என் நித்திய சுவாசம் நீ – 17

நித்திலன் தனது அண்ணன் இல்லத்தில், அவன் தங்கியிருந்த மேல் வீட்டினில் தனதறையில் சாய்வு நாற்காலியில் கண்கள் மூடி சாய்ந்து அமர்ந்திருக்க, பழைய நினைவுகளில் அவனது எண்ணங்கள் சுழன்றிருக்க, தன் முன்னே ஏதோ நிழலாடுவது போல் தோன்றிய உணர்வில் விழித்துப் பார்த்தான்.

நிவாசினி அவனை அமைதியாய் பார்த்தவாறு நின்றிருந்தாள்.

“ஹனி! வந்துட்டியாடா” எனக் கேட்டுக் கொண்டே அவன் அவளின் கையினைப் பற்ற போக, அதைத் தடுத்து தள்ளி நின்றவள்,

“எனக்கு உங்க கிட்ட சில விஷயங்களைக் கேட்டு தெரிஞ்சிக்கனும்” உணர்ச்சியற்ற முகத்துடன் வேறெங்கோ நோக்கியவாறு அவள் கூற,

அவளால் தன்னை மன்னிக்கவும் முடியவில்லை, தன்னைப் பிரிந்திருக்கவும் இயலவில்லை என்பதைப் புரிந்து கொண்ட நித்திலன்,

“சரிடா நீ என்ன கேட்கனும்னாலும் கேளு! நீ இங்கே என்னைய தேடி வந்ததே சந்தோஷம் தான். வந்து உட்கார் முதல்ல” எனக் கூறியவாறே அவள் மறுத்த போதும் விடாது அவளின் கைகளைப் பற்றிக் கட்டிலில் அமர வைத்து பால் கொண்டு வந்து கொடுத்து பருகவும் வைத்தான்.

அவளுக்குப் பழைய நினைவுகள் திரும்பி விட்டது என்பதைப் பவானியின் மூலம் அறிந்திருந்தான் நித்திலன்.

“இப்ப சொல்லு ஹனி! என்ன தெரிஞ்சிக்கனும்? டாக்டர் கிருஷ்ணன் எதுவும் உன்கிட்ட சொல்லலையா?” என அவன் கேட்க,

இல்லை எனத் தலையசைத்தவள், “உங்ககிட்ட கேட்டுத் தெரிஞ்சிக்கச் சொல்லிட்டார்” என்றாள்.

“நான் சொன்னா நீ நம்ப மாட்டேன்னு தான் அவர் கிட்ட உன் மெடிக்கல் ரிப்போர்ட்லாம் காமிச்சு, உனக்கு அபார்ஷன் செஞ்ச டாக்டர்கிட்டயும் அவரைப் பேச வச்சேனே” என்றான் நித்திலன்.

“உனக்கு நித்திலன் மேலே நம்பிக்கை இருக்கானு கேட்டாரு. நான் இருக்குனு சொன்னேன். அப்ப அவர்கிட்டயே என்ன நடந்துச்சுனு கேட்டுத் தெரிஞ்சிக்கிறது உங்களோட பிணைப்பை அதிகமாக்கும்னு சொல்லிட்டாரு” என்றவள்,

“சொல்லுங்க! ஏன் அப்படிச் செஞ்சீங்க? ஏன் நம்ம குழந்தையைக் கலைக்க மாத்திரை கொடுத்தீங்க? தாத்தா சொன்னது எல்லாம் உண்மை தானா?” எனக் கேட்டாள்.

“இந்தக் கேள்வியை நீ ஏன் ஹனி அப்பவே கேட்கலை! என் மேல உனக்கு நம்பிக்கையே இல்லாத அளவுக்குத் தான் அப்ப நான் நடந்துக்கிட்டேனா?” கண்களில் வலியை தேக்கி அவளருகில் மண்டியிட்டமர்ந்து அவளை நோக்கி அவன் கேட்க,

அவளால் பதிலேதும் கூற முடியவில்லை. கண்களில் நீர் வழிய ஆரம்பித்தது.

“இப்ப என்னைப் பத்தி எதுவும் தெரியாமலேயே உனக்கு என் மேல இருக்க இந்த நம்பிக்கை, அப்ப என்னைப் பத்தி எல்லாமே தெரிஞ்சிருந்த போது ஏன் இல்லாம போச்சு ஹனி! அப்ப என் காதலை நீ புரிஞ்சிக்கவே இல்லையா ஹனி” கவலை தோய்ந்த குரலில் கேட்டான் நித்திலன்.

“நம்ம குழந்தையை அழிக்க நான் முடிவெடுக்கனும்னா அது உன்னோட நல்லதுக்குத் தான் இருக்கும்னு இப்ப யோசிக்கிற என் ஹனி அப்ப ஏன் யோசிக்காம போய்ட்டா?” அவனது கண்களில் நீர் நிறைக்க ஆரம்பித்தது.

“வலிச்சது ஹனி! மனசு ரொம்ப வலிச்சது! நீ என்னைய நம்பாம தாத்தா கூடப் போய்ட்டனு அவ்ளோ வருத்தப்பட்டேன்! ஆனா அந்த வருத்தத்தை நிரந்திரமாக்கிட்டு அப்படியே எங்கேயோ போய்ட்டியே ஹனிமா! உன்னை எவ்ளோ தேடினேன் தெரியுமா? குழந்தையைத் தொலைச்சிட்டு தேடுற அம்மா மாதிரி உன்னைப் பைத்தியம் மாதிரி தேடி திரிஞ்சேன்” கண்ணீருடன் தழுதழுத்த குரலில் அவன் கூற,

“நித்திப்பா” எனக் கூறியவாறே அவனை இழுத்து அணைத்துக் கொண்டாள்.

தனது இத்தனை நாள் துயரை அவளின் தோளில் அழுகையாய் வெளிபடுத்தி இறக்கி வைத்தான். கண்களைத் துடைத்தவாறே சற்றாய் தன்னைத் தேற்றிக் கொண்டு எழுந்து அமர்ந்தான்.

அவளின் கையினைப் பற்றித் தனது கைகளுக்குள் பொதிந்து கொண்டவன், “என் மேலயும் தப்பு இருக்கு ஹனி! உன்கிட்ட சொல்லிட்டு இதை நான் செஞ்சிருக்கனும். ஆனா உன்கிட்ட சொன்னா கண்டிப்பா நீ இதுக்கு ஒத்துக்க மாட்டனு தோணுச்சு. எனக்குக் குழந்தையை விட உன்னோட உயிர் தான் முக்கியமா பட்டுச்சு ஹனிமா”

“அன்னிக்கு உனக்கு வயிறு வலிக்கிதுனு சொன்னப்ப டாக்டர்கிட்ட போனோம்ல. அவர் ஏதோ மாத்திரைலாம் எழுதி கொடுத்துட்டு என்னைய மட்டும் அப்புறம் அவரைத் தனியா வந்து பார்க்க சொன்னாரு. அப்ப தான் சொன்னாரு கரு வளர்ச்சி சரியில்ல. இந்தக் கரு வளர்ந்தாலும் குழந்தை ஏதாவது பாதிப்புடன் தான் பிறக்கும். அதுக்குப் பதிலா இப்பவே அபார்ட் செஞ்சிடலாம்னு சொன்னாரு. அப்ப நீ ப்ரக்ணன்டாகி ஆறு வாரம் ஆகியிருந்தனால டாக்டர் சஜ்ஜஷன்ல அபார்ட் செய்றது தப்பில்லைனு சொன்னாரு. நிறைய டெக்னிக்கலா சொன்னாரு. இந்தக் கரு வளர்ந்தா குழந்தைக்கும் உனக்கும் ஆபத்துனு சொன்னாரு. ரொம்பவே குழம்பி போய் உட்கார்ந்துட்டேன். மனசெல்லாம் படபடப்பாகி ரொம்பவே கஷ்டமா போய்டுச்சு. என்ன முடிவெடுக்கனு தெரியாம யார் கிட்ட இதைப் பத்தி டிஸ்கஸ் பண்றதுனும் தெரியாம கலங்கி போய் இரண்டு நாளா சுத்திட்டு இருந்த சமயத்துல FB கன்ஃபெஷன் பேஜ்ல அந்த டெக்னிக்கல் டீடெய்ல்லாம் போட்டு சஜ்ஜஷன் கேட்டு ஒருத்தங்க போஸ்ட் போட்டிருந்தாங்க. இந்த மாதிரி இரண்டு மூன்று பேருக்கு ஏற்கனவே நடந்திருக்குனும் அதுக்குப்பிறகு திரும்ப ப்ரக்னன்ட் ஆகி நல்லபடியா குழந்தை பிறந்திருக்குனும் அதுக்குச் சில பேர் கமெண்ட் போட்டிருந்தாங்க. திரும்ப உனக்கு வயித்து வலி வரவும் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் செஞ்சி அபார்ஷனுக்கு ஓகே சொல்லிட்டேன். நானா டேப்லெட்லாம் எதுவும் கொடுக்கலை ஹனி. ஹாஸ்ப்பிட்டல்ல அட்மிட்டான பிறகு டாக்டர் தான் டேப்லெட் கொடுத்தாங்க”

“இதெப்படி தாத்தாக்கு தெரிஞ்சிது? நம்ம குடும்பத்தினருக்கு கூட மூனாவது மாசம் சொல்லிக்கலாம்னு தானே நாம முடிவு செஞ்சிருந்தோம்” என அவள் கேட்க,

“நம்ம வீட்டுல சமையல் வேலை செஞ்ச லட்சுமிம்மா தான் தாத்தாகிட்ட இங்க நடக்கிறதெல்லாம் போட்டு கொடுத்துட்டு இருந்திருக்காங்க. அப்படித் தான் தாத்தாக்கு நானும் நிவேதாவும் லவ் பண்றோம்ன்ற மாதிரி நியூஸ் போய்ருக்கு” என நித்திலன் கூறவும், ஆச்சரியமடைந்த நிவாசினி,

“அவங்களா.. ஆனா அவங்க ஏன் எல்லாத்தையும் தாத்தாகிட்ட சொல்லனும்! இதுல அவங்களுக்கு என்ன லாபம்?” என அவள் கேட்க,

“அவங்களுக்குக் காசு கொடுத்து இங்க நடக்கிறதெல்லாம் சொல்ல சொன்னதே தாத்தா தான்” என்றான் நித்திலன்.

“என்னது?” என நிவாசினி வியப்பின் விளிம்பிற்கே செல்ல,

“ஆமா இதெல்லாம் நீ காணாம போன பிறகு தான் கண்டுபிடிச்சி தெரிஞ்சிக்கிட்டேன்” என்றான் நித்திலன்.

“ஆனா தாத்தா ஏன் அப்படிச் செய்யனும்? தாத்தாவை நாங்க மேரேஜ்க்கு முன்னாடி கன்வின்ஸ் செஞ்சி ஒத்துக்க வச்சோமே! அவர் சந்தோஷமா தானே நம்ம கல்யாணத்தன்னைக்கு ஆசிர்வாதம் செஞ்சாரு” என அவள் கூற,

“தாத்தா ஒத்துக்கிட்ட மாதிரி நடிச்சிருக்காரு! எப்படியாவது நம்ம இரண்டு பேருக்குள்ள சண்டையை மூட்டி நம்மளை பிரிச்சி உனக்கு உங்க ஜாதில வேற பையனா பார்த்து மேரேஜ் செஞ்சி வைக்கிறது தான் அவரோட ப்ளான். அவரோட ப்ளானுக்கு ஏத்த மாதிரி நிவேதா இஷ்யூ வரவும் அதை வச்சி பிரிக்கப் பார்த்தாரு. அதுவும் சரியா வரலை என்ன செய்யலாம்னு அவர் நினைச்ச டைம்ல தான் நீ மாசமா இருக்கிறதை தாத்தாக்கு சொல்லிருக்காங்க அவங்க. அந்த டைம்ல சரியா இந்த அபார்ஷன் பத்தி கேள்விபட்டு நான் உனக்குத் தெரியாம உனக்கு மாத்திரை கொடுத்து அபார்ஷன் பண்ண வச்சதா சொல்லி உன்னை உணர்வுபூர்வமா அட்டாக் பண்ணி யோசிக்க விடாம கூட்டிட்டு போய்ட்டாரு. அங்க போய்ட்டா உன்னை எப்படியும் என் பக்கம் வர வைக்காம மென்மேலும் என் மேல பழியைச் சொல்லி என்னை வெறுக்க வச்சி உனக்கு வேற கல்யாணம் செஞ்சி வைக்கலாம்னு தான் ப்ளான்”

அவளால் அவன் கூறியதை நம்பவே முடியவில்லை.

“தாத்தா இவ்ளோ மோசமானவங்க இல்லை நித்திப்பா” என அவள் கூறவும்,

“அவ்ளோ மோசமானவங்க இல்லனா.. அப்புறம் ஏன் உன்னை வேற ஊருக்கு கூட்டிட்டு போய் மறைச்சு வைக்கனும்? உனக்கு வேற கல்யாணம் செஞ்சி வைக்கப் பார்க்கனும்?” என அவன் கேட்க,

ஆம் இவள் பழசெல்லாம் மறந்திருந்த நிலையில் இதையெல்லாம் அவர் செய்தாரே என அவளின் மனசாட்சி சாட்சியம் கூற அமைதியானாள்.

“எனக்கு உங்க அப்பா அம்மா, எங்க அப்பா அம்மா அண்ணா அண்ணினு யார்கிட்டயும் உன்னோட ப்ரக்னன்சில இருக்கக் காம்ப்ளிகேஷன்ஸ் பத்தி கேட்க மனசில்லை. இதை வச்சி யாரும் உன்னை ஹர்ட் பண்ணிட கூடாதுனு நினைச்சேன். தாத்தா என்னைப் பேசிய பேச்சுக்குலாம் நம்ம ஃபேமிலில யாரையும் கூட வச்சிக்காம நானே உன்னைய நல்லா வச்சி பார்த்துக்கனும்னு நினைச்சேன் ஹனி. ஆனா தாத்தா வந்து சொல்லி கேட்கவும் நீ நம்பி அவர் கூடப் போனதுல முதல்ல செம்ம கோபமா வந்துச்சு. இரண்டு நாள் கழிச்சு உன்னைப் பார்த்தேயாகனும்னு மனசு துடிக்கச் சென்னைக்குக் கிளம்பினேன். ஆனா அப்ப தான் உன்னோட அம்மா அப்பானு எல்லாரும் எனக்கு ஃபோன் செஞ்சி திட்டினாங்க. தாத்தா என்னைய பத்தி உன்னோட அப்பா அம்மாகிட்டலாம் ஏதோ தப்பும் தவறுமா சொல்லிருக்காருனு மட்டும் புரிஞ்சிது. யாருமே என் பக்க நியாயத்தைக் கேட்க தயாரா இல்லைனு செம்ம கோபம். இன்னும் ஒரு வாரம் போகட்டும், நம்மளா அங்க போய் நிக்கக் கூடாதுனு முடிவு செஞ்சிட்டேன். அது தான் நான் செஞ்ச தப்பு! அந்த ஒரு வாரத்துல விபத்து நடந்து எல்லாமே மாறிடுச்சு. உங்களுக்கு ஆக்சிடெண்ட்டானது கூட உங்க தாத்தா எங்க யாருக்கும் சொல்லலை. உன்னோட அப்பா அம்மாக்குக் காரியம் செஞ்ச பிறகு உனக்கு ஆப்ரேஷன்லாம் முடிஞ்ச பிறகு தான் எனக்கு விஷயமே தெரிஞ்சிது. நான் எவ்ளோ பதறி போய் வந்தேன் தெரியுமா… எனக்கு விஷயம் தெரிஞ்சதும் என் அண்ணன்கிட்ட விஜய்கிட்டலாம் சொல்லி தாத்தாக்கு போய் ஹெல் பண்ண சொன்னேன். வயசான மனுஷன் இந்த நிலைல எல்லாரையும் இழந்து என்ன கஷ்டபடுறாரோனு தோணுச்சு. என் ஹனி அவ அப்பா அம்மா பிரிஞ்சு என்ன நிலைல இருக்காளோனு அவ்ளோ வேதனையோட சென்னை வந்தா.. உன் தாத்தா, என் அண்ணன், விஜய் எல்லாரையும் திட்டு அனுப்பி வச்சிருந்தாரு. நான் உன் வாழ்க்கைகுள்ள வராம போயிருந்தா இப்படிலாம் நடந்திருக்காதுனு சொன்னாரு. என்னோட ராசி தான் உங்க எல்லாத்துக்கும் இப்படி ஆயிடுச்சுனு சொன்னாரு. என்னைய அடிச்சி தள்ளாத குறையா பேசினாரு. ஆனா உன்னைப் பார்க்காம மட்டும் போய்ட கூடாதுனு இருந்தேன் ஹனி. நீ மயக்கத்துல இருந்த! ஒரு வாரம் ஹாஸ்பிட்டல்லே கதினு கிடந்தேன். உன் தாத்தா என்னைய திட்டாத நாளில்லை. நான் எதையும் காதுல வாங்கலை. என் ஹனி கண் முழிக்கும் போது நான் அவ முன்னாடி இருக்கனும். அது மட்டும் தான் என் மனசுல இருந்துச்சு. அம்மா அப்பா வந்து பார்த்துட்டு அழுதுட்டு போனாங்க. அப்பா அம்மாக்கிட்ட நடந்ததெல்லாம் அண்ணா சொல்லவும், இப்படிப் போய் ஒரு பொண்ணை நீ கட்டிக்கனும்னு தேவையா உனக்குனு அம்மா அப்பா இரண்டு பேரும் என்னைய திட்டி, நான் அவங்க கூட வந்தேயாகனும்னு சண்டை போட்டு என்னைய ஹாஸ்பிட்டல்ல இருந்து கூட்டிட்டு போனாங்க. ஒரு வாரம் முழுக்க நீ கண் விழிக்காம போகவும், நீ கோமா ஸ்டேஜ் போய்ட்டதா டாக்டர் சொன்னாங்க. உன்னைய வீட்டுல வச்சி பார்த்துக்திறதா தாத்தா கூட்டிட்டு போய்ட்டாரு. உன்னைய பார்த்துக்க ஆள் ஏற்பாடு செஞ்சிருந்தாரு. நான் வாரத்துல ஒரு நாள் வந்து பார்த்துட்டு போனேன். திடீர்னு உனக்கு ஃபிட்ஸ் போல வரவும் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போய்ருகாங்க! அங்க செஞ்ச ட்ரீட்மெண்ட்ல நீ கோமால இருந்து கண் விழிச்சிருக்க. உங்க வீட்டுக்கு போன பிறகு தான் உனக்குப் பழைய விஷயங்கள் சிலது ஞாபகம் இல்லைனு தெரிஞ்சிருக்கு. அதுவும் என்னோட நடந்த கல்யாணம் உனக்கு ஞாபகம் இல்லைனு தெரிஞ்சதும் அவர் திட்டம் போட்டு செயல்பட ஆரம்பிச்சிட்டாரு.

நீ கோமால இருந்து வந்துட்டனு நீ தங்கியிருந்த அப்பார்ட்மெண்ட்ல இருந்தவங்க சொல்லி தான் எனக்குத் தெரியும். அவங்க தான் நீங்க எங்கேயோ வேற ஊருக்கு போய்ட்டீங்கனு சொன்னாங்க. ஆனா எங்கனு தெரியலைனு சொன்னாங்க. எனக்கும் உங்க குடும்பத்துக்கும் பிரச்சனை இருக்கிறது அந்த அப்பார்ட்மெண்ட் முழுக்கவே தெரிஞ்சிருக்கு. உனக்கு அம்னீசியானுலாம் எனக்குத் தெரியாது ஹனி. நீயும் தாத்தா கூடச் சேர்ந்து என்னைய அவாய்ட் பண்ண தான் இப்படி ஏதோ ஒரு ஊர்ல போய் இருக்கனு தோணுச்சு. அதனால எனக்கும் உன் மேல கோபம். உன்னைத் தேடலாம் முயற்சி செய்யலை. கொஞ்ச நாள்ல நீயா என்னைய தேடி வந்துடுவனு நினைச்சேன்.

ஆனா ஒரு மாசமாகியும் நீங்க அந்த அப்பார்ட்மெண்ட்க்கு வராம போகவும் தான் தேடனும்னு தோணுச்சு. நீங்க தங்கியிருந்த அப்பார்ட்மெண்ட் வீட்டு லாக்கை உடைச்சு உள்ளே எதுவும் கிடைக்குமானு பார்த்தேன். அங்க இருந்த மெடிக்கல் ரிப்போர்ட் வச்சி தான் உனக்கு அம்னீசியானு தெரிஞ்சிக்கிட்டேன்.

தாத்தா இறந்த பிறகு தான் உன்னைக் கண்டுபிடிக்க முடிஞ்சிது. நீ எங்கயாவது ஐடில வேலை பார்க்க வாய்ப்பிருக்குனு ஐடில வேலை செய்ற என் நண்பர்கள்கிட்டலாம் சொல்லிருந்தேன். அப்படித் தான் பவானியோட லீட் மூலமா நீ அங்க வேலை பார்க்கிறது தெரிஞ்சிது. நீ தங்கியிருக்கப் பிஜி தெரிஞ்சதும், உன்னைப் பார்க்க வந்தேன். ரிசப்ஷன்ல உன் பேரை சொல்லி உன்னைக் கூப்பிட சொல்லிட்டு கார்டன் ஏரியால வெயிட் செஞ்சிட்டு இருந்தேன். ஆனா அங்க என்னைப் பார்த்து நேரா வந்த நீ…. என்னைக் கடந்து போய்ப் பின்னாடி இருந்த அபிநந்தன்கிட்ட பேசிட்டு இருந்த! அப்ப தான் உன் அம்னீசியானால என்னை நீ மறந்துட்டனு புரிஞ்சிது”
இதுவரை பொறுமையாய் கூறி கொண்டிருந்தவன், அந்நிகழ்வின் தாக்கத்தில் மனம் பாரமாகக் கண்களில் நீர் துளிர்க்க அமைதியாகி விட்டான்.

“என்னை நானே வெறுத்த நாள் அது ஹனி! கணவனாய் நான் தோத்து போய்ட்டதை உணர்ந்த நேரம் அது! அப்படியே அங்கிருந்த பென்ச்ல உட்கார்ந்துட்டேன்!” அவன் குரலில் நடுக்கம் தெரிந்தது.

“என் காதலை நீ மறக்குற அளவுக்குத் தானா உன்கிட்ட நான் நடந்திருக்கேன்னு என் மேலயே எனக்கு வெறுப்பு! அழுகையை அடக்கி தொண்டைகுள்ள வலியை விழுங்கி அங்கிருந்து நகரவும் மனமில்லாம மழைல சில மணி நேரமா நனைஞ்சிட்டே உட்கார்ந்தேன்! விஜயும் அண்ணனும் என்னைய தேடி வந்து பார்த்து வீட்டுக்கு கூட்டிட்டு போனாங்க. அன்னிக்கு நான் அழுத அழுகைக்கு அளவில்ல ஹனிமா” எனக் கூறி அவள் மடியில் முகம் புதைத்து அவன் கண்ணீர் மழை பொழிய,

இவளின் உயிர் வரை ஊடுருவிய அவனின் கண்ணீர் மனதில் கணத்தைக் கூட்டி அழ வைத்தது.

மென்மையாய் அவன் தலை வருடியவள், அவனை முகத்தினை நிமிர்த்தித் தன் நெஞ்சுக்குள் அடைக்கலமாக்கி கொண்டாள்.

அவளின் இடை பற்றி நெஞ்சில் முகம் புதைத்திருந்தவன், அன்றைய நாளின் துயரை இன்றைய இவளின் அருகாமையில் தொலைத்துக் கொண்டிருந்தான்.

கண்களைத் துடைத்துக் கொண்டு அவன் முகத்தை நிமிர்த்தி நெற்றியில் முத்தமிட்டவள், “சாரிப்பா! உங்களை ரொம்பக் கஷ்டபடுத்திட்டேன்ல” அவன் வலியை தனதாயேற்று அவளுரைக்க,

“ம்ப்ச் இல்ல ஹனிமா! அம்னீசியா வந்ததுக்கு நீ என்ன பண்ணுவ?” என்று கூறி தன்னைத் தேற்றிக் கொண்டு எழுந்தவன்,

“சாப்பிட்டியா ஹனி?” எனக் கேட்டான்.

இல்லை எனத் தலையசைத்தவள், “நீங்க சாப்பிட்டீங்களா?” எனக் கேட்டாள்.

இல்லை என அவனும் தலையசைக்க,

“இருங்க நான் ஏதாவது சமைக்கிறேன்” எனச் சமையலறைக்குள் நுழைய,

அவள் கை பிடித்து நிறுத்தியவன், கீழே அண்ணி சமைச்சிருப்பாங்க! வா போகலாம்”

மணி இரவு எட்டரை நெருங்கியிருந்தது.

அவள் கீழே வர நித்திலனின் மொத்த குடும்பமும் அமர்ந்திருந்தனர்.

நிவாசினிக்கு பழைய நினைவுகள் திரும்பி விட்டதில் அத்தனை மகிழ்ச்சி அனைவருக்கும். நிவாசினி இல்லாத நாட்களில் நித்திலனின் வேதனையைத் தான் அனைவரும் கண்டிருந்தனரே!

“வாம்மா! பழைசுலாம் இப்ப ஞாபகம் வந்துடுச்சா உனக்கு” என அவளின் கை பற்றித் தன்னருகே அமர்த்தி வைத்து கேட்டார் நித்திலனின் தாய்.

“ஹ்ம்ம் நியாபகம் வந்துட்டு அத்தை! சாரி அத்த! எல்லாரையும் ரொம்பக் கஷ்டபடுத்திட்டேன் போல” என நிவாசினி மன்னிப்பு கேட்க,

“இல்லம்மா! நாங்க தான் மன்னிப்பு கேட்கனும்” எனக் கூறி சற்று இடைவெளி விட்டவர்,

“என் பிள்ளைங்க அவங்கவங்க விருப்பத்துக்கு ஏத்த மாதிரி வாழ்க்கை அமைச்சிக்கிற சுதந்திரத்தை கொடுத்து தான் நானும் என் கணவரும் வளர்த்தோம்மா! அவங்க காலேஜ் முடிக்கிற வரைக்கும் காதல்னு சுத்த கூடாதுனு சொல்லிட்டோம். காலேஜ் முடிச்சதும் வேலைல சேர்ந்த பிறகு அவங்க வாழ்க்கை அவங்க கையில் தான்னு சொல்லிட்டோம். அவங்க வாழ்க்கையின் டெசிஷன்ல நாங்க தலையிட மாட்டோம், அதுல எவ்ளோ பிரச்சனை வந்தாலும் அவங்க தான் சமாளிக்கனும்னு சொல்லிட்டோம். நித்திலன் நல்ல வேலைல இருந்து சம்பாதிச்சிட்டு இருந்தப்ப நிரஞ்சன் வேலை இல்லாம இருந்தான். அவன் ரொம்பவே டிப்ரஸ்டா இருக்கும் போது, அவனைக் கல்யாணம் செஞ்சிக்க விருப்பப்படுறேனு சொல்லி கேட்டாமா நித்யா. அவன் வாழ்க்கைல அவ வந்த பிறகு ஏறுமுகம் தான். நித்திலனும் உன்னைக் கல்யாணம் செய்து வைக்கச் சொல்லி கேட்டப்ப எங்களுக்கு எல்லாம் முழுச் சம்மதம் தான். ஆனா உங்க குடும்பத்துல எதிர்ப்பு இருக்கும்னு நினைக்கலை. உங்க தாத்தாவே இப்படிலாம் செய்வார்னு நினைக்கலை” எனக் கூறி பெருமூச்செறிந்தவர், தொடர்ந்து பேசினார்.

“அன்னிக்கு ஹாஸ்ப்பிட்டல்ல உங்க தாத்தா பேசின பேச்சுல செம்ம கோபமா வந்துச்சு. இனி உங்க குடும்பத்துக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைனு சொல்லிட்டு வந்துடலாம்ன்ற அளவுக்குக் கோபமா வந்துச்சு. ஆனா ஏற்கனவே மகனையும் மருகளையும் இழந்துட்டு பேத்தியை ஐசியூ ல வச்சிருக்கிற அவரோட நிலைல கவலைல பேசுறாருனு மனசை தேத்திக்கிட்டேன். ஆனாலும் என் பிள்ளை ஏன் அவர் பேச்சை கேட்டுட்டு அங்கேயே இருக்கனும்னு தோணுச்சு. அதான் கூட்டிட்டு வந்துட்டேன். நித்திலன் தவிர எங்க சைட்ல யாரும் ஹாஸ்பிட்டல் பக்கமே போகக் கூடாதுனு சொல்லிட்டேன். ஆனாலும் உன்னை உங்க தாத்தா வீட்டுக்கு கூட்டிட்டு போன பிறகு, நிரஞ்சனும் அவன் மனைவியும் உன்னைய பார்க்க உங்க வீட்டுக்கு போனப்பவும் உங்க தாத்தா திட்டி அனுப்பிட்டாராம். நித்திலன் அவர் கிட்ட போய் உன்னைய அவன் கூட வச்சி பார்த்துக்கிறதா சொல்லி கேட்டிருக்கான். அதுக்கும் அவர் ஒத்துக்கலை. ஆனா ஆளு அப்பவே நொடிஞ்சிட்டார். சொந்த மகனின் இழப்பு அவரை ரொம்பவே நிலைகுலைய வச்சிருச்சு. ஆனா அந்த நேரத்திலும் ஜாதியை பிடிச்சிகிட்டு இருந்தது தான் எனக்கு ரொம்பக் கோவமா இருந்தது”

இதற்கு எவ்வகையில் எதிர்வினை ஆற்றுவது எனப் புரியாது விழித்தாள் நிவாசினி.

அவளைப் பொறுத்த வரை அவரது தாத்தாவிற்கு ஜாதி முக்கியம் தான். ஆனால் தனது பேத்தியின் மகிழ்விற்காக எதையும் விட்டு கொடுக்கும் மனமும் அவருக்கு உண்டு தானே. அதனால் தானே அவர் நித்திலனை தான் மணம் முடிக்கப் பிடிக்காவிடினும் ஒத்துக் கொண்டார் என நிவாசினி சிந்தித்திருந்த வேளையில்,

“வா ஹாசினி சாப்பிடலாம்” என அழைத்துச் சென்றாள் நித்யா.

வெகு நாட்களுக்குப் பிறகு அனைவரும் ஒன்றாய் அமர்ந்து கூடி சிரித்துப் பேசி வெகு மகிழ்வாய் உண்டனர்.

நித்திலனின் கண்ணில் கண்ட சந்தோஷத்தின் பூரிப்பில் நெகிழ்வாய் அமர்ந்திருந்தார் அவனின் தந்தை.

உண்டு எழுந்து கை கழுவ செல்கையில், உண்டு கொண்டிருந்த மகனின் தலையை மென்மையாய் ஆட்டிவித்துவிட்டு சென்றார். அவரைப் பார்த்து மென்மையாய் சிரித்துக் கொண்டான்.

“ஏன்மா நீ அவன்கிட்ட டாட்டூ பத்திலாம் கேட்டு ஒரு வழியாக்கிட்ட போல! என்னைய டாட்டூ குத்திக்கச் சொல்லி இம்சை பண்ணிட்டான்” என நிவாசினியிடம் புகார் வாசித்தார் அவனின் அண்ணன்.

நிவாசினி மென்மையாய் சிரித்துக் கொண்டாள்.

“இத்தனை நாள் கழிச்சி இன்னிக்கு தான் என் கொழுந்தனார் முகத்துல முழுச் சந்தோஷத்தை பார்க்கிறேன்! நீ இல்லாத நேரத்துல அவனை அவன் கவனிச்சிக்கவே இல்லை. அதான் இப்படிச் சொட்டை விழுற அளவுக்குத் தலையை வச்சிக்கிட்டு இருக்கான்” நித்திலனின் தலையைத் தட்டியவாறு உரைத்து விட்டு சென்றாள் நித்யா.

நிவாசினியின் பார்வை காதலாய் அவனை ஸ்பரிசத்தது.

“இனி நான் பார்த்துக்கிறேன் அக்கா” என நிவாசினி கூறவும்,

“இது போதும்மா எனக்கு. நித்திலனை நினைச்சு ரொம்பவே மனசு கஷ்டமா இருந்துச்சு. இப்ப தான் நிம்மதியா இருக்கு” என்றார் நித்திலனின் தாய்.

அங்குச் சுற்றிருந்த அனைவரின் முகத்திலும் அத்தனை மகிழ்வும் நிறைவும்.

“அன்பான குடும்பம்! அதே நேரம் அவரவர் விருப்பம்னு சுதந்திரமும் கொடுக்கிற குடும்பம்” என மனதினுள் எண்ணிக் கொண்டாள் நிவாசினி.

அன்றிரவு அவளின் அணைப்பிற்குள் ஆழ்ந்த நித்திரையில் இருந்தான் நித்திலன்.

“ம்ப்ச் இன்னும் நிறையப் பேசலாம்னு பார்த்தா அதுக்குள்ள தூங்கிட்டாங்களே! என்னைய காதலிச்ச ஒரே காரணத்துக்காக ரொம்பவே கஷ்டப்பட்டுட்டாங்க ” என மனதிற்குள் எண்ணியவாறு அவன் முகம் நோக்கியவள் சற்றாய் எக்கி அவனின் கன்னத்தில் இதழ் பதித்தாள்.

நித்திலன் இன்று கூறியதனைத்தையும் நினைத்து பார்த்திருந்தவளுக்கு, இன்னும் தாத்தாவின் மீதான இவர்களின் குற்றசாட்டினை முழுவதுமாய் ஏற்கவும் மனமில்லை. அதே சமயம் நித்திலன் மீதான காதல் மனதிற்கோ அவன் கூறியதில் பொய்மை இருப்பதாக நினைக்கவும் சக்தியில்லை.

— தொடரும்