IP 1
Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

சாரல் 1
விண்ணோடு மேளச் சத்தம் என்ன?
மண்ணோடு சின்னத் தூறல் என்ன?
எங்கே தான் சென்றாயோ?
இப்போது வந்தாயோ?
சொல்லாமல் வந்தது போல்
நில்லாமல் செல்வாயோ?
தப்பாமல் மீண்டும் சந்திப்பாயோ?
நீ வரும் போது நான் மறைவேனா
நீ வரும் போது நான் மறைவேனா
தரிகிட தரிகிட த்தா,
என்ற மழைப் பட பாடல் ஒருபக்கம் ஒலிப்பரப்பாகிக் கொண்டிருக்க, அந்த பாடலின் இசைக்கு தகுந்தாற்போல் துப்பட்டாவை இடுப்பில் கட்டிக் கொண்டு நடனமாடிக் கொண்டிருந்தாள் வருணா, அவளோடு சேர்ந்து அந்த அபார்ட்மென்ட்டில் குடியிருக்கும் மற்ற வீடுகளில் உள்ள சின்னஞ்சிறு பிள்ளைகளும் அவளுடன் ஆட்டம் போட்டனர்.
“வருணா, வருணா, கீழே இருந்து செண்பகத்தின் குரல் கேட்டதும்,
“இதோ வரேன் அண்ணி,” என்று குரல் கொடுத்தவள், “குட்டீஸ், மீதி ப்ராக்டீஸ நாளைக்குப் பார்க்கலாம், இப்போ எல்லோரும் வீட்டுக்குப் போங்க, என்று அவர்களை அனுப்பியவள், அவளும் கீழே இறங்கி வந்தாள்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
வீட்டிற்குள் நுழையும் போதே, செண்பகத்தின் புலம்பல் காதில் கேட்டது. “எப்போ பாரு சின்ன பிள்ளைங்கக் கூட விளையாடிக்கிட்டு இருக்கறதே வேலையாப் போச்சு, வீட்ல எவ்வளவு வேலை இருக்கு, தனியா நான் தான் எல்லா வேலையும் பார்க்கணும், கூடமாட உதவற எண்ணம் கொஞ்சம் கூட இல்ல,” என்றவள், வருணா வந்ததை கவனித்து அவளை முறைத்தாள்.
“எப்பப் பார்த்தாலும் ஆட்டம் பாட்டமா இருந்தா எப்படி வருணா, கூடமாட கொஞ்சம் எனக்கு ஒத்தாசையா இருந்தா, கல்யாணம் செஞ்சுக்கிட்டு போகும் போது உனக்கும் ஈஸியா இருக்குமில்ல,”
“அண்ணி, நம்ம அப்பார்மென்ட் குட்டீஸ் இப்போ லீவ்ல இருக்காங்க அண்ணி, அதான் சும்மா அவங்களுக்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருந்தேன்.”
“சின்னப் பசங்கக் கூட சேர்ந்து விளையாடும் வயசா உனக்கு, சீக்கிரம் உனக்கு மாப்பிள்ளை பார்க்கச் சொன்னா, உங்க அண்ணன் கேட்டா தானே, என்று செண்பகம் திரும்ப புலம்ப ஆரம்பிக்க, வருணா அங்கிருந்து நழுவி தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.
வருணா இருப்பத்து மூன்று வயது பருவ மங்கை, பார்ப்பவரை கவரும் அழகு, மெல்லிய உடல்வாகு, சிறு வயதிலேயே தாய் தந்தை இறந்து விட, தன் அண்ணன் அண்ணியின் அடைக்கலத்தில் இருப்பவள், பட்டப்படிப்பும், ஒரு வருடம் அழகு சம்பந்தமான படிப்பும் முடித்து விட்டு வீட்டில் தான் இருக்கிறாள். தனியாக ஒரு அழகு நிலையம் தொடங்க வேண்டுமென்பது அவளின் ஆசை. ஆனால் அவள் அண்ணன் விக்னேஷின் வருமானத்தில், இந்த வீடு வாங்கிய பேங்க் லோன் அடைக்க கொடுக்கும் தொகை போக மீதி பணத்தில் மூவரும் சாப்பிட மற்றும் இதர செலவுக்கே சரியாக போய்விடுகிறது. இதில் வருணாவின் திருமண செலவு வேறு, திடீரென்று அவளுக்கு நல்ல வரன் அமைந்தால், கடன் வாங்கி தான் திருமணம் நடத்த வேண்டும்.
அதையெல்லாம் மனதில் வைத்து வருணாவே தன் ஆசையை மனதில் போட்டு புதைத்து விட்டாள். இருந்தாலும் தன் சகோதரனின் பாரத்தை குறைக்க, ஏதாவது அழகு நிலையத்தில் வேலை பார்ப்பதாக தன் சகோதரனிடம் கூற, அவனோ அதெல்லாம் வேண்டாமென்று விட்டான். “படிச்சிட்டு சும்மா இருக்கியேன்னு தான் ப்யூட்டி கோர்ஸ் போறன்னதும் ஒத்துக்கிட்டேன். சொந்தமான்னா பரவாயில்ல, மத்த ப்யூட்டி பார்லருக்குன்னா வேணாம், படிச்ச டிகிரி படிப்புக்கு ஏத்த மாதிரி நல்ல வேலை கிடைத்தால் போ” என்று சொல்லியிருந்தான். அவளும் நல்ல வேலைக்கு முயற்சித்துக் கொண்டு தான் இருக்கிறாள். அரசு வேலைக்கான பரிட்சைகளும் எழுதிக் கொண்டிருக்கிறாள். அதுவரையிலும் வீட்டில் வெட்டியாக இல்லாமல் அழகு நிலையத்திற்கு வேலைக்குப் போகலாம் என்று நினைத்திருந்தாள். ஆனால் அவள் அண்ணன் வேண்டாம் என்று சொன்னதால், தெரிந்தவர்கள், அருகிலுள்ளவர்களிடம், சென்னையிலேயே ஏதாவது திருமணம், மற்ற நிகழ்ச்சிகளுக்கு அலங்காரம் செய்ய ஆள் வேண்டுமானால் தன்னை அழைக்குமாறு சொல்லி வைத்திருக்கிறாள். அப்படி கூப்பிடும்போது தன் அண்ணியை அழைத்துக்கொண்டு செல்வாள். அப்படிப்பட்ட வாய்ப்பு எப்போதாவது தான் கிடைக்கும், மற்ற நேரங்களில் இப்படி தான் பக்கத்து வீடுகளில் உள்ள குழந்தைகளோடு சேர்ந்து அவர்களுக்கு நடனம் சொல்லிக் கொடுக்கிறேன் என்று சொல்லி அவர்களோடு சேர்ந்து மொட்டைமாடியில் யாரும் பார்க்காதப்படிக்கு இருக்கும் மறைவிடத்தில் நடனம் ஆடுவாள்.
நடனம் அவளுக்கு பிடித்த விஷயம், சிறு வயதில் நடனம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையில் சிறிது நாட்கள் பரதநாட்டியம் வகுப்புக்கு சென்றாள். ஆனால் அதற்கு பிறகு அவர்கள் அந்த ஏரியாவை விட்டு வேறு ஏரியா சென்றதால், பின் வேறு நடன வகுப்பில் சேர்க்காமல் விட்டுவிட்டார்கள். அவள் கற்றுக் கொண்ட நடனத்தையும், பிறர் ஆடுவதை பார்த்தும் அடிக்கடி வீட்டில் ஆடி பழகிக் கொள்வாள். பள்ளிகளிலும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பாள். இப்போதும் தோழிகள் இருந்தும் அவர்களை அடிக்கடி சந்திக்க முடியாததால், அண்ணியின் புலம்பலுக்காக சிறிது நேரம் செண்பகத்திற்கு உதவி செய்துவிட்டு, அடுத்து அவளது அறைக்குச் சென்று டிவிடி ப்ளேயரில் பாட்டை ஓடவிட்டு அதற்கு நடனமாடுவது அவளது வழக்கம். மொத்தத்தில் வருணாவை பற்றி சொல்ல வேண்டுமானால், பழகிப் பார்த்தால் இதமானவள், இனிமையானவள். வாழ்க்கையை அதன் போக்கில் வாழ பழகிக் கொண்டவள்.
ஆதவன் டிங்கரிங் அண்ட் மெக்கானிக் வொர்க் ஷாப்
ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியிருந்த பெயர் பலகையோடு அந்த வொர்க் ஷாப்பின் உள்ளே நுழைந்தால், ஒரு பத்து கார்கள் நிறுத்தி பழுது பார்ப்பதற்கு ஏற்றது போல் இருந்தது அந்த இடம். இப்போதைக்கு மூன்று கார்கள், இரண்டு பைக்குகள் நிறுத்தப்பட்டிருக்க, மனையை விட கொஞ்சம் உயரமாக இருந்த ஸ்டூலில் அமர்ந்து 17 வயதுமிக்க ஒரு வாலிபன் கையில் அலைபேசியை பார்த்தப்படி அமர்ந்திருந்தான். அவனுக்கு அருகில் தன் நீள கால்கள் மட்டுமே தெரியும்படி காருக்கு அடியில் படுத்திருந்தான் ஆதவன், அந்த நிலையில் இருந்தப்படியே தன் கையை வெளியே நீட்டி,

“ஹே முருகா, அந்த எட்டா நம்பர் ஸ்பேனர் எடு,” என்று அருகில் இருந்த அந்த வாலிபனிடம் அவன் குரல் கொடுக்க,
அந்த முருகன் என்ற பெயர் கொண்ட வாலிபனோ, அலைபேசியில் எதையோ பார்த்தப்படி புன்னகைத்து கொண்டிருந்தான். ஆதவன் ஒன்றுக்கு மூன்று முறை குரல் கொடுத்தும் அந்த முருகனிடமிருந்து எந்த பிரதிபலிப்பும் இல்லாததால், காருக்கு அடியில் இருந்து எழுந்து உட்கார்ந்தவன், அந்த முருகன் தலையில் பலமாய் ஒரு கொட்டு கொட்டினான்.
6 அடிக்கு கொஞ்சமே குறைவான உயரம் கொண்ட ஆதவன், அமர்ந்திருந்த போதே, ஸ்டூலில் உட்கார்ந்திருந்த முருகனின் உயரத்துக்கு ஈடாக இருந்தான். பரட்டை தலையோடு படிய மறுக்கும் செம்பட்டை முடி, அவன் அழகனா என்று தெரியாதபடி பாதி முகத்தை மீசையும் தாடியும் மறைத்திருக்க, மீதி முகத்தை கீரிஸ் கரை மறைத்திருந்தது. அழுக்கு சட்டை பேன்ட்டோடு அவன் செய்யும் கடின வேலையை பொறுத்து அவன் கை, கால்களும் க்ரீஸ் கரைகளோடு கடினமாய் காட்சி அளித்தது.
“அண்ணா ஏன்னா கொட்ன? வலிக்குது” என்று தலையை தடவிக் கொண்டான் முருகன்.
“எவ்வளவு நேரம் ஸ்பேனர் கேட்கறேன். எடுத்துக் கொடுக்காம அப்படி என்னடா போன்ல விளையாட்டு?”
“விளையாட்டு இல்ல ண்ணா, ஃபேஸ்புக் பார்த்தேன்.”
“பேஸ்புக்கா, ஒழுங்கா பத்தாவது பாட புக்கை நல்லா படிச்சிருந்தா பெயிலாகம பாஸாகி, ஒரு டாக்டருக்கோ, வக்கீலுக்கோ படிச்சு இருக்கலாம், அதைவிட்டுட்டு பேஸ்புக் பார்க்கிறியா?”
“ஆமாம் இவர் மட்டும் ரெண்டு டிகிரி வாங்கிட்டாரு” என்று அந்த முருகன் முனக, என்னடா என்பது போல் ஆதவன் கோபமாய் பார்த்தான்.
“அண்ணா இது பேஸ்புக் இல்ல, ஃபேஸ்புக்னு சொல்லணும், இது படிக்கிற புக் இல்லண்ணா, இது என்னன்னா?” என்று நிறுத்தியவன், என்ன சொல்ல என்று தெரியாமல், “அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது, நீ அந்த காலம் மாதிரியே இருக்கண்ணா, நீ இந்த காலத்துக்கு அப்டேட் ஆகணும், எல்லோருமே டாக்டர், கலெக்டர், வக்கீல்னு ஆகிட்டா, இந்த வேலையெல்லாம் அப்புறம் யார் பார்க்கறது, அதான் நம்மல மாதிரி படிப்பு ஏறாத மக்கு சாம்பிராணிகளையும் ஆண்டவன் படைக்கிறான்.” என்று ஆதவனையும் சேர்த்து சொல்ல, அவனோ முருகனை முறைத்தான்.
“இந்த பேச்சுக்கு ஒன்னும் குறைச்சலில்ல, எனக்கு எந்த புக்கை பத்தியும் தெரிஞ்சிக்க வேண்டாம், போடா போய் டீ வாங்கிட்டு வா,”
“அண்ணா, ஆயா உனக்கு அடிக்கடி டீ வாங்கிக் குடுக்க கூடாதுன்னு சொல்லியிருக்குண்ணா,”
“எதுக்குடா?”
“உனக்கு இன்னும் 30 வயசுக் கூட ஆகலையாம், அதுக்குள்ள ஒன்னு ரெண்டு வெள்ளை முடி வந்துடுச்சாம், உனக்கு கல்யாணம் ஆகற வரை இன்னும் வெள்ளை முடி வராம பார்த்துக்கணுமாம், அதனால அடிக்கடி உனக்கு டீ வாங்கி தர வேணாம்னு ஆயா சொல்லுச்சு,”
“அதெல்லாம் ஆயா ஒன்னும் சொல்லாது, நீ போய் வாங்கிட்டு வா,”
“இப்பத்தான் லன்ச் டைம் ஸ்டார்ட் ஆயிடுச்சே பேசாம சாப்பிட வேண்டியது தானே?”
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“இந்த கார்ல இன்னும் கொஞ்சம் வேலை இருக்குடா, முடிக்க இன்னும் ஒரு மணி நேரம் ஆகும், அதனால நீ போய் டீயே வாங்கிட்டு வா, எனக்கு மட்டும் வாங்கிட்டு வா, வந்ததும் சாப்பிட்டு அந்த காரை கழுவு,” என்றவன், திரும்ப காருக்கு அடியில் நுழைந்து கொண்டான்.
அதன்பின் ஒரு மணி நேரம் என்பது ஒன்றரை மணி நேரமாக நீடித்து இந்த டீ க்கு பிறகு, சிறிது நேரம் கழித்து இன்னொரு டீயும் குடித்ததும் தான் தன் வேலையை முடித்தான். அதன்பிறகு முருகனிடம் வொர்க் ஷாப்பை பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு, மதிய சாப்பாடு சாப்பிட வீட்டுக்கு செல்ல மணி மூன்றாகியது.
ஆதவன் ஒரு கடும் உழைப்பாளி. எடுத்த வேலையை பொறுப்பாக செய்து முடித்தால் தான் அவனுக்கு தூக்கமே வரும், அவனுக்கென்று இருப்பது அவன் ஆயா மட்டும் தான், அவன் தந்தையின் தாயார், பெயர் பொன்னம்மா. ஆதவனின் தாய் அவனது சிறு வயதிலேயே இறந்துவிட்டார். அடுத்து அவனது தந்தை அவர் விருப்பத்திற்கு ஒரு பெண்ணை இரண்டாம் திருமணம் செய்து வர, அந்தப் பெண்ணிற்கோ, தன் கணவனின் தாயும், மகனும் பாரமாகிப் போனார்கள். அவர்களை தங்களுடன் வைத்துக் கொள்ள விரும்பாமல், அதைக் குறித்து அவர் வீட்டில் அடிக்கடி பிரச்சனைகளை எழுப்புவதும், பொன்னம்மாவையும் ஆதவனையும் ஏதாவது விஷயம் குறித்து அடிக்கடி திட்டுவதுமாக இருந்தாள். பொன்னம்மாவிற்கோ ரோஷம் தாங்காமல், தன் பேரனை கூட்டிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
குடிசை மாற்று வாரியம் மூலம் அரசு கட்டிக் கொடுத்திருந்த மாடி வீடு ஒன்றில் அப்போது வாடகைக்கு சென்றவர், தன் பேரனை பள்ளியில் சேர்த்து விட்டுவிட்டு, வருமானத்திற்காக அந்த ஏரியாவிலேயே இட்லிக் கடை வைத்து நடத்தினார்.
ஆதவனின் தந்தை திருட்டுத்தனமாக இவர்கள் இருவரையும் பார்த்து விட்டு செல்வார். ஏதாவது பணமும் தருவார். அது தெரிந்தால் அவரின் மனைவி வீடு தேடி வந்து இவர்களிடம் சண்டைப் பிடிப்பார். அதிலிருந்து தன் மகன் பணம் கொடுத்தால் அதை பொன்னம்மா வாங்க மறுத்துவிடுவார். அப்படி கொடுக்காமல் இருந்தாலும் அந்த பெண் அடிக்கடி இப்படி தான் வந்து சண்டை பிடிப்பார். முதலில் பொறுத்துப் பார்த்த பொன்னம்மாவும் பின் அவள் வந்தால் உண்டு இல்லையென்று ஆக்கிவிடுவார். அருகிலிருப்பவர்களும் பொன்னம்மாவிற்கு ஆதரவாக இருப்பதால், அவளால் ஒன்றும் செய்ய முடியாது. அந்த கோபத்தையெல்லாம் தன் கணவனிடம் காட்டுவாள். இப்படி ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டதை எண்ணி நிம்மதியை தேடி மது அருந்த கற்றுக் கொண்டவர், சிறிது நாட்களிலேயே முழு குடிகாரனாக மாறிப் போனார்.
மனைவிக்கு தெரியாமல் திருட்டுத் தனமாக தன் தாய்க்கும், பிள்ளைக்கும் காசு கொடுத்து சென்றவர், இப்போது குடிக்க காசு கேட்டு தன் தாயை தேடிச் செல்ல ஆரம்பித்தார். பொன்னம்மாவின் அறிவுரைகளை காது கொடுத்து கேட்க மாட்டார். கணவன் குடிகாரனாக மாறிய பின் வீட்டில் அடிக்கடி சண்டை வர, ஒருநாள் யாருக்கும் சொல்லாமல் சென்றவர் தான், அதன்பின் இதுவரையிலும் அவர் எங்கிருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை, அவர் உயிரோடு இருக்கிறாரா என்பதும் சந்தேகம் தான்,
கணவன் வீட்டை விட்டு சென்றதற்கும் இந்த இருவர் தான் காரணம் என்று அவரின் மனைவி பொன்னம்மாவிடம் வந்து சண்டை போட, பொன்னம்மாவோ கையில் கிடைத்த விளக்கமாற்றை எடுத்து அவளை விலாசி தள்ளிவிட்டார். அதன்பின் இந்தப்பக்கமே அவள் தலை வைத்து படுப்பதில்லை, அடுத்து அவள் என்ன ஆனாள் என்று கூட பொன்னம்மாவிற்கு தெரியாது. தன் மகன் எப்போதாவது வருவான் என்று எதிர்பார்த்து, காலம்போன போக்கில் வாழ்க்கையை வாழவும் ஆரம்பித்துவிட்டார்.
ஆதவன் பத்தாவது பரிட்சையில் தோல்வியடந்தான். படிப்பு சரியாக ஏறாமல் பள்ளிக்கு போகமாட்டேன் என்று அடம்பிடிக்கவே அவனை ஒரு மெக்கானிக் ஷெட்டில் கொண்டு போய் பொன்னம்மா வேலைக்கு சேர்த்துவிட்டார். அங்கு கொஞ்சம் தொழில் கற்றுக் கொண்டவன், பின் ஒரு வொர்க் ஷாப்பில் டிங்கரிங் வேலையும் கற்றுக் கொண்டான். இப்படியே சில இடங்களில் வேலைப் பார்த்து மெக்கானிக், டிங்கரிங், வண்டி ஓட்ட என்று அந்த தொழிலில் கைத்தேர்ந்தவனாக மாறியவன், பின் தனியாக ஒர்க் ஷாப் வைத்தான்.
தனியாக வொர்க்ஷாப் வைத்ததும் தன் ஆயாவை இனி இட்லி கடை போட வேண்டாமென சொல்லிவிட்டான். கடுமையாக உழைத்தான். பழைய கார், பைக்கிற்கு மெக்கானிக், டிங்கரிங் வேலை பார்ப்பது மட்டுமல்லாமல், பழுதான கார்களை விலைக்கு வாங்கி, அதை சரி செய்து புதியதாக்கி அதை விற்கும் தொழிலும் செய்தான். அவர்கள் வாடகை இருந்த அந்த வீட்டையே விலைக்கு வாங்கினான். வொர்க்ஷாப்பை பெரிதாக்கினான். புறநகர் பகுதியில் பின்னால் பெரிய வீடு கட்டும் எண்ணத்தோடு காலி மனை வாங்கிப்போட்டான். அவன் பெயரிலும், அவனது ஆயா பெயரிலும் வங்கியில் பணம் சேர்த்து வந்தான். தொழில் என்று வந்தால் கறாராகவும் தீவிரமாகவும் இருப்பான். அதனால் பார்ப்பவர்களுக்கு அவனது தோற்றம் மட்டுமல்ல, அவனும் கடினமானவாகவே காட்சியளிப்பான்.
ஆட்டோக் கூட நுழைய முடியாதபடி இருந்த அந்த தெருவில் தன் பைக்கை நிறுத்தியவன், முதல் மாடியில் உள்ள அவனது வீட்டிற்குச் சென்றான். மொத்தமாக ஒரே அறை, அதிலே கொஞ்சம் தடுத்து ஒரு கிட்சன், மற்றும் குளியலறையும் கழிப்பறையும் ஒருபக்கம் என்று தான் அரசாங்கம் கட்டிக் கொடுத்திருந்தது. அதில் அங்கு வசித்தவர்களே இன்னும் ஒரு சிறிய அறையை அவர்களே கட்டிக் கொண்டார்கள். அப்படி ஆதவன் வீட்டில் கட்டியிருந்த அறையிலும், ஒரு ஒற்றைக் கட்டிலும் ஒரு டேபிள் ஃபேனும் வைக்கப்பட்டிருந்தது. அங்கு வசிப்பவர்கள் தங்கள் வீட்டுக்கு தேவையான நவீன வசதிகளை அவர்களே அமைத்துக் கொள்வார்கள். இருந்தும் ஆதவனுக்கும் அவனது ஆயாவுக்கும் அப்படி எதுவும் தேவைப்படாததால், சிமெண்ட் தரையோடு அந்த வீட்டில் அவர்களுக்கு தேவையான கொஞ்ச பொருட்களோடு வீடு எளிமையாக காட்சி அளித்தது.
“ஆயா பசிக்குது சோறு போடு,” என்றபடியே குளியலைறைக்குச் சென்று தன்னை சுத்தப்படுத்தியவன், வெளியே வந்து துண்டால் உடம்பைத் துடைத்தப்படியே, “இன்னிக்கு என்ன சோறு ஆயா,” என்று கேட்டான்.

“இன்னிக்கு உடம்பு ஒருமாதிரி இருந்துச்சுன்னு சோறாக்கலடா நைனா, மெயின் ரோட்டுக்கு போய் பாய் கடையில உனக்கு பிரியாணி வாங்கியாந்தேன். உக்காந்து சாப்பிடு” என்று அப்படியே கட்டியிருந்த பொட்டலத்தோடு எடுத்து வந்து தரையில் வைத்தார் பொன்னம்மா.
“இன்னிக்கு சோறாக்கல நைனா, அங்கேயே ஏதாச்சும் சாப்டுக்கோ,” என்று அலைபேசியில் சொல்லியிருந்தாளே, ஆதவன் ஏதாவது வாங்கி சாப்பிடிருப்பான். ஆனால் பொன்னம்மாவிற்கோ தன் பேரனை வீட்டுக்கு வரவைத்து தன் கையால் உணவு கொடுக்க வேண்டுமென்று விருப்பம், அப்போதுதான் நன்றாக சாப்பிடுவான். இல்லை வெறும் டீயே குடித்து பொழுதை கழிப்பான் என்று தான் மதிய சாப்பாட்டிற்கு வீட்டுக்கு வரச் சொல்லுவார்.
“என்ன ஆயா, ஒரே பார்சல் தான் இருக்கு, உனக்கு வாங்கனத சாப்பிட்டல்ல,”
“இல்ல நைனா, நேத்து மீந்த சோறுல தண்ணி ஊத்தி வச்சிருக்கு, அதையே சாப்பிட்டுக்கலாம்னு வச்சிருக்கேன்.”
“என்ன ஆயா, இப்படி பழசெல்லாம் சாப்பிடாதன்னு உனக்கு எத்தனவாட்டி சொல்றது, அதுவும் இவ்வளவு லேட்டா சாப்பிட்ற, நம்ம ரெண்டுபேர் தானே, திட்டமா சோறாக்க தெரியாதா?”
“இல்ல நைனா, நேத்து பக்கத்து வீட்டு கோமளா ஊருக்குப் போனா, அவ புருஷன் வேலை விட்டு வந்தா கொஞ்சம் சோறு கொடுக்க சொன்னா, அதான் அவனுக்கும் சேர்த்து வடிச்சேன். அவன் என்னடான்னா வரும் போதே வெளிய சாப்பிட்டு வந்துட்டானாம், அதான் மீந்து போச்சு,”
“சரி பரவாயில்ல விடு, நீ சாப்டாம இருந்ததும் நல்லதுக்கு தான், அந்த பழையதை என்கிட்ட கொடு, நீ இந்த பிரியாணிய சாப்பிடு” என்று பொட்டலத்தை பிரித்து பொன்னம்மாவின் முன் வைத்தான்.
“அய்யோ என்ன நைனா, நான் என்ன இம்புட்டும் சாப்பிடப் போறேனா, கொஞ்சம் போதும், மீதிய நீ சாப்பிடு, பழையதை முழுசா சாப்பிட வேண்டாம். மீதி இருந்தா நாளைக்கு மாட்டுக்கு வைப்போம்,”
“அதெல்லாம் இருக்கட்டும் ஆயா, உனக்கு தேவையானதை சாப்பிட்டு மீதிய அப்படியே பொட்டலத்துலயே வை, முருகனுக்கு எடுத்துட்டு போய் கொடுக்கிறேன்.” என்றவன் அமைதியாக சாப்பிட ஆரம்பித்தான்.
பொன்னம்மாவோ பேரன் சாப்பிடுவதை பார்த்தப்படியே அவரும் சாப்பிட்டார். மற்றவர்களுக்கு அவன் எப்படியோ, அவன் குழந்தை மனம் அவருக்கு தான் தெரியும், அதே போல அவனை திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணும் அவனை புரிந்து கொள்ள வேண்டும், இப்போதெல்லாம் அவர் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரே விஷயம் அது மட்டும்தான்,
இப்போதெல்லாம் அடிக்கடி அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. தன் காலம் முடிவதற்குள் ஆதவனுக்கு திருமணத்தை முடித்துவிட வேண்டும், திடீரென்று தனக்கு ஏதாவது ஆகிவிட்டால், தன் பேரன் தனியாக கஷ்டப்படக் கூடாது என்பது தான் அவர் கவலையே, அவர் மனதில் ஒரு எண்ணம் இருக்கிறது. அதுபடி மட்டும் நடந்துவிட்டால், அதன்பின் பேரனைப் பற்றிய கவலையே இல்லை. சீக்கிரம் அதற்கான முயற்சியை எடுக்க வேண்டுமென்று மனதில் முடிவெடுத்துக் கொண்டார்.
சாரல் வீசும்…