IP 3

Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

சாரல் 3

ன் கணவனிடமும் வருணாவிடம் பேசிவிட்டு சொல்வதாக செண்பகம் பொன்னம்மாவிடம் சொல்லிவிட்டு வந்தவள், அதற்கான நேரத்தை பார்த்துக் கொண்டிருந்தாள். முதலில் விஷயத்தை விக்னேஷிடம் சொல்ல வேண்டும், அவன் என்ன முடிவு சொல்கிறான் என்பதை பொறுத்து தான் வருணாவிடம் இது குறித்து பேச வேண்டும். ஆனால் பொன்னம்மாவை பார்த்துவிட்டு வந்து மூன்று நாட்களாகியும் செண்பகத்திற்கு அந்த சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

விக்னேஷ் வேலை முடித்துவிட்டு வரும் நேரம் வருணாவும் வீட்டில் இருந்தாள். சரி இரவு தங்கள் அறையில் அதைப்பற்றி பேசலாம் என்றால், திடீரென இது குறித்து அவன் கோபப்பட்டு சத்தமாக பேசிவிட்டால், என்னத்தான் இருந்தாலும் வெளியில் கேட்காமலா இருக்கும், வருணாவிற்கு இந்த விஷயம் தெரிந்தால் என்ன நினைப்பாள்?  விக்னேஷிற்கு முதலில் விஷயம் தெரியட்டும், அவனுக்கு சம்மதம் என்றால், அவனே இந்த விஷயத்தை வருணாவிடம் பேசட்டும், இல்லை அவன் விருப்பத்தோடு இவளே கூட வருணாவிடம் பேசலாம்,  எனவே  இப்போதைக்கு கணவனிடம் மட்டுமே இதைப் பற்றி பேசுவோம், என்று முடிவெடுத்து அதற்கான நேரத்திற்காக காத்திருந்தாள்.

அன்று வருணாவின் கல்லூரி தோழிக்கு திருமணம், கூடவே வருணா தான் தன் தோழியை அலங்கரிக்கவும் வேண்டும். மாலை திருமண வரவேற்பு, மறுநாள் காலை திருமணம் இரண்டுக்குமே வருணா தோழியோடு உடனிருக்க வேண்டும், இதுபோன்ற சமயங்களில் செண்பகமும் உடன் செல்வாள். அதேபோல் இரவு நேரத்தில் அங்கு தங்குவதென்பது குறைவு தான், ஆனால் இது வருணாவின் தோழி திருமணம் என்பதால், இன்னும் சில தோழிகளும் வருணாவோடு செல்கிறார்கள் என்பதாலும், இரவில் அவர்கள் தங்குவதற்கு மண்டபத்தில் அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,  கூடவே காலை அனைவரையும் பாதுகாப்பாக அனுப்பிவைக்கிறோம் என்று மணமாக இருக்கும் தோழியின் பெற்றோர்கள் நேரிலேயே வந்து வேண்டிக் கேட்டுக் கொண்டதால், விக்னேஷும் செண்பகமும் வருணாவை தனியே அனுப்ப சம்மதித்தார்கள்.

வருணா மதியம் சாப்பிட்டதுமே தன் தோழிகளோடு கிளம்பிவிட்டாள். அன்று சனிக்கிழமை என்பதால் விக்னேஷும் மதியத்தோடு வேலை முடிந்ததால், வருணா கிளம்பும் நேரம் அவனும் வீட்டிற்கு வந்துவிட்டான். ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரும்படி தோழிகள் சொல்லியிருந்ததால், விக்னேஷ் தன் வண்டியில் கொண்டு போய் வருணாவை விட்டு விட்டு வந்தான். அதன்பிறகு அவன் வீட்டிற்கு வந்ததும்  பொன்னம்மா ஆயா வருணாவை பெண் கேட்ட விஷயமாக செண்பகம் அவனிடம் பேச ஆரம்பித்தாள்.

“என்னங்க, அன்னைக்கு பொன்னம்மா ஆயா வீட்டுக்கு போனேன் இல்ல, அது,  ஆயா ஒரு முக்கியமான விஷயம் பேசத்தான் என்னை கூப்பிட்டிச்சு,”

“அப்படியா? என்ன விஷயமா பேச கூப்பிட்டாங்க,’

“அது, ஆதவன் கல்யாணம் விஷயமா தான் பேச கூப்பிட்டிச்சு, அவனுக்கு கல்யாண வயசு வந்துடுச்சு, அதான் ஆயாக்கு ஏதாவது நடக்கறதுக்குள்ள அவனுக்கு கல்யாணத்தை முடிச்சிட நினைக்குது.”

“நல்ல விஷயம் தான செண்பா. பாவம் தனி ஆளா ஆதவனை வளர்த்திருக்காங்க, அவனுக்கு ஒரு நல்லது நடக்கறத பார்க்கணும்னு அவங்களுக்கு ஆசை இருக்காதா? அதுப்பத்தி என்ன பேசினாங்க? நம்மள பொண்ணு பார்க்க சொல்றாங்களா?”

“அது, அது வந்து, பொண்ணு விஷயம் தான், அது என்னன்னா, நம்ம வருணாவை ஆதவனுக்கு கொடுப்போமான்னு ஆயா கேட்குது.” அவள் சொன்ன நொடி, சாதாரணமாக சோஃபாவில் அமர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்த்துக் கொண்டிருந்தவன், செண்பகம் சொன்ன விஷயத்தை கேட்டு எழுந்து அமர்ந்தான்.

“என்ன செண்பகம், நிஜமா தான் பாட்டி இதைப்பத்தி உன்கிட்ட பேசினாங்களா?”

“ஆமாம்ங்க, ஆதவனுக்கு வருணா கட்டிக்கிற முறை தானே, அதான் ஆயா உரிமையா பொண்ணு கேட்குது.”

“கட்டிக்கிற முறை வந்தா போதுமா? வருணாவுக்கும் ஆதவனுக்கும் பொருந்துமான்னு அவங்க யோசிக்க வேணாம், அவங்களே கேட்டாலும் நீ எடுத்து சொல்லி புரிய வைக்காம, நீயும் இந்த விஷயத்தை எடுத்துக்கிட்டு வந்து இங்க சொல்ற,”

“ஏங்க, ஆதவனுக்கு அப்படி என்ன குறை? அவனுக்காக வருணாவை பொண்ணு கேட்டா என்ன தப்பு?” கணவனும் வருணாவும் இதற்கு சம்மதிப்பார்களா? என்ற சந்தேகம் இருந்தாலும், ஆதவனுக்கு வருணாவை மணம் முடித்தால் என்ன? என்று தன்னிடமே கேட்டுக் கொண்டிருந்தாள் அவள், இதில் கணவன் இது என்னவோ தவறு என்பது போல் பேசவும், அதை அப்படியே வாய் வார்த்தையாக கேட்டும் விட்டாள்.

“என்னது என்ன குறையா? ஆதவன் பத்தாவது தான் படிச்சிருக்கான். படிப்பு விஷயம் ஒன்னே போதாதா? ரெண்டுப்பேருக்கும் பொருத்தமில்லாம போக,

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“படிப்பை தவிர ஆதவன் கிட்ட வேற என்ன குறையை பார்க்க முடியும் சொல்லுங்க, சொந்தமா வொர்க்‌ஷாப் வச்சிருக்கான். கை நிறைய சம்பாதிக்கிறான். என்ன அந்த ஏரியால போய் வருணா எப்படி இருப்பான்னு கவலை இருக்கு, அதுக்கும் இங்கேயே நம்ம பக்கத்துல வாடகைக்கு வீடு எடுத்து வச்சிட்டா போகுது. மாமனார், மாமியார்னு எந்த தொல்லையும் இல்ல, பாட்டி வருணாவை நல்லப்படியா பார்த்துப்பாங்க, அப்புறம் என்னங்க?”

“செண்பா, என்னோட கோபத்தை கிளப்பாத, ஆதவனுக்கு எந்த குறையும் இல்ல, ஆனா வருணாவுக்கு ஆதவன் வேண்டாம், வருணாவுக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செஞ்சு வைக்கணும்னு நான் நினைச்சிருக்கேன் தெரியுமா? அப்பா, அம்மா பொறுப்புல இருந்து வருணாவோட கல்யாணத்தை நான் தான் நடத்தணும், 

அவக்கிட்ட போய் ஆதவனை கல்யாணம் செஞ்சுக்கிறியான்னு கேட்டா, அவ என்ன நினைப்பா? நம்ம அப்பா, அம்மா இருந்தா இப்படியெல்லாம் நடக்குமான்னு நினைக்க மாட்டாளா?”

“கேட்காமலேயே இப்படி சொன்னா எப்படி, கேட்டா தானே தெரியும், ஆதவன் ஒன்னும் தெரியாத ஆள் இல்லையே, அப்பப்போ இங்க வந்து போறவன் தானே, அவனை கட்டிக்கிறியான்னு வருணாக்கிட்ட கேட்கறதுல என்ன தப்பு,”

“ஓ இந்த ஐடியாவுல தான் ஆதவன் அடிக்கடி இங்க வந்து போறானா? உங்க பாட்டி உன் மேல பாசம் இருக்கறது போல ஏதாவது கொடுத்து அனுப்புறது இதுக்கு தானா? இதுல உனக்கும் சம்பந்தம் இருக்குல்ல,” அவன் அப்படி சொன்னதும், என்னையே சந்தேகப்பட்றியா என்பது போல் ஒரு பார்வை பார்த்தாள் செண்பகம்.

“என்ன சொன்னீங்க, திட்டம் போட்டு செய்றோமா? ஏன் இப்படி அபாண்டமா பேசறீங்க, அன்னைக்கு பொன்னம்மா ஆயா இந்த விஷயத்தை பத்தி பேசற வரையிலும் எனக்கு இப்படி ஒரு எண்ணமே வந்தது இல்லை, ஆயாவுக்கு இப்படி ஒரு ஆசை இருந்தாலும், அதுக்காக இப்படி கீழ்த்தரமான வேலை செய்யாது. ஆதவனுக்கு ஆயா மனசுல இப்படி ஒரு ஆசை இருக்க விஷயம் தெரியுமான்னு கூட தெரியல,

வீட்ல ஒரு பொண்ணுன்னு இருந்தா நாலு பேரு சம்பந்தம் பேச தான் செய்வாங்க, பிடிக்கலன்னா அதை சொல்லிட்டுப் போங்க, அதைவிட்டுட்டு இப்படியெல்லாம் பேசாதீங்க,”

“சம்பந்தம் பேசவும் தகுதி வேண்டாமா? நீயும் தான டிகிரி முடிச்சவ, உனக்கு உன்னை விட படிப்பு கம்மியா இருக்க மாப்பிள்ளையை பார்த்தா ஒத்துக்குவியா? உங்கப்பா தான் அப்படி பார்ப்பாரா? நல்லா படிச்சு, நல்ல வேலையில் இருக்கும் மாப்பிள்ளை வேணும்னு தேடித்தான என்னை உனக்கு தேர்ந்தெடுத்தாரு, ஆனா நான் மட்டும் என்னோட தங்கச்சிக்கு பொறுப்பு முடிஞ்சா போதும்னு எவனையாவது கட்டிவைக்கவா?”

“எங்கப்பா நல்ல வேலை, நல்ல படிப்பை விட, நல்ல பையனா இருக்கணும்னு தான் எதிர்பார்த்தாரு, பொறுப்பான பையனா பொண்ணை நல்லா பார்த்துக்கணும்னு தான் நினைச்சாரு, அப்படி நீங்க இருக்கறதால தான் உங்களுக்கு என்னை கட்டிக் கொடுத்தாரு, 

அதனால தான் கல்யாணம் முடிஞ்சதும் வீடு வாங்கணும்னு நீங்க சொன்னப்போ, நான் என்னோட நகையெல்லாம் உங்கக்கிட்ட கழட்டிக் கொடுத்துட்டு கவரிங் நகை போட்டப்ப, நகையெல்லாம் போச்சேன்னு கவலைப்படாம, நீங்க பொறுப்பா நடந்துக்கிறீங்கன்னு சந்தோஷம் தான் பட்டாரு, இந்த வீட்டு மேல இருக்க மீதிக் கடனும் அடைஞ்சதும் தான் குழந்தைப் பெத்துக்கணும்னு நாம தள்ளிப் போட்ருக்க விஷயம் தெரிஞ்சும், உங்க பொண்ணுக்கு எதுவும் விஷேஷம் இல்லையான்னு கேட்கறவங்களுக்கு அமைதியா பதில் சொல்லிக்கிட்டு இருக்காரு, இதெல்லாம் பார்த்தா ஆதவன் வருணாவை இதைவிடவே நல்லா வச்சிப்பான்,” என்று சொல்லி முடிக்கவில்லை, அதற்குள் விக்னேஷ் அவளை அறைந்திருந்தான்.

அதுவும் சரியாக பொன்னம்மா ஆயா வந்திருந்த நேரம் அவளை அறைந்திருந்தான். வெறும் கேட் மட்டும் பூட்டியிருக்க கதவு திறந்திருந்தது. பகல் நேரங்களில் பொதுவாக அவர்கள் வீடு அப்படித்தான் இருக்கும், தேவையென்றால் மட்டுமே கதவையும் பூட்டி வைப்பார்கள்.

விக்னேஷிடமும் வருணாவிடமும் பேசிவிட்டு சொல்வதாக சென்ற செண்பகம் இன்னும் எதுவும் சொல்லவில்லையே என்பதால், நேரிலேயே சென்று செண்பகத்திடம் கேட்கலாம் என்று வந்த பொன்னம்மா, வாசல் அருகே வரும்போதே, இருவரும் காரசாரமாக பேசிக் கொண்டிருந்தார்கள். அதிலும் ஆதவன், வருணாவின் பெயர்கள் அடிபடவே, தான் எந்த விஷயம் பற்றி தெரிந்து கொள்ள வந்தேனோ, அது குறித்து தான் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்து, அழைப்பு மணியை அழுத்தலாமா? இல்லை வந்த சுவடு தெரியாமல் சென்றுவிடலாமா? என்று அவர் தயக்கத்தோடு நின்றிருந்த போது தான், செண்பகத்தை விக்னேஷ் அறைந்திருந்தான்.

அதைப்பார்த்த அவர், “தம்பி,” என்று அதிர்ச்சியில் கத்தவும் தான் இருவரும் வாசலைப் பார்த்தார்கள். அதன்பின் தான் செய்த தவறு புரிய விக்னேஷ் அதுக்குறித்து வெட்கப்பட்டான். விக்னேஷ் அடிப்பான் என்று எதிர்பார்த்திடாத செண்பகத்திற்கு அவன் செயல் கண்ணீரை வர வைக்க, இதில் பொன்னம்மா ஆயாவின் குரல் கேட்டதும், வேகமாக கண்ணீரை துடைத்தப்படியே சென்று கதவை திறந்தாள்.

பொன்னம்மா உள்ளே வந்ததும் இருவருமே மௌனம் சாதித்தார்கள். “செண்பகம், தம்பிக்கிட்ட இப்படித்தான் பேசுவீயா? தம்பியே கோபப்பட்டாலும், நீதான் தன்மையா போகணும், அதை விட்டுட்டு இப்படி கூட கூட பேசறதா, அதுவும் வாசல் கதவை திறந்து போட்டுட்டு இப்படி சண்டை போட்டுக்கிட்டு இருந்தா, அக்கம்பக்கம் இருப்பவங்க, என்ன நினைப்பாங்க” என்று செண்பகத்தை தான் அவர் கண்டித்தார்.

“மன்னிச்சிடுங்க பாட்டி, அவ பேசினதை கேட்டீங்கல்ல, அதான் சட்டுன்னு கோபம் வந்து கை நீட்டிட்டேன். இனி எப்பவும் இப்படி நடக்காது” என்று விக்னேஷ் பொன்னம்மாவிடம் மன்னிப்பு கேட்டான்.

“செண்பகம் கொஞ்சம் ஜாஸ்தியா தான் பேசிட்டா, அதுக்காக இப்படி தான் சட்டுன்னு பொண்டாட்டிக்கிட்ட கை நீட்றதா, பொண்டாட்டிய அடிக்கிறது தப்பு தம்பி, இனி இப்படி நடந்துக்காதீங்க,” என்றவர், செண்பகத்தை பார்த்து,

“செண்பகம், தம்பிக்கு பிடிக்கலன்றப்போ எதுக்கு இதைப்பத்தி விவாதம், ஏதோ வருணாவை பார்த்து எனக்கு இப்படி ஒரு எண்ணம் தோனிடுச்சு, அதுக்காக இது நடந்தே ஆகணும்னு கட்டாயம் இல்ல, இதுக்காக தம்பிக் கூட மல்லுக்கு நிப்பியா?” என்று சொல்லி முடித்தார். பின் விக்னேஷிடம் திரும்பி,

“பிரச்சனைக்கெல்லாம் காரணம் நான் தான் தம்பி, ஏதோ பேரனுக்கு நல்ல வாழ்க்கை அமையணுமேன்னு எதிர்பார்த்து கேட்டுட்டேன் மன்னிச்சுக்கோங்க,” என்று கையெடுத்து கும்பிட்டார். அதில் விக்னேஷ், செண்பகம் இருவருமே பதறினர்.

“அய்யோ என்ன பாட்டி இது, ஆதவனை எனக்கு பிடிக்காதுன்னு இல்ல, ஆனா அவன் வருணாவுக்கு செட் ஆகமாட்டான். அதான் இந்த பேச்சு வேண்டாம்ன்னு சொன்னேன். கோபம் வந்து அடிச்சது கூட செண்பகம் கூட கூட பேசினதுல தான், மத்தப்படி இந்த கல்யாண பேச்சுக்காக இல்ல பாட்டி,”

“புரியுது தம்பி, செட்டாகுதுன்னு தெரிஞ்சப்பிறகு எதுக்கு அதைப்பத்தி பேசணும், இதோட விட்டிடுவோம், இனி இது விஷயமா எந்த பிரச்சனையும் வேண்டாம்” என்றவர், தான் கிளம்புவதாக கூறினார். 

“இரு ஆயா இருந்து ஏதாச்சும் சாப்பிட்டு போ” என்று செண்பகம் சொன்னதற்கு, வேண்டாம் என்று மறுத்தவர், உடனே கிளம்பிவிட்டார்.

ணமகளான தோழி ஹேமாவை அன்றைய திருமண வரவேற்பிற்காக வருணா அலங்கரித்து முடித்ததும், மணமக்கள் இருவரும் மேடையேறியிருக்க, அவளும் மற்ற தோழிகளுடன் இணைந்து கொண்டாள். கல்லூரி தோழிகளுடன் இருந்ததால் அவள் உற்சாகமாகிவிட, திருமண வரவேற்பில் டிஜே இன்னிசை குழு தங்களின் அதிரடி இசையில் அமர்க்களப்படுத்திக் கொண்டிருக்க, அங்கே ஆட்டமும் கும்மாளமுமாக இருந்தது.

தோழிகள் அனைவரும் அமர்ந்த இடத்திலேயே ஆட்டத்திற்கு ஏற்ப கைகளை அசைத்து ஆடிக் கொண்டிருக்க, “நீங்களும் டான்ஸ் ஆடலாமே,” என்று ஒருவர் சொல்லவும்,

“ஹே வருணா நீ ஆடு டீ, நீதானே காலேஜ் கல்சுரல்ஸ்ல சூப்பரா டான்ஸ் ஆடுவ?” என்று மகி என்ற மகேஸ்வரி கூற,

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“அய்யோ, இங்கேயா? நான் ஆடமாட்டேன்.” என்று வருணா முதலில் மறுத்தாள்.

“ஹே நம்ம ஃப்ரண்ட் மேரேஜ் தான, சும்மா ஆடு வரு,” என்று மகி மட்டுமல்ல, மற்ற தோழிகளும் வற்புறுத்தவே, பள்ளியிலும் கல்லூரியிலும் பலமுறை மேடையேறியிருந்ததால் வருணாவிற்கு அதற்குப்பிறகு தயக்கம் ஏற்படவில்லை.

ஒரு அழகான சல்வாரில் தான் அவள் அந்த திருமணத்தில் கலந்து கொண்டாள். அதனால் துப்பட்டாவை சேலைப் போல் போர்த்திக் கட்டிக் கொண்டவள், டிஜே இன்னிசைக் குழு மற்ற தோழிகள் சொன்ன குரு படத்தின் நன்னாரே பாடலை ஒளிப்பரப்பவும் அந்த இசைக்கேற்றார் போல் நடனமாடினாள்.

தோழிகள் அனைவரும் கைத்தட்டி அவளது நடனத்தை ஆரவாரித்துக் கொண்டிருக்க, திருமணத்திற்கு வந்த மற்றவர்களும் மணமக்களை விடுத்து அவளது நடனத்தை ரசித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது தான் ஆதவனும் அந்த மண்டபத்திற்குள் நுழைந்தான். திருமணத்திற்கு என்று தயாராகி வந்ததால், ஒரு நல்ல புது உடையை அணிந்து வந்திருந்தான். தூரத்தில் வரும்போதே வருணா நடனம் ஆடுவது தான் அவன் கண்ணில் பட்டது.

‘வருணாவா? இவ எங்க இங்க?’ என்று வியப்பானவன், அவளது நடனத்தை ரசிக்க வேண்டுமென்று கடைசி இருக்கையாக பார்த்து அமர்ந்து கொண்டான். கண்களோ வருணாவை விட்டு அகலவேயில்லை. அன்று அவள் வீட்டில் சிறிதுநேரம் தான் அவளது நடனத்தை பார்க்க நேர்ந்தது. அதனால் அவளது நடனத்தை முழுவதுமாக பார்க்க வேண்டுமென்று அவன் ஆசைக் கொண்டான்.

அதனால் வந்ததுமே மேடை ஏறி மணமக்களுக்கு பரிசு கொடுத்துவிட்டு பின் உடனே சாப்பிட்டு கிளம்பிவிட வேண்டுமென்று நினைத்து வந்த திட்டத்தை தள்ளிப் போட்டவன், வொர்க்‌ஷாப்பில் அதிக வேலை இருப்பதை கூட மறந்து வருணாவின் நடனத்தை ரசித்தப்படி அமர்ந்திருந்தான்.

பாடலில் இசைக்கேற்றது போல் நளினமாக வருணா நடமாடி முடித்ததும், அனைவரும் கைத்தட்டி அவர்களது பாராட்டை தெரிவிக்க, ஆதவனோ ஒருபடி மேலே சென்று விசிலடித்து அவனது பாராட்டை தெரிவித்தான்.

அனைவரின் கைத்தட்டலில் மகிழ்ச்சியும் பெருமையுமாக சிரிப்போடு வருணா நின்றிருக்க, திடீரென கேட்ட விசில் சத்தத்தில் அவள் அந்த சத்தம் வந்த திசையைப் பார்க்க, அங்கே ஆதவன் அமர்ந்திருந்தான்.

எப்போதும் பரட்டை தலையும் தாடியும் அழுக்கு உடையுமாகவே பார்த்தவனை இன்று நல்ல உடையில் கண்டாள். ‘இவன் எங்கே இங்கே?’ என்ற கேள்வியும் அந்தநேரம் மனதில் தோன்ற, அவன் விசில் அடித்ததையும் அவள் விரும்பவில்லை.

‘ச்சே இவனுமா இந்த கல்யாணத்துக்கு வந்துருக்கான். முன்னமே வந்துட்டானா? நாம தான் கவனிக்கலையா? இவன் இருக்கறது தெரிஞ்சிருந்தா ஆடியிருக்கவே மாட்டேனே,’ என நினைத்தப்படியே அவனை அவள் முறைத்துப் பார்க்க,

அவளின் முகமாற்றத்தை அவனும் கவனித்தவன், ‘நான் விசில் அடித்தது அவளுக்கு பிடிக்கல போலயே, என்ன நினைச்சிருப்பா, என்னை பொறுக்கின்னு நினைச்சிருப்பாளா? ஏற்கனவே என்னைப் பார்த்தா அவளுக்கு பிடிக்காது. இதில் விசில் அடிச்சு வேற அவளை கோபப்படுத்திட்டேன் போல, ஏன் டா எப்போதும் அவக்கிட்ட தப்பான அபிப்ராயம் வர்றது போலவே நடந்துக்கற,’ என்று தன்மீதே ஆதவன் கோபபட்டுக் கொண்டான்.

இதற்குள் வருணா நடனம் ஆடி முடித்ததால், தோழிகள் அனைவரும் மணமக்களுக்கு வாங்கிய பரிசுப் பொருளை கொடுத்து, புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்று மேடை ஏறியவர்கள், வருணாவையும் உடன் அழைத்தார்கள்.

அதனால் அவளும் மேடை ஏற, அதேசமயம் மணமகன் ராஜு கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த ஆதவனை கண்டுக்கொண்டவன், மேடைக்கு அருகில் இருந்த தன் தம்பியை அழைத்து, “ஹே அங்கப் பாருடா, ஆதவன் அண்ணன் அங்க உட்கார்ந்திருக்காரு, போய் கூட்டிட்டு வாடா,” என்று அனுப்பிவைத்தான்.

அவன் யாரை கூப்பிடுகிறான்? என்பதெல்லாம் இந்தப் பெண்கள் அறியாமல், மணமக்கள் அருகே செல்ல, “கொஞ்ச நேரம் இருங்க, முக்கியமானவங்க ஒருத்தங்க வராங்க,” என்று ராஜூ கூறவும், இவர்களும் யாரோ என்றுப் பார்க்க, அங்கே ஆதவன் வந்து கொண்டிருந்தான்.

“என்னடி யாரோ முக்கியமானவங்கன்னு சொன்னதும் ஏதோ விஐபின்னு பார்த்தேன். பார்த்தா பரட்டை தலையும் தாடியுமா யாரோ பரதேசி போல இருக்கான்.” என்று வருணாவுடன் இருந்த ஒரு தோழி சொல்ல, வருணாவிற்கும் அவனது பரட்டை தலையும் தாடியும் பிடிக்காது என்றாலும், தோழி பரதேசி என்று சொன்னது ஒருமாதிரி இருக்க,

“ஹேய் என்னடி இப்படியெல்லாம் பேசற, மாப்பிள்ளை காதில் விழப் போகுது,” என்று கண்டித்தாள். ஆனாலும் அவனை தெரிந்தது போல அவள் காட்டிக் கொள்ளவில்லை.

ஆதவன் மேடையில் நின்றிருந்த வருணாவை பார்த்தப்படி தான் மேடையேறினான். அவன் மேடையேறியதும், “என்ன ண்ணா, வந்து அப்படியே ஓரமா உட்கார்ந்திட்டீங்க, நீங்க வந்ததையே நாங்களும் கவனிக்கல, சாரி ண்ணா.” என்று ராஜூ மன்னிப்பு கேட்க, 

“அய்யோ அப்படியெல்லாம் இல்ல, மெதுவா வரலாம்னு தான் அங்க உட்கார்ந்தேன். நீ கல்யாண மாப்பிள்ளை நீ என்னை கவனிக்கணும்னு நான் எதிர்பார்ப்பது தப்பு. இதுக்கெல்லாம் வருத்தப்படாத,” என்று ஆதவன் சொல்லிக் கொண்டிருக்க, 

‘ஹேமாவின் கணவனாக வரப் போகிற ராஜூக்கு ஆதவன் அவ்வளவு முக்கியமானவனா? எப்படி?’  என்று வருணா யோசித்தாள்.

அதற்கு விடையளிப்பது போல் ராஜூவே, “ஹேமா, இது ஆதவன் அண்ணா, இப்போ நான் நல்லா படிச்சு நல்ல நிலைமையில் இருக்க ஆதவன் அண்ணா தான் காரணம். 10வதுல நான் நல்ல மார்க் எடுத்து தான் பாஸானேன். எனக்கு மெக்கானிக்கல் இஞ்சினியர் ஆகணும்னு ஆசை. ஆனாலும் எங்க அப்பா மேல படிக்க வைக்க முடியாதுன்னு சொல்லி என்னை ஒரு மெக்கானிக் ஷாப்ல வேலைக்கு சேர்த்து விட்டுட்டாரு, அப்போ ஆதவன் அண்ணா அங்க தான் வேலை செய்துட்டு இருந்தாரு,

என்னை மேல படிக்க வைக்கலையேன்னு எந்த ஈடுபாடும் இல்லாம வேலை செய்வேன். ஏதாவது தப்பாகி ஓனர் அண்ணா திட்டிட்டே இருப்பார். அப்போ அழுகையா வரும், அப்புறம் ஆதவன் அண்ணா தான் என்னன்னு என்கிட்ட கேட்க, எனக்கு படிக்கணும்னு ஆசைன்னு சொன்னேன்.

என்னை எங்க ஆயா மேல படிக்க வைக்கிறேன்னு சொல்லுச்சு, ஆனா எனக்கு தான் படிப்பு ஏறாம இந்த வேலைக்கு வந்துட்டேன். உனக்கு படிக்க ஆசையிருக்கு, அப்புறம் ஏன் நீ இந்த வேலை செய்யணும், நீ மேல படிக்கணும்னு சொல்லி, வீட்டில் எங்க அம்மாக்கிட்ட வந்து பேசினாரு, அப்புறம் அம்மா அப்பாக்கிட்ட சண்டைப் போட்டு என்னை ஸ்கூலில் சேர்த்தாங்க,

ஆனாலும் காலேஜ் படிக்க வைக்க அப்பா மாட்டேன்னு சொல்லிட்டாரு, இஞ்சினியருக்கு படிக்க வைக்க நிறைய பணம் தேவைப்படும், என்னால அதுக்கு செலவு செய்ய முடியாதுன்னு சொல்லிட்டாரு,  அப்போ ஆதவன் அண்ணா தனியா வொர்க் ஷாப் ஆரம்பிச்சாரு, அங்க என்னை பார்ட் டைமா வேலைக்கு பார்க்கச் சொன்னாரு, அந்த சம்பளத்தில் நான் படிக்கிறேன்னு அப்பாக்கிட்ட சொன்னதும் அரை மனசா எங்கப்பா ஒத்துக்கிட்டாரு, 

நானும் அண்ணாவோட வொர்க் ஷாப்ல பார்ட் டைமா வேலைக்குப் போனேன். ஆனா அது சும்மா பேருக்கு தான், என்னை அதிகம் வேலை வாங்க மாட்டாரு, அங்க உட்கார்ந்து படிச்சிட்டு தான் இருப்பேன். அதிகம் வேலை வாங்காம அதுக்கு சம்பளமும் கொடுப்பாரு, கூட அவராவும் கொஞ்சம் பண உதவியும் செய்வாரு.

அப்படி படிச்சு தான் நான் இஞ்சினியர் ஆனேன். படிக்கும்போதே காம்பஸ் இன்ட்ர்வியூல வேலையும் கிடைச்சுது. அதில் ஆதவன் அண்ணா எவ்வளவு சந்தோஷப்பட்டாரு தெரியுமா? அன்னைக்கு ஆதவன் அண்ணா இல்லைன்னா, இப்போ நான் ஒரு மெக்கானிக்கல் இஞ்சினியரா இருந்திருப்பேனான்னு சந்தேகம்தான், என் வாழ்நாள் முழுதும் அண்ணா செய்த உதவியை நான் மறக்கவே மாட்டேன்.” என்று நெகிழ்ச்சியாக பேச, 

அங்கு மேடையில் இருந்த வருணா உட்பட அனைத்து பெண்களும் நெகிழ்ச்சியாகினர். இதுவரை ஆதவனை வருணா வேறொரு கோணத்தில் பார்த்திருக்க, இன்று அவன் அவளுக்கு புதியவனாக தெரிந்தான்.

“என்ன ராஜூ இது, நீ நல்லா படிச்ச, அதனால இஞ்சினியர் ஆன, அதுக்கு என்னால செய்ய முடிஞ்ச உதவி அது. என்னோட ஆயா என்னை படிபடின்னு சொல்லுச்சு, ஆனா அப்போ அதை மண்டையில் ஏத்திக்கல, படிப்பும் எனக்கு மண்டையில் ஏறல, அப்புறம் கார், பைக், ஸ்பானர்னு என் வாழ்க்கை மாறிடுச்சு, அப்புறம் நம்மளும் படிச்சிருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்னு எத்தனையோ நாள் நினைச்சுப் பார்த்திருக்கேன்.

தன்கிட்ட இல்லாத ஒருத்தவங்களுக்கு தான் அந்த பொருளோட அருமை புரியும், அதான் படிக்கணும்னு ஆசைப்பட்ட நீ நல்லா படிக்கணும்னு நினைச்சேன். இதுக்கு நீ எனக்கு சிலை வைக்கும் ரேஞ்ச்க்கு பேசாத, நாளைக்கு விடிஞ்சா உனக்கு கல்யாணம். நீ மாப்பிள்ளையா கம்பீரமா இருக்கணும், புரியுதா?” என்ற ஆதவன், ராஜூவிற்காக வாங்கி வந்த மோதிரத்தை அதற்கான பெட்டியிலிருந்து எடுத்து ராஜூவிற்கு அணிவித்தான்.

புகைப்பட நிபுணர் அதை அவரது கேமராவில் பதிவு செய்துக் கொண்டிருக்க, “வாவ் இந்த ஆதவன் செம ஸ்வீட் ப்பா, பார்க்க பரட்டை தலை தாடின்னு ஒரு வில்லன் மாதிரி தெரியறார். ஆனா பரட்டை தலை, தாடியில் அவரோட ஹீரோ இமேஜை ஒளிச்சு வச்சிருக்கார் பா.” என்று மகி சொல்லிக் கொண்டிருக்க,

“அடிப்பாவி, விட்டா இவருக்கு ஒரு ரசிகர் மன்றமே ஆரம்பிச்சிடுவ போல,” என்று இன்னொரு தோழி சொல்ல, 

“ஆரம்பிச்சா என்ன தப்பு, உண்மையிலேயே அவருக்கு எவ்வளவு நல்ல மனசு. இப்படியான ஆளுங்களை பார்ப்பதே இப்போல்லாம் பெரிய விஷயமா இருக்கு, செய்ற உதவியை கூட எல்லோருக்கும் தெரியற மாதிரி வெளிய காண்பிச்சு தான் செய்றாங்க, 

ஆனா இவரை பார்த்தீயா? எவ்வளவு பெரிய உதவி செய்துட்டு சாதாரணமா கல்யாணத்துக்கு வந்து ஒரு ஓரமா உட்கார்ந்திருக்காரு. இப்போ கல்யாண மாப்பிள்ளை கூப்பிட்டு இவ்வளவு சொல்லியும் எவ்வளவு சாதாரணமா பேசறாரு, முடிஞ்சா இன்னைக்கு இவர்க்கிட்ட ஒரு ஆட்டோகிராஃப் வாங்கிட்டு தான் வீட்டுக்குப் போக போறேன். நீ பார்த்துட்டு இரு.” என்று மகி சொல்லி முடிக்க,

“வருணா என்ன இது? ஆட்டோகிராஃப் வாங்கணும்னு எல்லாம் சொல்றா, இது கொஞ்சம் அதிகமா தெரியல,” என்று அந்த இன்னொரு தோழி வருணாவிடம் கேட்க,

வருணா அதற்கு பதில் கூறும் நிலையில் இல்லை. ஆதவனின் புதிய பிம்பத்தை கண்டு பிரமித்துப் போயிருந்தாள்.

“அண்ணா கண்டிப்பா சாப்பிட்டு தான் போகணும்,” என்று ராஜூ சொல்லவும், ஆதவனும் தலையசைத்து மேடைவிட்டு இறங்கியவன், வருணாவை பார்க்க வேண்டுமென்ற ஆசை மனதை அடக்கிக் கொண்டு அந்தப்பக்கம் பார்க்காமல் சென்றான். ஆனால் வருணாவோ அவனை தான் பார்த்தப்படி இருந்தாள்.

அடுத்து தோழிகள் அனைவரும் மணமக்களுக்கு பரிசை கொடுத்து புகைப்படம் எடுத்ததும், “ஹே வாங்கடி சாப்பிடலாம்,” என்று மகி அவசரப்படுத்தினாள்.

“ஹே நாம கிளம்பவா போறோம், அப்புறம் என்னடி அவசரம்? ஹேமா சாப்பிடும்போது சாப்பிடலாம்,” என்று உடன் இருந்த தோழி கூற,

“அதுவரைக்கும் என்னால பசி தாங்க முடியாது. அப்போ வேணும்னா இன்னொரு ரவுண்ட் சாப்பிடலாம், இப்போ வாங்க,” என்று அனைவரையும் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றாள்.

முதல் தளத்தில் திருமண வரவேற்பு நடந்து கொண்டிருக்க, இரண்டாம் தளத்தில் உணவுக் கூடம் இருந்தது. இவர்கள் சென்ற நேரம் முதல் பந்தி நடந்து கொண்டிருக்க, இவர்கள் இரண்டாம் பந்தியில் தான் அமர வேண்டும், 

ஏற்கனவே முதல் பந்தியில் இடமில்லாததால் சிலர் அங்கு காத்திருக்க, அதில் ஆதவனும் ஒருவன். “ஹே ஏற்கனவே இங்க கூட்டமா இருக்கு, இங்க வந்து காத்திருக்க தான் எங்களை கூட்டிட்டு வந்தீயா?” என்று மற்ற தோழிகள் மகியை திட்டிக் கொண்டிருக்க, அவளோ அங்கே நின்றிருந்த ஆதவனின் அருகில் சென்றவள்,

“ஹாய் ஹீரோ, நான் மகி. கல்யாணப் பொண்ணோட ஃப்ரண்ட். நீங்க மேடைக்கு வரும்போது நான் அங்க தான் இருந்தேன். நீங்க் செஞ்சது எவ்வளவு பெரிய நல்ல விஷயம் தெரியுமா? ஆனா எத்தனை தன்னடக்கமா இருக்கீங்க, உங்களை நினைச்சாலே ரொம்ப பெருமையா இருக்கு. உங்களை மாதிரி ஆளுங்கக்கிட்ட தான் நான் ஆட்டோகிராஃப் வாங்கணும்,” என்று சொல்லி அவள் கைப்பையிலிருந்து ஒரு சின்ன டைரியை எடுத்து பிரித்து, அதனுடன் ஒரு பேனாவையும் எடுத்து அவனிடம் நீட்ட,

“இங்கப்பாருங்க, நீங்க யாருன்னே எனக்கு தெரியாது. நான் யாருன்னு உங்களுக்கு தெரியாது. அதேபோல ஆட்டோகிராஃப் வாங்கற அளவுக்கெல்லாம் நான் பெரிய ஆளில்லை. நான் செய்தது சாதாரண ஒரு விஷயம் தான், படிப்பில் ஆர்வமா இருக்க பையன் படிக்கட்டும்னு நினைச்சேன். அவ்வளவு தான், இதை பெரிய விஷயமா பேசி இப்படி ஆட்டோகிராஃப் எல்லாம் கேட்காதீங்க ப்ளீஸ்.” என்றான்.

“வாவ் இன்னும் இன்னும்  உங்க செயலால் என் மனசுல நீங்க உயர்ந்துக்கிட்டே போறீங்க, சரி ஆட்டோகிராஃப் வேண்டாம், ஒரு செல்ஃபி எடுத்துப்போமா?” என்று அவனருகில் நெருக்கமாக நின்று தன் அலைபேசியை அவள் எடுக்க,

“இங்கப்பாருங்க, உங்களை பார்த்தால் நீங்க கல்யாணம் ஆகாத பொண்ணா தெரியுது. இப்படி முன்னபின்ன தெரியாத ஆளோட நின்னு செல்ஃபி எடுக்கறது தப்புங்க, நான் இப்போதும் சொல்றேன். நான் சாதாரண ஒரு ஆள். நான் ராஜூக்காக செய்தது என்னோட மனதிருப்திக்காக, அதை பெருசா பேசாதீங்க, இதோட விடுங்க,” என்றவன், 

அதற்குள் முதல் பந்தி முடிந்து ஆட்கள் வெளியே வரவும், அங்கே தோழிகளுடன் நின்றிருந்த வருணாவை ஒரு பார்வை பார்த்தவன், பின் உள்ளே சென்றுவிட்டான். ஆனாலும் ராஜூ பேசியதை வைத்து யாரோ ஒரு பெண். அதுவும் வருணாவின் தோழி வலிய வந்து பேச, வருணா அவனை தெரிந்தது போல் காட்டிக் கொள்ளாதது அவனுக்கு மிகவுமே வருத்தமாக இருந்தது. அதனால் அவனும் அவளை தெரியாதது போலவே காட்டிக் கொள்ள முடிவெடுத்தவன், அப்படியே நடந்து கொண்டான். 

இங்கு மகியைப் பார்த்து வருணாவின் மற்ற தோழிகள், “இது உனக்கு தேவையா டீ,” என்று கேலி செய்ய, வருணாவோ ஆதவனை குறித்த பிரமிப்பு அதிகமாகி கொண்டே போக, அவன் எனக்கு தெரிந்தவன் தான், என் உறவினன் என்று பெருமையாக சொல்ல நினைத்தாள். 

ஆனாலும் இதுவரை அமைதியாக இருந்துவிட்டு, இப்போது அவனை எனக்கு தெரியும், அவன் என் உறவினன் தான் என்று சொல்ல அவளுக்கு சங்கடமாக இருந்ததால், அமைதியாக இருந்து கொண்டாள். சிறிது நேரத்தில் ஆதவனும் சாப்பிட்டு விட்டு கிளம்பிவிட அதுவரையுமே வருணாவின் பார்வை அவனை பின் தொடர்ந்தது.

ன்னத்தான் விக்னேஷ் செண்பகத்திடம் இந்த விஷயம் குறித்து திரும்பவும் பேச வேண்டாம் என்று பொன்னம்மா ஆயா சொல்லிவிட்டு வந்திருந்தாலும், அவர் ஆசை நிறைவேறாது என்பதை அவர் மனசு ஏற்றுக் கொள்ள மறுத்தது. தன் பேரனுக்கு வருணாவை மணம் முடிக்க முடியாமல் போய்விட்டதே என்பதே அவரின் பெரிய கவலையாக மாறி, மனக்கவலையால் உடல்நிலையும் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையானார்.

நன்றாக இருந்த தன் ஆயாவுக்கு திடீரென்று உடல்நலம் சரியில்லாமல் போன காரணம் ஆதவனுக்கும் தெரியவில்லை. மருத்துவர்கள் உடம்பில் உள்ள பிரச்சனைகளுக்கு மருந்து கொடுத்தார்களே தவிர, அவரின் மனக்கவலை யாருக்கும் தெரியாததால் அதற்கான மருந்து என்ன? என்று யாருக்கும் தெரியவில்லை.

செண்பகத்திற்கு அது தெரிந்திருந்தாலும் அதற்கு என்ன செய்வது என்று அவளுக்கும் புரியவில்லை. அன்று கைநீட்டி கணவன் அடித்ததிலிருந்து, அவனிடம் சரியாக முகம் கொடுத்து அவள் பேசவில்லை. தானும் கொஞ்சம் அதிகமாக தான் பேசிவிட்டோம் என்று அவளுக்கு புரிந்தாலும், அவன் கைநீட்டி எப்படி அறையலாம்? என்ற கேள்வியும் அதில் உண்டான கோபத்திலும் அவனிடம் முதலில் அவள் பேசவில்லை. பின் வருணாவும் அந்த வீட்டில் இருப்பதை உணர்ந்து வெளிப்படையாக அவனிடம் கோபத்தை காட்டாமல், சாதாரணமாக நடந்து கொண்டாலும், முன் போல் அவள் இல்லை என்பது வருணாவுக்கும் புரிந்தது. தன் அண்ணனிடமும் இது பற்றி கேட்டபோது அவன் ஒன்றுமில்லை என்று கூறிவிட்டான். பின் மனைவியிடம் தனிமையில் மன்னிப்பும் கேட்டான். 

இருந்தும் பொன்னமா ஆயாவிற்கு உடல்நலம் சரியில்லை என்று கேள்விப்பட்டதும் அந்த உறுத்தலும் அவளுக்கு சேர்ந்து கொண்டது. விக்னேஷுக்கும் கூட அது உறுத்தலாக தான் இருந்தது.

ஓரளவுக்கு வேலைகளை குறைத்துக் கொண்டு ஆதவன் தன் ஆயாவுடன் அதிக நேரத்தை செலவிட்டான். அடிக்கடி வீட்டுக்கும் மருத்துவமனைக்குமாகவே பொன்னம்மாவை கூட்டி கொண்டு  நடையாய் நடந்தான்.  செண்பகமும் அவ்வப்போது அவரை வந்து பார்த்துவிட்டு செல்வாள். வரும் போதெல்லாம், “வருணா இல்லன்னா என்ன? ஆதவனுக்கு அதைவிட நூறு மடங்கு உசத்தியா பொண்ணு பார்த்து கட்டி வைப்போம் ஆயா, இதுக்கெல்லாம் வேதனைப்பட்டு உடம்பை கெடுத்துக்கிட்டா எப்படி? ஆதவனுக்காக நீ இன்னும் கொஞ்சநாள் இருக்க வேண்டாமா?” என்று தன் வார்த்தைகளால் ஆறுதல் சொல்லிவிட்டு செல்வாள். 

“ஆயாக்கு என்ன பிரச்சனை அக்கா, உனக்கு ஏதாவது தெரியுமா?” என்று ஆதவன் கேட்கும்போது, செண்பகத்தால் பதில் சொல்ல முடியாது. இதுபத்தி ஆதவனுக்கு எதுவும் தெரிய வேண்டாம் என்று பொன்னம்மா   சொல்லி வைத்திருக்கிறார். ஆதவனும், செண்பகமும் இல்லாத சமயத்தில் பக்கத்து வீட்டு கோமளா தான் பொன்னம்மாவை பார்த்துக் கொள்வாள். 

வருணாவும், விக்னேஷும் கூட இரண்டு முறை பொன்னம்மாவை பார்த்துவிட்டு சென்றார்கள். அவர்கள் வந்த சமயத்தில் அவரும் மனதில் உள்ள வருத்தத்தை வெளிப்படையாக காட்டிக் கொள்ளவில்லை. இப்படியே பொன்னம்மாவிற்கு உடல்நலம் சரியில்லாமல் ஆகி இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன. எப்படியும் அவர் குணமாகி நல்லப்படியாக வீடு திரும்ப வேண்டும் என்று அனைவரும் கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தனர். ஆனால் அவருக்கோ திடீரென உடல்நலம் மோசமாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைகள் பலனளிக்காமல் இரண்டே நாட்களில் அவர் இறைவனடி சேர்ந்தார்.

தன் ஆயா தன்னை விட்டு சென்றுவிட்டார் என்பதையே ஆதவனால் நம்ப முடியவில்லை. வயதான காரணம் ஒன்றை தவிர, மற்றப்படி அவர் ஓரளவுக்கு ஆரோக்கியமாகத்தான் இருந்தார். அவரை இப்படி உடனே மரணம் வந்து ஆட்கொள்ளும் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை. அவரின் மரண செய்தி விக்னேஷின் மனதை அரித்தது. தன் மறுப்பின்மையை கூட நாசுக்காக பாட்டியிடம் எடுத்து சொல்லியிருக்கலாம், அதை விடுத்து அன்று செண்பகத்திடம் அப்படி நடந்திருக்கக் கூடாது. அதை நேரில் பார்த்ததில் தான் பாட்டிக்கு இப்படியெல்லாம் ஆகிவிட்டது. கடைசியில் இப்படி திடீரென அவர் இவர்களையெல்லாம் விட்டு செல்வார் என்று அவனுக்கு அன்று தெரியவில்லை. இப்போது அதற்காக வருந்தினான். இதில் செண்பகத்தின் குற்றம் சாட்டும் பார்வை அவனை இன்னும் கூடுதலாக குற்றவாளியாக்கியது.

வருணாவை பொறுத்தவரை இதுப்பற்றியெல்லாம் அவளுக்கு எதுவும் தெரியாது. பொன்னம்மா பாட்டி இறந்ததே அவளுக்கு மிகவும் வேதனையான விஷயமாக இருந்தது. இதில் அவரின் உடலுக்கு மாலைப்போட்டு வீதியில் மற்றவர்கள் துக்கம் அனுஷ்டிப்பதற்காக வைத்திருந்தபோது, பாட்டியின் உடலை விட்டு எங்கும் செல்லாமல் அவருக்கு அருகிலேயே அமர்ந்திருந்த ஆதவனை பார்த்தபோது மிகவும் பாவமாக இருந்தது. 

 முன்பு அவனது தோற்றத்தை பார்த்து அவள் எப்படியெல்லாமோ நினைத்திருக்க, அன்று திருமண மண்டபத்தில் அவனைப் பற்றிய எண்ணம் மாறியிருந்தது. இப்போதோ அவனை பார்க்கும்போது மீசை தாடி வைத்த அன்புக்காக ஏங்கும் ஒரு குழந்தையாக தான் நினைத்தாள். 

வெளிப்படையாக கண்ணீர் வடிக்கவில்லையென்றாலும் அவன் அமர்ந்திருந்த தோற்றம், அவர் இறந்தது தெரியாமல், “ஏன் படுத்திருக்க ஆயா, எழுந்து வா ஆயா, நீ எனக்காக இருக்கணும்,” என்று சொல்வது போல் தெரியவே, அவன் அருகில் சென்று அவனை அணைத்து அவனுக்கு ஆறுதல் சொல்லிட வருணாவின் மனம் துடித்தது.

சாரல் வீசும்…