IP 11

Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

சாரல் 11

ங்கேயும் இதுபோன்ற ஆட்கள் இருக்கத்தான் செய்வார்கள் அதனால் இப்போதைக்கு இங்கேயிருந்து செல்வதற்கு அவசியமில்லையென்று வருணா சொல்லியிருந்தாலும், வருணாவின் ஒழுக்கத்தை தவறாக பேசிய அந்த இடத்தில் இனியும் இருப்பது சரியிருக்காது என்று ஆதவன் முடிவெடுத்துக் கொண்டான். 

அதை வருணாவிடம் கூறிய போது, “எதுக்கு, நான்தான் தேவையில்லைன்னு சொன்னேனே,” என்று அவள் கேட்க,

“இல்ல வரூ, எனக்கு இது சரியா படல, நீ இந்த இடத்தில் இருக்க வேண்டிய பொண்ணே இல்ல, பாட்டி இருந்த இடம்னு நான்தான் இங்க இருக்கணும்னு நினைச்சேன். இப்போ யோசிச்சா பாட்டியே நாம இங்க இருந்திருக்க வேண்டாம்னு தான் சொல்லியிருப்பாங்க, அதனால நாம இங்க இருந்து போறது தான் நல்லது.” என்று கூறினான். 

“போறதுன்னா எப்படி? வாடகை வீடா? சின்ன இடமா இருந்தாலும் நமக்கு சொந்தமான இடமா இருந்துச்சு, இதை விட்டுட்டு வாடகை வீட்டுக்கு போறதுன்னா அது சரியா வருமா?” வருணா கேட்க, 

“இல்ல நாம வாடகை வீட்டுக்கு போகப் போறதில்ல, சொந்தமா வீடு வாங்கிக்கலாம், பழைய வீடு விலைக்கு வருதா பார்க்கலாம், இல்ல  விக்னேஷ் மாமா போல ஏதாவது அபார்ட்மெண்ட் பார்க்கலாம், சரியா?” என்று அவன் கேட்டான்.

“அண்ணா வாங்கினதுக்கு இப்போ இங்க சிட்டியில் அப்பார்ட்மெண்ட் இன்னும் அதிகமா தான் விலையிருக்கும், பழைய வீடு நாம விரும்பினா போல கிடைப்பது கஷ்டம்,” என்று அதில் தனக்கு விருப்பமில்லை என்பது போல் தயக்கமாக கூறியவள், 

“நீங்க செண்பா அண்ணியோட அம்மா வீடு இருக்கும் ஏரியாவில் தானே இடம் வாங்கிப் போட்ருக்கீங்க, ஒருமுறை அண்ணி சொல்லியிருக்காங்க, பேசாம அங்க வீடு கட்டினா என்ன? சொந்தமா இடம் நம்ம கையில் இருக்கு, இப்போதைக்கு சேமிப்பா உங்கக்கிட்ட பணமும் இருக்கு, நாம நமக்கு பிடிச்சது போல வீடு கட்டலாம், என்ன சொல்றீங்க? நீங்க சொன்னதுபோல பாட்டிக்கூட  அண்ணிக்கிட்ட அப்படித்தான் சொல்லி உங்களுக்கு என்னை பொண்ணு கேட்டாங்களாம், அண்ணி சொல்லியிருக்காங்க,” என்று அவள் சொல்ல,

அவனோ, “அங்க இருந்து வேலைக்கு வர ரொம்ப தூரமா இருக்கும் வரூ, எனக்கு பிரச்சனையில்லை வண்டியை எடுத்தா வந்துடுவேன். ஆனா உனக்கு தூரமா இருக்காதா?” என்று தயங்கினான்.

“எனக்கும் உங்க பக்கத்திலேயே தானே வேலை, ரெண்டுப்பேரும் உங்க பைக்லயே காலையில் கிளம்பிடலாம், வேலை முடிஞ்சதும் உங்க வொர்க்‌ஷாப்ல இருக்கப் போறேன். நைட் ரெண்டுப்பேரும் ஒன்னா கிளம்பிடலாம், அப்படி உங்களுக்கு லேட்டாகறது போல இருந்தா, நான் சீக்கிரமா பஸ் பிடிச்சு வீட்டுக்கு வந்துடப் போறேன். 

இங்கேயும் நாம அப்படித்தானே செய்றோம், என்ன இந்த இடம் நமக்கு கிட்ட, ஆனா அது கூட கொஞ்ச நேரம் பிடிக்கும் அவ்வளவுதான், அண்ணியோட அவங்க அம்மா வீட்டுக்கு எத்தனைமுறை பஸ்ல நாங்க ரெண்டுப்பேர் மட்டும் போயிருக்கோம், அந்த ரூட் எனக்கு நல்லா தெரிஞ்சது தான், உங்களுக்கும் அப்படித்தானே, அதனால நான் சொல்ற ஐடியா தான் சரிவரும், ப்ளீஸ் ஒத்துக்கோங்க,” என்று இப்போது கொஞ்சமாக திருத்தி வைத்திருந்த அவன் தாடியை இழுத்தப்படி அவள் கேட்க, 

அதன்பிறகும் அவனால் அவளது சொல்லை மீற முடியுமா? “அய்யோ வலிக்குது விடுடீ, அங்க தான வீடு கட்டணும் கட்டிடலாம், எப்போதும் என்னோட தாடி மேலே உனக்கு என்னத்தான் கோபமோ?” என்று அவன் கேட்க, 

“பின்ன அதை முழுசா எடுங்கன்னு சொன்னா எங்கேயாச்சும் கேட்கிறீங்களா?” என்று அவள் குறைபட, 

“முத்தம் கொடுக்கும்போது உனக்கு குத்துச்சுன்னா சொல்லு, கண்டிப்பா எடுத்துட்றேன்.” என்று சொல்லி அவன் கண்ணடித்து கூற, 

“ச்சீப் போடா அழுக்கா,” என்று அவன் மார்பில் குத்தியவள், முகத்தில் நாணத்தை தாங்கி அவன் மார்பிலேயே சாய்ந்து கொண்டாள்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

வீடுக்கட்ட வேண்டுமென முடிவெடுத்ததும் இருவரும் விக்னேஷ், செண்பகத்திடம் விஷயத்தை சொல்ல, அவர்களும் அதில் ஆர்வம் காட்ட, உடனே ஆதவன் வீடுக்கட்டும் வேலையை ஆரம்பித்தான்.

ஆதவனிடம் அவன் வருமானம் சேமிப்பாக இருக்க, ஆரம்பித்த வேலையில் தடங்கல்கள் இல்லாததால், குறிப்பிட்ட மாதங்களிலேயே வீடுக்கட்டி முடித்தனர். இரண்டு படுக்கயறைகளோடு ஓரளவிற்கு வசதியாக இருந்தது வீடு. ஒருவேளை தேவைப்பட்டால் இங்கேயே பிற்காலத்தில் அழகு நிலையத்தை நடத்தலாம் என்பது போல் வாசலுக்கு அருகில் அதற்காகவும் ஆதவன் ஏற்பாட்டோடு வீட்டை கட்டியிருந்தான். வீட்டுவேலை முடிந்ததும் ஒரு நல்ல நாளில் கிரகபிரவேசம் செய்து பால் காய்ச்சி குடியேறினர்.

இருவருக்கும் அருகருகே வேலை என்பதால் வருணா சொன்ன யோசனை அவர்களுக்கு எளிதாக தான் இருந்தது. காலையில் சாப்பிட்டு இருவரும் வேலைக்கு கிளம்பிச் சென்றால், மாலையில் வருணா தனியாக வந்து வீட்டில் மற்ற வேலைகளை பார்த்துக் கொண்டு இரவு உணவு தயாரித்துவிடுவாள். ஆதவனும் அவள் தனியாக இருப்பாள் என்பதால் கொஞ்சம் விரைவாகவே வேலையை முடித்துக் கொண்டு கிளம்பிவிடுவான். 

சில சமயங்களில் அவள் தனியாக கிளம்பினால்,  “இரு கொஞ்ச நேரத்தில் எனக்கு வேலை முடிஞ்சிடும் சேர்ந்தே போகலாம்,” என்று வொர்க்‌ஷாப்பிலேயே அவளை இருக்க வைத்துவிடுவான்.

“நேரத்துக்கு வீட்டுக்குப் போனா சாப்பாடு செய்ய வேண்டாமா?” என்று அவள் கேட்டால்,

“சாப்பாடு செய்றதுக்காக சீக்கிரம் போகணுமா என்ன? நீயும் தானே காலையிலிருந்து கஷ்டப்பட்ற, வீட்டுக்கு போய் வேற எல்லா வேலையும் இழுத்துப் போட்டு செய்ற, இன்னைக்கு ஃப்ரியா இரு, போகும்போது வெளிய சாப்பாடு வாங்கிக்கலாம், இல்ல சிம்பிளா தோசைச் சுட்டு, சட்னி அரைச்சுக்கலாம், அதுவும் நானே தோசை சுட்றேன்.” என்று அவன் கூற,

“ச்சோ ஸ்வீட்,” என்று அவன் கன்னத்தை கிள்ளி அவள்  முத்தம் கொடுப்பாள்.

உடனே உடன்  வேலை செய்யும் இருவரும் அருகில் இருக்கிறார்களா? என்று அவன் பதட்டமாக பார்க்க,

“பசங்க பக்கத்தில் இல்ல, இருந்தா இப்படி செய்வேனா?” என்று கேட்பாள்.

“அப்போ அப்படியே கன்னத்தில் கொடு.” என்று சொல்லி அவன் கன்னத்தை காட்டுவான்.

“ம்ம் ஆசையை பாரு,” என்று செல்லமாக கன்னத்தில் குத்துவாள்.

சில நேரங்களில் ஆதவன் வேலை முடிய  தாமதமானாலும் அருகில் தான் செண்பகத்தின் பிறந்த வீடு என்பதால் ஒன்று வருணா ஆதவன் வரும்வரை அவர்கள் வீட்டில் இருப்பாள். இல்லை அவர்களில் யாராவது ஒருவர் வருணாவிற்கு இங்கு துணையாக இருப்பர்.

அதிலும் செண்பகத்திற்கும் வளைகாப்பு முடிந்து தன் பிறந்த வீட்டிற்கு வந்துவிட்டதால், விக்னேஷும் இங்கு அடிக்கடி வரப் போக இருக்க, வருணாவிற்கு தனியாக இருக்கும் உணர்வு இல்லாததால் அந்த இடத்திற்கு வெகு விரைவாக பழகிக் கொண்டாள்.

தவனுக்கு அன்று குறைவாக வேலை இருந்ததால், முருகனிடம் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்தவன், குளித்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வரவும், “சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா?” என்று வருணா கேட்க,

“கொஞ்சநேரம் போகட்டும்,” என்றவன், அங்கிருந்த மூன்று பேர் அமரும்  சோஃபாவில் அமர்ந்தவன், தொலைக்காட்சியை இயக்கினான்.

வருணாவும் அந்த சோஃபாவிற்கு அருகில் போட்டிருந்த ஒற்றை சோஃபாவில் வந்து அமர போக, அவளது கைப்பிடித்து அவன் அருகில் அமர வைத்தவன், அவளது மடியில் படுத்துக் கொண்டான்.

உடனே அனிச்சையாக அவள் அவனது தலையை கோத, “அந்த வீட்டில் ஒரே ரூம்ல எல்லா பொருளும் இருக்கும், கட்டிலில் உட்கார்ந்து தான் டிவி பார்ப்போம், ஆனா நீதான் டிவி பார்ப்ப, நான் உன்னைத்தான் பார்ப்பேன். அதெல்லாம் நினைச்சா இப்போக்கூட எப்படி இருக்கு தெரியுமா? இங்க என்னடான்னா நைட் பெட்ரூமை தவிர, மத்த இடத்தில் நீ என் பக்கத்தில் கூட வர மாட்டேங்குற,” என்று ஆதவன் குறைப்படிக்க,

“என்ன சொன்னீங்க? நான் டிவி பார்க்க, நீங்க என்னை பார்ப்பீங்களா? பொய், பொய். எனக்காக கட்டில் வாங்கிப் போட்டுட்டு, அதுல உட்காரவே மாட்டீங்க, வீட்ல இருந்தா உங்க பார்வை டிவியை தவிர வேற எதையும் பார்க்காது. அப்படியெல்லாம் இருந்த சார் எங்கப் போனாரு?” என்று அவர்கள் திருமணம் ஆன புதிதில் அவன் நடந்து கொண்டதை அவள் கூறவும்,

“ம்ம் அந்த ஆதவனை அப்படியே மாத்தினது நீதானே, இப்போ கேட்டா என்ன பதில் சொல்வேன்?” என்றான் அவன்,

“இப்போல்லாம் நல்லா பேசக் கத்துக்கிட்டீங்க,” என்று அவன் கன்னத்தை பிடித்துக் கிள்ளி, தாடியை பிடித்து இழுத்தவள்,

“சாப்பிட்டதும் கிளம்பிடுவீங்களா?” என்று கேட்க,

“ம்ம் அவ்வளவா வேலையில்லை. ஆனாலும் போனா இருக்கற வேலையை முடிச்சிட்டு நைட் சீக்கிரம் வரலாம், ஏன் எதுக்கு கேட்கிற?” என்று கேட்டான்.

“இல்ல, என்னோட ஃப்ரண்ட்க்கு கல்யாணம் பிக்ஸ் ஆகியிருக்காம், அவ இன்விடேஷன் எடுத்துக்கிட்டு வீட்டுக்கு வரேன்னு சொன்னா, அதான் சாயந்தரம் அவ வரும்போது நீங்க வீட்டில் இருக்க முடியுமா? இதுவரை என்னோட ஃப்ரண்ட்ஸ் யாருக்கும் உங்களை அறிமுகப்படுத்தினது இல்லல்ல, அதனால அவ வரும்போது நீங்க இருந்தா நல்லா இருக்கும், அதேபோல கல்யாணத்துக்கும் நீங்க வந்தா எல்லாருக்கும் அறிமுகப்படுத்தி வைப்பேன்.” என்று அவள் கூறவும் சிந்தனைக்குள்ளானவன்,

“உன்னோட ஃப்ரண்ட்ஸ் யாரும் நம்ம கல்யாணத்துக்கு வரலையா வரூ,” என்று கேட்டான்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“இல்ல, அப்போ என்னோட இன்னொரு ஃப்ரண்டோட கல்யாணம் இருந்துச்சு, அதுவும் வேற ஊரில், நம்ம கல்யாணம் பேசறதுக்கு முன்னமே அவளுக்கு நிச்சயம் ஆகிடுச்சு, கண்டிப்பா நாங்க எல்லாம் கல்யாணத்துக்கு வரணும்னு ட்ரெயின் டிக்கெட்லாம் புக் செய்துட்டா, அதுவும் நான்தான் அவளுக்கு ப்யூட்டிஷியன்னு சொல்லி கண்டிப்பா நான் வரணும்னு சொன்னா, 

அப்புறம் நம்ம கல்யாணம் பிக்ஸ் ஆனதால, என்னால அந்த கல்யாணத்துக்கு போக முடியல, மத்தவங்களும் யோசிச்சாங்க, அது முன்னமே முடிவு செய்தது. என்னால தான் வர முடியல, நீங்களாவது போயிட்டு வாங்கன்னு நான்தான் சொல்லி அனுப்பி வச்சேன். அதான் யாரும் நம்ம கல்யாணத்துக்கு வரல,”

“ம்ம் முன்னமே சொல்லியிருந்தா நான் நம்ம கல்யாணத்தை கொஞ்சம் தள்ளி வச்சிருப்பேனே?”

“ஆமாம் இப்படி சகஜமா பேசிப்பது போல் தான் நாம அப்போ இருந்தோமா? அதுமட்டுமில்லாம அந்த தேதியில் தான் மண்டபம் முடிவாகியிருக்கு,  அதுவும் அது நல்ல முகூர்த்தம்னு அண்ணாவும் அண்ணியும் வேற சொன்னாங்களா? அதான் நானும் ஒன்னும் சொல்லல, 

ஆனாலும் ஃப்ரண்ட்ஸ் உங்களை அறிமுகப்படுத்தி வைக்க சொன்னாங்க, அப்போ உங்களை கல்யாணம் செய்துக்க எனக்கு விருப்பம் இருந்தாலும், நீங்க அந்த கல்யாணத்தில் எந்த ஆர்வமும் காட்டினது போல் எனக்கு தெரியலையா? அதனால அவங்களுக்கு உங்களை எப்படி அறிமுகப்படுத்தறதுன்னு நான் அமைதியா இருந்தேன்.

கல்யாணம் முடியவும் ஒருநாள் கிஃப்ட்டோட வீட்டுக்கு வருவதா ஃப்ரண்ட்ஸ் சொன்னாங்க, ஆனா அப்பவும் தான் நீங்க என்கிட்ட சரியா பேச மாட்டீங்களே, அதுவுமில்லாம பத்து பேரை அந்த வீட்டுக்கு எப்படி வரவைக்கிறது? வெளியில் கூட சந்திச்சிருக்கலாம், சரி கொஞ்சநாள் போகட்டும்னு நினைச்சேன். ஆனா அதுக்குள்ள எல்லாம் அவங்கவங்க வேலையில் பிஸியா ஆகிட்டாங்க, இந்த கல்யாணத்தில் தான் எல்லோரும் சந்திக்கணும்,” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்க, அவள் மடியில் படுத்தப்படியே அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தவன், அப்போது தான் ஒருவிஷயம் ஞாபகத்திற்கு வரவும்,

“ஏன் வரூ, ஃப்ரண்ட்ஸ்னா ராஜூ கல்யாணத்தில் உன்னோட இருந்தாங்களே அவங்களா?” என்று கேட்டான்.

அவள்  “ஆமாம்” என்று பதில் கூறவும்,

“அப்படின்னா, உன்னோட ஃப்ரண்ட் வரும்போது நான் இங்க இருப்பது நல்லா இருக்குமா? அந்த கல்யாணத்தில் நாம தெரிஞ்சவங்களா காட்டிக்கல, உன்னோட ஃப்ரண்ட் என்னை மறந்திருந்தா கூட பரவாயில்லை, ஆனா ஞாபகம் வச்சிட்டிருந்தா, அவங்க நீ என்னை போய் கல்யாணம் செய்திருப்பதை அவங்க கேவலமா நினைக்கப் போறாங்க,” என்று அவன் சொன்னதும், அவன் வாயில் ஒரு அடி வைத்தவள்,

“அப்படி கேவலமா நினைக்கற அளவுக்கு உங்களுக்கு என்ன குறை? அதுவுமில்லாம என்னோட ஃப்ரண்ட்ஸ் உங்களை ஹீரோ ரேஞ்ச்க்கு பேசினாங்க, எனக்கு தான் முதலில் உங்களை தெரிஞ்சது போல காட்டிக்க ஒருமாதிரியா இருந்துச்சு, அப்புறம் திடீர்னு இவர் என்னோட ரிலேஷன் தான்னு சொன்னா, எல்லாம் என்ன நினைப்பாங்களோன்னு அமைதியா இருந்துட்டேன்.

இப்போ நீங்க என் வாழ்க்கையில் வந்தததுக்கு எவ்வளவு சந்தோஷப்பட்றேன் தெரியுமா? உங்களை என்னோட ஃப்ரண்ட்ஸ்க்கிட்ட அறிமுகப்படுத்தி வைக்க எனக்கு எந்த தயக்கமுமில்ல, அதனால இப்படி பேசாதீங்க சரியா?” என்று கோபமாக கூறினாள்.

“சாரி வரூ, நீ என்னை அறிமுகப்படுத்தி வைக்க தயங்கறேன்னு சொல்லல, ஆனாலும்,” என்று அவன் இழுக்க,

“உங்களுக்கு என்ன குறை? படிக்கல அவ்வளவுதானே, மத்தப்படி அதனால நீங்க தாழ்ந்தா போயிட்டீங்க, சொந்தமா வொர்க்‌ஷாப் வச்சிருக்கீங்க, திறமையா அதுவும் நேர்மையா சம்பாதிக்கிறீங்க, சொந்தமா இடம் வாங்கி வீடு கட்டிட்டீங்க, என்னை தங்கமா பார்த்துக்கிறீங்க, அப்புறம் என்னங்க வேணும், அதனால இப்படி பேசாதீங்க, 

என் ஃப்ரண்ட்ஸை நான் வரவைக்க  தயங்கினது கூட நாம முன்ன இருந்த வீட்டுக்காக தானே தவிர, உங்களை அறிமுகப்படுத்த தயங்கி இல்ல, புரியுதா? வீட்டுக்கு கூட ஆரம்பத்தில் தான் யோசிச்சேன். ஆனா அதுக்குப்பிறகு என் ஃபிரண்ட்ஸ் வரேன்னு சொல்லியிருந்தாங்கன்னா, தாராளமா வாங்கன்னு சொல்லியிருப்பேன். ஆனா அப்போ அதுக்கு வாய்ப்பில்லாம போச்சு, நீங்க இப்படி பேசறது எனக்கு மனசுக்கு கஷ்டமா இருக்கு தெரியுமா? என்று அவள் சொன்னதும், அவள் மடியிலிருந்து எழுந்தவன்,

“நீ என்னை இறக்கமா நினைக்கிறன்னு நான் சொல்லவேயில்லை வரூ, அப்படி நான் சொன்னா, என் நாக்கு தான் அழுகிடும், உன் ஃப்ரண்ட்ஸ் உன்னை எதுவும் தப்பா நினைச்சிடக் கூடாதுன்னு தான்,” என்று அவளை சமாதானப்படுத்த,

“அப்படி யாரும் தப்பா நினைக்க மாட்டாங்க, அப்படி அவங்க என்னை தப்பா நினைச்சாலோ, உங்களை கேவலமா பார்த்தாளோ, அவங்க என்னோட ஃப்ரண்ட்ஸே இல்லை போதுமா?” என்று அவள் திட்டவட்டமாக கூற,

அந்த பேச்சில் மகிழ்ந்தவனாக, “என்னோட வரூ செல்லத்தை எனக்கு தெரியாதா?” என்று அவளை கொஞ்சியப்படி அவளை முத்தமிட போக,

“என்ன செய்றீங்க? முத்தம்னு வந்து அப்புறம் மொத்தமா கேட்பீங்க, சாப்பிட டைம் ஆச்சு, அப்புறம் என்னோட ஃபிரண்ட் எப்போ வேணும்னாலும் வரலாம், அதனால வாங்க சாப்பிடலாம்,” என்று சொல்லி அவனை தள்ளிவிடப் பார்த்தாள்.

ஆனால் அவனோ விலகினால் தானே, “ஒழுங்கா ஒரு முத்தத்தோட போயிருப்பேன். இப்போ உன்னைவிட மனசே வரல,” என்று அவள் சொல்ல கேட்காமல் சில சில்மிஷங்களை செய்தே விடுவித்தான்.

சாப்பிட்டதும் முருகனிடம் வர தாமதமாகும் என்று சொல்லி சிறிது நேரம் ஓய்வெடுத்தான். பின் மாலை எழுந்து முகம் கழுவிக் கொண்டு வந்து அவன் அமரவும் வருணாவின் தோழி வரவும் சரியாக இருந்தது.

கதவை திறந்து வைத்துவிட்டு இவன் வரவேற்பறையில் அமர்ந்திருக்க, கேட் திறக்கும் சத்தம் கேட்டு வாசல் பார்த்தவன், ஏற்கனவே பார்த்திருந்ததால், வருணாவின் தோழியை அடையாளம் கண்டுக் கொண்டவன், உள்ளே சமையல் அறையிலிருந்த வருணாவை அழைத்தான்.

அதற்குள் அந்த பெண் வரவும், “வாங்க,” என்று வரவேற்றான். உள்ளிருந்து வந்த வருணாவும், “மகி வா வா,” என்று மகிழ்ச்சியோடு வரவேற்றவள், 

“என்னங்க, இவ மகேஷ்வரி, நாங்கல்லாம் மகி மகின்னு கூப்பிடுவோம், இவளுக்கு தான் கல்யாணம், அதுக்கு தான் பத்திரிக்கை எடுத்துட்டு வந்திருக்கா,” என்று ஆதவனுக்கு தன் தோழியை அறிமுகப்படுத்தி வைத்தாள்.

“ஓ அப்படியா? ரொம்ப சந்தோஷம்,” என்று அவன் கூற,

“மகி இவர்தான் என்னோட ஹஸ்பண்ட், பேரு ஆதவன்,” என்று அவனையும் தோழிக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள்.

“ஹாய் ண்ணா,” என்று அவனிடம் கூறிய மகி, “நீங்க என்ன அவ்வளவு பெரிய வி.ஐ.பி யா ண்ணா, உங்களை பார்க்கணும்னு சொன்னா மேடம் உங்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்க மாட்டேங்குறா? இப்போக்கூட வீட்டுக்கு வரவேண்டாம்னு சொல்லிடுவாளோன்னு நினைச்சேன். அந்த அளவுக்கு உங்களை பாதுகாப்பா வச்சிருக்காளே,” என்று மகேஷ்வரி கேலி செய்யவும்,

“ஆமாம் டீ, என்னோட ஹஸ்பண்ட் எனக்கு பொக்கிஷம், நான் பாதுகாப்பா வச்சிருக்கேன். உனக்கு என்ன வந்துச்சாம்,” என்று வருணாவும் விடாமல் பேசினாள்.

“அடடா பேசறது வருணவா, அய்யோ இந்த நேரம் பார்த்து நம்ம ஃப்ரண்ட்ஸ் இல்லாம போயிட்டாங்களே, இருந்தா எல்லாம் சேர்ந்து ஓட்டி எடுத்துருப்போமே,” என்று மகி போலியாக வருத்தப்பட,

“அதுக்கென்ன எல்லாம் உங்க கல்யாணத்தில் சந்திக்க தானே போறீங்க,” என்று ஆதவன் சொல்லவும், வருணா அவனை முறைத்தாள்.

“அடிப்பாவி அண்ணனை இப்படி கண்ணசைவில் மிரட்டி வச்சிருக்க போல,” என்று மகி சொல்லவும்,

“உனக்கும் கல்யாணம் நடக்குமில்ல, அப்புறம் நீயும் இந்த டெக்னிக்கெல்லாம் உன்னோட ஹஸ்பண்ட்க்கிட்ட உபயோகிக்க தானேப் போற, அப்போ நான் இதே வார்த்தையை உன்கிட்ட சொல்லப் போறேன் பாரு,” என்று சொல்லி வருணா சிரித்தாள்.

“இப்படியே அவங்களை நிக்க வச்சு பேசிட்டு இருக்கப் போறீயா வரூ, அவங்களுக்கு ஏதாவது சாப்பிட எடுத்துட்டு வா,” என்று அவன் சொல்லவும்,

“உட்காரு மகி,” என்று அவளை அமர வைத்துவிட்டு, வருணா சமையலறைக்குச் செல்லவும்,

“அடிக்கடி எங்களையெல்லாம் பார்த்தா ஏன் அவ இவ்வளவு எக்ஸைட்டா ஆகப் போறா, புது மனைவின்னு ஃப்ரண்ட்ஸை கூட பார்க்க விடாம எப்போதும் உங்க கூட வச்சிக்கிட்டா எப்படி?” என்று மகி அவனை கேலி செய்யவும்,

“அய்யோ வரூ இல்லன்னு நானா? உங்களை கவனிக்க சொன்னதுக்கு இது தேவை தான்,” என்று அவன் சொல்லவும், சிரித்தவள்,

“அண்ணா உங்களை முன்னமே எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு, ஆனா எங்கன்னு தெரியல,” என்றாள்.

“ஹே வந்ததுமே கண்டுப்பிடிச்சிருப்பன்னு பார்த்தேன், உண்மையிலேயே ஞாபகம் இல்லையா?” என்று கேட்டப்படியே வருணா மூவருக்கும் சிற்றுண்டியும் தேநீரும் கொண்டு வர,

“அப்போ முன்னமே பார்த்திருக்கோமா? எங்க சட்டுன்னு ஞாபகம் வரலையே, உங்க கல்யாணத்துக்கும் வரல, அதுக்குப்பிறகும் நாம சந்திச்சிக்கிட்டது கிடையாது. அப்போ அதுக்கு முன்ன பார்த்திருக்கோமா?” என்று மகி கேட்டாள்.

“ஹே உண்மையா ஞாபகத்துக்கு வரலையா? ஹேமா கல்யாணத்தில் பார்த்துட்டு தாடிக்குள்ள மறைஞ்சிருக்க ரியல் ஹீரோன்னுல்லாம் சொன்னீயே, ஆட்டோகிராஃப் வாங்கப் போனீயே, செல்ஃபி எல்லாம் எடுக்க நினைச்சீயே, இப்போ ஞாபகத்துக்கு வருதா?” என்று வருணா கேட்கவும்,

“ரியலி, நீங்களா? அப்போ நிறைய தாடி வச்சிருந்தீங்க, இப்போ ட்ரிம் செய்திருக்கீங்க, அதான் உடனே கண்டுப்பிடிக்க முடியல, ஆனா எப்படி? உங்க ரெண்டுப்பேருக்கும் எப்படி கல்யாணம் ஆச்சு?” இப்படி வரிசையாக கேள்விகள் கேட்டவள்,

“வரு, உன்னோட அண்ணியோட கசின் பிரதரை தானே நீ கல்யாணம் செய்துக்க போறதா சொன்ன, அப்போ அண்ணனை அந்த கல்யாணத்திலேயே உனக்கு தெரியுமா? ஆனா நீ தெரிஞ்சிக்கிட்டது போல காட்டிக்கலையே? ஏன்?” என்று கேட்டாள்.

அந்த கேள்வியில் ஆதவனும் வருணாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். இப்படியான கேள்விகள் வருமென்பதால் தானே அவன் வேலைக்கு செல்வதாக கூறினான். இப்போது என்ன சொல்லப் போகிறாய்? என்ற கேள்வி ஆதவனின் பார்வையில் இருக்க, வருணா அப்போதைய நிலைமையை மகியிடம் சொல்வதற்காக வாயெடுக்க,

அதற்குள் ஆதவனோ, “அது வருணா என்னோட சொந்தக்கார பெண்ணா இருந்தாலும் நான் அவக்கிட்ட பேசமாட்டேன். அவளா பேச வந்தாலும் நான் ஒதுங்கி போயிடுவேன். அதான் அவ அங்க என்னை தெரிஞ்சா மாதிரி காட்டிக்கல, நான் அவளுக்கு சொந்தக்காரன்னு உங்கக்கிட்ட சொன்னா, அப்புறம் என்கிட்ட பேசறது போல வரும், அப்போ நான் எப்படி நடந்துப்பேனோன்னு பயந்திருப்பா, நானும்தானே அவளை தெரியாத மாதிரி இருந்தேன். அப்புறம் அவ மட்டும் எப்படி என்கிட்ட பேசுவா?” என்று ஆதவன் தன்மீது தான் தவறு என்பது போல் கூற,

“ஓ அப்படியா? அப்போ ரிலேஷனா இருந்தாலும் கல்யாணத்துக்கு முன்ன பேசிக்கிட்டதே இல்லன்னா, அப்போ கல்யாணத்துக்கு பிறகு லைஃப் ரொம்ப இன்ட்ரஸ்ட்டா போயிருக்கும்னு சொல்லுங்க,” என்று மகி கூறவும்,

அவள் சொன்னது முழுக்க முழுக்க உண்மை தானே, அதனால் ஆதவனும் வருணாவும் காதலோடு பார்த்துக் கொள்ள, அதுவே வருணா அவளது திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுகிறாள் என்பதை மகி புரிந்து கொண்டாள்.

ஆதவனை பற்றி ஹேமாவின் கணவன் அன்று திருமணத்தில் சொல்லி கேட்டிருக்கிறாளே, அதனால் வருணாவிடம் கேட்க நிறைய கேள்விகள் இருந்தாலும், இப்போது அதை கேட்பது சரியாக இருக்காது என்பது புரிந்தவளாக, “சரி ரெண்டுப்பேரும் கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்துடணும்,” என்று திருமண அழைப்பிதழை அவர்களிடம் நீட்டினாள்.

“நீ சொல்லணுமா? கண்டிப்பா வருவோம்,” என்று சொல்ல,

“அப்போ நான் கிளம்பட்டுமா?” என்று அவள் விடைபெற,

“இருடீ, நைட் சாப்பிட்டு போகலாம்,” என்று வருணா கூறியும்,

இன்னும் சிலருக்கு திருமண அழைப்பிதழ்கள் தரவேண்டியிருக்கு என்று சொல்லி மகி கிளம்பினாள்.

மகி சென்றதும், “எதுக்கு உங்க மேல தான் தப்பு என்பது போல் மகிக்கிட்ட சொன்னீங்க?” என்று வருணா கேட்க,

“இதில் தப்பு என்ன இருக்கு? பொதுவா எப்பாயாச்சும் பார்க்கறது போல இருந்தா நீ பேசமாட்ட, நானும் உன்கிட்ட வந்து பேசமாட்டேன் தானே, அதைத்தான் சொன்னேன்.”

“ஆனாலும் நான் உங்களை நல்ல மாதிரியா பார்த்திருந்தா நீங்களும் பேசியிருப்பீங்க தானே,”

“இல்லன்னாலும் நானா வந்து பேசியிருந்தா நீ பதிலுக்கு என்னை அவமானமா படுத்தியிருப்ப, இல்லல்ல,”

“அப்படியில்லை, ஆனாலும் எப்பயாச்சும் உங்கக்கிட்ட ஹார்ஷா தானே பேசியிருக்கேன்.”

“அதான் உனக்குப் பிடிக்கலன்னு நானா ஒதுங்கி தானே இருந்தேன். அப்போ நானும் உன்கிட்ட விலகி இருந்தது உண்மை தானே, அதைத்தான் உன் ஃப்ரண்ட்க்கிட்ட சொன்னேன். இது என்ன பெரிய விஷயமா பேசிட்டு இருக்க, சரி டைம் ஆச்சு நான் வொர்க்‌ஷாப் போக வேண்டாமா? நான் ரெடியாகறேன்.” என்று சொல்லி அவன் அறைக்குச் செல்ல,

“ம்ம் அந்த அழுக்கு சட்டை பேன்ட்டை போட இவ்வளவு பில்டப்,” என்று எப்போதும் போல அவனை கேலி செய்தவள், அவனை கணவனாய் அடைந்ததற்கு உண்மையிலேயே மனதில் பெருமைக் கொண்டாள்.

சாரல் வீசும்…