IP 9

Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

சாரல் 9

தீப்தி மிகவும் வற்புறுத்தி கேட்டுக் கொண்டதால், வருணா தீப்தியின் திருமணத்தில் அவளுக்கு அலங்காரம் செய்ய ஒத்துக் கொண்டாள். முதலில் தீப்தி கேட்டபோது வருணா மறுத்ததற்கு காரணம். சென்னையில் தான் திருமணம் என்றாலும் இவர்கள் இருக்கும் இடத்திலிருந்து தீப்தியின் வீடு இருக்கும் இடம் வெகு தூரத்தில் இருந்தது. தமிழ் முறைப்படி திருமணம் இரண்டு நாட்கள் இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் அவர்கள் திருமணத்திற்கு நிறைய சடங்குகள் இருந்தது. 

ஓரளவிற்கு முக்கிய சடங்குகளுக்கு தீப்திக்கு அலங்காரம் செய்வதற்கு வருணா ஒத்து கொண்டாள். சில சடங்குகள் பகலில் நடந்தது என்றால், சில சடங்குகள் இரவு தொடங்கும் போது தான் ஆரம்பித்தது. அந்த நேரத்தில் பயணம் செய்வது தான் வருணாவிற்கு கஷ்டமாக இருந்தது. மாலையே வீட்டிலிருந்து கிளம்பி சென்று விடுவாள். அப்போது தனியாக செல்வதில் பிரச்சனையில்லை. ஆனால் வேலை முடிந்து திரும்பும் போது  தனியாக வருவது பாதுகாப்பு இல்லை என்பதை யோசிக்க வேண்டியிருந்தது.

திருமணத்திற்கு பிறகு, அதுவும் அழகு நிலையம் தொடங்கிய பிறகு, இரண்டு முறை தான் இப்படி வெளியில் சென்று வேலை செய்யும் நிலை அவளுக்கு வந்திருந்தது. அந்த நேரத்தில் ஆதவனே அவளை அழைத்து செல்லும் பொறுப்பை எடுத்துக் கொண்டான். முதலில் கொண்டு போய் அவளை விட்டுவிட்டு வருபவன், அவள் கிளம்பும் நேரம் அலைபேசியில் அழைத்தால், உடனே அழைத்து செல்ல வந்துவிடுவான். அவள் சொன்ன நேரத்திற்கு வரமுடியாமல் தாமதமானாலும் அவளுக்காக காத்திருந்து அழைத்து வந்தான்.

ஆனால் இந்த சமயம் அவனுக்கும் அதிக வேலைகள் இருந்தது. தீப்தி வீட்டுக்கு வந்து அவளுக்காக காத்திருந்து அழைத்து செல்ல தாமதமாகும், அவன் முடித்துக் கொடுக்க வேண்டிய வேலைகள் நிறைய இருந்தது. பகல் நேரமென்றால் ஆட்டோவில் வந்து விடுவாள். ஆனால் இரவு நேரத்தில் ஆட்டோ கூட பாதுகாப்பு இல்லை. வெளி ஆட்கள் என்றால் இந்த வேலையை மறுத்துவிடு என்று ஆதவனே சொல்லியிருப்பான். ஆனால் வருணாவின் தோழி என்பதால் அவனாலும் மறுக்க முடியவில்லை. இதில் முதல் நாள் முருகனிடம் சொல்லி வருணாவை அழைத்து வரச் சொன்னான். இருந்தும் வொர்க்‌ஷாப்பில் குவிந்திருக்கும் வேலைகளுக்கு முருகன், சுகுமார் உதவியும் ஆதவனுக்கு தேவைப்பட்டது.

அதனால் இரவு நேரங்களில் வீட்டிற்கு செல்ல கஷ்டமாக இருக்கும் என்று சொன்ன போது, இரவில் வருணாவை கொண்டு விடும் பொறுப்பை ராகேஷ் ஏற்றான். வருணா முதலில் அதை மறுத்தாள். ஆனால் ராகேஷ் ஆதவனிடம் அனுமதி கேட்டான். தொழில் விஷயத்தில் ஆதவனுக்கு ராகேஷை நன்றாக தெரியும். அதில்லாமல் தீப்தியும் என் அண்ணனோடு செல்வதில் எந்த பயமும் வேண்டாம் என்று சொல்லியிருந்தாள். அதனால் சில சமயங்களில் ராகேஷோடு அவள் வீட்டுக்கு வர வேண்டியிருந்தது.

ஆனால் ஒருநாள் அவள் ராகேஷோடு காரில் வந்து இறங்கியதற்கே அந்த ஏரியாவில் இருந்தவர்கள் வருணாவை ஒரு மாதிரி பார்த்தார்கள். இதில் அவள் அடிக்கடி அவனோடு வரும்போது அவர்களுக்குள்ளேயே அவளை தவறாக பேச ஆரம்பித்தார்கள். ஆரம்பத்திலேயே அவள் ஆதவனோடு செல்வதையே அவர்கள் வியப்பாக பார்த்தவர்களாயிற்றே, வருணா பெரிய இடத்து பெண் என்பது போல் தான் வருணா இங்கு வந்ததிலிருந்தே  அவர்கள் நினைத்திருந்தனர். அவள் பிறந்த வீடு வசதியென்று அவர்களாகவே முடிவு செய்துக் கொண்டனர். ஒரு பெரிய அபார்ட்மென்ட்டில் சொந்த வீடு இருப்பதை அவர்கள் கேள்விப்பட்டிருந்தனர். இதில் வருணாவின் தோற்றம் இதெல்லாம் பார்த்து அவர்களுக்கு அப்படி தோன்றியது. இப்படிப்பட்ட பெண் எப்படி இந்த ஏரியாவில், படிக்காத ஆதவனோடு  குப்பை கொட்டப் போகிறாள் என்பது தான் அவர்களின் எண்ணமாக இருந்தது. அதனாலேயே ஆதவனோடு அவள் வெளியே கிளம்பும் போது வியப்பாக பார்த்திருந்தனர்.

ஆனால் வருணாவும் சாதாரண நடுத்தர குடும்பத்து பெண் தான், இந்த அப்பார்ட்மென்ட் வாங்குவதற்கு முன்பு வரை சாதாரண வாடகை வீட்டில் தான் குடியிருந்தனர். என்ன ஒன்று வருணாவின் தாய் தந்தை இருக்கும் காலத்திலிருந்தே பாதுகாப்பாக அமைதியாக இருக்கும் இடத்தில் குடியிருந்தனர். இப்படி ஒரு ஏரியாவையெல்லாம் அவள் பார்த்தது கூட இல்லை. அதேபோல் விக்னேஷ் இப்படி ஒரு வீடு வாங்கி கடனை அடைக்க கஷ்டப்படுவது அந்த ஏரியா ஆட்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.  ஆதவனின் தொழிலைப் பற்றி தெரிந்தவர்களுக்கு அதில் அவன் ஈட்டும் லாபத்தை பற்றி தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை.

வருணா ப்யூட்டிஷியன் என்பதால் தான் அவளது அலங்காரத்திலும் உடையிலும் எப்போதும் கவனம் எடுத்துக் கொள்வாள். குறைவான விலையில் உடை எடுத்தாலும், அவளுக்கு பொருந்தி, அவளது அழகை எடுத்துக் காட்டும் உடையை வாங்கி அணிவாள். அது அந்த ஏரியாவில் உள்ளவர்களுக்கு அவளின் நிலையை உயர்த்தி காட்டியிருக்கிறது. அதேபோல் ஆதவனும் பொன்னம்மாவும் இருக்கும்போது சாதாரணமாக இருந்த வீட்டில், வருணா வருவதற்கு முன்பாகவே அவளுக்கென எல்லாம் ஆதவன் பார்த்து பார்த்து செய்ததை பார்த்த போது, “இந்த வசதியெல்லாம் செய்தால் தான் அந்த பொண்ணு இந்த வீட்ல வந்து வாழும் போல” என்றும் பேசிக் கொண்டனர். 

ஆனால் வருணா இயல்பிலேயே அனைத்தையும் அனுசரித்து செல்லக் கூடியவள், இதில் ஆதவன் இந்த வசதியெல்லாம் செய்திருக்கவில்லையென்றாலும் அவள் அங்கே பொருந்தி வாழ பழகிக் கொண்டிருப்பாள். பிறந்த வீட்டில் ஓரளவுக்கு வசதியுடன் வாழ்ந்து பழகியவளுக்கு இந்த வாழ்க்கை முறை கொஞ்சம் சிரமமாகவும் இருந்திருக்கலாம். ஆனால் ஒருவேளை பிடிக்காத திருமணம் என்றால், அவளுக்கு இந்த வாழ்க்கை முறை பிடித்தமில்லாமல் போயிருக்கலாம். அவள் தான் ஆதவனை விரும்பி மணம் புரிந்திருந்தாளே, இந்த வசதி வாழ்க்கையை விட ஆதவனின் அன்பும் காதலும் கிடைக்க வேண்டும் என்பது தான் அவளின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது.

ஆதவன்  அவளுக்கான வசதிகள் செய்துக் கொடுத்தப்போது அதில் அவனது அக்கறை தான் வெளிப்பட்டது. இதையெல்லாம் அவன் சக்திக்கு மீறி ஒன்றும் செய்யவில்லை. அவனிடம் அதற்கு தேவையான பணம் நிறையவே இருந்தது. இதுவரை பொன்னம்மாவிற்கும் அவனுக்கும் இப்படியான தேவைகள் தேவைப்பட்டிருக்கவில்லை. ஆதவனே இது வாங்கலாமா? அது வாங்கலாமா? என்று கேட்டாலும், “எதுவா இருந்தாலும் உன் கல்யாணம் முடிஞ்சு பொண்டாட்டி வந்ததும் வாங்கிக்கலாம் என்று பொன்னம்மா சொல்லிவிடுவார். அதனாலேயே வருணா வருவதற்கு முன் அவளின் தேவை அறிந்து அவன் இதெல்லாம் செய்திருந்தான். பொன்னம்மா அங்கிருப்பவர்களிடம் நன்றாக பேசி பழகி இருந்தாலும், குடும்ப விஷயங்களை அவ்வளவாக யாரிடமும் பகிர மாட்டார். அதனால் ஆதவனின் தொழில் பற்றியோ, வருணாவின் குடும்பம் பற்றியோ அறியாதவர்கள், வருணாவை தவறாக பேச ஆரம்பித்துவிட்டனர்.

ருணாவை பற்றிய தவறான பேச்சுக்கள் இதுவரை வருணாவிற்கோ, ஆதவனுக்கோ தெரிய வரவில்லை. இருவரும் அவரவர் வேலையில் மூழ்கியதால் அவர்கள் காதுக்கு அது எட்டவில்லை. காலையில் கிளம்பி போகிறவர்கள், இரவு தான் வீடு திரும்புகிறார்கள். இதில் அவர்களிடம் நேரடியாக இது போல பேச்சுக்களை யாரும் பேசாததால் அவர்கள் இருவருக்கும் அது தெரிய வாய்ப்பேயில்லை. 

ஆனால் கோமளாவின் காதுக்கு இதுபோன்ற பேச்சுக்கள் எட்டியது. வருணா ராகேஷை ஒருமுறை வீட்டுக்கே கூட்டிக் கொண்டு வந்ததை அவளே பார்த்திருக்கிறாள். அவளுக்கு வருணாவையும் செண்பகத்தையும் நன்றாக தெரியும் என்பதால் வருணாவைப் பற்றி தவறாக நினைக்கவில்லை. அதற்காக யாரோ என்னவோ பேசிக் கொள்கிறார்கள் என்று அமைதியாகவும் விட முடியவில்லை. கோமளாவிற்கு திருமணமாகி இங்கு வந்ததிலிருந்து பொன்னம்மா தான் பக்கத்து வீட்டில் இருந்து அவளுக்கு நல்லது கெட்டது சொல்லிக் கொடுத்தவர், வருணாவை போல தான் கோமளாவிற்கும் திருமணம் ஆகி வந்த போது இந்த ஏரியா புதிது. அப்போது இங்கு எல்லாவற்றிற்கும் திணறிய கோமளாவிற்கு பொன்னம்மா பல விதத்தில் உதவியாக இருந்தார். 

அவளை பொறுத்த வரை ஆதவனும் வருணாவும் அவளின் நெருங்கிய உறவினர்கள் போன்று தான். ஆதவனுக்கு தெரியாமல் வருணா எதையும் செய்திருக்க மாட்டாள் என்பது தெரியும். பொதுவாக ஒரு ஆணோடு சாதாரணமாக நின்று பேசினாளே இப்படிப்பட்ட பேச்சுக்கள் வரும் என்பது ஆதவனுக்கு தெரியும் தானே, அப்படி இருந்தும் இதற்கெல்லாம் அவன் எப்படி அனுமதித்தான் என்ற கேள்வி அவளுக்குள்  எழுந்தது. நேரடியாகவே  இந்த விஷயத்தைப் பற்றி ஆதவனிடம் கூறினாள்.

அதைக்கேட்டு அவனுக்கு அதிக கோபம் வந்தது. அவரவர் வீட்டில் ஆயிரம் பிரச்சனைகளை வைத்துக் கொண்டு அடுத்தவர் வீட்டில் என்ன என்று பார்ப்பதே வேலையாக போய்விட்டது. யாரிடமும் நேரடியாக கோபப்படவும் முடியாது. நாம் தான் கவனமாக இருக்க வேண்டும் என்பது புரிந்ததால் கோபத்தை அடக்கிக் கொண்டான். ஆரம்பத்திலேயே இப்படிப்பட்ட பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது என்பதைப் பற்றி அவன் யோசித்திருந்தான் தான், ஆனால் அதைக் காரணம் காட்டி வருணாவை இந்த வேலையை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று சொல்ல அவனுக்கு மனம் வரவில்லை. 

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

ஆனாலும் இது போன்ற பேச்சுக்கள் வந்தப்பிறகு இனியாவது கவனமாக இருக்க வேண்டும் என்று  மனதில் முடிவெடுத்துக் கொண்டான். வருணாவும் இன்னும் இரண்டு நாட்கள் தான் அங்கு செல்ல வேண்டி உள்ளது என்று சொல்லியிருந்தாள். நேற்றே திருமணம் முடிந்துவிட்டது.  அடுத்து இரண்டு நாட்களுக்கு முக்கிய சடங்குகள் எதுவும் இல்லை. அதனால் வருணாவை போக வேண்டாம் என்று சொல்ல வேண்டும், அப்படி போக வேண்டிய கட்டாயம் இருந்தால், அவனே அவளை அழைத்துச் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான்.

காலையில் வேலைக்கு செல்லும் போது தான் கோமளா இந்த விஷயம் குறித்து பேசியிருந்தாள். வேலை நேரத்தில் தான் அந்த முடிவை எடுத்திருந்தவன், மதியம் சாப்பாட்டிற்காக வீட்டுக்கு போகும்போது வருணாவிடம் அதைப்பற்றி பேசினான்.

“வருணா, கல்யாணம் தான் முடிஞ்சுடுச்சே, இனி நீ உன்னோட ஃப்ரண்ட் வீட்டுக்கு போகணுமா என்ன? முக்கியமான சடங்கு இல்லன்னா நான் வரலன்னு உன் ஃப்ரண்ட்கிட்ட சொல்லிடேன்.” என்று ஆதவன் அப்படி சொல்லவும், என்ன? என்பது போல் வியப்பும் அதிர்ச்சியுமாக பார்த்தாள் அவள்.

அவளுக்கும் இதே யோசனை தான், முதலில் தீப்திக்காக ஒத்துக் கொண்டாலும், பிறகு ஏன் இதற்கு ஒத்துக் கொண்டோம் என்று தான் அவளுக்கு தோன்றியது. அதற்கு காரணம் ராகேஷ் தான், அவன் ஒன்றும் தப்பானவன் கிடையாது. ஆனால் அதிகபிரசங்கித்தனமாக பேசினான். பேச்சில் அதிக உரிமை எடுத்துக் கொண்டான். அவளுக்கு மட்டுமல்லாமல் ஆதவனுக்கும் அவனை நன்றாக தெரியும் என்பதால் இந்த உரிமை வெளிப்பட்டது. 

முன்பு இது கட்டாய திருமணமா? என்று கேட்டவன், இப்போது இவர்களது காதல் திருமணம் தானே? என்று மடத்தனமாக கேட்டான். “காதல் திருமணம் செய்துக் கொள்வதால் இப்படி கஷ்டப்பட வேண்டும் என்று அவசியமில்லை. ஏன் இந்த ஏரியாவில் இருக்க வேண்டும்? உன்னைப் போல ஒருத்தி இங்கு இருப்பது நல்லாவா இருக்கு? ஆதவன் இங்கேயே இருக்கலாம்னு சொன்னாலும், நீ தான் அவன்கிட்ட சொல்லணும், இப்போ ஆதவன் வொர்க்‌ஷாப் நல்லா தானே போகுது. அப்புறம் என்ன? ஒருவேளை வொர்க்‌ஷாப் நல்லாப் போகலன்னா சொல்லு, எனக்கு தெரிஞ்ச கார் கம்பெனி ஒன்னு இருக்கு. அவங்க கூட காண்ட்ராக்ட் போட்டு வேலை செஞ்சா நல்ல பணம் பார்க்கலாம்” என்றெல்லாம் காரில் பேசிக் கொண்டு வருவான். 

“இவனுக்கு எதுக்கு இதெல்லாம்? நாங்க ஏதாச்சும் கஷ்டம்னு சொன்னோமா? எதுக்கு இப்படி பேசுகிறான்?” என்று அவளுக்கு உள்ளுக்குள் கோபம் தான் வரும். இதில் ஒரு சமயம் இரவு தொடங்கிய போதே அவளை அழைத்துக் கொண்டு வந்திருந்தவன், “வீட்டுக்கு கூப்பிடமாட்டியா?” என்று கேட்டான்.

“இவன் ரொம்ப ஓவரா தான் போகிறான்.” என்று நினைத்தாலும், அவனே கேட்டுவிட்டதால் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். கண்டிப்பாக அதை ஆதவனிடம் சொல்லிவிடுவாள். அதனால் அவனை வீட்டுக்குள் அழைத்துச் செல்ல நினைத்தவளுக்கு, இந்த ஏரியாவில் உள்ளவர்கள் தவறாக நினைக்கக் கூடும் என்று தோன்றவில்லை. பொதுவாகவே ஆண்களிடம் ஒரு எல்லைக் கோட்டோடு பழகுபவள் என்பதால், ஒரு விருந்தினனாக ராகேஷை வீட்டுக்கு அழைத்து வந்தது பெரிதாக தெரியவில்லை. இருந்தும் அவனின் அதிகபிரசங்கித்தனமான பேச்சுக்களை கேட்ட போது தான், 

“இந்த வேலையை நாம் எடுத்திருக்கவே கூடாது. தீப்திக்கிட்ட ஏதாவது ரீஸன் சொல்லியிருக்கணும், என்னால தான் சொல்ல முடியலன்னாலும், ஆதவனாவது ஏதாவது காரணம் சொல்லி வேண்டாம் என்பது போல் சொல்லியிருந்தால், கணவனை காரணம் காட்டியாவது அங்கு செல்லாமல் இருந்திருக்கலாம்” என்பது போல் அவள் நினைத்தாள்.

“பேசாமல் கல்யாணம் தான் முடிஞ்சிடுச்சே? ரெண்டு நாளுக்கு தீப்திக்கிட்ட அட்ஜஸ்ட் செஞ்சுக்க சொல்லி சொல்லிடமா?” என்று கூட நினைத்திருந்தாள். அதையே ஆதவனும் சொல்லவும், “இவன் என்ன நான் நினைத்ததையே சொல்கிறான்? என்று வியப்பாகவும், ஆதவன் இப்படி சொல்பவன் இல்லையே, பின் ஏன் அப்படி சொல்கிறான்? என்று அதிர்ச்சியாகவும் பார்த்தாள்.

“ஏன் என்னாச்சு எதுக்கு போகக் கூடாதுன்னு சொல்றீங்க?”

“இல்லை கல்யாணம் முடிஞ்சிடுச்சு, அப்புறம் எதுக்காக அவ்வளவு தூரம் போய் வந்துக்கிட்டு, அதுக்கு தான் சொன்னேன்”

“எனக்கும் இதே யோசனை தான்ப்பா, ஆனா தீப்திக்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல, இதுவரைக்கும் செஞ்ச வேலைக்கு பேமென்ட் கூட வாங்கல, அதை வாங்கயாவது போய் தானே ஆகணும், பேசாம இன்னும் ரெண்டு நாள் தானே அவ கேட்டுக்கிட்டது போல வேலையை முடிச்சிட்டு வந்துடலாமோன்னும் தோனுது,”

“பேமெண்ட் தான, அப்புறம் ராகேஷ் சார்க்கிட்ட சொல்லி மெதுவா வாங்கிக்கலாம். இப்ப நீ வரலன்னு சொல்லிடு.” என்று இதுதான் முடிவு என்பது போல் கூறினான்.

“ஏன்? போகக் கூடாது,” என்பது போல் அவன் பேச்சு இருக்கிறதே, என்று நினைத்தவள்,

“என்னாச்சு, எதுக்கு நான் போகக் கூடாதுன்னு சொல்றீங்க? இன்னும் இரண்டு நாள் தானே? எடுத்த வேலையை முடிச்சிடுவோமே, அதுக்குப்பிறகு வேணும்னா, இதுபோல தூரமா போகறது போல வேலையை எடுத்துக்க வேண்டாம்.” என்று கூறினாள்.

“முக்கியமான சடங்கு இல்லைங்கும் போது, எதுக்கு போகணும் வருணா?” என்று அவன் பிடியிலேயே அவன் நிற்க?

“இப்போ ஏன் இப்படி சொல்றீங்கன்னு சொல்லப் போறீங்களா? இல்லையா?” என்று கொஞ்சம் கோபமாக அவள் கேட்டப் போது, கோமளா கூறியதை பற்றி அவன் சொன்னதும், அவளுக்கு கோபம் வந்தது.

செண்பகம் எப்படியோ, அதேபோன்று தான் கோமளாவையும் அவள் நினைத்திருந்தாள். இப்படி ஒரு பிரச்சனை என்றால், நல்லவிதமாகவே அவளிடம் கோமளா சொல்லியிருக்கலாம். அதைவிடுத்து அதைப்பற்றி ஆதவனிடம் கோமளா சொல்லியதே அவளுக்கு பிடிக்கவில்லை. இதில் அதைப்பற்றி ஆதவனும் அவளிடம் வெளிப்படையாக பேசாமல் இப்படி இனி அங்கு போக வேண்டாம் என்பது போல் அவன் சொல்லியதில் கோபமானவள்,

“இங்க இருக்கவங்க மட்டும் தான் அப்படி பேசறாங்களா? இல்லை உங்களுக்குமே இப்படி ஒரு சந்தேகம் இருக்கா? அப்படின்னா அதை வெளிப்படையா சொல்லுங்க, இப்படி மூடி மறைச்சு பேச வேண்டாம்,” என்று அவள் சொல்லி முடிக்கவில்லை. அதற்குள் அவளை அறைந்திருந்தான் அவன்.

கன்னத்தில் கைவைத்தப்படி அதிர்ச்சியில் அவனைப் பார்க்க,  “என்னை இதைவிட நீ கேவலப்படுத்த முடியாது.” என்றவன், சட்டையை கழற்றிவிட்டு பனியனோடு அவளிடம் பேசிக் கொண்டிருந்தவன், ஒரு சட்டையை மாட்டிக் கொண்டு விறுவிறுவென்று வீட்டை விட்டு வெளியேறினான்.

காலையில் ஆதவனிடம் இதைப்பற்றி பேசிவிட்ட பிறகு, இதை ஆதவனிடம் சொன்னது சரிதானா? என்பது போல் கோமளா யோசித்துக் கொண்டிருந்தாள். இந்த விஷயத்தைப் பற்றி ஆதவன் வருணாவிடம் எப்படிப் பேசப் போகிறானோ? என்று வேறு அவளுக்கு பயமாக இருந்தது. அதனால் ஆதவன் மதிய சாப்பாட்டு நேரத்திற்கு வந்தபோது கோமளா தன் வீட்டில் இருந்தாலும் அவர்கள் வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள தன் காதை தீட்டி வைத்திருந்தாள் என்றே சொல்லலாம்.

இதில் இருவருடையே ஏதும் காரசாரமான விவாதங்கள் இல்லையென்றாலும், அப்போது தான் வீட்டுக்குள் வந்த ஆதவன் சாப்பிடக் கூட இல்லாமல் வெளியே சென்றதை கோமளாவும் கவனித்தாள். அதிலேயே ஏதோ பிரச்சனை என்று தெரிந்து கொண்டவள், வேகமாக உள்ளே சென்று பார்த்தால், வருணா அழுதுக் கொண்டிருந்தாள்.

ஆதவன் அடித்ததும் தான், அவள் பேசியது தவறு என்பதை வருணா உணர்ந்தாள். இதில் அவனுக்கு இவ்வளவு கோபம் வரும் என்று எதிர்பார்க்காதவளுக்கு, அவன் அவளை அறைந்தது கஷ்டமாக இருந்தது. அவன் சாப்பிடாமல் சென்றது வேறு மனதை கஷ்டப்படுத்தியது. இதில் தானாகவே அழுகை வர, அந்த நேரத்தில் உள்ளே நுழைந்த கோமளாவிடம், 

“ஏதாவது நான் தப்பு செஞ்சிருந்தா என்கிட்ட சொல்லியிருக்கலாமே அக்கா,” என்று அழுதுக் கொண்டே கூறினாள். ஆதவன் என்ன பேசினான் என்பதும் கோமளாவிற்கு தெரியவில்லை. இதில் வருணா கன்னத்தில் இருந்த தடம் ஆதவன் அவளை அடித்திருக்கிறான் என்பதை தெரியப்படுத்தியது. அதனால் தன்னால் தான் ஏதோ பிரச்சனையாகிவிட்டது என்று பயந்த கோமளா, உடனே செண்பகத்திற்கு அலைபேசி மூலம் தொடர்புக் கொண்டு விஷயத்தைக் கூறினாள். அலைபேசி மூலமாகவே ஆதவன் வருணாவை அறைந்த விஷயத்தை கேள்விப்பட்டு செண்பகம் உடனே புறப்பட்டு வந்தாள்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

து கணவன் மனைவிக்கு இடையே தோன்றிய சாதாரண பிரச்சனை, இதை செண்பகத்திடம் சொல்லி கோமளா பெரிதுப்படுத்தி விட்டாள். செண்பகம் வீட்டுக்கு வந்ததைப் பார்த்து வருணா, “இந்த நேரம் எதுக்கு அண்ணி இங்க வந்திருக்காங்க? ஆதவன் அடிச்சது தெரிஞ்சா என்ன நினைப்பாங்களோ?” என்று மனதிற்குள் பயந்து போக,

“எப்படி உன்னை அவன் அடிக்கலாம், எதுவா இருந்தாலும் பேச்சுல சொல்ல மாட்டானா? கை நீட்ற பழக்கம் எங்க வந்தது?” என்று வந்ததுமே கோபமாக பேசியதை பார்த்தே, செண்பகத்திற்கு விஷயம் தெரிந்துவிட்டது என்பதை வருணா புரிந்து கொண்டாள். தன் மீதும் தவறு இருக்கிறது என்று வருணா செண்பகத்தை சமாதானப்படுத்த நினைக்கும் போதே,

“அவன் பொண்ணுக் கேட்ட முறையே சரியில்ல, அப்பவே உங்க அண்ணன் இப்படி பேசறவனுக்கு நம்ம பொண்ணை எப்படி கொடுக்கறதுன்னு கேட்டப்போ, நான் தான் சமாதானப்படுத்தி தப்பு பண்ணிட்டேன்” என்று புலம்பியதைக் கேட்டவள், ஏதோ விஷயம் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டாள்.

“அப்படி என்ன சொல்லி பொண்ணு கேட்டாரு அண்ணி,” என்று கேட்டதும் தான், கோபத்தில் உளறிவிட்டதை நினைத்து செண்பகம் சமாளிக்க பார்த்தாலும், அவளிடம் விடாப்பிடியாக கேட்டு வருணா விஷயத்தை தெரிந்து கொண்டாள்.

“அது ஏதோ புத்தியில்லாம கேட்டுட்டான். அதை மனசுல வச்சிக்காத, இப்படி நடந்துக்கிட்டதுக்கு ஆதவன் கிட்ட நான் வந்து பேசறேன். நீ வேணா ஒரு ரெண்டு நாள் வீட்டுக்கு வாயேன்.” என்று அழைத்தப் போது வருணா வர மறுத்துவிட்டாள். சரி அவர்களுக்குள் சரியாகிவிடுவார்கள் என்று நினைத்து செண்பகமும் கிளம்பிவிட்டாள்.

குற்ற உணர்ச்சியில் விலகி போன போதும் நெருங்கி நெருங்கி வந்து அவனை மாற்றியவளும் அவளே, இப்போது தன்னை மீறி அவளை அறையும் நிலைக்கு கொண்டு வந்தவளும் அவளே, என்றப்படி வேலை செய்ய கூட தோன்றாமல் ஆதவன் வொர்க்‌ஷாப்பில் அமர்ந்திருந்த போது, செண்பகத்திடமிருந்து அலைபேசியில் அழைப்பு வந்தது. அவன் சாதாரணமாக நினைத்து அந்த அழைப்பை ஏற்க, அவளோ எடுத்ததும் முதலில் அவன் வருணாவை அடித்த விஷயத்தை கூறி பேசியவள், பின்பு தான் உளறிய விஷயத்தையும் கூறி மன்னிப்பு கேட்டாள். 

வருணாவிற்கு விஷயம் தெரிந்ததை நினைத்து பதறியவன், உடனே வீட்டுக்கு கிளம்பி சென்றான். வருணாவை சமாதானப்படுத்த நினைத்து பேசத் தொடங்கிய போது, அவனை பேச வேண்டாம் என்பது போல் கை அசைவில் சொன்னவள், 

“எங்க அண்ணனுக்கு பணம் கடனா கொடுக்கணும்னா, என்னை கல்யாணம் செஞ்சுக் கொடுக்கணும்னு பேரம் பேசினிங்களா?” என்று கேட்ட போது,

“அது வந்து வருணா,” என்று அவன் தடுமாறினான்.

“உண்மையா? இல்லையா?” என்று பதில் தெரிந்தாக வேண்டும் என்பது போல் அவள் கோபமாக கேட்க,

“ஆமாம் வருணா,” என்று அவன் ஒத்துக் கொண்ட நொடி, அவள் பையை தூக்கிக் கொண்டு பிறந்த வீட்டிற்கு செல்ல தயாரானாள். 

“எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்” என்று அவன் சொல்ல சொல்ல கேட்காமல், அவள் கிளம்பி சென்றிருந்தாள்.

சாரல் வீசும்…