IP 7

Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

சாரல் 7

முக மலர்ச்சியோடு வருணா விளக்கேற்ற, அருகில் இருந்த ஆதவனின் கண்கள் அவளை விட்டு அகலவேயில்லை. இன்று அவர்கள் அழகு நிலையத்தின் திறப்பு விழா. செண்பகம், விக்னேஷ், செண்பகத்தின் பெற்றோர், கோமளா குடும்பம், முருகன், சுகுமார் அனைவருமே வந்திருந்தனர். 

இருவரின் முக மலர்ச்சியை பார்த்து, விக்னேஷிற்கும் செண்பகத்திற்கும் மனது நிறைந்திருந்தது. வருணாவிற்கு இப்படி ஒரு ஆசை இருக்கிறது என்று தெரிந்தும், அதை அப்போதைக்கு நிறைவேற்ற முடியாத நிலையில் தான் விக்னேஷ் இருந்தான்.  மனசுக்குள் அது ஒரு குறையாக தான் அவனுக்கு இருந்தது. செண்பகம் கூட அதைப்பற்றி அவனிடம் சொல்லியிருக்கிறாள். ஆனால் இப்போதைக்கு அதற்கு நிறைய பணம் தேவைப்படும். பிறகு பார்க்கலாம் என்று சொல்லியிருந்தான்.

ஆனால் மனதிலோ, அவளுக்கு நல்ல வரன் வந்தால் திருமணத்தை முடித்து வைப்போம், அதற்கே நிறைய செலவாகும், வேண்டுமென்றால் வரப்போகும் கணவன் அவளது ஆசையை நிறைவேற்றட்டும் என்று நினைத்து அமைதியாகிவிட்டான். இருந்தும் அது சாத்தியமா? என்று மனதில் கேள்வி இருந்தது. ஆனால் ஆதவன் அதை வருணாவிற்காக நிறைவேற்றிக் கொடுத்ததில் மிகவுமே மகிழ்ந்து போனான்.

சாதாரண பேச்சுவாக்கில் தான் செண்பகம் ஆதவனிடம் வருணாவின் ஆசையை பற்றி சொல்லியிருந்தாள். இருந்தும் அதை அவன் செயல்படுத்திக் காட்டுவான் என்று அவளுமே எதிர்பார்க்கவில்லை. வருணா முகமலர்ச்சியோடு விழாவில் சுற்றிக் கொண்டிருப்பதும், ஆதவனின் ரசனையான பார்வை அவளை பின் தொடருவதையும் பார்த்தவளுக்கு, இவர்கள் இருவரும் நல்லப்படியாக வாழ்கிறார்களா? என்று மனதில் முன்பு தோன்றியிருந்த கேள்விக்கு இப்போது நல்ல பதிலாகவே கிடைத்தது. வருணாவிடம் அதைப்பற்றி பேச வேண்டும் என்று அவள் முன்பு நினைத்திருந்தாள். ஆனால் அந்த சந்தேகத்திற்கு இப்போது அவசியமில்லை என்றே அவளுக்கு தோன்றியது.

கோமளாவின் இரு பெண் பிள்ளைகளுக்கும் அழகாக முடிவெட்டி முதல் பணியை வருணா தொடங்கினாள். பின் செண்பகத்தின் தங்கைக்கு ஃபேஷியல் செய்தாள். வருணாவிற்கு துணையாக வேலை செய்ய இன்னொரு பெண்ணையும் வேலைக்கு சேர்த்திருந்தனர். இப்போது அதற்கு அவசியமில்லை, வேண்டுமென்றால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று வருணா சொல்லியும் ஆதவன் கேட்கவில்லை. அவளுக்கு துணையாக வேலை செய்ய இப்போது ஒரு ஆள் கண்டிப்பாக வேண்டுமென்று ஆதவன் சொல்லிவிட்டான். அந்த பெண்ணுக்கான சம்பள பணத்தையும் அவனே தருவதாக கூறிவிட்டான். என்னத்தான் அக்கம்பக்கத்தில் கடைகள் இருந்தாலும், பார்லரின் உள்ளே அவள் தனியாக இருக்க வேண்டாம் என்று நினைத்து தான் அவன் இப்படி ஒரு ஏற்பாடு செய்திருந்தான்.  இதெல்லாம் அவசியமில்லை என்று வருணா நினைத்தாலும் அவனுடன் வாக்குவாதம் செய்ய விரும்பாமல் இதற்கு ஒத்துக் கொண்டாள்.

அழகு நிலையம் திறந்ததிலிருந்து அவர்கள் வாழ்க்கை முறை வேறு மாதிரி ஆரம்பித்திருந்தது. காலையிலேயே விரைவாக வேலையை முடிப்பவள், காலை உணவோடு மதியத்திற்கும் சேர்த்து சமைத்து இருவருக்கும் எடுத்துக் கொண்டு அவனுடன் பைக்கில் கிளம்பிவிடுவாள். அவளை அழகு நிலையத்தில் விட்டுவிட்டு அவன் வொர்க்‌ஷாப்பிற்கு செல்வான். மதியம் வரை அங்கே இருப்பவள், பின் உடன் பணிபுரியும் பெண்ணிடம் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு வொர்க்‌ஷாப்பிற்கு வருபவள், அங்கே ஆதவனோடு சேர்ந்து சாப்பிட்டுவிட்டு, சிறிதுநேரம் அங்கே இருந்துவிட்டு பின் அழகுநிலையம் செல்வாள்.

இப்போது வருணாவும் ஆதவனும் கொஞ்சம் பேசி பழக ஆரம்பித்திருக்கின்றனர். அதுவும் வருணாவே தான் அவனுடன் பேசி, கொஞ்சமாக அவனையும் பேச வைத்திருக்கிறாள் என்று சொல்லலாம்,  ஆனால் இரவில் அவனின் கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது. ஆதவனை விட வொர்க்‌ஷாப்பில் வேலை செய்யும் முருகன், சுகுமாரோடு வருணா இன்னும் நன்றாக பழக ஆரம்பித்துவிட்டாள். 

அழகுநிலையத்திற்கு அதிகமாக வாடிக்கையாளர்கள் வருவதில்லை. இப்போது தானே ஆரம்பித்திருக்கிறார்கள். மற்ற பார்லரை விட கொஞ்சம் குறைவான கட்டணத்தில் ஃபேஷியலெல்லாம் செய்வதாக ஒரு நோட்டீஸ் அடித்து அருகில் உள்ள வீடுகள் இருக்கும் பக்கம் முருகன், சுகுமாரிடம் கொடுத்து வினியோகிக்க சொன்னதால், புருவம் முடி திருத்தம் செய்ய, குறைவான கட்டணத்தில் உள்ள பேஷியல் செய்ய என்று ஒரு நாளைக்கு ஒரு நான்கைந்து வாடிக்கையாளர்கள் தான் வருவர். மற்ற நேரங்களில் வேலையில்லாமல் உட்கார்ந்திருக்க தான் வேண்டும்.

அதுவும் மதிய நேரங்களில் ஆட்கள் வருவது மிகவும் குறைவு தான், அதனால் அந்த நேரங்களில் வொர்க்‌ஷாப்பில் நேரத்தை செலவிடுபவள், சுகுமார், முருகனை நச்சரித்து அவர்களிடம் இருந்து சில வேலைகளை வாங்கி அவளே செய்வாள். 

“ட்ரஸ் அழுக்காயிடும் அண்ணி, அதெல்லாம் வேண்டாம் என்று அவர்கள் சொன்னாலும் அதை காதில் வாங்கிக் கொள்ள மாட்டாள். 

“நீங்க கொஞ்சம் சொல்லுங்க அண்ணா,” என்று இருவரும் ஆதவனிடம் முறையிட,

“உனக்கெதுக்கு இந்த வேலை வருணா,” என்று கேட்டாலும், அவன் பேச்சை காதில் வாங்காமல் அவள் அந்த வேலைகளை செய்வதை ரசித்தப்படி பார்த்திருப்பான்.

“ம்ம் இதெல்லாம் வேலைக்கு ஆகாது. ரொம்ப முத்திடுச்சு அண்ணனுக்கு,” என்று மற்ற இருவரும் விட்டுவிடுவர்.

ன்றும் அப்படித்தான், காரில் வெல்டிங் வேலை நடந்து கொண்டிருந்தது. சுகுமார், முருகனிடம் சண்டைப் பிடித்து தானே செய்வதாக சொல்லி அவர்களிடம் பிடுங்காத குறையாக வாங்கி வெல்டிங் பத்த வைத்துக் கொண்டிருந்தாள். அவர்கள் இருவரும் அவளோடு மல்லுக் கட்டிக் கொண்டிருக்க, அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆதவனோ, பின் அவன் வேலையில் கவனம் வைக்க ஆரம்பித்துவிட்டான்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

அன்று இரவு சாப்பிட்டு முடித்ததும் உறங்குவதற்காக  அறைக்கு வந்தவன், சிறிது நேரம் படுத்தப்படியே விழித்திருந்து வருணாவை பற்றி சிந்தித்தப்படி இருந்தவனுக்கு கொஞ்சம் தாமதமாக தான் உறக்கம் வந்தது. சிறிது நேரத்தில் அவன் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல, “ஆ எரியுது,” என்ற வருணாவின் அலறலில் என்னவோ  ஏதோ என்று பதட்டத்தோடு எழுந்து வந்தான்.

அங்கே பார்த்தால் வருணா கண்களை கசக்கியப்படி அமர்ந்திருந்தாள். 

“என்னாச்சு வருணா, கண்ல ஏதாச்சும் விழுந்துடுச்சா?”

“இல்ல கண்ணு எரியுது?  என்று கண்களை காட்ட, இரண்டு கண்களும் சிவந்திருந்தது.

“ஏன் இப்படி சிவந்திருக்கு? தூசி ஏதாச்சும் பட்டுச்சா?”

“தூசி பட்டா ஒரு கண்ல தானே படும். ரெண்டு கண்ணுமே எரியுது? படுக்கும் போது நல்லா தான் இருந்துச்சு, இப்போ திடீர்னு எரியுது, “ என்றவள், “ஆ ரொம்ப எரியுது, கண்ணை திறந்தும் வைக்க முடியல, மூடியும் வைக்க முடியல,” என்று கத்தினாள்.

“என்ன காரணம்? பார்லர்ல யாருக்காவது மேக்கப் செய்யும்போது பவுடர், கிரீம் ஏதாவது கண்ணுல பட்டுச்சா?”

“நான் வச்சிருக்கறது நேச்சுரல் ப்ராடக்ட்ஸ், அதனால எந்த சைட் எஃபெக்ட்ஸும் வராது. அப்படியேன்னாலும் கஸ்டமருக்கு தான் ஏதாவது ஆகணும், எனக்கெப்படி ஆகும்?” என்று சிணுங்கியப்படியே அவள் சொல்ல, அவனுக்கு சிரிப்பு வந்தது.

“அய்யோ எரியுது, என்னால முடியல,” என்று திரும்ப அவள் கண்களை கசக்க,

“ஹே ரொம்ப கசக்காத, ஏற்கனவே ரொம்ப சிவந்து போயிருக்கு இன்னும் கசக்காத” என்றவன், என்னவாக இருக்கும் என்று சிந்தித்த போது, திடீரென ஏதோ ஞாபகம் வந்து,

“ஆமாம் இன்னிக்கு வெல்டிங் பத்த வச்சல்ல, கண்ணாடியை பார்த்து தானே பண்ண?” என்று கேட்டான்.

“இல்ல, சுகுமாரும் முருகனும் கண்ணாடி பார்த்து தான் செய்ய சொன்னாங்க, ஆனா அதுல பார்த்தா எனக்கு சரியா தெரியல, அதான் அப்படியே பார்த்து பண்ணேன்,” என்று சொல்லி முடிப்பதற்குள், 

“அறிவு இருக்கா, உன்னை யாரு இதெல்லாம் செய்ய சொன்னது, அப்படியே செஞ்சாலும் அவனுங்க சொல்ற மாதிரி செய்ய வேண்டியது தானே, நீ பண்ணது ஆர்க் வெல்டிங், அது நேரா பார்த்து செஞ்சா கண்ணுக்கு ஒத்துக்காது, பொதுவா கேஸ் வெல்டிங் தான் நாங்க செய்வோம், தேவைன்னா ஆர்க் வெல்டிங் செய்வோம், இன்னிக்கு பார்த்தா ஆர்க் வெல்டிங் செய்யணும்” என்று நொந்து கொண்டவன், அவள் இன்னும் கண்ணை கசக்கி கொண்டிருப்பதை பார்த்து,

“நான் வேலை கத்துக்கும்போதும் ஒருநாள் எனக்கு இப்படித்தான் ஆச்சு, ஆயா என் கண்ணுல பச்சை வாழைப்பழம் கட்டி விட்டுது, இரு நான் போய் வாங்கிட்டு வரேன்.” என்றவன், சட்டை மாட்டிக் கொண்டு வெளியே சென்றான்.

வாங்கி வந்த பச்சை பழத்தை துண்டாக்கி இரு கண்ணிலும் வைத்து கண்ணை கட்டியவன், “கொஞ்சம் நேரம் அப்படியே படு, கொஞ்ச நேரத்துல எரிச்சல் போய்டும்” என்று அவன் சொன்னதும், தலையை ஆட்டியவள், படுத்துக் கொண்டாள். அமைதியாக அவள் படுத்ததும், அவனும் அறைக்குள் சென்று படுத்துக் கொள்ள, ஒரு பத்து நிமிடம் தான் சென்றிருக்கும், “அய்யோ என்னால முடியல,” என்று எழுந்து திரும்ப கத்தினாள்.

அவள் கத்திய கத்தலில் பதட்டத்தோடு எழுந்து வந்தவன், “இப்போ என்ன?” என்றான்.

“எனக்கு கண்ணெரிச்சல் இன்னும் போகல, மூடிக்கிட்டு இருந்தா ரொம்ப எரியுது,” என்றவள், கண்கட்டை அவிழ்த்தாள். இருந்தும் கண்ணெரிச்சல் போகாததால், “ஆ ஆ” என்று கத்தினாள்.

“ஹேய் கத்தாதடி, அக்கம் பக்கத்துல்ல இருக்கவங்க என்ன நினைப்பாங்க,” என்று அவன் கொஞ்சம் அதட்டலோடு சொல்லியப்படி கட்டிலில் அமர்ந்தான்.

“என்னது டி யா,” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள், “ரொம்ப எரியுது நான் என்ன பண்றது, ஆ ஆ இது எப்போ சரியாகும்?” என்று கேட்டு முடிப்பதற்குள், வேகமாக அவளை நெருங்கியவன், அவள் இதழை அவன் இதழ்  கொண்டு மூடினான்.

அவனின் இந்த செயலை எதிர்பார்க்காதவள், விழிகளில் தோன்றிய எரிச்சலையும் மீறி விழி விரிக்க, அவனோ அவளை திசை திருப்பவே இப்படி ஒரு காரியத்தை செய்தவன் பின் பிரிக்க மனமில்லாமல் அவள் இதழ் தேனை சுவைத்துக் கொண்டிருந்தான். அதில் மதி மயங்கி அவள் தன் விழிகளை மூடிக் கொள்ள, மனமில்லாமல் தன் உதடுகளை பிரித்தெடுத்தவன், மூடிய அவள் விழி இரண்டிலும் தன் முத்திரையை பதித்தான். அந்த மோன நிலையிலிருந்து கலைய விரும்பாமல் இன்னும் அவள் மயக்கத்தில் விழிகளை மூடியபடியே இருக்க, அவனுக்குமே அவளை விட்டு விலக மனமில்லாமல் அவளோடு ஒன்றியவன், அவளின் கண் எரிச்சலை தன் முத்தங்களால் மறக்கடித்துக் கொண்டிருந்தான்.

ந்த இரவுக்கு பின், ஆதவன் அவள் முகம் பார்ப்பதை கூட தவிர்த்தான். அவளை அருகில் வைத்துக் கொண்டு அவளை விட்டு விலகியிருப்பது மிகவுமே கஷ்டமாக இருந்தாலும், அவளிடம் அவன் பெண் கேட்ட முறையை பற்றிய உண்மையை சொல்லிவிட்டு, அதன்பின் அவள் நடவடிக்கை எப்படி இருக்கும் என்று தெரிந்து கொண்ட பின்னரே அவளை நெருங்க வேண்டுமென்று நினைத்திருந்தான். ஆனாலும் அந்த விஷயம் தெரிந்த பின் கோபத்தில் அவனை விட்டு அவள் விலகிவிட்டால் என்ன செய்வது என்ற பயத்திலேயே விஷயத்தை சொல்லாமல் இருந்தான். அதை சொல்லாமலும் அவளை நெருங்க அவனுக்கு மனம் வரவில்லை.

இப்படியிருக்க அந்த இரவு அவள் அருகாமையில் இருந்தவன் அவள் பால் கொண்ட ஈர்ப்பால் தன் வசம் இழக்க, அவளின் கண் எரிச்சலை மறக்கடிக்கிறேன் என்று கணவனாக அவன் உரிமையை எடுத்துக் கொண்டான்.

மனைவி என்ற முறையில் தான் அவளும் அவனுக்கு அவளை ஒப்புவித்தாள். இருந்தும் அவனுக்கு இருந்த குற்ற உணர்ச்சியில் இப்போது அவள் முகம் பார்ப்பதை தவிர்த்து தன் கண்ணாமூச்சி ஆட்டத்தை தொடர்ந்தான்.

அவனின் மனப்போராட்டம் தெரியாதவளோ, “என்னத்தான் அவனுக்கு பிரச்சனை? கணவன் என்ற முறையில் தானே அன்று அப்படி நடந்து கொண்டான். ஆனாலும் ஏதோ தவறு செய்துவிட்டது போல் இருக்கிறதே அவனின் இப்போதைய நடவடிக்கை என்று நினைத்தவள், அவனை இப்படியே விட்டு வைத்தால் வேலைக்கு ஆகாது.  இனி அவள் தான் ஏதாவது செய்து அவனை வழிக்கு கொண்டு வர வேண்டும் என்று மனதில் தீர்மானித்தாள்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

சாரல் வீசும்…