என் நித்திய சுவாசம் நீ – 18 Final

மறுநாள் மதியம் அலுவலக உணவகத்தில் அமர்ந்து உண்டு கொண்டிருந்தனர் நிவாசினியும் பவானியும்.

நிவாசினி எதையோ சிந்தித்துக் கொண்டே உண்டு கொண்டிருக்க,
“என்னடி காலைலருந்து என்னமோ யோசிச்சிட்டே இருக்க?” எனக் கேட்டாள் பவானி.

“தாத்தாக்கு உடம்பு சரியில்லாதப்ப நீயும் அபி அண்ணாவும் தாத்தாவை வந்து பார்த்தீங்கல்ல! அப்ப தாத்தா உங்ககிட்ட எதுவும் சொன்னாரா?” எனக் கேட்டாள் நிவாசினி.

“ஹ்ம்ம் நிறையப் பேசினாரே! உன்னோட அப்பா அம்மா சாகுறதுக்கு ஒரு வாரம் முன்னாடி தான் உன் பேர்ல எல்லாச் சொத்தையும் உயில் எழுதி வச்சாங்கனு சொன்னாரு. அவர் இறந்த பிறகு அவர் பேரில் இருக்க மிச்ச மீதி சொத்தும் உனக்குத் தான் வரும், அதனால உன்னை இந்தச் சொத்துக்காக யாராவது ஏமாத்த வாய்ப்பிருக்கு..  அதனால இதுக்கெல்லாம் ஆசைபடாத நல்ல பையனா உங்க ஜாதில அவர் பார்க்க சொல்லி புரோக்கர்கிட்ட சொல்லியிருந்தாராம். ஆனா அதுக்குள்ள இப்படி ஆகிட்டுனு சொன்னாரு! உனக்குக் கல்யாணம் ஆகிறதுக்கு முன்னாடி அவர் இறந்துட்டாருனா நீ தனியா இருக்கனுமேனு நினைச்சு ரொம்ப வருத்தப்பட்டுப் பேசினாரு. நானும் அபியும் உன்னை நல்லா கவனிச்சிப்போம்னு அவர்கிட்ட சொன்னோம். ஆனா தாத்தா அப்ப கூட நித்திலன் அண்ணாவை பத்தி எதுவும் சொல்லலை ஹாசினி” எனக் கூறியவள்,

“ஏன்டி இதை இப்ப கேட்குற?” எனக் கேட்டாள்.

“இல்லடி தாத்தா ஜாதி பார்த்ததை விட அவருக்கு நித்திலன் மேல நம்பிக்கை இல்லாம இருந்திருக்குனு தான் எனக்குத் தோணுது. நித்திலனுக்கும் அவங்க குடும்பத்துக்கும் ஜாதியினால தாத்தா அப்படிச் செஞ்சதா தெரியுற விஷயம், எனக்கு என் தாத்தா என்னோட வாழ்க்கை மேலுள்ள அக்கறையில செஞ்சதா தோணுது. ஆரம்பம் வேணா அவர் ஜாதிக்காகச் சண்டை போட்டிருக்கலாம் ஆனா அதுக்கு பிறகு நிவேதாவோட காதல், என்னோட அபார்ஷன்னு அவருக்கு நித்திலன் என்னை ஏமாத்தினதா தோணிருக்கு. பணத்துக்காக என்னைக் கல்யாணம் செஞ்சிட்டு நிவேதா கூடக் காதல்னு சுத்துறாருனு கூட அவருக்குத் தோணிருகலாம். நித்திலன் செஞ்ச தப்பு, யார்கிட்டயும் சொல்லாம அபார்ஷனுக்கு ஒத்துக்கிட்டது தான். என்ன இருந்தாலும் உயிரை கொல்றது பாவம் தானே! அதுக்கான தண்டனையா தான் இந்தப் பிரிவும் என்னோட அம்னீசியாவும்னு தோணுது பவானி” என்றாள்.

“ஒரு விஷயம் நமக்கு முழுசா தெரியாத வரைக்கும் இப்படி அவங்கவங்க வ்யூல கேட்கும் போது நமக்கு நம்ம வ்யூல தான் அது எடுத்துக்கத் தோணும். தாத்தா நல்லவரா இல்லையான்றது இப்ப பிரச்சனை இல்ல. நித்திலன் அண்ணா நல்லவரா இல்லையா அவங்க குடும்பம் எப்படிங்கிறது தான் நம்ம தெரிஞ்சிக்கனும். நம்ம பார்த்த வரைக்கும் எல்லாரும் நல்லவங்களா தானே இருக்காங்க. அப்புறம் ஏன் ஏதேதோ நினைச்சு மனசை குழப்பிக்கிற? வயித்துல வளர்ற குழந்தை தான் இப்ப உனக்கு முக்கியம். அதைப் பத்தி மட்டுமே யோசி ஹாசினி” என்றாள் பவானி.

“பவி என்ன ப்ரக்னன்சி பிரச்சனை எனக்கு இருந்துச்சு? நித்திப்பா என்கிட்ட சொல்ல மாட்டேங்கிறாரு. நான் இப்ப அதை நினைச்சு இந்த ப்ரக்னன்சில அப்படிக் காம்ப்ளிகேஷன்ஸ் வரும்னு பயப்படுவேன்னு சொல்ல மாட்டேங்கிறாரு. அந்த ப்ரஷரை நானே ஹேண்டில் செஞ்சிக்கிறேன் உனக்கு ஒன்னும் தெரிய வேண்டாம்னு சொல்றாரு” என்றாள் நிவாசினி.

“அவரே உன் நிம்மதி கெடக் கூடாதுனு தானே சொல்லாம இருக்காரு. அப்புறம் எப்படி நான் சொல்லுவேன். நீ முருக பெருமான் கிட்ட மனசார வேண்டிக்கோ! எல்லாமே நல்லதா தான் நடக்கும்” எனப் பவானி கூறியதை ஏற்றுக் கொள்ள முடியாமல்,

“அப்படி நான் தெரிஞ்சிக்கக் கூடாதுனு நினைச்சா ஏன் டாக்டர் கிருஷ்ணன் மூலமா தெரிஞ்சிக்க அனுமதிச்சாரு” எனக் கேட்க,

“அது நீ அவரை நம்பாம இருக்கனு உன்னை நம்ப வைக்கச் சொல்ல சொன்னாரு. ஆனா நீ அவரை நம்புறன்ற பட்சத்துல இதைப் பெரிசா சொல்ல வேண்டாம்னு என்கிட்டயும் டாக்டராகிட்டயும் அண்ணா ரிக்வெஸ்ட் பண்ணிருந்தாங்க. அது ஏதோ கரு வளர்ச்சி இல்லனு அபார்ஷன் பண்ணிட்டாங்க. அதோட நிறுத்திக்கோ. பெரிசா நீ ஒன்னும் யோசிக்கத் தேவையில்ல! வா வேலையைப் பார்ப்போம்” நிவாசினியின் மனதை மாற்றி உடன் இழுத்து சொன்றாள் பவானி.

அன்றிரவு நிவாசினியுடன் அமர்ந்து தொலைகாட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான் நித்திலன்.

“ஆர் ஜே வேலையை விட்டுட்டீங்களாப்பா?” எனக் கேட்டாள் நிவாசினி.

ஆமென அவன் தலையசைக்க,
“உங்களுக்கு ரொம்பப் பிடிச்ச வேலையாச்சே! மனசு கஷ்டமா இல்லையா?” எனக் கேட்டாள்.

“ஹ்ம்ம்” எனப் பெருமூச்செறிந்தவன்,

“ஏர்க்ராப்ட்டும் எனக்குப் பிடிச்ச வேலையாச்சே! அதுக்காக நிறையவே படிச்சு கஷ்டப்பட்டு வாங்கின வேலை” என அவன் அமைதியாய் கூற,

“எனக்காக அந்த வேலையை விட்டுட்டு வந்தீங்களா?” அவள் அவன் முகம் பார்த்து கேட்க,

ஆமெனத் தலையசைத்தவன், அவள் மடியில் தலை சாய்த்தான்.

அவன் நெற்றியில் முத்தமிட்டு தலையைக் கோதியவள், “அன்னிக்கு எனக்கு உங்களை அடையாளம் தெரியலைனு வருத்தப்பட்டு அழுதீங்கனு சொன்னீங்களே, அதுக்குப் பிறகு என்னாச்சு?” எனக் கேட்டாள்.

விட்டதிலிருந்து தொடர்ந்தான் அவன்.

“உன் கிட்ட என்ன சொல்லி எப்படி நம்ப வைக்கிறதுனு தெரியாம குழம்பி தவிச்சேன். அப்ப விஜய் தான் ஒரு ஐடியா கொடுத்தான்! உன்னைத் திரும்ப லவ் பண்ணி கல்யாணம் செஞ்சிக்கிறது தான் அந்த ஐடியா! சப்போஸ் உனக்குப் பழைய ஞாபகம் வந்து இப்ப நடந்ததுலாம் மறந்துட்டா கூட உன் பாஸ்ட்ல நான் இருப்பேன். இல்ல உனக்குப் பழசுலாம் நியாபகம் வராமலே போனா கூட ப்ரசண்ட்ல உன் ஹஸ்பண்ட்டா நான் இருப்பேன். சோ எப்படிப் பார்த்தாலும் இது நல்ல ஐடியாவா தோணுச்சு. ஆனா உனக்குப் பாஸ்ட் ஞாபகம் வரும் போது என் மேல இப்ப கோபபட்ட மாதிரி கோபப்படுவன்ற பயம் இருந்துச்சு. அடுத்து உன்னை எப்படி என்னைய லவ் பண்ண வைக்கிறதுனு தான் நாங்க யோசிச்சோம்! அதுக்காக அங்க வேலைல ஒன் இயர் லீவ் வாங்கிட்டு வரதுக்கே ஒன் மன்த் ஆகிடுச்சு”

“நாங்கனா யாரெல்லாம் இந்தத் திட்டத்துக்கு ஐடியா கொடுத்தது?” எனச் சிரிப்பாய் அவள் கேட்க,

“அண்ணன், அண்ணி, விஜய் தான். கொஞ்ச நாள் காலை மாலை ஆபிஸ்ல இருந்து நீ போகும் போதும் வரும் போதும் நான் பின்னாடியே தான் சுத்தினேன்! பிள்ளைங்களை ஸ்கூல் கூட்டிட்டு போக வேண்டிய வயசுல, டீன்ஏஜ் பையன் மாதிரி சைட் அடிச்சிட்டு சுத்திட்டு இருக்க நீ னு விஜய் என்னைக் கிண்டல் பண்ணிட்டு இருப்பான்! சம்டைம்ஸ் அவனும் என் கூட வருவான்” அவன் கூறவும்,

“ஹோ அதான் எனக்கு அந்த ப்ரக்னன்சி கனவுல உங்க ஃபேஸ் தெரிஞ்சிதா? அன்னிக்கு எங்கேயும் உங்க கைல இருக்க டாட்டூவை நான் பார்த்திருப்பேனா இருக்கும்” என்றவள் கூறவும்,

“என்னது? என்ன கனவு?” என அவன் கேட்க,

“பவானி என் கனவை பத்தி எதுவும் உங்க கிட்ட சொல்லலையா?” எனக் கேட்டாள்.

“சொன்னாங்க. உன்னோட கனவு, ஹிப்னாடிக் தெரபி பத்தி சொன்னாங்க. ஆனா எந்த மாதிரிலாம் கனவு வந்ததுனு தெரியாது” எனக் கூறினான்.

தனக்கு வந்த முதல் ப்ரக்னன்சி கனவை அவள் கூறினாள்.

“ஓ அதான் மால்ல மயக்கம் போட்டு விழுந்தியா?” எனக் கேட்ட நித்திலன்,

“ஆனா அன்னிக்கு நாங்க ப்ளான் பண்ணி வரலை! ஏதேச்சையா தான் உன்னைப் பார்த்தேன். நீ மயக்கம் போட்டதும் எனக்குச் சந்தோஷம் தான் வந்துச்சு. உனக்கு என்னுடைய ப்ரசன்ஸ் எதையோ உணர்த்துதுனு நினைச்சு வந்த சந்தோஷம்” என்றான்.

“சரி ஆர் ஜே வேலை எப்படிக் கிடைச்சிது?” என அவள் கேட்க,

“ஆர் ஜே வேலை கூட என்னோட ட்ரீம் ஜாப் தான். உன்னைய நினைச்சு நான் சோகமா இருந்த நேரத்துல என்னோட மன மாற்றத்துக்காக விஜய் தான் அவன் ஃப்ரண்ட் மூலமா இந்த ஜாப் வாங்கிக் கொடுத்தான். இது லோக்கல் சேனல் தானே! அதனால பெரிசா ஒன்னும் இன்டர்வியூ செய்யலை. உன்னைக் கண்டுபிடிக்க இந்த வேலையை யூஸ் பண்ணிக்கலாம்னு தோணுச்சு. நான் அதுல தினமும் பேசின டாப்பிக் எல்லாமே நம்மளோட வாழ்க்கை நிகழ்வுகள் தான். என்னிக்காவது ஒரு நாள் இந்த நிகழ்ச்சி கேட்டு உனக்குப் பழசெல்லாம் ஞாபகம் வந்துடாதான்ற அற்ப ஆசை தான்” என்றான்.

“அன்னிக்கு உங்களை மால்ல பார்த்தன்னிக்கு தான் உங்க ஷோவை கேட்டேன். அப்புறம் என் கனவுல வந்து நீங்க ப்ரபோஸ் செஞ்சீங்க! கல்யாணம் செஞ்சீங்க! எப்பவுமே உங்களைப் பத்தி ஏதாவது கனவு வந்துட்டே இருந்துச்சு. இப்ப தான் அதெல்லாம் நம்ம வாழ்ந்த வாழ்க்கையோட நிகழ்வுகள்னு புரியுது. பாவம் பவா தான் பயந்துட்டு டாக்டர் கிருஷ்ணன் கிட்ட என்னைய கூட்டிட்டு போனா… நான் உங்களைப் பத்தி வர கனவுகள்லாம் என்னோட முன் ஜென்ம நிகழ்வுகள்னு நினைச்சு டாக்டர்கிட்ட கோ ஆப்ரேட் செய்யாம சண்டை போட்டுட்டு வந்துட்டேன்” என்றாள்.

“உன்னை அன்னிக்கு மால்ல பார்த்த பிறகு எப்படி ப்ரபோஸ் செய்றதுன்ற யோசனையிலே தான் சுத்திட்டு இருந்தேன். உண்மைய சொல்லனும்னா உன்கிட்ட ஃபர்ஸ்ட் டைம் ப்ரபோஸ் செஞ்சப்ப கூட இவ்ளோ நான் ப்ளான் பண்ணலை ஹனி. ஆன் த ஸ்பாட் நிவேதா கொடுத்த ஐடியாவை இம்ப்ளிமன்ட் செஞ்சிட்டோம். ஆனா இங்க நீ என்னை ஏதாவது தப்பா நினைச்சிட்டா கூட அடுத்த ஸ்டெப் எடுக்கிறது கஷ்டமா போய்டும்னு ரொம்பவே யோசிச்சேன். ஆனா நீ உடனே ஒத்துக்கிட்டு உனக்கு யாரும் இல்லனு என் கை பிடிச்சி அழுத பாரு, எனக்கு உன்னைய கட்டிபிடிச்சிட்டு நான் இருக்கேன்டா உனக்குனு கத்தனும் போல இருந்துச்சு. ஆனா உண்மை சொல்றேனு நான் ஏதாவது சொல்லி, நீ என்னை நம்பாம போய்ட்டீனா கஷ்டமாச்சே! அதான் உடனே கல்யாணம் வச்சிக்கலாம்னு முடிவு பண்ணேன். நம்ம மேரேஜ் நடந்த பிறகு உனக்குப் பழசெல்லாம் ஞாபகம் வந்துடுச்சுனா கூட உன்னைச் சமாளிச்சிடலாம்னு தோணுச்சு. அதான் உன்னை உடனே மாஞ்சோலை கூட்டிட்டு போனேன். உனக்கு அங்க ஏதாவது ஞாபகம் வரும்னு நினைச்சேன். பாலா மாமாக்கு அவங்க பொண்ணால தான் உனக்கு இப்படியாகிட்டுனு குற்றயுணர்ச்சி. அதான் உன்னைப் பார்த்ததும் எல்லாம் சொல்லி மன்னிப்பு கேட்கனும்னு சொன்னாரு. உனக்கு எதுவும் ஞாபகம் இல்லனாலும் பரவாயில்ல, அவர் மன்னிப்பை மட்டும் கேட்டுட்டு போய்டுறேனு உன்கிட்ட பேச வந்தாரு. அவரால மனசுல ஒரு விஷயத்தை மறைச்சி வச்சிக்கிட்டு பேசவே முடியாது. அதான் அவரை உடனே அனுப்பி வச்சிட்டேன். நிவேதாவையும் அவர் தான் கூட்டிட்டு வந்திருக்காரு. அவளைப் பார்த்தாலாவது உனக்குப் பழைய ஞாபகங்கள் வருதானு பார்க்கிறதுக்காகக் கூட்டிட்டு வந்திருக்காரு. நிவேதாவை பார்த்ததும் உனக்கு வந்த பொசசிவ், கோபம், அழுகை எல்லாமே பார்த்ததும் உனக்குப் பழசுலாம் ஞாபகம் வந்துடுச்சோனு பயம் வந்துட்டு. உனக்குப் பழைய நினைவுகள்லாம் வரனும்னு ஆசைப்பட்டு அங்க கூட்டிட்டு போன நானே தான் உனக்குப் பழசுலாம் நியாபகம் வந்ததும் பயந்தது! எப்படி ஒரு முரண்ல” எனக் கூறி சிரித்தவன்,

“அபார்ஷன் பத்தி ஞாபகம் வந்து என்னை விட்டு போய்டுவியோன்ற பயம் தான் அது. ஆனா உங்க அப்பா அம்மா விபத்துக்கே நான் தான் காரணங்கிற அளவுக்குத் தாத்தா சொன்னது உன்னைப் பாதிச்சிருக்குனு நீ என்னை விட்டு பிரியும் போது தான் புரிஞ்சிது. நம்ம சென்னை வந்த பிறகு நீ டாக்டர்கிட்ட ட்ரீட்மெண்ட் எடுக்கிறது தெரிஞ்சிக்கிட்டேன். நீ ஏதோ மெண்டல் ஸ்டெரஸ்காகக் கவுன்சிங் மாதிரி அவர் கிட்ட போறேனு தான் நினைச்சேன். இந்தக் கனவு ஹிப்னாடிக் தெரபிலாம் பவானி சொல்லி தான் தெரிஞ்சிது” என நீளமாய் விளக்கி கொண்டிருந்தான் நித்திலன்.

அவன் கூறியதை உள்வாங்கியவளுக்குத் தனது வாழ்வை எண்ணி பெருத்த ஆச்சரியமாய் இருந்தது. நடந்தவையெல்லாம் எண்ணி அவள் அமைதியாய் அமர்ந்திருக்க,

“என்னாச்சு ஹனி! ஏன் சைலன்ட் ஆகிட்ட?” கேட்டுக் கொண்டே அவள் மடியிலிருந்து எழுந்தமர்ந்தான் நித்திலன்.

“தாத்தாவை நீங்க தப்பா நினைக்காதீங்கப்பா! அவர் என் மேல வச்சிருந்த பாசம் உண்மை. அவர் என்ன முடிவெடுத்திருந்தாலும் அது எனக்கான நன்மைனு தான் அவர் யோசிச்சிருப்பாரு” என நித்திலனின் கைப்பற்றி அவள் உரைக்க,

சரியெனத் தலையசைத்தவன், “நீ நிவேதா பத்தியும் தப்பா நினைக்கக் கூடாது” எனக் கூறினான்.

அவள் குழப்பமாய் அவனைப் பார்க்க, “இதை நான் சொல்றதுக்குக் காரணம் இருக்கு ஹனிமா! நம்ம மேரேஜ் முன்னாடி வரை அவகிட்ட நான் பேசாத நாளில்லைனு தான் சொல்லனும். தினமும் நைட் ஒன் ஹவர் மேல அன்னிக்கு நடந்த விஷயங்கலாம் பேசுவா! கிட்டதட்ட நாலு வருஷம் இப்படி இருந்துட்டு திடீர்னு அவளைத் தனிச்சி விடவும், அவ என்னைய மிஸ் செஞ்சிருப்பா.. அதைத் தான் அவ லவ்னு சொல்லி உளறிட்டு இருக்கா.. இப்ப இந்த டூ இயர்ஸ்ல அவகிட்ட நிறைய நல்ல மாறுதல் இருக்கு. அவளுக்கு வேற கல்யாணம் ஆகிட்டுனா இந்தக் குழப்பம்லாம் தீர்ந்துடும். இதை வச்சி தப்பும் தவறுமா கீழ்த்தரமா நீ அவளை நினைச்சிட கூடாதுனு தான் சொல்றேன். அவ அன்னிக்கு அப்படிப் பேசின பிறகு அவகிட்ட பேசுறதை நான் நிறுத்திட்டேன். இனியும் நான் பேச மாட்டேன். ஆனா அவ என்னோட க்ளோஸ் ஃப்ரண்ட்டா இருந்திருக்காடா. அவளைப் பத்தி முழுசா எனக்குத் தெரியும். அதனால தான் இதைச் சொல்றேன்” எனத் தயங்கி தயங்கி ஒரு வழியாய் தான் கூற வந்ததைச் சொல்லி முடிக்க,

அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்த நிவாசினி, “இல்லங்க இப்ப நான் நிவேதா பத்தி எதுவும் தப்பா நினைக்கலை. இப்ப நானும் பவாவும் பிஜில இருந்த சமயத்துல நிறையப் புரிஞ்சிது. இப்ப இருக்கக் காலகட்டத்தில் ஆண்கள் கூடப் பெண்கள் தோழனா, அண்ணனா, தம்பியானு உறவுமுறை வச்சி கூடப் பழகுறாங்கனு தெரிஞ்சிது. அப்படி அவங்களை மனசுல எடுத்து வச்சி பேசி பழகின பிறகு வாழ்க்கையின் போக்குல இவங்களுக்குள்ள வர பிரிவு ஒரு வெறுமையை உண்டு பண்ணிடுதுனு புரிஞ்சிது. அந்தப் பிஜில இப்படி ஒரு பொண்ணு இருந்தா… பவானி தான் அந்தப் பொண்ணுக்கு மாரல் சப்போர்ட் கொடுத்துட்டு இருந்தா. அதனால நிவேதாவோட நிலைமை புரிஞ்சிக்க முடியுது. ஆனா நீங்க இது போலவே பேசாமலே இருங்க” எனக் கூறி அப்பேச்சை அத்துடன் முடித்துக் கொண்டாள் நிவாசினி.

இவர்கள் இங்குப் பேசி கொண்டிருக்கையிலேயே ஓடிக் கொண்டிருந்த தொலைகாட்சியில் காக்க காக்க படத்திலிருந்து பாடல் ஒலிக்கவாரம்பிக்க, இருவரும் மற்றவரை பார்த்து அர்த்தமுள்ள காதல் புன்னகை புரிய, ஊடலான கூடலில் கழிந்திருந்தினர் அவ்விரவை.

ஒரு வாரத்தில் நித்திலன் பெங்களூர் சென்று அந்தப் பணியினில் சேர வேண்டுமெனக் கூற, இங்கு நிவாசினியும் பெங்களூருக்கு பணியிட மாற்றம் கேட்டிருந்தாள். அதற்கு மூன்று மாதமாகுமென அவளின் மேலாளர் உரைக்க, அந்த மூன்று மாதம் வரை நிவாசினி இங்கு இந்த இல்லத்திலேயே அவனின் அண்ணன் அண்ணியுடன் தங்கி கொள்வாளென முடிவு செய்யப்பட்டது. பவானி தான் இவளின் பிரிவை எண்ணி வெகுவாய் கவலையுற்றாள்.

பவானியின் இல்லத்திற்குச் சென்று அபி பவானி இருவருக்கும் நித்திலன் நன்றி நவிழ, விஜயின் இல்லத்திற்குச் சென்று நிவாசினி அவனிடம் நன்றியுரைத்தாள்.

அந்த மூன்று மாதத்தில் இவளின் கரு வளர்ச்சி அடைந்து நான்கு மாதத்தை நிறைவு செய்திருந்தது. நித்திலன் அவளை எந்த வேலையும் செய்ய விடாது கைகளில் வைத்துத் தாங்கினான். அவளுக்குத் தேவையானவற்றைலாம் செய்து நன்றாகவே கவனித்துக் கொண்டான்.

நிவாசினியின் ஐந்தாம் மாதத்தில் நிவேதாவின் திருமணத்திற்காக மாஞ்சோலை சென்று வந்தனர். நிவேதாவே நேரில் வந்து இவர்கள் இருவரையும் திருமணத்திற்கு அழைத்திருந்தாள். நிவாசினியின் உடல்நிலை குறித்து மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகே இந்தப் பயணத்தை மேற்கொண்டனர். அதுவும் ரயிலில் ஏசி அறையிலேயே தான் பயணித்தனர். பாலாவும் நித்திலனின் குடும்பத்தினர் அனைவரையும் தனிப்பட்ட முறையில் திருமணத்திற்கு அழைத்ததினால், நித்திலனின் தாய் தந்தை அண்ணன் அண்ணி எனக் குடும்பச் சகிதமாய் அனைவரும் இணைந்து சென்று அவளை வாழ்த்தினர்.

பத்தாம் மாதத்தில் நித்திலனை வெகுவாய் பதட்டமடையச் செய்து பெண் மகவை ஈன்றெடுத்தாள் நிவாசினி.

குழந்தை பிறந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு, பெங்களூரில் அவர்களுக்கெனக் கட்டியிருந்த அந்தப் புதிய இல்லத்தில் அடியெடுத்து வைத்தனர் நித்திலனும் நிவாசினியும்.

இரண்டு நாட்களில் இவர்களின் குழந்தைகாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெயர் வைக்கும் வைபவத்திற்காக நித்திலனும் நிவாசினியும் திட்டமிட்டுக் கொண்டிருக்க, குழந்தை நித்திலனின் மடியில் உறங்கியிருந்தாள்.

“அப்படியே உன் மூக்கு ஹனிமா இவளுக்கு” எனக் கூறி அவளின் மூக்கில் அவன் முத்தம் வைக்க, அவனருகே தன் கன்னத்தைத் திருப்பிக் காண்பித்தவள், “அந்த முத்தத்தை இங்கயும் கொடுக்கலாம்” என்றாள்.

முகம் மலர சிரித்தவன், அவள் முகம் பற்றி அருகிலிழுத்து, “ஒன்னென்ன பத்து கூடக் கொடுப்பேனே என் ஹனிக்கு” எனக் கூறி இச்சு இச்சு இச்சுயென அவளின் கன்னத்தை அவன் ஈரமாக்க, அந்த முத்த சத்தத்தில் விழித்த குழந்தை அழவாரம்பித்தது.

“பாருங்க நீங்க எனக்கு முத்தம் கொடுத்தது பொறுக்காம தான் உங்க பொண்ணு அழறா! இப்பவே இப்படி இருக்காளே… இவ வளர்ந்தா இவ கூடல நான் உரிமை போராட்டம் நடத்தனும் போல” என முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு நிவாசினி கூற, வாய்விட்டு சிரித்த நித்திலன், “இதுக்கு நான் ஒரு ஐடியா சொல்லவா?” எனக் கேட்டான்.

“அதென்ன ஐடியா?” எனப் புருவம் உயர்த்தி அவள் கேட்க, அவள் கன்னம் கிள்ளி கொஞ்சியவன், “அப்படியே ஒரு பையனையும் பெத்துகிட்டனு வை! அவங்க இரண்டு பேரும் போடுற சண்டையிலயே இந்த உரிமை போராட்டம்லாம் தேவையில்லாம போய்ட்டும்” எனக் கண் சிமிட்டி அவன் கூற,

“சார் எதுக்கு அடி போடுறீங்கனு புரியது!” எனக் கூறி அவன் காதை அவள் திருக, சற்றாய் ஓய்ந்திருந்த குழந்தையின் அழுகை மீண்டுமாய் ஆரம்பமாக, “பாருங்க உங்களை அடிக்கிறேனு அழுறா” என மீண்டுமாய் அவள் கூற, “என் எதிர்காலத்துல என்ன நடக்கும்னு இப்பவே எனக்குப் பளிச் பளிச்சுனு தெரியுதே” எனக் குழந்தையைத் தட்டிக் கொடுத்துக் கொண்டே கவலை பாவனையில் அவன் கூற,

“அப்படி என்ன தெரியுது பிராணநாதா” எனக் கிண்டலாய் அவள் கேட்க,

“உங்க இரண்டு பேருக்கு இடையில மாட்டிக்கிட்டு யாருக்குச் சப்போர்ட் பண்றதுனு தெரியாம சிக்கி சின்னாபின்னமாகப் போறேனு தெரியுது” என அழும் பாவனையில் அவன் கூற, வாய் விட்டுச் சத்தமாய்ச் சிரித்தவள், அவன் கன்னம் பிடித்துக் கிள்ளி கொஞ்சிக் கொண்டாள்.

அதன்பின் அவள் குழந்தைக்குப் பால் புகட்டி, அவளின் புடவையினாலான தூளியில் போட, நித்திலன் தாலாட்டு பாடிக் கொண்டே தூளியை ஆட்டினான்.

நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே

நெய்யூறும் கானகத்தில் கைகாட்டும் மானே

தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே

தெம்மாங்கு பூந்தமிழே தென்னாளும் குலமகளே

அவனின் மென்குரலில் குழந்தை மட்டுமல்லாது நிவாசினியும் கட்டிலில் உறங்கியிருந்தாள். குழந்தை உறங்கியதை உறுதி செய்தவன், நிவாசினியை அணைத்துவாறு படுத்துக் கொண்டான்.

நித்திலன் நிவாசினியின் குழந்தைக்குப் பெயர் வைக்கும் வைபவத்திற்காக, பாலாவின் குடும்பத்தினர், நித்திலனின் குடும்பத்தினர், பவானி அபிநந்தன், விஜய் குடும்பத்தினர் என அனைவரும் வந்திருந்தனர்.

“என்னடி பேரு வச்சிருக்கீங்க பாப்பாக்கு” எனப் பவானி நிவாசினியிடம் கேட்க,

“என்னடா பேரு செலக்ட் பண்ணிருக்கக் குழந்தைக்கு” என விஜய் நித்திலனிடம் கேட்டிருந்தான்.

“அவர் என்கிட்ட கூடச் சொல்லாம சப்ரைஸ்ஸா வச்சிருக்காருடி” என உரைத்தாள் நிவாசினி.

“அது பெயர் வைக்கும் போது தெரியும்டா” என நித்திலன் கூறியதற்கு,

“ஓ உனக்கே பேரு வைக்கும் போது தான் தெரியுமா?” எனக் கேட்டு விஜய் சிரிக்க,

அவன் மண்டையில் தட்டிய நித்திலன், “பெயர் வைக்கும் போது தெரிஞ்சிக்கோனு சொன்னேன் பக்கி! மொக்கை போடாம வா” என வீட்டினில் விழா நடக்கும் இடத்திற்கு அவர்களை அழைத்துச் சென்றான்.

புத்தாடை உடுத்தி தொட்டிலில் கிடந்த குழந்தையைக் கையில் ஏந்திய நித்திலன், பெயரை குழந்தையின் காதருகே செல்ல,
அனைவருமே ஆர்வமாய் அவனைத் தான் பார்த்திருந்தனர். எவரிடமும் பகிராமல் அப்படி என்ன பெயர் தான் வைக்கப் போகிறான் இவன் என அனைவருமே அவன் கூறப் போகும் பெயரினை கேட்க வெகு ஆவலாய் இருந்தனர்.

“நித்யவாசினி”

“நித்யவாசினி”

“நித்யவாசினி”

அவன் கூறவும் அனைவரின் முகத்திலும் ஆச்சரியமும் சந்தோஷமும் தெரிந்தது.

நிவாசினி அவனைக் காதலாய்ப் பார்த்திருக்க, “அண்ணா பாப்பா பெயரோட மீனிங்க் என்ன? உங்க ரெண்டு பேரோட பேர் சேர்த்து தானே வச்சிருக்கீங்க! அந்தப் பேரோட அர்த்தத்தையும் சொல்லுங்கணா” எனக் கேட்டான் நிவேதாவின் தம்பி.

“நித்திலன்னா முத்து போன்றவன், முத்து போல் மின்னுபவன்னு அர்த்தம். நிவாசினினா வசிப்பவள், வாசம் செய்பவள்னு அர்த்தம். நித்யவாசினினா நீக்கமற நிறைந்திருப்பவள்னு அர்த்தம். நம் மனதில் என்றும் நீங்காது நிறைந்திருப்பவள்ன்ற அர்த்தத்துல தான் இந்தப் பேரை வச்சேன்” என்றான்.

அனைவருக்குமே இப்பெயர் வெகுவாய்ப் பிடித்திருந்தது. அன்றைய நாளை அனைவரும் ஒன்றாய் அமர்ந்து பேசி, உண்டு களித்து என வெகு நிறைவாய் கழித்திருந்தனர்.

அன்றைய இரவில் அறைக்குள் அவன் வருவதற்காகவே காத்திருந்த நிவாசினி, அவன் வந்ததும் அணைத்து கொண்டவள், “உங்க பொண்ணு மட்டும் தான் உங்ககிட்ட நிரந்தரமா வசிக்கனுமா?” எனப் புருவம் உயர்த்திக் குறும்பாய் கேட்க,

எந்தன் வானமும் நீதான்
எந்தன் பூமியும் நீதான்
உன் கண்கள் பார்த்திடும்
திசையில் வாழ்கிறேனே

எந்தன் பாதையும் நீதான்
எந்தன் பயணமும் நீதான்
உன் கால்கள் நடந்திடும்
வழியில் வருகிறேனே

உன் பேச்சிலே என் முகவரி
உன் மூச்சிலே என் வாழ்வடி
எந்தன் வாழ்வடி…

என அவளை இறுக்கமாய் அணைத்தவாறு அவளின் காதினுள் அவன் பாட, அவனின் காதலில் உருகி கரைந்திருந்தாள் நிவாசினி.

வாழ்நாள் முழுமைக்கும் இக்காதல் குன்றாது அவர்கள் வாழ்வாங்கு வாழட்டுமென வாழ்த்தி விடைபெறுவோம் நாமும்.

அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்