AO 13

Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அன்பு 13

ன்று கௌசல்யாவின் திருமணத்தில் தனக்கு ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாக தவமலர் சொன்னதும், “நீங்க ராகமயாவை சொல்றீங்களா?” என்று நவிரன் கேட்டதில் தவமலர் திருதிருவென விழித்தாள்.

ராகமயா மீது சந்தேகம் இருப்பது உண்மை தான், ஆனால் தெளிவாக தெரியாமல் எதையும்  அவனிடம் வெளிப்படையாக சொல்லக் கூடாது என்று அவள் நினைத்திருக்க அவன் பட்டென்று கேட்கவும்,

“ஒரு சின்ன சந்தேகம் இருக்கு தான், ஆனா அது சந்தேகம் தான், மத்தப்படி தெளிவா தெரியாம நீங்க ஏதாவது நினைச்சுக்காதீங்க,” என்று அவள் கூற,

“இல்ல நான் தெளிவா தான் இருக்கேன்.” என்று அவன் கூறினான்.

“என்னத்துல தெளிவா இருக்கீங்க?” என்று அவள் பயத்தோடு கேட்கவும்,

“மின்மினி ராகமயாவா இருக்கமாட்டாங்க என்பதில்,” என்ற அவன் பதிலில் கொஞ்சம் நிம்மதியடைந்தாள்.

“ம்ம் அப்புறம் ஏன் அப்படி கேட்டீங்க?”

“நீங்க ராகமயாவை சந்தேகப்பட்றீங்க தானே? அதான் அதை உங்களுக்கு தெளிவுப்படுத்த நினைச்சேன். ராகமயா அவங்க பெயரில் தானே கவிதை எழுதுறாங்க, அப்படியிருக்க அவங்க மின்மினி என்ற பெயரிலும் ஏன் எழுதணும்?”

“நானும் அதை நினைச்சேன், ஆனா?” என்று அவள் இழுக்கவும்,

“அவங்க அப்பா, அம்மா ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டவங்க என்பதால், தனக்கு கிடைச்ச பரிசு பணத்தை ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டவங்களுக்காக ராகா கொடுத்திருப்பாங்களோன்னு உங்களுக்கு சந்தேகம், ஆனா அவங்களா இருக்காதுன்னு என்னோட உள்மனசு சொல்லுது. ஏன்னா அவங்களோட பேசும்போது அவங்க மின்மினியா இருப்பாங்கன்னு எனக்கு தோனல, அதான் நீங்களும் அப்படி யோசிக்காதீங்கன்னு சொல்றேன்.” என்று அவன் கூறினான்.

“சரி அப்போ யாரா இருக்கும்னு நான் சீக்கிரம் கண்டுப்பிடிக்க முயற்சி செய்றேன்.” என்று அவள் கூறவும்,  சரியென்று அவன் தலையசைத்தாலும், ஏதோ சொல்ல  நினைப்பது போல் அவன் தோற்றம் இருந்தது. ஆனாலும் ஒன்றும் சொல்லாமல் அவன் எழுந்து சென்றுவிட்டான்.

அடுத்து இல்லத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியிருக்க மாலை வேளையில் நவிரன் தவமலரை அலைபேசி மூலம் தொடர்புக் கொண்டான். மின்மினி பற்றி தெரிந்தால் சொல்வதற்கு அவள் தான் கோவிலிலிருந்த போது அவனிடம் தன் அலைபேசி எண்ணைக் கொடுத்துவிட்டு, அவன் எண்ணையும் வாங்கி வைத்திருந்தாள். எனவே அவன் பெயர் அலைபேசியில் மிளிரவும், அந்த அழைப்பை ஏற்றவள், “ஹலோ நவிரன், சொல்லுங்க?” என்று பேச,

“புனர்வி ஏன் மின்மினியா இருக்கக் கூடாது?” என்று எடுத்தவுடன் அவன் கேட்கவும்,

“என்ன உளரறீங்க நவிரன்.” என்று அவள் கோபம் கொண்டாள்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“இல்ல தவா, மதியம் இல்லத்தில் இருந்து வீட்டுக்கு வரும்போது ஒரு சம்பவம் நடந்தது, அதை வச்சு தான் சொல்றேன்.”

“என்ன நடந்தது?”

“அதுக்கு முன்ன உன்கிட்ட வேற ஒன்னு கேட்கணும்? தப்பா நினைச்சுக்காத, நீங்க வாங்கன்னு பேச ஒருமாதிரி இருக்கு, நீ வா போன்னா ஃப்ரண்ட்லியா இருக்கும், புவியும் அதை தான் சொன்னா,”

“ம்ம் புரியுது, நானே உங்கக்கிட்ட இதை சொல்ல நினைச்சேன். சரி விஷயத்துக்கு வாங்க,”

“ராகா கவிதை எழுதுவா சரி, புவி கவிதை எழுதியிருக்காளா?”

“இல்ல அவ இதுவரை கவிதையெல்லாம் எழுதியது இல்ல,”

“இல்ல மயூர் சொல்லியிருக்கான், புவிக்கு இப்படி ஒரு பிரச்சனை வந்ததுக்கு பிறகு தான் அவ இங்க சென்னை வந்தான்னு, டெல்லியில் இருக்கும்போது கவிதை ஏதாச்சும் எழுதியிருக்காளா? தெரியுமா? மயூர் கிட்ட இதைப்பத்தி கேட்க முடியாது, புரியுதுல்ல?

“ம்ம் புரியுது, ஆனா எனக்கும் ராகாக்கும் புவியை சென்னைக்கு வந்த பிறகு தான் தெரியும், மதன் அத்தான், பூர்வி அக்கா கல்யாணத்துக்கு கூட அம்மா, அப்பா மட்டும் தான் டெல்லிக்கு போனாங்க, அப்போ எனக்கும் ராகாக்கும் எக்ஸாம் நடந்திட்டு இருந்தது, அதனால ராகா அம்மாவோட எங்களை விட்டுட்டு அவங்க மட்டும் கல்யாணத்துக்கு போனாங்க, 

இங்க புவி வந்தப்போ எப்படி வந்தான்னு நீங்களே இப்போ சொன்னீங்களே, ஆரம்பத்தில் எங்கக்கிட்டயே ஒதுக்கம் காட்டுவா, அவ எங்களை நல்லா புரிஞ்சிக்கிட்டு பேச ஒரு வருஷம் ஆச்சு, அப்போதும் சரி, அதுக்குப்பிறகு இப்ப வரைக்குமே நாங்க புவிக்கிட்ட பழைய விஷயத்தை பேசினதில்ல, அவ எதையும் நினைச்சு வருத்தப்படக் கூடாதுன்னு நாங்க கேட்டதில்ல, இதுக்கும் அவளோட குடும்பத்தை பார்க்க அடிக்கடி டெல்லிக்கு போவா, போன முறை போன போது கூட சில பழைய ஃப்ரண்ட்ஸ பார்த்ததா அவளே சொன்னா, அப்பக்கூட நாங்க அவக்கிட்ட விளக்கமா எதுவும் கேட்கல,  எங்களுக்கு புவி எப்படி அறிமுகம் ஆனாளோ அப்படி தான் அவளை நாங்க ஏற்றுக் கொள்ள பழகிக்கிட்டோம்.”

“நைஸ், சரி உனக்கு தெரியலன்னா விடு, எனக்கு தோன்றியதை விஷயத்தை சொல்றேன். என்னவோ முதல்முறை புனர்வியை பார்க்கும்போது மின்மினியோன்னு எனக்கு தோனியது, நேம் போர்ட் வச்சிட்டு புவி நின்னுட்டு இருந்தப்ப நான் அவனை கவனிக்கல, அவளே என்னை கூப்பிட்டு பேச வந்தா, என்னோட போட்டோவை மயூர் காட்டி என்னைப்பத்தி தகவல் சொன்னதா நினைச்சுக்கிட்டேன். ஆனா மயூர் எந்த தகவலும் சொல்லலன்னு சொன்னான். நான் மதன் அண்ணா கல்யாணத்துக்கு போயிருக்கேன். அவளையும் பார்த்திருக்கேன். ஆனா எனக்கு அவ முகம் ஞாபகத்துக்கு வரல, ஒருவேளை புவி என்னை நல்லா ஞாபகம் வச்சிருக்காளோமோன்னு நினைச்சு விட்டுட்டேன். அடுத்து என்னை மயூர் வீட்டுக்கு அழைச்சிட்டு போகும்போதும் சரி, அங்க மயூர் அம்மா வீட்டுக்கு பார்க்க வந்தப்போதும் சரி எனக்கு பிடிச்ச சாப்பாடு அயிட்டமா இருந்தது, இதெல்லாம் நான் மின்மினிக்கிட்ட பேசும் போது சொல்லியிருக்கேன். அதை பிரதிபலிப்பது போல் அந்த மெனுல்லாம் இருந்தது.

சரி இதெல்லாம் இயல்பா நடந்ததுன்னு வச்சிக்கலாம், ஆனால் புவி என்னவோ என்னை தள்ளி வச்சு பேசறது போல தெரிஞ்சுது. ராகாவும் அப்படித்தான் பேசினா, ஆனா புவி நடந்துக்கிட்டது எனக்கு வித்தியாசமா தோனியது, இதில் அவ பேசும் விதம் எனக்கு மின்மினியை ஞாபகப்படுத்தியது.

இதெல்லாம் எனக்கு ஏற்பட்ட குழப்பமா இருக்கலாம்னு நான் என்னை சமாதானப்படுத்திக்கிட்டேன். நீ சொன்னது போல பரிசு தொகையை ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டவங்களுக்கு கொடுத்ததா சொன்னல்ல, அதை ராகமயா மட்டும்தான் செய்யணுமா? அந்த இடத்தில் நீ, புவி ரெண்டுப்பேருமே அப்படி நினைச்சிருப்பீங்கல்ல, உதாரணத்துக்கு இப்போ கௌசல்யா கல்யாணத்துக்கு அந்த இல்லத்துக்கு போய் சாப்பாடு போட ஆசைப்பட்டது புவி தானே, அப்போ பரிசுத் தொகையையும் அவளே சாம்பவி அம்மாக்கு கிடைக்கறது போல செஞ்சுருக்க கூடாதா? 

இத்தனையும் என்னோட யூகம் தான், ஆனா வீட்டுக்கு வரும்போது நடந்தது தான் புவி தான் மின்மினியோன்னு ரொம்பவே யோசிக்க வைத்தது.” என்று சொல்லியவன், அந்த விபத்து நடந்ததையும் அப்போது புவி பேசியதையும் தவமலருக்கு கூறியவன்,

“அப்படியே என்னை முழுசா தெரிந்து வைத்திருப்பது போல் இருக்கு புவி சொன்னது, என்னோட இந்த மனநிலையை பத்தி எல்லோருக்கும் சொன்னதில்ல, மயூர்க்கு தெரியும், அப்புறம் கண்டிப்பா மின்மினிக்கிட்ட சொல்லியிருப்பேன். மயூர் இதெல்லாம் கண்டிப்பா புவிக்கிட்ட சொல்லியிருக்க போறதில்ல, அப்போ புவிக்கு இதெல்லாம் எப்படி தெரியும்? அப்புறம் அன்னைக்கு நாம மின்மினி பத்தி பேசும் போது நீதான் அதிகமா ஆர்வம் காட்டின, ராகா கூட கொஞ்சம் ஆர்வம் காட்டினது போல இருந்தது. ஆனா புவிக்கிட்ட அந்த ஆர்வம் இல்ல, ஏன்? ஒருவேளை புவியோட இயல்பே அப்படியா? இல்ல மின்மினியா புவி அமைதியா இருந்தாளா? என்று நவிரன் கேட்கவும், தவமலருக்கே கொஞ்சம் குழப்பமாக தான் இருந்தது.

“சரி புவிக்கிட்ட நான் பேசிப் பார்க்கிறேன். ஆனா எனக்கு அப்படி தோனல,” என்று அவனுக்கு நம்பிக்கை அளிப்பது போல் இல்லாமல், அவள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது போல் பேசிவிட்டு அழைப்பை அணைத்தாள்.

“நவிரன்க்கிட்ட அப்படி சொன்னாலும் அப்பவே எனக்கு உன்மேல டவுட் வர ஆரம்பிச்சிடுச்சு, நீ கேட்டது போலத்தான், ராகா மின்மினின்னா அவ நவிரனுக்கு அதை தெரியாம மறைக்க என்ன காரணம் இருக்கப் போகுது? ஆனா உனக்கு இருக்கே, அந்தவிதத்தில் நான் யோசிச்சேன்.

அதுக்குப்பிறகு தான் ராகாக்கிட்ட அன்னைக்கு ஏர்போர்ட்ல நடந்ததைப் பத்தி கேட்டேன். அப்புறம் வீட்டில் நீ மொபைல் யூஸ் செய்றது பத்தி கேட்டேன். குளிக்கப் போகும்போது கூட நீ மொபைல் கையில் எடுத்துட்டு போவன்னு ராகா சொன்னா, நீ கவிதை எழுதி இருக்கியான்னு தெரிஞ்சிக்க நினைச்சேன். அதான் பூர்வி அக்காக்கிட்ட பேசினேன். ஓரளவுக்கு அவங்க சொன்னதை வச்சு நீதான் மின்மினியா இருப்பியோன்னு சந்தேகம் வரவே தான், உன்கிட்ட பேச நினைச்சேன். நவிரனால் தான் இந்த அளவுக்கு என்னால கண்டுப்பிடிக்க முடிந்தது.” என்று தவமலர் புனர்வியிடம் சொல்லவும்,

“அப்பவே அந்த ஆக்ஸிடெண்ட் நடந்தப்போ நவிரன்க்கிட்ட உளரிட்டோமே, கண்டுப்பிடிச்சிடுவாங்களான்னு சந்தேகம் வந்தது. நான் நினைச்சப்படியே ஆகிடுச்சு,” என்று தவமலரிடம் சொல்வது போல் புனர்வி தனக்கு தானே கூறிக் கொண்டாள்.

“புவி அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் உன்கிட்ட கேட்கணும்? நீயும் நவிரனை காதலிக்கிற, நவிரனுக்கு உன்னைப்பத்தி தெரிஞ்சா அவங்க உன்னை ஏத்துப்பாங்களான்னு குழப்பம் இருக்கு எல்லாம் ஓகே, இந்த நிலைமையில் மயூ அத்தானை கல்யாணம் செய்துக்க நீயேன் சம்மதம் சொன்ன? அதுதான் எனக்கு புரியல? ஒருவேளை நவிரனோட சேர முடியாதுன்னு நினைச்சு, வீட்டில் சொன்னதால மயூ அத்தானை கல்யாணம் செய்ய ஒத்துக்கிட்டீயா?”

” அது, இனி உன்கிட்ட மறைக்க கூடாது, இந்த நிச்சயதார்த்தமே ஒரு டிராமா தவா, நானும் அத்தானும் சேர்ந்து போட்ட டிராமா.”

“என்ன டீ சொல்ற? டிராமாவா?”

“ஆமாம் தவா, நவிரன் என் வாழ்க்கையில் வந்தாலும் இல்லைனாலும், என்னோட முகத்தில் இப்படி ஒரு பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், இல்லைன்னாலும் நான் மயூ அத்தானை கல்யாணம் செய்துக்கற எண்ணத்தில் இல்லை. 

அக்கா முதலில் மதன் அத்தானை காதலிக்கிற விஷயத்தை என்கிட்ட தான் சொன்னா, அப்போ நான் +1 படிச்சிட்டு இருந்தேன். எனக்கு தான் மதன் அத்தானை முதலில் அறிமுகப்படுத்தி வச்சா, எங்க பக்கம் அக்கா ஹஸ்பண்ட்டை மாமான்னு கூப்பிடுவோம், ஆனா மதன் அத்தான் தான் அத்தான்னு கூப்பிட சொன்னாங்க, அவங்களை அத்தான்னு கூப்பிட்டாலும் அதுக்குப்பிறகு பார்க்கும்போதெல்லாம் ஒரு அண்ணனா தான் ஃபீல் செய்ய வச்சாங்க,

அக்கா எப்படி என்கிட்ட முதலில் சொன்னாளோ, அதேபோல மதன் அத்தான் மயூ அத்தானுக்கு தான் முதலில் அவங்க காதல் விஷயத்தை சொல்லியிருக்காங்க, அக்காவோட மதன் அத்தானை பார்க்கும்போது மயூ அத்தானும் சிலமுறை வருவாங்க, அவங்களையும் அத்தான்னு கூப்பிட பழகிட்டேன். ஆனா ரெண்டுப்பேரையும் மனசுக்குள்ள அண்ணனா தான் நினைச்சிட்டு இருக்கேன் இப்போ வரை, ஆனா வீட்டில் எங்க கல்யாணம் பத்தி பேசும்போது என்னால மறுக்க முடியாத சூழ்நிலை.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

அதுக்கு காரணம் அம்மா தான், உனக்கே தெரியும் அவங்களுக்கு உடம்பு சரியில்லன்னு, இதில் என்னைப்பத்திய கவலை அவங்களுக்கு அதிகமாக இருக்கு, அதனால தான் மதன் அத்தான் இப்படி ஒரு முடிவை சொன்னாங்க, நான் நினைச்சிருந்தா என்னோட மனசுல மயூ அத்தான் பத்தி என்ன நினைச்சிருக்கேன்னு வெளிப்படையா சொல்லியிருக்க முடியும், ஆனா அம்மாக்கு என்னைப்பத்திய கவலை இருந்துட்டு தான் இருக்கும், எனக்கும் மத்த பெண்கள் போல கல்யாணம், குடும்பம் அமையுமான்னு தவிப்பாங்க, ஏற்கனவே டாக்டர் அவங்களுக்கு எந்த கவலையும் சேர விடாம பார்த்துக்கோங்கன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க, இதில் என்னால அம்மாவோட உடம்புக்கு ஏதாவது வந்ததுன்னா அதான் அத்தானோட பேசி முடிவெடுக்க சொன்னப்போ, அவங்களை கல்யாணம் செஞ்சுக்க முடியாதுன்னு சொல்லிட்டேன். ஆனா அம்மாக்காக நாம கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டதா வீட்டில் எல்லோருக்கும் சொல்லணும்னு சொன்னேன். அத்தானும் எனக்காக இந்த டிராமாக்கு ஒத்துக்கிட்டாங்க, அதனால தான் படிப்பு முடியும் வரைன்னு டைம் கேட்டேன்.

இப்போ அம்மா என்னைப்பத்திய கவலையில்லாம ட்ரீட்மெண்ட்க்கு ஒத்துழைப்பு கொடுக்கிறாங்க, ஓரளவுக்கு குணமாகிட்டும் வராங்க, இன்னும் நம்ம படிப்பு முடிய ஆறுமாசம் இருக்கு அதுக்குள்ள அம்மாவும் முழுசா குணமடைய வாய்ப்பு இருக்கு, அப்போ வீட்டில் எல்லோரிடமும் இந்த டிராமா பத்தி சொல்லிடுவோம்.”

“மத்தவங்களுக்கு ஓகே, இந்த விஷயத்தை என்கிட்ட ராகாக்கிட்ட இருந்து கூட மறைச்சிட்டியே, ஏன் இப்படி செஞ்ச புவி?”

“வீட்டில் இருப்பவங்களுக்கு மட்டும் தான் என்னைப்பத்திய கவலையா? உங்க ரெண்டுப்பேருக்கு இல்லையா? அத்தானை கல்யாணம் செய்ய நான் ஒத்துக்கணும்னு நீங்க ஆசைப்பட்டிங்களா இல்லையா? அதான் உங்கக்கிட்டேயும் இப்போதைக்கு சொல்ல வேண்டாம்னு முடிவு செய்தேன். அதான் உங்களை கூட நிச்சயதார்த்ததுக்கு கூப்பிடாம வீட்டில் அம்மாக்கு முன்ன சிம்பிளா நிச்சயத்தை முடிச்சிட்டோம், மோதிரம் மாத்திக்கிட்டது கூட ஃப்ரண்ட்லியா தான், நீங்க வந்தா கண்டிப்பா கண்டுப்பிடிச்சுடுவீங்கன்னு எனக்கு தெரியும், சரி நேரம் வரும்போது விஷயத்தை சொன்னா நீங்க புரிஞ்சிப்பீங்கன்னு நினைச்சேன்.”

“நீ மயூ அத்தானை கல்யாணம் செய்ய ஒத்துக்கிட்டதுக்கு நாங்க சந்தோஷப்பட்டது உண்மை தான், ஆனா உன் மனசுல மயூ அத்தானை பத்தி இப்படி ஒரு எண்ணம் இருக்கிறது தெரிஞ்சிருந்தா நாங்க புரிஞ்சிக்க மாட்டோமா? சரி அதை விடு, இப்போ நவிரன் விஷயத்துக்கு வா, அவங்களுக்கு நீதான் மின்மினின்னு சந்தேகம் வந்தாச்சு, இனி என்ன செய்யப் போற?”

“சந்தேகம் தானே வந்திருக்கு, ஆனா உறுதியா தெரியல இல்ல, அப்படி உறுதியா தெரிஞ்சு நவிரன் என் முன்ன வந்து கேட்டா அப்போ பார்த்துக்கலாம், இப்போ உனக்கு நான்தான் மின்மினின்னு தெரிஞ்ச உண்மையை நீ நவிரன்க்கிட்ட சொல்லக் கூடாது. சொல்லு தவா, சொல்ல மாட்ட இல்ல?” என்றுக் கேட்க,

தவமலருக்கும் கொஞ்சம் குழப்பமாக தான் இருந்தது. புனர்வியும் மயூரனும் திருமணம் செய்துக் கொள்ள போகிறார்கள் என்பதில் புனர்வி சொன்னது போல் உண்மையிலேயே அனைவரும் அவளை குறித்து நிம்மதியோடு இருந்தனர். இப்போது அது நடக்க வாய்ப்பில்லை என்பது ஒருபக்கம் இருக்க, புனர்வியோ நவிரனை காதலிக்கிறாள். அதனால் அவள் தான் மின்மினி என்பது நவிரனுக்கு தெரிந்தால் நல்லது என்று அவள் மனம் நினைக்க,

நவிரனின் மனநிலையையும் ஒருபக்கம் பார்க்க வேண்டியிருந்தது. புனர்விக்கு இருப்பது போல் பாதிப்படைந்த முகத்தை பார்க்கவே சங்கடமாக இருக்கும் என்று சொல்பவன் புனர்வி தான் மின்மினி என்று தெரிந்தால் அவளை திருமணம் செய்துக் கொள்வானா? அவன் தான் புனர்வி மின்மினியாக இருக்கும் என்று சந்தேகித்தவன், ஆனால் அது உண்மை என்ற பட்சத்தில் அவன் என்ன முடிவெடுப்பான்? இப்படி எதற்கும் தெளிவான விடை இல்லாததால், இன்னும் சிறிது நாட்கள் நவிரனைப் பற்றி நன்கு அறிந்துக் கொண்டு பிறகு புனர்வி தான் மின்மினி என்பதை சொல்லலாம் என்று மனதிற்குள் முடிவெடுத்தவள்,

“சரி நீதான் மின்மினின்னு நான் சொல்ல மாட்டேன். ஆனா நீயும் நவிரனை காதலிக்கிற, நவிரன் எந்த முடிவெடுத்தாலும் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் தான் நீ இருக்க, அதனால நீதான் மின்மினின்னு நவிரனுக்கு தெரியப்படுத்தறது நல்லது.” என்றாள்.

” சரி கொஞ்ச நாள் போகட்டும் அப்புறம் பார்க்கலாம்,” என்று அவள் நினைத்ததையே புனர்வியும் சொல்ல, அதை ஒத்துக் கொண்டவள்,

“இப்போ சொல்லு, மின்மினிக்கு நான் தெரிஞ்சவ தானே, என்னை அடிப்பாளா அவ?” என்று மீண்டும் இல்லாத காலரை தூக்கிவிட்டு சொல்ல,

“கண்டிப்பா அடி விழும், நவிரன் மின்மினியை பத்தி சொல்லும்போது நாங்க ரெண்டுப்பேரும் அமைதியா இருந்தா, நான் கண்டுப்பிடிக்க உதவுறேன்னு சொல்லி நீ முன்ன நிற்கும் போதே முடிவு செஞ்சுட்டேன். நான்தான் மின்மினின்னு உனக்கு தெரிய வரும்போது நல்லா 4 அடி கொடுக்கணும்னு,” என்று சொல்லியவள், அடிப்பதற்கு ஏற்றது போல் தன் கைகளை கொண்டு வர, 

“அடிப்பாவி, சும்மா சொன்னேன்னு நினைச்சா, நிஜமாகவே அடிக்க வர, மீ எஸ்கேப்.” என்று  தவமலர் அங்கிருந்து ஓட,

“ஹே நில்லு டீ,” என்று புனர்வியும் அவளை துரத்தியப்படி பின்னால் ஓடினாள்.

கொஞ்ச நாள் போகட்டும் என்று முன்பே யோசித்ததால், நவிரன் புனர்வியிடம் பேசினாயா? என்று தவமலரிடம் கேட்கும்போது,

“ம்ம் அவ பிடி கொடுத்தே பேசல, அவ பேசறதை வச்சு பார்த்தா அவ தான் மின்மினியா இருப்பான்னு எனக்கு தோனல, அதில்லாம அவளுக்கு மயூ அத்தானோட கல்யாணம் முடிவாகியிருக்கு, ஒருவேளை அவளே மின்மினியா இருந்தாலும் இதுக்கு மேல என்ன செய்ய முடியும்? அதனால அவ தான் மின்மினியா இருக்குமோன்னு யோசிக்காம வேற மாதிரி யோசிச்சு பாருங்க,” என்று அவள் நவிரனிடம் கூறினாள்.

என்னத்தான் தவமலர் அப்படி கூறினாலும், என்னவோ புனர்வி தான் மின்மினி என்று நவிரனின் மனம் அடித்து சொன்னது. ஆனால் உறுதியாக சொல்ல அவனிடம் எந்த ஆதாரமும் இல்லை, அதேபோல் புனர்வியிடம் சென்று கேட்பதற்கு அவளுக்கு மயூரனோடு நிச்சயதார்த்தம் முடிந்த அந்த ஒரு விஷயம் தடையாக இருந்தது. 

முதலில் அவள் தான் மின்மினி என்பதையே உறுதியாக சொல்ல முடியவில்லை, இதில் மின்மினி அவனை காதலிப்பதாக ஒருபோதும் கூறியதில்லை. இப்படியிருக்க என்னை காதலித்துவிட்டு நீ எப்படி மயூரனை திருமணம் செய்துக் கொள்ளலாம்? என்று  புனர்வியிடம் சென்று கேள்விக் கேட்கவும் முடியாதே? மின்மினி சொன்னது போல் அவள் எனக்கு கிடைக்கமாட்டளா? என்று மனதில் புலம்பி தள்ளியவனுக்கு என்ன செய்வது என்று உண்மையிலேயே புரியாததால் அப்போதைக்கு அமைதியாக இருந்துக் கொண்டான்.

டுத்து தோழிகள் மூவரும் செமஸ்டர் தேர்வுகள் ஆரம்பித்ததால் அதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். அதனால் கௌசல்யாவின் திருமணத்திற்கு பிறகு தவமலருக்கு யோகமித்ரனை பார்க்கும் வாய்ப்பு அமையவே இல்லை, அதேபோல் நவிரனுக்கும் அலுவலக வேலை கொஞ்சம் அதிகப்படியாக இருந்ததால், ஞாயிறன்றும் வீட்டில் இருந்து வேலை செய்வதால் மயூரனோடு சாம்பவி வீட்டிற்கு செல்ல முடிவதில்லை, ராகமயாவும் மயூரனும் பார்த்துக் கொண்டாலும், ராகமயா அவனிடம் முகம் திருப்புவதிலேயே இருக்க அவனும் அவளிடம் எதுவும் பேசுவதில்லை. 

அதேபோல் கௌசல்யா அவளது தேனிலவு முடிந்து கல்லூரிக்கு வந்தாலும் மூவரும் தேடிச் சென்று அவளை பார்த்து பேசுவதில்லை, அவள் வழக்கம் போல் அவர்களோடு பேசிக் கொண்டிருந்தால், தனசேகர் அதுகுறித்து ஏதாவது பிரச்சனை செய்வானோ என்று யோகமித்ரன் நினைத்ததால், கௌசல்யாவிடமும் புனர்வியிடமும் இது குறித்து பேசியிருந்தான். அதனால் சாதாரணமாக பார்க்க நேர்ந்தால் மட்டுமே ஒரு புன்னகையுடன் கடந்துப் போக நால்வரும் பழகிக் கொண்டனர். ஆனாலும் அது நால்வருக்குமே மனதிற்கு சங்கடத்தை தான் கொடுத்தது.

அன்று மூவருக்கும் அது கடைசி தேர்வு, தேர்வு முடிந்து சில நாட்கள் அவர்களுக்கு விடுமுறை விட்டிருந்தனர். அப்போது தான் தேர்வு முடித்து மூவரும் பேசியப்படி கல்லூரியில் இருக்க, புனர்விக்கு அவளின் அன்னை அலைபேசியில் தொடர்புக் கொண்டார். விடுமுறைக்கு வருகிறாயா? என்று கேட்பதற்கு தான் அவளை அழைத்திருந்தார்.

“ம்ம் இந்த முறை வந்து உங்கக்கூட நாலைந்து நாள் இருக்கேன்ம்மா, நாளைக்கே கிளம்ப முடியாது. கூட தவா, ராகாவை அழைச்சிட்டு வரலாமான்னு பார்க்கிறேன். அவங்கக்கிட்ட பேசிட்டு எப்போ வரேன்னு சொல்றேன். கண்டிப்பா ரெண்டு மூனு நாட்களுக்குள் வந்துட்றேன்.” என்று அவர் கேட்ட கேள்விகளுக்கு அவள் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருக்க, 

அவள் தன் அன்னையிடம் பேசுவதை பார்த்தப்படியே ராகமயாவும் தவமலரும் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.

அந்த நேரம் யோகமித்ரன் புனர்வியின் அலைபேசிக்கு அழைப்பு விடுக்க, அவள் வேறு யாரிடமோ பேசிக் கொண்டிருப்பதாக ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்த ஒரு பெண் குரல் பேசவும், புனர்வியிடம் வாங்கி வைத்திருந்த தவமலரின் அலைபேசிக்கு அழைப்பு விடுத்தான். அவள் அவனது எண்ணை தன் அலைபேசியில் சேமித்து வைக்காததால், ஏதோ எண் மிளிரவும், அதை ஏற்று, “ஹலோ.” என்று பேச,

“மலர், நான் தான் யோகமித்ரன் பேசறேன். என்று கூறவும்,

அவன் பதட்டத்தில் பேசுவது போல் அவனின் குரல் தெரியவும், ” சொல்லுங்க யோகன்.” என்று அவளும் கேட்டாள்.

“முதலில் புவி நம்பர்க்கு தான் முயற்சி செய்தேன். அவ எடுக்கல அதான் உனக்கு போட்டேன்.”

“ஆமாம் புவி அவளோட அம்மாக்கிட்ட பேசிக்கிட்டு இருக்கா, அதான் எடுக்கல போல, சொல்லுங்க ஏதாவது முக்கியமான விஷயமா?”

“ஆமாம் இப்போ நான் ஹாஸ்பிட்டலில் இருக்கேன். தனசேகருக்கு ஆக்ஸிடெண்ட். ஹாஸ்பிட்டலில் சேர்த்திருக்காங்க.”

“அய்யோ எப்படி ஆச்சு? மேம் எங்க?”

“ஆஃபிஸ் போயிட்டு திரும்பி வரும்போது தான் ஆக்ஸிடெண்ட் ஆயிருக்கு, எப்படி? என்ன? ஏதுன்னு இன்னும் விவரமா ஏதும் தெரியல, தனாவை ஐசியூல வச்சு பார்த்துட்டு இருக்காங்க, கௌசல்யாவை பார்க்கவே முடியல, அழுதுக்கிட்டே இருக்கா, நீங்க வந்தா அவளுக்கு கொஞ்சம் ஆதரவா இருக்கும்,”

“இதோ உடனே கிளம்பறோம் யோகன்,” என்றவள், மருத்துவமனை முகவரியை கேட்டுக் கொண்டு அலைபேசியை வைக்க,

அருகில் இருந்த ராகமயாவும், அவள் அதிர்ச்சியோடு பேசுவதை பார்த்து தன் அன்னையிடம் பிறகு பேசுவதாக சொல்லிவிட்டு வந்த புனர்வியும் என்னவோ என்று அவளை பார்த்தப்படி இருக்க,

“தனா சார்க்கு ஆக்ஸிடெண்ட்டாம், யோகன் தான் சொன்னாங்க,” என்று தவமலர் விஷயத்தை கூறினாள்.

“எப்படி நடந்தது?” என்று இருவரும் கேட்க, 

“இன்னும் விவரம் தெரியலையாம், நாம உடனே போகணும், மேம் வேற அழுதுக்கிட்டே இருக்காங்களாம்.” என்று சொல்ல, புனர்வியின் வண்டியில் ராகமயா ஏறிக் கொள்ள, தவமலர் அவள் வண்டியை எடுக்க, மூவரும் மருத்துவமனையை நோக்கி விரைந்தனர்.

ஊஞ்சலாடும்..