AO 2
Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அன்பு 2
இந்தியா
சென்னை, அண்ணாநகரில் உள்ள அந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேரம் காலை எட்டு மணி முப்பது நிமிடங்களுக்கு மேல் ஆகியிருக்க, நான்காவது மாடியில் உள்ள அந்த வீட்டின் படுக்கையறை கட்டிலில் கையில் அலைபேசியை வைத்தப்படி ராகமயா எதையோ தீவிரமாக யோசித்தப்படி அமர்ந்திருந்தாள். குளித்துவிட்டு உடலில் வெறும் டவலை மட்டும் சுற்றிக் கொண்டு அங்கு வந்த புனர்வி அவளை கவனித்துவிட்டு, அவள் அருகில் வந்து அவள் கையில் இருந்த அலைபேசியை பிடுங்க,
புனர்வி இப்படி செய்வாள் என எதிர்பார்க்காத ராகமயா, அவளது செயலில் அதிர்ச்சியாகி, “ஹே புவி என்னோட மொபைலை கொடு,” என்று எழுந்து சென்று வாங்க முற்பட்டாள்.
“அப்படி என்னத்தான் இந்த மொபைலை பார்த்து யோசிச்சிட்டு இருக்க, நானும் கொஞ்ச நாளா பார்க்கிறேன், நீ சரியே இல்ல, அப்பப்போ மொபைலை வச்சிக்கிட்டு இப்படி ஏதாவது யோசனைக்கு போயிட்ற, அப்படி என்னத்தான் இருக்கு மொபைலில்,” என்று சொல்லி அலைபேசியை உயிர்ப்பிக்க போக,
அதற்குள் அவள் கையில் இருந்த அலைபேசியை ராகமயா பிடுங்கி, “இந்த காலத்தில் அதுவும் காலேஜ் கேர்ள் அப்படி என்ன மொபைலை பார்க்கிறன்னு கேக்கறது அதிசயம் தான், இப்படி வெளிய போய் கேட்டு வைக்காத சிரிப்பாங்க, நான் தான் ஃபேஸ்புக்ல ஒரு கவிதை க்ரூப்ல சேர்ந்திருக்கேன், அங்க கவிதை பதிவிடுவேன்னு உனக்கு தெரியாதா?
காலையில் அங்க ஒருத்தரோட பதிவை பார்த்தேன், அதுக்கு பதிலுக்கு நான் ஒரு கவிதையை பதிவிட்டேன். அந்த கவிதையை பத்தி யோசிச்சிட்டு இருந்தேன், ஆமாம் என்ன சொல்றீயே, குளிக்க போகும் போது கூட மொபைலை எடுத்துக்கிட்டு போறது நீதான், அதுக்கு என்ன சொல்ற?”
“அது குளிக்கும் போது பாட்டுக் கேட்டுக்கிட்டே, ஹம்மிங் செஞ்சுக்கிட்டே குளிப்பேன், அது உனக்கு தெரியாதா?”
“நல்லா குளிச்ச போ, எப்போ பாத்ரூம்க்குள்ள போன? எப்போ வர? அரைமணி நேரமா ஜாலியா பாட்டுக் கேட்டுக்கிட்டு குளி, உன்னால காலேஜுக்கு லேட்டா ஆகப் போகுது, சரி தள்ளு நான் போய் குளிச்சிட்டு வரேன்,” என்றவள், கையில் அலைபேசியை எடுத்துக் கொண்டே குளியலறைக்குள் நுழைய,
“என்னை சொல்லிட்டு நீ எதுக்கு ராகா மொபைலை கையில் எடுத்துட்டு போற, இங்கேயே வச்சிட்டு போ, உன்னோட அனுமதியில்லாம உன்னோட மொபைலை எடுத்து ஆராய மாட்டேன்,” என்று புனர்வி கூறினாள்.
“அய்யோ அதுக்காக எடுத்துட்டு போகல புவி, உன்கிட்ட பேசிக்கிட்டே மறந்து எடுத்துட்டு போயிட்டேன், உனக்கும் தவாக்கும் தெரியாம எனக்கு என்ன ரகசியம் இருக்கப் போகுது, இந்தா மொபைலை பிடி,” என்று புனர்வி கையில் கொடுத்தாலும்,
புனர்வி சொன்னது போல் ஒருவேளை எதேச்சையாக கூட அலைபேசியை பார்த்து அவள் எதுவும் தெரிந்துக் கொள்ளக் கூடாது என்ற நினைப்பில் தானே கையோடு அலைபேசியை கொண்டு வந்தாள். அதை நினைக்கும்போது ராகமயாவிற்கு மனதில் கொஞ்சம் உறுத்தலாகவே இருந்தது.
அந்த உறுத்தலோடு அவசர அவசரமாக குளித்துவிட்டு குளியலறையிலேயே கல்லூரி செல்வதற்கான சுடிதாரின் மேல் பகுதியை அணிந்துக் கொண்டு வெளியே வரும்போது, புனர்வி காலை தொடும் நீளமான பாவைடையும், முழுக் கைகளையும் மறைக்கும்படியான மேல் சட்டையையும் அணிந்திருந்தவள், தன் தலையை பின்னிக் கொண்டிருந்தாள்.
அந்த நேரம் வீட்டின் அழைப்பு மணி அடிக்கவும், சாம்பவி காலையிலேயே கோவிலுக்கு சென்றுவிட்டு வருவதாக சொல்லிவிட்டு சென்றதால், ராகமயா அரைகுறை ஆடையோடு இருக்கவே, புனர்வி சென்று தான் கதவை திறக்க வேண்டும்,
அழைப்பு மணி தொடர்ந்து அடிக்கவும், அவசரமாக கையின் நிறத்திலே இருந்த க்ளவுஸை இரு கைகளிலும் அணிந்துக் கொண்டவள், வண்டி ஓட்டும் பெண்கள் அணிவது போல் துப்பட்டாவை முகத்தில் இறுக்கமாக இல்லாமல் கொஞ்சம் தளர்வாக கட்டிக் கொண்டு அறையை விட்டு வெளியே செல்ல,
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
அதைப்பார்த்த ராகமயாவிற்கோ, வீட்டில் மட்டும் தான் புனர்வி இயல்பாக இருப்பது, அதையும் கெடுக்கும்படி யார் வந்து இப்படி விடாமல் அழைப்பு மணி அடிப்பது? என்று நினைத்துக் கொண்டே அவளது வேலையைப் பார்க்க, புனர்வி சென்று கதவை திறந்தாள்.
அங்கே ஒரு நடுத்தர வயது மற்றும் இள வயது பெண்மணிகள் இருவர் நின்றுக் கொண்டிருந்தனர். அந்த நடுத்தர வயது பெண்மணி இந்த குடியிருப்பில் தான் மூன்றாவது மாடியிலோ, இல்லை இரண்டாவது மாடியிலோ இருக்கிறார். அவரை அடிக்கடி இங்கு புனர்வி பார்த்திருக்கிறாள்.
அந்த இளவயது பெண்மணி அவரின் மகளாக இருக்க வேண்டும், பார்ப்பதற்கு அவரின் ஜாடையில் இருந்தாள். இவர்களின் வயதுடையவளாக தான் தெரிந்தாள். திருமணம் ஆனதற்கு அடையாளமாக கழுத்தில் தாலி சங்கிலி இருந்தது.
புனர்வி அவர்களை அளவிட்ட அதே நேரம் அவர்களும் அவளையே வித்தியாசமாக பார்த்துக் கொண்டிருந்தனர். எப்போதும் அவள் கல்லூரிக்கு செல்ல தன் இருசக்கர வாகனத்தை எடுக்கும்போது தான் அந்த நடுத்தர வயது பெண்மணி அவளை பார்த்திருக்கிறார். அப்போது அவள் இதுபோல் முகத்தில் துணி கட்டிக் கொண்டிருப்பாள். ஆனால் இப்படி விட்டிலேயே அவள் முகத்தில் துணி கட்டியிருப்பதை கண்டு அவர் யோசனையோடு பார்க்க,
அதையெல்லாம் கண்டுக் கொள்ளாதவளாக, “உங்களுக்கு என்ன வேணும்?” என்று புனர்வி அவர்களை பார்த்து கேட்டாள்.
“சாம்பவி அக்கா இல்லையா?” என்று அந்த நடுத்தர வயது பெண்மணி கேட்க,
“அத்தை கோவிலுக்கு போயிருக்காங்க, மதியத்துக்கு மேல தான் வருவாங்க, ஏதாச்சும் சொல்லணும்னா என்கிட்டேயே சொல்லுங்க, இல்ல மதியத்துக்கு மேல வந்து அத்தையை பாருங்க,” என்று அவள் பதில் கூறினாள். பேசுவதற்கு இலகுவாக இருக்க வேண்டுமென்பதால் தான் அவள் முகத்தில் துப்பட்டாவை தளர்வாக கட்டிக் கொண்டு வந்தாள்.
“அய்யோ மதியத்துக்கு மேலேயா, அதுக்குள்ள இவ கிளம்பிடுவாளே,” என்று புனர்வியின் பதிலுக்கு அந்த பெண்மணி கவலையோடு சொல்ல,
“ஆமாம் என்ன விஷயம்? பரவாயில்லை என்கிட்ட சொல்லுங்க,” என்று புனர்வி கேட்டாள்.
“அது என் பெண்ணோட புகுந்த வீட்டில் அவளோட மாமியார் ரொம்ப பிரச்சனைக்கு செய்றாங்க, கொஞ்ச நேரம் இவ புருஷனோட பேசி சந்தோஷமா இருந்தா அவங்களுக்கு பொறுக்கல, உடனே இந்த வேலை செய், அந்த வேலை செய்யுன்னு அதிகாரம் செய்றது, எப்போ பார்த்தாலும் சிடுசிடுன்னு பேசறது,
இவ புருஷன்கிட்ட சொன்னா, அவர் அவங்க அம்மாக்கு சார்பா தான் பேசறார், இங்க வந்து அந்த வீட்டில் நான் இருக்க மாட்டேன்னு ஒரே அழுகை,” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ராகமயாவும் தயாராகி அறையிலிருந்து வெளியே வந்தாள்.
சாம்பவி ஒரு சமூக சேவகி, எந்த பிரச்சனை என்று உதவிக் கேட்டு யார் சென்றாலும், அவர்களது பிரச்சனைகளை அவரால் முடிந்த அளவுக்கு தீர்த்து வைப்பார். அதனால் அந்த குடியிருப்பில் யாருக்கு என்ன பிரச்சனை என்றாலும் அவரிடம் ஆலோசனை கேட்பர். அதனால் இருவரும் அவரை தேடி வந்தனர்.
அவர் சொன்னதை கவனமாக கேட்ட புனர்வி, “இங்கப் பாருங்க, இதுக்கெல்லாமா பஞ்சாயத்துக்கு போவாங்க, அதனால இவளோட வாழ்க்கையில் பிரச்சனை அதிகமாயிட்டா என்ன செய்றது?” என்றுக் கேட்டாள். அதற்கு அந்த இள வயது பெண் மிரட்சியோடு பார்க்க,
“இங்கப்பாரும்மா, சின்ன சின்ன பிரச்சனைக்கெல்லாம் அழுதுக்கிட்டு அம்மா வீட்டுக்கு வரலாமா? இதையெல்லாம் அங்க இருந்தே தீர்த்துக்கணும்,
எப்படின்னா, உன்னோட மாமியார் எள்ளுன்னு சொல்றதுக்கு முன்ன நீ எண்ணெயா நின்னுடணும் அதாவது அவங்க உன்கிட்ட வேலை சொல்றதுக்கு முன்ன நீயா அந்த வேலையை செஞ்சுடணும், அப்புறம் உன்னோட புருஷன் வீட்டில் இருக்க நேரம் நீ அவரை கூட கவனிக்க போகாம எதுவும் வேலை இல்லன்னா கூட வேலை இருக்க மாதிரி ஏதாவது செஞ்சுக்கிட்டே இருக்கணும்,
அதேபோல உனக்கு தெரிஞ்ச விஷயமா இருந்தாலும், அத்தை இது இப்படி தானே, அது அப்படி தானேன்னு உனக்கு தெரியாத மாதிரி உங்க மாமியார்க்கிட்ட காட்டிக்கணும், இப்படியெல்லாம் நீ செஞ்சேன்னு வையேன், அவங்களுக்கு மருமக நமக்கு மதிப்பு கொடுக்கிறான்னு நினைப்பாங்க, அவங்களே ஏன் எப்போ பார்த்தாலும் வேலை செய்ற, உன்னோட புருஷன் கூட கொஞ்ச நேரம் பேசிட்டு இருன்னு சொல்வாங்க,
அதேபோல உன்னோட புருஷனும் நீ எப்போ பார்த்தாலும் வேலை செய்றதை பார்த்தா, நம்ம பொண்டாட்டி எவ்வளவு கஷ்டப்பட்றான்னு தோன ஆரம்பிச்சிடும், அதுவுமில்லாம அவங்க அம்மாக்கிட்ட நீ பாசமா இருப்பது அவருக்கு பிடிக்க ஆரம்பிச்சுடும், நீ அவரை கண்டுக்காம இருப்பதால, என்ன இவ நம்மள கண்டுக்க மாட்டேங்குறான்னு பொறாமைப் பட ஆரம்பிச்சுடுவாரு,
அப்புறம் அவரே உன்னை சுத்தி சுத்தி வருவாரு, அவங்க அம்மாவே உன்னைப் பத்தி சொன்னாலும் சந்தேகப்பட மாட்டாரு, முதலில் உன்னோட மாமியாரே உன்னை குறை சொல்ல மாட்டாங்க,” என்று புனர்வி அந்த பெண்ணுக்கு யோசனை கூற,
“நீங்க சொல்றது போல செஞ்சா இதெல்லாம் நடக்குமா?” என்று அந்த பெண்ணும் கேட்டாள்.
“நான் சொல்றதை முயற்சி செஞ்சுப் பாரு, எல்லாம் நல்லதாவே நடக்கும், அதை விட்டுட்டு வெளி ஆளுங்கக்கிட்ட இந்த பிரச்சனையை கொண்டு போனா, உன்னோட புருஷனுக்கு அது ஈகோ பிரச்சனையா ஆகிடும், அவருக்கு உன்னை பிடிக்காம கூட போயிடலாம்,” என்று சொல்ல,
“அய்யய்யோ வேண்டாம், அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும், நான் நீங்க சொல்றது போல நடந்துப் பார்க்கிறேன்,” என்று அந்த பெண் கூறினாள்.
அந்த நடுத்தர வயது பெண்மணியை பார்த்து, “எதுக்கும் அத்தை வந்ததும் இந்த விஷயத்தை சொல்றேன், அவங்க என்ன நினைக்கிறாங்கன்னும் கேட்டுக்கலாம், இப்போதைக்கு உங்க பெண் நான் சொன்னது போல அங்க இருக்கட்டும், அதுக்குப்பிறகும் பிரச்சனை சரியாகலன்னா, அப்போ என்ன செய்யலாம்னு யோசிப்போம்,” என்று புனர்வி சொல்ல,
“சரிம்மா, நீ சொல்றதும் சரி தான், அவ அதுபோல அங்க இருந்துப் பார்க்கட்டும்,” என்றார்.
பின் இருவரும் புறப்பட்டுச் சென்றதும், சாம்பவி செய்து வைத்திருந்த இட்லி, சாம்பாரை இரண்டு தட்டுகளில் வைத்து உணவு மேசைக்கு கொண்டு வந்த ராகமயா, “ஹே புவி, அத்தை இல்லாத சமயம் அந்த பெண்ணுக்கு ஐடியா சொன்னதெல்லாம் ஓகே தான்,
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
ஆனா எப்போதும் பெண்கள் நாம தான் அடங்கிப் போகணுமா? அந்த பெண்ணோட மாமியார் எதுக்கு பையனுக்கு கல்யாணம் செஞ்சு வைக்கிறாங்க, புதுசா கல்யாணம் ஆனவங்களுக்கு கொஞ்சமாவது தனிமை வேண்டாமா? ஆனா அவங்க அதை கெடுக்கப் பார்க்கிறாங்களே, இது தப்பில்லையா? அவங்கக்கிட்ட அனுசரிச்சு தான் போகணுமா? அப்போ அவங்க தப்பை அவங்க உணர மாட்டாங்களே,” என்று கேட்க,
“அவங்க என்ன பெரிய கொலை குத்தமா செஞ்சுட்டாங்க, இத்தனை நாள் பிள்ளையை பொத்தி பொத்தி வளர்த்திருப்பாங்க, கல்யாணம் முடிஞ்சதும், புருஷன் பிள்ளைங்க தான் உலகம்னு வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடந்திருப்பாங்க, திடீர்னு மருமக வரவும் எங்க அவ பிள்ளையை கைக்குள்ள போட்டுப்பாளோன்னு பயம் தான், வெளி உலக அனுபவம் அவங்களுக்கு அதிகமா இருந்ததுன்னா அப்படி தோனாது,
அதேபோல தான் புதுசா கல்யாணம் ஆகும் பெண்களும், வீட்டில் செல்லமா வளர்ந்துட்டு, யார் கொஞ்சம் கோபமா பேசிட்டாலும் அதை பெருசா எடுத்துக்கிறது, அந்த பெண்ணோட அம்மா கொஞ்சம் கோபமா பேசினா அவளுக்கு பெருசா தெரியுமா? ஆனா அதுவே மாமியார் பேசினா அதை பெருசா எடுத்துக்கிறது, அதை ஒரு பெரிய பிரச்சனையா வச்சு கணவன் கூட சண்டை போட்றது, அதனால குடும்பம் உடைஞ்சு போறதுன்னு எத்தனை குடும்பத்தில் நடக்குது,
இப்படி சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு விட்டுக் கொடுத்து போனா தப்பில்ல, ஆனா அதுவே அவளோட தன்மானத்தை சீண்டிப் பார்ப்பது போல நடந்தா பெண்கள் அதையும் பொறுத்து போகணும்னு இல்ல, அப்போ எதிர்த்து நிற்பதில் தப்பு கிடையாது,” என்று விளக்கமாக கூறினாள்.
“ம்ம் புரியுது புவி, சாம்பவி அத்தையோட வருங்கால மருமகள்னு நல்லா நிரூபிக்கிற, சரி காலேஜுக்கு நேரமாகுது வா,” என்று ராகமயா சொல்ல, இருவரும் வேகமாக சாப்பிட்டனர்.
பின் இருவரும் வீட்டை பூட்டிக் கொண்டு புனர்வியின் இருசக்கர வாகனம் நிறுத்திய இடத்திற்கு வந்து, புனர்வி அவளது வாகனத்தை எடுக்க, “அய்யோ வண்டி பன்ச்சர் போல புவி,” என்று ராகமயா சொல்லவும் தான், புனர்வியும் அதை கவனித்தாள்.
“அய்யோ ஆமாம், எப்படி இப்படி ஆச்சு, நேத்து நல்லாத்தானே கொண்டு வந்து வண்டியை விட்டேன்,” என்று புனர்வி புலம்பினாள்.
“இப்போ என்ன பண்றது, காலேஜுக்கு வேற டைம் ஆகுது,” என்று வாய்விட்டு கூறிய ராகமயா,
“சரி ஓலா புக் பண்ணலாம்,” என்று தன் அலைபேசியை எடுத்து ஆராய,
“ஹே ராகா, எதுக்கு ஆட்டோ, பஸ் ஸ்டாப் பக்கம் தானே அதனால பஸ்லயே போகலாம்,” என்று சொல்ல,
“காலேஜுக்கு டைம் ஆகும் புவி,” என்று ராகமயா வெளியில் சொன்னாலும், மனதிலோ, புனர்விக்கு அது சங்கடத்தை உருவாக்கும் என்றே ஆட்டோவை வரவழைக்க நினைத்தாள்.
“இல்ல ராகா, ஆட்டோ பக்கத்தில் இருந்தா பரவாயில்ல, அது தூரமா இருந்தா என்ன செய்றது? ஒவ்வொரு முறை ஆட்டோ பக்கத்துல இருப்பது போலத் தான் காட்டும், ஆனா வர லேட்டாகும், இல்ல கான்சல் ஆயிட்டு, அடுத்த ஆட்டோ புக் ஆகற வரை காத்திருக்கணும், அதுக்கு பஸ் பிடிச்சாலே போயிடலாம்,” என்று புனர்வி சொல்லவும், ராகமயாவும் தலையசைக்க இருவரும் பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்தனர்.
அவர்கள் பேருந்து நிறுத்ததிற்கு சென்ற அதே நேரம் சென்னை நுங்கம்பாக்கத்தில் தனது வீட்டில் தவமலர் அவசரமாக கல்லூரிக்கு செல்ல தயாராகியவள், சாப்பிடுவதற்காக உணவு மேசைக்கு வந்து, “அம்மா சீக்கிரம் டிஃபன் கொண்டு வா,” என்றுக் கேட்க,
“தோ எடுத்துட்டு வரேன்,” என்று சௌந்தரி சூடாக சுட்ட தோசையை தட்டில் வைத்து அதனுடன் தொட்டுக் கொள்ள சட்னியையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு வந்து வைத்துவிட்டு அவர் அடுத்த தோசை சுட சமையலறைக்குள் செல்ல,
தவமலரோ சூடான தோசையை அரக்க பரக்க வாயில் வைத்தவள், சூடு தாங்காமல் வாய்க்குள் வைத்தப்படியே ஆ, ஊ, என்று சொல்ல, அருகில் செய்தித்தாளை வைத்து படித்துக் கொண்டிருந்த செல்லதுரையோ,
“பார்த்து பொறுமையா சாப்பிடும்மா, சூடா எடுத்து வாயில் போட்டு நாக்கு சுட்டுடுச்சா, இவ்வளவு அவசரம் எதுக்கு?” என்று சொல்ல,
“காலேஜுக்கு டைம் ஆகுது ப்பா, அதான்,” என்றப்படியே அடுத்து தோசையை பிய்த்தவள், அதை ஊதி சாப்பிட,
“சீக்கிரமா எழுந்து கிளம்பினா, எதுக்கு லேட்டா ஆகப் போகுது, இப்படி அவசரமா வண்டியை ஓட்டிக்கிட்டு போக வேண்டாம், நான் கொண்டு போய் விட்றேன்,” என்றார்.
“அப்போ சாயந்தரம், புவி வண்டில ராகா, புவி ரெண்டுப்பேரும் போயிடுவாங்க, நான் பஸ்ல தனியா வரணும் ப்பா,”
“சாயந்தரமும் நானே வந்து கூட்டிட்டுப் போறேன், அதை விட எனக்கு வேற என்ன வேலை இருக்கு ம்மா, இப்படி பதட்டமா இருக்கப்போ தனியா வண்டி எடுத்துட்டு போக வேண்டாம்,” என்று அவர் முடிவாக சொன்னதும், சரியென்று தலையாட்டினாள்.
சௌந்தரி அடுத்த தோசை கொண்டு வந்து தட்டில் வைக்க, “கொஞ்சம் முன்னாடியே சுட்டு வச்சிருக்க கூடாதா ம்மா, பாரு சூடா இருக்கறதால சீக்கிரம் சாப்பிட முடியல,” என்று அவள் சொல்லவும், சௌந்தரி அவளை முறைத்தார்.
பின்னே கொஞ்சம் ஆறியிருந்தால் சூடாக எடுத்து வரக் கூடாதா? என்று கேட்பாள். இப்போது இப்படி என்பதால் அவருக்கு கோபம் வர, அதை கண்டுக் கொள்ளாதவள் போல் தவமலர் குனிந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அந்த நேரம் கணவரிடம் ஜாடையில் ஏதோ கேட்ட சௌந்தரி கணவர் சரி என்றதும்,
“தவாம்மா, நேத்து போட்டோ காமிச்சோமே, அந்த மாப்பிள்ளை வீட்டில் பெண் பார்க்க வரட்டுமான்னு கேட்கிறாங்க, உனக்கு அந்த பையனை பிடிச்சிருக்கா? வரச் சொல்லலாமா?” என்று மகளிடம் கேட்க,
“முதலில் மாப்பிள்ளைக்கு பிடிக்குதான்னு கேட்டுக்கோங்க, ஏன்னா இதுவரை போட்டோ பார்த்தே என்னை ரிஜெக்ட் செஞ்சுட்டாங்க, இப்போ பெண் பார்க்க வந்துட்டு, நான் கருப்பா இருப்பதால் என்னை வேண்டாம்னு சொன்னா அப்புறம் எனக்கு கோபம் வந்துடும்,
படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் செஞ்சுக்கறதா சொன்னவளை, இப்போ பார்த்தா தான் படிப்பு முடியும் போது கல்யாணம் முடிக்க சரியா இருக்கும்னு சொல்லி பார்க்க ஆரம்பிச்சீங்க, இதுவரை எத்தனை வரன் வந்தது, எல்லாம் போட்டோ பார்த்தே வேண்டாம்னு சொல்லிட்டாங்க,
அதனால இந்த இடத்தில் எல்லாம் தெளிவா கேட்டுட்டு அவங்களுக்கு சம்மதம்னா வரச் சொல்லுங்க, மத்தப்படி மாப்பிள்ளை இப்படி இருக்கணும் அப்படி இருக்கணும்னு எனக்கு எந்த கண்டிஷனும் இல்ல, என்னை கல்யாணம் செய்துக்க போறவன் நல்லவனா இருந்தா போதும், இதுவும் ஏதாச்சும் சொதப்புச்சு, அப்புறம் கொஞ்ச நாளுக்கு இந்த வரன் பார்க்கும் வேலையை தள்ளி வச்சிடுங்க,” என்று இதுதான் என் முடிவு என்பது போல் கூறினாள்.
“இந்த முறை அப்பா எல்லாம் தெளிவா கேட்டுட்டேன் தவாம்மா, மாப்பிள்ளைக்கு பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டானாம், அதனால் நாளை சாயந்தரம் பெண் பார்க்க வர்றதா மாப்பிள்ளை வீட்டில் சொல்லியிருக்காங்க, நீ சரின்னு சொன்னா அவங்களை வரச் சொல்லலாம்,” என்று செல்லதுரை கேட்க,
“நீங்க எனக்கு எல்லாம் சரியா செய்வீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்குப்பா, உங்களுக்கு ஓகேன்னா வரச் சொல்லுங்க,” என்று அவளும் சம்மதம் கூறினாள்.
“சௌந்தரி, அப்போ தரகர்க்கிட்ட மாப்பிள்ளை வீட்டில் நாளைக்கு வரச் சொல்ல சொல்லி சொல்லிட்றேன்,” என்றவர்,
“தவாம்மா நீ நாளைக்கு காலேஜ்ல இருந்து சீக்கிரம் வந்துடு, வேணும்னா நம்ம புவி, ராகாவை உதவிக்கு கூப்பிட்டிக்கோ,” என்று கூற,
“அய்யோ அதெல்லாம் வேண்டாம்,” என்று சௌந்தரி அவசரமாக கூறினார்.
அவர் அப்படி கூறியதும் தவமலரும் செல்லதுரையும் புரியாமல் பார்க்க, “இல்ல மாப்பிள்ளை வீட்டில் பையனை கூட்டிக்கிட்டு அப்பா, அம்மா மட்டும் தான் வராங்க, நாம ஏன் கூட்டத்தை சேர்க்கணும், முடிவான பிறகு அவங்க சொந்தக்காரங்களை கூட்டிட்டு வரும்போது நாமளும் புவி, ராகாவை கூப்பிட்டுக்கலாம்,” என்றார்.
ஆனால் உண்மையிலேயே அவர் மனதில் தோன்றியது என்னவென்றால், ராகமயா வெண் பளிங்கு சிலை போல் அழகாக இருப்பாள். அவள் தன் மகளின் அருகில் நின்றால், கருப்பாக இருக்கும் தன் மகளை வேண்டாமென்று சொல்லிவிடுவார்களோ என்பது தான் பயம், இதில் புனர்வி தவமலரோடு இருந்தால் ஒன்றும் பிரச்சனையில்லை தான், ஆனால் அவளையும் தான் வித்தியாசமாக பார்ப்பார்கள். அதனாலேயே அவர்கள் வேண்டாம் என்று நினைத்தார்.
ஆனால் அதை மகளிடமும் கணவரிடமும் கூறினால், நீயே அப்படி நினைக்கலாமா? என்று திட்டுவார்கள். உண்மையிலேயே அவர் அப்படியெல்லாம் நினைக்க கூடியவரில்லை தான், புனர்வியையும் ராகமயாவையும் தவமலரை போல் தன் மகள்களாக தான் நினைக்கிறார்.
ஆனால் மகளின் திருமணம் என்று வரும்போது அதையெல்லாம் தானாகவே மனம் யோசிக்கிறதே, மகள் பிறந்த போதே அவளின் தந்தையை போல் கருப்பாக பிறக்கவும், “பெண் பிள்ளை உன்னை கொண்டு நல்ல நிறத்தில் பிறந்திருக்கலாம், இப்படி கருப்பா இருப்பதால் மாப்பிள்ளை கிடைப்பது கஷ்டம்,” என்று உறவினர்கள் பேசியதை கேட்டதிலுருந்தே அவருக்கு உள்ளுக்குள் ஒரு பயம் உருவாகிவிட்டது.
அதனாலேயே தவமலர் கல்லூரியில் இளநிலை படிப்பை முடித்ததுமே அவளுக்கு திருமணத்தை முடித்துவிட துடித்துக் கொண்டிருக்க, அவள் மேலே படிக்க இருப்பதாக சொல்லவும், ஒரு வருடம் பொறுத்து கொண்டிருந்தவர், அவள் இரண்டாம் வருடம் அடியெடுத்து வைத்ததுமே அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கும் வேலையில் இறங்கிவிட்டார்.
ஆனால் இதுவரையில் புகைப்படத்தை பார்த்தே தவமலரை நிராகரிக்க, இந்த வரன் தான் வீட்டுக்கு வந்து பார்ப்பதாக சொல்லியிருக்கிறார்கள். அதனாலேயே அதில் எந்த தடையும் வந்துவிடக் கூடாதென அவர் மனம் கவலைக் கொள்ளவே இப்படியெல்லாம் மனம் யோசிக்க ஆரம்பித்துவிட்டது.
தான் சொன்னதை மகளும் கணவரும் நம்பி விட்டார்களா என்பது போல் சௌந்தரி அவர்களை பார்க்க, “அம்மா சொல்றதும் சரிதான் ப்பா, என்னை பெண் பார்க்க தானே வராங்க, இன்னும் முடிவாகலையே, அதுக்குள்ள எதுக்கு புவி, ராகாவை கூட்டிட்டு வரணும், அதெல்லாம் முடிவானா அப்புறம் பார்த்துக்கலாம்,” என்றாள்.
“எனக்கு என்னவோ இந்த வரன் உனக்கு முடிஞ்சிடும்னு தான் தோனுது தவாம்மா, ஆனா நீங்க ரெண்டுப்பேரும் சொல்றது போல் அவங்க வரட்டும், அப்புறம் பார்த்துக்கலாம்,” என்ற செல்லதுரை,
“சரி காலேஜுக்கு லேட்டாகுதுன்னு சொன்னீயே கிளம்பலாமா?” என்று கேட்டதும்,
“இதோ வரேன் ப்பா,” என்றவள், சாப்பிட்ட தட்டை சமையலறையில் கொண்டு போய் பாத்திரம் துலக்கும் இடத்தில் வைத்துவிட்டு, தனது அறைக்கு சென்று கல்லூரிக்கு கொண்டு போகும் பையை கொண்டு வந்தவள், தன் அன்னையிடம் போய் வருவதாக கூறிவிட்டு தந்தையுடன் கிளம்பினாள்.
ஊஞ்சலாடும்..