என் நித்திய சுவாசம் நீ – 15

மனநல மருத்துவர் கிருஷ்ணனின் முன்பு அமர்ந்திருந்தனர் நிவாசினியும் பவானியும்.

நிவாசினி அவரிடம் முன்பு கோபமாய் நடந்து கொண்டதற்காக மன்னிப்பு கூறி இன்றைய தனது நிலையை விளக்கினாள்.

“எனக்கு இந்தக் கனவுகள்லருந்து விடுதலை கொடுங்க டாக்டர். ஒவ்வொரு நேரமும் அந்தக் கனவுகள்ல நானே ரியலா வாழுற மாதிரி உணர்ச்சிவசப்பட்டுத் தான் முழிக்கிறேன் டாக்டர். எனக்கு… நான் நித்திலன் கூட நிம்மதியா வாழனும்! இந்த மாதிரி எந்தப் பிரச்சனையும் இல்லாம சந்தோஷமா வாழனும்! எனக்கு இப்ப நித்திலன் மேலுள்ள சந்தேகமெல்லாம் க்ளாரிஃபை ஆகனும். எதிர்காலத்துல நான் என்னிக்குமே சந்தேகபடாத அளவுக்கு என் மனசுல தெளிவு வரனும். அவர் மேலுள்ள நம்பிக்கை என்னிக்குமே குறையாம இருக்கனும்” என நிவாசினி பேசிக் கொண்டே போக, மென்மையாய் சிரித்தார் கிருஷ்ணன்.

“ஹ்ம்ம் நீங்க சொல்றதை வச்சு பார்த்தா நித்திலனுக்கே எல்லா விஷயமும் தெரியும்னு தோணுதே! அவர்கிட்ட ஒரு தடவை கேட்டு பார்க்கலாமா?” எனக் கேட்டார்.

“இல்ல வேண்டாம் டாக்டர்! இதுக்கு வேற ஏதாவது வழி இருந்தா சொல்லுங்க” என்றாள் நிவாசினி.

“உங்க கனவுக்கான சிகிச்சையா ஹாப்னாடிக் சிகிச்சை செய்யலாம். அதுலயே உங்களோட பிரச்சனைகளுக்கான தீர்வு கிடைக்க வாய்ப்பிருக்கு” என்றவர் கூறவும்,

“டாக்டர் இந்த மெஸ்மெரிசமும் ஹிப்னாடிசமும் ஒன்னா? இரண்டுமே மன வசியம் தானே? இதனால எதுவும் அவளுக்குத் தவறா நடந்துடாதே! நீங்க அவளுக்கு ஹிப்னாடிசம் பண்ணும் போது நான் கூட இருக்கலாம் தானே” எனக் கேட்டாள் பவானி.

“இது எல்லாருக்கும் வர்ற பயமும் சந்தேகமும் தான்” எனக் கூறிய கிருஷ்ணன் ஹிப்னாடிசம் பற்றி விளக்க ஆரம்பித்தார்.

“இதை அறிதுயில் நிலைனு சொல்லுவாங்க. ஆழ்மனசுல தான் அது வேலை செய்யக் கூடியது. உங்களோட வெளி மனசை கம்ப்ளீட்டா ரிலாக்ஸ் செய்ய வச்சி ஆழ் மனசுல போய், அங்க உங்க பிரச்சனைக்களுக்குரிய ஆணி வேரை கண்டுபிடிச்சு க்ளியர் செய்றது தான் இந்தச் சிகிச்சை முறை. ஆழ் மனசுல புதைக்கப்பட்ட விஷயங்கள் தூக்கத்துல வெளிபடும். பெரும்பாலும் ஆழ்மன பதிவுகள் தான் கனவுகளாய் வந்துட்டு இருக்கும். அப்படி ஒரு தூக்க நிலைக்குக் கொண்டு போய் உங்க ஆழ் மனசை மட்டும் விழிபடைய செய்றது தான் இந்தச் சிகிச்சை.

இதுவும் மெஸ்மரிசமும் ஒன்னு கிடையாது. இதுல வசியம்னு ஒன்னு கிடையவே கிடையாது. மெஸ்மரிசம் ஒத்துழைப்பு இல்லாமலும் செய்யலாம்னு சொல்வாங்க. ஆனா ஹிப்னாடிசம் பேஷன்ட்ஸ்ஸோட ஒத்துழைப்பு இல்லாம செய்யவே முடியாது.

ஒரு குறிப்பிட்ட பொருளை கண் இமைக்காம பார்க்க வச்சி, நான் சொல்ற ப்ரொசிஜர் மட்டும் கேட்டு ஃபாலோ பண்ணிட்டே வந்தாலே நீங்க அந்தத் துயில் நிலைக்குப் போய்டுவீங்க. வேறெங்கயுமே மனசு அலைபாயாம ஒரே நேர் கோட்டுல உங்க சிந்தனையைச் செலுத்தி என்னோட சொல்லில் மட்டுமே உங்க கவனத்தைச் செலுத்தினால் மட்டுமே இது சாத்தியம். தியானம் பண்ணும் போது எப்படி உண்ரவீங்களோ அப்படித் தான் இதுவும் இருக்கும்.

இதுல இரண்டு வகை இருக்கு. பாஸ்ட் ஃலைப் தெரபி அண்ட் ஏஜ் தெரபி. பிரச்சனைக்கான காரணம் கண்டுபிடிக்கக் கொஞ்சம் கொஞ்சமா அவங்க வயசை குறைச்சு குறைச்சுக் கொண்டு வந்து அவங்க கருல இருந்த டைம்க்குக் கொண்டு போய் முன் ஜென்மம்னு கொண்டு போறது தான் பாஸ்ட் லைஃப் தெரபி. இதுல ஏஜ் வரையிலேயே நிறுத்திக்கிறது ஏஜ் தெரபி. ஆனா இதுக்குப் பேஷன்ட்டோட கோ ஆப்ரேஷன் ரொம்பவே முக்கியம்”

“இதுல எந்தத் தெரபி நிவாசினிக்குச் செய்யப் போறீங்க டாக்டர்” எனப் பவானி கேட்க,

“இரண்டுமே இல்லமா! இங்க நமக்குப் பிரச்சனைக்கான ரூட் காஸ் தெரிஞ்சிடுச்சு. நிவாசினி மறந்த நினைவுகளை அவங்களோட ஆழ் மனசு தூக்கத்துல வெளி கொண்டு வர பார்க்குது. அவங்களோட விரக்தி, லோன்லினஸ் ஃபீல், தனக்குனு யாருமில்லைன்ற கழிவிறக்கம் இதெல்லாம் சேர்ந்து அவங்களோட ஆழ் மனசை தாக்குற நேரத்துல, நீ இப்படிக் கவலைபட வேண்டிய அவசியமில்லைனு அவங்க ஆழ் மனசு அவங்களுக்குச் சொல்யூஷன் தர பார்க்குது. அதனால தான் இப்படி அவங்க மறந்து போன நினைவுகளை மேலெழும்ப வைக்குது. சோ ஹிப்னாடிக் தெரபி மூலமா உங்க ஆழ் மனசு உங்களுக்கு உணர்த்த வர்ற விஷயங்களை நீங்க தெரிஞ்சிக்கிட்டீங்கனா உங்களுக்குக் கனவு வர்றது நின்னுடும். இது தான் சொல்யூஷன்னு நான் நினைக்கிறேன்.
ஆனா என்னோட எக்ஸ்பீரியன்ஸ்ல இப்படி அம்னீசியா பர்சன் அவங்க மறந்த நிகழ்வுகளை ஹிப்னாடிசம் மூலமா நினைவுல கொண்டு வர்றதை இது வரை நான் பார்த்ததில்லை. ஆனா உங்களுக்குக் கனவு வர்றதுனால நம்ம ட்ரை செஞ்சி பார்க்கலாம்.

ஆனா நிவாசினி, உங்க மனசை நீங்க திடமா வச்சிக்கனும். பாசிட்டிவ்வா இருக்கிறது தப்பில்லை. ஆனா நித்திலன் பத்தி எதுவும் நெகடிவ்வா தெரிஞ்சாலும் ஏத்துக்கக் கூடிய அளவுக்கு மனசை திடபடுத்தி வையுங்க” எனக் கூறியவர்,

நாளையிலிருந்து மாலை வேளையில் அந்தச் சிகிச்சையைத் துவங்கலாமெனக் கூறினார். நிவாசினியின் பிரச்சனைகான காரணம் ஏற்கனவே அறிந்ததினால் ஓரிரு நாட்கள் இந்தச் சிகிச்சை அளித்தாலே போதுமானது எனக் கூறினார்.

“அப்புறம் டாக்டர், இவளுக்கு அம்னீசியா இருந்ததைக் கூட மறந்துட்டு இருந்திருக்கா? மாஞ்சோலை போன சமயத்துல தான் ஞாபகம் வந்திருக்கு. இப்படிக் கூட முக்கியமான விஷயங்களை மறப்பாங்களானு எனக்கு அதிசயமா இருக்கு டாக்டர்” எனப் பவானி கூற,

“உங்களுக்கு முக்கியமானதா பட்ட அந்த விஷயம் அவங்க முக்கியமானதா நினைக்கலை! நான் சொல்றது சரியா நிவாசினி?” என அவர் கேட்க,

ஆமெனத் தலையாட்டியவள்,
“அப்ப இருந்த சூழ்நிலைல அப்பா அம்மா இல்லையேங்கிற வருத்தம் தான் என் மனசை முழுசா ஆக்ரமிச்சிருந்துது. இதை நான் பெரிசா எடுத்துக்கலை” என்றவள் கூறவும்,

“அது தான் ரீசன் மா. நம்ம முக்கியம்னு நினைக்காத, ஒரு பொருட்டாவே யோசிக்காத விஷயத்தை நம்ம மூளை லாஸ்ட் லேயர்ல தான் சேவ் செஞ்சி வச்சிக்கும். மனசும் மூளையும் ஒருங்கே இணைஞ்சு ஒரு விஷயத்தை நினைக்கும் போது தான் அது ஆழமா மூளைல பதிவாகும். இதுல நிவாசினி அப்ப இருந்த விரக்தி மனநிலையில் அவங்க மனசும் மூளையும் வெவ்வேறு திசையில் இருந்திருக்கும்” அவர் விளக்கி கூறவும் விளங்கியதாய் தலை அசைத்தாள் பவானி.

மறுநாள் மாலை வருவதாய் உரைத்து கிளம்பினர் இருவரும்.

இருவரும் அடுத்து போய் நின்றது கர்ப்ப பரிசோதனை செய்வதற்கான மருத்துவமனையில் தான்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் நிவாசினி கருதரித்துள்ளாளென இன்ப செய்தி அவளை வந்தடைந்தது.

மனம் மகிழ்வில் துள்ளி குதித்தாலும், உடனே நித்திலனை தான் மனம் தேடியது அவளுக்கு.

அவனுடன் பேச கூடாதென எடுத்திருந்த சபதமெல்லாம் காணாமல் போக, உடனே அவனுக்கு அழைப்பு விடுத்திருந்தாள். ஆனால் அவன் தான் அவ்வழைப்பை ஏற்காமல் போனான்.

பவானி இவளை எவ்வாறு கவனித்துக் கொள்ள வேண்டுமென மருத்துவரிடம் கேட்டு கொண்டு, நந்தனுக்கு அழைத்து உரைத்தும் விட்டாள்.

அன்றிரவு, தான் தனியே உறங்கி கொள்வேன் எனக் கூறி பவானியை தனது படுக்கையறைக்குள் நிவாசினி அனுமதிக்கவே இல்லை. தன்னால் அவர்கள் இருவருக்குள்ளும் பிரச்சனை வந்திட கூடாதென்பதில் கவனமாய் இருந்தாள் நிவாசினி.

அன்றிரவு வரை நித்திலனிடம் இருந்து அவளுக்கு அழைப்பு வரவேயில்லை. அவனின் நிகழ்ச்சியையாவது கேட்போம், அதில் தனக்காய் ஏதேனும் சொல்கிறானா எனப் பார்க்கலாமென அவள் அவனின் நிக்ழ்ச்சியைக் கேட்க, அதிலும் அவன் வெகு மகிழ்வாய் இயல்பாய் சந்தோஷமான பாடல்களை ஒலிக்க விட்டு, அன்றைய நிகழ்ச்சிக்கான நினைவுகளின் பகிர்வாய் சிறுவயது நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்ள கேட்டு என ஜாலியாய் சென்று கொண்டிருந்தது அவனின் நிகழ்ச்சி. இவளுக்குத் தான் மனம் துவண்டு போனது.

அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளி வந்து தனது கைபேசியை ஓரமாய் வைத்தவள், படுக்கையில் படுத்துக் கொண்டு விட்டத்தை வெறித்துப் பார்த்தவாறே தனது வாழ்க்கை பற்றி யோசிக்க ஆரம்பித்தாள்.

“டாக்டர் சொன்ன மாதிரி சப்போஸ் நித்திலன் சைட் நெகடிவ்வா எதுவும் வந்தா என் ஃலைப் என்னவாகும்” இவ்வாறு எண்ணுவதே மனதில் வலியை உண்டு செய்தாலும்,

“லைஃப்ல வர்ஸ்ட் கேஸ் scenario ஆல்சோ என்னிக்கும் யோசிச்சு வச்சிக்கனும்” எனத் தனக்குத் தானே கூறி தன்னைத் தேற்றி கொண்டாலும், மனமும் உடலும் வெகுவாய்ச் சோர்வுற்றிருந்தது.

“அவங்க இல்லனாலும் வாழ பழகனும். பாப்பாவை சோலோ மதராய் வளர்க்க பார்க்கனும். அதான் வேலை இருக்கே பணத்துக்குப் பிரச்சனை இருக்காது. தனியா வீடு எடுத்து தான் தங்கனும். பவானியை எதுக்கும் டிஸ்டர்ப் செய்யக் கூடாது” இவ்வாறாக இவளது சிந்தனைகள் தறி கெட்டு ஓடிக் கொண்டிருக்க, அவளது கைபேசிக்கு அழைத்தான் நித்திலன்.

“ஹாய் ஹனி! எப்படி இருக்க? உடம்பு எப்படி இருக்கு? ஐம் மிஸ்ஸிங்க் யூ சோ பேட்லி! இன்னும் அஞ்சு நாள் தான் உன்னைத் தனியா விட்டு வைப்பேன்! அதுக்கப்புறம் நீயே வேண்டாம்னு சொன்னாலும் உன்னைய தூக்கிட்டு வந்து என் கூட வச்சிப்பேன் சொல்லிட்டேன்” அவன் பேசிக் கொண்டே போக,

அவளிருந்த மனநிலைக்கு அவனின் இத்தகைய பேச்சு அவளுக்கு எப்படி இருக்குமாம்! மனம் நெகிழ்ந்து கண்ணில் நீர் கட்டிக் கொண்டது.

“உன்னைய என்னிக்கும் தனியா விட மாட்டேனு சொல்றதா தானே இதோட பொருள்! நீ சிங்கள் மதரா யோசிக்கிறதுலாம் தேவையேயில்லைனு கடவுள் இவர் மூலமா உணர்த்துறாரோ? எது எப்படியோ நித்திப்பானால நான் இல்லாம இருக்க முடியாது” மனம் சற்றாய் தெளிவுற முகமெல்லாம் விகசிக்க,

“நித்திப்பா! நான்.. நான்” எனத் தட்டு தடுமாறி அவள் கூற தயங்க,

“என்னாச்சு ஹனி! எதுவும் பிரச்சனையா?” என அவன் பதட்டமாய் அவளைக் கேட்க,

“நான்… நீங்க… நீங்க அப்பாவாகப் போறீங்கப்பா” என்றாள் வெட்கம் கலந்த புன்னகையோடு.

அங்கு அவனுக்கு உடலெல்லாம் புல்லரித்தே விட்டது. அவளிருந்த நிலைக்கு இன்னும் ஓரிரு ஆண்டுகள் தள்ளி தான் தங்களுக்குப் பிள்ளை பேறு கிட்டுமென எண்ணியிருந்தானே! ஆனால் கடவுள் விரைவாய் இவ்வரத்தை வழங்குவாரெனத் துளியேனும் எண்ணியிராதவனும் இச்செய்தி பெரும் ஆச்சரிய அதிர்ச்சி தரும் சந்தோஷ செய்தியாய் தான் இருந்தது.

அவள் கூறியதை கேட்டதும் அவன் கூறிய அடுத்த வார்த்தை, “நான் உன்னை உடனே பார்க்கனுமே!” என்பது தான்.

“நான் உடனே வரவா! ப்ளீஸ்டா டூ மினிட்ஸ்” என அவளிடம் கெஞ்சி கொஞ்சி அனுமதி வாங்கி அந்த இல்லத்தின் கதவினை தட்டி கொண்டிருந்தான் அந்த இரவில்.

கதவு தட்டும் சத்தத்தில் விழித்த பவானி கதவை திறக்க வர, அங்கு நிவாசினி கதவை திறக்க, நித்திலன் கதவருகில் நின்றிருப்பதைப் பார்த்தாள்.

“இது தான் புருஷன் பொண்டாட்டி பிரிஞ்சு இருக்கிற லட்சணமா? இப்படி ஒரு புருஷன் பொண்டாட்டிய ஊர் உலகத்துல நான் பார்த்தே இல்லையேப்பா” என நாடியில் கை வைத்து அவள் கேலி பார்வை வீசி வைக்க,

“அய்யோ மானத்த வாங்குறாளே” என எண்ணி கொண்டே தலையைக் குனிந்து கண்களைச் சுருக்கி தலையில் அடித்துக் கொண்டாள் நிவாசினி.

அவர்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே தனதறைக்குச் சென்று விட்டாள் பவானி.

நிவாசினியின் அறைக்குச் சென்ற நொடி அவளை இறுக அணைத்தவன், அவளை அமர வைத்து மடியில் தலை சாய்த்துக் கொண்டான். கண்கள் கலங்கி விழி நீர் அவள் மடியை நனைத்தது.

“என்னப்பா என்னாச்சு?” அவன் தலை கோதி அவள் கேட்க,

ஒன்றுமில்லை எனத் தலையசைத்தவன், “ஹனிமா இந்த டைம்ல நீ கவனமா இருக்கனும்! என் கூட வந்துடேன்! உன்னைய நான் கண்ணுக்குள்ள வச்சி பார்த்துக்குவேன்” என அவன் கூற,

“இல்லப்பா எனக்குச் சில விஷயங்கள் தெளிவாகனும்” அவள் கூற,

“இப்ப என்ன உனக்குத் தெரிஞ்சிக்கனும். என்னைய விட்டு பிரிஞ்சு இருந்தா மட்டும் உனக்கு என்ன தெளிவு கிடைக்கும்னு நினைக்கிற நீ?” எனக் கேட்க,

அவள் பிடிவாதமாய் அவனுடன் செல்ல மறுத்து விட்டாள்.

இந்தச் சிகிச்சையில் நித்திலன் பற்றிய விவரங்கள் தெரிந்த பிறகு தான் அவனுடனான வாழ்வை தொடர்வதா வேண்டாமா என்பதைக் குறித்துச் சிந்திக்க வேண்டுமென எண்ணியிருந்தாள்.

ஆனால் கைபேசியில் அவனுடன் பேசிய சில மணி துளிகளிலேயே தனது இறுக்கம் தளர்ந்து அவனிங்கு வர ஒத்து கொண்டாள்.

“நீங்க சொன்ன மாதிரி இன்னும் அஞ்சு நாள் டைம் தாங்க” அவனைத் தற்சமயம் அமைதி கொள்ளச் செய்ய இவ்வாறு உரைத்திருந்தாள்.

அன்றிரவு அவளுடனேயே அவன் தங்கி கொண்டான். சில மாதங்கள் வரை இந்த விஷயத்தை எவருடனும் பகிர வேண்டாமென இருவரும் முடிவெடுத்து கொண்டனர். மறுநாள் காலை பவானியும் நிவாசினியும் அலுவலகம் சென்று வந்த பின்னர் மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்றனர்.

பவானி வெளியில் அமர்ந்திருக்க, உள்ளே மருத்துவர் நிவாசினியை சிகிச்சைக்குள் ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்.

அவள் தன் வாழ்வின் முன் நிகழ்வுகளைக் கூறிக் கொண்டிருந்தாள்.

“நித்திப்பாவும் நானும் எங்களுக்குக் குழந்தை பிறக்க போகுதுனு ரொம்பச் சந்தோஷமா இருந்தோம். ஆனா அந்த நாள் விடியல் எங்களுக்கு வராமலே போயிருக்கலாம். காலைல எழுந்திருக்கும் போதே செம்ம வயிறு வலி எனக்கு. நித்திப்பா முகமே சரியில்லை. ரொம்பக் கவலையா தெரிஞ்சாங்க. ஹாஸ்பிட்டல் செக்கப்க்கு போனப்ப குழந்தை அபார்ட் ஆகிட்டுனு சொன்னாங்க. நானும் நித்திப்பாவும் ரொம்பவே அழுதோம். ஹாஸ்பிட்டல்ல ஒன் டே ஸ்டே செஞ்சுட்டு ட்ரீட்மெண்ட் எடுத்துட்டு வீட்டுக்கு வந்தப்ப… தாத்தா எங்க வீட்டுக்கு வந்து நித்திப்பாவை திட்டினாங்க. குழந்தை அபார்ட்டானதுக்குக் காரணம் நீ தான்னு சொல்லி அவரைத் திட்டினாங்க. அவர் மறுப்பேதும் சொல்லாமல் குற்றயுணர்வோட முகத்தைத் தொங்க போட்டு நின்னாரு. என்ன பண்ணீங்க? என் குழந்தையை என்ன பண்ணீங்கனு நான் அவர் சட்டைய பிடிச்சு உலுக்கி அழுதேன்! உனக்கு அவன் மாத்திரை கொடுத்து கருவை கலைக்க வச்சிருக்கான். இவனைக் கட்டிக்காதனு சொன்னேன் கேட்டியா நீ! இனியும் நீ ஒன்னும் அவன் கூட இருக்கத் தேவையில்லனு என் கையைப் பிடிச்சு அந்த வீட்டை விட்டு தாத்தா என்னைய கூட்டிட்டு போய்ட்டாங்க”

சீரற்ற சுவாசமாய் அவள் மூச்சுக்கு திணற ஆரம்பிக்கவும், அவளை இயல் நிலைக்குக் கொண்டு வந்தார் கிருஷ்ணன்.

“என் குழந்தை! என் குழந்தை” எனப் பதறிய அவள் உள்ளம் அனிச்சைச் செயலாய் வயிற்றைத் தடவியது.

“ரிலாக்ஸ்! ரிலாக்ஸ்! ஆர் யூ ஆல்ரைட்” என டாக்டர் கேட்க,

வியர்வையைத் துடைத்தவாறே “ஐம் ஃபைன்” என்றாள்.

கண்ணில் நீர் அவளை மீறி வழிந்து கொண்டிருந்தது.

ஹிப்னாடிசம் மூலமாக அவர்கள் கூறும் விஷயம் அவர்களுக்கே நினைவில் இருக்காது. பொதுவாய் நாம் உறக்கத்தில் பேசினால், என்ன பேசினோமென நமக்குத் தெரியாதல்லவா! அவ்வாறோர் நிலையில் தான் இவளும் இருந்தாள். அவள் பேசியது எதுவும் அவளுக்கு நினைவில் இல்லை.

ஆனால் அவளின் குழந்தைக்கு ஏதோ ஆபத்தென அவளின் உணர்வுகள் அவளுக்கு உணர்த்த, மனம் நிலை கொள்ளாமல் தவித்தது.

அவளின் தவிப்பான முகத்தைப் பார்த்து, “ஆர் யூ ஆல் ரைட்” என மீண்டுமாய்க் கேட்டார் கிருஷ்ணன்.

ஹ்ம்ம் என அவள் தலை அசைக்க,

“ஆர் யூ ப்ரக்னன்ட் நௌ?” எனக் கேட்டார் அவர்.

சட்டென நிமிர்ந்து அவரைப் பார்த்தவள், “உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றவள், “நான் பாப்பாவை பத்தி எதுவும் சொன்னேனா? என் குழந்தைக்கு எதுவும் ஆபத்தில்லையே” எனப் பதட்டமாய் வினவ,

“இல்லைமா! உங்க பாப்பாக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல” என்றவர் அவளை அழைத்துக் கொண்டு முன்னறைக்கு வந்தார்.

“என்ன சீக்கிரம் வந்துட்டீங்க? எதுவும் பிரச்சனையா டாக்டர்?” எனப் பவானி கேட்க,

“இல்லமா ஃப்ரஸ்ட் டைம்னால நான் ரொம்ப நேரம் அவங்களை அந்த நிலைல இருக்க வைக்கலை. மீதிய நாளைக்குப் பார்த்துக்கலாம்” என்றவர்,

“நான் நித்திலனை பார்க்கனுமே” என்றார்.

பவானியும் நிவாசினியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, “அவருக்குத் தெரியாம தான் இந்த ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிறேன் டாக்டர்! சப்போஸ் அவர் மேல தப்பிருந்தா அவர் எதுவும் பொய் சொல்லி இந்த ட்ரீட்மெண்ட் எடுக்க விடமாட்டார்னு தோணுச்சு. அதுமில்லாம என் கனவு பத்திலாம் அவருக்கு எதுவும் தெரியாது” என நிவாசினி கூற,

“உங்க கனவு பத்தி வேணா அவருக்குத் தெரியாம இருக்கலாம். ஆனா நீங்க இங்க வர்றது போறதுலாம் உங்க கணவருக்குத் தெரியாம இருக்காதுங்கிறது என்னோட அனுமானம். உங்களுக்கு நான் நெக்ஸ்ட் ட்ரீட்மெண்ட் கொடுக்கிறதுக்கு முன்னாடி அவரை மீட் பண்ணனும். அதுவும் தனியா தான் பார்க்கனும். நீங்க யாரும் வர வேண்டாம். அவர்கிட்ட சொல்லி வர சொல்லுங்க” எனக் கிருஷணன் கூறவும், சரியெனத் தலையசைத்து சென்றனர் இருவரும்.

வீட்டிற்குச் செல்லும் வழியாவும், “அப்படி என்னடி டாக்டர்கிட்ட சொன்ன?” எனப் பவானி கேட்க,

“தெரியலையேடி! டாக்டர்கிட்டயே கேட்டிருக்கலாமே நீ” எனக் கூறியவள்,
“என்னமோ மனசே சரியில்லைடி! முருகன் கோவிலுக்குப் போய்ட்டு போகலாம்டி” என்றாள் நிவாசினி.

இருவருமாய்க் கோவிலுக்குச் சென்று விட்டு வீட்டை அடைந்தனர்.

— தொடரும்