AO 15
Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அன்பு 15
வழக்கம் போல் அன்றும் புனர்வியும் ராகமயாவும் மருத்துவமனைக்கு கிளம்பி சென்றிருந்தனர். சாம்பவி மட்டும் வீட்டில் தனியாக இருக்க, வாசலில் அழைப்பு மணி அடிக்கவும் அவர் சென்று கதவை திறந்தார். வெளியில் நின்றவரை பார்த்து, “அடடே வாங்க, வாங்க,” என்று சாம்பவி வரவேற்க,
“வணக்கம் ம்மா, நல்லா இருக்கீங்களா?” என்றுக் கேட்டப்படி அந்த பெரியவர் உள்ளே வந்தார்.
“நான் ரொம்ப நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க? வீட்டில் எல்லோரும் நல்லா இருக்காங்களா?” என்று சாம்பவியும் பதிலுக்கு விசாரிக்க,
“ஏதோ இருக்கேன் ம்மா.” என்று அவர் சலித்தப்படி பதில் கூறினார்.
“என்னாச்சு இப்படி சலிப்பா பதில் சொல்றீங்க?”
“என்னோட மனைவி இறந்து ரெண்டு மாசம் ஆகுதும்மா, அவ போனதிலிருந்து ஒரு கை உடைஞ்சு போனது போல இருக்கு, இதுக்கும் நான் சொல்றதுக்கு எதிரா தான் நடந்துப்பா, ஆனாலும் அவ இல்லாத தனிமை ரொம்பவே கஷ்டமா இருக்கு,”
“என்ன சொல்றீங்க? உங்க மனைவி இறந்துட்டாங்களா? கடைசியா பார்க்கும் போது நல்லா தானே இருந்தாங்க, உடம்புக்கு ஏதும் சரியில்லாம இருந்தாங்களா? எங்களுக்கு எந்த தகவலும் சொல்லி அனுப்பலையே?”
“ஆமாம்மா, கிட்டத்தட்ட 7 மாசமா உடம்பு சுகமில்லாம தான் இருந்தா, அதிலும் கடைசி 3 மாசம் படுத்த படுக்கையாக இருந்தா, சாகறதுக்கு முன்ன ஒருவாரம் ஹாஸ்பிட்டலில் இருந்து தான் உயிரை விட்டா, ஹாஸ்பிட்டலில் இருந்து கொண்டு வந்த உடம்பு ரொம்ப நேரம் தாங்காதுன்னு சொன்னாங்க அதான் பக்கத்தில் இருக்கவங்களுக்கு மட்டும் சொல்லி இறுதி சடங்கை முடிச்சாச்சு,”
“இப்போ தான் ஃப்ளைட் ஏறினா அரைமணி நேரத்தில் வந்துடலாமே, முன்னமே சொல்லியிருந்தா கூட ராகாவோட வந்து பார்த்திருப்பேன். சரி விடுங்க யார் வந்தாலும் அவங்களை உயிரோட கொண்டு வரப் போறதில்ல, அவங்க ஆத்மா சாந்தி அடைய நான் கடவுளிடம் வேண்டிக்கிறேன்.” என்று சாம்பவி சொல்லவும்,
“ராகா எப்படிம்மா இருக்கா,” என்று விசாரித்தர். அவர் ராகமயாவின் தாய்மாமா, பெயர் ராமலிங்கம், அவளின் அன்னைக்கு ஹெச்ஐவி இருந்ததை அறிந்து அவளின் தந்தை வழி உறவினர்கள் இவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை, அன்னை வழி உறவினராக இந்த மாமா மட்டும் தான், அவர் தங்கைக்கு ஆதரவு கொடுக்க தயாராக தான் இருந்தார். ஆனால் அவரின் மனைவி தான் பிடிவாதமாக இவர்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மறுத்துவிட்டார். அதன்பின் தான் சாம்பவி அவர்களுக்கு ஆதரவு கொடுக்க, எப்போதாவது வந்து இருவரையும் மனைவிக்கு தெரியாமல் பார்த்துவிட்டு செல்வார்.
கடைசியாக அவர் வந்தது தன் தங்கையின் இறுதி சடங்கிற்கு தான், அப்போதே ராகமயாவை தன்னுடன் அழைத்துச் செல்ல அவருக்கு ஆசை தான், ஆனால் அப்போதும் அவர் மனைவி அதை ஏற்றுக் கொள்ளவில்லை. சாம்பவியும் ராகமயாவை பார்த்துக் கொள்வதாக சொல்லவும், அதே சமயம் அவள் படித்துக் கொண்டிருந்ததால் அதை பாதியில் விட்டுவிட்டு அழைத்து செல்ல முடியாது என்ற காரணத்தால் அவர் அரை மனதோடு ஊருக்குச் சென்றார்.
அதன்பின் மனைவியின் உடல்நிலை சரியில்லாமல் போக, கூடவே இருந்து கவனித்துக் கொள்ள வேண்டியிருந்ததால் அவரால் இங்கு வர முடியவில்லை, இப்போது மனைவி இறந்ததும் தங்கை மகளை பார்க்க வந்திருப்பதின் நோக்கம் புரியாமல்,
“ராகா நல்லா இருக்கா, இப்போ அவங்க காலேஜ் லெக்சரரோட ஹஸ்பண்ட்க்கு உடம்பு சரியில்லாம ஹாஸ்பிட்டலில் அட்மிட் செஞ்சுருக்காங்க, அவரை பார்க்க புவியோட போயிருக்கா,” என்று சாம்பவி பதில் கூறினார்.
“அப்படியா ம்மா, பரவாயில்ல, ஆமாம் ராகாவோட தோழிங்க புனர்வி, தவமலர் எல்லாம் நல்லா இருக்காங்களா? உங்க பிள்ளைங்க, மருமக எல்லாம் எப்படி இருக்காங்க? என் தங்கச்சி இறுதி சடங்கப்போ எல்லோரையும் பார்த்தேன். ராகா அழுதுக்கிட்டு இருந்தப்போ அவங்க எல்லோரும் தான் அவளுக்கு ஆறுதலா இருந்தாங்க, அந்த தைரியத்தில் தான் அவ இங்க இருக்கட்டும்னு விட்டுட்டு போனேன்.”
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“ராகாவை நாங்க வேத்து ஆளா நினைச்சதில்ல, சின்ன வயசுல பாதி நாள் அவ எங்க வீட்டில் தான் இருப்பா, அவளுக்கு ஒன்னுன்னா எங்க வீட்டில் எல்லோருமே துடிச்சு போயிடுவாங்க,”
“அந்த ஒரு விஷயம் தான் என்னை நிம்மதியா வச்சிருக்கு, எனக்கு தெரியும் நீங்க அவளை நல்லப்படியா பார்த்துப்பீங்கன்னு, ஆனா அவளோட ரத்த சம்பந்தமா நானும் அவளுக்கு ஏதாவது செய்யணுமில்ல, இதுநாள் வரை என்னோட மனைவி எதையும் செய்ய விட்டதில்ல, இப்போதாவது ராகாக்கு ஏதாவது நல்லது செய்யனும்னு நினைக்கிறேன்.
ராகா படிப்பு ஆறு மாசத்தில் முடிஞ்சுடும் இல்ல, அடுத்து ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்த்து கல்யாணத்தை முடிச்சிடணும், அப்போ தான் என்னோட தங்கச்சி ஆத்மா சாந்தியடையும், அதனால எனக்கு தெரிஞ்சவங்கக்கிட்ட சொல்லி நல்ல மாப்பிள்ளையா பார்க்க சொல்லியிருந்தேன். அதுவும் சென்னையில் தான், ஏன்னா நீங்கல்லாம் இங்க தான் இருக்கீங்க, மாப்பிள்ளையும் இங்கேயே பார்த்தா, அவளுக்கும் உங்களை விட்டு பிரியறது கஷ்டமா இருக்காது. அதான் எல்லோரிடமும் சொல்லி வச்சிருந்தேன்.
இப்போ தெரிஞ்ச ஒருத்தர் சென்னையிலிருந்து நல்ல வரனா கொண்டு வந்திருக்கார். பையன் நல்லா படிச்சுருக்கான், நல்ல வேலைக்கு போறான். குடும்பமும் நல்ல குடும்பம், எனக்கு திருப்தியா இருக்கு, ஆனாலும் ராகாக்கு எல்லாமே நீங்க தான், அவ குழந்தையா இருந்ததிலிருந்தே அவளுக்கு எல்லாம் பார்த்து பார்த்து செய்திருக்கீங்க, நீங்க தான் அவ விஷயத்தில் முடிவெடுக்கணும், இதில் மாப்பிள்ளை பையன் போட்டோ, மத்த தகவலெல்லாம் இருக்கு, உங்களுக்கு திருப்தியான்னு பாருங்க, திருப்தின்னா ராகாக்கிட்ட காண்பிச்சு அவளோட விருப்பத்தையும் கேளுங்க, அப்புறம் எனக்கு தகவல் சொல்லுங்க, எல்லோருக்கும் சம்மதம்னா பேசி முடிக்கலாம், அதை சொல்லத்தான் வந்தேன்ம்மா, அப்போ கிளம்பட்டுமா?”
“ரொம்ப சந்தோஷம், ராகாவோட தாய்மாமா நீங்க அவளுக்கு நல்லது தான் நினைப்பீங்க, இருந்து மதியம் சாப்பிட்டு, ராகாக்கிட்ட விஷயத்தை சொல்லிட்டு நைட் இங்கேயே தங்கிட்டு நாளைக்கு போகலாமே?”
“இல்லம்மா நான் வேற ஒரு வேலையா தான் சென்னைக்கு வந்தேன். அப்படியே உங்கக்கிட்ட மாப்பிள்ளை பத்திய தகவலையும் சொல்லிட்டு போலாம்னு தான் வந்தேன். ஊரில் கொஞ்சம் வேலையிருக்கு, நீங்க ராகாக்கிட்ட பேசுங்க, நானும் ஊருக்கு போயிட்டு அவக்கிட்ட பேசறேன். தங்கச்சியை தான் என்னால நல்லப்படியாக பார்த்துக்க முடியல, அவ மகளுக்காவது பொறுப்பா இருந்து கல்யாணத்தை முடிச்சிடணும், நீங்க கலந்து பேசிட்டு சொல்லுங்க ம்மா.” என்று சொல்லிவிட்டு அவர் சென்றுவிட்டார்.
அன்று மாலை புனர்வியும் ராகமயாவும் வீட்டிற்கு வரும்போது சாம்பவி வீட்டில் இல்லை, பின்னர் இரவு பேசிக் கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால், மயூரனை தொடர்புக் கொண்டு முக்கியமான விஷயம் பேச வேண்டும், நாளை கண்டிப்பாக வந்துவிடு என்று சாம்பவி கூறினார்.
மறுநாள் நவிரனுக்கும் விடுமுறையில் எந்த வேலையும் செய்ய வேண்டியில்லாததால் அவனை அழைத்துக் கொண்டு மயூரன் வீட்டுக்கு வந்தான். மாலை நேரம் மருத்துவமனைக்கு வருவதாக மூன்று தோழிகளும் கௌசல்யாவிடம் சொல்லியிருந்ததால், தவமலரும் இங்கே வீட்டிற்கு வந்திருக்க, இங்கிருந்து மருத்துவமனைக்கு செல்லலாம் என்று மூவரும் முடிவெடுத்திருந்தனர். காலை உணவு சாப்பிட்டுவிட்டு பின் மதிய உணவு சமைப்பதில் மும்முரமாக அடுத்து மதிய சாப்பாடும் சாப்பிட்ட பின் தான் சாம்பவிக்கு நேற்று ராகமயாவின் மாமா வந்து போன விஷயத்தை பேச முடிந்தது.
எடுத்ததுமே, “ராகா நேத்து உங்க மாமா வந்தாரும்மா,” என்றதும், அதற்கு அவள் மகிழ்ச்சியடையவில்லை. ஏனென்றால் அன்னை இறந்ததற்கு பிறகு அடுத்து அவர் வரவே இல்லையே? எப்போதாவது வந்து தலையை காட்டுபவரிடம் அண்ணன் என்ற முறையில் அவள் அன்னை தான் பாசமாக வரவேற்று உபசரிப்பார். கருத்து தெரிவதற்கு முன் எப்படியோ? கருத்து தெரிந்ததிலிருந்து அன்னையின் நோய் குறித்து அவரை ஒதுக்கி வைத்துவிட்டு வெறும் கடமைக்கு வந்து பார்த்துவிட்டு செல்பவரிடம் கோபம் தான் உண்டாகும், ஆனாலும் அதை வெளியில் காண்பித்ததில்லை, அதுவும் அன்னை இறந்த பின் சுத்தமாக தன்னை கண்டுக் கொள்ளாதவரை அவள் மறந்தே போய்விட்டாள் என்றே சொல்லலாம்,
அதனால், “ஓ அப்படியா அத்தை, என்ன அதிசயமா வந்திருக்கார்? என்னையெல்லாம் அவருக்கு ஞாபகம் இருக்கா?” என்றுக் கேட்டாள்.
“அப்படியெல்லாம் சொல்லக் கூடாதும்மா, உன்னோட அத்தை ரொம்ப நாளா உடம்பு சரியில்லாம இருந்து, இப்போ அவங்க உயிரோடவும் இல்ல, பாவம் உங்க மாமா முன்ன மாதிரி இல்லாம ரொம்பவே இளைச்சு போனது போல தெரியறார். அவருக்கு உன்மேல உண்மையிலேயே பாசம் இருக்கும்மா,”
“மன்னிச்சிக்கோங்க அத்தை, இனி அப்படியெல்லாம் பேச மாட்டேன். ஆனா அத்தை இறந்துட்டதா சொல்றீங்க, அதுக்கு கூட நமக்கு சொல்லலையே? ஏனாம்?
” ம்ம் அவங்க இருந்தவரை உங்களை சேர்க்கல இல்லையா? அதனால அவங்க இறுதி சடங்கிற்கு உன்னை கூப்பிட தயங்கியிருப்பாரு. முடிஞ்சு போனதை விடும்மா. இனி நடக்க போறத பாரு.”
“சரி அத்தை, ஆனா மாமா வந்து என்னைப் பார்க்காமலேயே கிளம்பிட்டாரே?”
“அவர் வேறொரு வேலையா வந்திருக்கார். அவசரமா கிளம்பணுமாம், ஆனா அதே சமயம் உன்மேல இருக்க அக்கறையை காண்பிப்பது போல ஒரு விஷயத்தோடு வந்திருக்கார். அதாவது உனக்கு ஒரு நல்ல வரனோடு வந்திருக்கார். உனக்கு நல்லப்படியா கல்யாணம் செய்து வைக்க நினைக்கிறார்.” என்று சாம்பவி சொல்லவும், மயூரன் அதிர்ந்தான் என்றால், ராகமயா அதைவிட அதிர்ச்சியோடு இருந்தாள்.
“என்னம்மா சொல்றீங்க? ராகா இப்போ படிச்சிக்கிட்டு இருக்கா தானே, அதுக்குள்ள கல்யாணத்துக்கு என்ன அவசரம்? அவரை யாரு இப்போ மாப்பிள்ளை பார்க்க சொன்னது? ராகா குழந்தையா இருந்ததிலிருந்தே அவளை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு நம்மோடது. அப்படியிருக்க அவளுக்கு நாம கல்யாணம் செஞ்சு வைக்க மாட்டோமா? அவருக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை?” என்று மயூரன் கேட்க,
“அப்படியெல்லாம் சொல்லக் கூடாது மயூர், அவருக்கு தன் தங்கையையும் தங்கை மகளையும் கூட வச்சு பார்த்துக்கணும்னு ஆசை தான், ஆனா அவங்க மனைவி விடலையே, அவங்களை மீறி தன் தங்கையை கூட்டிட்டு போனா, வீணா அவங்க குடும்பத்தில் பிரச்சனை வரும், பிரிவினை ஏற்படும், இந்த சூழ்நிலையில் ராகாவும் அவளோட அம்மாவும் சந்தோஷமா இருக்க முடியுமா?
நம்ம பார்த்துக்கிறோம்னு சொன்னதால அவரும் விட்டுட்டு போனாரு. இப்போ தங்கை மகளுக்கு கல்யாணம் செஞ்சு வைக்க நினைக்கிறாரே, அது நல்ல விஷயம் இல்லையா?”
“என்ன நல்ல விஷயம்? அவரோட மனைவி உயிரோட இருந்தா அவர் இப்போ ராகா கல்யாணத்தை பத்தி யோசிச்சிருப்பாரா? அவங்க இல்லை என்றதும் தான் தங்கையோட மகளுக்கு கல்யாணம் செய்யும் எண்ணம் வந்துச்சா?” என்று அவன் கேட்கவும், புனர்விக்கு மயூரன் இப்படி பேசுவது ஏனோ வித்தியாசமாக தெரிந்தது.
“அப்படியும் வராம இருந்தா என்ன செஞ்சுருப்போம்?” இப்படி தான் இப்போ அத்தை கேட்பாங்க,” என்று அவள் சொல்ல,
“என்ன உன்னோட அத்தைக்கு சப்போர்ட்டா? சும்மா இரு.” என்று அவன் அதட்டினான்.
“நான் எங்க அத்தைக்கு சப்போர்ட் செய்தேன்? அத்தை இப்படி சொல்வாங்கன்னு தானே சொன்னேன். ஆனா அதுவும் சரிதானே, ராகா மேல அக்கறை இல்லாதவரா இருந்தா, எப்படியோ போகட்டும்னு விட்ருக்க மாட்டாரா? இதுவரை அவங்க மனைவிக்காக யோசிச்சு அமைதியா இருந்தாலும், மனசால வருத்தப்பட்டு இருப்பாரு. இப்போ அவங்க இல்லாததால அவர் நினைச்சதை முடிக்க நினைக்கிறார். இதில் என்ன தப்பு இருக்கு அத்தான்?” என்று அவள் கேட்க,
“அவர் நினைச்சா உடனே கல்யாணம் செய்யணுமா என்ன? ராகாக்கு இன்னும் படிப்பு முடியல இல்ல?” என்று அவன் பதில் கூறினான்.
“படிப்பு முடிஞ்சதும் உனக்கும் புவிக்கும் கல்யாணம்னு முடிவு செய்திருக்கோம், தவாக்கும் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க, அப்போ ராகாக்கும் மாப்பிள்ளை பார்ப்பதில் என்ன தப்பு?
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
இப்போ என்ன நாளைக்கே வா கல்யாணம்? வரன் தான் கொண்டு வந்திருக்கார். போட்டோ, மத்த தகவலெல்லாம் கொண்டு வந்து கொடுத்திட்டு, நம்ம தான் முடிவு செய்யணும்னு சொல்லிட்டு போயிருக்கார். நமக்கெல்லாம் ஓகேன்னா தான், மேற்கொண்டு பேசலாம்,” என்று சாம்பவி கூற,
“அவர் கொடுத்துட்டு போன போட்டோ மத்த டீடெயில்ஸ் எல்லாம் காட்டுங்க அத்தை, நான்தான் ராகா கல்யாணம் செஞ்சுக்க போற மாப்பிள்ளையை ஓகே செய்வேன்.” என்று புனர்வி சாம்பவியிடம் கேட்க,
“ஹே என்னை விட்டுட்டியே, நாம ரெண்டுப்பேரும் சேர்ந்து தான் ராகாக்கு மாப்பிள்ளை செலக்ட் செய்யப் போறோம்,” என்று தவமலரும் கூற, சாம்பவி ஏற்கனவே கையில் வைத்திருந்த மாப்பிள்ளை போட்டோவை காண்பித்தார். ராகமயா அங்கு நடப்பதை புரிந்துக் கொள்ள முடியாத பாவனையில் நிற்க,
“இவ முழியே சரியில்ல தவா,” என்று சொல்லிய புனர்வி,
“கவலைப்படாத உனக்கு மாப்பிள்ளையை பிடிச்சா தான் கல்யாணம், நாங்க சும்மா தான் சொன்னோம்,” என்று ராகமயாவிடம் கூற,
“எனக்குன்னு தனிப்பட்ட விருப்பம் இல்ல, அத்தைக்கும் உங்களுக்கும் ஓகேன்னா அந்த மாப்பிள்ளையை நானும் கல்யாணம் செய்ய தயாரா இருக்கேன்.” என்று ராகமயா தீவிரமாகவே கூற, மயூரன் அவளையே பார்த்திருந்தான்.
“என்னத்தான் எங்களுக்கு பிடிச்சிருந்தாலும் நீ முழு மனசோட சம்மதிக்கணும் ராகா,” என்று சாம்பவி சொல்ல,
“இல்ல அத்தை, என்னோட அம்மா இருந்தாலும் இதையே தான் சொல்லியிருப்பேன். உங்களுக்கு பிடிச்சிருந்தா எனக்கும் சம்மதம் தான்,” என்றாள்.
“அப்புறம் என்ன மயூர், இப்போ கல்யாணம் செஞ்சுக்கறதில் ராகாக்கு எந்த பிரச்சனையுமில்ல, ஆனா நீ ஏன் இப்படி பேசற? இந்த சம்பந்தத்தில் உனக்கு விருப்பம் இல்லையா?” என்று அவனிடம் கேட்க,
“உங்க எல்லோருக்கும் ஓகேன்னா அப்புறம் நான் என்ன சொல்லப் போகிறேன். அடுத்து என்னவோ பாருங்க,” என்று சலிப்பாக கூறினான்.
“ஹே இப்படி பதில் சொன்னா எப்படிடா? அம்மா எதுக்கு உன்கிட்ட சொல்றாங்க, மாப்பிள்ளையை பத்தி நாம தானே நல்லா விசாரிக்கணும், என்னத்தான் ராகா அவங்க மாமா விசாரிச்சு இருந்தாலும், நாமளும் மாப்பிள்ளையையும் அவங்க குடும்பத்தையும் நல்லா விசாரிக்கணும், அதுக்கு சொன்னா, உனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி பேசற?” என்று நவிரன் கேட்டான்.
“நான் மாட்டேன்னு சொல்லலையே, ராகா மேல எனக்கும் அக்கறையிருக்கு, அதெல்லாம் சரியா நான் விசாரிச்சு சொல்றேன். நீங்க மேற்கொண்டு பாருங்க,” என்று சொல்லிவிட்டு அமைதியாகிவிட்டான்.
“எதுவா இருந்தாலும் அவசரப்படாம நிதானமாகவே செய்வோம், இப்போ எனக்கு வேலை இருக்கு, கொஞ்சம் வெளியே போகணும், ராகா நீ மாப்பிள்ளை போட்டோ தகவலெல்லாம் நல்லா பார்த்து பிடிச்சிருக்கான்னு சொல்லு, அப்புறம் மயூர்க்கிட்ட விசாரிக்க சொல்றேன். உங்க மாமாக்கிட்டேயும் இது விஷயமா நாளைக்கு பேசறேன். நீயும் மாமாக்கிட்ட பேசு. அவர்க்கிட்ட அப்பப்போ போன்ல பேசினா தானே அவரோட அன்பு உனக்கு புரியும்,” என்று சாம்பவி கூறினார்.
“பேசறேன் அத்தை, மாமாக்கு போன் செய்தால் அத்தைக்கு பிடிக்குமோ என்னவோன்னு தான் நானா இதுவரை அவருக்கு பேசினதில்லை, அம்மாவும் அப்படித்தான் சொல்வாங்க, இனி அப்பப்போ பேசறேன்.”
“நல்லது. சரி நீங்கல்லாம் பேசிட்டு இருங்க நான் கிளம்பறேன்.” என்று சொல்லிவிட்டு சாம்பவி வெளியே செல்ல,
“ராகா மாப்பிள்ளை போட்டோல பார்க்க நல்லா தான் இருக்காங்க, ஆனா நம்ம தான் அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கறதில்லையே, அவங்கக்கூட பேசி பார்த்து தான் முடிவு செய்யணும்,” என்ற புனர்வி,
“அத்தான் மாப்பிள்ளை பத்தி விசாரிச்சு நல்லவிதமா சொன்னாங்கன்னா, நீங்களும் ஒருமுறை நேர்ல பேசிடுங்க, அப்புறம் ராகாவோட தனியா பேச வைப்போம், எல்லாம் ஓகேன்னா அப்புறம் கல்யாணத்துக்கு ஓகே சொல்வோம்.” என்று பேசிக் கொண்டே போக, மயூரனும் சரி, ராகமயாவும் சரி அதில் அவர்கள் கவனத்தை வைக்காமல் ஏதோ சிந்தனையில் இருந்தனர்.
அதனால் அடுத்து அங்கு கலகலப்பான சூழல் இல்லை, ஏற்கனவே அன்று மருத்துவமனையிலும் சரி, இப்போதும் சரி புனர்வி நவிரனிடம் சரியாக பேசவில்லை, எங்கே திரும்ப தன்னையறியாமல் அவன் கண்டுப்பிடிப்பதற்கு ஏற்றவாறு ஏதாவது உளரி கொட்டிடுவாளோ? என்று அவள் அமைதியாக இருக்க, தவமலருக்குமே தெரிந்த உண்மையை அவனிடம் மறைப்பது மனதிற்கு கஷ்டமாக இருக்க அவளும் அவனோடு சரியாக பேசவில்லை.
நவிரனுமே குழப்பத்தில் இருந்ததால் அவர்களோடு சாதாரணமாக பேச ஏதோ தடையாக இருக்க, அலைபேசியில் தன் கவனத்தை வைத்திருந்தான். மயூரனும் அதையே செய்ய,
“ஹே ஏதாச்சும் படம் பார்க்கலாமா?” என்று சொல்லிய புனர்வி தொலைக்காட்சியை உயிர்ப்பிக்க, ஏதேதோ சானல்களை மாற்றி பின் அப்போது தான் ஆரம்பித்த ஒரு படத்தில் புனர்வியும் தவமலரும் கவனத்தை செலுத்த, ராகமயாவால் மயூரனின் முன் அமர்ந்து இருப்பது கஷ்டமாக இருக்கவே, பேசாமல் வேறு ஏதாவது வேலையில் ஈடுபடலாம் என நினைத்து அவள் அங்கிருந்து சென்றவள், பால்கனியில் காய வைத்திருந்த துணிகளை எடுத்துக் கொண்டு அவளும் புனர்வியும் தங்கியிருக்கும் அறைக்கு செல்ல, அந்த நேரம் நவிரனுக்கும் அலைபேசியில் அழைப்பு வர, அவன் பால்கனி பக்கம் சென்றான்.
புனர்வியும் தவமலரும் பார்க்கும் படம் ஏதோ நகைச்சுவை படம் என்பதால், திரைப்படத்தில் அவர்களின் கவனத்தை வைத்து சிரித்தப்படி இருக்க, அதை கவனித்த மயூரன், அடுத்து அவனுமே அங்கிருந்து எழுந்து ராகமயாவை பார்க்க அந்த அறைக்குச் சென்றான்.
துணிகளை மடித்துக் கொண்டிருந்தவள், திடீரென அங்கு வந்த மயூரனை பார்த்து அதிர்ச்சியாகி, பின் வெளியிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, இப்போ எதுக்கு இங்க வந்தீங்க?” என்று மெதுவாக, அதே சமயம் கோபத்தோடு கேட்டாள்.
லேசாக கதவை சாத்தியவன், “புவியும் தவாவும் படம் பார்த்துட்டு இருக்காங்க, நவிரன் போன் பேச போயிருக்கான். ஆமாம் எதுக்கு இந்த சம்பந்தத்துக்கு ஓகே சொன்ன?” என்றுக் கேட்க,
“என்ன கேள்வி? சாம்பவி அத்தை எனக்கு நல்லது செய்வாங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு, அவங்களுக்காக நான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்.” என்று பதில் கூறினாள்.
“அதுக்கு முன்ன என்னைப்பத்தி யோசிச்சு பார்க்கவே மாட்டீயா? என்னோட மனசு உனக்கு புரியாதா?” என்று அவன் கேட்கவும்,
“நீங்க தான் ஏதாவது யோசிச்சு பேசறீங்களான்னு தெரியல, உங்களுக்கும் புவிக்கும் நிச்சயம் ஆகிடுச்சு, படிப்பு முடிஞ்சா கல்யாணத்துக்கும் நாள் குறிச்சிடுவாங்க, ஆனா அது உங்களுக்கு ஞாபகம் இருக்கான்னு தெரியல,” என்று அவள் பதில் கூறினாள்.
“இங்கப்பாரு நடந்தது என்னன்னு தெரியாம பேசாத, அதை சொல்றதுக்கான நேரம் வரும்போது சொல்லி உனக்கு புரிய வைக்கலாம்னு இருந்தேன். ஆனா அதுக்குள்ள உங்க மாமா இப்படி ஒரு காரியம் செய்வார்னு நான் எதிர்பார்க்கல, நடந்தது என்னன்னு தெரியுமா?” என்று அவன் கேட்டு விஷயத்தை சொல்ல வர,
“வேண்டாம், எனக்கு எதுவும் கேட்க வேண்டாம், புவி, தவா யாராச்சும் பார்க்கறதுக்குள்ள வெளிய போயிடுங்க ப்ளீஸ்.” என்று அவள் கெஞ்சும் நேரம் புனர்வி லேசாக சாத்தியிருந்த கதவை திறந்து வந்தாள்.
தங்கள் இருவரையும் அறையில் வைத்து பார்த்ததில், தோழி தன்னைப்பற்றி என்ன நினைப்பாள்? என்ற நினைப்பே ராகமயாவிற்கு அழுகையை வரவழைக்க, அப்படியே கட்டிலில் அமர்ந்து முகத்தை மூடி குலுங்கி குலுங்கு அழுதாள்.
புனர்விக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை, பார்த்துக் கொண்டிருந்த திரைப்படத்திற்கு நடுவே விளம்பரம் ஓடிக் கொண்டிருக்கவும் அப்போது தான் அவர்கள் இருவரை தவிர்த்து மற்றவர்களை காணவில்லை என்று புனர்வியும் தவமலரும் கவனிக்க,
“எங்கடீ போனாங்க 3 பேரும்?” என்று தவமலர் கேட்கவும், அப்போது தான் பால்கனி பக்கம் நவிரன் பேச்சுக்குரல் கேட்கவும்,
“நவிரன் போன் பேசறாங்க போல, அத்தானும் ராகாவும் எங்க?” என்று சொல்லியப்படியே எழுந்து வந்தவள், தங்கள் அறையில் பேச்சுக்குரல் கேட்கவும், சாதாரணமாக தான் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று கதவை திறந்தாள். இப்போது ராகமயா அழவும்,
“ஹே ராகா என்னாச்சு டீ?” என்று புனர்வியும் அவள் அருகில் அமர்ந்து கேட்க, அவளின் குரல் சத்தமாக கேட்கவும், தவமலரும் அங்கு வந்தாள்.
புனர்வி கேட்டதும் ராகமயா இன்னும் அதிகமாக அழ, புனர்விக்கும் தவமலருக்கும் ஒன்றும் புரியவில்லை, “எதுக்கு அத்தான் ராகா அழறா? நீங்க ஏதாவது சொன்னீங்களா?” என்று புனர்வி அவனிடம் கேட்டாள். ஏனென்றால் சிறிது நேரத்திற்கு முன்பு ராகமயாவின் திருமணத்தை குறித்து அவன் சாம்பவியிடம் பேசியது வித்தியாசமாகபடவே அப்படி கேட்டாள். அதற்கு பதில் சொல்லாமல் மயூரன் அமைதியாக இருக்க, நவிரனும் அலைபேசியில் பேசிவிட்டு இவர்களின் குரல் கேட்டு அந்த அறையின் வெளிப்பக்கமாக கதவருகே வந்து நின்றான்.
“என்ன அத்தான்? ஏதாச்சும் சொன்னீங்களான்னு கேட்டா, ஒன்னுமே பேச மாட்டேங்கிறீங்க? ராகா எதுக்கு அழறா?” என்று புனர்வி திரும்ப கேட்கவும்,
“நான் ராகாவை சின்ஸியரா காதலிக்கிறேன் புவி. அதான் அவ கல்யாணம் பத்தி அம்மா சொன்னதும் எனக்கு கோபம் வந்தது, நீயேன் சம்மதம் சொன்னேன்னு கேட்க தான் இங்க வந்தேன். அதை நீ பார்த்திடவும், எங்க அவளை தப்பா நினைச்சிப்பீயோன்னு நினைச்சு தான் அழறா?” என்று அவன் சொல்ல, மற்ற மூவருக்குமே அவன் பேச்சு அதிர்ச்சியை கொடுத்தது.
இப்படி ஒரு விஷயம் இருக்கும் என்று புனர்வி எதிர்பார்த்திருக்கவில்லை, என்ன சொல்ல என்று அவள் புரியாமல் அமர்ந்திருக்க, “என்ன அத்தான் சொல்றீங்க? நீங்களும் ராகாவும் காதலிக்கிறீங்களா?” என்று தவமலர் கேட்க,
“நான் ஒன்னும் அவங்களை காதலிக்கல, அவங்க தான் என்னை காதலிக்கிறதா சொல்லிட்டு இருக்காங்க,” என்று ராகமயா பதில் கூறினாள்.
புனர்வி கேள்வியாக மயூரனை பார்க்க, “புவி, ராகாவை எனக்கு ரொம்ப பிடிக்கும், அது எப்போ காதலா மாறுச்சுன்னு எனக்கு சொல்ல தெரியல, ஆனா காதல்னு ஒருக்கட்டத்தில் புரிஞ்சுக்கிட்டேன். அப்போ அவ +2 தான் படிச்சிட்டு இருந்தா, அதனால சொல்லாம மனசுக்குள்ள வச்சிருந்தேன். நவிரன்க்கிட்ட கூட அந்த விஷயத்தை ஷேர் செஞ்சுருக்கேன். இப்போக்கூட அதை ஞாபகம் வச்சு நவிரன் என்கிட்ட கேட்டான். ஆனா அது ராகான்னு அவனுக்கு ஞாபகம் இல்ல, அதனால நான் சமாளிச்சிட்டேன்.
நீங்க யுஜி முடிக்கிற வரை காத்திருந்து, அப்புறம் ராகாக்கிட்ட விஷயத்தை சொல்லிட்டேன். ஆனா அவ அதை ஏத்துக்கல, அப்படி நினைச்சு உங்கக்கிட்ட பழகலன்னு அவ சொல்லிட்டா, ஆனா எனக்கு தெரியும், அவளுக்கு என்மேல காதல் இருக்குன்னு, ஆனா அதை அவ ஒத்துக்க மாட்டேங்குறா?
இந்த நேரத்தில் தான் நம்ம கல்யாணத்தை பத்தி பேச்சு வரவும், நான் உன்னை தான் கல்யாணம் செய்துக்கணும்னு இவ என்கிட்ட சொல்லிக்கிட்டே இருந்தா, அதுக்குப்பிறகு தான் உன்கிட்ட வந்து பேசினேன்.” என்று அவன் சொல்லவும்,
“இவன் என்ன பேசிக்கிட்டு இருக்கான். இவளை தான் காதலித்தேன், இவ சொல்லித்தான் உன்னை கல்யாணம் செய்ய சம்மதம் சொன்னேன் என்று புனர்வியிடம் பேசிக் கொண்டு இருக்கிறான். புரிந்து தான் பேசுகிறானா?” என்று நவிரன் குழம்பினான்.
ராகமயாவிற்கு என்ன பதில் சொல்வதென்றே புரியாமல் கண்களில் கண்ணீர் வழிய அமர்ந்திருக்க, “ராகா நீயும் அத்தானை காதலிக்கிறீயா?” என்று புனர்வி கேட்கவும்,
“இல்ல புவி, இவங்களை நான் காதலிக்கல, இங்கப்பாரு உனக்கும் அவங்களுக்கும் தான் கல்யாணம் நடக்கணும், இப்போ வேற எந்த பேச்சும் வேண்டாம் விட்டுடு.” என்று ராகமயா கூற,
“காதல் இல்லாம தான், என்னை தான் அத்தான் கல்யாணம் செய்துக்கணும்னு அவங்கக்கிட்ட சொன்னீயா? இந்த உரிமை காதல் இல்லாம எப்படி வந்ததாம்?” என்று புனர்வி கேட்க, அவளுக்கு பதில் சொல்ல முடியவில்லை.
“இங்கப்பாரு ராகா, அத்தானை காதலிக்கிறேன்னா, அதை எந்த தயக்கமும் இல்லாம சொல்லிடு. எனக்காக பார்க்காத, ஏன்னா எனக்கும் அத்தானுக்கும் கல்யாணம் நடக்காது. எங்க நிச்சயதார்த்தம் ஒரு டிராமா,” என்று புனர்வி கூற, அதிர்ச்சி அடைந்தது ராகமயா மட்டுமல்ல, நவிரனும் தான்,
“என்ன சொல்ற புவி?” என்று ராகமயா கேட்க,
“அத்தான் எல்லாத்தையும் நானே சொல்லணுமா? நீங்க சொல்லுங்க,” என்று புனர்வி மயூரனிடம் சொல்ல,
“ஆமாம் ராகா, புவி சொல்றது போல எங்க நிச்சயதார்த்தம் ஒரு டிராமா தான், நீ என்னோட காதலுக்கு சம்மதம் சொல்லலைன்னாலும், உன்னை சம்மதிக்க வைக்க முடியும்னு நம்பிக்கையோடு இருந்தேன். ஆனா அதுக்குள்ள தான் மதன் அண்ணா எங்க கல்யாணப் பேச்சை ஆரம்பிச்சாங்க, நீ சம்மதம் சொல்லாம உன்னை காரணமா சொல்லி இந்த கல்யாணப் பேச்சை நிறுத்துவதில் எனக்கு விருப்பம் இல்ல, வேற ஏதாவது காரணத்தை சொல்லி இந்த கல்யாணப் பேச்சை நிறுத்தினா புவி எப்படி எடுத்துப்பாளோன்னு பயம், அவளோட முகத்தில் ஏற்பட்ட பாதிப்பை குறித்து தான் நான் இந்த கல்யாணத்தை வேண்டாம்னு சொல்றதா நினைச்சுக்குவாளோன்னு கொஞ்சம் பயமா இருந்தது, இதில் நான் புவியை தான் கல்யாணம் செய்துக்கணும்னு நீ சொல்லிக்கிட்டே இருந்த, எனக்கு ஒன்னுமே புரியல, மனசுக்குள்ள உன்னை வச்சிக்கிட்டு புவியை கல்யாணம் செஞ்சுக்கறதில் எனக்கு துளி கூட இஷ்டமில்ல, மத்தப்படி அவளுக்கு முகத்தில் இருக்கும் பாதிப்பெல்லாம் எனக்கு ஒன்னும் பிரச்சனையில்லை. இதை எப்படி புவிக்கு புரிய வச்சு இந்த கல்யாணத்தில் எனக்கு விருப்பமில்லன்னு சொல்றதுன்னு நான் தவிச்சிட்டு இருந்தேன்.
ஆனா புவியே என்கிட்ட உங்களை கல்யாணம் செய்துக்க முடியாது அத்தான், நான் உங்களை அண்ணனா தான் நினைக்கிறேன்னு சொன்னதும் எந்த அளவுக்கு நான் சந்தோஷப்பட்டேன்னு வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஆனாலும் எங்க நிச்சயதார்த்தம் நடந்தது புவி அம்மாக்காக தான், அவங்களுக்கு புவி பத்தின கவலையில்லாம, நல்லப்படியா குணமாகணும்னு புவி சொன்னதால தான் நான் இந்த நிச்சயதார்த்த டிராமாக்கு சம்மதிச்சேன்.” என்று அவளுக்கு விஷயத்தை புரிய வைத்தான்.
“ஆனா அத்தான், ராகா விஷயத்தை என்கிட்ட சொல்லியிருந்தீங்கன்னா நான் இப்படி ஒரு பிளான் போட்டிருக்க மாட்டேன். இல்ல ராகாக்கிட்ட இந்த விஷயத்தை சொல்லியிருக்கலாம், ஏன் அத்தான் இப்படி செய்தீங்க?” என்று புனர்வி கேட்க,
“என்னை என்ன செய்ய சொல்ற? நீங்க புவியை தான் கல்யாணம் செய்துக்கணும், அதைவிட்டுட்டு புவிக்கிட்ட என்னை காதலிக்கிறதா சொன்னீங்கன்னா, அப்புறம் நான் யாருக்கும் தெரியாம எங்கேயாச்சும் போயிடுவேன்னு மிரட்டி, என்கிட்ட சத்தியம் வாங்கிட்டா,
உன்கிட்ட வந்தா, நம்ம நிச்சயதார்த்தம் ஒரு டிராமான்னு ராகா, தவா சேர்த்து யாருக்குமே சொல்லக் கூடாதுன்னு நீ சத்தியம் வாங்கிட்ட, அப்புறம் நான் என்ன செய்ய முடியும்? இதில் ராகா என்னோட காதலை ஏத்துக்கிட்டு இருந்தா கூட விஷயத்தை சொல்லியிருப்பேன். அப்படி எதுவும் இல்லாம எப்படி சொல்ல முடியும்? சரி நேரம் வரும்போது சொல்லி இவளை சம்மதிக்க வைக்கலாம்னு நினைச்சேன். ஆனா அதுக்குள்ள இவ மாமா ரூபத்தில் இப்படி ஒரு பூகம்பம் வரும்னு எனக்கு எப்படி தெரியும்?” என்று மயூரன் கேட்டான்.
“எல்லாம் நன்மைக்கேன்னு சொல்வாங்க, மாமா வந்ததும் நன்மையில் முடிஞ்சுது.” என்று சொல்லிய புனர்வி,
“ஆமாம் காதல் இல்லாம தான் மயூ அத்தானை எமோஷ்னலா ப்ளாக் மெயில் செஞ்சீயா? இப்போ சொல்லு, அத்தான் மேல இருக்க காதலை ஏன் நீ மறைச்ச?” என்று ராகமயாவிடம் கேட்டாள்.
“அது, அது.” என்று தயங்கிய ராகமயா, “சாம்பவி அத்தை அடைக்கலம் கொடுக்கலன்னா நானும் அம்மாவும் என்ன ஆயிருப்போமோ, அப்படியிருக்க எனக்கு ஆதரவு கொடுத்த அவங்களோட மகனை நான் காதலிச்சா அது தப்பில்லையா? அதான் மனசுக்குள்ள காதல் இருந்தும் அதை வெளியில் சொல்லாம அவங்களை அவாய்ட் செய்தேன்.
அப்போ தான் உனக்கும் மயூர்க்கும் கல்யாணம் செய்யணும்னு வீட்டில் பேச்சு வந்தது, மயூர் உன்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டா உன் வாழ்க்கை நல்லா இருக்கும்னு நினைச்சு தான் அவங்கக்கிட்ட உன்னை கல்யாணம் செய்துக்க சொல்லி கேட்டேன். நான் ஆசைப்பட்டது போல நடந்ததுன்னே சந்தோஷப்பட்டேன். ஆனா இப்படி நீங்க டிராமா செஞ்சுருப்பீங்கன்னு எதிர்பார்க்கல,
புவி இத்தனை நாள் எங்க காதல் விஷயம் தெரிஞ்சா என்னையும் மயூரையும் தப்பா புரிஞ்சிப்பியோ? என்கிற பயத்தை விட, உன்மேல பரிதாபப்பட்டு என் காதலை விட்டுக்கொடுத்து நீயும் மயூரும் கல்யாணம் செஞ்சுக்கணும்னு நான் நினைச்சதா நீ தப்பா புரிஞ்சிப்பியோன்னு தான் எனக்கு முதல் பயமே, அப்படி நீ நினைக்கல இல்ல,” என்று ராகமயா பதட்டத்தோடு கேட்க,
“ஹே லூசு, இந்த விஷயத்தில் நீ என்மேல பரிதாபப்பட்டன்னு என்னால நினைக்க முடியாது. என்மேல நீ அந்த அளவு அன்பு வச்சிருக்கன்னு தான் சொல்லணும், ஒவ்வொரு முறையும் உன்னோட ஆள், உன்னோட அத்தான்னு மயூர் அத்தானை என்கூட சேர்த்து பேசும்போது உனக்கு எத்தனை கஷ்டமா இருந்திருக்கும், இது வெறும் பரிதாபத்தில் செய்ய முடியாது. என்மேல இருக்க அன்பு தான் நீ எனக்கு மயூர் அத்தானை விட்டுக் கொடுக்க நினைச்சிருக்க, அதனால உன் மனசுல இந்த பயம் தேவையில்லாதது,” என்று புனர்வி சொல்லவும், ராகமயா அவளை மகிழ்ச்சியில் அணைத்துக் கொண்டு கண்ணீர் வடித்தாள்.
“ஹே லூசு அழாத,” என்று ராகமயாவை சமாதானப்படுத்திய புனர்வி,
“அத்தான், இன்னைக்கு அத்தை வந்ததுமே இந்த விஷயத்தை நீங்க அவங்கக்கிட்ட பேசணும், இதுக்கு மேலேயும் நம்ம டிராமாவை தொடரக் கூடாது. உங்க கல்யாணம் தான் நடக்கணும், ஆனா அம்மாக்கு மட்டும் இப்போ எதுவும் தெரிய வேண்டாம், நான் பக்குவமா அவங்கக்கிட்ட சொல்றேன்.” என்றாள்.
“ராகா சம்மதம் சொல்லணும்னு தான் காத்திருந்தேன். இனி அம்மாக்கிட்ட தைரியமா சொல்வேன் புவி.” என்று மயூரன் கூறினான்.
இதையெல்லாம் அமைதியாக நின்று வேடிக்கை பார்த்திருந்த நவிரனுக்கோ மனதில் பெரிய பாரம் இறங்கினது போல் இருந்தது.
தவமலரோ, “யோவ் இங்க என்னையா நடக்குது? இந்த தவமலரை எல்லாம் என்னன்னு நினைச்சுட்டு இருக்கீங்க? ஆளாளுக்கு ஒரு சீக்ரெட் வச்சிட்டு அதை எனக்கு கூட தெரியாம பார்த்துட்டு இருந்திருக்கீங்க? அதுவும் நீங்க என்னோட பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ்னு சொல்லிக்காதீங்க டீ. இப்படி ரெண்டுப்பேருமே லவ் மேட்டரை என்கிட்ட மறைச்சிட்டீங்களே?” என்று கேட்கவும், நவிரன் கேள்வியாக தவமலரை பார்க்க, புனர்வியோ அவளை முறைத்தாள்.
அவள் உளறியதை பிறகு தான் தவமலர் நினைவில் கொண்டு வந்தவள், ராகா மயூ அத்தானை காதலிக்கிற விஷயத்தை மறைச்சான்னா, நீ அத்தானோட நடந்த நிச்சயதார்த்தம் டிராமா என்கிறதை மறைச்சிட்ட,” என்று குறைபடும்படி கூறினாலும், நவிரனுக்கு அது சாமாளிப்பதாக தான் தோன்றியது.
“ஹே நாங்க மட்டும் தான் சீக்ரெட் வச்சிருக்கோமா? நீயும் தான் யோகன் அண்ணாவை மனசுல நினைச்சிக்கிட்டு அவங்க கல்யாணம் பத்தி பேசவும் இன்னும் ஓகே சொல்லாம இருக்க, யோகன் அண்ணா உன்கிட்ட ப்ரோபோஸ் செய்த விஷயத்தை ஏன் எஙகக்கிட்ட மறைச்ச?” என்று தவமலரிடம் புனர்வி கேட்க,
“யோகன் உனக்கு எப்படி டீ அண்ணன் ஆனாங்க?” என்று அவள் பதிலுக்கு கேட்டாள்.
“அதெல்லாம் எப்போதோ ஆகிட்டாங்க, நீ சொல்லு, ஏன் யோகன் அண்ணா உன்னை கல்யாணம் செஞ்சுக்க கேட்டதை எங்கக்கிட்ட சொல்லல, இதுக்கும் நாங்களும் அப்போ ஹாஸ்பிட்டலில் தானே இருந்தோம், அப்படியிருந்தும் எங்கக்கிட்ட சொல்லலையே, ஏன்?”
“எனக்கு கொஞ்சம் குழப்பமா இருந்தது, அதான் அப்போதைக்கு உங்கக்கிட்ட சொல்ல வேணாம்னு நினைச்சேன். இது தப்பா?” என்று தவமலர் கேட்டாள்
“அப்படித்தான் எங்களுக்கும், சரி அதைவிடு, உனக்கு யோகனை பிடிக்கலையா? ஏன் அவங்கக்கிட்ட எந்த பதிலும் சொல்லல?”
“யோகனை பிடிச்சு தான் இருக்கு, ஆனா அவங்க அப்பா, அம்மாவை நினைச்சு தான் கொஞ்சம் குழப்பமா இருக்கு.”
“இங்கப்பாரு தவா, அவங்களை பத்தி தெரியாம இருந்தா வேற, இப்போ தான் அவங்க நோக்கம் தெரிஞ்சுடுச்சே, அவங்களை உன்னால சமாளிக்க முடியாதா? எப்படியோ உனக்கு செய்ய வேண்டியதை செஞ்சு தான் அப்பா உனக்கு கல்யாணம் செய்ய போறாங்க, நீ கொண்டு போறத வச்சு தான் அந்த வீட்டில் எல்லாம் பார்த்துக்கணும்னு எந்த அவசியமும் இல்ல, அப்படிப்பட்டவங்களை கொஞ்சம் கொஞ்சமா தான் மாத்தணும், நீ அவங்களுக்காக பார்க்காம, யோகனுக்காக பாரு, மனசுக்கு பிடிச்சிருந்தா கல்யாணத்துக்கு சரின்னு சொல்லு.” என்று புனர்வி சொல்லவும்,
“சரி சம்மதம் சொல்றேன்.” என்று தவமலர் கூறினாள்.
“அப்போ இப்பவே பேசு,” என்று புனர்வி சொல்ல,
“எதுக்குடீ அப்புறம் பேசறேன்.” என்று தவமலர் சொல்லியும் கேட்காமல் புனர்வி தவமலரின் அலைபேசியில் யோகனுக்கு தொடர்புக் கொண்டு தவமலரிடம் அலைபேசியை கொடுத்துவிட, அவள் அவனிடம் என்ன பேசுவதென்று புரியாமல் அலைபேசியை வாங்கி காதில் வைக்க, அதற்குள் அங்கே அழைப்பை ஏற்று யோகமித்ரன், “ஹலோ மலர்,” எனவும்,
“அது, அது.” என்று திணறியவள், பின் தைரியம் பெற்றவளாக, “எப்போ உங்க அப்பா, அம்மாவை கூட்டிட்டு வந்து என்னோட அப்பா, அம்மாக்கிட்ட கல்யாணத்துக்கு பேசுவீங்க?” என்று கேட்டுவிட்டாள்.
தான் கேட்டது கனவா? இல்லை நிஜமா? என்று சந்தேகத்தோடு யோகமித்ரன் தன் கையை ஒருமுறை கிள்ளிப் பார்த்துக் கொண்டவன், “நாளைக்கே வரட்டுமா மலர்? என்றுக் கேட்டான்.
“அப்பா, அம்மாக்கிட்ட பேசணும்னு சொன்னீங்க?” என்று அவள் கேட்கவும்,
“அதெல்லாம் உன்கிட்ட பேசின அன்னைக்கே அவங்கக்கிட்டேயும் பேசிட்டேன். உங்கக்கிட்ட இருந்து வரதட்சணையா எதுவும் கேட்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கேன். அவங்களும் சரின்னு சொல்லிட்டாங்க,” என்று பதில் கூறினான்.
“அன்னைக்கு மட்டும் அவங்க எங்க வரதட்சணை கேட்டாங்க, ஒரே பெண். அப்பா அம்மாக்கு பின்ன எல்லாமே எனக்கு சேரும்னு கணக்கு போட்டு தானே என்னைப் பெண் பார்க்க வந்தாங்க, இப்போதும் அதை தான் மனசுல நினைச்சு சம்மதம் சொல்லியிருப்பாங்க,” என்று மனதில் நினைத்துக் கொண்டவள்,
அதற்காக யோகனை இழந்துவிடக் கூடாது. புனர்வி சொன்னது போல் அப்பா எனக்கு செய்ய வேண்டுமென்று நினைப்பதை செய்யத்தான் போகிறார். அதனால் இந்த திருமணம் நடக்கட்டும், யோகனின் பெற்றோர்களை ஒரேடியாக மாற்ற முடியாது. காலம் தான் அவர்களை மாற்றும் என்று நினைத்து, “அப்போ சரி. நான் அப்பாக்கிட்ட விஷயத்தை சொல்லிட்டு, உங்கக்கிட்ட சொல்றேன். அப்போ வாங்க,” என்றாள்.
“என்னை புரிஞ்சிக்கிட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ் மலர்.” என்று அவன் சொல்ல,
“என்னை வேண்டாம்னு சொன்ன ஒரு விஷயத்தை தவிர, வேற எதுவும் உங்கக்கிட்ட தப்பா தெரியல, அதுவுமே உங்க விருப்பத்தை சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கு, ஆனா சூழ்நிலை என்னன்னு யோசிக்காம பட்டுன்னு சொன்னது தான் எனக்கு பிடிக்கல, ஆனா அதுக்கும் ஒரு நியாயமான காரணம் வச்சிருந்தீங்கல்ல, அதனால திரும்ப அதை பேச வேண்டாம், இருந்தாலும் கொஞ்சம் குழப்பம் இருந்தது, அதை தீர்த்து வச்சது உங்க தங்கை தான்,” என்றதற்கு,
“யார் புனர்வியா?” என்று அவன் கேட்டான்.
“அடேங்கப்பா கொஞ்ச நாளிலேயே பாசமலர் படம் ஓட்டியிருக்கீங்க, முடியல.” என்று சொல்லி சிரித்தவள்,
“அப்பாக்கிட்ட பேசிட்டு உங்கக்கிட்ட பேசறேன்.” என்று சொல்லி அலைபேசியை வைத்தவள்,
“போதுமா? உன்னோட அண்ணனிடம் பேசிட்டேன்.” என்று புனர்வியிடம் கூற,
“ம்ம் இப்போ தான் ரொம்ப சந்தோஷமா இருக்கு, உங்க ரெண்டுப்பேருக்கும் சீக்கிரம் டும் டும் டும் தான்,” என்று சொல்லி இரண்டு கைகளாலும் இருவரையும் பிடித்துக் கொள்ள, அவர்களும் மகிழ்ச்சியில் அவளை ஒட்டிக் கொண்டு அமர்ந்தார்கள்.
ஆனாலும் புனர்விக்கும் நல்லபடியாக அவளது பாதிப்பை புரிந்து ஏற்றுக் கொள்ளும் ஒருவன் வர வேண்டுமே என்று ராகமயா மனதிற்குள் நினைக்க, தவமலருக்கோ புனர்வியின் ரகசியம் தெரிந்ததால், நவிரன் புனர்வியை ஏற்றுக் கொள்வானா? அவனிடம் புனர்வி தான் மின்மினி என்று சொல்லலாமா? என்று யோசித்தாள்.
ஊஞ்சலாடும்..