என் நித்திய சுவாசம் நீ – 13

என் நித்திய சுவாசம் நீ 13
கனவின் தாக்கத்தினால் முகமெல்லாம் வியர்த்து வடிய பதறியடித்து விழித்தாள் நிவாசினி. அவளின் கை அனிச்சையாய் வயிற்றைத் தடவி பார்த்தது.

நீரருந்தி தன்னைச் சமன்படுத்த எடுத்த முயற்சிகள் யாவும் தோல்வியடைய அவளின் இதயத் துடிப்பு எகிறி துடித்துக் கொண்டிருந்தது. கைகள் நடுக்கத்தை நிறுத்துவதாகவும் இல்லை.

“காம் டவுன் ஹாசினி! காம் டவுன் ஹாசினி” தன் நெஞ்சை நீவி கொண்டு தனக்குள் கூறியவாறே அங்குமிங்குமாய்க் கட்டிலின் அருகே நடைப்பயின்றாள் அவள்.

இதயத் துடிப்புச் சீராகித் தன்னிலை அடைந்ததும், நித்திலன் படுத்திருந்த பக்கமிருந்த நாற்காலியில் சென்று அமர்ந்து கொண்டாள். எண்ணற்ற கேள்விகள் சிந்தையைச் சூழ்ந்து கொள்ள, எதற்கும் விடைபெற முடியா நிலையில் குழம்பிக் கொண்டிருந்தவள், உறங்கி கொண்டிருந்த நித்திலனை பார்த்தாள்.

இவனா எனக்குத் துரோகம் இழைத்துத் துயரத்தில் ஆழ்த்தியிருப்பான்! தனது சிறு வலியும் அவனுள் பெரு வலியை உண்டு செய்யுமே! அவனால் எவ்வாறு தன்னைத் துன்புறுத்த இயலும்? மனம் முழுவதுமாய் அவனுக்கே இறங்கி பேச,

அவளால் கண்ட கனவினை நம்பவும் முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. தாய் தந்தையரின் நினைவு வெகுவாய் மனதை வதைத்தது. அதனுடன் தாத்தாவின் நினைவும் சேர்ந்து கொள்ள, நினைவடுக்கில் எங்கோ மூலையில் பொதிந்திருந்த அவளின் சிறு வயது நிகழ்வுகளெல்லாம் எழும்பச் செய்ய மனம் வெகு நாட்களுக்குப் பிறகு தனிமையை உணர்ந்தது.

அவளும் அவளது தாயும் தோழிகள் போல் தான் பழகுவர். நிவாசினி தனது அன்றாட வாழ்வின் நிகழ்வுகள் அனைத்தும் தனது தாயுடன் பகிர்ந்துக் கொள்வாள். என்ன தான் வெளியுலகிற்கு அவள் தந்தை பிரியையாய் தோன்றினாலும், தந்தைக்கு இணையாய் தாயின் மீதும் பேரன்பும் பெரு மதிப்பும் கொண்டிருந்தாள்.

தாயை நோக்கி சென்றிருந்த சிந்தனையின் விளைவாய் தாயின் மடியில் புதைந்து அழ வேண்டும் போன்றதொரு எண்ணம் எழ மனம் தானாய் பவானியை தேடியது. தற்போது தனக்கிருக்கும் தாய் மடியும் தாய் வீடும் அவளுடையது தான் என மனம் எடுத்துரைக்க, தனது கைபேசியினைத் தேட ஆரம்பித்தாள்.

அன்று பவானிக்கு குறுஞ்செய்தி அனுப்பிய பிறகு கைபேசியினை எடுக்கவேயில்லை அவள்.

அவளின் தேடலில் ஏற்பட்ட சத்தத்தில் சற்றாய் உறக்கம் கலைந்து அசைந்து படுத்தான் நித்திலன். மெத்தையில் தனதருகில் கைகளால் துழாவி நிவாசினியை அவன் தேட, அவள் கையில் அகப்படவில்லை என்றதும் அவனின் தூக்கம் முற்றாய் கலைய, “ஹனி” எனக் கூவி கொண்டே எழுந்தமர்ந்தான்.

அவள் மெத்தையினருகிலிருந்த மேஜையில் எதையோ தேடியதை கண்டவன், “இந்த நேரத்துல என்ன தேடிற நீ?” எனக் கேட்டுக் கொண்டே தனது கைப்பேசியினை எடுத்து நேரத்தை பார்த்தான். காலை ஐந்து மணியைக் காண்பிக்க, அவளருகில் எழுந்து சென்றவன், “என்னாச்சு?” எனக் கேட்டான்.

அவன் முகம் நோக்காது, “என் ஃபோனை காணோம்” எனத் தேடியபடியே அவள் கூற,

“அதை இப்ப தான் தேடனுமா? தூக்கம் வரலையா உனக்கு? ” என அலுப்பாய் கேட்டவாறே அவளுடன் இணைந்து தேடியவனின் கைகளில் அது கிடைக்க, “சாரஜ் இல்லாம இருக்கே” எனக் கூறி அதை மின்னூட்டியில் பொருத்தினான்.

“சரி வா கொஞ்சம் நேரம் தூங்குவோம்! எட்டு மணிக்கு இங்கிருந்து கிளம்பினா போதும்! அது வரைக்கும் க்ளைமேட்டை என்ஜாய்ச் செய்வோம்” எனக் கூறியவாறே அவளைத் தன்னுடன் சேர்த்தணைக்க, அவனிலிருந்து தள்ளி கொண்டு வெளி வந்தவள் நாற்காலியில் சென்று அமர்ந்து கொண்டாள்.

புருவம் இடுங்க அவளின் செயலை கண்டவன், “என்னாச்சு ஹனி! உடம்பு எதுவும் சரியில்லையா?” அவளருகே மண்டியிட்டு அவளின் நெற்றியில் கை வைத்து பார்த்து அவன் கேட்க,

அவனின் ஸ்பரிசத்தில் அவளுக்கு உதடு துடித்துக் கண்கள் கலங்க ஆரம்பிக்க, அவனுள் சென்று அடைக்கலமாகிவிடு எனக் கட்டளையிடும் மனதை அடக்கி கொண்டு, அந்த நாற்காலியில் தனது கால்களைக் கட்டி கொண்டு முட்டியில் தலை வைத்து தனது அழுகையை அடக்கப் பாடுபட்டு கொண்டிருந்தாள்.

அவளின் செய்கையைப் புரியாத பாவனையில் பார்த்து கொண்டிருந்தவன், “என்னடா… என்னாச்சு?” என அவளின் கன்னத்தை அவன் வருட போக,

“ப்பா ப்ளீஸ்! நீங்க தொட்டீங்கனா நான் உருகி போய்டுவேன்! என்னால எதுவுமே தெளிவா யோசிக்க முடியாம உங்களுக்குள்ளயே இருந்துடலாம்னு மனசு அப்படியே சுகமா கிடந்துக்கும். எனக்கு யோசிக்கனும்! என் வாழ்க்கையைப் பத்தி யோசிக்கனும்! அடுத்து நான் என்ன முடிவு எடுக்கிறதுனு யோசிக்கனும்” என அவள் கண்ணில் நீர் வர தேம்பி கொண்டே கூற,

சற்றும் விளங்காத பாவனையில் அவளைப் பார்த்திருந்தவன் மூளை எதையோ சிந்திக்க, அடுத்த நொடி, “என்னைய சந்தேகப்படுறியா ஹனி?” எனக் கேட்டான்.

அவனுக்குத் தான் அவளின் கனவு பற்றித் தெரியாதே! ஆக அவள் நேற்று அவனை நிவேதாவுடன் பார்த்து கலங்கியதை வைத்துத் தன்னைச் சந்தேகித்துத் தான் இப்படிப் பேசுகிறாளென எண்ணி கொண்டான்.

இல்லை என மறுப்பாய் தலையசைத்தவள், “சந்தேகபட்டுட கூடாதுனு நினைக்கிறேன்!” என்றாள்.

“ம்ப்ச்” எனச் சலித்துக் கொண்டவன் எழுந்து நின்று அழுத்தமாய்த் தனது தலையைக் கோதியவன், “புரியுற மாதிரி பேசுறியா? இப்ப என்ன பிரச்சனை உனக்கு ஹனி? சொன்னா தானே தெரியும்?” அவன் கேட்க,

அவளிடமிருந்து அழுகை மட்டுமே பதிலாய் வர, அவள் அழுவதைக் காண பிடிக்காமல், மீண்டுமாய் அவளருகில் மண்டியிட்டமர்ந்து, அவளின் கன்னங்களைத் தன் கைகளில் தாங்கி பெரு விரலால் அவள் விழி நீரை துடைத்தவன், “என்னைத் திட்டனும்னு தோணுச்சுனா திட்டிடு! இல்ல சண்டை போடனும்னு தோணுச்சுனா சண்டை போட்டுடு! அந்த நிவேதா பத்தி எதுவும் நீ கற்பனை செஞ்சிக்கிட்டு கவலைபட்டுட்டு இருக்கேனா சொல்லு, அவ யாரு என்ன? எப்படி என் வாழ்க்கைகுள்ள வந்தா எல்லாத்தையும் நான் சொல்றேன்?” என அவள் முகம் நோக்கி அவன் கூற,

“என்னைய பவானிகிட்ட கொண்டு போய் விடுறீங்களா? நான் கொஞ்ச நாள் அவ கூட இருக்கேனே!” கண்கள் சுருக்கி கெஞ்சும் பாவனையில் அவள் கேட்க,

“அப்ப நீ என்னைய நம்பாம சந்தேகபடுற அப்படித் தானே ஹனி!” அவளின் மீது அழுத்தமாய்ப் பார்வை செலுத்தி கண்களில் வலியை தேக்கி அவன் கேட்க,

இல்லையென மீண்டுமாய்த் தலை அசைத்தவள், “கண்டிப்பா உங்களை விட்டு முழுசா பிரிஞ்சு போற முடிவை என்னால எடுக்க முடியாதுப்பா! இந்தக் கொஞ்ச நாள் பிரிவு சில விஷயங்களை நான் தெளிவுபடுத்திக்கிறதுக்காகத் தான்” எனச் சற்று திடமாய் அவள் கூற,

பெருமூச்செரிந்தவன், “என் நிலைமையை நினைச்சு பார்த்தியா? நீ இல்லாம நான் எப்படி இருப்பேன்னு நினைச்சு பார்த்தியா?” கோபத்தை அடக்கி அடிக்குரலில் சீறிக் கொண்டிருந்தான்.

“இல்ல நான் கொஞ்சம் நாள் தனியா இருக்கத் தான் போறேன்” அவள் அடமாய் இப்பொழுது கூற,

“எப்பவுமே அவசர முடிவு எடுக்கிறதையே கொள்கையா வச்சிருக்க நீ! எதையும் எப்பவுமே விசாரிச்சு தெளிவா முடிவு எடுப்போம்னு நினைக்கிறதே இல்லை! எடுத்தோம் கவுத்தோம்னு முடிவு எடுக்கிறது! என்னைய கல்யாணம் செஞ்சிக்கிறதுக்கும் பெரிசா யோசிக்கலை இப்ப என்னைப் பிரியறதுக்கும் பெரிசா யோசிக்கலை! அப்படித் தானே” என அவள் முகத்துக்கு நேராய் கோபமாய் நின்று கொண்டு அவன் கேட்க,

கனவின் தாக்கத்தினால் இத்தனை நேரமாய் அவள் மறந்திருந்த முந்தைய இரவின் டாட்டூவின் நினைவுகள் அவன் கையிலிருந்த டாட்டூவை கண்டதும் அவளுக்கு நினைவு வர,

“அப்படி நான் அவசர குடுக்கையா இருந்திருந்தா, இப்படி நான் உங்ககிட்ட பொறுமையா பேசிட்டு இருக்க மாட்டேங்க. அந்த நிவேதாவை பார்த்ததும் யார் அவனு கேட்டுச் சண்டை போட்டிருப்பேன்! நீங்க உங்க அண்ணன்கிட்ட டாட்டூவ போட்டுக்கச் சொல்லி மெசேஜ் அனுப்பியிருந்ததைப் பார்த்ததும், எப்படி நீங்க என் கிட்ட பொய் சொல்லலாம்? அப்ப இந்த நிநி நிவேதா நித்திலன் தானேனு கேட்டுச் சண்டை போட்டிருப்பேன்! அவளை லவ் பண்ணவங்க என்னை ஏன் லவ் பண்றேனு சொல்லி அவசர அவசரமா கல்யாணம் செஞ்சிக்கிட்டீங்கனு கேட்டிருப்பேன்” ஆவேசமாய்க் கத்தி பேசி கொண்டிருந்தவள்,

சற்றாய் மூச்சை இழுத்து விட்டு அமைதியாகியவள், “ஆனா உங்க கிட்ட சண்டை போட்டுட்டு என்னால நிம்மதியா இருக்க முடியாதுப்பா! எனக்கு இதுக்கான விடைலாம் தெரியாம இருந்தா கூடப் பிரச்சனை இல்ல. இதெல்லாம் உங்க பாஸ்ட்! இப்ப நீங்க என்கிட்ட காட்டுற உங்க அன்பு அது உண்மையானதா எனக்கானதா மட்டும் இருந்தா போதும்! உங்க கூடச் சந்தோஷமா நிம்மதியா வாழ்ந்தா போதும்னு தான் நான் உங்க பாஸ்ட் பத்தி எதுவும் இத்தனை நாளா தெரிஞ்சிக்க விரும்பலை! ஆனா இப்ப தெரிஞ்சிக்க நினைக்கிறேன். ஆனா உங்க வாய் சொல்லாய் தெரிஞ்சிக்க விரும்பலை” என்றாள்.

அவள் பேசுவதைக் கேட்டு சற்றாய் அதிர்ந்து கோபமாய் முறைத்துக் கொண்டு நின்றான் நித்திலன்.

“சோ என்கிட்ட எந்த விளக்கமும் கேட்க விரும்பலை நீ” அவன் குரலில் அடக்கப்பட்ட கோபம் தெரிந்தது.

“இல்லை நீங்க சொல்லி எது நான் தெரிஞ்சிக்கிட்டாலும் இப்ப நம்புற என் மனசு பிற்காலத்துல என்னிக்குனாலும் சந்தேகப்பட வாய்ப்பிருக்கு. அதனால உங்க வாய் மூலமா நான் எதுவும் தெரிஞ்சிக்க விரும்பலை! நானே தெரிஞ்சிக்கிறேன்” என்றுரைத்தவள் போய்ப் படுத்து கொண்டாள்.

அவளருகில் அவனும் படுத்து விட்டு விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தான். தன் மீதான நம்பிக்கையற்ற அவளின் வார்த்தைகள் அவன் மனதை வருத்தியது. அவன் சொல்லாமல் எவ்வாறு அவள் அவனின் முன் வாழ்க்கையைத் தெரிந்து கொள்வாள் எனப் புரியாது சிந்தித்துக் கொண்டிருந்தான்.

அவள் அவனுக்கு முதுகை காண்பித்து எதிர்புறமாய்ச் சுருண்டு படுத்திருக்க, ஒரு முடிவுக்கு வந்தவனாய், “சரி நான் உன்னைப் பவானிக்கிட்ட கொண்டு போய் விடுறேன்! ஆனா கொஞ்ச நாளைக்குத் தான். என்னால ரொம்ப நாள்லாம் உன்னைய பிரிஞ்சி இருக்க முடியாது” மிகுந்த வேதனையுடன் உரைத்தவன் அவளைத் தன் பக்கம் திருப்ப முனைய,

சற்றாய் கண்ணைத் துடைத்து அவன் பக்கம் திரும்பி, அவனைப் பார்த்தவாறு படுத்துக் கொள்ள, “பாரு ஹனி மேக்சிமம் ஒன் வீக் தான். அதுக்கு மேலலாம் கண்டிப்பா உன்னைய தனியா விட்டு வைக்க மாட்டேன். திரும்பி வந்துடுவ தானே” அவள் முகம் நோக்கி அவன் கேட்க,

ஆமென அவள் தலையசைத்தாலும், “காலம் தான் பதில் சொல்ல வேண்டும்” என மனதிற்குள் எண்ணி கொண்டாள்.

கவலையில் அவள் முகம் வெகுவாய்ச் சோர்வுற்றிருக்க, தன் கையை நீட்டி அவளை அருகே அழைக்க, அவள் வர மாட்டேனெனத் தலையசைக்க, அவள் கை பற்றி இழுத்து தன் அணைப்பிற்குள் வைத்துக் கொண்டான்.

முதலில் முரண்டியவள் பின் அவனின் அணைப்பினுள் பாந்தமாய் அடங்கி உறங்கி போனாள்.

அவன் அணைப்பிற்குள் அவளின் மனம் உணர்ந்ததெல்லாம் ஆசுவாசம் மட்டுமே! அவனருகே இருந்தாலே அவளால் வேறெதையும் சிந்திக்க இயலவில்லை என அவதானித்திருந்தாள். இந்தப் பிரிவு அவளுக்கு நல்முடிவை எடுக்க உதவுமென எண்ணினாள்.

இருவரும் இந்தப் பயணத்தில் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. வரும் போது இருந்த மகிழ்வை முற்றிலுமாய்த் தொலைத்து தான் சென்று கொண்டிருந்தனர் சென்னைக்கு.

பேருந்து செங்கல்பட்டை நெருங்கும் சமயம் மீண்டுமாய் அவளின் முடிவு என்ன என்பதை அவளிடம் கேட்டான். அவள் பவானியின் இல்லம் செல்வதில் உறுதியாய் இருந்தாள்.

பேருந்தில் வரும் வேளையிலேயே பவானிக்கு ஏற்கனவே நிவாசினி அனுப்பியிருந்த குறுஞ்செய்திகளனைத்தும் அவளின் கைபேசியை அடைந்திருந்தது. நிவாசினியின் கனவில் நிவேதா நித்திலனுக்கு ப்ரபோஸ் செய்த வரை மட்டும் தான் நிவாசினி பவானிக்குக் குறுஞ்செய்தியில் கூறியிருந்தாள்.

திருமணம் முடிந்து தேனிலவுக்கும் சென்று விட்டு வந்த பிறகு, தங்களுக்கெனத் தனி வீட்டை வாடகை எடுத்து அதில் குடிபுகுந்திருந்தனர் பவானியும் அபிநந்தனும்.

இரவு பத்தரை மணியளவில் பேருந்து சென்னை வந்தடைய, இரவோடு இரவாக அவளைப் பவானியின் இல்லத்துக்கு அழைத்துச் செல்ல மனமேயில்லை அவனுக்கு.

நேராய் அவனின் அண்ணன் வீட்டிற்கு அழைத்துச் சென்றவன், மறுநாள் காலை பவானியின் வீட்டிற்குச் சென்று அவளை விட்டு வந்தான்.

பவானிக்கு மனம் பதைத்துப் போனது. அன்று நள்ளிரவில் நிவாசினியின் கனவு குறுஞ்செய்தி எல்லாம் கண்டவளுக்குத் தவறானவனுக்கு அவளைக் கட்டி கொடுத்து விட்டோமோ என மனம் குற்றயுணர்விற்கு உள்ளானது. அபிநந்தன் தான் நித்திலன் அவ்வாறு இல்லையெனக் கூறித் தேற்றியிருந்தான். நிவாசினியின் கனவு பற்றி அனைத்தையும் அபிநந்தனிடம் உரைத்தாள் பவானி.

காலை நித்திலன் நிவாசினியை பவானியின் இல்லத்தில் விட்டு செல்ல, அன்று இருவரும் ஒன்றாகவே கிளம்பி அலுவலகத்திற்குச் சென்றனர்.

பவானியும் அபிநந்தனும் நிவாசினி அங்குத் தங்குவது குறித்து எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. கணவன் மனைவிக்குள் இருக்கும் ஊடல் சிறிது காலத்தில் சரியாகிவிடும் என நம்பினர்.

அலுவலகப் பேருந்தில் இருவரும் அருகருகே அமர்ந்தவாறு பயணித்திருக்க, “நித்திலன் அண்ணாவை விட்டு பிரிஞ்சு வர்ற அளவுக்கு அப்படி என்ன பிரச்சனைடி! கனவுல ஒரு பொண்ணு அண்ணனுக்கு ப்ரபோஸ் செஞ்சது பார்த்து சந்தேகபடுறியா? இல்ல அவர் உன் கூட இத்தனை நாள் பழகினதுல எதுவும் பொய்யா நடிக்கிற மாதிரி தெரிஞ்சிதா? அப்படி அவர் நடிச்சாருனா அதனால அவருக்கு என்ன லாபம்?” எனக் கேள்வி மேல் கேள்வியாய் கேட்டு பவானி அவளைக் குடைந்து கொண்டிருக்க,

“எனக்காக ஒரு ஹெல் பண்ண முடியுமா பவா?” எனக் கேட்டவள்,

“எனக்கு அந்தச் சைக்காட்ரிஸ்ட் டாக்டர்கிட்ட அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கித் தர்றியா?” எனக் கேட்க,

“என்னடி எதுவும் பெரிய பிரச்சனையா?” என ஆதுரமாய்க் கேட்டாள் பவானி.

“நான் அந்தப் பொண்ணை நேர்ல பார்த்தேன்! அந்தப் பொண்ணு பேர் நிவேதா! ஆனா இப்ப அது மட்டுமில்ல என் பிரச்சனை! அதுக்கப்புறம் நான் கண்ட கனவு தான் என் பிரச்சனை. அது எந்தளவுக்கு உண்மைனு நான் தெரிஞ்சிக்கனும். எனக்கும் நித்திலனுக்கும் ஏற்கனவே ஏதோ சம்பந்தம் இருக்கு. அவர் ப்ளான் செஞ்சி தான் என்னைக் கல்யாணம் செஞ்சிக்கிட்டாரானு தெரிஞ்சிக்கனும். அப்படி ப்ளான் செஞ்சி கல்யாணம் செஞ்சிருந்தா எதுக்காக இப்படிச் செஞ்சாருனு தெரிஞ்சிக்கனும்” எந்தவித அழுகையோ விசும்பலோ இன்றி வெறுமையான குரலில் நிவாசினி கூறிக் கொண்டே போக,

தைரியமான பெண்ணான பவானிக்கே அதிர்ச்சியில் மயக்கம் வருவது போல் இருந்தது.

“என்னடி சொல்ற! கேட்கிற எனக்கே அதிர்ச்சியில கண்ணைக் கட்டுது! நீ இப்படி எந்த ரியாக்ஷனும் இல்லாம சொல்லிட்டு இருக்க! எங்கிருந்துடி இவ்ளோ தைரியம் வந்துச்சு உனக்கு? அப்படி என்ன கனவு கண்டடி?” எனப் பவானி கேட்க,

“இந்தத் தைரியத்துக்குக் காரணம் நித்திலன் மேல உள்ள நம்பிக்கை தான்” என நிறுத்தி கொண்டாள் நிவாசினி.

“என்னடி உளர்ற! இவ்ளோ சந்தேகம் அவர் மேல இருக்குனு சொல்ற! அவர் மேல நம்பிக்கை இருக்குனும் சொல்ற” எனப் பவானி குழம்பி போய்க் கேட்க,

“இந்தச் சந்தேகத்துக்கெல்லாம் பாசிட்டிவ்வான பதில் தான் வரும்னு நித்திலன் மேல நம்பிக்கையோட இருக்கேனு சொல்றேன்” என்றாள் நிவாசினி.

திடமாய் இருப்பதாய் நிவாசினி வெளியில் காட்டி கொண்டாலும், அவளின் மனம் வேதனையில் துவண்டிருப்பதாய் தோன்றியது பவானிக்கு. நித்திலனின் பிரிவு அவளை வாட்டுவதை உணர்ந்தாள்.

“அய்யோ ஓவர் கான்ஃபிடென்ஸூம் ஆபத்து தான்டி!” மனம் படபடப்பாய் அடித்துக் கொண்டது பவானிக்கு.

“சரி நான் நாளைக்கு அவர் கிட்ட அப்பாய்ண்ட்மெண்ட் வாங்குறேன்” எனக் குழம்பியவாறே பவானி உரைக்கவும், பேருந்து அவர்களின் அலுவலகத்திற்குள் நுழையவும் சரியாக இருந்தது. அதன்பின் அலுவல் வேலைகள் அவர்கள் இருவரையும் உள்ளிழுத்துக் கொண்டது.

மதிய உணவு இடைவேளையில் மீண்டுமாய்ப் பவானி நிவாசினியிடம் அவள் கடைசியாய் கண்ட கனவினை பற்றி வினவ,

“எங்கப்பா அம்மா ஆக்சிடெண்டுக்கு நித்திலன் தான் காரணம்னு தாத்தா என்கிட்ட ஃபோன்ல சொல்றது போலக் கனவு கண்டேன்டி” என்றாள் நிவாசினி.