IP 4
Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

சாரல் 4
பொன்னம்மா ஆயாவின் மறைவுக்குப் பின் ஆதவன் வாழ்க்கை இயந்திரத்தனமாக மாறிப் போனது. நேரத்திற்கு சாப்பிடுவது உறங்குவது கிடையாது. இரவிலும் வொர்க்ஷாப்பில் வேலை செய்துக் கொண்டிருப்பான். சில சமயங்களில் அங்கேயே உறங்கியும் விடுவான். அதற்கென அவன் எப்படியும் போகட்டும் என்று யாரும் விட்டுவிடவுமில்லை, செண்பகம், அவளின் பெற்றோர்கள், பக்கத்துவீட்டு கோமளாவின் குடும்பம் என அனைவரும் ஆதவனிடம் அக்கறை காட்டினாலும், பொன்னம்மா பேச்சுக்கு கட்டுப்படுவது போல் ஆதவன் அவர்களிடம் இருக்கமாட்டான்.
முருகன் தன் வீட்டிலிருந்தே ஆதவனுக்கும் சேர்த்து சாப்பாடு கொண்டு வருவான். இருந்தாலும் அதையும் நேரத்திற்கு சாப்பிடமாட்டான். செண்பகம் அடிக்கடி வொர்க்ஷாப்பிற்கு வந்து அவனை பார்த்துவிட்டு செல்வாள். “ஏன் டா இப்படி இருக்க, ஆயா உன்னை நினைச்சு தான் எப்பவும் கவலைப்படும். அது இல்லாம நீ இப்படி ஆகிட்டேன்னு தெரிஞ்சா, அதோட ஆன்மா சாந்தி அடையுமா? ஒழுங்கா உன்னை கவனிச்சுக்கடா, தனியா இருக்க ஒரு மாதிரி இருந்தா, அப்பா தான் கொஞ்ச நாள் அங்க வந்து உன்னை தங்க சொல்றாருல்ல, அப்புறம் என்ன, அங்க இருந்துக்கிட்டே இங்க வேலைக்கு வந்துட்டு போயேன். வண்டியில தான வரப்போற, அப்புறம் என்னடா கஷ்டம்” என்று வரும்போதெல்லாம் சொல்லிவிட்டு செல்வாள்.
“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்க்கா, கொஞ்சம் வேலை ஜாஸ்தி, மத்தப்படி ஒன்னுமில்ல, நீ என்னைப்பத்தி கவலைப்படாத, நான் இங்க என்னோட வீட்லயே இருக்கேன்.” என்று சமாதானம் கூறி அனுப்பிவிட்டு, அவன் அப்படியே தான் இருப்பான். எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்காது.
வீட்டில் ஆதவனைப் பற்றிய கவலையில் செண்பகம் அடிக்கடி புலம்பிக் கொண்டிருப்பாள். “ஆயா இருந்தா அவன் இப்படி இருக்கவே மாட்டான். அவனுக்கு கல்யாணம் ஆகற வரைக்குமாவது ஆயா உயிரோட இருந்திருக்கலாம். தனியா இருந்து கஷ்டப்பட்றான். யார் பேச்சையும் கேட்கறதே இல்ல,” என்று புலம்பி தள்ளுவாள்.
இந்த புலம்பலில் அவள் யாரையும் குற்றம் சாட்ட நினைக்கவில்லை. ஆதவன் வருணா திருமணப்பேச்சில் கணவன் மனைவிக்குள் இருந்த சுணக்கம் கூட மறைந்து தான் இருந்தது. இப்படி புலம்பினாலாவது கணவன் வருணாவை ஆதவனுக்கு திருமணம் செய்துக் கொடுக்க ஒத்துக் கொள்வான் என்ற நினைப்பெல்லாம் அவளுக்கு இல்லை. அவனுக்கு தான் பிடிக்கவில்லையே பிறகு ஏன் இந்த பேச்சை எடுக்க வேண்டும் என்று தான் மனதில் முடிவெடுத்துக் கொண்டாள். ஆனாலும் ஆதவனை குறித்த ஆதங்கம் தான் அவள் இப்படி புலம்புவதற்கு காரணம்.
மூன்றாவது தலைமுறையை சேர்ந்த உறவு தான் இருவருக்குமிடையே, இருந்தாலும் சிறு வயதில் இருந்து அருகருகே வளர்ந்தவர்கள். பள்ளி விடுமுறை சமயங்களில் ஆதவன், செண்பகம் வீட்டில் தான் இருப்பான். அதன்பின் அவன் வேலைக்கு சென்று அவனுக்கு பொறுப்புகள் கூடியிருந்தாலும் அவர்களுக்குள்ளான உறவுமுறைக்கு எந்தவித பாதிப்பும் வந்ததில்லை. பணி ஓய்வுப் பெற்று அதில் கிடைத்த பணத்தில் தான் செண்பகத்தின் தந்தை அவளுக்கு திருமணத்தை முடித்தார்.
விக்னேஷ் வரதட்சணை என்ற பெயரில் எதுவும் கேட்கவில்லை. அவரே தான் மகளுக்கு செய்ய வேண்டிய கடமை என்று எல்லாம் பார்த்து பார்த்து செய்தார். அதிலும் விக்னேஷ் வீட்டில் திருமணத்தை பொறுப்பாக எடுத்து நடத்தக்கூடிய அளவுக்கு பெரியவர்கள் யாரும் இல்லை. செண்பகத்தின் தந்தையே அனைத்தையும் எடுத்து நடத்தினார். விக்னேஷும் அதில் பங்கு கொண்டிருந்தாலும், செண்பகத்தின் தந்தைக்கு அந்த திருமண நேரத்தில் உதவியாக இருந்தது ஆதவன் தான்,
யாரையாவது பார்க்க போக, வர, பத்திரிக்கை வைக்க, ஏதாவது கொடுக்க வேண்டிய பணம் குறைவாக இருந்தால் கொடுத்து உதவ என்று செண்பகம் திருமணத்திற்காக அவன் ஓடி ஓடி வேலை செய்தான். செண்பகத்தின் உடன்பிறந்த தங்கை, தம்பிக்கு கூட இவ்வளவு பொறுப்பு இருக்காது என்று தான் அடிக்கடி அவள் நினைத்துக் கொள்வாள். அந்த பாசத்தில் தான் ஆதவனை பற்றிய கவலை அவளுக்கு அதிகமாக இருந்தது. விக்னேஷிற்கும் செண்பகத்தின் நிலை புரிந்ததால் அவனும் அவளது புலம்பல்களில் எதுவும் தவறான அர்த்தம் எடுத்துக் கொள்ள மாட்டான்.
“எங்க அம்மா, அப்பா இறப்புக் கூட எங்களுக்கு கொஞ்ச நாள் கஷ்டமா தான் இருந்துச்சு செண்பா, அப்புறம் அதுவா பழகிடுச்சு, ஆதவனுக்கும் பாட்டி இல்லாதது கொஞ்ச நாளுக்கு கஷ்டம் இருக்கும் தான், அப்புறம் எல்லாம் பழகிடும்,” என்று ஆறுதல் கூறுவான்.
செண்பாவின் புலம்பல்களை கேட்கும் போதெல்லாம் ஆதவனை பற்றிய கவலை வருணாவையும் சூழ்ந்து கொள்ளும். பொன்னம்மா பாட்டியின் இறப்புக்கு பின் ஆதவன் இங்கு வருவதில்லை. முன்பெல்லாம் அவன் வருகையை அவள் விரும்பமாட்டாள். ஆனால் இப்போதோ அவனை மறுபடியும் பார்க்கும் சந்தர்ப்பம் அமையாதா என்று அவள் மனம் எதிர்பார்த்தது. பேசாமல் அண்ணியோடு சென்று அவனை பார்த்துவிட்டு வரலாமா? என்று கூட அவள் நினைத்ததுண்டு. இருந்தும் அதை செயல்படுத்தவும் அவள் துணிந்ததில்லை.

இப்படியிருக்க ஒருநாள் வருணாவிற்கு வேலை சம்பந்தமாக அழகு சாதனப் பொருட்கள் சிலது வாங்க வேண்டியிருந்தது. எப்போதும் செண்பகத்தை உடன் அழைத்துக் கொண்டு செல்வாள். ஆனால் அன்று செண்பகத்திற்கு வீட்டு வேலை அதிகம் இருந்ததால், அவளால் உடன் செல்ல முடியவில்லை. அதனால் வருணா தனியாகவே கிளம்பிவிட்டாள்.
எப்போதும் வாங்கும் வழக்கமான கடைக்கு பொதுவாக பேருந்தில் தான் வருவாள். அப்படி வந்தவள் தேவையானதை வாங்கிக் கொண்டு மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் வந்து காத்திருக்க, அவள் ஏற வேண்டிய பேருந்து வரவில்லை. அந்த பேருந்து என்றில்லை, அவள் வந்து நின்றதிலிருந்து எந்த பேருந்துமே வரவில்லை. அந்த நிறுத்தத்தில் வேறு பெரிய அளவு கூட்டமில்லை. இவளுடன் இன்னும் இருவர் தான் பேருந்திற்காக காத்திருந்தனர்.
சரி எவ்வளவு நேரம் காத்திருப்பது என்று நினைத்தவள், பேசாமல் ஆட்டோ பிடித்தாவது வீட்டிற்கு செல்லலாம் என்று நினைத்திருக்க, அதுவும் வந்தபாடில்லை. ‘அய்யோ, என்ன பஸ்ஸும் வரல, ஆட்டோவும் வரல, என்னாச்சு?” என்று அவள் தனக்குள்ளேயே கேட்டுக் கொண்ட நேரம்,
“ஏதோ போராட்டம் நடக்குதுன்னு பஸ், ஆட்டோவெல்லாம் திருப்பி விட்டுட்டாங்க, இந்தப்பக்கம் பஸ் வராது. நீங்க இங்க நிக்கறது வேஸ்ட்,” என்று அங்கு இருச்சக்கர வாகனத்தில் வந்த ஒருவர், பொதுவாக அங்கு நின்றிருந்தவர்களை பார்த்து சொல்லிவிட்டு போக,
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
‘அய்யோ எவ்வளவு நேரம் இங்க நின்னு நேரத்தை வீணாக்கிட்டோம்,” என்று இவள் மனதில் புலம்ப, அவளோடு நின்றிருந்தவர்கள் வெளிப்படையாகவே புலம்பிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.
வருணாவிற்கோ அவள் ஏற வேண்டிய பேருந்து எங்கு நிற்கும் என்று தெரியவில்லை. ஆட்டோ பிடிக்கவும் எந்த திசைக்கு செல்ல வேண்டுமென்றும் தெரியவில்லை. என்ன செய்வது? என்ற குழப்பத்தில் அவள் நின்றுக் கொண்டிருக்க, அவள் அருகே ஒரு இருச்சக்கர வாகனம் வந்து நின்றது. அதில் அமர்ந்திருந்தவன் தலைகவசத்தால் தன் முகத்தை மறைத்திருந்தாலும், அந்த அழுக்கு உடையே அவன் யார் என்பதை வருணா அறிந்து கொண்டாள்.
ஆதவனும் தலைகவசத்தை கழட்டிவிட, தாடி மீசைக்குள் அவன் முகம் மறைந்திருந்தாலும், அந்த முகம் வாட்டமாக இருப்பதை வருணாவால் நன்றாகவே உணர முடிந்தது. ‘பொன்னம்மா பாட்டியோட இழப்பு இவனை ரொம்ப பாதிச்சிருச்சு போல, அண்ணி புலம்பினது சரிதான், தன்னை சரியா இவன் கவனிச்சிக்கறதே இல்ல போல,’ என்று மனதிற்குள் வருத்தப்பட்டுக் கொண்டாள். ஆனாலும் அவனை பார்க்க வேண்டுமென்று அவள் நினைத்திருக்க, அந்த வாய்ப்பு இப்போது கிடைத்ததில் அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
அவள் சிந்தனை எதுவும் அறியாதவனோ, “என்ன வருணா இங்க நின்னுட்டு இருக்க, இந்தப்பக்கம் பஸ் வராது, திருப்பி விட்டுட்டாங்க,” என்று அவனும் அதே தகவலை கூற,
“ம்ம் தெரியும், இப்போ தான் ஒருத்தர் சொல்லிட்டு போனாரு, எனக்கு சில திங்க்ஸ் வாங்க வேண்டியிருந்துச்சுன்னு கடைக்கு வந்தேன். வரும்போது பஸ்ல தான் வந்தேன். ஆனா பஸ் திருப்பிவிட்டது எனக்கு தெரியாது. இப்போ தான் தெரியும், ஆனா நான் போற பஸ் எங்க நிற்கும்னு தெரியல, ஆட்டோல போலான்னாலும் எந்தப்பக்கம் போய் ஏறுவது?” என்று அவள் கேட்க,
அவன் கேட்டதற்கு அவள் பதில் கூறியது ஆதவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவள் பேருந்து நிறுத்தத்தில் நிற்பதை பார்த்தாலும் அவளிடம் வந்து பேசுவதற்கு தயக்கமாக இருந்தது. ஏதாவது கேட்டால் பதில் கூறுவாளோ? இல்லை முகத்தில் அடித்தாற் போல் ஏதாவது பேசுவாளோ? என்ற தயக்கம் தான், இருந்தாலும் இங்கு பேருந்து எதுவும் வராது என்பது அவளுக்கு தெரியுமா என்பது அவனுக்கு தெரியவில்லை. அதில்லாமல் தனியாக நிற்கிறாள். அப்படியிருக்க அவளை கண்டும் காணாமல் செல்வது நன்றாக இருக்காது என்றுதான் அருகில் வந்தான்.
அவன் வந்ததும் நல்லது தான், இந்தநேரம் அவளுக்கு உதவி தேவைப்பட்டிருக்கிறதே, “உனக்கு பிரச்சனையில்லைன்னா என்னோட பைக்ல ஏறிக்கோ, உன்னை பஸ் ஸ்டாண்ட்ல விட்டுட்றேன்.” என்று அவன் கேட்க,
‘ஏன் பஸ் ஸ்டாண்ட்ல தான் விடுவானா? வீடு வரைக்கும் கொண்டு போய்தான் விட்டா என்னவாம்,’ என்று அவள் மனதில் கேட்டுக் கொண்டாள்.
இதையே அவன் தயக்கத்தோடு தான் கேட்டான். அவளுக்கு தான் இவனை கண்டாலே பிடிக்காதே, அப்படியிருக்க தன் வண்டியில் ஏறுவாளா என்பதே சந்தேகம் தான், அப்படியிருக்க அவள் மனது அவனுக்கு எப்படி புரியும்? அவள் பதிலுக்காக அவன் தவிப்போடு காத்திருக்க, அவள் சரியென்பது போல் தலையாட்டினாள்.
பின் அவன் வண்டியை கிளப்பி தயாரானதும் அவள் ஒருபக்கமாக ஏறி அமர, வண்டி புறப்பட்டது. ‘இன்னும் 5 நிமிடத்தில் பேருந்து நிறுத்தம் வந்துவிடும், 5 நிமிடம் தான் இவனோடு போகப்போகிறோமா? அப்படியே வீடு வரைக்கும் கொண்டு போய் விட்டா எவ்வளவு நல்லா இருக்கும்,’ என்று மீண்டும் மனதில் எழுந்த ஆசையை அடக்கிக் கொண்டாள்.
ஐந்து நிமிடம் என்று நினைத்தது பத்து நிமிடமாக, ‘ஒருவேளை வீட்டுக்கு தான் கூட்டிட்டுப் போறானோ?’ என்பதுபோல் அவள் நினைக்க, அந்தநேரம் வண்டி ஒரு ஆட்டோ நிறுத்தம் முன்னால் போய் நின்றது. வண்டியில் இருந்து இறங்கியவள், அவனை கேள்வியாக பார்க்க,
“இது எனக்கு தெரிஞ்ச ஆட்டோ ஸ்டாண்ட் தான் வருணா, இதுக்கு மேல பஸ் பிடிச்சு வீட்டுக்கு போக லேட்டாகிடும், அதனால ஆட்டோல போயிடு,” என்றவன், அவளது பதிலை எதிர்பார்க்காமல்,
அங்கு நின்றிருந்த ஆட்டோ ஓட்டுநர் அருகில் சென்று, “கிச்சா அண்ணா, இது என்னோட சொந்தக்கார பொண்ணு தான், திருவான்மியூர்ல தான் வீடு, கொண்டு போய் விட முடியுமா அண்ணா,” என்று கேட்க,
“அதுக்கென்ன ஆதவா, நான் கூட்டிட்டுப் போய் விட்டுட்றேன்.” என்று ஆட்டோ ஓட்டுனர் கூறினார்.
“சரி திருவான்மியூர் வரைக்கும் சவாரிக்கு எவ்வளவு அண்ணா,” என்று கேட்க,
“அய்யோ உன்கிட்ட காசு கேட்பேனா, அதெல்லாம் வேண்டாம் ஆதவா,” என்று அவர் பதிலுக்கு கூறவும்,
“அய்யோ தொழில்னு வரும்போது கறாரா இருக்கணும், இந்தாங்க இதை வச்சிக்கோங்க,” என்று நூறு ரூபாயை அவரிடம் கொடுக்க, அவரும் வாங்கிக் கொண்டார்
பின் வருணா அருகில் வந்தவன், “இவர் எனக்கு தெரிஞ்சவர் தான், பாதுகாப்பா உன்னை கொண்டுப் போய் விட்டிடுவார்.” என்று சொல்லவும்,
“ம்ம் சரி,” என்றவள், “எதுக்கு நீங்க பைசா கொடுத்தீங்க, இறங்கினதும் நானே கொடுத்திருப்பேனே,” என்றாள்.
“அது பரவாயில்லை, சரி டைம் ஆச்சு கிளம்பு,” என்றவன், அவள் ஆட்டோவில் ஏறி அமர்ந்ததும்,
“கிச்சா அண்ணா, வீட்ல கொண்டு போய் விட்டதும், எனக்கு போன் போட்டு சொல்லுங்க ண்ணா,” என்றான். அதற்கு அவர் தலையாட்டினார்.
அவன் வீடு வரையிலும் கொண்டு சென்று விடாததில் அவன் மீது அவளுக்கு சிறிய வருத்தம் இருந்தாலும், அவனது அக்கறையில் அவள் மகிழ்ந்து போனாள்.
அவனிடம் அவள் தலையசைத்து விடைபெற, ஆட்டோ புறப்பட்டது. போகும் ஆட்டோவை பார்த்தப்படி நின்றிருந்தவன், நடப்பது கனவா நிஜமா என்பது புரியாமல் கையை கிள்ளிப் பார்த்துக் கொண்டான். கிள்ளியதில் கை வலிக்கவே அது நிஜம் தான் என்று தெரிந்து கொண்டவன்,
“பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் விட்றேன். வண்டியில் ஏறுன்னு சொன்னதும் ஏறிட்டாளே, ஒருவேளை வீடு வரைக்கும் கூட்டிட்டு போறேன்னு சொல்லியிருந்தாலும் வந்திருப்பாளோ, அவ வருவாளோ மாட்டாளோன்னு பஸ் ஸ்டாண்ட் வரைக்கும்னு கேட்டுட்டியே டா, நீ சுத்த வேஸ்ட். அதிர்ஷ்டம் இல்லாதவன்.” என்று அவனையே திட்டிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
அன்று விக்னேஷ் வேலையிலிருந்து வரும்போதே ஒருவித பதட்டத்தோடு வந்தான். அவன் வந்த நேரத்தில் வருணா வீட்டில் இல்லை. பக்கத்து வீட்டு பிள்ளைகளோடு மொட்டை மாடிக்கு சென்றிருந்தாள். கணவன் வந்தது தெரிந்து செண்பகம் கையில் காபியோடு வந்தாள். விக்னேஷின் உடல்மொழியே, அவன் ஏதோ பிரச்சனையில் இருக்கிறான் என்பதை செண்பகம் உணர்ந்து கொண்டாள்.
“என்னங்க ஏதாவது பிரச்சனையா?” அவள் கேட்டதற்கு,
“ஆமாம் வருணா எங்க?” என்று அவன் திருப்பிக் கேட்டதிலேயே ஏதோ பிரச்சனை என்பதை செண்பகம் புரிந்து கொண்டாள்.
“அவ இப்போ தான் மொட்டை மாடிக்கு போனா, வர கொஞ்ச நேரம் ஆகும், நீங்க என்ன பிரச்சனைன்னு சொல்லுங்க,” என்றவள், சென்று கதவை தாளிட்டு விட்டு வந்தாள். அன்று இவர்கள் சண்டையின் போது பொன்னம்மா பாட்டி வந்ததிலிருந்தே செண்பகம் கொஞ்சம் கவனமாகவே இருந்தாள். இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஒருவேளை வருணா வந்துவிட்டால், சாற்றியிருக்கும் கதவை பார்த்து அழைப்பு மணி அடித்துவிட்டு வருவாள் என்பது அவளது எண்ணம்.
“இப்போ சொல்லுங்க என்ன பிரச்சனை”
“செண்பா, என்னோட ஃப்ரண்ட் வாசு இருக்கான்ல, அவனுக்கு ஒரு அவசர தேவைக்கு பணம் கடன் வாங்க நான் ஷ்யூரிட்டி கையெழுத்து போட்ருந்தேன். இப்போ அவன் கடனை அடைக்காம எஸ்கேப் ஆகிட்டான். அதனால அந்த பணத்தை இப்போ நான் கட்டணும்,”
“என்னங்க சொல்றீங்க, அவர் இல்லன்னா உடனே உங்கக்கிட்ட கேட்பாங்களா? அவர் எஸ்கேப் தான் ஆனாருன்னு எப்படி தெரியும்?”
“உண்மையிலேயே அவன் கடனை அடைக்காம எஸ்கேப் தான் ஆகிட்டான் செண்பா, இங்க மட்டுமில்ல இதுபோல நிறைய இடத்துல கடன் வாங்கியிருக்கான். ஆஃபிஸ்லயும் லோன் போட்ருக்கான். இந்த வேலை மட்டும் இல்லாம புதுசா பிஸ்னஸ் ஆரம்பிக்கறேன்னு அதுக்கு தான் கடன் வாங்கி, தொழிலும் நஷ்டமாகி, அதை சரி செய்ய திரும்ப கடன்னு இருந்திருக்கான். அதைப்பத்தி என்கிட்ட பேசியிருக்கான். ஆனா இப்படி எங்கப் பார்த்தாலும் கடன் வாங்கியிருப்பான்னு தெரியல. கொஞ்ச நாள் முன்னாடி வைஃப் பசங்கள சொந்த ஊருக்கு அனுப்பியிருக்கேன்னு சொன்னான். இப்போ அவனும் எஸ்கேப்,
நான் ஷ்யூரிட்டி போட்டு கடன் வாங்கின இடத்துல ஒரு நாலஞ்சு மாசமாவே வட்டி கட்டல, அதைப்பத்தி அவங்க கேட்டு உடனே பணம் கொடுக்கணும் இல்ல பிரச்சனை ஆகிடும்னு மிரட்டி இருக்காங்க, இப்படி ரெண்டு மூனு இடத்துல பிரச்சனை போல, முன்னாடியே அவன் எஸ்கேப் ஆகற ப்ளான்ல தான் வைஃப் பசங்கள ஊருக்குன்னு சொல்லி வேறெங்கேயோ அனுப்பி வச்சிருக்கான். இப்போ அவனும் எஸ்கேப், அவனைப்பத்தி எந்த டீடெயிலும் தெரியாததால இப்போ என்கிட்ட பணம் கேட்கறாங்க, நான் மட்டுமில்ல எங்க ஆபிஸ்ல ரெண்டு மூனு பேர் இதுபோல மாட்டியிருக்காங்க,”
“என்னங்க உங்க கடனே இன்னும் அடையல, நீங்க எதுக்கு வேறொருத்தருக்கு ஷ்யூரிட்டி கையெழுத்து போட்றீங்க இது தேவையா? ஆமாம் எவ்வளவு பணம்?”
“3 லட்சம் செண்பா, வட்டியெல்லாம் வேணாம் அசல் மட்டும் கொடுத்தா போதும்னு சொல்றான். அது 3 லட்சம்,”
“3 லட்சமா? அது என்ன சாதாரணமா? இப்போ நம்மக்கிட்ட மட்டும் 3 லட்சம் இருந்தா, உங்க கடனை கொஞ்சம் அடைச்சிருக்கலாம், வருணாக்கு ஏதாவது நகை வாங்கிப் போடலாம், இல்ல என்னோட நகையாவது மீட்டிருக்கலாம், இப்படி நமக்கே நிறைய தேவை இருக்க, அதைவிட்டு எவனோட கடனையோ அடைக்கணும்னு நம்ம தலையில எழுதியிருக்கு, ஆமா இப்போ பணம் கொடுக்க முடியாதுன்னு சொன்னா என்ன ஆகும்?”
“போலீஸ்க்கு போவேன்னு சொல்லியிருக்கான். இப்போதைக்கு ஒருவாரம் டைம் கொடுத்திருக்கான். கட்டலன்னா போலீஸ்க்கு போய்டுவான்.”
“போலிஸுக்கா, இது வேறயா? ஆமாம் இப்போ பணத்துக்கு என்ன செய்யப் போறீங்க?”
“தெரியல, அது புரியாம தான் குழம்பிக்கிட்டு இருக்கேன். யார்க்கிட்ட கேட்கறதுன்னு ஒன்னும் புரியல,” என்று விரக்தியாக சொன்னவன், திடீரென ஞாபகம் வந்தவனாக,
“உங்க அப்பாக்கு தெரிஞ்சவங்க யார்க்கிட்டேயாவது கேட்டுப் பார்க்க சொல்றியா?” என்று கேட்டான்.
“தம்பியோட காலேஜ் ஃபீஸ் கட்டவே பணம் இல்லன்னு அப்பா ரெண்டு நாள் முன்னாடி சொன்னாரு, இதுக்கும் 40,000 தான், யார்க்கிட்டயாவது கடனா கேட்கலாம்னு பார்த்தா, கடன்னு போய் நின்னாலே எல்லாம் முகத்தை சுழிக்கிறாங்கன்னு சொன்னாரு, வட்டிக்கு கொடுக்கிறவன் கிட்ட கேட்கலாம், ஆனா அவனும் அநியாய வட்டி சொல்றான்னு புலம்பல், கடைசியில தங்கையோட நகையை அடமானம் வச்சு தான் பணம் கட்டியிருக்காரு,
அம்மா நகை வீடு கட்டும்போதே அடமானத்துக்கு போயிடுச்சு, வேணும்னா வீட்டை வச்சு வாங்கலாம், ஆனா அப்பா வீட்டை அடமானம் வைக்க கூடாதுன்னு முடிவுல இருக்காரு, ஃபீஸ்க்கே ஆதவனை தான் கேட்கணும்னு நினைச்சிக்கிட்டு இருந்தாரு, ஆனா முன்னயே அவன் நிறைய உதவியிருக்கான். அதான் அவன்கிட்ட கேட்கல,” என்றவள்,
“ஏங்க, வேணும்னா ஆதவன் கிட்ட கேட்போமா?” என்றாள். அதற்கு அவனோ,
“ஆதவன் கிட்டல்லாம் வேண்டாம்” என்று அவசரமாக மறுத்தான்.
“அப்போ சரி, அப்பாக்கிட்டேயே வேணும்னா கேட்டுப் பார்க்கிறேன்.” என்றதற்கு,
“வேண்டாம் செண்பா, பாவம் அவருக்கே நிறைய பிரச்சனை, இன்னும் உன்னோட தங்கச்சி கல்யாணம், தம்பியோட படிப்பு செல்வு இதெல்லாம் இருக்கு, முடிஞ்ச அளவுக்கு நான்தான் அவருக்கு உதவணும், ஆனா அது முடியாட்டியும் அவருக்கு தொல்லை கொடுக்காம இருப்போமே, நான் வேறெங்கேயாவது முயற்சி செஞ்சுப் பார்க்கிறேன்.” என்றவன், இரண்டு நாட்களாக அந்த முயற்சியில் தான் இருந்தான். ஆனால் அவனுக்கு ஒருலட்சம் ஏற்பாடு செய்வதே கஷ்டமாக இருந்தது. அதிக வட்டிக்கு சிலர் பணம் கொடுக்க தயாராயிருந்தனர். ஆனால் ஏற்கனவே வீட்டுக்காக கட்டும் லோன், அடமானத்தில் இருக்கும் நகைக்கான வட்டி இதோடு, இந்த வட்டியும் சேர்ந்து கொண்டால், இன்னும் நிலைமை கடினமாக போய்விடும் என்பதை உணர்ந்ததால், தெரிந்தவர்கள், நண்பர்கள் என்று கேட்டுப் பார்த்தான். ஆனால் யாரும் பெரியத் தொகை கொடுப்பதற்கு முன்வரவில்லை.
இரண்டு நாட்களாக கணவன் முயற்சிக்கட்டும் என்று அமைதியாக இருந்த செண்பகம், அதன்பின்னும் பொறுமையாக இருக்கவில்லை.“என்னங்க, ஆதவன்கிட்ட கேட்க நீங்க ஏன் யோசிக்கிறீங்கன்னு எனக்கு புரியுது. அன்னைக்கு ஆயா வந்தப்போ நடந்ததெல்லாம் உங்களுக்கு குற்ற உணர்வை கொடுக்குதுன்னு புரியுது, ஆனா இதெல்லாம் ஆதவனுக்கு தெரியாதுல்ல, தெரிஞ்சாலும் அதையெல்லாம் அவன் பெருசா எடுத்துக்கிற ஆள் கிடையாது, அதனால அவன்கிட்ட கேட்போம், பணம் கொடுக்கிற அளவுக்கு ஒரு ஆள் இருக்கப்போ, நீங்க தயங்கறது நல்லா இல்லங்க,” என்று அவனை ஒத்துக் கொள்ள வைத்தாள்.
ஆதவனை பார்க்க இருவரும் வொர்க்ஷாப்பிற்கு வந்தார்கள். வேலை செய்துக் கொண்டிருந்தவன் முருகனிடம் தன் வேலையை ஒப்படைத்துவிட்டு அவர்களிடம் வந்தான்.
“என்னக்கா, ரெண்டுப்பேரும் வந்திருக்கீங்க, ஏதாச்சும் பிரச்சனையா?”
“ஆமாம் ஆதவா, மாமா ஒரு இக்கட்டுல மாட்டிக்கிட்டிருக்காரு, இப்போ அவருக்கு உடனடியா 3 லட்சம் தேவைப்படுது,” என்று முழு விவரத்தையும் கூறினாள்.
“என்ன மாமா, கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கக் கூடாதா?”
“நல்லா பேசிப் பழகுற ஃப்ரண்ட் தான் ஆதவா, இப்படி ஏமாத்துவான்னு நான் நினைக்கல, அவன் நடவடிக்கையில கொஞ்சம் கூட வித்தியாசம் தெரியல, எப்பவுமே கரெக்டா இருக்க மாதிரி நடந்துப்பான். அதான் ஒரு நம்பிக்கையில அவனுக்கு உதவி செய்யறதா நினைச்சு கையெழுத்துப் போட்டேன். இப்படி ஏமாத்துவான்னு எதிர்பார்க்கவே இல்ல,”
“எல்லா நேரம் ஆதவா, இந்த 3 லட்சத்துக்குக்காக தான் உன்னை பார்க்க வந்தோம், நீ கொடுத்து உதவினா நல்லா இருக்கும், முடிஞ்ச அளவுக்கு கொஞ்சம் கொஞ்சமா கடனை திருப்பிக்கொடுத்திடுவோம் டா,”
“என்னக்கா இப்படி பேசற? நான் கொடுக்க மாட்டேன்னா சொன்னேன். கண்டிப்பா கொடுப்பேன். நீங்க அதை திருப்பிக் கூட கொடுக்க வேண்டாம்,” என்று அவன் சொன்ன பதிலில் இருவரும் அவனை ஆச்சரியமாக பார்த்தனர். ஆனால் அடுத்து அவன் சொன்ன விஷயத்தை கேட்டதும் அதை அவர்களால் உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை.
“ஆனா நான் இந்த பணம் தரணும்னா ஒரு கண்டிஷன், அது என்னன்னா, வருணாவை எனக்கு கல்யாணம் செஞ்சுக் கொடுக்கணும்” என்று அவன் சொன்னதும் முதலில் அப்படி அவன் கேட்பான் என்று எதிர்பார்க்காதவர்கள், அவன் சொன்னதன் அர்த்தம் புரிந்த நொடி, விக்னேஷ் அவனது சட்டையை பிடித்திருந்தான்.
“ஹே என்ன என்னோட தங்கச்சிய விலை பேசிறியா?” கோபத்தோடு விக்னேஷ் கேட்டதற்கு ஆதவனோ அமைதியாக இருந்தான்.
“என்னங்க விடுங்க?” என்று ஆதவன் சட்டையிலிருந்து விக்னேஷின் கையை எடுத்த செண்பகம், பின் ஆதவனைப் பார்த்து,

“டேய் என்னடா ஆதவா? இப்படி பேசற?” என்று கோபமும் வருத்தமுமாக கேட்டாள்.
“எனக்கு வேற வழி தெரியல அக்கா, ஆயாவோட ஆசையை நிறைவேத்தணும், அதுக்கு இதுதான் வழி” என்றதும், இவனுக்கு எப்படி இது தெரியும் என்று செண்பகம் அதிர்ச்சி பார்வை பார்த்தாள்.
“எனக்கு எல்லாம் தெரியும், ஆயாவுக்கு வருணாவை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும்ங்கிற ஆசை இருக்கு, முன்னமே ஒருமுறை இதைப்பத்தி சொல்லியிருக்கு, ஆனா அது மனசுல அப்போ இது பெரிய ஆசையா இருக்கும்னு நான் நினைக்கல, ஆயா சாகறதுக்கு முன்ன வீட்ல சீரியஸா இருந்தப்ப, ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போனோமே, அப்போ அதுக்கே தெரியாம இதை சொல்லி புலம்பிக்கிட்டு இருந்துச்சு, அப்போ தான் எனக்கு அதோட ஆசை தெரிய வந்துச்சு, ஆயாவோட ஆசையை உயிரோட இருக்கப்ப தான் என்னால நிறைவேத்த முடியல, அதான் அதோட கடைசி ஆசையை நிறைவேத்தலாம்னு கேட்டேன்.
“அதுக்கு இப்படி தான் கேட்பியா? சாதாரணமா வந்து பொண்ணு கேட்டிருக்கலாமே,”
“ஆயா அப்படி தானே கேட்டுச்சு, அப்போ நீங்க ஒத்துக்கல இல்ல, அப்புறம் நான் வந்து கேட்டா எப்படி கொடுப்பீங்க?”
“அதுக்கு என்னோட தங்கச்சிய விலை பேசுவியாடா?” விக்னேஷ் திரும்ப எகிறிக் கொண்டு ஆதவன் அருகில் போக, செண்பகம் அவனை தடுத்தாள்.
“என்னோட தங்கச்சிய விலை பேசி இவன்கிட்ட பணம் வாங்கணும்னு அவசியமில்ல, எனக்கு வர்ற கோபத்துக்கு இவனை ஏதாச்சும் செஞ்சிடுவேன். இதுக்கு மேல இங்க நிக்க வேண்டாம் வா செண்பகம்” என்ற விக்னேஷ் அங்கிருந்து கோபமாக சென்றான். செண்பகமோ ஆதவனைப் பார்த்து,
“என்ன ஆதவா, உன்கிட்ட நான் இதை எதிர்பார்க்கலடா, சரி பணம் கொடுத்தா பொண்ணை கொடுப்பாங்கன்னு உன் மனசுல நினைச்சிருந்தா, பணம் கொடுத்துட்டு பின்ன சாதாரணமா கூட நீ கேட்ருக்கலாம், நாங்களும் யோசிச்சிருப்போம், இப்படி விலை பேசுற மாதிரி கேட்கறது நல்லாவா இருக்கு,”
“எனக்கு நின்னு நிதானிச்சு எல்லாம் கேட்க தெரியாது க்கா, எனக்கு ஆயாவோட ஆசையை நிறைவேத்தணும், எப்படின்னு தெரியாம யோசிச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா இப்போ அதுக்கு ஒரு வழி கிடைச்சிருக்கு, இப்பவே வருணாவை எனக்கு கட்டிக் கொடுக்க உன்னோட புருஷனுக்கு சம்மதமா கேளு, நான் உடனே பணம் தரேன்.” என்று அவன் சொன்னதும், அவனிடம் இதற்கு மேல் என்ன பேசுவதென்று யோசித்தவள், அவனுக்கு எந்த பதிலும் சொல்லாமலேயே கிளம்பினாள்.
வீட்டின் அழைப்பு மணி தொடர்ந்து கேட்ட விதத்திலும், கதவை திறந்ததும் ஒரு வார்த்தை பேசாமல் சென்ற விதத்திலும் தன் சகோதரன் கோபமாக இருப்பதை வருணா உணர்ந்து கொண்டாள். சில மாதங்களாகவே ஏதோ சரியில்லை என்பதை அவள் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறாள். விக்னேஷ் வீட்டுக்குள் நுழைந்ததும் நேராக தன் அறைக்குச் சென்றதும், பின்னாலேயே வந்த செண்பகத்திடம் வருணா என்ன பிரச்சனை என்று கேட்டாள்.
“ஒன்னுமில்ல வருணா,” என்று செண்பகமும் ஏதோ சொல்லி மழுப்பினாள். அதற்கு மேல் வருணாவும் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.
“அண்ணி, நான் பக்கத்துல இருக்க கோவிலுக்குப் போயிட்டு வரேன். காலையிலேயே போகணும்னு நினைச்சேன். ஆனா திடீர்னு நீங்க வெளிய போகவே, உங்களுக்காக காத்திருந்தேன். அதனால இப்போ போயிட்டு கொஞ்ச நேரத்திலேயே வந்துட்றேன் அண்ணி,” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.
வருணா போனதும் அறைக்கு வந்த செண்பகம், அங்கே கோபத்தோடு நடமாடிக் கொண்டிருந்த விக்னேஷை பார்த்து, “இப்போ என்ன செய்யப் போறீங்க?” என்று கேட்டாள்.
“என்ன செய்ய போறீங்கன்னா, என்ன கேள்வி இது, அவன் கொடுக்கிற பணத்துக்காக என்னோட தங்கச்சிய விக்க சொல்றியா?”
“நான் அந்த அர்த்தத்துல கேட்கல, இப்போ பணத்துக்கு என்ன செய்யப் போறீங்க? அதுக்கு தான் கேட்டேன்.”
“பணம் கிடைக்காட்டி போலீஸ் ஸ்டேஷன்க்கு போனாலும் பரவாயில்ல, ஆனா அவன்கிட்ட இருந்து நான் பணம் வாங்க மாட்டேன்.”
“நான் சொல்றதை கொஞ்சம் கோபப்படாம பொறுமையா கேட்கறீங்களா?”
“என்ன சொல்லு?”
“ஆதவன் பேசினது தப்பு தான், நான் இல்லன்னு சொல்லல, ஆனா வேலை விஷயத்துல கறாரா இருந்து இருந்து இப்படி எதுக்கு எப்படி கேட்கணும்னு கூட அவனுக்கு தெரியாம போயிடுச்சுன்னு தான் சொல்லணும், ஆயா போன வருத்தம், அவங்க ஆசை நடக்காம போயிடுச்சேங்கிற எண்ணம் இதெல்லாம் தான் அவனை இப்படி பேச வச்சிருக்கே தவிர, அவன் ஒன்னும் கெட்டவன் இல்லங்க,
இப்போ முதலில் நீங்க அவன்கிட்ட பணம் வாங்க யோசிச்சது எதுக்காக? அவனுக்கு பொண்ணு தர மாட்டோம்னு சொல்லிட்டு, அவன்கிட்டயே பணம் வாங்க போறோமேன்னு தான, அந்த ஒரு விஷயத்தை யோசிச்சுப் பாருங்களேன். ஒருவேளை இப்போ பணம் கொடுத்துட்டு அதுக்குப்பிறகு அவன் வீடு தேடி வந்து பொண்ணு கேட்டிருந்தா அப்பவும் முடியாதுன்னு சொல்வீங்களா?”
“அப்போ இப்போ அவன் கேட்டதுக்கு ஒத்துக்கிட்டு இருந்தா, பணத்துக்காக என்னோட தங்கச்சிய கட்டிக் கொடுக்கறதா ஆயிடாதா?”
“அதை விட்டு யோசிச்சுப் பாருங்கன்னு தான் சொல்றேன். இப்போ வருணாவுக்கு திடீர்னு ஒரு வரன் அமைஞ்சா, அவளுக்கு கல்யாணம் பண்ண பணம் இருக்கா? நம்ம கடன் அடைஞ்சு பணம் சேர்க்கறதுக்குள்ள அவளுக்கு கல்யாண வயசு தாண்டிடும், நீங்க என்னை திரும்ப அடிச்சாக் கூட பரவாயில்ல, ஆதவனுக்கு படிப்பு ஒன்னை தவிர வேற என்ன குறைங்க? நல்லாப் படிச்சிட்டு ஆஃபிஸ்ல உக்கார்ந்து வேலைப் பார்க்கிற நீங்க தான், தரையில படுத்து அழுக்காக்கிட்டு வேலைப் பார்க்கும் அவன்கிட்ட பணத்துக்கு நிக்கிறீங்க? அதுவும் அவன் ஒன்னும் தப்பான வழியில சம்பாதிக்கல,
அதுமட்டுமில்லாம, இப்போல்லாம் நல்லா படிச்சு கோர்டு சூட் போட்டவன் தான் நிறைய தப்பு பண்றான். உங்க ஃப்ரண்ட்யே எடுத்துக்கோங்க, அவர் ஏமாத்துவாருன்னு நீங்க நினைச்சீங்களா?
ஒரு பொண்ணை நல்ல பையனா பார்ர்த்து கட்டிக் கொடுப்பதே பெரிய விஷயமா இருக்கு தெரியுமா? நம்ம வருணா நல்லப்படியா வாழணும்ங்க, கண்ணுக்கு தெரிஞ்சு நல்ல பையன் இருக்குறப்போ, அதை விட்டுடக் கூடாதுன்னு தான் நினைக்கிறேன்.”
“ஆனா ஆதவன் இப்படி கேட்டுட்டப் பிறகு, அவனுக்கு என்னோட தங்கச்சியை கல்யாணம் செஞ்சு வச்சா, அதுப் பணத்துக்காக கட்டி வச்ச மாதிரி ஆயிடாதா?”
“இனி இன்னொரு முறை அவன் அப்படி பேச மாட்டான். அதுக்கு நான் பொறுப்பு, நாமளும் ஒன்னும் அவன்கிட்ட சும்மா ஒன்னும் பணம் வாங்கப் போறதில்ல, கடனா வாங்கி திருப்பி கொடுக்க தான் போறோம், என்ன சொல்றீங்க?”
“வருணா இதுக்கு ஒத்துக்குவாளா? அவகிட்ட நான் போய் இந்த விஷயத்தை எப்படி சொல்வேன். அவ என்னை தப்பா நினைச்சுக்க மாட்டாளா?”
“உங்களுக்கு தயக்கமா இருந்தா நான் பேசறேன். ஆதவன் கேட்டதை இப்போதைக்கு அவக்கிட்ட சொல்ல வேண்டாம். அதை தவிர்த்து நான் அவகிட்ட பேசறேன். என்ன சரியா?” என்று கேட்டபோது, விக்னேஷும் சரியென்று தலையாட்டினான்.

அடுத்து வருணா கோவிலிலிருந்து வந்ததும் செண்பகம் அவளை தனியே அழைத்து பேசினாள்.
“என்ன அண்ணி வீட்ல என்னப் பிரச்சனை? சில மாசமாவே அண்ணனுக்கும் உங்களுக்கும் ஏதோ பிரச்சனைன்னு தோனுதே,”
“அது, ஆமா முன்ன உன்னோட அண்ணனுக்கும் எனக்கும் கொஞ்சம் மனஸ்தாபம் இருந்தது உண்மை தான், ஆனா இப்போ இல்ல, இது வேற பிரச்சனை” என்றவள், விக்னேஷுக்கான பணத் தேவையைப் பற்றிய விவரத்தை கூறினாள்.
“அய்யோ அண்ணி, இப்போ அண்ணன் என்ன செய்யப் போறாங்க? பணம் கிடைச்சுதா? என்னோட அக்கவுண்ட்ல இருக்க பணத்தை வேணா எடுத்து தரட்டுமா? ஆனா ஒரு 30,000 தான் இருக்கும் அண்ணி,”
“பணம் கிடைச்சிடும், ஆதவன் தரேன்னு சொல்லியிருக்கான். ஆனா அவன்கிட்ட இருந்து பணம் வாங்க தான் யோசனையா இருக்கு,”
“ஏன் அண்ணி,”
“நான் முன்ன சொன்னேன் இல்ல, எனக்கும் உங்க அண்ணனுக்கும் மனஸ்தாபம்னு, அது ஆதவன் விஷயம் குறித்து தான்,” என்று பொன்னம்மா பெண் கேட்ட விஷயமும் அதன்பின் நடந்ததையும் கூறினாள்.
“ஆயாவுக்கு உடம்பு சரியில்லாம போனதுக்கு காரணமே இதுதான் வருணா, பத்தாததுக்கு உங்க அண்ணன் ஆயா முன்னாடியே என்னை அடிச்சிட்டாரு, அதான் ஆயா அதை நினைச்சும், அதனால் எங்களுக்குள்ள பிரச்சனை ஆயிடுச்சேன்னு நினைச்சும் வருத்தத்துலேயே போய் சேர்ந்துடுச்சு,
இப்போ அந்த குற்ற உணர்வுல ஆதவன்கிட்ட பணம் வாங்க உங்க அண்ணன் யோசிக்கிறாரு, எனக்கு அப்போதிலிருந்தே உன்னை ஆதவனுக்கு கட்டிக் கொடுத்தா என்னன்னு தான் தோனுச்சு, அதான் இப்பவும் அந்தப் பேச்சை திரும்ப எடுத்தேன். என்னடா ஆதவன் பணம் கொடுக்கப் போறான்னு நம்மள அவனுக்கு கட்டிக் கொடுக்கப் போறாங்களான்னு நினைக்காத, அவன்கிட்ட குற்ற உணர்வு இல்லாம பணம் வாங்கவும், பொன்னம்மா ஆயா ஆசைக்காகவும் தான் இப்படி யோசிச்சோம். ஆனா உன்னோட விருப்பம் தான் ரொம்ப முக்கியம் வருணா, நல்லா யோசிச்சு சொல்லு,”
“இதுல யோசிக்க என்ன இருக்கு அண்ணி, அண்ணனுக்கு உங்க தம்பி மூலம் உதவி கிடைக்கப் போகுது. அதிலும் இது பொன்னம்மா பாட்டி ஆசைன்னு சொல்றீங்க, பாவம் அவங்க அண்ணன் பேசினதை கேட்டு ரொம்ப வருத்தப்பட்டிருப்பாங்க, அதை மனசுலேயே வச்சு மருகிக்கிட்டு இருந்திருப்பாங்க, அதான் அவங்களுக்கு அப்படி ஆகிப் போச்சு, அதில்லாம நீங்களும் அண்ணனும் கண்டிப்பா என்னோட நல்லதை தான் யோசிப்பீங்க, அப்புறம் இதுக்கு நான் எப்படி சம்மதம் சொல்லாம போவேன் அண்ணி, எனக்கு இதுல சம்மதம் தான்” என்றதும் செண்பகம் அவளின் கைகளைப் பிடித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்.
செண்பகம் அறையை விட்டுச் சென்றதும் வருணாவிற்கு ஒரு விஷயம் ஆச்சர்யத்தை கொடுத்தது. “அண்ணி யோசித்து சொல்லுன்னு சொல்லியும், இவள் பட்டென்று இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொண்டது எதனால்? அண்ணனோட பிரச்சனை ஒருபக்கம், பொன்னம்மா ஆயா சாவுக்கு அண்ணனும் ஒரு வகையில் காரணம் என்ற எண்ணம் ஒருபக்கம் என்றால், அவள் உடனே ஒத்துக் கொள்ள காரணம் ஆதவன் என்று தான் சொல்ல வேண்டும், சில காலமாகவே ஆதவனை குறித்து அவள் மனதில் தோன்றிய எண்ணங்கள் தான் இப்போது அவனை திருமணம் செய்துக் கொள்ள உடனே ஒத்துக் கொண்டாள். அப்போது அவனை குறித்து அவள் மனதில் தோன்றிய எண்ணங்களுக்கு என்ன பெயர்? தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டவளுக்கு, அந்த கேள்விக்கான விடை தெரிந்த போது, தன்னாலேயே வெட்கம் அவளை சூழ்ந்து கொண்டது.
ஆனால் ஆதவன் பெண் கேட்ட முறைப்பற்றி அவளுக்கு தெரிய வந்தால்? அதன்பின் அவள் எப்படி அதை எடுத்துக் கொள்வாள்? அவள் சம்மதம் கிடைத்ததும் அடுத்தடுத்து வேலைகள் வேகமாக நடந்து, ஒரு குறிப்பிட்ட முகூர்த்தத்தில் இருவருக்கும் திருமணம் முடிந்தது.
சாரல் வீசும்…