AO 3

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அன்பு 3

புனர்வியும் ராகமயாவும் பேருந்துக்காக காத்திருந்த சமயம் திடீரென ஒரு வாலிபன் அவர்கள் முன் வந்து நின்று, ராகமயாவிடம் ஒரு கடிதத்தை நீட்டி, “ஐ லவ் யூ ங்க,” என்றான்.

அவர்கள் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் அவனை இருவரும் அடிக்கடி பார்த்திருக்கிறார்கள். அவன் அவனது வீட்டில் இருப்பதை விட, ஒரு காவலாளி போல்  அந்த குடியிருப்பின் வாயிலின் அருகில் நண்பர்களோடு நின்று போக வர இருக்கும் பெண்களை பார்த்துக் கொண்டிருப்பது தான் அவனது முக்கிய வேலை, 

அப்படித்தான் இவர்கள் இருவரும் கல்லூரிக்கு செல்லவோ, இல்லை வேறு எங்கேயாவது செல்லவோ வெளியில் வந்து தங்களது வாகனத்தை எடுக்கும் போது, புனர்வி துப்பட்டாவால் முகத்தை மூடியிருப்பதால் அவளை விட்டுவிட்டு அழகாக இருக்கும் ராகமயாவை விழுங்குவது போல் பார்த்துக் கொண்டிருப்பான்.

ஆனால் இருவருமே அவனை கண்டுக் கொண்டதில்லை, அதேபோல் அங்கு குடியிருப்பில் வைத்து ராகமயாவிடம் அவன் பேச முயற்சித்ததுமில்லை, அதற்கு அவள் சந்தர்ப்பம் அளித்தால் தானே, இருவருமே அனாவசியமாக வீட்டிலிருக்கும் போது வெளியே வருவதில்லை, அப்படி வெளியே வந்தால், புனர்வியின் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்று விடுவார்கள்.

அப்படியிருக்க இன்று நடந்தப்படியே பேருந்து நிறுத்தத்திற்கு வரவும், அவனும் அவர்களின் பின்னாலேயே வந்தவன், ராகமயாவிடம் தன் காதலை தெரிவித்துவிட்டான். ஆவலோடு அவளின் பதிலை எதிர்பார்த்து அவன் காத்துக் கொண்டிருக்க,

அவனை ஏற இறங்க பார்த்த ராகமயா,  “பரவாயில்ல அழகா தான் இருக்க, ஆமாம் நீ என்ன செய்ற?” என்று அவனிடம் கேட்டாள்.

“நான் பி.ஏ முதல் வருஷம் படிக்கிறேன்,” என்று அவன் பதில் கூற,

“ஸ்கூல் படிக்கும் போது, அடிக்கடி பெயில் ஆகி, அதே க்ளாஸ்ல இன்னொரு வருஷம் படிப்பீயா? இது போல எத்தனை முறை படிச்ச?” என்று இந்த முறை துப்பட்டாவை கொஞ்சம் தளர்த்தியப்படியே புனர்வி கேட்டாள்.

“அய்யோ இல்ல, நான் நல்லாவே படிப்பேன்,” என்று அவன் அவசரமாக சொல்ல,

“டெய்லி அப்பார்ட்மெண்ட்ல வாட்ச்மேன் வேலை பார்ப்பத பார்த்தா அப்படி தெரியலையே, நீ காலேஜூக்கு போறீயா? இல்லையா?” என்று திரும்ப புனர்வியே கேட்டாள். அதற்குள் ராகமயாவோ,

“நான் என்ன படிக்கிறேன் தெரியுமா? எம்.ஏ சோஷியாலஜி கடைசி வருஷம், நான் உன்னோட 4 வயசு பெரியவ, என்னை நீ காதலிக்கிறீயா?” என்றுக் கேட்டாள்.

அதில் கொஞ்சம் அதிர்ந்தவன் பின், “காதல் வயசெல்லாம் பார்த்து வராதுங்க, தன்னை விட வயசுல பெரிய பெண்ணை கல்யாணம் செஞ்சு செலப்ரிட்டீஸ்ல்லாம் சந்தோஷமா வாழலையா? நாமும் அப்படி இருப்போம்ங்க,” என்று தைரியமாக கூற,

“ஓ அப்படியா? சரி வயசு வித்தியாசம் உனக்கு பெரிய விஷயமில்ல ஓகே, ஆனா ஹெல்த் நல்லா இருக்கணுமில்ல, என்னைப்பத்தி உனக்கு என்ன தெரியும்? என்னோட அம்மா, அப்பா ஹெச்ஐவி பேஷண்ட் தெரியுமா? அதுவும் நான் என்னோட அம்மா வயிற்றில் இருக்கும் போதே அவங்களுக்கு அந்த நோய் இருந்தது, அப்படி இருக்கும்போது எனக்கும் அந்த நோய் தாக்காம இருக்குமா?” என்று ராகமயா கேட்டாள்.

“நீங்க பொய் தானே சொல்றீங்க,” என்று அவன் பதட்டத்தோடு கேட்க,

“இதில் யாராச்சும் பொய் சொல்வாங்களா? நிஜம் தான், வேணும்னா டெஸ்ட் எடுக்க நான் தயார், இப்போ சொல்லு நாம காதலிக்கலாமா? கல்யாணம் செஞ்சுக்கலாமா?” என்று அவள் சொன்னதும்,

“சாரி சிஸ்டர்,” என்று அவன் ஓடியே விட்டான்.

“காதல் வயசெல்லாம் பார்க்காதாம், ஏன் காதல் ஹெச்ஐவியெல்லாம் பார்க்காதுன்னு சொல்ல வேண்டியது தானே, பெண் அழகா இருந்தா மட்டும் போதுமே, எப்படி ஓட்றான் பாரு,” என்று ராகமயா சொல்லியப்படியே அவளும் புனர்வியும் சிரித்துக் கொண்டார்கள்.

அவனை வெறுப்பேற்றுவதற்காக இப்படி கூறியிருந்தாலும் ஒரு வகையில் இது பாதி உண்மையும் கூட, ராகமயாவின் பெற்றோர்கள் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்கள் தான், அவள் குழந்தையாக இருக்கும்போதே அவளின் தந்தைக்கு அந்த நோய் இருப்பது தெரிய வந்து, அது வெளியில் தெரிந்தால் அவமானம் என தற்கொலை செய்துக் கொண்டார்.

மனைவிக்கு கூட தெரியாமல் அவர் சில பெண்களோடு தொடர்பு வைத்திருந்தது தான் அவருக்கு இந்த நோய் வர காரணம், ஆனால் கணவர் இப்படிப்பட்டவர் என்பதை கூட அறிந்து வைத்திராத அப்பாவி மனைவியாக கணவருடன் தாம்பத்ய வாழ்க்கை நடத்திய  அவளது தாயாரையும் இந்த நோய் விட்டுவைக்கவில்லை,

அதுவும் கணவன் இறந்த சில மாதங்களுக்குப் பிறகு தான் அவருக்கு இந்த நோய் இருப்பது தெரிய வர, அவரை தவறாக புரிந்துக் கொண்டு உறவினர்கள் அவரை ஒதுக்கி தள்ளினார்கள். கணவரை போல் நோயை பற்றி அறிந்ததும் தற்கொலை செய்ய முடியாதபடி கையில் குழந்தையிருக்க அதற்காக பார்க்க வேண்டியிருந்தது. இதில் குழந்தைக்கும் இந்த நோயின் பாதிப்பு இருக்குமா? என்ற பயம் வேறு, அடுத்து என்ன செய்வது என்று கூட புரியாத நிலையில் அவருக்கு உதவியாக இருந்தது சாம்பவி தான்,

சாம்பவிக்கு சிறு வயதிலிருந்தே சமூக சேவையில் ஆர்வம் இருக்க, அவ்வப்போது தன்னால் முடிந்த உதவிகளை அவர் அடுத்தவருக்கு செய்வார். இதில் திருமணமாகி கணவரின் ஆதரவும் கிடைத்ததில் அவர் இருந்த இடத்தில் சுற்றியுள்ளவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துக் கொண்டிருக்க, அப்போது தான் ராகமயாவின் அன்னை பற்றி தெரிய, சாம்பவி அவருக்கு ஆதரவு கொடுத்து, அவரது சிகிச்சைக்கான மொத்த பொறுப்பையும் ஏற்றுக் கொண்டவர்,

ராகமயாவிற்கும் பரிசோதனைகள் செய்ய ஏற்பாடு செய்தார். நல்லவேளையாக குழந்தை பிறந்ததும் தான் ராகமயாவின் அன்னைக்கு இந்த நோய் பரவியதால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் இல்லை, அதேபோல் அப்போதே வேறு சில காரணத்தால் அவர் தாய்ப்பால் கொடுப்பதையும் நிறுத்தியிருக்க, அவளுக்கும் இந்த நோய் பரவமால் இருந்தது.

அதன்பிறகு இருவருமே சாம்பவியின் பொறுப்பாக, ராகமயாவின் படிப்பையும் சாம்பவியே ஏற்றுக் கொண்டார். அவளை பள்ளியில் சேர்க்க, நிர்வாகம் அவளை பள்ளியில் சேர்க்க அனுமதித்தாலும், ஒருவர் மூலமாக இன்னொருவருக்கு என்று ராகமயாவின் அன்னை பற்றி தெரிந்ததால், அது என்னவோ தொட்டாலே தொற்றிக் கொள்ளும் நோய் என்பது போல் குழந்தைகள் மனதிலும் தங்கள் எண்ணங்களை விதைக்க, ராகமயாவிடம்  உடன் படித்த மாணவிகள் ஒதுக்கம் காட்ட, தவமலர் மட்டும் தான் அவளிடம் எந்த ஒதுக்கமும் காட்டாமல் பழகினாள்.

வளர வளர முன்போல் யாரும் ஒதுக்கம் காட்டவில்லையென்றாலும், ராகமயா தவமலரோடு நெருக்கமானது போல் யாரோடும் அவ்வளவு நெருக்கமாக பழகியதில்லை, கணவரின் வேலை நிமித்தமாக சாம்பவி குடும்பத்தோடு டெல்லிக்கு இடமாற்றம் ஆனபோதும் தவமலரின் குடும்பம் தான் ராகமயாவிற்கும் அவளின் அன்னைக்கும் ஆதரவாக இருந்தனர். சாம்பவியும் அவ்வப்போது சென்னைக்கும் வந்து தன் சேவை பணிகளை தொடர்ந்துக் கொண்டு தான் இருந்தார்.

சாம்பவி மற்றும் தவமலர் குடும்பம் தங்களுக்கு ஆதரவாக இருந்தாலும், ராகமயாவின் அன்னை ஒன்றும் அமைதியாகவும் இருக்கவில்லை, வீட்டில் இருந்தப்படியே கைவேலைப் பொருட்கள் செய்வார். அதை தன் மளிகை கடையில் ஒரு பகுதியில் வைத்து தவமலரின் தந்தை செல்லதுரை விற்றுக் கொடுப்பார்.

ஒரு வருடத்திற்கு முன்பு தான் ராகமயாவின் அன்னை தீவிர நோயின் காரணமாக இறந்து போக, இப்போது சாம்பவி சென்னையில் இருப்பதால், அவர் வீட்டிலேயே புனர்வியோடு ராகமயாவும் தங்கிக் கொண்டாள்.

இன்னும் முகத்தில் சிரிப்பு மறையாமல் புன்னகைத்தப்படியே பேருந்து வருகிறதா? என்று ராகமயா பார்க்க, அப்போது மயூரனின் கார் வரவும், “ஹே புவி, அங்கப்பாருடி, உன்னோட ஆள் கார்ல வராரு, நல்லவேளை நாம காலேஜுக்கு லேட்டா போக வேண்டாம்,” என்று சொல்லவும், மயூரன் கார் அவர்கள் அருகில் வந்து நின்றது.

“ஹாய் அத்தான், என்ன இந்தப்பக்கம்?” என்று ஓட்டுனர் இருக்கையில் இருந்த மயூரனை பார்த்து புனர்வி கேட்க,

“அம்மாவை பார்க்கலாம்னு தான் வந்தேன்,” என்று அவன் பதில் கூறினான்.

“அத்தை வீட்டில் இல்ல, கோவிலுக்கு போயிருக்காங்க, வர மதியம் ஆகிடும்,”

“அப்படியா? சரி  அம்மாவை இன்னொரு நாள் பார்த்துக்கிறேன், சரி நீங்க ரெண்டுப்பேரும் ஏன் பஸ் ஸ்டாப்ல நிக்கறீங்க? உன்னோட வண்டிக்கு என்னாச்சு,?”

“வண்டி பன்ச்சர் அத்தான், ராகா ஆட்டோல போலாம்னு சொன்னா, நான் தான் பஸ்ல போலாம்னு கூட்டிட்டு வந்திருக்கேன்,”

“இப்பவே காலேஜுக்கு டைம் ஆகுதே, சரி வாங்க நான் காலேஜ்ல ட்ராப் பண்றேன்,” என்றதும், இருவரும் பின் இருக்கையில் ஏறிக் கொண்டார்கள்.

பின் மயூரன் கல்லூரியை நோக்கி காரை செலுத்திக் கொண்டே, “ஆமா நான் உங்கக்கிட்ட காரை எடுத்துக்கிட்டு வந்தப்போ, யாரோ ஒரு பையன் உங்கக்கிட்ட பேசிட்டு இருந்தானே, என்ன விஷயம்? எதுவும் பிரச்சனையில்லையே?” என்று இருவரிடமும் கேட்க,

“அவனா,” என்று இழுத்து சொன்னப்படியே, முகத்திலிருந்து துப்பட்டாவை எடுத்த புனர்வி, “அவன் நம்ம ராகாவோட ஆள்,” என்று கூறி, ராகவை பார்த்து கண்ணடித்தாள்.

“அடிப்பாவி,” என்று சொல்லி ராகமயா அவளை முறைக்கவும்,

“பார்த்தா சின்ன பையன் போல தெரியறான், அவன் உன்னோட ஆளா? ம்ம் காலம் கெட்டுப்போச்சுன்னு சும்மாவா சொன்னாங்க,” என்றவன்,

“அம்மாக்கு இந்த விஷயம் தெரியுமா? அவங்க உன்மேல ரொம்பவே நம்பிக்கை வச்சிருக்காங்க, அதுக்கேத்தது போல பார்த்து நடந்துக்கோ,” என்று கண்ணாடி வழியாக ராகமயாவை பார்த்து கூற, அவளோ அவனை முறைத்தவள்,

“என்னைக்கும் சாம்பவி அத்தை நம்பிக்கையை காப்பாத்தணும்னு தான் நினைக்கிறேன், கண்டிப்பா காப்பாத்தவும் செய்வேன், இவ அந்த பையனை என்னோட ஆளுன்னு சொன்னா நீங்க நம்பிடுவீங்களா? இதுவே அந்த பையன் புனர்வியோட ஆளுன்னு சொன்னா அப்போதும் இப்படி தான் பேசுவீங்களா?”  என்று கோபமாக கேட்டாள்.

அதற்கு, “இந்த முகத்தை பார்த்து கண்டிப்பா யாரும் காதலிக்கிறதா சொல்ல மாட்டாங்கன்னு அத்தானுக்கு தெரியும்,” என்று புனர்வி சிரித்தப்படியே கூற,

“புவி,” என்று மற்ற இருவரும் ஒன்று போல் கோபமாக அவளை அதட்டினார்கள்.

“அய்யோ நான் சும்மா விளையாட்டுக்கு தானே சொன்னேன், அதுக்கு போய் சீரியஸ் ஆகிக்கிட்டு, இதுவே இங்க தவா இருந்தா எனக்கு ஹைஃபை கொடுத்திருப்பா, நீங்க ரெண்டுப்பேரும் கொஞ்சம் சீரியஸ் டைப்,” என்று புனர்வி இருவருக்கும் ஒழுங்கு காட்டினாள்.

இப்படி அவள் பேசவும், அதற்கு அவர்கள் அதட்டவும், எப்போதும் அவள் முகத்தை துணியால் மறைத்துக் கொள்வதற்கும் காரணம் இருக்கிறது. ஆம் புனர்வி ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்டவள், அதுவும் அவள் தந்தையை பழிவாங்க இப்படி ஒரு அநியாயம் அவளுக்கு நடைப்பெற்றது.

புனர்வி எட்டாம் வகுப்பு படிக்கும் போதே அவர்கள் குடும்பம் அவளின் தந்தையின் வேலை குறித்து  டெல்லிக்கு மாற்றலாகி சென்றார்கள். அவளின்  தந்தை டெல்லி காவல் துறையில் ஒரு உயர் பதவியில் இருக்கும் ஐ.பி.எஸ் அதிகாரி. அவள் பள்ளி படிப்பை முடித்து கல்லூரிக்கு போக இருந்த சமயத்தில் தான் புனர்விக்கு அந்த சம்பவம் நடந்தது.

ஒரு பெண்ணுக்கு நடந்த பாலியல் கொடுமையில் குற்றவாளிக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கும் முயற்சியில் புனர்வியின் தந்தை தீவிரமாக இருக்க, அந்த குற்றவாளி பெரிய அந்தஸ்தில் உள்ளவன் என்பதால், அந்த வழக்கிலிருந்து விலகிக் கொள்ளும்படி புனர்வியின் தந்தைக்கு எத்தனையோ மிரட்டல்கள் வந்தும் பொருட்படுத்தாமல் அவர் அந்த குற்றவாளிக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கவும், அந்த கோபத்தில் புனர்வியின் மீது ஆசிட் தாக்குதல் நடத்தினார்கள். 

தோழிகளோடு வெளியில் சென்றிருந்த புனர்வி, அவர்களோடு பேசியப்படியே வந்த போது, அவள் முன் இரண்டு ஆண்கள் வந்து நிற்கவும், அவர்கள் செய்ய போகும் விபரீதம் தெரியாமல் அவள் முன்னால் வந்து நின்றவர்களை அவள் கேள்வியோடு பார்க்க, அவள் எதிர்பராத நேரம் ஒருவன் அவள் முகத்தில் ஆசிட்டை ஊற்றவும், அவள் பதறி வலியாலும் எரிச்சலாலும் முகத்தை கைகளால் மூட, இன்னொருவனும் அவளின் மீது ஆசிட்டை ஊற்ற அது அவள் கைகளிலும் பட்டது.

அவள் அந்த வலியின் வேதனையில் துடித்துக் கொண்டிருந்ததை பார்த்து கொஞ்சமும் கவலைக் கொள்ளாமல் அந்த இருவரும் சென்றுவிட, பின் அவளின் தோழிகள் தான் முதலில் ஆம்புலன்ஸை அழைத்து, பின் புனர்வியின் தந்தைக்கு சொல்லி என்று அவசர நடவடிக்கைகள் எடுத்தனர்.

அவளுக்கு மட்டுமல்லாமல் வெளியில் சென்றிருந்த புனர்வியின் தாயாரையும் விபத்துக்குள்ளாக்கினார்கள்.

அந்த பிரச்சனையை புனர்வியின் தந்தை சட்ட ரீதியாக பார்க்க, யார் செய்தார்களோ அவர்கள் மாட்டிக் கொண்டனர். ஆனால் செய்ய சொன்னவர்களை அவர்கள் காட்டிக் கொடுக்காததால், அவர்களுக்கு மட்டுமே தண்டனை வாங்கிக் கொடுக்க முடிந்தது. புனர்விக்கும் அவளது தாயாருக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. புனர்விக்கு ஓரளவுக்கு காயங்கள் சரியானாலும் ஆசிட் தாக்குதலால் சிதைந்து போன தன் முகத்தை பார்க்க பிடிக்காமல் அவள் அழுது தீர்த்தாள். யாரையும் பார்க்க பிடிக்காமல் அறையிலேயே முடங்கியிருந்தாள்.

அதுமட்டுமில்லாமல் பொறியியல் கல்லூரிக்கு செல்வதற்கு தயாராக இருந்தவள், இப்போது கல்லூரிக்கே செல்ல போவதில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தாள். அவளுக்கு மனநல மருத்துவரை வைத்து அவளுடன் பேசி அவளுக்கு ஆலோசனைகள் கொடுக்கப்பட்டாலும், கொஞ்சம் தான் அவள் மாறியிருந்தாள்.

அவளுக்கு இன்னும் மாற்றம் வேண்டுமென்பதற்காக சாம்பவி தான் அவளை சென்னைக்கு அழைத்து வந்தார். சாம்பவி புனர்வியின் மூத்த சகோதரி பூர்வியின் மாமியார்.

பூர்வியும் சாம்பவியின் மூத்த மகன் மதனும் ஒரே இடத்தில் வேலை பார்க்கும் போது காதலித்து குடும்பத்தாரின் சம்மதத்தோடு திருமணம் செய்துக் கொண்டார்கள். கணவரின் வேலை நிமித்தமாக சாம்பவி டெல்லிக்கு வந்தவர், கணவர் இறந்த பின்பும் தன் இரு மகன்களுக்காக டெல்லியிலேயே இருந்தார்.

இதில் மூத்த மகனுக்கு திருமணம் ஆனதும், சென்னைக்கே வந்து தன் சேவைப் பணியை தொடர்ந்தவர், இப்போது முழுக்க முழுக்க ஹெச்ஐவி நோயால்  பாதிக்கப்பட்ட குழந்தைகளின்

சிகிச்சைக்கான பணம் திரட்டுவதும், அவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்வதும் என அந்த பணியில் தன்னை ஈடுப்படுத்திக் கொண்டார். 

அன்னைக்கு துணையாக மயூரனும் தன் வேலையை சென்னைக்கே மாற்றிக் கொண்டு வந்து விட்டான். இந்த சம்பவம் நடைப்பெற்ற நேரம் பூர்வியும் மதனும் சாம்பவியை பார்க்க சென்னைக்கு வந்திருந்தனர். புனர்வியின் விஷயம் கேள்விப்பட்டதும் அனைவரும் பதறியப்படியே டெல்லிக்கு சென்றனர்.

பின் சாம்பவி சிறிது நாட்களிலேயே சென்னைக்கு திரும்பியவர், புனர்வி அறைக்குள் அடைந்து கிடப்பதை கேள்விப்பட்டு அவளை சென்று பார்த்தவர், மீண்டும் அவளை சென்னைக்கு அழைத்து வந்தார். அவளிடம் பக்குவமாக பேசி ராகமயாவும் தவமலரும் படிக்கும் கல்லூரியில் அவளை பி.ஏ சோஷியாலஜி பிரிவில் சேர்த்துவிட்டார். 

மருத்துவராலும் சாம்பவியாலும் புனர்வியை தனிமையிலிருந்து கொஞ்சம் தான் மீட்க முடிந்தது. அதன்பிறகு அவளை சகஜ நிலைக்கு கொண்டு வந்தது ராகமயாவும் தவமலரும் தான், அவர்களின் நட்பு தான் அவளை முற்றிலுமாக மாற்றியது. 

இப்போதோ இப்படி தனக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது. முதலில் அது பிரச்சனையே இல்லை, அதற்காக கவலைப்பட தேவையில்லை என்பதை அவள் தோழிகள், சாம்பவி, மயூரன், மற்றும் அவளின் குடும்பத்தார் உணர வைத்தனர். ஆனாலும் வெளி உலகம் அவளை பார்க்கும்போது, ஒன்று பரிதாபமாகவோ, இல்லை அறுவறுப்பாகவோ, இல்லை ஏதோ அதிசயத்தை பார்ப்பது போலவோ தான் பார்க்கின்றனர். அது அவளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்றாலும், அவளை பார்த்து அவர்கள் ஏன் கவனத்தை சிதற விட வேண்டும் என்று நினைத்து தான் முகத்தை துணியால் மூடிக் கொள்வாள்.

புனர்வியின் அன்னைக்கு விபத்தில் தலையில் அடிப்பட்டு கொஞ்சம் மனநிலை பாதிக்கப்பட்டது. ஒரு சமயம் சாதாரணமாக இருப்பார். இன்னொரு சமயம் மனநலம் பாதிக்கப்பட்டது போல் பேசுவதும் நடந்துக் கொள்வதுமாக இருப்பார்.

புனர்வியை மாற்றுவதற்காக தங்களை தேற்றிக் கொண்டு அவளுக்காக கவலையை மறக்க அவளை சார்ந்தவர்கள் பழகிக் கொண்டார்கள். ஆனால் புனர்வியின் அன்னையால் அது முடியவில்லை. புனர்வியின் எதிர்காலம், திருமணம் பற்றிய கவலையில் அவர் உடல்நிலையும் மனநிலையும் மோசமாக, அவருக்கு புரிந்துக் கொள்ளும் பக்குவமும் இப்போது இல்லை, அவரை அதிகமாக கவலைப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்று மருத்துவர் கூறினர்.

அந்த நிலையில் தான் புனர்விக்கும் மயூரனுக்கும் திருமணம் செய்து வைத்தால், புனர்வியின் அன்னைக்கு கொஞ்சம் சரியாக வாய்ப்பு இருப்பதாக மதன் தான் யோசனை கூறியவன், சாம்பவியிடம் பேச அவரும் சம்மதித்தார்.

பின் பூர்வி, மதன் இருவரும் மயூரன், புனர்வியிடம் பேச, இருவரும் தனியாக மனம் விட்டு பேசியவர்கள், பின் திருமணத்திற்கு சம்மதிக்க, டெல்லியில்  வீட்டிலேயே எளிமையாக இரு வீட்டாரின் முன்னிலையில் ஆறுமாதத்திற்கு முன்பு தான் அவர்களின் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. புனர்வியின் படிப்பு முடிந்ததும் இருவரின் திருமணத்தை நடத்தலாம் என்று முடிவு செய்திருந்தனர். புனர்வியும் ரகமயாவும் சாம்பவியுடன் தங்கியிருப்பதால், தனது அலுவலகத்துக்கு அருகிலேயே மயூரன் தனியாக ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறான்.

புனர்வி இன்னும் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு வர, “இந்த உம்மணாம்மூஞ்சி முகம் உனக்கு நல்லாவே இல்ல புவி, சரி விடு, ஏதோ அவங்களுக்கு இது நல்ல நேரம்னு எடுத்துப்போம், பாவம் காதலிக்கிறேன்னு சொல்லிட்டு காலம் முழுக்க உங்கக் கூட இருந்து அவஸ்தை படணுமே, அந்த அளவில் பசங்களெல்லாம் தப்பிச்சிட்டாங்கன்னு வச்சிப்போம்,” என்று மயூரன் சிரித்தப்படியே கூற,

“ஹே உன்னோட அத்தான் என்ன சொல்றாருன்னு தெரியலையா? உன்கிட்ட மாட்டிக்கிட்டதா மறைமுகமா சொல்றாரு புவி,” என்று ராகமயா அவனை மாட்டிவிட்டாள்.

“அப்படியா அத்தான், என்னடா இவக்கிட்ட மாட்டிக்கிட்டோமேன்னு நினைக்கிறீங்களா?” என்று அவனைப் பார்த்து புனர்வி கேட்க,

“அம்மா தாயே, உன்னை நம்பாம பேசினதுக்கு என்னை மாட்டிவிடப் பார்க்கிறீயா? கொஞ்சம் அமைதியா வர்றீயா?” என்று அவன் ராகமயாவை பார்த்துக் கூற, 

“அது,” என்று சொல்லி ராகமயா சொல்லவும், மூவரும் சிரித்தனர்.

பின் கல்லூரி வரவும் புனர்வி துப்பட்டாவை முகத்தில் கட்டிக் கொள்ள, மயூரன் காரை நிறுத்தியதும்,  இருவரும் காரிலிருந்து இறங்கினர். அதேநேரம் தவமலரும் செல்லதுரையின் இருசக்கர வாகனத்தில் வந்து இறங்கினாள்.

“ஹே தவா, ” என்று அழைத்த புனர்வி, 

“எப்படி அப்பா இருக்கீங்க?” என்று செல்லதுரையை விசாரித்தாள்.

“ம்ம் நல்லா இருக்கேன் ம்மா, நீ எப்படி இருக்க? என்று அவரும் பதிலுக்கு விசாரிக்க,

“நல்லா இருக்கேன் ப்பா,” என்று அவரிடம் கூறியவள்,

“என்னடி அப்பாவோட வர, உன்னோட வண்டி எங்க?” என்று தவமலரை பார்த்துக் கேட்க,

“அப்பாவை பத்தி தான் உனக்கு தெரியுமே, அவசரமா கிளம்பினதால வண்டி எடுத்துக்க வேண்டாம்னு சொல்லிட்டாரு, ஆமா உன் வண்டிக்கு என்னாச்சு?” என்று அவள் திருப்பிக் கேட்டாள்.

“ம்ம் பன்ச்சர், எங்க? எப்படி ஆச்சுன்னு தெரியல,” என்று சொல்லிக் கொண்டிருக்க,

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த நேரம், காரில் தன் பையை வைத்துவிட்டு இறங்கியிருந்த ராகமயா, அதை எடுப்பதற்காக குனிந்தவள்,  “வண்டி பன்ச்சர் ஆனதும் புவி ஆட்டோ வேண்டான்னு சொன்னதால உடனே உங்களுக்கு ஒரு மெசேஜ் தட்டி விட்டேன், ஆனா நீங்க வர மாட்டீங்கன்னு தான் நினைச்சேன், ஆனா வந்துட்டீங்க, ரொம்ப நன்றி,” என்று மயூரனை பார்த்து கூறினாள்.

“ஆமா புவி பஸ்ல போகணுமே அதான் உடனே வந்தேன். நீ கூப்பிட்டதால தான் வந்தேன்னு நீ நினைச்சுக்கிட்டீயா?’ என்று அவன் கேட்க,

அவனை முறைத்தவள், “நானும் புவிக்காக தான் உங்களுக்கு மெசேஜ் அனுப்பினேன், என்னமோ எனக்காக கூப்பிட்டதா நினைச்சுக்கிட்டீங்க போல, அப்படி ஒன்னும் உங்களை கூப்பிடணும்னு எனக்கு அவசியமில்ல,” என்று கோபமாக கூறினாள்.

அவள் கோபம் அவனை பாதிக்காதது போல், செல்லதுரையை பார்த்ததால் காரிலிருந்து இறங்கியவன், “எப்படி இருக்கீங்க அங்கிள்,” என்று அவரை விசாரிக்க, அவளோ இன்னமும் அவனை முறைத்தப்படியே நின்றிருந்தாள்.

“அதைப் பார்த்த தவமலரோ, “ஹே ராகா, என்னடி மயூ அத்தானை இப்படி முறைக்கிற,” என்றுக் கேட்க,

“அதுவா, எனக்கு தெரியும் நான் சொல்றேன்,” என்று புனர்வி சொல்லவும், ராகமயா அவளை அதிர்ச்சியாக பார்க்க,

“பஸ் ஸ்டாப்ல நாங்க நின்னுக்கிட்டு இருந்தோமா,” என்று புனர்வி சொல்ல ஆரம்பிக்கவும், அதில் பயம் விலக,

“ஹே இப்போவே அதை சொல்லணுமா? காலேஜுக்கு டைம் ஆச்சு, வாங்கடி உள்ளே போகலாம்,” என்று ராகமயா அவர்களது பேச்சுக்கு முற்றுபுள்ளி வைத்தாள்.

அதற்குள் செல்லதுரையிடம் பேசி முடித்த மயூரன், “புவி, ஈவ்னிங் என்னால வர முடியாது, வேலை விஷயமா வெளியூருக்கு போக வேண்டியிருக்கு, அதனால பஸ்ல போகாம, ஒரு கால் டாக்ஸி புடிச்சு வீட்டுக்கு போயிடுங்க, நான் அம்மாக்கிட்ட போன்ல பேசிக்கிறேன்,” என்றான்.

“அப்பா, நீங்களும் ஈவ்னிங் வர வேண்டாம் ப்பா, நான் புவி, ராகாவோடவே வந்துட்றேன்,” என்று தவமலர் செல்லதுரையிடம் கூற,

“சரி பார்த்து வாங்க.” என்று மூவருக்கும் பொதுவாக கூறியவர், தன் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.

மயூரனும் தனது காரில் ஏறி அமர்ந்தவன், “புவி, அப்புறம் ஒரு முக்கியமான விஷயம், என்னோட ப்ரண்ட் நவிரன் கலிஃபோர்னியால இருந்து வரான், நாளைக்கு ப்ளைட் சென்னைல லேண்ட் ஆகுது, இப்போ பார்த்து எனக்கு வெளியூர் போகும் வேலை வந்துடுச்சு, அதனால நீதான் அவனை ஏர்போர்ட்ல இருந்து கூட்டிட்டு வரணும், அதுமட்டுமில்ல அவனுக்கு சென்னை அவ்வளவா பழக்கமில்ல, அவன் என்னோட தான் தங்கப் போறான், அதனால அவனை என்னோட அப்பார்ட்மெண்ட்க்கு கூட்டிட்டு போய் காட்டிட்டா போதும், அப்புறம் அவன் மேனேஜ் செஞ்சுப்பான், நாளைக்கு நைட் நான் வந்துடுவேன், இந்த உதவி மட்டும் செய்ய முடியுமா?” என்று கேட்க,

“என்ன அத்தான் இப்படி கேட்கிறீங்க, கண்டிப்பா செய்றேன்,” என்று அவள் கூறினாள்.

“சரி டீடெயில்ஸ் உனக்கு மெசேஜ் அனுப்புறேன், அவனுக்கும் நீதான் வருவேன்னு மெசேஜ் அனுப்பிட்றேன்,” என்று சொல்லிவிட்டு அவன் கிளம்ப,

 நவிரன் வருகிறான் என்று மயூரன் சொன்னதை  கேட்ட அந்த நிமிடமே ராகமயா அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள்.

ஊஞ்சலாடும்..