IP 13

Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

சாரல் 13

சிறிது நேரம் ஆதவனின் கோபத்தை நினைத்து அழுதுக் கொண்டிருந்தவள், பின் அந்த கோபம் ராகேஷ் மற்றும் தீப்தி மீது திரும்பவே, உடனே தீப்தியை அலைபேசியை அழைத்தாள். சில நிமிடங்களில் அவளது அழைப்பை ஏற்று தீப்தி பேசவும்,

“ஹே தீப்தி உன்னோட அண்ணன் அவங்க மனசுல என்ன நினைச்சுட்டு இருக்காங்க, எதுக்கு தேவையில்லாம என்னோட வாழ்க்கையில் குறுக்க வராங்க, எப்பவோ நடந்து முடிஞ்ச விஷயத்தை ஏன் இப்போதும் பேசறாங்க, என்மேல என்னோட ஹஸ்பண்ட், அண்ணா, அண்ணிக்கு இல்லாத அக்கறை அவங்களுக்கு ஏன்?” என்று கோபத்தில் பொறியவும்,

“ஹே என்னாச்சு ப்பா, எதுக்கு இவ்வளவு கோபம்,” என்று தீப்தி கேட்டாள்.

“ஆமாம் நான் உன்னோட மேரேஜ் அப்போ கடைசி ரெண்டுநாள் மேக்கப் போட வரமுடியாதுன்னு சொல்ல போன் செய்யும்போது என்ன சொன்னேன். என் ஹஸ்பண்ட் என்னை சந்தேகப்பட்றார். அவர் என்னை உன்னோட பங்ஷனுக்கு வர விடல, அவரோட சண்டை போட்டு என்னோட அண்ணா வீட்டுக்கு போயிட்டேன். அப்படி ஏதாச்சும் சொன்னேனா? 

உன் அண்ணாவால பிரச்சனைன்னு சொன்னேன். அதுக்கு காரணம் என்னோட ஹஸ்பண்ட்னா சொன்னேன்?” என்று வருணா கேட்க,

“இல்லப்பா, நீ சொன்னது எனக்கு அப்படித்தான் புரிஞ்சுது.”

“சரி நீ தப்பாவே புரிஞ்சிக்கிட்டாலும் அதை என்கிட்ட கேட்டு கிளியர் செஞ்சிருக்கணும், சரி அதை உன் அண்ணனிடம் அப்படியே சொன்னது கூட பரவாயில்லை. ஆனா அவர் அதை என் ஹஸ்பண்ட்க்கிட்ட ஏன் அப்படியே கேட்கணும்? அதுவும் இத்தனைநாள் கழிச்சு,

உண்மையாகவே உன் அண்ணனால எனக்கு பிரச்சனை தான், அது என் ஹஸ்பண்ட் மூலமா இல்லை, எங்க ஏரியா ஆட்கள் மூலமா,  ஒரு ஆள் கூட தினம்  காரில் வந்து இறங்கினா, அதுவும் அந்தமாதிரி ஏரியால, சிலபேர் தப்பா பேச ஆரம்பிச்சிட்டாங்க, அதான் 

அதில்லாம எனக்குமே உன் அண்ணனோட அங்க இருந்து காரில் வருவது பிடிக்கல, அவங்க அதிகபிரசங்கித்தனமா பேசறாங்க, நான் கல்யாணம் ஆன பொண்ணு, என்கிட்ட ஓவர் உரிமை எடுத்துக்கறது எனக்கு தர்மசங்கடமா இருக்கு, 

நான் ஒரு மெக்கானிக்கை கல்யாணம் செய்துக்கிட்டா அவங்களுக்கு என்ன? ஆதவன் எனக்கு ஏத்தவரில்லை என்பது போல என்கிட்டவே பேசறாங்க, அதான் எங்க ஏரியா ஆளுங்க தப்பா பேசறதை வச்சு அவங்களை அவாய்ட் செய்ய நினைச்சேன். அதில்லாம அன்னைக்கு வேற ஒரு காரணத்துக்காக நான் என் அண்ணா வீட்டுக்கு போக வேண்டியதா போச்சு,

ஆனா எல்லாம் பிரச்சனையும் கொஞ்சநாளில் சரியாகிடுச்சு, அதுவுமில்லாம நான் ஆதவனை பிடிச்சு தான் கல்யாணம் செய்துக்கிட்டேன். எனக்காக அவர் எல்லாம் பார்த்து பார்த்து செய்றார் தெரியுமா? இப்படி ஒரு ஹஸ்பண்ட் வேற யாருக்கும் கிடைச்சிருக்குமா தெரியல, அந்த ஏரியால என்னை தப்பா சொல்லிட்டாங்கன்னு எனக்காக புதுசா வீடே கட்டி அந்த இடத்திலிருந்து என்னை கூட்டிட்டு வந்துட்டார். நான் அவரோட ரொம்ப ரொம்ப சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்கேன்.

ஆனா உன்னோட அண்ணன் அவர்க்கிட்ட போய் நான் அவருக்கு கிடைச்சதே பெருசு என்பது போல பேசியிருக்காங்க, இதில் உன்னோட அண்ணனுக்கு என்ன பிரச்சனை. உன் அண்ணன் இப்படி பேசினதுக்கு வேற யாராச்சும் இருந்திருந்தா கண்டிப்பா தப்பா நினைப்பாங்க தெரியுமா? ஏதோ ராகேஷ் உன்னோட அண்ணன், அவருக்கு ரெகுலர் கஸ்டமர்னு நாங்க பொறுமையா இருக்கோம், இன்னொரு முறை இப்படி உன் அண்ணன் நடந்துக்கிட்டா, அப்புறம் நான் என்ன செய்வேன்னு தெரியாது. உன்னோட அண்ணன்க்கிட்ட சொல்லி வை.” என்று தீப்தியின் பதிலை கூட கேட்காமல் தன் கோபத்தை கொட்டியவள் அலைபேசி அழைப்பை அணைத்தாள்.

இங்கு தீப்தியோ உடனே தன் அண்ணனுக்கு அழைத்து வருணா பேசியதை கூறியவள், “உனக்கு ஏன் தேவையில்லாத வேலை ண்ணா, நான் உன்கிட்ட சொன்னதை நீ அப்படியே வரு ஹஸ்பண்ட்க்கிட்ட கேட்பியா? வரு என்னைப்பத்தி என்ன நினைப்பா, இனி தேவையில்லாம வருணா விஷயத்தில் தலையிடாத,” என்று கூறினாள்.

அதைக்கேட்ட ராகேஷோ உடனே வொர்க்‌ஷாப் சென்று ஆதவனை பார்த்தவன், “சாரி ஆதவன், வருணா தீப்தியோட ஃப்ரண்ட் என்பதால அவளையும் நான் என்னோட தங்கை மாதிரி தான் பார்க்கிறேன். திடீர்னு அவளை உன்னோட மனைவியா, அதுவும் அப்படி ஒரு ஏரியால பார்த்ததும் எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு, ஏதோ சூழ்நிலை அதான் அவ உன்னை கல்யாணம் செய்துக்கிட்டளோன்னு நினைச்சேன். 

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

கூட தீப்தி சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டு தேவையில்லாம உன்கிட்ட பேசிட்டேன். நான் பேசினது எதையும் மனசுல வச்சுக்காத, இனி ஒருமுறை இப்படி நடக்காது. ரியலி சாரி.” என்று மன்னிப்பு கேட்டான்.

“பரவாயில்லை விடுங்க ராகேஷ் சார், உங்களுக்கும் உங்க தங்கைக்கும் வருணா மேல அக்கறை இருக்கறதால தானே இப்படி நடந்துக்கிட்டீங்க, ஆனாலும் நீங்க அப்படி பேசவும் மனசுக்கு கொஞ்சம் கஷ்டமாகிடுச்சு, வருணா என் வாழ்க்கையில் வந்ததே வரம்னு நான் நினைச்சுட்டு இருக்கேன். ஆனா அது அவளுக்கு சாபம் என்பது போல் நீங்க பேசவும் என்னால தாங்கிக்க முடியல,” என்று ஆதவன் கூற,

“ச்சே நான்தான் அப்படி நினைச்சுக்கிட்டேன். ஆனா வருணா என்னைக்கும் அப்படி நினைச்சதில்ல ஆதவன். தேவையில்லாம குழப்பிக்க வேண்டாம், நீங்க ரெண்டுப்பேரும் மேட் ஃபார் ஈச் அதரா நல்லா வாழ்விங்க, திரும்பவும் சாரி,” என்றவன் ஆதவனிடம் விடைப்பெற்றுக் கொண்டு சென்றான்.

ராகேஷிடம் தன்மையாக பேசினாலும் வருணாவிற்கு போன் செய்த ஆதவனோ, அவள் அழைப்பை ஏற்று ஹலோ சொன்னதும், “உனக்கு அறிவு இருக்கா? இல்லையா? காலேஜுக்கு எல்லாம் போய் படிச்சு இருக்க தானே, அப்படி அங்க போய் என்னத்த படிச்சு கிழிச்ச,” என்று மறுபடியும் கோபமாக பேசினான்.

அவனது கோபம் குறையாமல் இருப்பதை பார்த்து அதை தாங்கிக் கொள்ள முடியாதவளாக, “இப்போ என்ன?” என்று அவள் சிணுங்கலாக கேட்டாள்.

“வீட்டுக்கு வந்து என்ன சொல்லிட்டு போனேன். நம்ம வீட்டுக்குள்ள நடக்கறது வெளியே தெரியக் கூடாதுன்னு தானே சொன்னேன். ஆனா திரும்ப உன் ஃப்ரண்ட்க்கிட்ட பேசி நடந்ததை அப்படியே சொல்லியிருக்க, ராகேஷ் என்னடான்னா என்கிட்ட வந்து மன்னிப்பு கேட்டுட்டுப் போறான். இதெல்லாம் எதுக்கு?” என்று கொஞ்சம் கூட கோபம் குறையாமல் அவன் கேட்க,

“ராகேஷ் வந்து மன்னிப்பு கேட்டாங்களே, அதுக்குதான் பேசினேன்.”

“ராகேஷ் வந்து மன்னிப்பு கேட்டா எல்லாம் ஆச்சா, உண்மையா என்னை புரிஞ்சு வந்து அவன் மன்னிப்பு கேட்டிருப்பானா? ஏதோ நீ அவன் தங்கச்சிக்கிட்ட கோபமா பேச போய் கேட்டிருக்கான். ஆனா மனசுல என்ன நினைச்சிருப்பான். இப்போதும் உன்னை கோபமா திட்டியிருப்பேன். மிரட்டியிருப்பேன். அதான் நீ உன் ஃப்ரண்ட்க்கிட்ட கோபமா பேசியிருக்க, அப்படி நினைச்சிருக்க மாட்டானா?”

“அவங்க எப்படி நினைச்சா நமக்கென்ன? அதான் மன்னிப்பு கேட்டாச்சே,”

“அதான் நானும் சொல்றேன். ராகேஷ் எப்படி நினைச்சா என்ன? அதுக்கு எதுக்கு திரும்ப உன் ஃப்ரண்ட்க்கிட்ட இதைப்பத்தி கேட்கணும், தேவையில்லாத வேலை தானே,”

“அப்போ எதுக்கு வீட்டுக்கு வந்து ராகேஷ் இப்படியெல்லாம் பேசினான்னு வந்து சத்தம் போட்டீங்களாம்?” அவள் கேட்க,

“நீ செஞ்ச தப்பு உனக்கு தெரிய வேண்டாமா? அதுக்கு தான், ஆனாலும் நீ செஞ்ச தப்பை புரிஞ்சிக்கவே இல்லையே,  எனக்கு இருக்க கடுப்பில் நான் வேற ஏதாவது திட்டிடப் போறேன். போனை வை. ம்ம் மறக்காம இதையும் உன் ஃப்ரண்ட்க்கிட்ட சொல்லிடு.” என்று  சொல்லிவிட்டு அலைபேசி அழைப்பை அணைத்தான்.

‘எதுக்கு சும்மா இவர் என்னையே திட்டிட்டு இருக்கார். எப்பவோ நடந்த விஷயம், அதுக்கு இப்போ ராகேஷ் வந்து பேசினா அதுக்கு நான் என்ன செய்யட்டும்? அப்படியும் தீப்திக்கிட்ட பேசி ராகேஷ் போய் மன்னிப்பு கேட்டும் இவர் ரொம்ப தான் ஓவரா போயிட்டு இருக்காரு, புதுசா  என்கிட்ட எரிஞ்சு விழறார். வீட்டுக்கு வரட்டும் அப்ப தான் இருக்கு அவருக்கு,” என்று தனக்குள்ளேயே புலம்பிக் கொண்டாள்.

மாலை ஆதவன் வரவை அவள் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, அவனோ எப்போதும் வரும் நேரம் தாண்டியும் வீட்டிற்கு வரவில்லை. சாதாரணமாக இருந்தால் அவனுக்கு அதிக வேலை இருக்கும், அதான் வர தாமதமாகுது போல் என்று நினைத்து அமைதியாக இருப்பாள்.

ஆனால் இன்று மதியம் வீட்டிற்கு வந்து கோபப்பட்டுச் சென்றவன், அங்கேயும் போனில் கோபத்தோடு பேசியவன், வீட்டிற்கு வர தாமதமாகிறது என்பதால், அவன் நேரத்திற்கு வீட்டிற்கு வராததது அவளுக்கு இன்னும் கவலையளிக்க,  அவனது அலைபேசிக்கு அழைத்து பார்த்தாள். ஆனால் அது அணைக்கப்படிருந்தது. 

‘என்னாச்சு ஏன் இவர் போன் ஆஃப்ல இருக்கு, போன்ல் சார்ஜ் இல்லன்னா வொர்க்‌ஷாப்ல இருந்தா சார்ஜ் போட்டுருப்பாரே, ஒருவேளை அங்க இருந்து கிளம்பிட்டாரோ, வர வழியில் போன் ஆஃப் ஆகிடுச்சா,” என்று சிந்தித்தவள், இன்னும் சிறிது நேரம் காத்திருக்க ஆரம்பித்தாள். ஆனால் அவள் நினைத்தது போல் அவன் கிளம்பிய நேரத்திற்கு இந்நேரம் வீடு வந்திருக்க வேண்டுமே, என்னாச்சு?’ என்று மீண்டும் அவளுக்கு குழப்பமாக அதனுடன் கவலையும் பதட்டமும் சேர்ந்து கொண்டது.

இந்தமுறை அவள் முருகனுக்கு அழைத்து பேச, “அண்ணன் எப்பவோ கிளம்பிட்டாரே அண்ணி, இதோ நாங்களும் வொர்க்‌ஷாப் மூடிட்டு கிளம்ப போறோம்,” என்று அவன் கூற,

“என்னடா சொல்ற? ஆனா அவர் இன்னும் வீட்டுக்கு வரலையே, போன் வேற ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருக்கு, எனெக்கென்னமோ பயமாயிருக்குடா?” என்று கவலைக் கொண்டாள்.

“வீட்டுக்கு வரலையா? வீட்டுக்கு கிளம்பறதா தான் எங்கக்கிட்ட சொல்லிட்டு போனாரு, திடீர்னு வேற வேலை வந்திருக்கும், அவர் என்ன சின்ன குழந்தையா? வந்துடுவார் அண்ணி. பயப்படாதீங்க,” என்று சொல்லி முருகன் அழைப்பை அணைத்துவிட்டான்.

நடந்த பிரச்சனை முருகனுக்கு தெரியுமா? என்பது தெரியவில்லை. வீட்டிற்கு வருவதாக சொல்லி கிளம்பியவன் ஏன் இன்னும் வரவில்லை. இவள் மீது இருக்கும் கோபம் இன்னும் குறையவில்லையா? அதான் வீட்டிற்கு வர பிடிக்காமல் வேறு எங்காவது சென்றுவிட்டானா? ஆதவன் இப்படியும் செய்வானா? புரியாமல் குழப்பத்தோடு நேரங்களை கடத்தினாள். கூட அழுகையும் வந்தது. அழுதபடியே படுத்தவள் உறங்கியும் விட, அழைப்புமணி சத்தம் கேட்கவும் பதறி எழுந்தாள். மணியை பார்த்தால் 11 என்று காட்டியது.

ஆதவன் தான் வந்திருக்கிறான் என்பதை உணர்ந்து, வேகமாக சென்று கதவை திறந்தவள், அவனை பார்த்ததும் தான் நிம்மதி பெருமூச்சு விட்டாள். ஆனாலும் இத்தனைநேரம் அலைக்கழித்தவனை பார்த்து அவளுக்கு கோபம் வர,

“நான் செஞ்சது தப்பாவே இருக்கட்டும், அதான் எனக்கு அறிவில்லைன்னு சொன்னீங்களே, நீங்க அறிவோட நடந்துக்கலாமே, அதென்ன நீங்க கோபமா இருக்கறதை காட்டிக்க இவ்வளவு லேட்டா வருவீங்களா?” என்று சொல்லியப்படி அவனை அடிக்க ஆரம்பித்துவிட்டாள்.

“அய்யோ வரூ, நான் அப்படி நடந்துப்பேனா? நீதானே நான் உன்கிட்ட சண்டை போடறதேயில்லைன்னு கவலைப்பட்ட, அதான் உன்கிட்ட கோபிச்சிக்கிட்டு இருந்தா நீ எப்படி எடுத்துப்பன்னு பார்க்கத்தான்,” என்று சொல்லியப்படி அவன் கூடுதலாக அவளிடம் அடிவாங்கிக் கொண்டான்.

பின் அடிப்பதை நிறுத்தியவள், “ஏதோ ஒரு பேச்சுக்கு சொன்னா, அதுக்கு உண்மையிலேயே இப்படி செய்வீங்களா? நீங்க வர லேட்டானதும் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா? என்னைப்பத்தி உங்களுக்கு கவலையே இல்லை.” என்று சிணுங்கினாள்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“அய்யோ வரூ, நான் சொல்றதெல்லாம் அப்படியே நம்பிடுவியா? ராகேஷ் வந்து பேசினதும் முதலில் எனக்கு வருத்தமா தான் இருந்துச்சு, நடந்ததை ஃப்ரண்ட்க்கிட்ட அப்படியே சொல்லணுமான்னு கோபம் வந்துச்சு, அதான் வந்து அப்படி பேசிட்டேன். ஆனா வொர்க்‌ஷாப் போனதும் இதுக்காக உன்கிட்ட கோபப்பட்டதில் எனக்கே ஒருமாதிரி இருந்துச்சு,

அப்புறம் ராகேஷ் வந்து மன்னிப்பு கேட்டப்பல்லாம், நீ எனக்காக தீப்திக்கிட்ட பேசினதுக்கு சந்தோஷமா தான் இருந்துச்சு, ஆனாலும் நம்ம வீட்டில் நடக்கறது எல்லாமே எல்லோர்க்கிட்டேயும் அப்படியே சொல்லணும்னு இல்லை. நம்மளை தப்பா நினைச்சா நினைச்சுட்டு போறாங்க, அதுக்கு எதுக்கு தேவையில்லாம நாம விளக்கம் கொடுத்துக்கிட்டு, அதை உனக்கு புரிய வைக்கணும்னு நினைச்சேன்.

இருந்தாலும் முதல்முறை கோபமா பேசினதுக்கே நீ நடந்துக்கிட்டதை பார்த்ததும், சும்மா கோபமா பேசித்தான் பார்ப்போமேன்னு பேசினேன். ஆனா உள்ளுக்குள்ள இதனால நீ திரும்ப கோபிச்சிக்கிட்டு உன்னோட அண்ணா வீட்டுக்கு போயிடுவியோன்னு திக்திக்னு இருந்துச்சு, இதில் திரும்ப ராகேஷ் விஷயத்துக்காகவா நான் உன்கிட்ட கோபமா நடந்துக்கணும், அது எனக்கே பிடிக்கல, அதுக்கு உன்னை சமாதானப்படுத்த தான் சீக்கிரம் கிளம்பினேன்.

அப்பவே போனில் சார்ஜ் ரொம்ப கம்மியா தான் இருந்துச்சு, சரி வீட்டுக்கு வரவரைக்கும் சார்ஜ் இருக்கும்னு கிளம்பிட்டேன். ஆனா ஒரு பழைய கார் விற்பனைக்கு வருதுன்னு ஒரு ஃப்ரண்ட் போன் செய்து சொன்னான். வர வழியில் தான் அவனோட வொர்க்‌ஷாப் இருக்கு, சரி போய் பார்த்துட்டு வந்துடுவோமேன்னு நினைச்சு போனேன். 

அங்க கார் ஓனர் வர கொஞ்சம் நேரமாகிடுச்சு, அப்புறம் அவரோட டீல் பேசி முடிக்க இன்னும் கொஞ்சநேரம் ஆகிடுச்சு, சரி வர லேட்டாலும்னு உனக்கு போன் செய்து சொல்லலாம்னா போன் சுத்தமா சார்ஜ் இல்லை. சரி கூட இருக்கவங்க போன் மூலமா பேசலாம்னு பார்த்தா, உன்னோட பழைய நம்பர்னா நல்லா ஞாபகம் இருக்கும், புது நம்பர் போனில் சேவ் செஞ்சிருக்கா, அதுவும் நீயே செஞ்சியா? அதான் ஞாபகத்துக்கு வரல, முருகன், சுகுமார் யாரோட நம்பரும் அந்த நேரத்துக்கு ஞாபகத்துக்கு வரல,

எப்படியோ நீ டென்ஷனா இருப்பன்னு தெரியும், சரி வீட்டுக்கு வந்ததும் விளக்கமா சொல்லிக்கலாம்னு டீலை முடிச்சிட்டு வரேன். அதான் லேட்டே தவிர, நான் உன்மேல கோபப்பட்டு இப்படி செய்வேனா டீ,” என்று ஆதவன் கூற,

“இருந்தாலும் கொஞ்சம் என்னை பயமுறுத்திட்டீங்க, அதுவும் எவ்வளவு ஆசையா நீங்க வரவும் ஒரு விஷயத்தை சொல்லணும்னு நினைச்சேன் தெரியுமா? ஆனா மதியமே வந்து என்னை பயம் காட்டினது பத்தாதுன்னு இப்போ இன்னும் பயம் காட்டியிருக்கீங்க, அப்பா நீங்க எப்போதும் என்கிட்ட கோபப்படாமலே இருங்க, அதுதான் நல்லா இருக்கு,” என்று அவள் கூறவும், ஆதவன் வாய்விட்டு சிரித்தான்.

பின்போ, “ஆமாம் என்கிட்ட ஆசையா ஏதோ சொல்லணும்னு இருந்தேன்னு சொன்னீயே, என்ன அது வரூ,” என்று அவன் கேட்க,

“அது, அது,” என்று அவள் வெட்கத்தில் சொல்ல தயங்க,

“என்னது டீ, இப்படி வெட்கப்படும் அளவுக்கு என்ன? சீக்கிரமா சொல்லேன்.” என்று அவன் அதை தெரிந்து கொள்ளும் ஆவலோடு இருந்தான்.

“அது என்னன்னா, நாம ரெண்டுப்பேரும் கூடிய சீக்கிரம் அப்பா, அம்மாவா ஆகப் போறோம்,” என்று அவள் சொன்னது தான், 

“ஹே நிஜமாவா டீ சொல்ற, அய்யோ எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல, எவ்வளவு சந்தோஷமா இருக்குன்னு தெரியுமா? இப்படி ஒரு சந்தோஷத்தை கொடுத்த உனக்கு ரொம்ப ரொம்ப நன்றி வரூ,” என்று அவளை அப்படியே தூக்கி சுற்றினான்.

“அய்யோ இறக்கி விடுங்க, ஏற்கனவே எனக்கு தலை சுத்துது. இதில் இப்படி தூக்கி சுத்தினா எப்படி?” என்று அவள் கேட்டதும்,

“ஆமாம் இந்தநேரம் உனக்கு வாந்தி, மயக்கமெல்லாம் இருக்குமில்ல, அது தெரியாம தூக்கி சுத்திட்டேனே, இப்போ எப்படி இருக்கு வரூ, தலை ரொம்ப சுத்துதா டீ, ஏதாச்சும் சாப்பிட்டீயா? இல்லை நான் வரலன்னு சாப்பிடாம இருக்கியா? நான் வேற உன்னோட நிலைமை தெரியாம, உன்மேல கோபப்பட்றேன்னு சொல்லி உன்னை கஷ்டப்படுத்திட்டேன். இந்தநேரத்தில் உன்னை சந்தோஷமா வச்சிக்கணும், ஆனா நான் என்ன செய்திருக்கேன் பாரு,” என்று புலம்பினான்.

“முன்ன ரொம்ப நாளைக்கு என்னை அடிச்சதுக்கு அப்பப்போ வருத்தப்பட்டு பேசிட்டு இருந்தீங்க, இப்போ இதுக்கு எத்தனைநாள் பேசப் போறீங்களோ? அதெல்லாம் தெரியாம தானே செய்தீங்க விடுங்க, இனி நீங்க என்னை எப்படி பார்த்துப்பீங்கன்னு எனக்கு தெரியாதா?” என்று அவள் கேட்க,

“ஆமாம் அப்படியே உன்னை உள்ளங்கையில் வச்சு தாங்குவேன்.” என்று கூறியவனுக்கு இந்த உலகத்தையே வென்றுவிட்ட மகிழ்ச்சி தோன்றியது.

பொன்மணி வொர்க்‌ஷாப்

தவன் வழக்கம்போல் காருக்கடியில் படுத்தப்படி வேலையில் ஈடுபட்டிருக்க, “அப்பா” என்ற மழலை வார்த்தை கேட்டு அவன் காருக்கடியிலிருந்து வெளியே வர, அவனது இரண்டரை வயது மகள் பொன்மணி அழகிய பட்டு பாவாடை சட்டையில் ஓடி வந்து கொண்டிருக்க, பின்னால் வருணாவோ இருவரும் கோவிலுக்கு போய்விட்டு வந்ததற்கு சாட்சியாய் கையில் அர்ச்சனை செய்த பையோடு வந்து கொண்டிருந்தாள்.

இப்போது ஆதவனின் பொன்மணி வொர்க்‌ஷாப் அவர்கள் வீட்டின் அருகிலிருக்கும் நெடுஞ்சாலையிலேயே அமைந்திருந்தது. எப்போது வருணா கருவுற்றிருக்கும் விஷயத்தை தெரிவித்தாளோ, அப்போதே அவளை வீட்டிலேயே அதற்காக கட்டிக் கொடுத்த இடத்தில் அழகுநிலையம் நடத்திக் கொள்ள சொல்லிவிட்டான் ஆதவன். 

அதுமட்டுமில்லாமல் அவனுமே வீட்டிற்கு அருகிலேயே தனது தொழிலை நடத்திட நினைத்தான். வருணாவிற்கு பிரசவம் ஆகும்வரை அவளுக்கு அருகில் இருந்திட நினைத்தான்.

“எதுக்கு? நான் கவனமா இருந்துப்பேன். அதில்லாம உங்க பெரியப்பா வீடு பக்கத்தில் இருக்காங்க, அவங்க பார்த்துக்க போறாங்க, அப்புறம் என்ன பயம்?” என்று வருணா கேட்க,

“இருந்தாலும் உன்னைவிட்டு தூரமா இருந்தா எனக்கு உன்னைப்பத்தின கவலையாவே இருக்கும் வரூ,” என்று ஆதவன் பதில் கூறினான்.

“அப்போ அந்த வொர்க்‌ஷாப் என்ன செய்வீங்க?” என்று அவள் கேட்க,

“முருகனும் சுகுமாரும் அதை நடத்தட்டும், எத்தனைநாள் என்கிட்டேயே வேலை பார்ப்பாங்க, அவங்களும் சொந்தமா தொழில் தொடங்கணுமில்ல,” என்றான்.

“உங்களுக்கு ரொம்பவே பெரிய மனசு, ஆனா திடீர்னு இங்க புதுசா ஆரம்பிச்சா அது நல்லா போகுமா?” என்று அவள் சந்தேகமாக கேட்க,

“என்னோட தொழிலில் நேர்த்தி, நேர்மை எல்லாம் இருக்கு, அப்படியிருக்க எங்கேயும் எனக்கு கஸ்டமர் வருவாங்க, அதில்லாம பழைய கார் ரிப்பேர் செஞ்சு விக்கறது நான் மட்டும் தானே செய்யப் போறேன். அப்புறம் என்ன கண்டிப்பா நஷ்டமில்லாம என் தொழிலை நடத்த முடியும்,” என்றான்.

முருகனும் சுகுமாரும் இந்த விஷயத்தை கேட்டவர்கள், “அய்யோ அண்ணா, இதெல்லாம் எதுக்கு ண்ணா, இது உங்களோட வொர்க்‌ஷாப்பாகவே இருக்கட்டும், அங்கேயும் ஆரம்பிங்க, இதை நாங்க பார்த்துக்கிறோம், எங்களுக்கு அதுக்கான சம்பளம் கொடுத்திடுங்க,” என்று சொல்ல,

“இப்படி என்கிட்ட வேலை பார்த்தே வாழ்க்கையை ஓட்ற ஐடியாவில் இருக்கீங்களா ரெண்டுப்பேரும், எப்போ சொந்தமா நீங்க வொர்க்‌ஷாப் ஆரம்பிக்கிறது. இப்போதே அதுக்கு முயற்சி எடுத்தா தானே, உங்க கல்யாண வயசு வரும்போது நீங்க சுயமா நிக்க முடியும். இங்கப்பாருங்க எப்படி போகுமோன்னு நினைக்காம தைரியமா ஆரம்பிங்க, இந்த இடத்துக்கான வாடகையை மட்டும் எனக்கு கொடுத்தா போதும், அதுவும் தனியா நீங்க நல்லா இந்த வொர்க்‌ஷாப்பை நடத்த ஆரம்பிச்ச பிறகு கொடுங்க, மத்தப்படி தொழில் சுத்தமா இருந்தா கஸ்டமர்ஸ் கண்டிப்பா வருவாங்க, அதபோல ரெண்டுப்பேரும் ஒத்துமையா தொழில் செய்ங்க, அவ்வளவுதான்,” என்று ஆதவன் கூறினான்.

அவர்களிடம் வொர்க்‌ஷாப்பை ஒப்படைத்தவன், அவர்கள் வீட்டு அருகில் உள்ள நெடுஞ்சாலையில் ஒரு மரத்தடியில் அனுமதி வாங்கிக் கொண்டு, கார், பைக் பழுதுப்பார்க்கப்படும் என்று மட்டும் எழுதிப் போட்டு அமர்ந்தான். உண்மையில் அவன் சொன்னதுபோல அவனது நேர்மைக்கும் உழைப்பிற்கும் அங்கேயும் கஸ்டமர்கள் அவனுக்கு கிடைத்தனர்.

வருணாவும் சுக பிரசவத்தில் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுக்க, தன் ஆயாவே தனக்கு வந்து மீண்டும் பிறந்துவிட்டதாக தான் ஆதவன் நினைத்தான். அதனால் ஆயாவின் பெயரை மனதில் வைத்து குழந்தைக்கு பொன்மணி என்று பெயர் சூட்டியவன், பொன்னும்மா பொன்னும்மா என்று செல்லமாக அழைப்பான்.

குழந்தை பிறந்தநேரம் அந்த நெடுஞ்சாலையில் ஒரு இடம் வாடகைக்கு வர, அந்த இடத்தில் வொர்க்‌ஷாப் ஆரம்பிக்க நினைத்தவன், அதற்கு பொன்மணி வொர்க்‌ஷாப் என்ற பெயரையே சூட்டினான். இப்போது வேறொரு பையனை உடன் வைத்துக் கொண்டு வெற்றிகரமாக அந்த வொர்க்‌ஷாப்பை நடத்திக் கொண்டிருக்கிறான்.

கோவில் போகும் வழியில் தான் வொர்க்‌ஷாப் இருந்ததால் குழந்தை அடம்பிடிக்கவே, வருணா அவளை இங்கு அழைத்து வந்தாள். இவர்கள் வந்தநேரம் வேலைப் பார்க்கும் பையனும் வெளியே சென்றிருந்தான். குழந்தையை ஆசையாக பார்த்தப்படியே, “பொன்னும்மா வாங்க செல்லம்,” என்று அவன் அழைக்க, குழந்தை அவன் அருகில் சென்றவள், “அப்பா அம்மாத்தூட கோயில்க்கு போனேன். இந்தா விபிதி.” என்று தந்தைக்கு வைத்து விடப் போக,

“அப்பா அழுக்குடா, வீட்டுக்கு வந்து வச்சிக்கிறேன்.” என்று அவன் சொல்வதை கூட கேட்காமல் சிரத்தையாக தந்தைக்கு திருநீறு வைத்துவிட்ட குழந்தை தந்தையின் மடியிலேயே அமர்ந்து கொள்ள,

“அய்யோ அப்பா அழுக்கா இருக்கேனே, அப்படியே உட்கார்ந்திட்டீயே செல்லம்,” என்று சொன்னாலும் குழந்தை அவனை தலைநிமிர்ந்து பார்த்து புன்னகைத்தது.

அதற்குள் வருணாவும் அவர்கள் அருகில் வந்து நின்றுக் கொண்டிருக்க,

“பார்த்தீயா டீ என் பொண்ணை, நான் அழுக்கா இருக்கறதெல்லாம் அவளுக்கு கவலை கிடையாது. அப்படியே என் ஆயா மாதிரி. ஆனா நான் அழுக்கா இருந்தா நீதான் கிட்ட வர யோசிப்ப,” என்று அவன் குறை படிக்க,

“ம்ம் வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் ட்ரஸ் கூட மாத்தாம வந்து வரூ செல்லம்னு கூப்பிட்டிக்கிட்டு ரொமான்ஸ் செய்ய வருவீங்களே, அப்போ இருக்கு உங்களுக்கு,” என்று வருணா கூறவும்,

“அய்யோ சும்மா சொன்னேன் டீ, உடனே சீரியஸா எனக்கு தண்டனை கொடுக்க நினைக்காத சரியா? என் செல்லமில்ல,” என்று கொஞ்சினான்.

அதைப்பார்த்துக் கொண்டிருந்த குழந்தை, “அப்பா நானு,” என்று கேட்க,

“நீங்க என் பொன்னும்மா, என் பட்டுக்குட்டி, பொம்மு குட்டி, செல்லக்குட்டி,” என்று கொஞ்சியவன், பட்டுக்குட்டி  கோவிலுக்கு போனீங்களே? அங்க என்ன பார்த்தீங்க?” என்று கேட்கவும்,

“அங்க சாமி பாத்தேன். தண்ணீ பாத்தேன். தண்ணியில மீன் பாத்தேன். பொந்தல் சாப்டேன். அம்மாட்ட சாத்லேட் கேட்டேன். வாங்கி தரல, எனக்கு சாத்லேட் வேணும் ப்பா,” என்று குழந்தை கேட்க,

“பொன்மணி சளி பிடிச்சிருக்க நேரம் இனிப்பு சாப்பிடக் கூடாது. அதனால கொஞ்சநாளுக்கு சாக்லேட் சாப்பிடக் கூடாது.” என்று வருணா கண்டிக்க, குழந்தை தந்தையை பார்த்து வைத்தது.

“பொன்னும்மாக்கு உடம்பு சரியில்லாம போச்சுன்னா அப்புறம் கசப்பு மருந்து கொடுப்பாங்களே, அதை என் பட்டுக்குட்டி சாப்பிட கஷ்டப்படுமே, அதுக்கு கொஞ்சநாள் சாக்லேட் சாப்பிடமா இருந்தா சளி சரியாயிடும், அப்புறம் அப்பா உங்களுக்கு சாக்லேட் வாங்கி தருவேனாம், பொன்னும்மா சொன்னா கேட்டுப்பீங்க தானே,” என்று ஆதவன் சொல்லவும், குழந்தையும் புரிந்து கொண்டு தலையாட்டியது.

“பார்த்தீயா, என் பொன்னும்மா அப்பா சொன்னா கேட்டுக்குவாங்க, நீ சும்மா குழந்தையை மிரட்டாத,” என்றதும் வருணா அவனுக்கு ஒழுங்குக் காட்டி தனது கோபத்தை வெளிப்படுத்தினாள்.

அடுத்து இருவரும் சிறிது நேரம் அங்கேயே இருக்க, ஆதவன் வெல்டிங் வேலை செய்யும் நேரம் “அப்பா நானு அப்பா நானு,” என்று குழந்தை வழக்கம்போல் சொல்லவும், குழந்தைக்காக கண்ணில் போடும் கண்ணாடி வாங்கி வைத்திருந்தவன், அதை குழந்தைக்கு மாட்டிவிட்டு குழந்தையின் கையைப் பிடித்து வெல்டிங் பற்ற வைக்க, குழந்தை குதூகலமாக சிரித்தது.

வருணாவோ, “பார்த்து, பார்த்து,” என்று சொல்லியப்படி அவர்கள் அருகில் இருக்க,

“என்ன வரூ நீயும் வெல்டிங் பத்த வைக்கிறீயா?” என்று ஆதவன் மனிவியிடம் கேட்க,

“அய்யோ ஏற்கனவே பட்ட அனுபவமே போதும்டா சாமி, இன்னொரு முறையெல்லாம் என்னால கண்ணெரிச்சலை தாங்க முடியாது.” என்று அவள் கூறினாள்.

“அதான் நான் இருக்கேனே, அன்னைக்கு உன்னோட கண்ணெரிச்சலை போக்கினது போல, இப்போதும் செய்ய மாட்டேனா என்ன? அதுக்கும் அப்போ லைட்டா கொஞ்சம் பயம் வேற, எங்க நீ தள்ளி விட்ருவியோன்னு, ஆனா இப்போ அந்த பயமில்ல, அதனால சூப்பரா ட்ரீட்மென்ட் கொடுத்திடலாம்,” என்று அவன் கண்ணடித்து கூறினான்.

“அய்யோ சூப்பரா ட்ரீட்மென்ட் தர மூஞ்சியைப் பாரு, அப்போ இந்த வருணாவை தவிர உங்களுக்கு எதுவும் முக்கியமில்லை. இப்போ தான் உங்களுக்கு உங்க பொண்ணு வந்தாச்சே, முதலில் அவளுக்கு தானே பார்ப்பீங்க, அப்புறம் தானே இந்த வருணா உங்க ஞாபகத்துக்கு வருவா,” என்று அவள் குறைபோல் சொல்ல,

“ஹே லூசு, நீ அப்படி நினைச்சுக்கிட்டா அது உண்மையாகிடுமா? பொன்னும்மா என் வாழ்க்கையில் வந்ததும் என் வாழ்க்கையே முழுமையாகிட்டது போல ஒரு உணர்வு. இப்படி என் வாழ்க்கை முழுமையாக முக்கிய காரணம் யாரு? நீதானே? நீ என் வாழ்க்கையில் வரலன்னா என் வாழ்க்கை இந்த அளவுக்கு வந்திருக்குமா? 

மனசுக்கு பிடிச்ச பொண்ணை கல்யாணம் செய்துக்கிட்ட மனநிறைவில் தானே என் வாழ்க்கையை இத்தனை தூரம் சந்தோஷமா இருக்கு, ஒருவேளை உனக்கு என்னை எப்போதுமே பிடிக்காம போயிருந்தா, எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் என்னை கல்யாணம் செய்ய வேண்டாம்னு நீ நினைச்சிருந்தா, என் வாழ்க்கை எப்போதோ சூன்யமா மாறிப் போயிருக்கும், அப்படியில்லாம இப்போ நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்னா, அது உன்னால மட்டும் தான் டீ, நீ இல்லாத வாழ்க்கையை என்னால நினைச்சு கூட பார்க்க முடியாது வரூ, நினைச்சு பார்க்க கூட நான் விரும்பல,” என்று சொல்லியப்படி ஒரு கையில் மகளை பிடித்திருந்தவன், இன்னொரு கையில் அவளை தன்னோடு இறுக்கிக் கொள்ள,

“நான் மட்டும் என்னவாம், இந்நேரம் என் வாழ்க்கையில் நீங்க இல்லாம இருந்திருந்தா இந்த அளவுக்கு நான் சந்தோஷமா இருந்திருப்பேனான்னு தெரியல, அந்த அளவுக்கும் நிம்மதியும் சந்தோஷமுமா என்னோட வாழ்க்கை இருக்கு, அதுக்கு முழுக்க நீங்க மட்டும் தான் காரணம். உங்களுக்கு என்னை எந்த அளவுக்கு பிடிக்கும்னு நீங்க சொல்லித்தான் தெரிஞ்சிக்கணும்னு இல்ல, ஆனாலும் சும்மா உங்களை சீண்டிப் பார்க்க தான் இப்படியெல்லாம் பேசறது.” என்று சொல்லி அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

விளையாட்டில் இருந்த மகள் இவர்களின் நெருக்கத்தை பார்த்தவள், அவளும்  அருகே வந்து “நானு,” என்று சொல்லி இருவரையும் அணைத்துக் கொள்ள அந்த காட்சியே ஒரு அழகிய கவிதையாக இருந்தது.

இளவேனில் பூஞ்சாரலாய்

இதம் சேர்க்குதே

நம் காதலே!

                    சுபம்