெல்லாம் பண்ணிட்டு, இப்போ என்னோட தங்கச்சியப் பத்தியே தப்பா பேசியிருக்கான்… அவனை சும்மாவே விடக் கூடாது… ஏதாவது செய்யணும்..” என்று நிகேதன் சொன்னப்போது,
சஞ்சயோ “முடியுமா டா..??” என்றுக் கேட்டான்
“ஏன் மாப்ள முடியாது… கண்டிப்பா முடியும்.. அப்பாவோட ப்ரண்ட் ஒருத்தர் இப்போ கொஞ்சம் பெரிய லெவல்ல இருக்காருடா.. நம்ம நிரு சிங்கப்பூர்ல இருக்கும்போது ஒருமுறை அவரைப் பார்த்தேன்டா… அப்போ அவர் நிருவைப் பத்தி விசாரிக்கும்போது, அவ சிங்கப்பூர்ல வொர்க் பண்றதைப் பத்தி சொன்னேன்… அது எனக்கு தெரிஞ்ச கம்பெனி தான் தம்பி… அந்த கம்பெனி ஓனரை எனக்கு நல்லா தெரியும்… உன்னோட தங்கைக்கு ஏதாவது ப்ரோமோஷன் வேணும்னா சொல்லு நான் ஏற்பாடு பண்றேன்னு சொன்னாரு…
“அப்போ எந்த ஹெல்ப்பும் தேவையில்லைன்னு சொல்லிட்டேன்… அவர் சென்னைல தான் இருக்கார்… அப்போ ஏதோ வேலை விஷயமா தான் சிங்கப்பூர் வந்தாரு… இப்போ சென்னைல தான் இருப்பாருன்னு நினைக்கிறேன்… நான் அவரை போய் பார்க்க போறேன்டா.. அவர்க்கிட்ட சொல்லி வெற்றியை ஏதாவது செய்யணும்..” என்றான்.
“ஆமாம் மச்சான் கண்டிப்பா ஏதாவது அவனுக்கு பண்ணனும்.. நீ போய் அவரை உடனே பாரு..” என்று சஞ்சயும் கூறினான்.
நீரஜாவோ திரும்பவும் ஒரு குழப்பமான மனநிலைக்குச் சென்றிருந்தாள். அவளுக்கு திரும்பவும் கொஞ்சம் தனிமை தேவைப்பட்டது. அதனால் தான் தன்னுடைய அறைக்கு வந்திருந்தாள். இந்த திருமணம் நின்றது குறித்து அவளுக்கு குழப்பமோ, வருத்தமோ இல்லை.
அன்று நிகேதன் சென்டிமென்ட்டாக பேசியதால் தான் திருமணத்துக்கு சம்மதித்ததே, சஞ்சயின் முன்னால் போட்டோவை காட்டி பிடித்திருக்கிறதா, என்று நிகேதன் கேட்டப்போது ஏதோ கோபத்தில் இந்த வரனுக்கு சம்மதம் சொன்னாள். ஆனால் இதை எப்படி தடுத்து நிறுத்துவது என்ற குழப்பம் இருந்தது. இப்போதோ தானாகவே அது நின்றுப் போனது சந்தோஷம் தான்,
ஆனால் அது நின்ற முறை தான் அவளுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. அம்மா, அப்பா இல்லாத பொண்ணு, அதான் இப்படி இருக்கு என்று யாரும் இவளை தவறாக சொல்லிவிடக் கூடாது என்பதில் இவள் எவ்வளவு கவனமாக இருப்பாள். ஆனால் இன்று இப்படியெல்லாம் பேச்சு வாங்க வேண்டியிருக்கிறதே,
அதுவும் சஞ்சயோடு சேர்த்து வைத்து எப்படியெல்லாம் பேசிவிட்டார்கள். மனதில் நினைத்தது மட்டும் நல்லப்படியாக நடந்திருந்தால், சஞ்சயோடு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கும், இப்போது இப்படியெல்லாம் பேச்சு வந்திருக்காது.
அதுவும் சஞ்சய் அவர்களுக்கு கொடுத்த விளக்கம், இவளை தப்பாக புரிந்துக் கொள்ள கூடாது என்பதற்காக தான் என்பது புத்திக்கு புரிந்திருந்தாலும், மனதிலோ அவன் மனதில் காதல் இருந்திருந்தால், அவன் இப்படி விளக்கம் சொல்லிக் கொண்டு நின்றிருப்பானா..?? அவர்கள் முன்னிலையில் தன்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்துக் கொள்வதாகவும் கூறியிருக்க மாட்டானா..?? என்று கேள்வி கேட்டது. ஏன் மனம் அதை எதிர்பார்க்கவும் செய்தது.
இன்னொரு பக்கமோ வெற்றியை நினைத்து வேறு கோபம் வந்தது. அவனை நல்ல நண்பனாக நினைத்தாள், ஆனால் அவன் இவ்வளவு கேவலமாக இருப்பான் என்று எதிர்பார்க்கவில்லை. அன்று அவனை மன்னித்து விட்டப் பிறகும் கூட இப்படியெல்லாம் நடந்துக் கொள்கிறான்? கண்டிப்பாக இதையெல்லாம் காதில் கேட்கும்போது நிக்கிக்கு எப்படி இருக்கும்…?? ஏற்கனவே அம்மா, அப்பா அளவுக்கு தான் பார்த்துக் கொள்ளவில்லை என்று அடிக்கடி கவலைப்படுகிறான். இதில் இப்படியெல்லாம் நடக்க வேண்டுமா..?? என்றிருந்தது அவளுக்கு,
அப்போது அறையின் கதவை திறந்துக் கொண்டு சஞ்சய் உள்ளே வந்தான்.
“என்னால இப்போ எங்கேயும் வர முடியாது பாஸ்… நான் இப்போ வீட்டுக்குப் போகணும்னு நினைக்கிறேன்..” என்றாள் தலைக் குனிந்தப்படி, திரும்பவும் இந்த மனநிலையில் அவனுடன் செல்ல முடியாமல் ஏதோ ஒன்று தடுத்தது.
இந்த நாளை அவன் தவறவிட விரும்பவில்லை, ஆனால் அவள் எந்த மனநிலையில் இருக்கிறாள் என்று தெரியாமல், அவளிடம் மனம்விட்டு பேச முடியுமா..?? என்றும் புரியவில்லை.. அதனால்,
“சரி நிரு… இன்னொரு நாள் பார்த்துக்கலாம்… இப்போ உன்னை வீட்ல நானே ட்ராப் பண்றேன் வா.. நிக்கி முக்கியமான ஒருத்தரைப் பார்க்க போயிருக்கான்… அதனால தான்… போலாமா..??” என்றுக் கேட்டான்.
“ம்ம் சரி… போலாம்..” என்றவள், கைப்பையை மாட்டிக் கொண்டு அவனுடன் கிளம்பினாள்.
காரில் இருவரும் மௌனமாகவே பயணித்தார்கள். ஏனோ அந்த மௌனம் அவனுக்கு கஷ்டமாகவே இருந்தது. அவள் எந்த மனநிலையில் இருக்கிறாள், என்று தெரியாமல் ஏதாவது பேசிடக் கூடாது என்பதால், காரில் பாடலை ஒளிப்பரப்பினான். அந்த பாடலோ இருவரின் நிலையை எடுத்துரைப்பது போலவே அமைந்தது.
ஓ வெண்ணிலா…
என் மீது கோபம் ஏன்…?
ஆகாயம் சேராமல்…
தனியாய் வாழ்வதும் ஏனோ…?
ஏனோ.. ஏனோ..?
ஓ காதலே…
உன் பேர் மௌனமா…?
நெஞ்சோடு பொய் சொல்லி…
நிமிடம் வளர்ப்பது சரியா…?
சரியா.. சரியா..??
தொலைவில் தொடுவான்
கரையை தொடும் தொடும்…
அருகில் நெருங்க…
விலகி விடும் விடும்…
இருவர் நெஞ்சில்
ஏனோ அடம் அடம்..
ஒருவர் பார்த்தால் கூட உடைபடும்..
சட்டென்று நீரஜா பாட்டை நிறுத்தினாள். அவன் ஏன் என்று கேள்வியாய் பார்க்க, திரும்பி கார் ஜன்னல் வழியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு என்ன தான் பிரச்சனை..?? அவன் மனம் கேள்வி கேட்டது.
திரும்பவும் மௌனத்தோடு அவர்கள் கார் பயணம் முடிவுக்கு வந்தது. நீரஜாவின் வீடு வந்ததும் அவன் காரை நிறுத்த, இறங்கியவளோ… அவனிடம் விடைப் பெறாமலேயே வீட்டிற்குள் சென்றாள்.
அவனும் காரை எடுத்துக் கொண்டு கிளம்பலாம் என்று நினைத்தவன், பின் ஜானவியிடம் நிகேதன் நிச்சயதார்த்தம் நின்ற விஷயத்தை கூறினானா என தெரியவில்லை, அதனால் ஜானவியிடம் விவரத்தை சொல்லி, நீரஜாவையும் கவனித்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு செல்லலாம் என்று அவனும் உள்ளேச் சென்றான். அவனும் உடன் வருவான் என அவள் நினைக்கவில்லை, அமைதியாகவே அவனோடு வீட்டிற்குள் செல்ல, இருவரையும் அங்கு வரவேற்பது போல் அம்பிகா உட்கார்ந்திருந்தார்.
அம்பிகாவை பார்த்ததும் நீரஜா சந்தோஷப்பட்டாள்… “ஆன்ட்டி..” என்றப்படி அருகில் சென்றவளுக்கோ… இதுவரையிருந்த குழப்பங்களும், வருத்தங்களும் தூரச் சென்று, ஒரு இதமான சந்தோஷம் மனதில் பரவியது. ஆனால் அதுவும் சிறிது நேரம் தான் நீடிக்கும் என்று அவள் அறியவில்லை.
“ஆன்ட்டி… திடிர்னு வந்திருக்கீங்க.. உங்களை இங்கப் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்..” நீரஜா சொல்லிக் கொண்டிருந்த போது ஜானவியும் சமயலறையில் இருந்து வந்தாள். சஞ்சய், நீரஜா இருவரையும் ஒன்றாக பார்த்ததில் கொஞ்சம் ஆனந்த அதிர்ச்சி அடைந்தாள்.
“பின்ன இந்த ஆன்ட்டிய பார்க்க நீ வர்றதில்ல… அதான் நானே உன்னைப் பார்க்க வந்துட்டேன்..” என்றார் அம்பிகா.
“சாரி ஆன்ட்டி… வேலை பிஸியில அங்க வர முடியல..”
“பரவாயில்லம்மா… சும்மா தான் சொன்னேன்..” எனும் போதே,
“அம்மா.. நீங்க ஏன் தனியா வந்தீங்க… இங்க வரணும்னு சொல்லியிருந்தா, நானே உங்களை கூட்டிக்கிட்டு வந்திருக்க மாட்டேனா..” என்று சஞ்சய் கேட்டான்.
“ஆமாம் உன்னைப் பத்தி கம்ப்ளெய்ன்ட் பண்ண, உன்னையையே கூட்டிக்கிட்டு வரணுமா..?? நல்லாயிருக்குடா..” என்று அவர் சொன்னதும் சஞ்சய்க்கு மட்டுமில்லை.. ஜானவி, நீரஜாவிற்குமே கூட ஒன்றும் புரியவில்லை.
“என்னம்மா..” என்று சஞ்சய் கேட்டதும், அம்பிகாவோ… சஞ்சய்க்கு பதில் சொல்லாமல், நீரஜாவை பார்த்து பேசினார்.
“நிரு… அன்னைக்கு பெங்களூர்ல இருந்து வரும்போது எனக்கு போன் பண்ணியே… அப்போ நான் உன்கிட்ட என்ன சொன்னேன்… சஞ்சய் என்னோட தம்பி பொண்ணை கல்யாணம் செய்துக்க ஒத்துக்கிட்டான்னு எவ்வளவு சந்தோஷமா பேசினேன்… ஆனா அந்த சந்தோஷமெல்லாம் ஒருநாள் தான்ம்மா… தம்பிக்கிட்ட கல்யாணத்துக்கு இவன் சம்மதிச்சதா கூட சொல்லிட்டேன்… அவனும் நிச்சயத்துக்கு எப்போ க்கா தேதி குறிக்கலாம்னு கேக்கறான்… இவன் என்னடான்னா மறுநாளே வந்து இப்போதைக்கு எதுவும் முடிவுப் பண்ண வேண்டாம்… கொஞ்ச நாள் போகட்டும்னு சொல்றான்… இவன் ஏன் இப்படி பண்றான்னே தெரியல..” என்று அம்பிகா புலம்பும் போதே,
நீரஜாவின் கோபத்துக்கு காரணம் என்னவாக இருக்கும் என்று சஞ்சய்க்கு நன்றாகவே புரிந்தது. இப்போது அனைத்தையும் சரி செய்ய நினைக்கும் இந்த நேரத்தில் எதுக்காக அம்மா இப்போது இதைப்பற்றி இங்கு பேச வந்திருக்கிறார்கள் என்று யோசித்தவன்,
“அம்மா… இதைப்பத்தி பேச தான் இவ்வளவு தூரம் வந்தீங்களா..?? இப்போ என்ன..?? மாமாக்கிட்ட நானே இந்த விஷயமா பேசறேன்… வாங்க வீட்டுக்குப் போகலாம்..” என்று அவசரப்படுத்தினான்.
“மாமா அவசரப்பட்றான்னு மட்டும் இல்லடா.. எனக்கும் மருமக சீக்கிரம் வீட்டுக்கு வரணும்னு இருக்காதா..?? நிரு நீயே சொல்லு, இந்த வயசான காலத்துல எனக்கு இருக்கும் ஒரே ஆசை, இவனுக்கு கல்யாணம் செஞ்சு, பேரன், பேத்திய பார்ப்பது தானே… அதை இவன் புரிஞ்சுக்கறானான்னு பாரும்மா..” என்றார்.
அம்பிகா என்னவோ தன் மகனுக்கு கல்யாணம் ஆகலையே என்னும் ஆதங்கத்தில் தான் இப்படியெல்லாம் பேசினார். ஆனால் நீரஜாவிற்கோ, தன் தம்பியின் மகளை சீக்கிரம் மருமகளாக்கி கொள்ளும் ஆசையில் அவர் பேசுவதாகவே தோன்றியது. அப்படி நினைக்கும் போதே, மனதோடு சேர்ந்து அவள் முகமும் வாடியது.
உண்மையில் சொல்லப் போனால், அம்பிகா இதைப் பற்றி பேச இங்கு வரவில்லை.. தன் மகனுக்கு சீக்கிரம் திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசை அவர் மனதில் உள்ளது தான், ஆனால் நீரஜாவை மருமகளாக்கி கொள்ள வேண்டும் என்ற ஆசை பிறந்ததும், தன் மகன் மனதில் அப்படிப்பட்ட ஆசையில்லை என்று சொன்னதும், அவனுக்காக வேறு பெண்ணை பார்க்க வேண்டும் என்று நினைத்த போது, அந்த பெண்களை நீரஜாவோடு ஒப்பிட்டுப் பார்க்கத்தான் அவருக்கு தோன்றியது. வைஷ்ணவியையும், தன் தம்பி மகளையும் அப்படித்தான் ஒப்பிட்டுப் பார்த்தார்.
இதில் அவர் எதுவும் அவசரப்படாமல் நிதானாமாக தான் இருந்தார். ஆனால் சஞ்சயின் மாமா தான் அம்பிகாவை அவசரப்படுத்திக் கொண்டே இருந்தார். அதையே அம்பிகாவும் பின்பற்றினார். இதில் சஞ்சயும் ஒத்துக் கொண்டப் பின் தன் மகனுக்கு திருமணம் ஆகப்போகிறது என்ற ஆசையும், எதிர்ப்பார்ப்போடும் இருந்தபோது, திடிரென்று வந்து அவன் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் என்று சொன்னதும், இவனை என்ன செய்ய..?? என்று மனம் நினைத்தாலும், சில நாட்களாகவே தன் மகன் ஏதோ ஒன்றை தொலைத்தால் போல் சுற்றிக் கொண்டிருந்ததை ஒரு தாயாக அவர் கவனிக்க தான் செய்தார்.
அதை தெரிந்துக் கொள்ள மனம் துடித்தது. ஒருவேளை அப்போது இருந்த மனநிலை இல்லாமல், இப்போது அவன் மனம் மாறியிருக்குமோ, நீரஜாவை மனம் விரும்ப ஆரம்பித்திருக்குமோ, என்றெல்லாம் கூட யோசித்தார். ஆனால் திடிரென மாமன் மகளை திருமணம் செய்ய ஒத்துக் கொண்டது ஏன்..?? அதுவும் புரியவில்லை, எதுவாக இருந்தாலும் நிகேதனுக்கு விஷயம் தெரிந்திருக்குமே, அதனால் நிகேதனை பார்த்து பேசவே அவர் இங்கு வந்திருந்தார்.
ஒருவேளை தான் நினைத்ததுப் போல் நீரஜாவை அவன் மனம் விரும்பியிருந்தால், அதைப்பற்றியும் நிகேதனிடம் பேசலாம் என்று நினைத்தார். ஆனால் இங்கு வந்ததும் ஜானவி மட்டும் தான் வீட்டில் இருந்தாள். அதுவும் பேச்சுவாக்கில் நீரஜாவின் திருமணம் முடிவானதைப் பற்றி வேறு சொல்லிவிட்டாள். அதன்பிறகும் அவர் எப்படி நீரஜா விஷயத்தை பேச முடியும், இந்த விஷயத்தை அறிந்ததும் கண்டிப்பாக சஞ்சய்க்கும் திருமணம் செய்து வைத்தாக வேண்டும் என்ற வேகம் அவருக்கு வந்தது. அதுதான் அவரை இப்படியெல்லாம் பேசவும் வைத்தது.
“அம்மா… நான் என்ன கல்யாணமே செஞ்சுக்க மாட்டேன்னா சொல்றேன்… இப்போ வேண்டாம்னு தான் சொன்னேன்… நீங்க வீட்டுக்கு வாங்க புரிய வைக்கிறேன்… வாங்க கிளம்பலாம்..” என்று அவசரப்படுத்தினான்.
“இப்படி தான் சொல்வ… அப்புறம் திரும்ப வேதாளம் முருங்கை மரம் ஏறிடும்… உன்னோட பேச்சுல எனக்கு நம்பிக்கையே இல்லடா… உனக்கு ஒரு நல்லது நடக்க மாட்டேங்குதேன்னு கவலைப்பட்டுக்கிட்டு இருக்கறதுக்கு பதிலா, பேசாம உங்க அப்பா போனதும் நானும் போய் சேர்ந்திருக்கலாம்…” என்று அவர் வேதனையோடு சொன்னப்போது, அவர் பேச்சு சஞ்சயை விட நீரஜாவிற்கு தான் அது அதிக வருத்தத்தை தந்தது.
“ஆன்ட்டி ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க… உங்க வாய்ல இருந்து இப்படி ஒரு வார்த்தை வரலாமா..?? பாஸ் சொல்ற விதத்துல சொன்னா புரிஞ்சுக்க போறாரு..” என்றவள், பின் சஞ்சயிடம்…
“பாஸ்.. அம்மாவை இப்படித்தான் வருத்தப்பட வைப்பீங்களா..?? அம்மா கூடவே இருக்கறதால உங்களுக்கு அவங்க அருமை தெரியல… அம்மா, அப்பா கூட இல்லாம நாங்க எவ்வளவு கஷ்டப்பட்ருக்கோம்னு உங்க ஃப்ரண்ட போய் கேளுங்க…
நீங்க தானே ஆன்ட்டிக் கிட்ட கல்யாணத்துக்கு ஓகே சொன்னீங்க… இப்போ ஏன் தள்ளிப் போட்றீங்க… உங்க விருப்பப்படியே நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு அம்மாக்கு ப்ராமிஸ் பண்ணுங்க..” என்றதும், சஞ்சய் மட்டுமல்ல கூட இருந்த ஜானவியும் அதிர்ந்துப் போனாள்.
இருவரையும் ஒன்றாக பார்த்ததும் அவர்களுக்குள் எல்லாம் சரியாகிவிட்டது என்று அவள் நினைத்து சிறிது சந்தோஷப்பட, இப்போது நடப்பதைப் பார்த்தால், இவர்கள் இருவரும் ஜென்மத்திற்கு சேர மாட்டார்கள் என்று தான் அவளுக்கு தோன்றியது.
“என்ன பாஸ் பார்க்கிறீங்க… உங்க விருப்பப்படியே, உங்களுக்கு பிடிச்ச பொண்ணையே நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்… நீங்க அதுக்கான ஏற்பாடெல்லாம் செய்ங்கன்னு ஆன்ட்டிக்கிட்ட ப்ராமிஸ் பண்ணுங்க..” என்றாள்.
“சரிம்மா.. உங்க விருப்பப்படியே, உங்களுக்கு பிடிச்சப் பொண்ணை நான் கல்யாணம் செஞ்சுக்கிறேன்… இது ப்ராமிஸ்.. போதுமா..??” என்று தன் அன்னையின் கையில் சஞ்சய் சத்தியம் செய்துக் கொடுத்தான்.
“ரொம்ப சந்தோஷம் சஞ்சய்… வேற என்ன எனக்கு வேணும்… நான் வீட்டுக்குப் போனதும், உங்க மாமாக்கிட்ட பேசி சீக்கிரம் நிச்சயதார்த்ததிற்கு தேதி குறிக்க சொல்றேன்..” என்றவர், பின் நீரஜாவின் கையைப் பிடித்துக் கொண்டு,
“எல்லாத்துக்கும் நீ தான்ம்மா காரணம்… நீ ரொம்ப நல்லா இருக்கணும்… நான் வந்ததுமே ஜானு விஷயத்தை சொன்னா.. உனக்கும் கல்யாணம் முடிவாயிடுச்சாமே… புருஷன், குழந்தைங்கன்னு குடும்பமா நீ சந்தோஷமா வாழணும்..” என்று அவர் வாழ்த்த, கஷ்டப்பட்டு புன்னகையை வரவழைத்தவள்,
“ஆன்ட்டி… நீங்க ஜானுக்கூட பேசிக்கிட்டு இருங்க… நான் ஃப்ரஷ் ஆயிட்டு வந்துட்றேன்…” என்று சொல்லிவிட்டு தனதறைக்கு சென்றாள். அவள் போகும்வரை அமைதியாக இருந்த சஞ்சயோ… பின் தன் அன்னையைப் பார்த்து,
“அம்மா… எந்த நேரம் எதைப் பேசனும்னு உங்களுக்கு ஏதாவது தெரியுதா..?? இங்க இப்போ என்ன நிலைமைன்னு உங்களுக்கு ஏதாவது தெரியுமா..?? நீங்க ஏன் இப்போ இங்க வந்தீங்க..” என்று கொஞ்சம் கோபமாகவே கேட்டான்.
“என்னடா சொல்ற..?? ஏன் என்னாச்சு..??”
“அம்மா நீரஜாவோட நிச்சயதார்த்தம் நின்னுடுச்சு…”
“நிஜமாவா டா..?? எப்படி..??” என்று அம்பிகாவும்,
“என்ன சொல்றீங்க சஞ்சய்.. எதனால..??” என்று ஜானவியும் ஒன்று சேர கேட்டனர். அவனும் பெங்களூரில் நடந்ததையும், இவனையும் நீரஜாவையும் சேர்த்து வைத்து விஜயின் அப்பா பேசியதையும் தவிர்த்து மற்றதெல்லாம் மேலோட்டமாக கூறினான்.
அதை கேட்டு ஜானவிக்கு கோபம் வந்தது… “என்ன சொல்றீங்க சஞ்சய்… வெற்றியா இப்படியெல்லாம் மாப்பிள்ளை வீட்ல சொன்னான்… நிருவுக்கு பெஸ்ட் ப்ரண்ட்னு சொல்லி இங்க வந்து தங்கி சாப்ட்ருக்கான்… அந்த நன்றி உணர்வு கூட அவனுக்கு இல்லையே..”
“உண்மை தான் ஜானு… அந்த பையனை மகாபலிபுரம் வந்தப்போ தான் நான் பார்த்தேன்… பார்க்க நல்லப் பையனா தான் தெரிஞ்சான்… ஆனா இப்போ என்ன செஞ்சுருக்கான் பாரு… ப்ரண்ட்ன்னு சொல்லி இப்படி கெடுதல் செஞ்சிருக்கானே…” என்று அம்பிகாவும் ஆதங்கப்பட்டார்.
“அது வெற்றி நம்ம நிருவை ஒன்சைடா காதலிச்சிருக்கான்ம்மா.. அதை அவ ஏத்துக்கலன்னு இப்படியெல்லாம் பண்ணியிருக்கான்…”
“அதுக்காக இப்படியெல்லாமா பண்ணுவாங்க… அந்த பொண்ணுக்கு பிடிக்கலன்னா ஒதுங்கி போறது தானே ஆம்பிளைக்கு அழகு… இவனையெல்லாம் என்ன சொல்றது… இது தெரியாம நான் வேற, நிருக்கிட்ட என்னென்னமோ பேசிட்டேன்… நான் போய் அவக்கிட்ட ஆறுதலா 4 வார்த்தை பேசிட்டு வரேன்..” என்று நீரஜாவை பார்க்க அவள் அறைக்கு போக நினைக்கும்போதே,
“அம்மா.. அதெல்லாம் வேண்டாம்… இந்த நிச்சயதார்த்தம் நின்னுப் போனதுல யாருக்கும் வருத்தம் இல்ல… இது மூலமா அவங்க எப்படிப்பட்டவங்கன்னு தெரிஞ்சதுல சந்தோஷம் தான்ம்மா… இருந்தும் அவங்க பேசினது அவளுக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கும்… இப்போ அவ கொஞ்சம் தனியா இருக்கட்டும்… அவளை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்..” என்று சஞ்சய் சொன்னான்.
அம்பிகாவும் அதுதான் சரி என்பது போல தலையசைத்தார். “ஜானு… நான் சொன்னது புரிஞ்சுதில்ல.. நிருவை டிஸ்டர்ப் பண்ணாத… எது கேக்கனும்ன்னாலும் மெதுவா கேளு… நிகேதன் கொஞ்ச நேரத்துல வந்துடுவான்… நாங்க வரோம்..” என்றான்.
“நிருவை பார்ததுக்கம்மா..” என்று அம்பிகாவும் கூற, பின் இருவரும் கிளம்பினர்.
நீரஜாவிற்கு மனதில் இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் இப்போது தொலைந்து போயிருந்தது, சஞ்சயின் இந்த மௌனம் அவளை வெகுவாக பாதித்தது. இவ்வளவு நடந்த பின்னும் அவன் அமைதியாக இருந்தால் என்ன அர்த்தமமாம்? காதலை ஆண்கள் தான் தைரியமாக வெளிப்படுத்துவார்கள். இந்த தருணத்திலும் அவன் மௌனமாக இருக்கும்போது இவளால் என்ன செய்ய முடியும்…?? அவன் மனதில் என்ன இருக்கிறது என்பது தெரியாமலேயே இவளின் காதலை சொல்லிட முடியுமா..?? அவ்வளவு தான் எல்லாம் முடிந்தது.
சஞ்சய் தன் அன்னையின் ஆசைப்படி அவன் மாமன் மகளை திருமணம் செய்துக் கொள்ளப் போகிறான். சஞ்சயுடனான இவளின் காதல் நிறைவேறவே போவதில்லை என்று நினைத்தவளுக்கு தற்போது அழுவது ஒன்று தான் தன் துயரங்களுக்கு வடிகாலாக தெரிந்தது. தலையணையில் முகம் புதைத்து குலுங்கி குலுங்கி அவள் அழுதாள்.
ஓ காதாலா.. உன் பேர் மௌனமா..??
சொல்லொன்று இல்லாமல்…
மொழியும் காதலும் இல்லை…
ஓ காதலா.. ஓர் வார்த்தை சொல்லடா..??
முதல் வார்த்தை நீ சொன்னால்…
நான் மறுவார்த்தை சொல்வேன்…
மௌனம் தொடரும்..