AO 4

Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அன்பு 4

காலையில் நேரமாகி விட்டதால், வழக்கமான அரட்டை இல்லாமல் தோழிகள் மூவரும் வகுப்பறைக்கு நேராக சென்றுவிட்டனர். அதன்பிறகு நடுவில் இடைவேளை நேரம் தான் மூவருக்கும் பேச வாய்ப்பு கிடைக்க, வழக்கமாக அமர்ந்து அரட்டை அடிக்கும் மரத்தடிக்கு மூவரும் சென்றார்கள்.

“ஹே எருமை, இன்னும் எதுக்குடி துப்பட்டாவை போட்டு மூடியிருக்க, எடு,” என்றப்படி தவமலர் புனர்வியின் துப்பட்டாவை கழட்ட,

“ஹே குரங்கு பார்த்து டீ, இப்படியா வலிக்கிற மாதிரி இழுப்ப,” என்று புனர்வி அவளை அடித்தாள்.

இதையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் ராகமயா ஏதோ சிந்தனையில் நடந்து வர, அதைப்பார்த்த தவமலரோ, “என்னடி ஏதாவது சீரியஸான விஷயமா? இவ காலையிலிருந்து உம்முன்னு இருக்கா,” என்று புனர்வியை பார்த்து கேட்க, அதற்குள் அவர்கள் அமரும் மரத்தடி வரவும்,

அங்கே அமர்ந்தப்படியே, “காலையில் நல்லா தானே இருந்தா, அப்புறம் என்னாச்சுன்னு தெரியலையே, பஸ் ஸ்டாப்ல நடந்தது அவ்வளவு சீரியஸ் விஷயமில்லையே,” என்று பேருந்து நிறுத்தத்தில் நடந்ததையும் காரில் நடந்ததையும் புனர்வி கூறவும், ராகமயா இப்போது அமைதியாக அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தாள்.

“ஒருவேளை மயூ அத்தான் அப்படி பேசினதுக்கா ராகா சீரியஸ் ஆகிட்ட, அவர் சும்மா விளையாடியிருப்பார்,” என்று தவமலர் கேட்கவும்,

“ச்சே அதுக்கு யாராச்சும் சீரியஸ் ஆவாங்களா? முதலில் நான் சீரியஸா இருப்பதா உங்களுக்கு ஏன் தோனுது,” என்று ராகமயா இருவரையும் பார்த்து கேட்டாள்.

“அப்புறம் ஏன் உம்முன்னு இருக்க, தவா சொன்னதும் எனக்கும் அப்படித்தான் தோனுது,” என்று புனர்வியும் கேட்க,

“சீரியஸால்லாம் ஒன்னும் இல்ல, சும்மா ஏதோ யோசனையா இருந்தேன், அதுக்குள்ள நீங்களே ஏதாவது கதை கட்டி விட்ருங்க டீ,” என்று ராகமயா அலுத்துக் கொண்டாள்.

“நிஜமாகவே ஒன்னும் இல்லத்தானே, ஏதாவது இருந்தா எங்கக்கிட்ட சொல்லு டீ,” என்று தவமலர் கேட்க,

“அய்யோ நிஜமாகவே ஒன்னுமில்ல தவா,” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போது, 

“நீங்க 3 பேரும் இங்கேயா இருக்கீங்க?” என்று கேட்டப்படி கௌசல்யா அங்கு வந்தாள்.

கௌசல்யா அந்த கல்லூரியில் புதிதாக சேர்ந்திருக்கும் விரிவுரையாளர். கணித பாடம் எடுப்பவள், வயதை வைத்துப் பார்த்தால், இவர்கள் மூவரையும் விட மூன்று, நான்கு வயது தான் அதிகம் இருப்பாள்.

கல்லூரியில் நடைப்பெற்ற விழா ஒன்றில் கௌசல்யாவிடம் சில பொறுப்புகள் கொடுக்கப்பட, அதில் இவர்கள் மூவரும் அவளுக்கு உதவியாக இருந்ததில் அவர்களுடன் கௌசல்யாவிற்கு நல்ல நட்பு உண்டானது. அதைக் கொண்டு அடிக்கடி அவர்களோடு சிறிது நேரம் பேசிவிட்டு செல்வாள். இன்று ஒரு முக்கியமான விஷயத்தை அவர்களிடம் பகிர்ந்துக் கொள்ளவே அவர்களை தேடி வந்தாள்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“குட் மார்னிங் மேம், கழுதை கெட்டா குட்டிச்சுவர்னு பழமொழி சொல்வாங்களே, அதுபோல நாங்க க்ளாஸ் ரூம்ல இல்லன்னா இந்த மரத்தடியில் தான் இருப்போம்னு உங்களுக்கு தெரியாதா மேம்,” என்று தவமலர் சொல்ல,

“ஏதாச்சும் முக்கியமான விஷயமா மேம்,” என்று புனர்வி கேட்டாள்.

“ஆமாம் தனாவோட அம்மா, அப்பா என்னை பார்க்கணும்னு சொன்னாங்களாம், இன்னைக்கு மீட் பண்ண போறேன், அதான் அதுக்கு முன்ன உங்கக்கிட்ட சொல்லிட்டு போலாம்னு உங்களை பார்க்க வந்தேன்,” என்று கௌசல்யா கூற,

“வாவ் சூப்பர் மேம், தனா சார் வீட்டில் அவங்க பேரண்ட்ஸ் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்களா?” என்று ராகமயா கேட்டாள்.

விழாவில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு கௌசல்யாவோடு சேர்ந்து மூவரும் உதவும் போது, அவளுக்கு அடிக்கடி தனா என்று சொல்லும் தனசேகரிடம் இருந்து அலைபேசியில் அழைப்பு வரும், அவனுடன் பேசும் போது கௌசல்யாவின் முகம் பிரகாசமாவதை பார்த்து,

“என்ன மேம் லவ்வா,” என்று தவமலர் தான் கேட்டாள்.

அதற்கு கௌசல்யா வெட்கப்பட்டுக் கொண்டே ஆமாம் என்று தலையாட்டினாள்.

“எத்தனை வருஷ காதல் மேம்,” என்று ராகமயா கேட்டாள்.

“ம்ம் காலேஜ்ல இருந்தே, தனா தான் முதலில் சொன்னது, அப்போ வீட்டை நினைச்சு நான் பயந்து தனா காதலை ஏத்துக்கல, ஆனா அப்புறம் ஏத்துக்கிட்டேன்,” என்று கௌசல்யா அவளின் காதலைப் பற்றி அனைத்துமே பகிர்ந்துக் கொண்டாள்.

அதுமட்டுமில்லாமல் தனசேகரின் புகைப்படத்தையும் மூவருக்கும் காட்டினாள். கௌசல்யா மிகவும் அழகு, அதற்கேற்றார் போல் தனாவும் அவளுக்கு பொருத்தமாக இருந்தான். 

“சூப்பர் ஜோடி மேம், நீங்க ரெண்டுப்பேரும்,” என்று மூவருமே ஒரே நேரத்தில் கூறினார்கள். அதனாலேயே தனசேகர் விஷயம் என்றால் முதலில் இவர்களிடம் வந்து தான் கௌசல்யா பகிர்ந்துக் கொள்வாள்.

இப்போதும் ராகமயா கேட்டதற்கு, “ம்ம் தனா அவங்க வீட்டில் எங்க காதலை பத்தி சொல்லிட்டாரு, அதான் பார்க்கணும்னு சொல்லி வரச் சொல்லியிருக்காங்க,” என்று பதில் கூறினாள்.

“உங்க வீட்டில் எப்போ மேம் பேசப் போறீங்க, உங்க அம்மா, அப்பா ஒத்துக்க மாட்டாங்கன்னு தான் கொஞ்ச நாளா தனா சாரோட காதலை ஏத்துக்கலன்னு சொல்வீங்க, இப்போ பேசினா ஒத்துப்பாங்களா?” என்று புனர்வி கேட்க,

“தெரியல, என் காதலைப் பத்தி சொன்னா எப்படி எடுத்துக்காவங்கன்னு தெரியல, அதான் தனா அம்மா, அப்பா மூலமா என்னோட அப்பா, அம்மாக்கிட்ட எங்க காதலைப் பத்தி சொல்லலாம்னு தனா சொன்னாரு,” என்று கௌசல்யா சொல்லவும்,

“அப்போதும் ஒத்துக்கலன்னா என்ன செய்வீங்க மேம்,” என்று தவமலர் கேட்க,

“அதான் எனக்கு ஒன்னும் புரியல தவா,” என்று கௌசல்யா வருத்தத்தோடு கூறினாள்.

“அட எதுக்கு நெகட்டிவா பேசற தவா, மேம்க்கு எலலாம் நல்லப்படியாக தான் நடக்கும்,” என்ற புனர்வி,

“ரெண்டு வீட்டு பேரண்ட்ஸும் சம்மதிச்சு உங்க கல்யாணம் சிறப்பா நடக்க போகுது பாருங்க,” என்று கௌசல்யாவிடம் கூறினாள்.

“உன்னோட வாய் முகூர்த்தம் பலிக்கட்டும் புனர்வி, சரி நான் எப்படி இருக்கேன், நேத்து கொஞ்சம் தூங்க லேட்டாயிடுச்சு, அதனால முகம் டல்லா இருக்கறது போல தெரியுதா? அப்படியிருந்தா கொஞ்சம் லைட்டா மேக் அப் போட்டுட்டு போலாமேன்னு தான் கேட்கிறேன், 

ஏன்னா தனாக்கு நான் எப்போதும் நீட்டா அழகா இருக்கணும்னு சொல்வாரு, அப்புறம் தூக்க கலக்கத்தோட போனா, இப்படியா வருவன்னு கோபப் படுவாரு,” என்றாள்.

“உங்களுக்கு என்ன மேம், ரொம்ப அழகா இருக்கீங்க, பார்த்ததுமே உங்க மாமியார், மாமனார் மயங்கிட போறாங்க பாருங்க,” என்று புனர்வி சொல்ல,

“ஹே ரொம்ப கேலி செய்யாத புனர்வி,” என்று வெட்கத்தோடு கூறிய கௌசல்யா,

“சரி தனாவை ரொம்ப நேரம் காத்திருக்க வைக்கக் கூடாது, நான் வரட்டுமா?” என்று மூவரிடமும் விடைப்பெற்றுக் கொண்டு கிளம்பிவிட்டாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்த தவமலர், “எனக்கென்னமோ மேமோட பேரண்ட்ஸ் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டாங்கன்னு தான் தோனுது, மேமோ அவங்க காதலில் தீவிரமா இருக்காங்க, கண்டிப்பா அவங்க காதலுக்காக போராட வேண்டியிருக்கும், இல்லை பெத்தவங்களை எதிர்த்து கல்யாணம் செய்ய வேண்டியிருக்கும், முன்னமே அவங்க பேரண்ட்ஸை பத்தி கௌசல்யா மேம்க்கு தெரியுமில்ல, அப்புறம் இந்த காதலெல்லாம் தேவையா?” என்று மற்ற இருவரிடமும் சொல்ல,

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“காதல் இதெல்லாம் யோசிச்சா வரும்,” என்று புனர்வி சொல்ல,

“அப்படி இதெல்லாம் யோசிச்சு வந்தா அது காதலே இல்லையே,” என்று ராகமயா கூறினாள்.

“எல்லோருக்குமே காதல் வராது, அப்படியே காதல் வந்தாலும், எல்லோரோட காதலும் சுலபமா கைக்கூடாது,” என்று புனர்வி சொல்ல,

“காதலுக்காக கொஞ்சமாவது மெனக்கிட வேண்டாமா? போராடி ஜெயிக்கிறதிலும் கொஞ்சம் சுவாரசியம் இருக்கும், அதே சமயம் அவசியம்னு வரும்போது காதலுக்காக விட்டுக் கொடுத்தும் போகலாம், அந்த பிரிவு வேதனையை கொடுத்தாலும், மனசுக்குள்ள இருக்க காதல் எப்போதும் நீங்காம நம்மள கஷ்டப்படுத்தினாலும் அதுவும் ஒரு சுகம் தான்,” என்று ராகமயா சொல்லி முடித்தாள்.

இருவரையும் வியப்பாக பார்த்த தவமலர், “என்னங்கடி, ரெண்டுப்பேரும் காதலுக்கு விளக்கமெல்லாம் கொடுக்கறீங்க, என்ன நடக்குது?” என்று இடுப்பில் கை வைத்தப்படி கேட்டவள்,

“புவியாவது மயூ அத்தானை நினைச்சு இப்படியெல்லாம் பேசறதா எடுத்துக்கலாம், ஆனா நீ காதலைப் பத்தியெல்லாம் பேசற, சரியில்லையே,” என்று ராகமயாவிடம் சந்தேகமாக கேட்க,

“ம்ம் மேடம் காதல் கவிதையெல்லாம் எழுதும்போதே நாம யோசிச்சிருக்கணும் தவா, இப்போ வேற மேடம் அப்பப்போ ஏதோ சிந்தனையில் மூழ்கிடுறாங்க, கண்டிப்பா மேடம் நம்மக்கிட்ட என்னமோ மறைக்கிறாங்க,” என்று தவமலரோடு சேர்ந்து புனர்வியும் கூறினாள்.

“ஹே காதலிக்கிறவங்க தான் காதலைப் பத்தி பேசணும், காதல் கவிதையெல்லாம் எழுதணும்னு இருக்கா என்ன? ரொம்ப தான் ரெண்டுப்பேரும் என்ன கேலி பண்றீங்க,” என்று ராகமயா பொய் கோபம் காட்ட,

“காதலிக்கிறவங்க தான் காதல் பத்தி பேசணும், காதல் கவிதைகள் எழுதணும்னு சொல்ல வரல,” என்று தவமலர் ஆரம்பிக்க,

“ஆனா காதலை பத்தி பேசறவங்களும் காதல் கவிதை எழுதறவங்களும் காதலிக்கலாமில்ல,” என்று புனர்வி முடித்தாள்.

“ஹே போதும் டீ உங்க மொக்கை, ஆள விடுங்க,” என்று ராகமயா இருவரையும் பார்த்து கையெடுத்து கும்பிடும்படி ஆனது.

“சரி சரி அப்படியே காதலிக்கிறதா இருந்தாலும் சொல்லிட்டு செய், ஏற்கனவே இவ அம்மா, அப்பாவை பார்த்துட்டு வரேன்னு டெல்லிக்கு போனவ, நமக்கு சொல்லாம அங்கேயே மயூ அத்தான் கூட நிச்சயதார்த்தத்தை முடிச்சிட்டு வந்துட்டா, நீயும் எனக்கு சொல்லாமலேயே காதலிச்சா, நான் தனியா ஆகிட்டா மாதிரி ஃபீல் ஆகிடும்,” என்று தவமலர் கொஞ்சம் நெகிழ்ச்சியோடு பேசவும்,

“ஹே லூசு அம்மாக்காக தான டீ இந்த அவசர நிச்சயதார்த்தம் அதை புரிஞ்சிக்க மாட்டீயா? இதுபோல எத்தனை முறை சொல்லி காண்பிப்ப, உங்கக்கிட்ட சொல்லாம செஞ்சதால நீங்க எனக்கு முக்கியமில்லாம போயிடுவீங்களா?

என்னோட பேருக்கேத்தது போல நான் மறு ஜென்மம் எடுத்திருக்கேன்னா அது உங்களால தான், இல்ல ஒரு அறைக்குள்ளேயே அடைஞ்சு கிடந்து ஒன்னு செத்துருப்பேன், இல்ல பைத்தியம் ஆகியிருப்பேன்,” என்று புனர்வி வருத்தத்தோடு கூறினாள்.

“ஹே லூசு, இப்படி பேசாதன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்,” என்று தவமலர் அவள் அருகில் வர,

“நீ இப்படி பேசினா, நானும் இப்படி தான் பேசுவேன் லூசு,” என்று புனர்வி அவளை நெருங்க விடாமல் கோபத்தில் தள்ளி விட,

“ஹே லூசுங்களா வழக்கம் போல ஆரம்பிச்சீட்டீங்களா?” என்று அவர்கள் அருகில் வந்த ராகமயா,

“நாங்க ஒன்னும் உனக்கு எதுவும் பெருசா செய்யல புவி, நாங்க நாங்களா இருந்தோம் அவ்வளவு தான்,” என்று புனர்வியை பார்த்து கூறினாள்.

“அது தான் எனக்கு அந்தநேரம் அவசியமா தேவைப்பட்டது, எல்லாம் என்னை பரிதாபமா பார்த்தப்போ, நீங்க எனக்கு நடந்தது எந்த விதத்திலும் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலன்னு புரிஞ்சிக்கிட்டீங்கல்ல, அதுதான் அப்போ என்னை நான் மாத்திக்க உதவியா இருந்தது,” என்று புனர்வி சொல்லவும்,

“அம்மா தாயே, ஏதோ விளையாட்டுக்கு தான் நீ எங்களுக்கு சொல்லாம நிச்சயத்தை முடிச்சிட்டு வந்துட்டன்னு சொன்னேன், அதுக்கு உடனே ஆரம்பிக்காத, நீ இப்படி இருக்கறது நல்லாவே இல்லை, முதலில் சிரி,” என்று தவமலர் அவளை மிரட்டினாள்.

அதற்கு, “ஈ… ஈ,” என்று புனர்வி பல்லைக் காட்டினாள்.

“சரி சரி, நம்ம மேட்டர்ல இவளை மறந்துட்டோம் பாரு,” என்ற தவமலர்,

“ராகா சொல்லு ஏதோ சம்திங்க் சம்திங்க் தானே,” என்று அவளிடம் கேட்க,

“எங்கிட்ட நல்லா உதை வாங்கப் போற பாரு, நீங்க நினைக்கிறது போலல்லாம் ஒன்னுமில்ல, இதோ புவிக்கு நிச்சயம் ஆகிடுச்சு, உனக்கும் வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க, அதனால் முதலில் உங்க ரெண்டுப்பேரோட கல்யாணத்தை பார்த்துட்டு தான் என்னோட கல்யாணத்தை பத்தி நான் யோசிக்கிறதா இருக்கேன்,” என்று ராகமயா கூறினாள்.

“ஹே காதலைப்பத்தி பேசினா, இவ கல்யாணத்தை பத்தி பேசி சமாளிக்கிறா தவா, என்னன்னு கேளு,” என்று புனர்வி சொல்ல,

“ஹே அதை அப்புறம் பார்த்துக்கலாம் டீ, உங்கக்கிட்ட ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன், நாளைக்கு என்னை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டில் இருந்து வராங்க,” என்று தவமலர் கூறினாள்.

“அடிப்பாவி, இதெல்லாம் மறக்கக் கூடியதா? இந்த விஷயத்தை எங்கக்கிட்ட சொல்லாம மறைச்சிட்டு, நீ தெரியாம நிச்சயம் பண்ண, நீ தெரியாம காதலிக்கிறன்னு எங்க மேல குத்தம் சொல்றீயா?” என்று ராகமயா கேட்க,

“ஹே உங்க ரெண்டு பேரோட விஷயத்தை விட, இது அவ்வளவு பெரிய விஷயமா? சும்மா பெண் பார்க்க தானே வராங்க, என்னமோ கல்யாணமே நடக்கப் போறது போல பில்டப் கொடுக்குறா, இதெல்லாம் ஓவர் டீ,” என்று தவமலர் சலித்துக் கொண்டாள்.

“சரி சரி ஒருத்தரையொருத்தர் குத்தம் சொல்றதை விடுவோம்,” என்ற புனர்வி,

“ஹே தவா, மாப்பிள்ளை பேர் என்ன? எங்க வேலை பார்க்கிறார், போட்டோ பார்த்தீயா? உனக்கு பிடிச்சுதா?” என்று கேட்டாள்.

“பேரு யோகமித்ரன், ஏதோ மொபைல் கம்பெனியில் மேனேஜர் லெவல் போஸ்ட்ல வேலை பார்க்கிறாங்களாம், அவ்வளவு தான் தெரியும், அம்மா போட்டோ காட்டினாங்க, ஒருமுறை தான் பார்த்தேன், பார்க்க ஆள் அழகா தான் இருந்தாங்க, இப்போ யோசிச்சு பார்த்தா முகம் ஞாபகத்துக்கு வரல,” என்று சொல்ல,

“ஹே பொய் சொல்லாத, உண்மையாகவே உனக்கு ஞாபகத்துக்கு வரலையா?” என்று ராகமயா கேட்டாள்.

“ஹே நான் ஏன் டீ பொய் சொல்லப் போறேன், நிஜமா ஞாபகத்துக்கு வரல, அந்த அளவுக்கு ஆழ்ந்து பார்க்கல, அம்மா இதுவரை பத்து மாப்பிள்ளை போட்டோ காட்டியிருக்காங்க, ஒவ்வொருத்தரையும் ஆவலா பார்க்கவா முடியும்? இவன் தான் நான் கல்யாணம் செஞ்சுக்க போறவன்னு தெரிஞ்சா அப்போ கொஞ்சம் கவனிச்சு பார்க்கலாம், இப்போ எப்படி டீ பார்க்க முடியும்? என்றுக் கேட்க,

“நீ சொல்றதும் உண்மை தான் தவா, மாப்பிள்ளை வீட்டில் இருந்து வரட்டும், உன்னை பிடிக்குதுன்னு சொல்லட்டும், அப்புறம் இதைப்பத்தி பேசலாம், ஆமாம் நாளைக்கு எந்த நேரத்துக்கு உன்னை பெண் பார்க்க வராங்க,” என்று புனர்வி கேட்டாள்.

“ஈவ்னிங் வருவதா சொல்லியிருக்காங்க,”

“அத்தானோட ப்ரண்ட் நவிரன் இந்தியா வராங்களாம், அவங்க வர ப்ளைட்  நாளைக்கு 10 மணிக்கு சென்னை வருது, அத்தான் இல்லாததால அவங்களை கூப்பிட நான் தான் போகணும், உங்களையும் கூட அழைச்சிட்டு போகலாம்னு தான் கேட்கிறேன், நாளைக்கு நம்ம 3 பேரும் போவோமா?” என்று புனர்வி கேட்கவும், ராகமயா அதிர்ச்சியாக,

“நாளைக்கு காலேஜ் கட் அடிக்கப் போறோமா? அப்போ போகலாமே, நான் வீட்டுக்கு ஒரு 3 மணிக்கு போனா போதும்,” என்று தவமலர் கூறினாள்.

“புவி, அதான் தவா வருவதா சொல்றாளே, நீ அவளை கூட்டிட்டு போ, நான் வரல,” என்று ராகமயா பதட்டத்தோடு கூறினாள்.

“ஹே நாங்க ரெண்டுப்பேரும் காலேஜுக்கு லீவு போடப் போறோம், நீ மட்டும் வந்து என்ன செய்யப் போற ராகா, எங்கக்கூட வா ஜாலியா இருக்கும்,” என்று புனர்வி கூப்பிட,

“நாம பிக்னிக்கா போறோம், ஜாலியா இருக்க, ஏர்ப்போர்ட்க்கு தான போகப் போறோம், அதுவும் உன் அத்தானோட ப்ரண்டை கூப்பிட தானே, அதனால நீங்க ரெண்டுப்பேரும் போங்க, நான் வேணும்னா வீட்டில் சாம்பவி அத்தைக்கு உதவியா இருக்கேன்,” என்றாள்.

“சரி விடு புவி, அதான் நான் வரேனே, நாம ரெண்டுபேர் மட்டும் போய் நரேனை கூட்டிட்டு வரலாம்,” என்று தவமலர் சொல்லவும்,

“ஹே நரேன் இல்லடி நவிரன்,” என்று புனர்வி கூறினாள்.

“ஹான் நரேனோ நவிரனோ போய் கூட்டிட்டு வருவோம்,” என்று அவள் பதிலுக்கு கூற,

“சரி க்ளாஸுக்கு நேரமாகுது, வாங்க போகலாம்,” என்று ராகமயா சொல்லவும், மூவரும் கிளம்பினார்கள்.

சென்னை விமான நிலையம்

விரன் மணிவாசகம் என்ற பெயர் எழுதிய பலகையை மடியில் வைத்துக் கொண்டு முகத்தை துப்பட்டாவால் மூடியபடி புனர்வி அமர்ந்திருக்க, அருகில் ராகமயா மிகவும் பதட்டத்தோடு  அமர்ந்திருந்தாள்.

திடீரென மாலை வருவதாக கூறிய மாப்பிள்ளை வீட்டார், ஒரு அவசர வேலையால் மதியமே வருவதாக சொல்லவும், தவமலரும் கல்லூரிக்கு விடுப்பு எடுத்திருந்ததால், செல்லதுரை சரியென்று அவர்களை வர சொல்லிவிட்டார். அதனால் தன்னால் வர முடியாது என்று தவமலர் அலைபேசியில் அழைத்து புனர்வியிடம் தகவல் சொல்லவும்,

“சரி தவா, நான் ராகாவை கூட்டிட்டு போறேன்,” என்று புனர்வி அவளிடம் கூறினாள். அருகிலிருந்து புனர்வி பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த ராகமயா என்னவென்று கேட்க, அவள் விஷயத்தை சொல்லவும், வேறு வழியில்லை என்பதால் புனர்வியோடு சென்றவள் நவிரனை நேருக்கு நேராக சந்திக்கவிருப்பதில் தானாகவே அவளை பதட்டம் அரவணைத்துக் கொண்டது.

இன்னும் விமானம் வருவதற்கான அறிவிப்பு வராததால், ராகமயாவும் எதுவும் பேசாமல் அமர்ந்திருக்கவே அலைபேசியை பார்த்தப்படி புனர்வி அமர்ந்திருக்க, “புவி, நான் கொஞ்சம் ரெஸ்ட் ரூம்க்கு போயிட்டு வந்துட்றேன்,” என்று ராகமயா சொல்ல,

“நானும் வரட்டுமா ராகா,” என்று புனர்வி கேட்டாள்.

“இல்ல வேண்டாம், நாம போன நேரம் ஃப்ளைட் லேண்டாச்சுன்னா, மிஸ்டர் நவிரன் காத்திருப்பது போல ஆகிடும், ஒருவேளை யாரும் வரலன்னு நினைச்சு அவர் பாட்டுக்கு போயிடப் போறார், அதனால நீ இங்கேயே இரு,” என்று சொல்லியப்படி அவள் செல்லவும், புனர்வியும் தலையை ஆட்டியப்படியே மீண்டும் அலைபேசியை பார்க்க, விமானம் வருவதற்கான அறிவிப்பை ஒரு பெண் குரல் சொல்லிக் கொண்டிருந்தது.

விமானம் தரையிறங்கவும் அதிலிருந்து இறங்கி வெளியே வந்த நவிரன் முதலில் அலைபேசியை உயிர்ப்பித்தான். உடனே ஏகப்பட்ட குறுஞ்செய்திகள், மின்னஞ்சல், குறிப்புகள் வரவும், அத்தனையும் ஒதுக்கி அவன் முதலில் தனது முகநூல் பக்கத்தை ஆராய்ந்தான். இத்தனையும் மெதுவாக நடந்தப்படியே செய்துக் கொண்டிருந்தான்.

கலிஃபோர்னியா விமான நிலையத்திலேயே மின்மினியின் பதிவை பார்க்க ஆவல் கொண்டவன் அதை பார்க்கும் நேரத்தில் அலைபேசியில் சார்ஜ் முற்றிலும் தீர்ந்து போய் அணைந்துவிட, சார்ஜ் போட்டு பார்க்கலாம் என்றால், போர்டிங்கிற்கான அழைப்பு வந்ததால், நேரமின்மையால் அப்படியே சென்றுவிட்டவனுக்கோ அவள் என்ன பதிவு போட்டிருப்பாள் என்பதையே பயணம் முழுவதும் அவன் மனம் யோசித்துக் கொண்டிருந்தது.

பின் சிங்கப்பூர் வந்து விமானம் ஏற இருந்த நேரத்தில் அலைபேசியை சார்ஜ் போட்டு மின்மினியின் பதிவை பார்த்துவிட்டாலும், மீண்டும் ஒருமுறை அதை படிக்கும் ஆசையில் அவன் அந்த பதிவை மின்மினியின் முகநூல் பக்கத்தில் சென்று படித்தான்.

தேடி தொலைந்திட ஆசை கொண்டாய்,

தேடல் சுகமானது தான்

தேடும் பொருள் கிடைக்காவிடில்

தேடல் கணமாகவும் கூடும்

ரணமாகவும் மாறும் தேடல் 

அவசியம் தானா?

என்று ஒரு கவிதையை அவள் பதிவிட்டிருந்தாள்.

“உன்னை தேடி தான் நான் இங்க வந்திருக்கேன் என்பதை தெரிந்து தான் இப்படி ஒரு பதிவை போட்டிருக்கீயா மின்மினி,

உன்னை தேடும் முயற்சி வீண் தான், நீ எனக்கு கிடைக்கமாட்ட, அதனால் என் மனம் வேதனை படும்னு குறிப்பா இப்படி ஒரு கவிதையை பதிவிட்டிருக்க, ஆனா நான் உன்னை தான் தேடி வந்திருக்கேன்னு நீ தெரிஞ்சிக்கிட்டதே எனக்கு வெற்றி தானே, கண்டிப்பா உன்னை தேடும் முயற்சியில் நான் வெற்றி பெறுவேன்,” என்று மனதில் சொல்லிக் கொண்டவன்,

பின் தன் நண்பன் மயூரன் அனுப்பிய குறுஞ்செய்தியை ஆராய, அதில் அவன் வேலை விஷயமாக வெளியூர் செல்வதால், அவனுக்கு பதிலாக அவனது உறவுக்கார பெண் வருவதாக அவன் குறிப்பிட்டிருக்கவும், “எதுக்கு அவங்களையெல்லாம் மயூர் கஷ்டப்படுத்துறான், 

நான் என்ன சின்னக் குழந்தையா, அட்ரஸ் மெசேஜ் செஞ்சா நானே அவனோட அப்பார்ட்மெண்ட்க்கு போகப் போறேன், இல்ல ஒரு நாள் ஏதாவது ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கிக்கப் போறேன்,” என்று அவன் வாய்விட்டு சொல்லும்போதே அவனது அலைபேசியில் புதிதாக குறுஞ்செய்தி வந்ததற்கான சத்தம் வரவும் அவன் அதை ஆராய, நீண்ட நாட்களுக்குப் பிறகு மின்மினியிடம் இருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது.

உடனே அவன் அதை சென்று பார்க்க, வெல்கம் டூ சென்னை என்று ஆங்கிலத்தில் அவள் அனுப்பியிருக்க, 

“நான் கரெக்டா சென்னை வந்து இறங்கினதும் மின்மினியிடம் இருந்து இப்படி ஒரு மெசேஜ் வருதுன்னா, அவளுக்கு நான் வரும் நேரம் தெரிஞ்சிருக்கு, ஆனா எப்படி?” என்று அவன் யோசிக்க,

“எந்த நேரம் ப்ளைட் லேண்டாகுதுன்னு நெட்ல போட்டு பார்த்திருப்பா, அது தெரிஞ்சிக்கிறது பெரிய விஷயமா? என்று அதற்கு அவனே பதில் சொல்லிக் கொண்டான்.

“அப்போக் கூட நான் எந்த ஃப்ளைட்ல வருவேன்னு அவளுக்கு எப்படி தெரியும்? நேத்து கலிஃபோர்னியால இருந்து போஸ்ட் போட்டதால இந்த ஃப்ளைட்ல தான் வருவேன்னு அவளுக்கு எப்படி உறுதியாக தெரிஞ்சிருக்குமாம், ஒருவேளை குத்துமதிப்பா தான் இப்படி ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருப்பாளோ?” என்று அவன் குழம்பினாலும்,

ஏனோ அவன் மின்மினி இங்கு தான் அவன் அருகில் இருப்பதாக அவனது உள்மனது சொல்லவும், தானாகவே அவன் கண்கள் அந்த இடத்தை சுற்றி வர, “மிஸ்டர் நவிரன் மணிவாசகம்,” என்ற ஒரு பெண் குரல் கேட்டு அவன் திரும்பிப் பார்க்க,

முகம் முழுவதும் மூடி வெறும் கண்கள் மட்டும் தெரியும்படி முழு கை சுடிதாரில் நின்றிருந்த புனர்வியை அவன் ஆராய்ச்சியோடு பார்த்தான்.

ஊஞ்சலாடும்..