என் நித்திய சுவாசம் நீ – 14

என் நித்திய சுவாசம் நீ 14

பக்கத்தில் நீயும் இல்லை!
பார்வையில் ஈரம் இல்லை!
சொந்தத்தில் பாஷை இல்லை!
வாசிக்க ஆசை இல்லை!

கண்டு வந்து சொல்வதற்கு
காற்றுக்கு ஞானம் இல்லை!
நீலத்தைப் பிரித்துவிட்டால்
வானத்தில் ஏதுமில்லை!
தள்ளி தள்ளி நீ இருந்தால்
சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை !

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!

நித்திலன் அவனது பண்பலை நிகழ்ச்சியில் இந்தப் பாடலை ஒலிக்க விட்டுக் கண் மூடி நிவாசினியின் நினைவில் மூழ்கியிருக்க, அச்சமயம் அவனது சக பயணிப்பாளர் வந்து,

“என்னடா கல்யாணம் முடிஞ்சு முதல் நாள் ஆபிஸ் வந்துட்டு சோக கீதம் வாசிச்சுட்டு இருக்க? ஆடி மாசத்துக்குப் போற மாதிரி உன் வொய்ப் அம்மா வீட்டுக்கு போய்ட்டாங்களா?” என அவனைக் கேலி செய்து நடப்புக்குக் கொண்டு வர,

அமைதியாய் மென்னகை புரிந்தவன், “ஆமாமா இப்படிலாம் நம்ம சோகமா இருக்கோம்னு காமிச்சா தானே அவங்க நினைப்பாவே நாம இருக்கோம்னு நம்புவாங்க” என அவனும் கேலியாய் பதிலுரைக்க,

“பொழச்சிக்குவடா மவனே நீ” என அவனின் தோளில் தட்டிவிட்டு அவனது அறையிலிருந்து அவர் வெளியேறவும் பாட்டு முடியவும் சரியாக இருந்தது.

அவர் சென்றதும் முகத்தில் ஒட்ட வைத்திருந்த போலி புன்னகை காணாமல் போனாலும், குரலில் உற்சாகத்தைக் கொண்டு வந்தவன்,

“ஹாய்! ஹலோ! வணக்கம் அண்ட் வெல்கம் டூ நித்தில நினைவுகள் வித் மீ நித்திலன்! எனக்குத் திருமண வாழ்த்து சொன்ன அனைவருக்கும் என் நன்றிகள் ஃப்ரண்ட்ஸ்.

இந்த ஒரு மாசமா என்னைய யாராவது மிஸ் செஞ்சீங்களா? என்னோட கேள்விகளை இந்தக் கலந்துரையாடலை மிஸ் செஞ்சீங்களா? அப்படி மிஸ் செஞ்சிருந்தீங்கனா கண்டிப்பா நீங்க அதைப் பகிர்ந்துக்கலாம். அதுல எனக்கு ஒரு குட்டி சந்தோஷம் கிடைக்கும்” எனக் கூறி சிரித்தவன்,

“சரி கல்யாணம் கட்டி ஹனிமூன்லாம் முடிச்சிட்டு வந்தவன் எந்த மாதிரி டிஸ்கஷன் டாபிக் இன்னிக்கு வச்சிருப்பான்னு யோசிக்கிறீங்களா? அப்படி யோசிக்கலனா இப்ப யோசிச்சிட்டே இருங்க! இப்ப வர்ற இந்தப் பாட்டைக் கேட்டுட்டு வாங்க. இன்னிக்கான கலந்துரையாடல் தலைப்பு என்னனு சொல்றேன்! நீங்க யோசிச்சதும் நான் சொல்றதும் சரியானு பார்க்கலாம்” எனக் கூறி அடுத்தப் பாட்டை ஒலிக்க விட்டான்.

இது என்ன புதுவித மாயம்
என் நெஞ்சில் நீ தந்த காயம்
எனை விட்டு நீ செல்லும் நேரம்
விடுகதையாகுதடி!

இப்பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, நிவாசினி படுக்கையறையில் மெத்தையில் படுத்துக் கொண்டு ஒலிவாங்கியின் மூலம் இந்நிகழ்ச்சியினைக் கேட்டு கொண்டிருந்தாள்.

மனம் வெகுவாய் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தாலும், இவளுக்காகத் தானே இப்படிச் சோக கீதமாய் அவன் ஒலிக்கச் செய்து கொண்டிருக்கிறான் என்பதில் அவளுக்குச் சற்றாய் சிரிப்பு வந்தது.

“சரி அப்படி என்ன டாபிக் இன்னிக்கு டிஸ்கஷனுக்குச் செலக்ட் செஞ்சிருப்பாங்க? எதுவும் ரொமேன்டிக் டாபிக்கா இருக்குமோ” என அவள் சிந்தையைச் சீண்டிக் கொண்டிருக்க,

பவானியின் வீட்டில் அவளை விட்டு சென்ற பிறகு அன்றைய நாள் முழுவதும் அவள் அவனிடம் பேசாது இருந்தாள். அவ்வாறு அவள் பேசாதிருப்பது அவனை வருத்தமடையச் செய்கிறது என்பதை அவனின் இப்பாடல்களின் வழியாய் அவள் உணர்ந்தாள்.

அப்பாடல் முடிந்து மீண்டுமாய் அவனின் குரல் ஒலிக்கத் தொடங்கவும், அவள் கவனிக்கத் தொடங்க, “இன்னிக்கான டிஸ்கஷன் டாபிக் என்னனா… முதல் காதல்! உங்க லைப்ல ஏற்பட்ட முதல் காதல் பத்தி, அவங்களை முதன் முதலா பார்த்த அனுபவம், அவங்ககிட்ட காதலை சொன்ன அனுபவம், அந்தக் காதல் நிறைவேறாத நிலைல உங்க முதல் காதலை பத்தி உங்க கணவன் அல்லது மனைவிகிட்ட சொன்ன அனுபவம்னு எல்லாத்தையும் இன்னிக்கு நீங்க பகிர்ந்துக்கலாம். நிகழ்ச்சியின் முடிவுல நான் என்னோட அனுபவங்களைப் பகிர்ந்துக்கிறேன்” எனக் கூறி அவன் அடுத்தப் பாடலை ஒலிக்க விட,

இங்கு இவளுக்கு உதட்டில் ஒட்டியிருந்த சிரிப்பு மறைந்து கடுப்பு குடி கொண்டது.

“எதுக்கிப்ப முதல் காதல் பத்தி கேட்கிறாரு? என்கிட்ட இது மூலமா ஏதோ சொல்ல வராறோ! நான் தான் எதுவும் கேட்க விரும்பலைனு சொன்னேன்ல” இதற்கு மேல் அந்நிகழ்ச்சியைக் கேட்க மனமற்று போனாலும், “என்ன தான் சொல்ல போறாருனு பார்க்கலாம்” என எண்ணி கொண்டவளாய் கோபத்தைப் புதைத்துக் கொண்டு அவள் தொடர்ந்து கேட்க, அடுத்து வந்த பாடலில் அவள் கோபம் எல்லையைக் கடந்தது.

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை

இப்பாடல் ஒலிக்க ஆரம்பித்ததும், “நிவேதாவை நினைச்சு தானே இதைப் போடுறாரு. இதை வேற நான் கேட்கனுமா? ஒரு காலத்துல எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டா இருந்துச்சு. இப்பலாம் கேட்டாலே எரிச்சலா வருது” என மனதில் புலம்பி கொண்டவளாய் அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளி வந்திருந்தாள்.

தனது எண்ண போக்கினை மாற்ற ஒரு கதை புத்தகத்தை எடுத்துக் கொண்டு அவள் படிக்கத் துவங்க, ஆயினும் மனம் அதனுள் செல்லாமல் நித்திலனின் நினைவிலேயே சுழல, மீண்டுமாய் அந்நிகழ்ச்சியைக் கேட்க ஆரம்பித்தாள்.

அங்குப் பவானி விட்டத்தைப் பார்த்தவாறு படுத்துக் கொண்டு தீவிரமாய் எதையோ யோசித்துக் கொண்டிருக்க, அபி நந்தன் அவளருகில் படுத்துக் கொண்டு தீவிரமாய்க் கைபேசியில் விளையாடி கொண்டிருந்தான்.

“என்னங்க?” பவானி அழைக்க,

“ஹ்ம்ம்” என்றவன் அந்த விளையாட்டிலேயே கவனமாய் இருக்க,

“ஏங்க” அவள் மீண்டுமாய் அழைக்க,

“ஹ்ம்ம்” என அவன் கவனத்தைத் திசை திருப்பாது விளையாடிக் கொண்டிருக்க,

ஆத்திரத்தில் அவனது கை பேசியைப் பறித்துத் தனது தலையனைக்குள் அவள் வைக்க,

“ம்ப்ச் வனி, வின் பண்ண போற டைம்ல… கொடு வனி.. டைம் முடிஞ்சிடும்” என அவளின் கைகளைப் பற்றி இழுத்து தாவி அவளது தலையனைக்குள் கைகளை வைக்க,

இவள் அவனைத் தடுப்பதாய் எண்ணி அவன் மீதே விழுந்து வைக்க, அவளை இறுக்கமாய் அணைத்து கொண்டானவன்.

“ம்ப்ச் விடுங்கப்பா! உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்” என்றவள் கூறவும்,

அருகில் அவளைப் படுக்க வைத்து அணைத்து கொண்டவன், “ஹ்ம்ம் சொல்லுங்க மேடம்! என்ன சொல்லனும்” எனக் கேட்டான்.

“ஹாசினிக்கு வர்ற கனவு பத்தி சொல்லிருக்கேன்ல” என ஆரம்பித்தவள் ஹாசினி இறுதியாய் கண்ட கனவினை பற்றி அபியிடம் உரைத்தவள்,

“இதைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?” எனக் கேட்டாள்.

“கனவை வச்சி மட்டுமே ஒருத்தர் மேல சந்தேகபடுறது தப்பு வனி. நாளைக்குத் தான் அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கிருக்கீங்களே அந்தச் சைக்காடிரிஸ்ட்டை பார்த்தா எதாவது தெளிவு கிடைக்கும்னு தோணுது. என்னைய கேட்டா நித்திலன் அப்படி ஆளு கிடையாது ஆனா ஏன் அப்படிக் கனவு வருதுனு தெரியலையே” எனக் கூறினான் அபிநந்தன்.

“சரி அவ எப்படியும் தூங்கிருக்க மாட்டா! இன்னிக்கு நைட் அவ கூட நான் தூங்குறேன்” எனக் கூறி பவானி நிவாசினி தங்கியிருந்த அறை நோக்கி சென்று கதவை தட்ட, சரியாய் அச்சமயம் நித்திலன் தனது முதல் காதலை பற்றி உரைக்கத் தொடங்க, நிவாசினி திடீரெனக் கேட்ட கதவு தட்டும் சத்தத்தில் பயந்து தனது கைபேசியினைத் தவறவிட அது ஸ்விட்ச் ஆஃப் ஆகியது.

பதட்டமாய்க் கதவை சென்று திறந்தவள், அங்குப் பவானியை காணவும், “ஏன்டி எருமை! இப்படியா பயமுறுத்துவ?” எனக் கேட்டுக் கொண்டே மீண்டுமாய்க் கைபேசியை உயிர்பித்து அவள் அந்நிகழ்ச்சிக்குள் சென்ற சமயம், “என் காதல் முழுதும் என் மனைவிக்கு மட்டும் தான்” என்ற இறுதி வாக்கியத்துடன் அவன் பேசி முடித்திருந்தான்.

“முதல் காதல்லாம் இப்ப மறந்துட்டு மனைவியை மட்டும் தான் நேசிக்கிறேனு சொல்றாரு போல” என மனதில் எண்ணிக் கொண்டவளாய் கட்டிலில் சென்று அமர, உள் நுழைந்ததிலிருந்து அவளின் செயலையும் முகப் பாவனையும் பார்த்துக் கொண்டிருந்த பவானி, “என்னடி ஆச்சு?” எனக் கேட்டுக் கொண்டே அவளருகில் அமர்ந்தாள்.

“நித்திப்பா ஷோவை கேட்டுட்டு இருந்தேன்டி! நீ கதவு தட்டினதுல ஃபோனை கீழே போட்டுட்டேன்” என்றாள்.

அவள் அழுது கொண்டிருப்பாள் என எண்ணி ஆற்றுபடுத்தவே பவானி இங்கு வந்தாள். ஆனால் இவளோ அவனின் நிகழ்ச்சியையே கேட்டுக் கொண்டிருப்பதாய் உரைத்ததில், “எப்போதுலருந்துடி நீ இப்படி மாறின?” என ஆச்சரியமாய்க் கேட்க,

“என்ன மாறிட்டேன்?” என நிவாசினி திருப்பிக் கேட்க,

“உன்னால சின்ன அதிர்ச்சியையும் துக்கத்தையும் தாங்க முடியாது ஹாசினி. உன் தாத்தாவை விட்டு வரும் போது நீ அப்படித் தான் இருந்த! உன்னைத் தேத்துறதுக்கு நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன்! ஆனா இவ்ளோ குழப்பம், கஷ்டம், அடுத்து உன் வாழ்க்கை என்னாகும்னு தெரியாத இந்தச் சூழல்ல எல்லாத்தையும் ஈசியா எடுத்துகிட்டு எப்படி இப்படி இருக்க நீ” எனக் கேட்டாள்.

“இந்தக் கஷ்டங்கள்லாம் கடந்த பிறகு, நான் சந்தோஷமா தான் வாழ்வேன்ற நம்பிக்கை நூறு சதவீதம் என் மனசுல இருக்கும் போது, நான் ஏன் கவலைபடனும்! இப்போதைக்கு எனக்கிருக்கக் கவலை அவரைப் பிரிஞ்சிருக்கிறது தான்” என அவள் தெளிவாய் உரைக்க,

“ஆனா எனக்கு நித்திலன் அண்ணா மேல அந்த நம்பிக்கை இல்லையே! எனக்கு ரொம்பப் பயமா இருக்குடி! உன் கனவுலாம் யோசிச்சு பார்த்தா எனக்கு அவரை வில்லனா தானே யோசிக்கத் தோணுது” என மனம் பயத்தில் நடுங்க பவானி கூற,

பவானியின் கைபற்றித் தட்டி கொடுத்த நிவாசினி, “நீ எனக்கு ஃப்ரண்ட்டா கிடைச்சது என்னோட புண்ணியம்டி” என்றவள், “நீ இவ்ளோ பயபடுறனால உனக்கு ஒரு உண்மையைச் சொல்றேன்டி” என்றவள் சற்று அமைதியாக,

“என்னடி புதிர் போடுற? இன்னும் என்ன குண்டுலாம் என் தலைல போட போறடி” எனப் பயந்தவாறு கேட்க,

“எங்கப்பா அம்மா இறந்த பிறகு அந்த அதிர்ச்சியில எனக்குப் பழசுலாம் மறந்துடுச்சுனு தாத்தா சொன்னாருடி. நான் திடீர்னு மயக்கம் தெளிஞ்சு பார்த்தப்ப ஒரு ஹாஸ்பிட்டல்ல இருந்தேன். மூனு மாசம் கோமால இருந்ததா தாத்தா சொன்னாங்க. அம்மா அப்பா இறந்ததைக் கேட்டதும் கோமாக்குப் போய்ட்டதா சொன்னாரு. ஆனா அதுக்குப் பிறகு அவர் என்னை நாங்க தங்கியிருந்த ஃப்ளாட்க்கு கூட்டிட்டு போனப்ப எனக்கு அந்த இடமே புதுசா தெரிஞ்சிது. அங்கிருந்த யாரையும் தெரியலை. ஆனா அங்கிருந்த இரண்டு மூனு பேரு என்னைய தெரிஞ்சா மாதிரி என்கிட்ட வந்து பேசினாங்க. ஆனா எங்க வீட்டுல வேலை செஞ்சிட்டு இருந்தவங்களை எனக்குத் தெரிஞ்சிது. ஏன்னா அவங்க என்னோட சின்ன வயசுலருந்தே எங்க வீட்டுல வேலை செஞ்சவங்க. இதை வச்சி தான் இடையில ஒரு இரண்டு மூனு வருஷம் நடந்தது எதுவும் எனக்கு ஞாபகம் இல்லைனு டாக்டர் கண்டுபிடிச்சு சொன்னாரு. ஆனா நான் அதைப் பெரிசா எடுத்துக்கலை. எனக்கு அப்பா அம்மா இல்லாதது தான் பெரிய விஷயமாபட்டுது. அதுக்குப் பிறகு தான் உன் கம்பெனியில் வேலை கிடைச்சு உன்னைப் பார்த்தது” என நிவாசினி கூறவும்,

“ஏன்டி இந்தத் தீபாவளி படத்துல ஹீரோயின்க்கு பழசு நியாபகம் வந்ததும் இப்ப நடந்ததுலாம் மறந்துடுமே! அப்ப என்னைய மறந்துடுவியாடி” கண்ணில் வலியை தேக்கி பவானி கேட்க,

அவளை இறுக்கி அணைத்து கொண்டாள் நிவாசினி.

“நீ எனக்கு அம்மா அப்பா தாத்தா எல்லாமுமேடி! உன்னை எப்படி நான் மறப்பேன்! இந்த உலகத்துல யாரை மறந்தாலும், ஏன் நித்திலனையுமே நான் மறந்தாலும் என் அப்பா அம்மா தாத்தாக்கு பிறகு நான் மறக்காம இருப்பேன்னா அது நீ மட்டும் தான்டி! இல்லனா நான் நன்றி கெட்டவள் ஆகிடுவேன்டி” எனக் கூறி அவளின் கண்ணீரை துடைத்துக் கன்னத்தில் முத்தம் வைக்க,

வழமையாய் கன்னத்தைத் துடைத்தவாறே, “அடியேய் ச்சீ! இன்னும் நீ இந்தப் பழக்கத்தை விடலையா! அண்ணாக்கு கொடுக்க வேண்டியதுலாம் எனக்குக் கொடுத்துட்டு இருக்க” என முகத்தைச் சுழித்தாள் பவானி.

“நித்திலன் அண்ணா அப்ப உன்னைய முன்னாடியே பார்த்திருக்காங்க. ஏதோ ஒரு வகையில் நீ அவருக்குத் தேவைபடுறனு தான் மேரேஜ் செஞ்சிருக்காங்க போல! எனக்குப் பயமா இருக்குடி! உன்கிட்ட அவருக்குத் தேவையானது கிடைச்சதும் உன்னைய கொல்ல ப்ளான் செஞ்சிருப்பாரோ!” நிவாசினியின் கைகளைப் பற்றிக் கொண்டு பவானி மிரண்டு போய்க் கூற,

“ம்ப்ச் என் நித்திப்பா அப்படிலாம் இல்லடி! அவருக்கு ரொம்பவே இரக்க சுபாவம் ப்ளஸ் என் மேல அளவு கடந்த அன்பு! ஆனா என்ன… இந்த அன்பு குற்றயுணர்வினால வந்துச்சானு தான் இப்ப என் சந்தேகம்!” என்ற நிவாசினி தொடர்ந்து,

“அவர் என்னைய முன்னாடி பார்த்திருக்காரு! பேசியிருக்காரு! பழகியுமிருக்காரு! அவருக்கு இதெல்லாம் நியாபகமும் இருக்கு. எனக்குத் தான் நினைவுல இல்ல” எனக் கூறவும்,

“என்னடி சொல்ற! அப்ப அவர் உன்கிட்ட பொய் சொல்லி ஏமாத்திருக்காரு. நீ என்னடானா அவருக்கு இரக்க சுபாவம் அது இதுனு அவருக்குச் சப்போர்ட் செஞ்சிட்டு இருக்க! ஆமா எதை வச்சி அவரு உன்கிட்ட முன்னாடியே பேசி பழகியிருக்காருனு சொல்ற?” பவானி கேட்க,

“என் கனவு வச்சி தான். என் கனவு எல்லாத்தையும் கூட்டி கழிச்சி பார்க்கும் போது என்னோடது ஒன் சைட் லவ்வா இருந்திருக்கனும். அவரும் நிவேதாவும் லவ் செஞ்சிட்டு இருந்திருக்கனும். எப்படியோ அவரறியாம என்னோட அப்பா அம்மா ஆக்சிடெண்ட்க்கு அவர் காரணம் ஆகியிருக்காரு போல. அதுல நான் அனாதை மாதிரி ஆனதால இரக்கபட்டு குற்றயுணர்வுல என்னைய கல்யாணம் செஞ்சிருக்காருனு நினைக்கிறேன். கல்யாணத்திற்குப் பிறகு மனைவியை மட்டுமே நேசிக்கனும்ன்ற கொள்கைனால நிவேதாவை விட்டு விலகி இருக்காரு”

“அப்ப அவர் உனக்கு ப்ரபோஸ் செஞ்ச மாதிரி வந்த கனவுலாம் என்னவாம்? மேரேஜ் டைம்ல தேஜாவூலாம் சொன்னியே?” எனப் பவானி கேட்க,

“அது என்னோட அடி மனசின் ஆசைகள்டி. நான் தான் அவரை ஒன் சைடா தீவிரமா லவ் பண்ணிட்டு இருந்திருக்கேனே! அவரை நான் மேரேஜ் செய்து வாழனும்ற என்னோட ஆசைகள் அவரைப் பார்த்ததும் அப்படிக் கனவா வந்திருக்குனு நினைக்கிறேன்”

“எனக்கென்னமோ எதுவும் சரியா படலை ஹாசினி! அவரை எப்படி இரக்க சுபாவமுள்ளவர் நல்லவர் வல்லவர்னு இன்னும் நம்புறடி! நீ சொல்றதுலாம் என்னால ஏத்துக்கவே முடியலைடி” குழப்பமான முகப் பாவனையுடன் பவானி கூற,

நிவாசினி விளக்க ஆரம்பித்தாள்.

“பவா உண்மையிலேயே எனக்கு இந்த அம்னீசியா இருக்குறதே மறந்து போச்சுடி! தாத்தா இறந்த பிறகு வாழனுங்கிற ஆசையே இல்லாம இருந்தப்ப எனக்கு எதைப் பத்தியும் யோசிக்கவோ நினைக்கவோ தோணலை. அதனால தான் நான் உன் கிட்ட இது எதைப் பத்தியும் சொல்லலை. எனக்கு மாஞ்சோலை போன சமயத்துல தான் இந்த அம்னீசியா பத்தின ஞாபகம் வந்துச்சு. அதுக்குக் காரணம் எனக்கு அங்க சில இடங்கள் பார்க்கும் போது ஏற்பட்ட உணர்வு தான். ஐ திங்க் நித்திலன் எனக்குப் பழைய நினைவுகள் வர வைக்கத் தான் அங்கே கூட்டிட்டு போனாருனு நினைக்கிறேன். எனக்கு அந்த ஊருக்கு நான் ஏற்கனவே போன ஃபீல் வந்துச்சு. அந்த ஊருக்கு போகுற வரைக்கும் நித்திலனுக்கும் எனக்கும் முன் ஜென்ம பந்தம் இருக்குனு தான் நினைச்சிட்டு இருந்தேன்டி. அதனால தான் எனக்கு இப்படிலாம் தோணுதுனு நினைச்சேன்”

“சரி நித்திலன் ஏன் உன்கிட்ட உண்மையை மறைக்கனும்! மறைக்கிற அவரே உனக்கு ஏன் பழைய நியாபகங்கள் வர வைக்கனும்னு நினைச்சு அங்க கூட்டிட்டு போகனும்?” என பவானி கேட்க,

“எனக்குப் பழைய நியாபகங்கள் வந்தா அவரை நான் வெறுத்திடுவேனோனு நினைச்சிருக்கலாம். அதே சமயத்துல எனக்குப் பழைய நினைவுகள் வராமலேயே போகனும்னு நினைக்கிற அளவுக்கு அவருக்குக் கல் மனசில்லையே! இது இரண்டுக்கும் இடையில தள்ளாடிட்டு இருந்திருப்பாரா இருக்கும்” என்றாள் நிவாசினி.

“தெரியாதனமா உனக்குக் கதை புக் படிக்கிற பழக்கத்தை ஏற்படுத்தி விட்டுட்டேன்டி! அநியாயத்துக்குக் கதையா அளக்கிறடி” என்றாள் பவானி.

“நான் சொல்றதுலாம் கதையா உண்மையானு நாளைக்கு அந்தச் சைக்காடிரிஸ்ட் டாக்டரை பார்க்கும் போது தெரிஞ்சிடும்” என்று நிவாசினி படுக்கையில் சாய்ந்து போர்த்திக் கொள்ள,

தூவானம் தூவ தூவ
மழை துளிகளில் உன்னைக் கண்டேன்

என் மேலே ஈரம் ஆக ஓருயிர் கரைவதை
நானே கண்டேன்

கடவுள் வரங்கள் தரும் பல கதை கேட்டேன்
அவளே வரமாய் வருவதை இங்குப் பார்த்தேன்

வேறு என்ன வேண்டும் வாழ்வில்

அவளின் கைபேசி இப்பாடலை அழைப்பொலியாய் இசைத்து அலறியது.

அவளருகில் படுத்திருந்த பவானி எட்டி பார்க்க, நித்திப்பா எனப் பெயர் மின்னியது.

நிவாசினி கையில் கைபேசியை வைத்துக் கொண்டு எடுக்காமல் அதனையே பார்த்துக் கொண்டிருக்க,

“எடுத்து பேசுடி” எனப் பவானி அவளின் கைகளில் தட்ட,

கைபேசியை மௌன மோடிற்கு மாற்றியவள், “அவர் ஷோ முடிஞ்சி இப்ப தான் வீட்டிற்குப் போய்ருப்பாரு போல! அதான் கால் பண்றாரு” என்றாள் நிவாசினி.

“நான் இருக்கேன்னு எடுக்காம இருக்கியா? நான் வேணா வெளில இருக்கேன்டி” எனப் பவானி கூற,

“ம்ப்ச் அதெல்லாம் இல்லடி! இத்தனை நாளா என்கிட்ட எதுவும் சொல்லாம விட்டதுக்கு இது நான் அவருக்குக் கொடுக்கிற தண்டனை” எனக் கூறி அமைதியானாள் நிவாசினி.

“நீ தானே அவர் எது சொன்னாலும் காது கொடுத்து கேட்காம, எதுவும் சொல்ல வேண்டாம்னு சொன்ன” எனப் பவானி நிவாசினி மீது குற்றம் சுமத்த,

“ஏன்டி நீ எனக்குச் சப்போர்ட்டா இல்ல அவருக்குச் சப்போர்ட்டா? இத்தனை நேரம் அவரை வில்லன் ரேஞ்ச்க்கு பேசிட்டு அவருக்குச் சப்போர்ட் பண்ணிட்டு இருக்க” என நிவாசினி கேட்க,

“இல்லடி அண்ணா சொல்ல வந்ததைக் கேட்காம விட்டுட்டேன்னு நீ தானே சொன்ன” எனப் பவானி கேட்க,

“அது கடைசியா நான் கவலை படுறத பார்த்துட்டு தான் அவர் ஏதோ சொல்ல வந்தாரு. அவரா ஒன்னும் தானா என்கிட்ட சொல்ல வரலை. கண்டிப்பா இப்ப அவர் எது சொன்னாலும் நம்புற நிலைல என் மனசு இல்லடி! ஐ நீட் சம் பிரேக். நாளைக்கு டாக்டர் சொல்றதை கேட்டுட்டு அவர்கிட்ட நான் பேசிக்கிறேன்” எனக் கூறி கண்மூடி உறங்க முயற்சித்தாள் நிவாசினி.

அங்கு நித்திலனோ இவள் கைபேசியை எடுக்காது இருக்கத் தவிப்பில் இருந்தான். இன்று நாள் முழுவதும் அவள் அவனுடன் பேசாது இருந்ததில் அவளுக்குப் பழைய நினைவுகள் வந்திருக்குமோ என்ற பயத்தில் பதட்டத்தில் உறக்கம் வராமல் கவலையில் உழன்று கொண்டிருந்தான்.

நாளை இருவருக்கும் என்ன வைத்திருக்கிறது என அறியாது தத்தமது சிந்தினையில் மூழ்கியிருந்தனர் இருவரும்.

இங்கு நிவாசினியோ பலவிதமான சிந்தனையில் கண் மூடி கிடந்தவள் திடீரெனப் பவானி எனக் கூறி எழுந்தமர்ந்தாள். அன்னிச்சை செயலாய் அவள் கரம் வயிற்றைத் தடவியது.

ஆழ் உறக்கத்திற்குள் சென்று கொண்டிருந்த பவானி பதறி எழுந்து, “என்னடி என்னாச்சு எதுவும் கெட்ட கனவு கண்டியா?” எனக் கேட்டாள்.

“இல்லடி! அந்தப் பழைய கனவு வந்ததுலருந்து நான் ப்ரக்னன்ட்டா இருப்பேனோனு என் உள் மனசு சொல்லிட்டே இருக்கு. உனக்குத் தெரிஞ்ச லேடி டாக்டர்ட்ட நாளைக்குப் போய்ப் பார்த்துட்டு வந்துடலாமாடி” என நிவாசினி கேட்க,

“வாவ் சூப்பர்டி! என்னடி எவ்ளோ சந்தோஷமான விஷயம் அதை இப்படிச் சோகமா சொல்லிட்டு இருக்க! அதுவும் நித்திலன் அண்ணா மேல தான் நீ அவ்ளோ நம்பிக்கை வச்சிருக்கியே” எனப் பவானி கேட்க,

“ஆனாலும் ப்ரக்னன்சினு யோசிச்சாலே மனசு என்னமோ பதபதைக்குதுடி” என நிவாசினி கூற,

“அது பொதுவா பொண்ணுங்களுக்கு வர்ற பயம் தான். நாளைக்கு இதுக்கும் கன்செல்ட் பண்ணிட்டு வந்துடலாம். ஆபிஸ்க்கு லீவ் போட்டதும் தான் போட்டாச்சு. எல்லா வேலையும் முடிச்சிடலாம்! இப்ப எதையும் யோசிக்காம நிம்மதியா தூங்கு” எனக் கூறி படுத்து கொண்டாள் பவானி.

நிவாசினிக்கு பலவித மனக் குழப்பத்தில் உறக்கம் வராமல் இருக்க, மனதை மாற்றுவதற்காகக் கைபேசியில் நித்திலன் அனுப்பியிருந்த மாஞ்சோலையில் எடுத்த புகைபடங்களைப் பார்க்க ஆரம்பிக்க, அங்கு நிகழ்ந்த நிகழ்வுகள் அனைத்தையும் மனக்கண்ணில் கொண்டு வந்தவளுக்கு மனம் பூரித்து நெகிழ, அவ்வுணர்வுடனேயே உறங்கி போனாள் நிவாசினி.

— தொடரும்