AO FINAL
Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அன்பு 16
டெல்லி செல்லும் விமானத்தில் ஏறி அமர்ந்த புனர்விக்கு நேற்றைய நிகழ்வுகள் இன்னும் இப்போது நடந்தது போல் இருக்க, அதை மனதில் ஓட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். ராகமயாவும் மயூ அத்தானும் காதலிக்கிறார்கள் என்பதை இப்போது நினைத்து பார்த்தாலும் அவளுக்கு வியப்பாக தான் தெரிந்தது.
இதுவரை பார்த்தவரைக்கும் இருவருக்குமிடையே அதற்கான பிரதிபலிப்பு இருந்ததில்லை, அதிலும் ராகமயா மனதிற்குள் மயூ அத்தான் மீது இத்தனை காதலை வைத்துக் கொண்டு அவளால் எப்படி அதை மறைத்து வைக்க முடிந்தது? என்ற கேள்வி பிறந்த போது,
“ஏன் நீ மட்டும் என்னவாம்? நவிரனை இப்படி தவிக்க விடுகிறாயே? உன்னை தேடி நாடு விட்டு நாடு வந்திருக்கும் அவன் மீது உனக்கு இரக்கமே இல்லையா? நீதான் மின்மினி என்பதை சொல்லிவிட வேண்டியது தானே? உன்னால் சொல்ல முடியவில்லையென்றாலும் தவமலர் சொல்வதாக சொல்கிறாளே, அவளாவது சொல்லட்டும் என்று விட்டுவிடேன். அதன்பிறகு நவிரன் என்ன முடிவெடுக்க நினைக்கிறானோ எடுக்கட்டுமே?” என்று தன் மனம் கேட்ட கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை. நேற்று தவமலர் பேசியதை நினைவு கூர்ந்தாள்.
தவமலர் யோகனிடம் பேசிய சிறிது நேரத்திலேயே சென்ற வேலை முடியவும் வீட்டுக்கு வந்த சாம்பவியிடம் மயூரனும் ராகமயாவும் காதலிக்கும் விஷயத்தை கூறிய புனர்வி, இதுவரை நடந்தவைகளை விவரிக்க, சில நிமிடங்களுக்கு சாம்பவி மௌனமாக இருந்தார். அவர் என்ன பதில் கூறுவார்? என்ற எதிர்பார்ப்போடு அனைவருமே காத்திருக்க,
“நிச்சயதார்த்தம் கல்யாணமெல்லாம் உங்களுக்கு விளையாட்டா போச்சா? டிராமா போட்றாங்களாம் டிராமா. அப்பவே உங்க மனசுல என்ன நினைக்கிறீங்களோ அதை வெளிப்படையா சொன்னா நாங்க புரிஞ்சிக்க மாட்டோமா?” என்று பொதுவாக கூறியவர்,
“மயூர், உன்னோட அண்ணன் காதல் கல்யாணம் தான் செஞ்சுக்கிட்டான். அது ஞாபகம் இருக்கா இல்லையா? நீ ராகாவை காதலிக்கிறேன்னு என்கிட்ட சொல்லியிருந்தா, நானே ராகாக்கிட்ட பேசி அவ மனசுல இருப்பதை தெரிஞ்சிருந்திருப்பேன். அவ குழம்பினாலும் புரிய வச்சுருப்பேன். அதை விட்டுட்டு இவ தான் சொல்லியிருக்கான்னா, நீயும் கூட சேர்ந்து டிராமா போட்டிருக்க,” என்று அவனை திட்டினார். பின்னர்,
“ஏன் ராகா, நான் உங்களுக்கு ஆதரவு கொடுத்ததால உன்னை என் மனசுல கீழ வச்சிருக்கேன்னு நினைக்கிறீயா? எனக்கு பூர்வி, புவி, தவா போல தான் நீயும், இன்னும் சொல்லப் போனா, உனக்குப்பிறகு தான் அவங்கல்லாம் எனக்கு, ரெண்டுப்பேரும் ஆம்பிளை பிள்ளைங்களா பிறந்திருக்க, உன்னை பார்த்ததுமே ஒரு பாசம் வந்துடுச்சு, நீ எனக்கு மருமகளா வருவதை நான் வேண்டாம்னா சொல்லியிருக்கப் போறேன்.” என்று குறைப்பட்டுக் கொண்டார்.
மயூரன், ராகமயா இரண்டுப்பேரும் அமைதியா இருக்க, “விடுங்க அத்தை, எல்லாத்துக்கும் நேரம் காலம் கூடி வர வேண்டாமா? இப்போ தான் அவங்க காதலை மத்தவங்களுக்கு சொல்ல துணிவு வந்திருக்கு, அதை நீங்க ஏத்துக்கோங்க அத்தை,” என்று புனர்வி கேட்க,
“நான் எப்போ ஏத்துக்க மாட்டேன்னு சொன்னேன். எனக்கு ராகா மருமகளா வருவதில் சம்மதம் தான், ஆனா உன்னோட அப்பா, அம்மாக்கு என்ன பதில் சொல்றதுன்னு தான் தெரியல, மத்தவங்க புரிஞ்சிக்கிட்டாலும், உன்னோட அம்மா புரிஞ்சிப்பாங்களா?
உன்னோட முகத்தில் இருக்கும் பாதிப்பை வச்சு தான் உன்னை நாங்க வேண்டாம்னு சொல்றதா தப்பா நினைச்சுக்கிட்டாங்கன்னா, இப்போ தான் சரியாகிட்டு வராங்க, இதில் திரும்ப இந்த விஷயத்தை கேட்டு அவங்களுக்கு திரும்ப பிரச்சனை வரப் போகுது.” என்று அவர் வருத்தத்தோடு கூறினார்.
“இவ்வளவு சீக்கிரம் குணமானதே இந்த பொய்யால தான் அத்தை, அம்மாவை பேசி நான் சரி செஞ்சுடுவேன். இப்போதைக்கு அவங்களுக்கு தெரிய வேண்டாம்,” என்று அவள் சொல்லவும்,
“நீ பொறுமையா சொல்லுவ, ஆனா நான் சொல்லாம எப்படி இருக்கிறது? இப்போ தான் புதுசா உறவை ஏற்படுத்தி கொள்வது என்றால் கூட பரவாயில்ல, ஆனா எங்களுக்குள்ள ஏற்கனவே சம்பந்தம் ஏற்பட்டுவிட்டது. அதில் விரிசல் விழுந்திடக் கூடாதில்லையா? உன்னோட அம்மாக்கு எப்போது தெரிய வந்தாலும், என் பெண்ணை ஒதுக்கிட்டாங்களே என்று நினைத்தால்?” என்று அவர் கேட்டார்.
அதற்கு தவமலரோ, “அத்தை, அதுக்குள்ள நம்ம புவியை புரிஞ்சிக்கிட்டு அவளை அப்படியே ஏத்துக் கொள்ளும் ஒருத்தர் கண்டிப்பா அவ வாழ்க்கையில் வருவாங்க, அப்படி ஒருத்தர் வந்தா புவி அம்மாவும் அதை பிரச்சனையில்லாம ஏத்துப்பாங்க அத்தை. அதனால நீங்க தேவையில்லாம குழம்பிக்காதீங்க,” என்று சொல்ல,
“அப்படி ஒரு விஷயம் நடந்தா எனக்கு ரொம்ப சந்தோஷம்.” என்று சாம்பவி கூறினார்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“கூடிய சீக்கிரம் நடக்கும் அத்தை,” என்று தவமலர் சொல்ல, இவள் எதை மனதில் வைத்து கூறுகிறாள்? என்று புரியாமல் புனர்வி குழம்ப,
அதில் தனக்கு ஒரு செய்தி இருப்பதாக நவிரனுக்கு தோன்றியது.
“சரி உங்க படிப்பு முதலில் முடியட்டும், அதுக்குள்ள உங்கம்மாக்கும் சரியாகலாம், எல்லாம் நல்லதாகவே நடக்கும்,” என்று சாம்பவி சொல்லவும்,
“அதை தான் நானும் சொல்றேன் அத்தை, ராகாவும் மயூ அத்தானும் ஒருவேளை காதலிச்சிருக்கலன்னா கூட எங்க கல்யாணம் நடந்திருக்காது. அம்மாவுக்கு எப்படியும் புரிய வச்சிட முடியும்னு நம்பிக்கை இருந்ததால் தான், இந்த டிராமா போட்டேன். நீங்க நினைக்கறது போல எதுவும் நடக்காது, கவலைப்படாதீங்க,” என்று ஆறுதல் கூறினாள்.
ராகமயா முகம் இன்னமும் தெளிவில்லாமல் இருக்க, அவளை தன்னருகே அமர்த்திய சாம்பவி, “நீதான் என்னோட மருமகள். இது மாறப் போறதில்ல, ஆனா திடீர்னு ஒரு மாற்றம் வரும்போது அதில் வரும் நன்மை தீமையை ஆராய்ச்சி செய்யணுமில்ல, உன்னால புரிஞ்சிக்க முடியுதுல்ல,” என்று அவர் கேட்க,
“என்ன அத்தை, உங்களை புரிஞ்சிக்காம எப்படி? ஒருவேளை முன்னமே மயூர்க்கிட்ட என்னோட மனசுல இருக்கறதை சொல்லியிருந்தா, இந்த குழப்பமெல்லாம் வராம இருந்திருக்குமில்ல, அதை நினைச்சு தான் வருத்தமா இருந்தது,” என்று அவள் பதில் கூறினாள்.
“பரவாயில்லை விடு, நீங்க 3 பேரும் இந்த விஷயத்தில் தெளிவா இருக்கீங்கல்ல, அப்புறம் என்ன? எல்லாம் நல்லதாகவே நடக்கும்,” என்றவர்,
“உன்னோட மாமாக்கிட்ட நாளைக்கே பேசிட்றேன். ராகா என் வீட்டு மருமகளா ஆகப் போறான்னு சொல்றேன்.” என்றதும் அவள் முகம் மகிழ்ச்சியை காட்டியது.
“சரி நம்ம ராகா, தவா கல்யாணம் முடிவானதால, உங்களுக்கெல்லாம் என் கையால ஸ்வீட் செய்யப் போறேன்.” என்று புனர்வி சொல்ல,
“அய்யோ யாரு அதை சாப்பிட்றது? நீ எங்களுக்கு ட்ரீட் கொடுக்கிறீயா? இல்லை தண்டனை கொடுக்கிறீயா?” என்று மயூரன் கேட்டான்.
“அத்தான் ஒழுங்கா ராகா கூட உங்களுக்கு கல்யாணம் ஆகணும்னா, நீங்க நான் செய்யும் ஸ்வீட்டை சாப்பிட்டு தான் ஆகணும் சொல்லிட்டேன்.” என்று போலியாக மிரட்டியவள்,
“ஹே தவா, நீ எனக்கு உதவி செய்ய வா,” என்று அவளை கூப்பிட்டாள்.
“நானும் வரேன்,” என்று ராகமயா எழுந்திருக்க,
“இல்ல நானும் தவாவும் போய் செய்றோம், நீ உன் மாமியார் கூட பேசிட்டு இரு.” என்று சொல்லிவிட்டு உள்ளே செல்லவும்,
“ஆஹா நமக்கு நல்லா டோஸ் இருக்கு போலயே?” என்று மனதில் நினைத்தப்படி தவமலரும் பின்னே சென்றாள்.
சமையலறைக்குள் நுழைந்ததுமே யாராவது பார்க்கிறார்களா? என்று வெளியில் எட்டிப்பார்த்துவிட்டு, “என்னடீ அத்தைக்கிட்ட ஏதோ உளரிக்கிட்டு இருக்க, நவிரன் பக்கத்தில் இருப்பது உனக்கு ஞாபகம் இல்லையா? ஏற்கனவே நான்தான் மின்மினியோன்னு அவங்களுக்கு சந்தேகம், இதில் அதை அதிகப்படுத்தறது போல பேசிக்கிட்டு இருக்க,” என்று புனர்வி தவமலரிடம் கேட்கவும்,
“இங்கப்பாரு புவி, முதலில் உனக்கு தான் கல்யாணம் நடக்கும்னு நானும் ராகாவும் சந்தோஷமா இருந்தோம், இப்போ என்னடான்னா எனக்கும் ராகாக்கும் கல்யாணம் முடிவாக போகுது, இந்த நேரம் உனக்குமே கல்யாணம் முடிவானா எப்படி இருக்கும்? நான் நவிரன்க்கிட்ட பேசவா?” என்று அவள் கேட்டாள்.
“ஒருவேளை நவிரன் என்னை வேண்டாம்னு சொல்லிட்டா என்ன செய்வ?”
“நவிரன் அப்படி சொல்லமாட்டாங்கன்னு தான் தோனுது, முதல்முறை உன்னோட முகத்தை பார்க்கவே தயங்கினாங்க, இப்போ இத்தனை நேரம் நம்மக்கூட தானே இருக்காங்க, அப்படி எதுவும் சொல்லமாட்டாங்க,”
“தள்ளி நின்னு பழகறதுக்கும், கல்யாணம் செய்து வாழறதுக்கும் வித்தியாசம் இருக்கு தவா, நவிரன் இப்போ என்னை தள்ளி நின்னு பார்க்கிறார். ஆனா என்னோட வாழணும்னா அவர் யோசிச்சா, என்னை வேண்டாம்னு சொல்லிட்டா?”
“அப்போ நீ வேற யாரையாவது கல்யாணம் செஞ்சுக்க,”
“லூசு மாதிரி பேசாத, அப்படில்லாம் என்னால வேற யாரையும் கல்யாணம் செய்துக்க முடியாது.”
“அப்போ நவிரனும் கடைசிவரை உன்னை தேடிக்கிட்டே தான் இருக்கணுமா?”
“நான் அப்படி நினைக்கல,”
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“ஆனா உன்னை கண்டுப்பிடிச்சு உன்னை கல்யாணம் செய்துக்க தான் நவிரன் நினைக்கிறாங்க, கண்டிப்பா உன்னைப்பத்தி தெரியாம அவங்க வேற யாரையும் கல்யாணம் செய்துக்க மாட்டாங்க, அதனால இந்த விஷயத்துக்கு சீக்கிரம் ஒரு முற்றுப்புள்ளி வை.
இப்படியே நீ உன்னை தெரியப்படுத்தாம ரொம்ப நாளுக்கு இருக்க முடியாது, மயூ அத்தான், ராகா கல்யாணம் முடிவானதும், உன் அம்மாக்கு நீ அதை புரிய வச்சாலும், உனக்கு நல்லப்படியா கல்யாணம் ஆகணும்னு அம்மா மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டே தான் இருப்பாங்க, திரும்ப உன்னோட கவலையால் அவங்க உடம்பு சரியில்லாம போச்சுன்னா என்ன செய்வ? அதனால நல்லா யோசிச்சு சீக்கிரம் முடிவெடு புவி.” என்றாள்.
புனர்வி யோசிக்க ஆரம்பிக்கவும், “சரி ஸ்வீட் செய்யணும்னு தான் வந்தோம், செய்யாம போனா எல்லாம் கேட்பாங்க, ஏதாவது செய்வோம் வா டீ,” என்று தவமலர் சொல்ல,
“ஹே நிஜமா ஸ்வீட் செய்ய தான் டீ வந்தேன். எனக்கு செய்ய தெரிஞ்சது கேசரி மட்டும் தான், வா செய்வோம்,” என்று வேலையை ஆரம்பிக்க,
“கேசரி, கேசரி மாதிரி வரணும்னு வேண்டிக்கிட்டு செய் புவி,” என்று கேலி செய்தபடி அவளும் உதவி செய்தாள்.
புனர்வி கொண்டு வந்து கொடுத்த கேசரியை சாப்பிட்ட மயூரன், “பரவாயில்ல புவி நல்லா தான் செய்திருக்க, இதை அப்படியே ராகாக்கும் சொல்லிக்கொடு, அவளும் கத்துக்கட்டும்,” என்றப்படியே சாப்பிட,
“ஹலோ அவளுக்கு கேசரி செய்யவே நான்தான் சொல்லிக் கொடுத்தேன்.” என்று ராகமயா கூறினாள்.
“ஓ அதான் இப்படி இருக்கா?” என்று கேட்டப்படி மயூரன் தொடர்ந்து சாப்பிட,
“அத்தை பாருங்க,” என்று ராகமயா சாம்பவியை துணைக்கு அழைக்க,
“கொஞ்ச நாளுக்குப் பிறகு அவ கையால் தான் சாப்பிடணும்னு ஞாபகத்தில் வச்சிக்க மயூர்.” என்று அவர் சொல்லவும்,
“மனைவி கையால் கணவன் சாப்பிடணும் என்கிற விதிமுறையை மாற்றி கணவன் கையால் மனைவி சாப்பிடட்டும்னு மாத்திடுவேன்.” என்று சாதாரணமாக சொல்லியப்படியே அவன் சாப்பிட, அங்கே சிரிப்பலை எழுந்தது.
“அத்தான், நான் நாளைக்கு டெல்லிக்கு போலாம்னு இருக்கேன். எனக்கு டிக்கெட்டிற்கு ஏற்பாடு செய்ங்க,” என்று புனர்வி கேட்க,
“ஹே முன்னமே சொல்லியிருந்தா, நானும் லீவ் போட்டுட்டு கூட வந்திருப்பேன் இல்ல, நீ தனியாவா போகப் போற,” என்று மயூரன் கேட்டான்.
“அம்மாக்கிட்ட 5 நாளாவது இருக்கேன்னு போன்ல சொல்லிட்டேன். ஆனா தனா சார்க்கு ஆக்ஸிடெண்ட் ஆனதால என்னால போகமுடியல, அதுவும் இந்தமுறை தவா, ராகாவை கூட்டிட்டு போலாம்னு பார்த்தேன். போட்ட ப்ளான் எதுவும் நடக்கல, இன்னும் 3 நாளில் காலேஜ் ஓபன் ஆகிடும், அதனால அம்மாவோட ஒரு ரெண்டு நாளாவது இருந்துட்டு வரலாம்னு இருக்கேன். அதனால எனக்கு டிக்கெட் போடுங்க, நான் தனியாகவே போயிட்டு வந்துட்றேன்.” என்று புனர்வி சொல்லவும், மயூரனும் சரியென்றான்.
அடுத்து மூவரும் மருத்துவமனைக்கு கிளம்பி செல்ல, அங்கு ஏற்கனவே யோகமித்ரன் மூலம் கௌசல்யாவிற்கும் தனசேகருக்கும் தவமலர் யோகமித்ரனை திருமணம் செய்ய ஒத்துக் கொண்டது தெரிந்து, தவமலருக்கு வாழ்த்து கூறினர். அதன்பின் கௌசல்யா தவமலரை கேலி செய்ய அப்படியே சிறிது நேரம் அங்கே பொழுதை கடத்தி, பின் வீட்டிற்கு வந்ததும் மயூரன் டிக்கெட் ஏற்பாடு செய்துவிட்டதை அலைபேசி மூலம் சொல்லவும், இரண்டு நாட்களுக்கு தேவையான துணிமணிகளை எடுத்து வைத்தவள், ராகமயாவோடு பேசியபடி உறங்கிப் போனாள்.
இப்போது தோழிகளோடு விமான நிலையம் வந்தவள், போர்டிங்கான அறிவிப்பு வரவும், அவர்களை புறப்பட சொல்லிவிட்டு, பின் அங்கே கடைப்பிடித்த சம்பிரதாயங்களை முடித்துக் கொண்டு வந்து விமானத்தில் அமர்ந்தாள்.
தவமலர் சொன்னது போல் எத்தனை நாட்களுக்கு மின்மினியாக வேடம் போடுவது. தனக்கு ஏற்பட்ட பாதிப்பை வைத்து திருமணம் செய்துக் கொள்ளாமல் தப்பித்து கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டு இருந்தாள். ஆனால் தனக்கு திருமணம் நடக்கவில்லையென்றால் அம்மா அமைதியாக இருக்க மாட்டார் என்று புரிந்தது. அடுத்து என்ன செய்வதென்று புரியவில்லை?
நவிரனை நினைத்தாலும் பாவமாக இருந்தது. நேற்று முழுவதும் நடந்தவைகளை பார்த்துக் கொண்டு ஒரு பார்வையாளனாக தான் இருந்தான். தவமலர், ராகமயாவிற்கு வாழ்த்து கூறினான். அதுபோல் நடுவில் தேவையென்றால் மட்டும் பேசினான். ஆனால் இவள் தான் மின்மினி என்று தெரிந்தும் மயூ அத்தானோடு இவளுக்கு திருமணம் நடக்கப் போகிறது என்பதால் தான் மௌனம் காத்தான். ஆனால் இப்போது அந்த திருமணம் நடக்கப்போவதில்லை என்று தெரிந்துவிட்டது. இதற்கு மேலும் மௌனமாக தான் இருப்பானா? என்ற சிந்தனையில் அவள் இருந்த போது, யாரோ அருகே வந்து அமர்ந்ததை உணர்ந்தவள் திரும்பி பார்க்க, மூடியிருந்த முகத்தில் அவள் கண்கள் மட்டும் அதிர்ச்சியை காட்டியது. ஏனென்றால் அவள் அருகே அமர்ந்திருந்தவன் நவிரன்.
என்ன மௌனமாக இருக்கிறானே என்று நினைத்தால் இப்போது அவன் விமானத்தில் ஏறியிருக்கும் நோக்கம் என்ன? என்பது அவளுக்கு தெரியவில்லை,
“நவிரன் நீங்க என்ன செய்றீங்க?” என்று அதிர்ச்சியோடு கேட்டாள்.
“அதுவா நானும் டெல்லிக்கு தான் வரேன், நான் முன்ன அங்க தானே மயூரனோடு வேலை செய்தேன். அங்க மயூரன் போலவே இன்னும் சில ஃப்ரண்ட்ஸ் இருக்காங்க, அவங்களை பார்க்கணும்னு மயூர்க்கிட்ட சொல்லியிருந்தேன். அவன் தான் புவி தனியா போறா, நீயும் கூட போன்னு என்கிட்ட சொன்னான். நம்ம ரெண்டுப்பேருக்கும் சேர்த்து தான் அவன் டிக்கெட் புக் செய்தான்.” என்று பதில் கூறினான்.
ஆனால் உண்மையிலேயே மயூரனிடம் அவன்தான் இதையெல்லாம் சொல்லி கிளம்பி வந்திருந்தான்.
“டேய் ஏன் டா எல்லாம் இப்படி திடீர்னு சொல்றீங்க? முன்னமே சொல்லியிருந்தா நானும் லீவ் போட்டுட்டு உன்னோட வந்திருப்பேன் இல்ல,” என்று மயூரன் கேட்டதற்கு,
“ஹே ராகா நேத்து தான் உன்னை காதலிக்கிறதா ஒத்துக்கிட்டு இருக்கா, நாளைக்கு புவியும் இருக்க போறதில்ல, தவா வீட்டுக்கு யோகமித்ரன் வரப் போறதா பேசிக்கிட்டாங்கல்ல, அதனால ராகா தனியா தான் இருப்பா, இந்த நேரம் அவக் கூட நேரத்தை செலவழிக்காம என்கூட வரானாம்,” என்றவன்,
“உன்னோட காதல் வெற்றியடைந்தால் போதுமா? என்னோட காதல் வெற்றியடைய வேண்டாமா?” என்று வாய்க்குள்ளேயே முனக,
“என்னடா சொல்ற, உன்னோட காதல் வெற்றியடையவும், நீ டெல்லிக்கு போறதுக்கும் என்னடா சம்பந்தம்?” என்று மயூரன் கேட்டான்.
“இருக்கு டா, நான் நினைச்சு போறது நடந்துட்டா, அப்புறம் உனக்கு எல்லாம் விளக்கமாக சொல்றேன்.” என்று சொல்லிவிட்டு வந்திருந்தான்.
அதை அவன் நினைத்துப் பார்க்க, “அப்போ நீங்களும் டெல்லிக்கு வரப் போறீங்களா?” என்று இன்னும் அவள் சந்தேகத்தோடு கேட்க,
“இவ்வளவு நேரம் அதைத்தானே சொல்லிட்டு இருந்தேன். ஏன் நான் வருவதில் உனக்கேதும் பிரச்சனையா?” என்று அவன் கேட்டான்.
“நீங்க வருவதில் எனக்கென்ன பிரச்சனை? ஆனா ஏன் அத்தான் இதை என்கிட்ட சொல்லல,”
“எனக்கும் சேர்த்து டிக்கெட் புக் செய்ததை புனர்விக்கிட்ட சொல்ல வேண்டாம்,” என்று இவன்தான் சொல்லியிருந்தான். ஆனால் தெரியாதது போல்,
“அப்படியா? மயூர் உன்கிட்ட சொல்லியிருப்பான்னு நான் நினைச்சிருந்தேன்.” என்று கேட்டான்.
அவளுக்கோ, அவன் எதற்கு வருகிறான்? அவன் மனதில் என்ன நினைக்கிறான்? என்று ஒன்றும் புரியவில்லை, அவனுடனான பயணம் எப்படி இருக்கப் போகிறதோ? என்னவெல்லாம் இன்னும் உளரி வைக்கப் போகிறேனோ?” என்று மனதில் வேறு அவளுக்கு பயம் சூழ்ந்தது.
அடுத்து விமானம் கிளம்பி அது உயர பறக்க ஆரம்பித்ததும், மேகக் கூட்டங்களை வெறித்து பார்த்தப்படி அவள் இருக்க, “மின்மினி பத்தி தவா உன்கிட்ட பேசினாளா?” என்ற அவனது கேள்வியில் அதிர்ந்து திரும்பியவள்,
“என்ன கேட்டீங்க? என்னோட காதில் சரியா விழல,” என்று சொல்ல,
“மின்மினி பற்றி தவா உன்கிட்ட பேசினாளா? கண்டிப்பா பேசியிருப்பா, அப்படி தான் என்கிட்ட சொன்னா, அதை நேராகவே உன்கிட்ட கேட்க நினைச்சேன். ஆனா கொஞ்சம் சங்கடமா இருந்தது. எனக்கு மின்மினி யாரா இருக்கும்னு ஒரு சந்தேகம், அதை நான் தவாக்கிட்ட சொன்னேன். அதான் அதை உன்கிட்ட பேசினாளான்னு கேட்டேன்.” என்றான்.
அதற்கு இல்லையென்று மறுக்க முடியாது என்பதால், “ம்ம் சொன்னா, நான்தான் மின்மினியா இருப்பேன்னு உங்களுக்கு சந்தேகமாமே? இது உங்களுக்கு தேவையில்லாத சந்தேகம்,” என்று சொல்ல,
“ம்ம் இதை தவா உன்கிட்ட சொன்னப்பவே என்கிட்ட சொல்லி என்னோட குழப்பத்தை தெளிய வச்சிருக்கலாமே? ஏன் என்கிட்ட இதைப்பத்தி நீ நேரடியா கேட்கல?” என்றுக் கேட்டான்.
“நீங்க கூட தான், நான்தான் மின்மினியான்னு என்கிட்ட வந்து நேரடியா கேட்கல, அப்புறம் எப்படி உங்கக்கிட்ட வந்து அதைப்பத்தி பேச சொல்றீங்க?” என்ற அவள் கேள்விக்கு,
“சரி இப்போ நேரடியாகவே கேட்கிறேன். நீதானே மின்மினி. நீதானே எனக்கு மெசேஜ் செய்து பேசினது. உன்கிட்ட தானே நான் என்னோட காதலை சொன்னேன். நான் சொல்றது உண்மை தானே புவி.” என்று அவன் கேட்கவும், இப்படி நேரடியாக கேட்பான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. தானே வாய் கொடுத்து மாட்டிக் கொண்டதை நினைத்து தன்னை மனதில் திட்டிக் கொண்டவள்,
“இது உங்க கற்பனை, இப்படி நினைச்சுக்கிட்டு உண்மையான மின்மினியை கண்டுப்பிடிக்காம விட்டுட போறீங்க?” என்று அவனிடம் சொல்ல,
“எனக்கு 90% நீதான் என்னோட மின்மினின்னு தோனுது. இது வெறும் வார்த்தையால் சொல்றதில்ல, என்னோட உள் மனசுக்கு தோன்றியதை சொல்றேன். உன் பக்கத்தில் இருக்கும் போதெல்லாம் எனக்கு மின்மினியோட பேசிட்டு இருப்பேனே அந்த ஃபீல் வருது.” என்றான்.
“இதுக்கு நான் என்ன சொல்றது? நான் மின்மினி இல்லன்னா இல்லை தான், உங்களுக்கு என்கூட பேசறது மின்மினி கூட பேசறது போல இருந்தா, அதுக்காக நான் மின்மினி ஆக முடியாது. புரிஞ்சுக்கோங்க,”
“அப்போ ஏர்ப்போர்ட்ல நான்தான் நவிரன்னு எப்படி கரெக்டா கண்டுப்பிடிச்சு வந்த?”
“அது அத்தான் சொன்னாங்க,”
“அவன் என்னைப்பத்தி உன்கிட்ட எந்த தகவலும் சொல்லல, அவனே என்கிட்ட சொன்னான்.”
“இப்போ சொல்லலைன்னா என்ன? முன்ன ஒருமுறை சொல்லியிருக்காங்க, அவங்களுக்கு அது ஞாபகத்தில் இல்ல போல, அதோட அக்கா கல்யாணத்துக்கு நீங்களும் வந்தீங்க, எனக்கு உங்க முகம் ஞாபகத்தில் இருந்தது. அதை வச்சு தான் உங்களை கண்டுப்பிடிச்சேன். போதுமா?
அப்புறம் உங்களுக்கு பிடிச்ச சாப்பாடை எப்படி சரியா ஆர்டர் செய்தேன். நீங்க வீட்டுக்கு வரும்போது சரியா உங்களுக்கு பிடிச்ச மெனுவா செய்ய சொன்னேன். இப்படி சில்லியா சில கேள்விகளை நீங்க தவாக்கிட்ட கேட்டுருக்கீங்க? ஆனா உங்களுக்கு பிடிச்சதா சொல்ற சாப்பாடெல்லாம் தமிழ்நாட்டில் நிறைய பேருக்கு பிடிச்ச சாப்பாடு. அதனால அதை வச்சுல்லாம் நான்தான் மின்மினின்னு நீங்க சொல்றதை நினைச்சா எனக்கு சிரிப்பு தான் வருது.
அப்புறம் சாம்பவி அத்தையோடு இருப்பதால் நாங்க 3 பேரும் ஹெச்ஐவி நோயாளிகளை பத்தி தெரிஞ்சு வச்சிருக்கோம், அதுக்காக அந்த பரிசா வந்த பணத்தை நாங்க மட்டும் தான் அந்த இல்லத்திற்கு கொடுப்போம்னு இல்ல, அதைப்பத்தி தெரிஞ்சவங்க யார் வேணும்னாலும் கொடுக்கலாம், ஏன் அன்னைக்கு இல்லத்துக்கு வந்து பார்த்துட்டு யோகன் கொடுக்கல, நீங்க கொடுக்கிறதா சொல்லல? அப்படி இன்னும் எத்தனையோ பேர் அந்த இல்லத்துக்கு உதவி செஞ்சுட்டு தான் இருக்காங்க, அப்படியிருக்க அந்த இல்லத்துக்கு உதவி செய்தாலே, ராகா, தவா ரெண்டுப்பேரும் இல்லன்னா நானா தான் இருப்பேன்னு நீங்க முடிவு செஞ்சுட்டீங்க போல,” என்று அவள் சொல்ல,
“இதெல்லாம் ஓகே தான், ஆனா எனக்கு ஆக்ஸிடெண்ட், ரத்தம் இதையெல்லாம் பார்த்தால் அலர்ஜினு உனக்கு எப்படி தெரியும்? இதையெல்லாம் மயூர் கண்டிப்பா சொல்லியிருக்க மாட்டான். அப்படி அவனுக்கு பழக்கமுமில்ல, அப்படியிருக்க, என்னை அப்படியே தெரிஞ்சது போல சொல்ற, எப்படி? என்று அவன் கேட்டான்.
உண்மையிலேயே அவள் மாட்டிக் கொண்ட இடம் அதுதான் என்பது அவளுக்கும் தெரிந்தது தானே, “அது வந்து நீங்க காரை விட்டு இறங்க ரொம்ப தயங்கவும், எனக்கு அப்படி தோனியது,” என்று அவள் சொல்ல, அவன் புன்னகைத்தான்.
மனசுக்கு தோன்றி கேட்பதுக்கும், அப்படியே தெரிஞ்சது போல பேசுவதற்கும் இருக்கும் வித்தியாசம் கூட எனக்கு புரியாதா?” என்று அவன் சொல்ல,
“நான் மின்மினி இல்லன்னு நானே சொல்றேன். அப்புறம் திரும்ப அதையே கேட்டால் என்ன அர்த்தம்?’” என்று அவள் கோபப்பட்டாள்.
“சாரி. இனி நீதான் மின்மினியான்னு கேட்டு தொந்தரவு செய்ய மாட்டேன். மன்னிச்சிக்கோ,” என்று சொல்லியவன், அடுத்து அவர்கள் டெல்லி வந்து சேரும்வரையிலும் அவளிடம் எதுவும் பேசவில்லை.
இருவருமே முதுகில் மாட்டியிருக்கும் ஒரே பை மட்டும் கொண்டு வந்ததால், விமானத்திலிருந்து இறங்கி நேராக வெளியில் வர, “ஆமா டெல்லில நீங்க எங்க போகணும்?” என்று புனர்வியே பேச்சை ஆரம்பித்தாள்.
“உங்க வீட்டுக்கு தான்,” என்று பதில் கூறியவன்,
“ஆமாம் மதன் அண்ணா உங்க வீட்ல தானே இருக்கார்.?” என்று கேட்டான்.
“ம்ம் ஆமாம், அம்மாக்கு உடம்பு சரியில்லாம ஆனதில் இருந்து அத்தானும் அக்காவும் இங்க எங்க வீட்டுக்கே வந்துட்டாங்க,” என்று அவள் பதில் கூறவும்,
“மயூர் தான் உங்க வீட்டில் தங்கிக்க சொன்னான். உனக்கு இதில் ஒன்னும் பிரச்சனையில்லையே?” என்று அவன் கேட்டதற்கு,
“எனக்கென்ன பிரச்சனை, ஒன்னுமில்ல,” என்றாள். பின் இருவரும் ஒரு டாக்ஸி பிடித்து அவளது வீட்டை அடைந்தனர்.
அழைப்பு மணி அடித்துவிட்டு காத்திருக்க, புனர்வியின் சகோதரி பூர்வி தான் வந்து கதவைத் திறந்தாள். புனர்வியை கண்டதும், ” ஹே அங்க இருந்து கிளம்பறதுக்கு முன்ன போன் செய்ய மாட்டீயா? கொஞ்ச நேரத்துக்கு முன்ன மதன் அத்தைக்கிட்ட பேசும்போது தான் அவங்க விஷயத்தை சொன்னாங்க,” என்றவள் புனர்விக்கு அருகில் இருப்பவனை யாரென்று கேள்வியோடு பார்க்க,
“சர்ஃப்ரைஸா இருக்கட்டும்னு தான் சொல்லல க்கா,” என்றவள்,
“வாங்க நவிரன்,” என்று அவனை வீட்டுக்குள் அழைத்து வர,
“யாருடீ இவர்?” என்று பூர்வி அவனுக்கு கேட்காதபடி புனர்வியிடம் வாயசைவில் கேட்க,
“ஹே நவிர், வா வா.” என்று சொல்லியப்படி மதன் அங்கு வந்தான்.
“இவங்க யாருன்னு உங்களுக்கு தெரியுமா மதன்?” என்று பூர்வி அவனிடம் கேட்க,
“நம்ம மயூரோட ஃப்ரண்ட், இங்க டெல்லியில் மயூரோட வேலைப் பார்த்தான், அப்புறம் கலிஃபோர்னியாக்கு போயிட்டான். இப்போ திரும்ப சென்னைக்கு வந்திருக்கான். மயூரோட தான் தங்கியிருக்கான். நம்ம கல்யாணத்துக்கு கூட வந்தானே? உனக்கு அடையாளம் தெரியல?” என்று மதன் கூற,
“சாரி நிஜமா அடையாளம் தெரியல, ஆனா மயூர் கொஞ்ச நாளுக்கு முன்ன தான் உங்களைப்பத்தி சொன்னான். ஆனா பேர் ஞாபகத்துக்கு வரல சாரி.” என்று அவனிடம் மன்னிப்பு கேட்டாள்.
“அய்யோ எதுக்கு அண்ணி மன்னிப்பெல்லாம், கல்யாணத்தில் உங்களுக்கு அண்ணனும் மயூரும் நிறைய பேரை அறிமுகம் செய்து வச்சிருப்பாங்க, எல்லாரையும் ஞாபகம் வச்சிருக்க முடியுமா?” என்று நவிரன் சொல்ல,
“நவிர், நீ கலிஃபோர்னியாவிலேயே செட்டில் ஆகிடுவன்னு பார்த்தேன். திடீர்னு சென்னைக்கு வந்துட்ட, ஏன் என்னாச்சு?” என்று மதன் கேட்டான்.
” அங்ககேயே செட்டில் ஆகும் எண்ணமெல்லாம் இல்லன்னா, என்னத்தான் அங்க அதிக சம்பளம் கொடுத்தாலும், வேலைக்கு போய் வீட்டுக்கு திரும்பினா, அங்க யாருமே இல்லாம நானா சமைச்சு, நானே சாப்பிட்டு, பேசிக்க கூட ஆள் இல்லாம தூங்கி எழுந்து திரும்ப மறுநாளும் அதுவே தொடருது. அந்த வாழ்க்கை எனக்கு பிடிக்கல,
அதுவும் என்னோட துணையா வரப் போற உறவுன்னு நினைச்ச ஒருத்தர், என்னை விட்டு விலக முடிவெடுத்துட்டாங்க, அதுக்கு முன்னவரைக்கும் நான் வாழும் வாழ்க்கை நல்லா இருந்தது போல தான் இருந்தது. அதுக்குப்பிறகு தான் நான் ரொம்பவே தனிமையை உணர ஆரம்பிச்சேன். அதான் அங்க இருக்க பிடிக்காம வந்துட்டேன்.” என்ற நவிரனின் பதிலைக் கேட்டு,
“என்ன நவிர், ஏதாச்சும் காதல் தோல்வியா?” என்று மதன் கேட்க,
“அது தோல்வியில் முடிஞ்சிடக் கூடாதுன்னு தான் நினைக்கிறேன்.” என்றவன், புனர்வியை ஒருமுறை திரும்பி பார்த்தான்.
அதை கவனிக்காதவள் போல், “அத்தான் நான் வந்ததை நீங்க கவனிச்சீங்களா? இல்லையா? என்னை விட்டுட்டு நவிரன் கூடவே பேசிட்டு இருக்கீங்க?” என்று புனர்வி மதனை கேட்க,
“நவிரனை ரொம்ப நாள் கழிச்சு பார்க்கவும், விசாரிச்சேன். சரி நீ எக்ஸாம்ஸ்ல்லாம் எப்படி எழுதின?” என்றுக் கேட்க,
“நல்லா எழுதினேன் அத்தான்,” என்று அவள் பதில் கூறினாள்.
இவர்கள் பேசிக் கொண்டிருப்பதற்குள், இருவருக்கும் பருக ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த குளிர்ப்பானத்தை பூர்வி கொடுக்கவும் இருவரும் அதை வாங்கி பருகினார்கள்.
“அம்மா எங்க அக்கா?” என்று புனர்வி கேட்க,
“மேல அவங்க ரூம்ல தூங்கறாங்க, உன்மேல ரொம்ப கோபமா இருக்காங்க,” என்று பூர்வி கூறினாள்.
“சரி நான் பார்த்துட்டு வரேன்,” என்று அவள் எழுந்து போக முயற்சிக்க, அவளின் கைப்பிடித்து நிறுத்திய பூர்வி,
“கொஞ்ச நேரத்தில் அவங்களே எழுந்து வருவாங்க, அதுக்கு முன்ன தான் இதை பேச முடியும், மயூர், ராகா விஷயம் பத்தி அத்தை சொன்னாங்க, இதெல்லாம் என்ன புவி, உனக்கும் மயூர்க்கும் கல்யாணம் நடக்கப் போகுதுன்னு எவ்வளவு சந்தோஷமா இருந்தோம், ஆனா அது டிராமான்னு சொல்லி எங்க சந்தோஷத்தை ரெண்டுப்பேரும் உடைச்சிட்டீங்க,
மயூர் ராகாவை காதலிக்கிறான்னு சொல்லவே அமைதியா இருந்துட்டேன். இதுவே மயூர் காதலிப்பது வேற ஒரு பெண்ணாக இருக்கட்டும், அத்தைக்கிட்ட நானே சண்டைக்கு போவேன்.” என்று சொல்ல,
“என்னக்கா இது, ராகாவோ வேற ஒரு பெண்ணோ, மயூர் அத்தான் வாழ்க்கையில் யாரும் இல்லன்னா கூட என்னால கல்யாணம் செய்துக்க முடியாது. அதுதான் உண்மை. அம்மாக்கு தான் புரிஞ்சிக்க கஷ்டம்னா உனக்கு கூடவா?” என்றுக் கேட்டவள்,
“அத்தான். உங்க அம்மா கூட சண்டை போடுவேன்னு உங்க பொண்டாட்டி சொல்றாங்க, அமைதியா கேட்டுட்டு இருக்கீங்க,” என்று கேட்க,
“இந்த கல்யாண விஷயமா முதலில் பேச்சை ஆரம்பித்ததே நான்தான், அப்போக் கூட நம்ம சொல்றதால உங்க தம்பி அந்த பேச்சை மீற முடியாம கட்டாயத்தின் பேரில் ஒத்துக்கிட்டா என்ன செய்றது? அதனால வேண்டாம்னு உன்னோட அக்கா சொன்னா,
எனக்கு என் தம்பியை பத்தி தெரிஞ்சதால தான் அவன்கிட்ட பேசினேன். அவன் இப்படி ராகாவை காதலிச்சிருப்பான்னு எனக்கு தெரியாது. ஆனா இந்த டிராமாக்கு மூலக் காரணம் நீதான்னு தெரிஞ்சதால தான் பேசாம இருக்கேன். இல்ல நானே அம்மா, மயூரன்க்கிட்ட சண்டைக்கு போயிருப்பேன்.” என்று கூற,
“அப்பப்பா, உங்க பாசத்தில் புல்லரிக்குது.” என்று புனர்வி அவர்கள் இருவரையும் கேலி செய்தாள்.
அதற்குள் அவள் அன்னை உறக்கத்திலிருந்து எழுந்து வரவும், புனர்வியை பார்த்தவர், பார்க்காதது போல் கீழிருக்கும் வேறொரு அறைக்குச் செல்ல, “உன் மேல கோபமாம் அதான்,” என்று பூர்வி கூறினாள்.
“ஓ கோபமா இருந்தா உங்கம்மா இப்படி தான் செய்வாங்களா?” என்று நவிரன் சுவாரசியத்தோடு கேட்க,
“அம்மாக்கு தலையில் அடிப்பட்டு மனநிலை பாதிக்கப்பட்டதில் இருந்து தான் இப்படி, சில சமயம் தெளிவா பேசுவாங்க, சில சமயம் குழந்தை போல நடந்துக்குவாங்க, இப்போ ஓரளவிற்கு குணமானாலும் சில சமயம் இப்படித்தான், அதிலும் நான் அவங்களுக்கு செல்லப் பெண், அதான் நான் அவங்களை பார்க்க வரலைங்கிற கோபம்,
ஆனா இதே அம்மா ஆரம்பத்தில் என்னோட முகத்தை பார்த்துட்டு, நான் அவங்க மகளே இல்லை, பொய் சொல்றோம்னு ஒரே ஆர்ப்பாட்டம், குழந்தைகளோட குறையை அப்படியே ஏத்துக்கிறவங்க தான் அம்மா, ஆனா அவங்களே என்னை ஒதுக்கின போது மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. இதுக்கும் அவங்களுக்கு உடம்பு சரியில்ல அதான் அப்படி நடந்துக்கிறாங்கன்னு தெரியும், ஆனாலும் அம்மாக்கே பிடிக்காத என்னை மத்தவங்க பார்த்தா எப்படி நடந்துப்பாங்கன்னு தான் ரூம்க்குள்ளேயே அடைஞ்சு கிடைப்பேன்.” என்று நவிரனிடம் மனம் திறந்து புனர்வி சொல்லிக் கொண்டிருக்க, பூர்வி அதை அதிசயமாக பார்த்தாள்.
“சரி போய் அவங்களை சமாதானப்படுத்து,” என்று மதன் சொல்லியனுப்ப, அவளும் எழுந்து சென்றாள்.
“புவியை உங்களுக்கு முன்னமே தெரியுமா?” என்று பூர்வி கேட்க,
“இல்ல இங்க இந்தியா வந்தப்பிறகு தான் தெரியும், ஏன் கேட்கிறீங்க?” என்று பதில் கேள்வி கேட்டான்.
“அது அவளுக்கு இப்படி ஆனதில் இருந்து நிறைய பேரோட பேசவே மாட்டா, எங்கக் கூடவே திரும்ப இப்ப சகஜமா பேச ஆரம்பிச்சதே கடந்த 2 வருஷமா தான், தவா, ராகா கூட தான் அவ ரொம்ப நெருக்கம், ஆனா அவங்கக்கிட்ட கூட தன்னோட வருத்தத்தை பகிர்ந்துக்க மாட்டா, அப்படியிருக்கும் போது உங்கக்கிட்ட இவ்வளவு பேசறாளே? அதான் எனக்கே எப்படின்னு ஆச்சர்யமாகிடுச்சு,” என்று பூர்வி சொல்லவும்,
“அப்படியா சொல்றீங்க, எனக்கு அப்படி தோனல, எப்போதும் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்கிறது போலத்தான் பேசுவா, இப்போ ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு இருக்கா போல, அதான் அப்படி,” என்றான்.
“ம்ம் அப்படில்லாம் எல்லோரிடமும் உணர்ச்சிவசப்பட்ற ஆள் இல்ல அவ, உங்கக்கூட பேசினது ஆச்சர்யமாக தான் இருக்கு, சரி போய் ஃப்ரஷ் ஆகிட்டு வாங்க சாப்பிடலாம்,” என்று அவனுக்கு விருந்தினர் அறையை காட்டினாள்.
அவன் குளித்துவிட்டு டீ சர்ட்டும் முக்கால் பேன்ட்டும் அணிந்துக் கொண்டு வெளியே வர, “அம்மா அதுக்கு தான் சொல்றேன், நான் படிச்சு முடிச்சு வேலைக்கு போக ஆரம்பிச்சதும் நீங்க என்னோடவே வந்து இருந்துடுங்க, அப்பா இங்கேயே இருக்கட்டும், அப்போ உங்க கூடவே நான் இருப்பேன் இல்ல,” என்று வரவேற்பறையில் அமர்ந்து புனர்வி இன்னும் தன் அன்னையை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள்.
இவன் அவர்களை பார்த்து ரசித்தப்படி வர, புனர்வியின் அன்னை அவளை யாரென்று கேள்வியோடு பார்த்தார். அவர் பார்வை போன திசையை பார்த்து நவிரனை கவனித்தவள்,
“அம்மா, இவங்க நவிரன். நம்ம மயூ அத்தானோட ஃப்ரண்ட்,” என்று அவனை அறிமுகப்படுத்தினாள்.
அவன், “வணக்கம் ம்மா,” என்று சொல்லவும் அவர் அவனை பார்த்து புன்னகைத்தார்.
“சாப்பிட்டீயா ப்பா,” என்று அவர் கேட்க,
“இல்லம்மா இனிமே தான்,” என்று அவன் பதில் கூற,
“சரிப்பா சாப்பிடு,” என்றவர்,
“புவி நான் ரூம்க்கு போறேன், நீயும் சாப்பிடு.” என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றார்.
பின் இருவரும் சாப்பிட்டதும், “நான் அம்மாவோட இருக்கேன் க்கா, அப்பா வந்ததும் கூப்பிடு.” என்று சொல்லிவிட்டு சென்றாள்.
நவிரன் அவர்களோடு வரவேற்பறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, சுற்றி வரவேற்பறையில் இருந்த புகைப்படங்களை பார்த்தான். எந்த புகைப்படத்திலும் புனர்வி இல்லை. அதை கவனித்தவன்,
“ஆமாம் எதிலும் புவி போட்டோ இல்லையே?” என்றுக் கேட்டான்.
“அதுவா அவளுக்கு அந்த இன்சிடெண்ட் நடந்தப்போ அவளோட பழைய போட்டோல்லாம் பார்த்தா அவளுக்கு வருத்தமா இருக்கும்னு கழட்டிட்டோம், அப்போ இதெல்லாம் கூட கழட்டி தான் வச்சிருந்தோம், அப்புறம் புவி தான் இதெல்லாம் மாட்டினா, ஆனா அவளோடத மட்டும் மாட்டல, எடுத்து அவ ரூம்ல தான் வச்சிருக்கா,” என்று பூர்வி பதில் கூறினாள்.
பிறகு அவனுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்று நன்றாக உறங்கி எழுந்திருக்கும் போது இருள் சூழ்ந்திருந்தது.
வெளியில் வந்தால் புனர்வியின் தந்தை வந்திருந்தார். மற்றவரை அவனுக்கு சரியாக ஞாபகம் இல்லையென்றாலும் புனர்வியின் தந்தையை நன்றாக தெரியும், அவர் வேலையில் அவர் நேர்மையே அவரை பிரபலமாக வைத்திருந்தது. மனைவிக்கும் மகளுக்கும் இப்படி ஒரு பிரச்சனை வந்தும் அதில் துவண்டு போகாமல் தன் பணியை தொடர்ந்து செய்துக் கொண்டிருக்கும் அவரின் மேல் இப்போது தனி மரியாதையே வந்தது.
இவனை பார்த்தவர் சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு அவசரமாக இரவு உணவை முடித்துக் கொண்டு முக்கிய வேலை இருப்பதாக சொல்லிவிட்டு மீண்டும் கடமை அழைக்க கிளம்பிவிட்டார்.
புனர்வியின் அன்னையும் உறங்கிவிட்டார். புனர்வி, மதன், பூர்வியோடு இரவு உணவை பேசியப்படியே முடித்தவன், அனைவரும் உறங்கச் சென்றதும், மாலை உறங்கிவிட்டதால், உறக்கம் வராமல் தவித்தவன், மொட்டை மாடிக்குச் சென்று சிறிது நேரம் நடந்தவன், புனர்வியை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தான்.
அவள் தான் மின்மினி என்று நன்றாகவே தெரிந்துவிட்டது. ஆனால் அவளாக அதை ஒத்துக் கொள்ள வேண்டும், இருந்தும் அவள் அதை ஒத்துக் கொள்ள மறுக்கிறாள். காரணம் அவளின் பாதிப்பை குறித்து தான் இருக்கும், அவனது பிரச்சனையை தான் வெளிப்படையாகவே சொல்லியிருந்தானே, அதனால் தான் தன்னை விட்டு அவள் விலக நினைக்கிறாள் என்பது புரிந்தது.
அவள் தான் மின்மினி என்று நூறு சதவீதம் தெளிவானால் தான் இதுகுறித்து பேச முடியும்? ஆனால் அது எப்போது நடக்கும்? அவள் தான் மின்மினி என்று அவள் வாயாலேயே சொல்ல வேண்டுமே சொல்வாளா? என்று மனதிற்குள் கேட்டப்படி அவள் நடந்துக் கொண்டிருக்க,
“என்ன இன்னும் தூங்கலையா?” என்று கேட்டப்படி அங்கு புனர்வி வந்தாள்.
“தூக்கம் வரல, ஆமாம் நீ தூங்கலையா? என்று அவன் பதிலுக்கு கேட்க,
“இல்லை தூக்கம் வரல,” என்று சொல்லியவள்,
“இந்தாங்க, இதை பிடிங்க,” என்று ஒரு அட்டைப் பெட்டியை கொண்டு வந்து காண்பித்தாள்.
அவன் கேள்வியாக பார்க்க, ” என்னோட போட்டோல்லாம் பார்க்கணும்னு சொன்னீங்களாமே, இதில் இருக்கு பாருங்க,” என்று அதை அவன் கையில் கொடுத்தாள்.
“இல்ல நான் பார்க்கணும்னு சொல்லல, எங்கேன்னு தான் கேட்டேன்.” என்று அவன் சொல்லவும்,
“பரவாயில்ல பாருங்க,” என்று திரும்ப சொல்லியும் அவன் அமைதியாக இருக்க,
“நான் முன்ன எப்படி இருந்தேன்னு பார்க்க உங்களுக்கு விருப்பம் இல்லையா?” என்றுக் கேட்டாள்.
“இல்ல உன்னை நான் எப்படி பார்த்தேனோ, அதுவே எனக்கு போதும், முன்ன நீ எப்படி இருந்தேன்னு பார்க்க வேண்டாம்,” என்று அவன் தீர்மானமாக கூறினான்.
“நானே காட்டும்போது ஏன் தயங்குறீங்க? என்று அவள் சொன்னாலும் அதை அவன் பார்க்க விரும்பவில்லை.
அவனும் எடுத்து பார்ப்பான் என்று சிறிது நேரம் காத்திருந்தவள், “உங்களுக்கு பயம், எங்க அந்த போட்டோ பார்த்ததும், இவ இப்படியே இருந்திருக்கக் கூடாதான்னு தோனிடுமோன்னு நினைக்கறீங்க அப்படித்தானே?” என்றுக் கேட்க,
அவளது அந்த பேச்சில் அவளை வியப்பாக பார்க்க, “உங்க கற்பனையில் இருக்கும் மின்மினிக்கு என்னோட இந்த முகம் ஒத்து போகல இல்லையா? அப்போ போட்டோல இருக்க முகமாவது ஒத்து போகுதான்னு பாருங்க,” என்று தானாகவே தான் தான் மின்மினி என்று அடையாளம் காட்டிக் கொண்டவள், அந்த அட்டைப்பெட்டியை திறந்து தன் புகைப்படத்தை காட்ட முயற்சிக்க,
“நாம மனசுல உருவகப்படுத்தின உருவத்தை நிஜத்தில் பார்ப்பது அதிசயம், ஆனா நிஜ உருவம் மனசுல ஆழமா பதிஞ்சுடுச்சுன்னா, அப்புறம் கற்பனை உருவத்தை நாம எவ்வளவு நினைவுப்படுத்திப்பார்க்க முயற்சி செய்தாலும் முடியாது. நிஜ உருவம் கற்பனையை காணாமல் ஆக்கிடும்,
என்னோட மின்மினிக்கு நான் கற்பனையில் கொடுத்திருந்த உருவம், இப்போ எனக்கு நினைவில்லை. ஏன்னா அங்க இந்த உருவம் எப்பவோ பதிஞ்சு போச்சு,” என்று அவளை காட்டிக் கூறியவன்,
அதில் இந்த நிழற்படம் கூட எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. அதனால இதை பார்ப்பதில் எனக்கு எந்த பிரச்சனையுமில்ல,” என்று அதை அவள் கையில் இருந்து வாங்கி பார்த்தவன், பின் அதை திரும்ப அவளிடமே கொடுத்தான்.
பின் அவளைப் பார்த்து, “இந்த முகத்தை கண்டு உன்னை ஒதுக்கிடுவேன்னு தான் என்கிட்ட உன்னை நீ வெளிப்படுத்திக்கல இல்லையா?
அதுக்கும் காரணம் இருக்கு, ஏன்னா இப்படிப்பட்டவங்களை பார்க்க எனக்கு ஒருமாதிரி இருக்கும்னு சொல்லி உன்னை காயப்படுத்தியிருக்கேன் இல்ல, அதுதானே நீ ஒதுங்கி போக காரணம் மின்மினி.” என்றுக் கேட்க,
“ஆமாம் என்னைப்பத்தி தெரிஞ்சா என்னை நீங்க ஒதுக்க மாட்டீங்கன்னு தெரியும், அதே சமயம் என்னை ஏத்துக்கவும் உங்களுக்கு தயக்கம் இருக்குமில்ல, அந்த தயக்கத்தை உங்களுக்கு கொடுக்க நான் விரும்பல, நாம பேசறது எவ்வளவு வேணும்னாலும் பேசிடலாம், ஆனா அதை பின்பற்றுவது ரொம்ப கஷ்டம். என்னோட இந்த உருவத்தை நீங்க உங்க மனதில் பதிய வச்சிருக்கலாம், ஆனா காலம் முழுதும் உங்களால சகிச்சுக்கிட்டு வாழ முடியுமா?” என்றுக் கேட்டாள்.
“இங்க சகிப்பு என்கிற வார்த்தை ஏன் வந்தது? உண்மை தான் கோரமான முகத்தை பார்த்தால் எனக்கு தூக்கம் வராது, அவங்களை அவாய்ட் செய்துடுவேன் இப்படியெல்லாம் உன்கிட்ட நானே சொல்லியிருக்கேன். முதல்முறை உன்னை பார்த்ததும் ஷாக் ஆகி உடனே உன்னை கிளம்ப சொன்னேன். ஆனா இதெல்லாம் உன்னை யாரோவா பார்க்கும்போது தான், ஆனா இப்போ நீ என்னவள், இப்போதும் இப்படி காரணங்கள் சொல்லி உன்னை என்னால ஒதுக்க முடியாது.
என்னடா இப்படி சொல்றானேன்னு நினைக்காத, என்னோட குணம் என்னன்னு உனக்கு தெரியும், நீ எப்படி இருந்தாலும் பரவாயில்லை, நான் உன்னை காதலிக்கிறேன். அதனால் ஏத்துக்குவேன்னு வசனம் பேச விரும்பல, நிஜத்தை தான் சொல்றேன்.
என்னோட அப்பா, அம்மா இறக்கறது முன்ன வரை எந்த ஒரு இறுதி சடங்கிலும் நான் கலந்துக் கொள்வதற்கான சந்தர்ப்பம் அமைந்ததில்ல, யாராவது சொந்தக்காரங்க இறந்துட்டா அப்பா, அம்மா மட்டும் போய் பார்த்துட்டு வந்துடுவாங்க,
அதனால அதுக்கு முன்ன வர, இறுதி ஊர்வலம் பார்த்தாலே எனக்கு அலர்ஜி, அந்தப்பக்கம் திரும்பி கூட பார்க்க மாட்டேன். ஆனா அடுத்தடுத்து இரண்டு இழப்புகளை சந்திச்ச பிறகு, இறுதி ஊர்வலமா அவங்களை கொண்டு போன போது அப்பாவும் அம்மாவும் சும்மா தூங்கிக்கிட்டு இருந்தது போல தான் இருந்தது. அப்போ தான் புரிஞ்சுது பிறப்பு போல இறப்பும் நிகழும், அதில் நம்ம பயப்பட என்ன இருக்கு? அப்படி ஒரு பக்குவம் என்னோட அப்பா, அம்மாவோட இறப்பில் தான் எனக்கு வந்தது.
அதேபோல தான் நீ என்னோட மின்மினி. உன்னோட தான் என் வாழ்க்கைன்னு எப்போதோ தீர்மானம் ஆகிடுச்சு, உன்னோட முகம் பார்க்காம, குரல் கேட்காம இருந்தபோதே இப்படி ஒரு தீர்மானத்திற்கு நான் வந்துட்டேன். அதுக்குப்பிறகு உன்னோட இந்த பாதிப்பை காட்டி நான் உன்னை வேண்டாம்னு எப்படி சொல்வேன்? ஒருவேளை நம்ம கல்யாணதுக்கு பிறகு உனக்கு இப்படி ஒரு பாதிப்பு வந்தா நான் விட்ருவேனா? உன்னை என்னோட கண்ணுக்குள்ள வச்சு பார்க்கணும்னு நினக்க மாட்டேன். அப்படித்தான் இப்போதும், நீ இங்க இருக்க,” என்று சொல்லி இதயத்தை காட்டியவன்,
“அதனால உன்னை சகிச்சுக்கிட்டு வாழணும்னு இல்ல, நான் உன்மேல வச்சிருக்கும் காதல் எந்தவித தயக்கமும் இல்லாம உன்னோட என்னை வாழ வைக்கும், அதுக்கு இந்த பாதிப்பு தடை வராது.” என்றான்.
“என்மேல அன்பு இருப்பதால் உங்களுக்கு என்னோட பாதிப்பு பிரச்சனையில்லை சரி, அப்போ என்னை போல பாதிக்கப்பட்ட மத்தவங்க முகத்தை பார்க்கும்போது உங்களுக்கு எப்படி தோனும்?”
“வெளிப்புறத் தோற்றத்துக்கு என்னைக்கும் முக்கியத்துவம் கொடுக்க கூடாது, அவங்க முகத்தை பார்த்து பேசாம, அவங்க மனசை பார்த்து பேசணும்னு நான் புரிஞ்சிக்கிட்டேன்.”
“அப்போ நம்ம கல்யாண வாழ்க்கைக்கு இந்த பாதிப்பு உங்களுக்கு பிரச்சனை இல்லைன்னு சொல்றீங்களா?”
“ஆமாம், வேணும்னா நிரூபிச்சு காட்டட்டுமா?”
“எப்படி?”
“கண்ணை மூடு சொல்றேன்.” என்றவன், அவள் கண்ணை மூடியதும், அவள் கன்னத்தில் இதழ் பதிக்க, வியப்பில் கண்களை திறந்து பார்த்தவளுக்கு கண்கள் கலங்கி கண்ணீர் வழிய, அவனோ அவள் முகம் முழுவதும் முத்தமிட்டு அவளின் இதழை வந்து அடைய, அவளோ இறுக்கமாக கண்களை மூடிக் கொண்டாள்.
ஆனால் நிமிடங்கள் கடந்த போதும் அவனிடமிருந்து எந்த பிரதிபலிப்பும் வராமல் போனதும் கண்களை திறந்து பார்க்க, அவள் கைப்பிடித்து காயம்பட்ட இடத்தில் முத்தமிட்டவன், அங்க கல்யாணத்துக்கு பிறகு தான், இப்போ முத்தமிட்டது கூட உன்னை சகித்துக் கொள்ளவில்லை, மனப்பூர்வமான என்னோட காதலின் வெளிப்பாடு தான் இந்த முத்தம்னு உனக்கு தெரியப்படுத்த தான்,” என்று அவன் சொல்லவும், அவனது பண்பை கண்டு மகிழ்ச்சியில் அவனை அணைத்துக் கொண்டாள்.
சில வருடங்களுக்கு பிறகு,
“மினு ரெடியா? என்று நவிரன் குரல் கொடுக்கவும்,
“இதோங்க என்றப்படியே முழுக்கை ரவிக்கை அணிந்து புடவையில் தயாராகி வந்தாள் புனர்வி. இப்போது ஹெச்ஐவி விழிப்புணர்வு மையத்தில் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்கும் பணியில் அவள் வேலை செய்துக் கொண்டிருக்கிறாள்.
புனர்வியை அவள் வேலை பார்க்கும் பணியிடத்தில் விட்டுவிட்டு அவனும் அலுவகத்திற்கு செல்ல வேண்டும் என்பதால், “அப்போ கிளம்பலாமா?” என்று அவன் கேட்கவும்,
“ம்ம் போலாம்,” என்றவள், மகனை தேடவும்,
புனர்வியின் அன்னையோடு கோவிலுக்குச் சென்றுவிட்டு வந்த அவர்களது இரண்டு வயது மகன் நகுலன் பாட்டியின் இடுப்பில் இருந்து இறங்கி அன்னையிடம் சென்றான்.
“பாட்டிக் கூட கோவிலுக்கு போனீங்களா செல்லம்,” என்று அவன் ஈடுக்கு முட்டிப் போட்டு அமர்ந்து மகனிடம் கேட்க,
ஆமாம் என்று தலையை ஆட்டியவன், “மினும்மா, இந்தா விபிதி,” என்று மழலைச் சொல்லில் சொல்லியப்படியே புனர்வியின் நெற்றியில் திருநீர் பிரசாசத்தை வைத்து ஊதி விட்டவன், அவள் கன்னத்தில் முத்தமிட்டு, “டாட்டா,” என்று கூறினான்.
அவளும் பதிலுக்கு முத்தமிட்டு “டாட்டா செல்லம்” என்று கையசைக்கவும், குழந்தை பிறந்ததும் இவளோடு வந்து தங்கிவிட்ட அன்னையிடம் மகனை ஒப்படைத்தவள், “பார்த்துக்கோங்கம்மா,” என்று சொல்லிவிட்டு கணவனோடு கிளம்பினாள்.
தினமும் பூஜை அறையில் இருந்து பிரசாதம் கொண்டு வந்து நெற்றியில் வைத்து கன்னத்தில் முத்தமிட்டு அவளுக்கு டாட்டா சொல்லி வழியனுப்பும் பழக்கத்தை நவிரன் குழந்தைக்கு பழக்கப்படுத்தியிருந்தான். அதற்கு காரணமும் இருந்தது.
யாரிடமும் தன் முகத்தை காட்ட தயங்காத பக்குவத்தை பெற்றிருந்தவள், பிரசவ நேரத்தில் மட்டும் “என்னோட குழந்தை என்னோட முகத்தை பார்த்து பயப்படுமா நவிர்,” என்று அடிக்கடி கேட்பாள்.
“உன்னோட கருவில் உருவான குழந்தை உன்னைப் பார்த்து பயப்படுமா? நீ தேவையில்லாம பயப்படாத,” என்று ஆறுதல் சொல்லி அவளைத் தேற்றுவான். இப்போது குழந்தை பிறந்ததிலிருந்தே அன்னையை ஒட்டிக்கொண்டு திரியும் மகனாக அவன் வளரவும் தான், புனர்வியின் மனதில் அந்த பயம் நீங்கியது.
காரில் கணவனோடு சென்றவள், அவளது பணியிடம் வரவும், “அப்போ வரேன் நவிர்,” என்று சொல்ல, மகனை போலவே அவளது கன்னத்தில் முத்தமிட்டு “போயிட்டு வா,” என்று சொல்ல, இதுவும் தினமும் தொடரும் பழக்கம் என்பதால், அவனைப் பார்த்து புன்னகைத்தவள் காரில் இருந்து இறங்கிச் சென்றாள்.
பூர்வி இரண்டாவது குழந்தையை பெற்றிருந்ததால், அவளின் அன்னையும் இங்கு புனர்வியோடு இருக்கவே, சாம்பவி அவளுக்கு துணையாக டெல்லியில் இருக்க, வழக்கம் போல் சாம்பவியிடம் ஆலோசனை கேட்டு வருபவர்களுக்கு ராகமயா ஏதோ ஆலோசனை வழங்கிக் கொண்டிருக்க, அவள் தோசை சுட்டு சாப்பிட்டுவிட்டு கிளம்ப தாமதமாகும் என்பதால், மடியில் வைத்திருந்த தன் பத்து மாத குழந்தையான தன் மகள் கீர்த்திமயாவை தூக்கியவன், “செல்லம் அம்மாக்கு தோசை சுடலாமா?” என்றுக் கேட்க, அது மேலே இரண்டு கீழே இரண்டு என்று தன் நான்கு பற்களை காட்டிச் சிரித்தது.
மகளிடம் பேசியப்படியே அவன் தோசை சுட்டு முடிக்கவும், “நீங்களே தோசை சுட்டுட்டீங்களா மயூர்,” என்று கேட்டப்படி வந்தவளிடம் தோசையை கொடுத்தவன்,
“பரவாயில்ல மயு, நல்லா தேறிட்ட, முன்னல்லாம் யாராவது அம்மா இல்லாத சமயத்தில் வந்து ஆலோசனை கேட்டா, என்ன சொல்லலாம்னு புவிக்கிட்ட கேட்ப, இப்போ நீயே சொல்ற,” என்று விளையாட்டாக சொல்லவும்,
“பேஷன்ட்ஸ்க்கு ஆலோசனை சொல்றேன். குடும்ப பிரச்சனைக்கு சொல்ல மாட்டேனா? என்னை கேலி செய்யலன்னா உங்களுக்கு தூக்கம் வராதே,” என்று அவள் அவனிடம் போலியாக கோபித்துக் கொண்டாள். அவளும் புனர்வியோடு சேர்ந்து தான் பணிபுரிகிறாள்.
“சரி டைம் ஆச்சு மயூர், கிளம்பட்டுமா?” என்றவள்,
“அம்மு அம்மாக்கு பை சொல்லுங்க,” என்றதும் குழந்தை அழகாக கையசைத்து அவளை வழியனுப்பியது.
அவள் தனது இரருச்சக்கர வாகனத்தில் கிளம்பிச் சென்றதும், மயூரும் அலுவகத்திற்கு கிளம்ப தயாரானவன், சாம்பவி இல்லாததால் குழந்தையை புனர்வியின் அன்னையிடம் விட்டுவிட்டு அலுவலகம் செல்வதற்கு குழந்தையை துக்கிக் கொண்டு வீட்டைப் பூட்டிக் கொண்டு கிளம்பினான்.
மனித உரிமை ஆணையத்தில் தவமலர் பணிபுரிகிறாள். இப்போது அவள் பிரசவ கால விடுப்பில் இருக்க, இன்று காலை தான் அவளுக்கு பிரசவ வலி எடுக்க, மருத்துவமனையில் பிரசவ அறையில் வலியில் துடித்துக் கொண்டிருக்கும் மனைவியின் வேதனையை பொறுக்க முடியாமல் யோகமித்ரன் வெளியில் தவித்துக் கொண்டிருக்க, “ஒன்னும் ஆகாது மாப்பிள்ளை, குழந்தை நல்லப்படியாக பிறந்து, தாயும் சேயும் நல்லபடியா வருவாங்க பாருங்க,” என்று செல்லதுரையும் சௌந்தரியும் அவனை தேற்றிக் கொண்டிருந்தனர்.
சிறிது நேரத்தில் நர்ஸ் வெளியே வந்து “தவமலருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது.” என்று சொல்லிவிட்டு சென்றார். தவமலர் கண் விழிக்கவும், குழந்தையை குளிப்பாட்டிக் கொண்டு வரவும் சரியாக இருக்க, குழந்தையை கையில் வாங்கிய யோகமித்ரன், தவமலரிடம் கொண்டுக் காட்ட, குழந்தை அப்படியே தவமலரின் நிறம் கொண்டு பிறந்திருந்தது.
“உன்னோட மக மாப்பிள்ளை கலரில் பிறந்திருக்கலாம்,” என்று குழந்தையை பார்த்துவிட்டு சௌந்தரி சொல்ல,
“ஏன் அத்தை அப்படி சொல்றீங்க, மலர் மாதிரியே எனக்கு பெண் குழந்தை பிறக்கணும்னு நான் ஆசைப்பட்டேன். அதபோல பிறந்திருக்கா, இவ எங்க வீட்டு இளவரசி, வீட்டுக்கு மட்டுமில்ல நாட்டுக்கே இளவரசி போல இவளை நாங்க வளர்ப்போம், இவளை கல்யாணம் செய்துக்க மாப்பிள்ளைங்க க்யூவில் நிற்கப் போறாங்க பாருங்க,” என்று யோகமித்ரன் கூற, சௌந்தரி வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தார்.
“என்னம்மா 26 வருஷத்துக்கு முன்ன கேட்ட டயலாக் மாதிரியே இருக்கா?” என்று தவமலர் கேட்க,
“மாப்பிள்ளை உன்னோட அப்பாவையே மிஞ்சிட்டாரு டீ,” என்று சௌந்தரி கூறினார்.
அந்த சமயம் கதவை திறந்துக் கொண்டு புனர்வியும் ராகமயாவும் வர, ராகமயாவிடமிருந்து இறங்கி வந்த நகுல், “யோகாப்பா பிரின்ஸஸ் காட்டுங்க,” என்று சொல்லி ஓடி வர, “இங்கப்பாருடா குட்டி இளவரசி,” என்று யோகமித்ரன் குழந்தையை அவனிடம் காட்ட, குழந்தையின் கன்னத்தை தடவி முத்தம் கொடுத்தான்.
“வர வழியிலெல்லாம் ராகாம்மா, பிரின்ஸஸையும் தவாம்மாவையும் பார்க்கப் போறோமான்னு கேட்டுக்கிட்டே வந்தான்.” என்று ராகமயா சொல்லி மகிழ்ச்சியடந்தாள்.
தன் கையில் இருந்த கீர்த்திமயாவிடம், “பாப்பா பாரு,” என்று தவமலரின் குழந்தையை புனர்வி காட்டவும். கீர்த்தி குழந்தையை தொட்டுப் பார்த்துவிட்டு “பாப்பா,” என்று கையசைத்துவிட்டு சிரித்தாள்.
தோழிகள் இருவரும் தவமலரின் நலனை விசாரித்துக் கொண்டிருக்க, “நவிரனும் மயூரனும் வரலையா?” என்று யோகமித்ரன் கேட்க,
“நாங்க ரெண்டுப்பேரும் பர்மிஷன் கேட்டு வீட்டுக்கு போய் குழந்தைகளை துக்கிக்கிட்டு முன்ன கிளம்பி வந்துட்டோம். அவங்க பின்னாலேயே வருவாங்க,” என்று புனர்வி கூறினாள்.
அவள் சொன்ன சிறிது நேரத்திற்க்கெல்லாம் நவிரனும் மயூரனும் ஒருவர் பின்னால் ஒருவர் வர, “ஜீனியர் தவா,” என்று மயூரன் குழந்தையை அழைத்து கொஞ்சினான். சிறிது நேரத்தில் கௌசல்யாவும் தனசேகரும் தங்கள் மகன் ஜெயராமை அழைத்துக் கொண்டு வர, அங்கே சிரிப்பும் பேச்சுமென்று ஒரே உற்சாகமாக இருந்தது.
அன்பை மட்டுமே அடிப்படையாக கொண்டிருக்கும் இவர்கள் உறவு எந்த புயல் காற்றும் பூகம்பமும் வந்தாலும் சாய்ந்து விடாமல் மகிழ்ச்சியோடு அன்பு ஊஞ்சலில் இப்படியே அழகாக சீராடிக் கொண்டே இருக்கட்டும்
சுபம்