IP 6
Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

சாரல் 6
ஐந்து நாட்களாக ஆதவன் நடந்து கொண்டதே வருணாவிற்கு கோபத்தையும் பொறாமையையும் வர வைக்க, இப்போதோ ஒரு மாத காலம் முடிந்துவிட்ட போதும் அவர்கள் இருவரின் நிலையிலும் எந்த முன்னேற்றமும் இல்லாததால், அது வருணாவின் மனதில் பல கேள்விகளை உருவாக்கியிருந்தது.
ஆதவனுக்கு என்னை பிடிக்கவில்லையா? பாட்டியின் விருப்பத்திற்காக மட்டும் தான் என்னை மணந்தானா? அதனால் தான் என்னை விட்டு தள்ளியிருக்கிறானா? ஒருவேளை அவனாக திருமணம் பற்றி பேசவில்லையோ? அண்ணனும் அண்ணியும் அவனிடம் எந்த குற்ற உணர்வும் இல்லாமல் பணம் வாங்குவதற்காக இந்த திருமணம் குறித்து அவனிடம் பேசினார்களோ? பொன்னம்மா பாட்டியின் ஆசை கூட அவர்கள் சொல்லி தான் அவனுக்கு தெரியுமோ? இப்படி பல கேள்விகள் மனதில் உதித்தாலும்,
இந்த திருமணத்தை அவன் நடத்தி முடித்த விதமும், அதன்பின்பும் அவளிடம் அவன் காட்டும் அக்கறையும் இந்த திருமணம் ஒன்றும் அவனுக்கு பிடித்தமில்லாததாகவும் தெரியவில்லை. காலையில் அவள் சொல்லாமலேயே தினம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பி விடுவதும், தேவையான பொருட்களை வாங்கி வந்து கொடுப்பதும், மதியநேரம் சரியாக சாப்பாட்டு நேரத்திற்கு வந்துவிடுவது, இரவு முன்போல் இல்லாமல் 9 மணிக்கெல்லாம் வீட்டுக்கு திரும்பிவிடுவது என்பதையெல்லாம் சரியாகவே செய்தான். திருமணம் முடிந்தாகிவிட்டது அதன்பிறகு என்ன? என்று அவனது விருப்பம் போல் நடந்து கொள்ளாமல், அவளுக்காக எல்லாம் பார்த்து பார்த்து செய்தான். அளவாக பேசினாலும், அதில் அவள் மேல் அவனுக்கு இருக்கும் அக்கறையை அவளால் புரிந்து கொள்ள முடியும்,
ஆனால் அதை தாண்டி கணவன் மனைவிக்குள்ளான நெருக்கம் இருவருக்குமிடையில் இல்லை. இரவு தொலைக்காட்சியை வெறித்து பார்த்தப்படி உணவு உட்கொள்வதும் பின் தரையில் உட்கார்ந்தப்படியே சிறிதுநேரம் சானலை மாற்றி மாற்றி ஏதாவது தொலைக்காட்சியில் பார்ப்பவன் பின் அந்த சிறிய அறைக்குள் போய் படுத்துக் கொள்வான். அந்த கட்டிலின் மீது அமரக் கூட மாட்டான். அவளும் இரவு உணவு முடிந்ததும் சிறு சிறு வேலைகளை முடிப்பவள், பின் அலைபேசியை சிறிது நேரம் குடைந்துவிட்டு உறங்கிடுவாள். மொத்தத்தில் இரண்டு பேர் பொதுவாக ஒரு வீட்டை உபயோகப்படுத்துவது போல் தான் அங்கே நிலைமை இருந்தது.
நேரடியாக ஆதவனிடம் கேட்கவும் வருணாவிற்கு தயக்கமாக இருந்தது. பேசாமல் செண்பகத்திடம் இது குறித்து சொல்லலாமா? என்று யோசிப்பாள். ஆனால் செண்பகம் எதுவாக இருந்தாலும் விக்னேஷிடம் சொல்லிவிடுவாள். அதனால் இப்போதைக்கு எதுவும் செண்பகத்திடமும் பேச வேண்டாம் என்று அவள் முடிவெடுத்துக் கொண்டாள்.
இந்த வீட்டில் வருணா அவளை பொருத்திக் கொண்டாளா? என்று விக்னேஷிற்கு எப்போதும் கவலை உண்டு. அதுப்பற்றி செண்பகம் வருணாவிடம் அடிக்கடி விசாரிப்பாள். “பொன்னம்மா ஆயா ஆத்மா இங்க இருக்குன்னு தான், ஆதவன் இந்த வீட்டிலேயே இருக்கப் போறோம்னு பிடிவாதமா சொன்னான். நீங்க சந்தோஷமா வாழறதை அவங்க பார்க்கணுமாம், உனக்கு அங்க இருக்க சிரமம் ஒன்னுமில்லையே” என்று கேட்டப்போது,
“அடப்பாவி, நாம இப்படி ஒரு வாழ்க்கையை வாழறதை பார்த்து பொன்னம்மா பாட்டி ஆத்மா வேற சாந்தி அடையணுமா? எப்படிடா கல்யாணத்துக்கு முன்னாடி அப்படி ஒரு டயலாக் விட்டுட்டு அப்புறம் இப்படி நடந்துக்க முடியுது?” என்று மனதில் கேட்டுக் கொள்வாள்.
“ஒருவேளை அவனுக்கு உடல்ரீதியாக ஏதாவது பிரச்சனையோ? இல்லை பாட்டி இறந்ததுக்கு அவள் சகோதரன் காரணம் என்று அவளை திருமணம் செய்து பழி வாங்கப் பார்க்கிறானா?” இப்படியெல்லாம் கூட விபரீதமான எண்ணங்கள் அவளுக்கு தோன்றியதுண்டு.
மற்றப்படி இந்த வீட்டில் இருப்பதில் அவளுக்கு எந்த பிரச்சனையும் இருந்ததில்லை, காலையில் ஆதவன் கிளம்பி சென்றதும், வீட்டில் இருக்கும் வேலைகளை முடித்துவிட்டு மதிய சமையல் செய்துவிட்டு ஆதவனுக்காக காத்திருப்பாள். பின் அவன் வந்துவிட்டு போனதும், சிறிது நேரம் ஓய்வெடுப்பவள், பின் கோமளாவின் இரு பெண் பிள்ளைகள், ஒன்று மூன்றாம் வகுப்பு, இன்னொன்று ஒன்றாம் வகுப்பு, இருவரையும் வீட்டிற்கு கூட்டி வந்து அவர்களுக்கு பாடம் சொல்லி கொடுப்பது, அவர்களோடு சேர்ந்து நடனம் ஆடுவது என்று சிறிது நேரத்தை செலவழிப்பாள். அவர்கள் சென்றதும் தனியாக சிறிதுநேரம் நடனமாடுபவள், பின் இரவு உணவு செய்யும் வேலையில் இறங்கிவிடுவாள்.
வீட்டை விட்டு வெளியில் போகும் வேலையே அவ்வளவாக அவளுக்கு இல்லை. ஆதவனே எது வேண்டுமோ அதை வாங்கி கொடுத்து விடுகிறானே, இல்லை கோமளா உதவி செய்வாள். இருந்தும் ஏதாவது சமையலுக்கு தேவைப்படும் சிறு பொருட்கள் வேண்டுமானால் கோமளாவை எதிர்பார்க்காமல் அவளே சென்று வாங்கி வருவாள். தெருமுனையில் சில வாலிபர்கள் போக வர இருக்கும் பெண்களை பார்வையால் துளைப்பதும், சில பேரை மறைமுகமான வார்த்தைகளால் கேலி செய்வதுமாக இருப்பார்கள். அதற்கு தான் ஆதவன் அவளை வெளியே அனுப்புவதில்லை போலும், பெண்களை வீட்டுக்குள்ளேயே பூட்டி வைக்க நினைப்பவனா? என்று கூட அவள் சிலசமயம் கோபப்படுவாள். ஆனால் அவளது சகோதரனும் முன்பெல்லாம் செண்பகத்தை இங்கு அடிக்கடி வரவிடுவதில்லை தானே, அது பாதுகாப்புக்காக என்பது அவளுக்கு புரிந்தது. பின் ஆதவனுக்கும் அப்படி ஒரு எண்ணம் இருக்கும் என்று நினைத்துக் கொண்டாள்.
அதேபோல் தண்ணீர் குழாயில் தண்ணீர் பிடிப்பதற்கும் கூட அவளுக்கு கொஞ்சம் பயம் தான், இவர்கள் கட்டிடத்திற்கு கொஞ்சம் தள்ளி தான் தெருக்குழாய் உள்ளது. அதில் தினசரி சண்டை இல்லாமல் அமைதியாக தண்ணீர் பிடிப்பதே அரிது தான், ஏதாவது இரு பெண்களிடையே சண்டை வந்துவிடும், சில சமயம் அவர்களுக்கு துணையாக அவர்களின் கணவன்மார்களும் கூட சண்டைக்கு வந்துவிடுவர். அதுவும் அசிங்கமான வார்த்தைகளால் இருவரும் சண்டையிட்டு கொள்வார்கள். அவளே சிலசமயங்களில் அந்த சண்டைகளை நின்று வேடிக்கை கூட பார்த்திருக்கிறாள்.
அந்த குழாயடியில் ஆதவன் எப்படி தான் நின்று தண்ணீர் பிடிக்கின்றானோ? என்று நினைத்துக் கொள்வாள். சில சமயங்களில் காலையில் குழாயில் தண்ணீர் வராது. அதனால் ஆதவன் கிளம்பிவிடுவான். ஒருநாள் தண்ணீர் வரவில்லையென்றாலும் அனைவருக்கும் கஷ்டமாகிவிடும், அதனால் உடனே லாரி தண்ணீர் வரவைத்து விடுவர். அந்த மாதிரி நேரங்களில் கோமளா தான் வருணாவிற்கு உதவுவாள். ஆனால் ஒருநாள் கோமளா கூட அன்று வீட்டில் இல்லை. அந்தநேரம் தண்ணீர் பிடிக்க அவள் தான் செல்ல வேண்டியிருந்தது.
லாரியின் அருகே போனவள் மிரண்டுவிட்டாள். அனைவரும் கும்பலாக நின்று சண்டை போட்டப்படி பிடித்தனர். அங்கே அருகில் செல்ல அவள் பயந்து நின்றபோது, “இப்படி நின்னுக்கிட்டு இருந்தா அப்புறம் தண்ணி கிடைக்காதும்மா,” என்று சொல்லி பக்கத்து கட்டிடத்தில் உள்ள ஒரு பெண்மணி அவளுக்கு உதவி செய்தார். இப்படி சில அனுபவங்களை பார்த்து இந்த ஒருமாத காலத்தில் அவளுக்கு இந்த இடமும் ஓரளவுக்கு பழகிவிட்டது.
வாரத்திற்கு ஒருமுறை அண்ணன் அண்ணியையும் சென்று பார்த்துவிட்டு வருவாள். மதியம் ஆதவன் வந்து போனதும் அவனிடம் அனுமதி கேட்டுக் கொண்டு தன் சகோதரன் வீட்டுக்கு கிளம்புபவள், ஆதவன் இரவு வீட்டுக்குள் திரும்புவதற்குள் திரும்பிவிடுவாள். “ஆதவனை இங்கே வரச்சொல்லி ரெண்டுபேரும் இங்க சாப்பிட்டு, அப்புறம் ஆதவன் கூடயே போயேன் வருணா,” என்று செண்பகம் சொன்னாலும்,
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“வொர்க்ஷாப்ல இருந்து வீடு கிட்ட அண்ணி, இங்க வந்துட்டு போகணும்னா ரொம்ப லேட்டாகும், நான் அங்கப் போய் பார்த்துக்கிறேன்.” என்று சொல்லி விக்னேஷோடு கிளம்பிவிடுவாள். இருவரும் நடந்து கொள்வதை பார்த்து அண்ணனுக்கும் அண்ணிக்கும் ஏதாவது சந்தேகம் வந்துவிடுமோ என்ற பயம் தான் காரணம். இருந்தும் செண்பகத்திற்கும் சிறிதளவில் அவர்களை குறித்து சந்தேகமும் எழுந்தது.
அன்று மதிய சாப்பாட்டிற்காக வீட்டுக்கு வந்த ஆதவன், சாப்பிட்டு முடித்ததும், “வருணா, நாம ஒரு இடத்துக்கு போகணும், சீக்கிரம் கிளம்பி வா,” என்றான்.
“எங்கே?” என்று அவள் திருப்பிக் கேட்டதற்கு, “அங்கப் போனா தெரியப் போகுது. சீக்கிரம் கிளம்பு,” என்று கட்டளையிட்டது போல் கூறியவன், வேலைக்கு செல்லும்போது போடும் அந்த அழுக்கு உடுப்பு இல்லாமல், ஒரு நல்ல பேன்ட் சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டான். அவளும் வீட்டிலிருக்கும் போது போடக் கூடிய சுடிதார் என்பதால், அதை களைந்து ஒரு நல்ல சுடிதாருக்கு மாறினாள். இருவரும் வீட்டுக்கு வெளியே வந்து ஆதவனின் வண்டியில் ஜோடியாக போகும்போது அதை சிலர் வேடிக்கைப் பார்த்தப்படி நின்றனர்.
“நான் இங்க வந்து ஒரு மாசம் ஆகுது. இன்னும் இந்த வேடிக்கை பார்ப்பதை இவர்கள் விடலையே,” என்று அவள் ஆச்சர்யப்பட்டுக் கொண்டாள்.
ஆதவனின் வண்டி ஒரு பெரிய வீட்டின் முன்னே நின்றது. தரைதளத்தில் இரண்டு கடைகள் ஷட்டர் போட்டு மூடியிருக்க, மேல் இரண்டு தளங்களிலும் வீடு இருந்தது. “ஒருவேளை வாடகைக்கு வீடு பார்த்திருக்கிறானோ,” என்று நினைத்தப்படியே வண்டியில் இருந்து இறங்கினாள்.

“வருணா, இந்த ரெண்டு கடையும் வாடகைக்கு விட கட்டியிருக்காங்க, ஒன்னுல ஏற்கனவே ஒரு பார்மஸி வைக்க வாடகைக்கு விட்டாச்சு, இந்த கடை மட்டும் தான் இப்போதைக்கு காலி, இது மெயின் ஏரியா, இங்க உனக்கு ப்யூட்டி பார்லர் வச்சா நல்லா போகும், அதுக்கு இந்த இடம் செட்டாகுமா பாரு, பிடிக்கலன்னா வேற இடம் பார்த்துக்கலாம்,” என்று அவன் பாட்டுக்கு பேசிக் கொண்டே போக, அவளோ ஆச்சர்யத்தில் உறைந்து போனாள்.
அவன் கேட்டதற்கு அவள் பதில் கூறாமல் இருந்ததை பார்த்து, “வருணா என்ன இந்த இடம் ஓகேவா பார்க்கலாமா?” என்று இன்னொரு முறை கேட்டான்.
“நிஜமாவா சொல்றீங்க? நான் சொந்தமா ப்யூட்டி பார்லர் வைக்கப் போறேனா?” இன்னும் நம்ப முடியாமல் கேட்டாள்.
“ஆமாம் உனக்கு சொந்தமா ப்யூட்டி பார்லர் வைக்கணும்னு ஆசையாமே, அக்கா சொல்லியிருக்கு, வீட்லயே இருந்தா போர் அடிக்குமில்ல, அதான் பார்லர் வைக்க நல்ல இடமா இத்தனை நாள் தேடிக்கிட்டு இருந்தேன். இங்க மூனு பில்டிங் தாண்டி தான் என்னோட வொர்க்ஷாப் இருக்கு, அதனால இந்த இடம் வசதியா இருக்கும்னு தோனுச்சு, நீ பார்த்து சொல்லு,” என்றான்.
“என்னோட ஆசையெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்க, ஆனா என்கிட்ட ரொம்ப பேச ஐயாக்கு கசக்குதோ,” என்று நினைத்தவள், அவனோடு சென்று அந்த இடத்தை பார்வையிட்டாள். மொத்தமாக நீளமான ஒரே ஒரு அறைதான், அதை பார்லர் வைப்பதற்கு ஏற்றது போல் இரு அறைகளாக மாற்ற வேண்டும், ஆதவன் சொல்வது போல் இது முக்கியமான இடம், இங்கு வைத்தால் கண்டிப்பாக பார்லர் விரைவில் கொஞ்சம் பிரபலமாகலாம்,” மனதிற்குள் முடிவெடுத்தவள்,
“இடம் ஓகே தான், பார்லர்க்கு ஏத்த அரேஞ்மெண்ட்ஸ் பண்ணணும், அப்புறம் உள்ள தண்ணி டேப் கனெக்ஷன், வாஷ் பேஸன் இதெல்லாம் இருக்கணும், அதெல்லாம் ஓகேன்னா இந்த இடத்தையே ஓகே பண்ணிடலாம்,”
“நான் ஏற்கனவே அவங்கக்கிட்ட பார்லர் வைக்க தான் இடம் வேணும்னு கேட்டேன். அவங்க அதனால உள்ள டேப் கனெக்ஷன் வச்சு கொடுத்துடுவாங்க, மத்த ஏற்பாடெல்லாம் நம்மளே ஆள் வச்சு செஞ்சுக்கலாம், உனக்கு ஓகேன்னா இப்பவே அட்வான்ஸ் கொடுத்துடுவோம், ஏன்னா நிறைய பேர் கேட்கறாங்களாம், அதனால அட்வான்ஸ் கொடுத்துட்றது தான் நல்லது,”
“ எனக்கு இந்த இடம் ஓகே தான், வாடகையெல்லாம் கரெக்டா பேசிட்டீங்கன்னா, அட்வான்ஸ் கொடுத்துடலாம்.”
“நான் முன்னயே எல்லாம் பேசிட்டேன். உனக்கு இடம் பிடிச்சிருந்தா அட்வான்ஸ் கொடுக்கறதா நேத்தே சொல்லிட்டு வந்துட்டேன். அதனால பிரச்சனையில்லை,” என்று, அந்த இடத்துக்குரியவர்களை பார்த்து அவர்களுக்கு முன்பணம் கொடுத்தனர்.
“பக்கத்துல தான் நம்ம வொர்க்ஷாப் இருக்கு, பசங்கக்கிட்ட வேலையை ஒப்படைச்சிட்டு வந்துருக்கேன். அவனுங்களும் உன்னைப் பார்க்கணும்னு சொல்றானுங்க, ஒருபார்வை பார்த்துட்டு போலாமா?” அவளிடம் அவன் அனுமதி கேட்க, அவளும் ஒத்துக் கொண்டாள். இப்படி அவனோடு பைக்கில் வலம் வருவது அவளுக்கு தான் பிடித்திருக்கிறதே,
வொர்க் ஷாப்பிற்கு போனதும், முருகனும் அவனது வயதை ஒத்த சுகுமாரும் அவர்களை வரவேற்றனர். சுகுமார் இப்போது தான் புதிதாக வேலைக்கு சேர்ந்திருந்தான். முன்பானால் ஆதவன், நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்வான். இரவு தாமதமாக கூட வீட்டிற்கு செல்வான். பொன்னம்மாவிற்கு அதுவரை தனியாக இருக்க பிரச்சனை இல்லை. ஆனால் வருணா வந்ததிலிருந்து அப்படி இல்லையே, விரைவில் வீடு திரும்ப வேண்டும், அதேநேரம் எடுத்திருக்கும் வேலைகளையும் முடித்தாக வேண்டும். அதனால் சுகுமாரையும் இப்போது ஆதவன் வேலைக்கு சேர்த்திருந்தான். வருணாவிற்கு இருவரையும் அறிமுகப்படுத்தி வைத்தான்.
“அண்ணி,” நான் உங்க கல்யாணத்துக்கு வந்தேனே, ஞாபகம் இருக்கா?” முருகன் கேட்டான்.
“முகம் ஞாபகம் இருக்கு, ஆனா பேர் தெரியல, ஆனா இவனை பார்த்த மாதிரி ஞாபகம் இல்ல,” என்று சுகுமாரை காட்டி சொன்னாள்.
“நான் இப்போ தான் அண்ணி வேலைக்கு சேர்ந்தேன்.”
“ஓ அதான் எனக்கு தெரியல,” என்றவள் இருவரிடமும் சகஜமாக பேசினாள்.
“என்ன அண்ணா இடம் ஓகே பண்ணிட்டிங்களா?”
“ம்ம் ஓகே ஆகிடுச்சு முருகா,”
“ஆமா பார்லருக்கு என்ன பேர் வைக்கப் போறீங்க?” இருவரையும் பார்த்து பொதுவாக கேட்டான் முருகன்.
“தெரியலடா, வருணா தான் முடிவு செய்யணும்,” என்று ஆதவன் வருணாவை பார்க்க, மற்ற இருவருமே அவளை தான் பார்த்தனர்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“ஆமாம் இல்லை, என்ன பேர் வைக்கலாம்,” என்று சிறிது நேரம் சிந்தித்தாள்.
“பேசாம உங்க பேர் வச்சிடுங்க அண்ணி, அண்ணா பேர்ல வொர்க் ஷாப், உங்க பேர்ல பார்லர், நல்லா இருக்குல்ல” என்று சுகுமார் சொல்லவும் அவளுக்கு பளிச்சென ஒரு யோசனை தோன்றியது.
“பார்லர்க்கெல்லாம் ஸ்டைலா பேர் வைக்கணும் சுகுமார், எனக்கு ஒரு பேர் தோனுது, ஷைன் இன் ரெய்ன் (shine n rain) ப்யூட்டி பார்லர் எப்படி இருக்கு?” என்று கேட்டவள்,
“இதுல உங்க அண்ணாவோட பேரும், என்னோட பேரும் சேர்ந்திருக்கு, சுள்ளுன்னு சுடும் சூரியன் உங்க அண்ணாவோட பேர், அழகா இதமா பெய்யும் மழையோட பேர் என்னோடது, இது ரெண்டும் சேர்த்து ஷைன் இன் ரெய்ன் நல்லா இருக்கா?” என்று விளக்கமாக சொன்னாள்.
“சூப்பர் அண்ணி, அதுவும் சுள்ளுன்னு சுடும் சூரியன் செம, கரெக்டா தான் அண்ணனுக்கு பேர் வச்சிருக்காங்கல்ல” என்று முருகன் சொன்னதும்,
“ஆமாண்டா கரெக்ட” என்று அவளும் ஹைஃபை கொடுத்தாள்.

“டேய் நான் சுள்ளுன்னு விழறேனா? சொல்வீங்கடா?” என்றவன், எப்போது உன்னிடம் அப்படி நடந்து கொண்டேன்? என்பது போல் அவளை ஒரு பார்வை பார்த்தாலும், இருவரின் பேரையும் சேர்த்து அழகு நிலையத்திற்கு வைத்ததில் அவன் என்னவாக உணர்ந்தான் என்று சொல்ல வார்த்தைகளே இல்லை.
அவன் பார்வையில் உள்ள கேள்விகளின் அர்த்தம் புரிந்தவளும், “ஆமா அப்படிக்கூட என்கிட்ட நீ பேச மாட்டேங்கிறியே?” என்பது போல் திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்து வைக்க, அதை எதிர்கொள்ள முடியாமல் அவன் தலையை தாழ்த்திக் கொண்டான்.
அதன்பிறகு முருகன், சுகுமாரோடு அவள் சகஜமாக பேசியதை ரசித்தப்படியே பார்த்திருந்தான் அவன், ஆதவனின் குணங்கள் வருணாவிற்கு எப்படி தெரியாதோ, அதேபோல் ஆதவனுக்கும் வருணாவைப் பற்றி தெரியாது. செண்பகத்தை பார்க்க வீட்டிற்கு போகும்போதெல்லாம் அவள் அறைக்குள்ளே தானே இருப்பாள். அவள் மற்றவர்களோடு எப்படி பழகுகிறாள் என்பது தான் அவனுக்கு தெரியாதே, இப்போது இந்த இருவரிடமும் பேசுவதை பார்க்கும்போது, அவளை இப்படி வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்ததில் அவனுக்கு குற்ற உணர்வு அதிகமானது.
அதிகமானது என்றால்? ஆம் ஆரம்பத்திலிருந்தே அவனுக்கு குற்ற உணர்வு தான், தன் ஆயாவின் ஆசையை நிறைவேற்ற அவன் இந்த திட்டத்தை செயல்படுத்தியது அவனுக்கே பிடிக்கவில்லை. அவர்களது நிலையை அவன் பயன்படுத்திக் கொண்டது அப்போதே அவனுக்கு ஒரு மாதிரி இருந்தது. இருந்தும் ஆயாவுக்கு என்று மனதில் முடிவெடுத்துக் கொண்டே விக்னேஷிடம் அப்படி பேசினான்.
விக்னேஷ் கோபமாய் பேசியதுமே, இந்த திருமணம் நடக்காத ஒன்று என்று அவன் முடிவு செய்துக் கொண்டான். ஆனால் அவர்கள் சம்மதிப்பார்கள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அப்படி அவர்கள் சம்மதித்தும், தன் சகோதரனின் கடனுக்கான ஒரு நிர்பந்தத்தில் தானே வருணா சம்மதித்திருப்பாள் என்பது அவன் மனதிற்கு உறுத்தலாக இருந்தது.
“வருணாவிற்கு இந்த விஷயம் தெரியாதுடா, அவக்கிட்ட இது பொன்னம்மா ஆயாவோட விருப்பம்னு சொல்லியிருக்கேன். எங்களுக்கும் விருப்பம் இருக்கு அப்படின்னு தான் சொல்லியிருக்கேன். நீ எங்களுக்கு கடன் கொடுக்கிறது அவளுக்கு தெரியும், இருந்தும் நீ பொண்ணு கேட்ட விதம் அவளுக்கு தெரியாது. தெரிஞ்சா அதை அவ எப்படி எடுத்துக்குவாளோ, அவளுக்கும் உன்னை கல்யாணம் செஞ்சுக்கிறதுல கொஞ்சம் விருப்பம் தான், அதனால இந்த விஷயத்தை எப்பவும் சொல்லாத,” என்று செண்பகம் முன்னமே சொல்லியிருந்தாள்.
வருணாவிற்கும் அதில் கொஞ்சம் விருப்பம் தான் என்பதில் அவன் மனம் மகிழ்ந்தாலும், அவளுக்கு இந்த விஷயம் தெரிந்தால், என்ற கேள்வியே அவனுக்கு பெரிய உறுத்தலாக இருந்தது. வருணாவிற்கு தகுந்த மாப்பிள்ளையா நான், என்ற விஷயத்தை அவன் யோசிக்கவும் செய்தான். ஆயாவின் ஆசைக்காக என்று வருணாவிற்கு கெடுதல் செய்வது போலவே அவனுக்கு தோன்றியது. அதுதான் வருணாவோடு அவன் இயல்பாக பேச முடியாததற்கு காரணம். அவளை நெருங்குவதற்குமே கூட அது தடையாக இருந்தது.
முதலிரவு அன்று அந்த அறைக்குள் நுழைந்தவனுக்கு அந்த சூழ்நிலை அவன் உணர்ச்சிகளை கிளறி விட்டிருந்தாலும், அவன் மனதில் இருந்த இந்த தயக்கமெல்லாம் சேர்ந்து அவள் முகத்தை நேராக பார்க்க தயங்கியவன், அந்த சிறிய அறைக்குள் சென்று கிட்டத்தட்ட ஒளிந்து கொண்டான் என்று கூட சொல்லலாம், இருந்தாலும் அவள் அதை எப்படி எடுத்துக் கொள்வாள்? என்ன செய்கிறாள்? என்று சிறிது நேரம் கழித்து அவன் அவளை எட்டிப் பார்க்க, அவளோ அங்கிருந்தப்படியே உடை மாற்றிக் கொண்டிருந்தாள்.
அவனே உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு வந்து படுத்திருக்க, “அப்பா என்ன தைரியம் அவளுக்கு, நான் இங்கத் தான் இருக்கேன். அதுவும் இந்த ரூம் கதவு திறந்திருக்குன்னு கொஞ்சம் கூட பயமில்லாம அங்கேயே ட்ரஸ் மாத்துறா? என்று யோசித்தவன், “பின்ன எங்கடா ட்ரஸ் மாத்துறது, நீ என்ன பெரிய மாளிகையா கட்டி வச்சிருக்க, அவ ட்ரஸ் பண்றதுக்காக தானே இந்த ரூம்க்கு கதவு போட்ட, இங்க வந்து நீ படுத்துக்கிட்ட, பாத்ரூம்ல போய் புடவையை எப்படி கழட்றது? அப்போ அங்க தான மாத்தணும்” என்று சரியாக யோசித்தவனுக்கோ, “அவளை கூட்டிக்கொண்டு வந்து இந்த சின்ன வீட்ல அடைச்சு வச்சிட்டோமே” என்ற உறுத்தல் இருந்தது. அதனாலேயே முடிந்த அளவுக்கு அவளுக்கு எல்லாம் பார்த்து பார்த்து செய்தாலும், அவளிடம் கணவனாய் நெருங்க மட்டும் அவனுக்கு இன்னும் தயக்கமாகவே இருந்தது. திருமணம் ஆகிவிட்டது என்பதற்காகவே அவளிடம் உரிமையை காட்ட அவன் விரும்பவில்லை.
“ஆமாம், புதுசா பார்லர் தொறக்க போறீங்க, எங்களுக்கு ட்ரீட்ல்லாம் கிடையாதா?” முருகன் கேட்கவும் அவன் நிகழ்விற்கு வந்தான்.
“என்னது ட்ரீட்டா? அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை, ஒழுங்கா ரெண்டுப்பேரும் வேலையை பாருங்க, நான் வருணாவை வீட்ல விட்டுட்டு கொஞ்ச நேரத்துல வந்துடுவேன். சொன்ன வேலையை முடிச்சு வைங்க,” என்று கட்டளை போல் சொல்ல,
“இப்போ தானே சுள்ளுன்னு விழறீங்கன்னு பசங்க சொன்னானுங்க, அதுக்கேத்த மாதிரியே நடந்துக்கிறீங்க, டெய்லியா ட்ரீட் கேட்கப் போறாங்க, ஒருநாள் தானே, கொடுப்போம்” என்று வருணா கூறினாள்.
“ஒருநாளிலேயே உங்க அண்ணியை உங்களுக்கு சப்போர்ட் பண்ண வச்சிட்டீங்கடா, இதுக்கும் மேல வேண்டாம்னு சொன்னாலும் நீங்க ஒழுங்கா வேலை செய்ய மாட்டீங்க, அதனால கிளம்புங்க போலாம்” என்றதும், இருவரும் மகிழ்ந்தனர்.
“அண்ணா, என்னமோ எங்களுக்காக ஒத்துக்கிட்ட மாதிரி பேசாத, அண்ணிக்காக தான நீயும் ஓகே சொன்ன,” என்று முருகன் கேலி செய்தான்.
“டேய் ரொம்ப பேசினீங்க, அப்புறம் ட்ரீட்ல்லாம் கிடையாது,” என்று பயமுறுத்தினான்.
“ஆமாம் இந்த ட்ரஸ்ஸோடவா வரப் போறீங்க?” என்று அவர்கள் இருவரின் அழுக்கு உடைகளை பார்த்து வருணா கேட்க,
“இல்ல அண்ணி, நாங்க வீட்ல இருந்து வரும்போது நல்ல ட்ரஸ் தான் போட்டுட்டு வருவோம், இங்க வந்து தான் இந்த ட்ரஸ் மாத்திப்போம்,” என்றவர்கள் சிறிது நேரத்தில் தயாராகி வந்தனர். அதன்பின் நால்வரும் கிளம்பினர்.
ஆதவன் வருணா அவர்களது வண்டியிலும், முருகன், சுகுமார் இருவரும் முருகன் வண்டியிலும் கிளம்பினர். மதிய சாப்பாட்டு நேரம் முடிந்து சில மணிநேரம் தான் கடந்திருந்தது என்பதால், முதலில் நால்வரும் கடற்கரைக்குச் சென்றனர். ட்ரீட் கேட்டு இவர்களுடன் வந்திருந்தாலும், கடற்கரையில் முருகனும் சுகுமாரும் இவர்களை தொந்தரவு செய்யாமல் ஒதுங்கிக் கொண்டனர். தனியாக இருந்த இருவரும் முதலில் என்ன பேச என்று தெரியாமல் அமர்ந்திருந்தனர். பின்னர் வருணா தான் அவனிடம் ஏதாவது கேட்டப்படியே பேச்சை ஆரம்பித்தாள். அவளைப் போல் அவனால் அவளோடு இயல்பாக உரையாட முடியவில்லை என்றாலும், அவளோடு பேசிக் கொண்டிருந்தான். பின் நால்வரும் இரவு உணவை கொஞ்சம் சீக்கிரமாகவே முடித்துக் கொண்டு வீடு திரும்பினர்.

வீடு வந்த வருணா மனதில் மகிழ்ச்சி நிறைந்திருந்தது. அவள் நினைத்தது போல் சொந்தமாக அழகு நிலையம் ஆரம்பிக்க போகிறது மட்டுமல்லாமல், இன்று அவனோடு வெளியில் சென்ற நேரங்கள் எல்லாம் அவளை ஒரு மயக்க நிலையில் வைத்திருக்க, வீட்டிற்குள் வந்ததும் பேன்ட் சட்டையிலிருந்து லுங்கி பனியனுக்கு மாறியப்படி சிறிய அறையிலிருந்து வெளியே வந்தவனின் முன்னே போய் நின்றவள்,
“நான் இன்னிக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா? சொந்தமா ப்யூட்டி பார்லர் வைக்கப் போறேன். அண்ணாக்கிட்ட இதை கேட்க எனக்கு ரொம்ப தயக்கமா இருந்தது, ஆனா நான் கேட்காமலேயே இதை செஞ்சுருக்கீங்க, என்னத்தான் அண்ணி சொன்னாலும், இதை செய்யல்லாம் ரொம்ப பெரிய மனசு வேணும், இதுக்கு வெறும் வார்த்தையால தேங்க்ஸ் சொன்னா பத்தாது,” என்று அவன் அருகில் சென்று, அவன் கன்னத்தில் இதழ் பதித்து, “தேங்க்ஸ்” என்று சொல்லி, அவன் ஆண்மையை மிகவுமே சோதித்தாள்
சாரல் வீசும்…