IP 12

Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

சாரல் 12

செண்பகத்திற்கு அழகான ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அவளை பிரசவத்திற்காக சேர்த்திருந்த மருத்துவமனை ஆதவன், வருணா இருந்த ஏரியாவிற்கு அருகில் தான் இருந்தது. அதனால் செண்பகம் மருத்துவமனையிலிருந்த போதும் சரி, செண்பகம் வீட்டிற்கு வந்தபோதும் சரி வருணா செண்பகத்தின் அன்னைக்கு துணையாக இருந்து செண்பகத்தை நன்றாக பார்த்துக் கொண்டாள்.

அன்றும் அதுபோல் அழகு நிலையத்திற்கு கூட விடுமுறை விட்டுவிட்டு காலையில் வீட்டில் விரைவாக வேலையை முடித்தவள், இங்கே செண்பகத்தின் பிறந்த வீட்டிற்கு வந்து செண்பகத்தோடு குழந்தையை பார்த்துக் கொண்டவள், குழந்தையை மடியில் வைத்து கொஞ்சி மகிழ்ந்தாள்.

அதைப் பார்த்து செண்பகமும் அவள் அன்னையும் ரசித்துக் கொண்டிருந்தார்கள். “வருணா கூட இல்லன்னா உன்னோட பிரசவ நேரத்தில் எனக்கு ரொம்ப கஷ்டமாகி இருக்கும் செண்பகம், நான் வீட்டில் இருந்து உனக்கு சமைச்சு எடுத்துட்டு வரவரைக்கும் உன்னோட கூட இருந்து பார்த்துக்கிட்டதும் சரி, நான் நைட் உன்னோட ஹாஸ்பிட்டலில் இருக்கும்போது காலையில் உனக்கு சமைச்சு கொண்டு வர்றதுன்னு எவ்வளவு பொறுப்பா இருந்தா, உன் தங்கைக்கு கூட இந்த அளவு பொறுப்பு இருக்காது.

அண்ணி மேலயும் மருமகன் மேலயும் வருணாவுக்கு ரொம்ப பாசம், நீ மட்டும் காலாகாலத்தில் குழந்தை பெத்துருந்தா, நீ பிரசவம் முடிஞ்சு வீட்டுக்கு போகும்போது உன்னையும் குழந்தையும் வருணாவே சூப்பரா பார்த்துட்டு இருந்துப்பா, இப்போ 5 மாசம் கழிச்சு நீ உங்க வீட்டுக்கு போனதும் எப்படி இருப்பியோன்னு நினைச்சு கவலையா இருக்கு,” என்று வருணாவின் அன்னை கவலையாக கூற,

“நீங்க கவலைப்பாடதீங்க அத்தை, என்னோட ப்யூட்டி பார்லர் அங்க தான இருக்கு, வேலை இல்லாதப்போ அடிக்கடி நான் போய் அண்ணியையும் இவனையும் நல்லப்படியா பார்த்துக்கிறேன்.” என்று வருணா ஆதரவாக கூற,

“நீ அதெல்லாம் பார்த்துப்ப எனக்கு தெரியாதா? ஆனா உனக்கும் கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகிடுச்சு, இன்னும் நீங்க நல்ல செய்தியை சொல்ல காணோம், ஏன் வருணா நீங்களும் எங்களை மாதிரி குழந்தை வேண்டாம்னு தள்ளிப் போட்ருக்கீங்களா?” என்று செண்பகம் கேட்க, வருணாவிற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

ஏனென்றால் வீடுகட்டி முடியும்வரை குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாமென அவள் முடிவெடுத்திருந்தாள். அதை ஆதவனிடம் சொன்னபோது கூட, “அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் வரூ,” என்று அவன் கேட்டான்.

“நாம வீடுகட்டி முடிக்கறதுக்குள்ள நான் கன்சீவ் ஆகிட்டா, அப்புறம் குழந்தை பிறக்கும் வரை நாம அந்த வீட்டுக்கு போக முடியாது. குழந்தை பிறந்ததுக்குப் பிறகு கூட, நாள் கணக்கெல்லாம் பார்த்து தான் அந்த வீட்டுக்கு போக சொல்லுவாங்க, அதில்லாம நாம உடனே வீடுகட்ட முடிவு செய்திருக்கோம், அப்போ நம்ம குழந்தை புது வீட்டில் பிறக்கட்டுமே, எல்லாத்துக்கும் வசதியில்ல,” என்று வருணா கூற, அவள் சொல்வதும் ஏற்றுக் கொள்ள வேண்டிய விஷயமாக இருந்ததால் ஆதவன் அதை ஏற்றுக் கொண்டான்.

அதுமட்டுமன்றி வருணாவிற்கு இன்னும் சில காரணங்களும் இருந்தது. திருமணத்திற்கு முன்பு ஆதவனுக்கு பெரிதாக எந்த செலவும் இருந்ததில்லை. ஆனால் இப்போது இவளுக்காக வீட்டில் தேவையான பொருட்கள் வாங்கிப் போட்டதும் சரி, இவளுக்கு அழகுநிலையம் ஆரம்பிக்கவும் அந்த இடத்திற்கு மாதாமாதம் வாடகை கொடுக்கவும் என்று அதற்கு பணம் செலவழித்தது. இப்போது வீடுகட்ட சேமிப்பிலிருந்து பெருந்தொகை செலவழிந்துவிட்டது.

இதில் அடுத்து கருவுற்றால் அதற்கு வேறு செலவாகும், சிலபேர் போல் முதல் பிரசவத்திற்கு பிறந்தவீட்டில் தான் செலவழிக்க வேண்டுமென்று கண்டும் காணாமல் இருக்கும் ஆள் இல்லை ஆதவன், அனைத்திற்கும் அவனே பார்த்துக் கொள்வது மட்டுமல்லாமல் அருகிலிருந்து கவனித்துக் கொள்ள வேண்டுமென்றும் நினைப்பான். அதனால் அனைத்து பொறுப்புகளையும் ஒரே சமயத்தில் அவன் தலையில் ஏற்ற வேண்டாமென்று நினைத்து தான் குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போட்டாள்.

தான் கேட்டதற்கு அவள் அமைதியாக இருக்கவும், “என்ன வருணா, நீ அமைதியா இருக்கறதை பார்த்தா, நீங்களும் இப்போ குழந்தை வேண்டாம்னு தள்ளிப் போட்ருக்கீங்களா என்ன? இல்ல வேற ஏதாவது பிரச்சனையா?” என்று செண்பகம் கவலையாக கேட்க,

“அது வீடுகட்டி முடிக்கும் வரைக்கும் வேண்டாம்னு தான் தள்ளிப் போட்ருந்தோம், ஆனா இப்போ அப்படியெல்லாம் இல்ல அண்ணி. வேற எந்த பிரச்சனையும் கூட இல்லை. சீக்கிரமே நல்ல செய்தி சொல்லுவோம் கவலைப்படாதீங்க,” என்று வருணா சொன்னதும், செண்பகத்திற்கும் நிம்மதியாக இருந்தது.

கேஷ்வரியின் திருமணம் நடைபெறும் நாளும் வர, ஆதவனும் வருணாவும் அந்த திருமணத்திற்கு செல்ல தயாராகினர். “வரூ, நான் கண்டிப்பா வரணுமா?” என்று ஆதவன் அப்போதும் கேட்க,

“கண்டிப்பா வரணும், என் ஃப்ரண்ட்ஸ் எல்லோரும் உங்களை பார்க்கணும்னு ஆவலா இருக்காங்க, திடீர்னு ஏன் இப்படி கேட்கிறீங்க?” என்று அவள் கேட்டாள்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

அவன் தான் வருணாவின் கணவன் என்று தெரிந்தால் தோழிகள் முன்பு அவள் கீழாக தெரிவாளோ என்பது தான் அவனது தயக்கத்திற்கு காரணம். ஆனாலும் அதை கூறினால் அவள் கண்டிப்பாக கோபப்படுவாள் என்பதால் அவன் அமைதியாக இருக்க,

“திரும்ப திரும்ப உங்களை தாழ்வா யோசிக்காதீங்க, உங்களை விட நல்ல கணவன் எனக்கு கிடைக்கமாட்டாங்க, அதனால தயங்காம வாங்க,” என்று அவனது எண்ணத்தை அறிந்தவளாக அவனிடம் பேசி அவனை அழைத்துச் சென்றாள்.

அவன் இப்போது முடிவெட்டி தாடியை திருத்தியிருந்ததால் மகியை போலவே வருணாவின் தோழிகள் யாருக்குமே ஆதவனை அடையாளம் தெரியவில்லை. ஆனால் ஹேமாவோடு அவள் கணவன் ராஜூவும் வந்ததால், “ஆதவன் அண்ணா நீங்களா? எவ்வளவு நாள் ஆச்சு உங்களை பார்த்து, எப்படி இருக்கீங்க ண்ணா,” என்று நலம் விசாரிக்கவும், 

“உங்களுக்கு வருணாவோட ஹஸ்பண்ட்டை முன்னமே தெரியுமா?” என்று ராஜூவிடம் ஹேமா கேட்டாள்.

“என்ன ஹேமா மறந்துட்டீயா? இவர் ஆதவன் அண்ணா, நம்ம கல்யாணத்துக்கு வந்தாரே, நான் கூட உனக்கு அறிமுகப்படுத்தி வச்சேனே,” என்று ராஜூ ஞாபகப்படுத்தவும், ஹேமாவிற்கும் ஆதவனின் முகம் ஞாபகத்திற்கு வர,

“சாரி, உங்களை மறந்திட்டேன். அப்போ தாடி வச்சிருந்தீங்கல்ல, இப்போ பார்க்கவும் அடையாளம் தெரியல,” என்றவள், 

“நீங்க தான் வருணாவோட ஹஸ்பண்ட்டா, நம்பவே முடியல,” என்று வியந்தாள்.

பின் வருணாவை பார்த்து, “ஹே வருணா நீ கூட சொல்லவேயில்லை பார்த்தீயா? நீ உங்க அண்ணியோட ரிலேஷனை தானே கல்யாணம் செய்துக்கப் போறதா சொன்ன, அப்போ ஆதவன் சாரை உனக்கு முன்னமே தெரியுமா? என்று கேட்டாள்.

“ஒவ்வொன்னுக்கும் பொறுமையா பதில் சொல்றேன் டீ, முதலில் நாங்க மகிக்கு கிஃப்ட் கொடுத்துட்டு வரோம்,” என்று சொல்லிவிட்டு ஆதவனோடு மேடை ஏறினாள்.

அடுத்து தோழிகள் எல்லாம் நீண்ட நாட்கள் கழித்து சந்தித்துக் கொண்டதால், ஒன்றாக கூடி பேசுவதற்காக ஒரு இடத்தில் அமர்ந்து கொள்ள, ஆதவனோ ராஜூ மற்றும் வருணாவின் இன்னொரு தோழியின் கணவனோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.

தோழிகள் ஒன்று சேர்ந்ததுமே அவர்களுக்கு வருணாவை பற்றி தான் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. “ஹே வருணா, உன்னோட ஹஸ்பண்ட் மெக்கானிக் தானே, அதிலும் ஸ்கூல் படிப்பே முழுசா முடிக்காதவர் இல்ல, அன்னைக்கு ஹேமா கல்யாணத்தில் அவர் பேசினதை முழுசா கேட்டோமே, அவரை எப்படி டீ நீ கல்யாணம் செய்துக்கிட்ட?” என்று ஒருத்தி கேட்க,

“அவர் படிக்காதவர் தான், ஆனா என்னை ரொம்ப நேசிக்கிறார். என்னை கல்யாணத்துக்கு முன்ன இருந்தே அவருக்கு பிடிக்கும், ஆனாலும் தான் படிக்காததாலயும் ஒரு மெக்கானிக் என்பதாலயும் அதை அவர் ஒருநாளும் வெளிப்படுத்தினதில்ல, அவர் பரட்டை தலை, தாடி பார்த்தாலே எனக்கு பிடிக்காது. நான் எப்போதும் அவர்க்கிட்ட கோபமா தான் பேசுவேன். அதுக்கே என்கிட்ட அவர் ஒதுங்கி தான் இருப்பார். அதான் ஹேமா கல்யாணத்தில் கூட நான் அவரை தெரிஞ்சது போல காட்டிக்கல, ஆனா உண்மையா சொல்லணும்னா ஹேமா கல்யாணத்தில் தான் அவரைப்பத்திய பார்வையே மாறுச்சு, அதுல இருந்து எனக்கும் அவரை பிடிக்க ஆரம்பிச்சுது.” என்று வருணா விளக்கினாள்.

“அப்போ இது காதல் கல்யாணமா?” இன்னொரு தோழி கேட்கவும்,

“இல்லை வீட்டில் பேசி முடிச்ச கல்யாணம் தான், என்னை அவர் கல்யாணம் செய்துக்கணும்னு அவரோட பாட்டியும் ஆசைப்பட்டாங்க, ஆனா அதுக்குள்ளவே அவங்க இறந்துட்டாங்க, இது பாட்டியோட கடைசி ஆசைன்னு சொல்லி தான் என்னை அவர் பொண்ணு கேட்டார். அண்ணி இதைப்பத்தி என்கிட்ட பேசினதுமே நான் ஒத்துக்கிட்டேன். ஆனா அவரோட பாட்டிக்காக மட்டும்தான் என்னை கல்யாணம் செய்துக்க நினைச்சாரோன்னு சந்தேகம் இருந்துச்சு, ஆனா அவருக்கும் என்னை முன்னமே பிடிக்கும்னு அப்புறம் தான் தெரிஞ்சுது,” என்று வருணா நாணத்தோடு கூறினாள்.

“எப்படியோ நீ சந்தோஷமா தான இருக்க?” என்று ஹேமா கேட்க,

“ஹே பார்த்தாலே தெரியலையா? இவ வெட்கத்தோட நமக்கு பதில் சொல்றதும், அவர் அங்க பேசிட்டு இருந்தாலும் அப்பப்ப இவளையே பார்க்கறதும், அதில்லாம வந்ததில் இருந்தே ரொம்ப இவக்கிட்ட கேரிங்கா நடந்துக்கிறாரு, அவர் அதிகம் படிக்கலன்னாலும் ரொம்ப தங்கமானவர்னு உன்னோட கல்யாணத்துல உன்னோட ஹஸ்பண்ட் சொன்னாரே, மத்தவங்களுக்காகவே யோசிச்சு நல்லது செய்றவர், வருணாவை நல்லாவே பார்த்துப்பார். அப்படித்தானே வருணா,” என்று அந்த இன்னொரு தோழி கேட்டாள்.

“நீ சொல்றது உண்மை தான் டீ, என்னை அவர் ரொம்பவே சந்தோஷமா வச்சுருக்கார். எங்க கல்யாணம் ஆனதுல இருந்து இப்போ வரை எனக்காக எல்லாம் ஒவ்வொன்னா பார்த்து  பார்த்து செய்றார். ரொம்ப சந்தோஷமா வச்சிருக்கார்.” என்று வருணா கூற,

“என்ன இருந்தாலும் அவர் உன்னைவிட கம்மியா தானே படிச்சிருக்கார். எப்போதும் மனசுல கொஞ்சம் தன்னைப்பத்தி தாழ்வா தான் நினைச்சுப்பார். எங்க அவரை விட்டுட்டு போயிடுவியோன்னு உனக்கு பிடிச்சது போல நடந்துக்க நினைப்பார். அது இயல்பு தானே,” என்று ஒரு தோழி சொல்லவும்,

“நீ சொல்றது இயல்பா இருக்கலாம், ஆனா அவர் என்னை இம்ப்ரஸ் பண்ண ஒன்னும் அப்படி நடந்துக்கல, அவர் என்னை அந்த அளவு நேசிக்கிறார். ஒருவேளை என்னோட இடத்தில் வேற பொண்ணு இருந்தாலுமே கூட அந்த பொண்ணையும் அவர் இப்படி தான் பார்த்துப்பார். இதை இயல்புன்னு சொல்ல முடியாது. இது அவரோட குணம், 

படிச்சிருந்தா என்ன படிக்காம இருந்தா என்ன? மனைவின்னு வந்தா அவ நமக்கு கீழ தான்னு நினைக்கிற ஆண்கள் தானே அதிகம், நான் அவரை விரும்பி தான் கல்யாணம் செஞ்சுக்கிட்டேன். இவ நமக்கு மனைவியா வந்துட்டா, வீட்டைப் பார்த்துக்கிட்டு இருக்கட்டும்னு நினைச்சிருந்தா, நானும் அப்படியே இருந்திருப்பேன். அதுதான் உண்மை.

ஆனா எனக்கு ப்யூட்டி பார்லர் வைக்கணும்னு ஆசைன்னு தெரிஞ்சு அதை வச்சு கொடுத்தது எதுக்காக, என்னை விட அவர் தன்னை தாழ்வா நினைச்சா, அவர் ஏன் என் முன்னேற்றத்துக்கு ஊக்குவிக்கணும், ஏதாச்சும் தெரிஞ்சதுபோல பேசாத டீ,” என்று வருணா கோபப்பட்டாள்.

“ஹே நான் பொதுவா தான் சொன்னேன். நீ கோபிச்சுக்காத,” என்று அந்த தோழி மன்னிப்பு கேட்க,

“அவளுக்கு உன் ஹஸ்பண்ட் பத்தி என்ன தெரியும்? அவ பேசறதை சீரியஸா எடுத்துக்காத, என் ஹஸ்பண்ட் வீட்ல, அவர் மட்டுமில்ல, என் மாமியார், மச்சினன் எல்லாம் உன்னோட ஹஸ்பண்ட்டை பத்தி பெருமையா பேசி கேட்ருக்கேன். உண்மையாவே அவர் உனக்கு ஹஸ்பண்ட்டா கிடைச்சதில் நீ லக்கி தான் வருணா,” என்று ஹேமா கூற, வருணாவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

திருமண வரவேற்பு நல்லப்படியாக முடிய வருணாவும் ஆதவனும் வீட்டிற்கு வந்துவிட்டனர். வரும் வழியில் வருணா தான் பேசிக் கொண்டு வந்தாள். ஆனால் ஆதவன் ஏதோ சிந்தனையில் வண்டி ஓட்டிக் கொண்டு வந்தது போல் இருந்தது. வந்ததும் சட்டையை கழட்டிவிட்டு ஆதவன் சோஃபாவில் அமர, வருணாவும் அவன் அருகில் அமர்ந்தவள்,  “என்ன ஒரே யோசனையா இருக்கீங்க,” என்று  கேட்க,

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“ஒன்னுமில்லையே,” என்று அவன் மறுத்தான்.

“இல்ல ஏதோ யோசனையில் தான் இருக்கீங்க, உங்களை எனக்கு தெரியாதா? என்ன ஆச்சு?” என்று அவள் விடாமல் கேட்க,

“ஒன்னுமில்ல வரூ, சும்மா ஏதோ யோசனை,” என்று சமாளித்தான்.

“அதுதான் என்ன, என்கிட்ட சொல்லக் கூடாதா?”

“அது அங்க கல்யாண மண்டபத்தில் நீ உன்னோட ஃப்ரண்ட்ஸோட பேச போயிட்ட, நான் ராஜூ அப்புறம் உன் இன்னொரு ஃப்ரண்டோட வீட்டுக்காரரோட பேசிட்டு இருந்தேன். ராஜூ இஞ்சினியரிங் படிச்சிருக்கான்னு எனக்கு தெரியும், இன்னொருத்தரும் நல்லா படிச்சிருக்கார்னு அவரோட பேச்சிலேயே தெரியுது. இப்போ உன் ஃப்ரண்டை கல்யாணம் செஞ்சுக்க போற கல்யாண மாப்பிள்ளையும் நல்லா படிச்சவர் தானே,

ஒருவேளை நான் ஆயா ஆசைன்னு உன்னை பொண்ணு கேட்கலன்னா உனக்கு உங்க அண்ணன் நல்ல படிச்ச மாப்பிள்ளையா பார்த்திருப்பார். உன்னோட வாழ்க்கையும் நல்லா இருந்திருக்கும்,” 

“ம்ம் நீங்க சொல்றது சரிதான், என்னோட அண்ணன் எனக்கு நல்ல படிச்ச மாப்பிள்ளையா தான் பார்த்திருப்பார். ஆனா நான் சந்தோஷமா இருந்திருப்பேனா? அதுதான் சந்தேகம். இப்போல்லாம் எந்த அளவுக்கு படிச்ச மாப்பிள்ளையோ அந்த அளவுக்கு நிறைய சீர் செஞ்சு தான் கல்யாணம் செய்து வைக்கணும், அப்போ எனக்கு அப்படி ஒரு மாப்பிள்ளையை பார்த்து கல்யாணம் செய்து வச்சிட்டு என்னோட அண்ணன் இன்னும் கடனாளியா ஆக வேண்டியது தான்,

அவ்வளவு செலவு செய்து எனக்கு படிச்ச மாப்பிள்ளையை கல்யாணம் செய்து வச்சாலும், அந்த மாப்பிள்ளை எனக்கு பிடிச்ச மாப்பிள்ளையா இருக்கணுமே, ஏன்னா எனக்கு பிடிச்ச மாப்பிள்ளை நீங்க தானே,” என்று வழக்கம் போல அவனது தாடியை இழுத்துப் பிடித்து அவள் கூற, அந்த பதிலில் அகமகிழ்ந்து போனவனாக அவளோடு இன்னும் நெருங்கி அமர்ந்து கொண்டான்.

“யாரோ அன்னைக்கு சொன்னாங்க, எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும், அதான் ஆயா ஆசையை சொல்லி பொண்ணு கேட்டேன்னு, எனக்கு உங்களை பிடிச்சதால தான் கல்யாணம் செய்துக்கிட்டேன். இதில் படிப்பெல்லாம் எங்க இருந்து வந்துச்சு, என் ஃப்ரண்ட்ஸெல்லாம் படிச்ச மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் செய்திருக்கலாம், ஆனா எவ்வளவு சந்தோஷமா அவங்க வாழ்க்கை இருக்குன்னு எனக்கு தெரியாது. ஆனா நான் உங்களை கல்யாணம் செய்துக்கிட்டு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். என் ஃப்ரண்ட்ஸ்க்கிட்டேயும் அதான் சொல்லிட்டு வந்தேன். உங்களை கல்யாணம் செய்ததால என் வாழ்க்கையில் எனக்கு எந்த குறையுமில்ல, ஒரே ஒரு சின்ன குறையை தவிர,” என்று அவள் கூற,

“குறையா? என்ன குறை? உனக்கு எந்த குறையும் இருக்கக் கூடாதுன்னு பார்த்து பார்த்து செய்றேன். அப்புறம் என்ன குறை,” என்று கவலையாக கேட்டான்.

“அதுவா, நான் என்ன சொன்னாலும் செய்தாலும் அதுக்கு தலையாட்றீங்க, நமக்குள்ள சண்டைன்னு வர்றதே கிடையாது. கணவன், மனைவின்னா சின்ன சின்ன சண்டைன்னு வந்தா தானே வாழ்க்கை சுவாரசியமா போகும்,” அவள் குறைபோல் கூறவும்,

“என்னது நாம சண்டை போடலயா? நான் உன்னை கைநீட்டி அடிச்சு அதனால நீ கோபப்பட்டு உன்னோட அண்ணா வீட்டுக்கு போனதெல்லாம் மறந்து போச்சா?” என்று அவன் கேட்டான்.

“ம்ம் ஒருமுறை அடிச்சதுக்கு இதுவரை நீங்க எத்தனை முறை சாரி கேட்டுடீங்க தெரியுமா? அதில் அந்த சண்டை நடந்ததே மறந்துப்போச்சு. அதுக்குப்பிறகு நான் என்ன சொன்னாலும் நீங்க தலையாட்டிட்டு தான் இருக்கீங்க,” என்ற அவளது பதிலில்,

“அந்த ஒருமுறை நீ கோபப்பட்டு போனதுக்கே, நீ திரும்ப என்னோட வருவியோ வரமாட்டீயோன்னு அந்த பத்து நாளும் நான் பட்ட அவஸ்தை, இப்போ நினைச்சாலும் எப்படி இருக்கு தெரியுமா? இதில் அடிக்கடி சண்டை போடணுமா? அதெல்லாம் என்னால முடியாது. இப்படியான ஆசையெல்லாம் உனக்கேன் வருது வரூ, அய்யோ சாமி இது விவகாரமான ஆசையா இருக்கே, ஆளை விடும்மா,” என்று போலியாக பயந்தது போல் அவன் காண்பிக்க, அவனை முறைத்தாள்.

சாதாரணமாக தான் இருவரும் அதைப்பற்றி பேசிக் கொண்டனர். ஆனால் வருணாவின் வாய் முகூர்த்தம் அது பலித்துவிடும் போல் மறுநாள் ஒரு சம்பவம் நடந்தது. வெகுநாட்கள் கழித்து ராகேஷ் அவனது காரை சர்வீஸ்க்கு விட ஆதவனின் வொர்க்‌ஷாப் வந்திருந்தான். அவன் வந்த சமயம் முருகன், சுகுமார் இரண்டுப்பேருமே அங்கு இல்லை. ஆதவன் மட்டும் தனியாக இருக்க,

“வாங்க ராகேஷ் சார், என்ன ரொம்ப நாளா நீங்க வரவேயில்லை.” என்று சாதாரணமாக ஆதவன் விசாரிக்க,

“உன்னோட முகத்தை கூட பார்க்க எனக்கு பிடிக்கல ஆதவன், இனி உன்னோட வொர்க்‌ஷாப் பக்கம் வந்துடக் கூடாதுன்னு தான் நினைச்சேன். ஆனா உன்னோட அளவுக்கு யாரும் கைதேர்ந்த வேலையாட்கள் இல்லை. அதான் வந்தேன். ஆனா வேலையில் கவனமா இருந்து என்ன? மத்ததிலும் அப்படி இருக்கணுமில்ல,” என்று ராகேஷ் அவனாக பேசிக் கொண்டிருக்க, ஆதவனுக்கோ ஒன்றும் புரியவில்லை.

“நீங்க என்ன பேசறீங்கன்னு எனக்கு தெரியல ராகேஷ் சார்? எதுவா இருந்தாலும் புரியறது போல பேசுங்க,” என்று அவன் சொல்ல,

“வருணா போல ஒரு பொண்ணுக்கு நீ பொருத்தமானவனே இல்லை. ஏதோ சொந்தக்காரனா போயிட்டதால அவளை உனக்கு கல்யாணம் செய்து வச்சிருக்காங்க போல, இல்லை காதலா கூட இருக்கலாம், இருந்தும் கல்யாணம் நடந்துட்டதால அந்த மாதிரி ஏரியால அந்த சின்ன வீட்டில் உன்கூட வந்து அந்த பொண்ணு கஷ்டப்பட்றா, இது பத்தாதுன்னு  அவளை சந்தேகப்பட்டு அவளை மனசளவில் வேற துன்புறுத்திறீயா?” என்று ராகேஷ் கேட்டான்.

அப்போதும் ஆதவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இதில் வருணாவிற்கு அவன் பொருத்தமானவன் இல்லை என்பது போல் வேறு ராகேஷ் சொல்ல, ‘அதை சொல்ல இவன் யார்?’ என்பது போல் மனதில் நினைத்தவன்,

“என்ன ராகேஷ் சார் சொல்றீங்க? சந்தேகம் அப்படி இப்படின்னு பேசறீங்க, என்னத் தெரியும்னு இப்படியெல்லாம் பேசறீங்க?” என்று கோபமாக கேட்டான்.

“எனக்கு எல்லாம் தெரியும், என்னோட தங்கை தீப்தி சொன்னா, நான் உன்கிட்ட பர்மிஷன் வாங்கிக்கிட்டு தானே வருணாவை தீப்தி மேரேஜ் அப்போ காரில் கூட்டிட்டு வந்து வீட்டில் விட்டேன். வீட்டில் கூட சொல்லமுடியாது. உங்க ஏரியாவில் கார் கூட நுழையாதே, அப்படியிருக்க அதை நீ தப்பா நினைச்சு சந்தேகப்பட்டு வருணாவை வீட்டை விட்டு அனுப்பியிருக்க, கடைசி ரெண்டுநாள் அவ தீப்திக்கு அலங்காரம் செய்யக் கூட வரல, 

செஞ்ச வேலைக்கு காசு வாங்க கூட அவ வரல, அப்புறம் நான்தான் வருணா அக்கவுண்ட்க்கு பணம் போட்டேன். நான் உன்கிட்ட பேசி புரிய வைக்கவான்னு கேட்டதுக்கு கூட தீப்தி மேலும் பிரச்சனையாகும்னு சொல்லி வேண்டாம்னு சொல்லிட்டா, அடுத்து உன் முகத்தில் முழிக்கவே கூடாதுன்னு நினைச்சேன். ஆனா இப்போ இந்த பிரச்சனையை உன்னால சரி செய்ய முடியும்னு தான் இங்க வந்தேன். வண்டி சரியானதும் போன் போட்டு சொல்லு, வந்து எடுத்துக்கறேன்.” என்றவன், ஆதவனை அடுத்து பேசக்கூட விடாமல் கிளம்ப, அதெல்லாம் சேர்த்து அந்த கோபம் வருணாவின் மீது திரும்பியது. 

அதே கோபத்தோடு வீடு வந்தவன், நேராக வருணாவை பார்த்து, “ஆமாம் உன் ஃப்ர்ண்ட் தீப்திக்கிட்ட என்ன சொன்ன?” என்று கேட்டான்.

அவன் என்ன கேட்கிறான்? என்பது புரியாததால், “நான் எப்போ தீப்தியைப் பார்த்தேன்? பார்க்காதப்போ அவக்கிட்ட என்ன சொன்னேன்? நீங்க கேட்கிறது எனக்கு புரியல, என்ன விஷயம் தெளிவா சொல்லுங்க?” என்று அவள் அவனிடம் விளக்கம் கேட்க,

“இப்போ ஒன்னுமில்ல, தீப்தி கல்யாணத்தில் கடைசி ரெண்டுநாள் வேலை செய்யாம வந்துட்டீயே, அப்போ தீப்திக்கிட்ட என்ன சொன்ன?” என்று கேட்டான். வருணாவும் அவளிடம் பேசியதை நினைவு கூர்ந்தாள்.

ஆதவனிடம் கோபித்துக் கொண்டு வந்தவளுக்கு மீண்டும் ராகேஷோடு பயணம் செல்ல விருப்பம் இல்லாததால், தீப்தியை அலைபேசி மூலம் அழைத்து, “சாரி தீப்தி, கடைசி ரெண்டுநாள் என்னால வரமுடியாது. யாரையாச்சும் வச்சு அட்ஜஸ்ட் செஞ்சுக்கோ,” என்று வருணா சொல்ல,

“ஓ அப்படியா? சரி வருணா நான் பார்த்துக்கிறேன். ஆனா செஞ்ச வேலைக்கு பணம் கூட நீ வாங்கலையே, எப்போ வந்து வாங்கிக்கிற? இல்லை நான் ராகேஷ் அண்ணாக்கிட்ட கொடுத்து விடட்டுமா?” என்று தீப்தி கேட்க,

“அய்யோ இல்ல தீப்தி, உங்க ராகேஷ் அண்ணாவால ஏற்கனவே நடந்ததே போதும், அவர் என்னை ட்ராப் செய்தது பெரிய பிரச்சனையாவே ஆகிடுச்சு, இதில் திரும்ப அவங்க என் வீட்டுக்கெல்லாம் வர வேண்டாம், அதில்லாம நான் இப்போ எங்க வீட்டில் இல்ல, என்னோட அண்ணா வீட்டில் தான் இருக்கேன். பேசாம என்னோட பேங்க் அக்கவுண்ட் நம்பர் அனுப்பறேன். அதில் பணத்தை போட்டுவிடுங்க,” என்று சொல்லி அழைப்பை அணைத்திருந்தாள்.

அதைத்தான் தீப்தி தவறாக புரிந்து கொண்டு, வருணா வராததை பற்றி ராகேஷ் கேட்டபோது, “அண்ணா உன்னால அவங்க வீட்டில் பிரச்சனை போல, நீ வருணாவை ட்ராப் செய்தது அவளோட ஹஸ்பண்ட்க்கு பிடிக்கலன்னு நினைக்கிறேன். அவ அவங்க அண்ணா வீட்டுக்கு போற அளவுக்கு பிரச்சனை பெருசா ஆகிடுச்சு போல, அதனால வருணா சொன்னது போல நாம அவளோட அக்கவுண்ட்க்கு பணத்தை போட்டுவிடுவோம்,” என்று அவனிடம் கூறியிருந்தாள்.

தீப்தியிடம் பேசியதை நினைவு கூர்ந்தவள், “ராகேஷ் ட்ராப் செய்தது பிரச்சனை ஆகிடுச்சு, அதனால பணத்தை பேங்க் அக்கவுண்ட்ல போட சொன்னேன்.” என்று ஆதவனிடம் கூற,

“உனக்கு அறிவிருக்கா, ராகேஷால பிரச்சனைன்னா அதை அவங்கக்கிட்ட அப்படியே சொல்லுவியா? அதை அவங்க எப்படி எடுத்துப்பாங்கன்னு யோசிக்க மாட்டீயா? இன்னைக்கு வொர்க்‌ஷாப்க்கு வந்து ராகேஷ் என்னல்லாம் பேசினாரு தெரியுமா?

நான் உனக்கு பொருத்தமானவனே இல்லையாம், ஏதோ சொந்தக்கார பொண்ணு, நமக்குள்ள காதல், அதனால எனக்கு உன்னை கல்யாணம் செய்து வச்சிட்டாங்களாம், நீ என்னோட வாழறதே பெருசாம், ஆனா நான் அதை புரிஞ்சிக்காம உன்னை சந்தேகப்பட்றேனாம், எப்படியெல்லாம் பேசினார் தெரியுமா? நல்லவேளை அந்தநேரம் அங்க முருகனும் சுகுமாரும் இல்ல, அவங்க இருந்திருந்தா எவ்வளவு அசிங்கமா போயிருக்கும் தெரியுமா? இதெல்லாம் யாரால உன்னால தானே, இன்னும் எத்த்னைபேர்க்கிட்ட இப்படி சொல்லி வச்சிருக்கன்னு தெரியல,” என்றவன், மதிய சாப்பாடு கூட சாப்பிடாமல் கிளம்பிச் சென்றுவிட்டான்.

வருணாவோ ஆதவனிடம் இப்படி ஒரு கோபத்தை எதிர்பார்க்கவில்லை. ஒருமுறை இவள் பேசியதத்கு அவன் கைநீட்டி அடித்து இருக்கிறான் தான், ஆனாலும் அப்போது கூட இப்படி கோபத்தோடு எல்லாம் அவன் பேசியதில்லை. இன்று அவன் வருகையை எவ்வளவு எதிர்பார்த்தாள். தன் மகிழ்ச்சியை அவனிடம் பகிர்ந்து கொள்ள நினைத்தாளே, இப்படி சூழ்நிலை வேறுமாதிரி மாறிப் போனதை நினைத்து அவளுக்கு அழுகை வந்தது.

சாரல் வீசும்…