AO 10
Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அன்பு 10
தனசேகர், அவனின் பெற்றோர், கௌசல்யா, மற்றும் தோழிகள் மூவர் என, இவர்கள் மட்டுமே விடியற்காலையிலேயே கோவிலுக்கு வந்துவிட்டிருந்தனர். இன்னும் சில மணி நேரங்களில் தனசேகர், கௌசல்யாவின் திருமணம் இந்த கோவிலில் தான் நடைபெற இருக்கிறது. அதற்காக தான் இப்போது அவர்கள் வெகு சீக்கிரமாக இங்கு வந்து திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்றனர்.
மூன்று தோழிகளும் புடவையில் வந்திருந்தனர். புனர்வி வழக்கம் போல் முழு கைகளையும் மறைப்பது போல் ரவிக்கை அணிந்து புடவையை கட்டியிருந்தாள். அவள் முகத்தை மறைப்பதற்கும் கையோடு ஒரு துப்பட்டாவை எடுத்து வந்திருந்தாள்.
ஆனால் கௌசல்யாவோ அதை வாங்கி வைத்துக் கொண்டாள். “என்னோட கல்யாணத்திலும் நீ இப்படி முகத்தை மறைத்துக் கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்ல புவி, நீ சாதாரணமா இரு, அதுதான் நெருக்கமான ஃபீல் கொடுக்கும்,” என்று அவள் கூறவும் புனர்வியால் அதை மறுக்க முடியவில்லை.
“காலையில் கோவிலுக்கு போகும் போது, என்கூடவே வந்து, என்னோடவே இருங்க, அப்போ தான் அம்மா, அப்பா கூட இல்லாத வருத்தம் கொஞ்சமாச்சும் மறையும்,” என்று கூறிய கௌசல்யாவின் விருப்பத்திற்காகவே அதி முக்கியமான தங்களின் உறக்கத்தை கொஞ்சம் விட்டுக் கொடுத்து, நடு நிசி ஒரு மணிக்கே எழுந்து தயாராகி, புடவை உடுத்தி என சாம்பவியின் வீட்டையே மூவரும் அமர்க்களப்படுத்தி, இதோ கௌசல்யாவோடு தயாராகி கோவிலுக்கு வந்திருந்தனர்.
ஆனால் அவர்களின் வருகை தனசேகருக்கும், அவன் பெற்றோர்களுக்கும் பிடிக்கவேயில்லை. அதுவும் குறிப்பாக புனர்வியை கௌசல்யா அழைத்து வந்ததில் அவர்களுக்கு சுத்தமாக விருப்பமில்லை.
“என்ன தனா, இப்போ கௌசல்யா எதுக்கு இந்த பெண்ணை கல்யாணத்துக்கு கூட்டிட்டு வந்தா, இவ தான் கூப்பிட்டா அந்த பெண்ணும் வந்திருக்கு, நல்லப்படியா நடக்கப் போற கல்யாணத்தில் ஒரு திருஷ்டி பொட்டு போல இருக்கும், அவ இங்க இருப்பது, போய் கௌசல்யாக்கிட்ட சொல்லுடா,” என்று தனசேகரின் அன்னை கூற,
“எனக்கும் கௌசல்யா அந்த பெண்ணை கூட்டிட்டு வந்தது பிடிக்கல தான், ஆனா இப்போ சொன்னா அவ முகத்தை தூக்கி வச்சிப்பா, கல்யாணம் நல்லப்படியா நடக்கணும் ம்மா. அதான் நீங்களே சொல்லிட்டீங்கல்ல, திருஷ்டிப் பொட்டு போலன்னு, எங்க மேல படும் கெட்ட கண்ணெல்லாம் இதனால விலகும் விடுங்க, நீங்க எதுவும் கேட்டுக்க வேண்டாம்.” என்று தனசேகரும் கூறினான்.
அவர்கள் பேசியதை புனர்வியும் தவமலரும் கேட்கும்படியானது. “என்ன புவி, இப்படி பேசறாங்க? இப்படி குறுகிய மனப்பான்மையோடு இருக்காங்க, எனக்கு ஏன் கல்யாணத்துக்கு வந்தோம்னு இருக்கு.” என்று தவமலர் கூற,
“விடு தவா, நாம கௌசல்யா மேம்க்காக வந்திருக்கோம், இப்போ இங்க நடந்ததுக்கு கோபப்பட்டோம்னா, அது கௌசல்யா மேம்க்கு வருத்தத்தை கொடுக்கும், இன்னைக்கு அவங்க வாழ்க்கையின் முக்கியமான நாள். அவங்க சந்தோஷமா இருக்க வேண்டியது அவசியம், எப்போதும் இது போல பேச்சுக்களையும், பேசறவங்களையும் புறக்கணிப்போம், இப்போ கௌசல்யா மேம்க்காக இவங்களை பொறுத்துப்போம்.” என்றாள்.
“அது சரிதான், ஆனா தனா சார் மேம்க்கு பொருத்தமானவர் தானா? அவங்க பொருத்தமில்லாதவரை தேர்ந்தெடுத்துட்டாங்களோன்னு எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு புவி,”
“ஏன் டீ அப்படி சொல்ற, தனா சார் பேசினதை நீயும் கேட்டல்ல, நம்மள போகச் சொன்னா, மேம் முகத்தை தூக்கி வச்சுப்பாங்கன்னு சொன்னாரே, அதுவே அவங்க மேல பிரியமா இருக்கறதை காட்டலையா?”
“என்ன பிரியமோ போ, எனக்கு என்னமோ அவரை நேர்ல பார்த்ததிலிருந்து சரியாவே படல, மேம் எப்போதும் தன்னை அழகா வச்சுக்கணும்னு அவர் சொல்வாருன்னு மேம் சொல்லியிருக்காங்கல்ல, அவங்க அழகா இருக்கும் ஒரே காரணத்துக்காக மட்டும் தான் அவர் மேமை காதலிக்கவும், கல்யாணம் செஞ்சுக்கவும் ஓகே சொல்லியிருக்காரோன்னு தோனுது. அது புரிஞ்சிக்காம, மேம் தன்னோட அப்பா, அம்மாவை எதிர்த்து கல்யாணம் வரை வந்திருக்காங்க, பாவம் மேம்.” என்று தவமலர் வருத்தப்பட,
“ச்சேச்சே சாரை பார்த்தால் அப்படி தோனல தவா,” என்று புனர்வி கூறவும்,
“ம்ம் எனக்கு என்னமோ அப்படித்தான் தோனுது, சார், அவர்னு அந்த ஆளை மரியாதை வச்சு கூட கூப்பிட தோனல, மேம்க்காக பார்க்கிறேன். என்னக் கேட்டா, உன்னோட முகத்தை பார்த்ததுமே தன்னோட அதிர்ச்சியை காட்டிய நவிரனும், என்னை வேண்டாம்னு பட்டுன்னு சொன்ன யோகனுமே இந்த ஆளுக்கு எவ்வளவோ பரவாயில்லை.” என்று கூறியதும், புனர்வி அவளை வியப்பாக பார்த்தாள்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“என்ன டீ அப்படி பார்க்கிற, ஒருவிதத்தில் அவங்க இப்படின்னு வெளிப்படையா காட்டிக்கிறாங்களே, ஆனா இந்த ஆள் மேம் மேல உண்மையான அன்பு வைக்கலையோன்னு தோனுது, கோவில் சன்னிதானத்தில் வச்சு அவங்க கல்யாணம் நடக்கப் போகுது. கடவுள் தான் அவங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கணும்,” என்று கூறியப்படி மூலஸ்தானத்தில் இருந்த அம்மனை பார்த்து கையெடுத்துக் கும்பிட்டு வேண்டிக் கொண்டாள்.
புனர்விக்குமே தனசேகரை பார்த்தால் கொஞ்சம் சந்தேகமாக தான் இருந்தது. ஆனாலும் கௌசல்யாவின் மீது அவனுக்கு உண்மையான காதல் இருக்கும் என்ற நம்பிக்கையும் இருந்தது. அதனால், “அதெல்லாம் கௌசல்யா மேம் நல்லா இருப்பாங்க தவா,” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்க,
“புவி, தவா,” என்று கௌசல்யா அவர்களை கூப்பிடவும்,
“ஹே மேம் கூப்பிட்றாங்க, அங்க போயும் இப்படி புலம்பாத, அப்புறம் ராகாக்கு இது தெரிய வேண்டாம், அவளும் உன்னை போல டென்ஷன் ஆயிடுவா,” என்று சொல்லியப்படியே புனர்வி தவமலரை அழைத்துக் கொண்டு கௌசல்யா இருக்குமிடத்திற்கு சென்றாள்.
ஆமாம் ராகமயாவிற்கு எதுவும் தெரியாது. அவளை திருமணம் நடக்கவிருக்கும் கோவில் மண்டபத்திற்கு அருகில் வருபவர்களை வரவேற்க, பன்னீர் சொம்பு, சந்தனம், கற்கண்டு, ரோஜாப்பூ சகிதம் அடங்கிய மேசையின் அருகே நிற்க வைத்துவிட்டனர்.
தனாவின் அன்னை தான் அவளை நிற்கச் சொன்னது, உடனே ராகமயா அப்போது அருகிலிருந்த தவமலரை அழைக்க, “எதுக்கும்மா ரெண்டு பேர், நீ மட்டும் போய் நில்லு, உன்னோட இன்னொரு ஃப்ரண்டும் இவளும் கௌசல்யாக்கு அலங்காரம் செய்யட்டும்,” என்று சொல்லிவிட்டு அவர் வேலையைப் பார்க்கச் சென்றுவிட,
“அதான் மேம் வீட்டிலிருந்தே புடவை கட்டிட்டு வந்துட்டாங்கல்ல, வெறும் தலையில் ஜடை வச்சு, முகத்துக்கு கொஞ்சம் மேக்கப் போடணும், இதுக்கு புவி மட்டும் போதும், நீ என்னோடவே இரு.” என்று ராகமயா தவமலரின் கையை பிடித்துக் கொண்டாள்.
“அய்யோ நான் நின்னா நல்லா இருக்காது ராகா, நீதான் வெள்ளையா அழகா இருக்க, அதனால நீதான் நிக்கணும்,” என்று தவமலர் கூறினாள். உண்மையில் தனசேகரின் அன்னையும் இதை நினைத்து தான் அவளை வேண்டாமென்றார். அதை அவள் புரிந்துக் கொண்டதால் அப்படி கூறினாள்.
“ஹே லூசு, ஏன் இப்படியெல்லாம் பேசற, வர்றவங்களை சிரிச்ச முகத்தோட வரவேற்றால் போதும், இதில் அழகு எங்க இருந்து வந்தது. ஓ இதை நினைச்சு தான் அவங்க உன்னை வேண்டாம்னு சொன்னாங்களா? அப்போ நானும் நிக்கல, வேற யாரையாவது நிக்க வச்சுக்க சொல்லு,” என்று அவள் கோபத்தில் சொல்ல,
“ஹே எதுக்குடீ கோபப்பட்ற, எல்லாம் கௌசல்யா மேம்க்காக தான், இப்போதைக்கு நாம தானே இங்கே இருக்கோம், அதனால நீ தான் நிக்கணும், கொஞ்சம் கோபத்தை குறைச்சுக்கோ, நான் புவியும் மேமும் என்ன செய்றாங்கன்னு பார்த்துட்டு வரேன்.” என்று அவளுக்கு சமாதானம் சொல்லி நிற்க வைத்துவிட்டு வந்தவள் தான், இங்கே புனர்வியை பற்றி பேசியதற்கு பொங்கினாள். இன்னும் ராகமயாவிற்கு தெரிந்தாலும் இதேபோல் கோபப்படுவாள் என்பதை புரிந்து, புனர்வி கூறியதற்கு தவமலர் அமைதியாக சென்றாள்.
பூச்சடை எப்போது வரும்? என்று கேட்க தான் இருவரும் தனசேகரின் பெற்றோரை பார்க்கச் சென்றனர். அங்கிருந்து விநாயகர் சன்னதிக்கு பின்னால் அமர்ந்திருந்த கௌசல்யாவை காண வரும்போது அவளோ அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள்.
“ம்ம் ஆமாம் ண்ணா, ஃப்ரண்டோட கல்யாணத்துக்கு போறதா சொல்லிட்டு தான் கிளம்பினேன். ஆனா அவங்களுக்கு விஷயத்தை சொல்லாம வந்தது மனசுக்கு கஷ்டமா இருக்கு, எப்படியோ அவங்களுக்கு கல்யாணம் முடிஞ்சதும் விஷயம் தெரிய தானே போகுது, அதை சொல்லிட்டே வந்திருக்கலாமோன்னு தோனுது ண்ணா,” என்று பேசிக் கொண்டிருக்க, அவள் யோகமித்ரனிடம் பேசிக் கொண்டிருக்கிறாள் என்பதை இருவரும் புரிந்துக் கொண்டு அமைதியாக அவள் அருகில் வந்து நின்றனர்.
அந்தப்பக்கம் யோகமித்ரனோ, “ம்ம் நீ சொல்றது போல சித்தப்பா, சித்திக்கு விஷயம் தெரியத்தான் போகுது, ஆனா தெரிஞ்சு உன்னை ஆசிர்வாதம் செய்து அனுப்புவாங்களா? இல்லை பாசத்தில் உன்னோட புறப்பட்டு வரப் போறாங்களா? சாபம் தான் விடுவாங்க கௌசி, ஒரு நல்லது நடக்கப் போற நேரத்தில் அவங்க சாபத்தை வாங்கணுமா?
உன்னோட காதலை அவங்க மறுக்க ஏதாவது ஒரு நியாயமான காரணம் இருந்தா கூட பரவாயில்லை. இல்ல உன்னோட வாழ்க்கையில் அக்கறைப்பட்டு இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவிச்சா கூட, அவங்க மனசை மாத்த முயற்சிக்கலாம், ஆனா வேணும்னே மௌனம் சாதிக்கிறவங்கக்கிட்ட என்ன செய்ய முடியும்? அதனால நீ அனாவசியமா கவலைப்படாம, கல்யாண பெண்ணா சந்தோஷமா இரு.” என்றான்.
“சரி ண்ணா, ஆமாம் நீங்க என்ன இன்னும் வராம இருக்கீங்க, முகூர்த்தம் ஆரம்பிக்க இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கு, சீக்கிரமா வாங்க ண்ணா.”
“இதோ கிளம்பிட்டேன் கௌசி, முகூர்த்த நேரத்துக்கு கரெக்டா அங்க இருப்பேன்.” என்றதும்,
“சரி ண்ணா, நான் போனை வைக்கிறேன்.” என்று வைத்தவள்,
“அண்ணா தான் பேசினாங்க, அப்பா, அம்மாக்கிட்ட என்ன சொல்லிட்டு வந்தன்னு கேட்டாங்க, அவங்கக்கிட்ட பொய் சொல்லிட்டு வந்தது உறுத்தலா இருக்கு, ஆனா உண்மையை சொன்னா சாபம் விட்ருப்பாங்கன்னு மித்ரன் அண்ணா சொல்றாங்க, எனக்கு ஒன்னுமே புரியல,” என்று இருவரிடமும் புலம்பினாள்.
“பெத்தவங்க சாபம் ஒன்னுமே செய்யாது மேம், ஏன்னா அவங்க கோபத்தில் சொல்வாங்களே தவிர, மனசார சபிக்க மாட்டாங்க, ஆனா உங்க அண்ணன் சொல்றதும் சரி தான், உங்க அப்பா, அம்மா தான் கொஞ்சம் சுயநலமா யோசிக்கிறாங்களே, அதனால் கண்டிப்பா காயப்படுத்த தான் நினைப்பாங்க,” என்று தவமலர் கூறவும்,
“ஆமாம் மேம், அதில்லாம துணிஞ்சு இந்த முடிவுக்கு வந்தாச்சு, முன்னமே அவங்கக்கிட்ட சொல்லிட்டு வர்றதுன்னா, இந்த ஏற்பாடுகளை செய்ய ஆரம்பிக்கும் போதே இப்படின்னு விஷயத்தை பட்டுன்னு போட்டு உடைச்சிருக்கணும், அதைவிட்டுட்டு இங்க வர்றதுக்கு முன்ன சொன்னா நல்லா இருக்காது. அதனால நீங்க கல்யாணம் முடிஞ்சே போய் ஜோடியா நின்னு, அவங்க ஆசிர்வாதம் செய்தாலும், சாபம் கொடுத்தாலும் அதை ஏத்துக்கிட்டு தான் ஆகணும்.” என்று புனர்வி கூறினாள்.
அதில் கௌசல்யா முகத்தில் குழப்ப ரேகைகள் தெரிய, “இந்த நேரம் உங்க கல்யாணத்தை பத்தி மட்டும் யோசிங்க மேம், சந்தோஷமா முகத்தை வச்சிக்கோங்க, வீட்டை விட்டு வந்ததா நினைக்காதீங்க, அதான் உங்க அண்ணன் முன்ன நின்னு இந்த கல்யாணத்தை நடத்துறாங்களே, இப்போல்லாம் கூடப் பிறந்த அண்ணனே இப்படில்லாம் செய்வாங்களா? தெரியல, அவங்க செய்றாங்க, அதை நினைச்சு சந்தோஷப்படுங்க,” என்று தவமலர் சொல்லவும்,
“என்னடீ, ஒரே யோகனுக்கு பாராட்டு பத்திரமா வாசிக்கிற,” என்று புனர்வி அவள் காதில் கிசுகிசுத்தாள்.
“ஹே உண்மையை கூட உரக்க சொல்லக் கூடாதா? அநியாயமா இருக்கு. யாரோ யோகன் கூட சேர்த்து என்னை கேலி செய்ய கூடாதுன்னு சொன்னதா ஞாபகம்,”
“அதுக்கு அவங்களும் அப்படி நடந்துக்கணுமில்ல, எப்போ பாரு அவங்க ஆள் ஞாபகமாகவே இருந்தா எப்படி?” என்று புனர்வி கேட்க, தவமலர் அவளை தன் காலால் மிதித்தாள்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
வலியில் புனர்வி, “அய்யோ” என்று அலற,
ஏதோ சிந்தனையில் மூழ்கியிருந்த கௌசல்யா, புனர்வியின் சத்தத்தில் என்னவென்று கேட்க, “ஒன்னுமில்ல மேம்,” என்று இருவரும் சேர்ந்து சமாளித்துவிட்டனர்.
“ஆமாம் பூச்சடை கேட்க போனீங்களே, இன்னும் வரலையா?” என்று கௌசல்யா கேட்க, இருவரும் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழிக்க, அதற்குள் தனசேகரின் தந்தை பூச்சடையும் மாலையும் கொண்டு வந்து தந்தார். பின் கௌசல்யாவை அலங்கரிக்கும் வேலை துரிதமாக நடந்தது.
உறவினர்களும் நட்பும் ஒவ்வொருவராக திருமணத்திற்கு வர ஆரம்பிக்க, ராகமயா பன்னீர் தெளித்து வந்தவர்களை வரவேற்று கொண்டிருந்தாள்.
மணமகனை மனையில் அமரவைத்து புரோகிதர் சடங்குகளை ஆரம்பித்தார். அப்போது தான் செல்லதுரையும் சௌந்தரியும் வந்தனர்.
“வாங்க ம்மா, வாங்க ப்பா.” என்று ராகமயா இருவரையும் வரவேற்க, சந்தனத்தை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டே, “தவா எங்கம்மா,” என்று செல்லதுரை கேட்க,
“தவாவும் புவியும் கௌசல்யா மேமோட இருக்காங்க ப்பா. நீங்க போய் உட்காருங்க,” என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தாள். தூண்கள் கொண்டு அமைக்கப்பட்ட திறந்தவெளி மண்டபம் என்பதால், அவர்களும் அவள் பார்வை படும் இடத்தில் அமர, சிறிது நேரத்திலேயே சாம்பவியும் மயூரனும் வந்தார்கள்.
“ஹே என்ன 3 ரோஸஸும் புடவையிலா?” என்று கேட்ட மயூரனின் பார்வை, அவளை ரசனையோடு பார்க்க,
அதை கவனிக்காத சாம்பவியோ, “ஆமாம் மயூர், இந்த புடவையை கட்றதுக்குள்ள 3 பேரும் வீட்டை ஒரு வழி செஞ்சுட்டாங்க?” என்று பதில் கூறினார்.
“ஆமாம் ஒரு ரோஸ் தான் இங்க இருக்கு? இன்னும் ரெண்டு எங்க?” என்று அவன் ராகமயாவை பார்த்துக் கேட்க,
“ம்ம் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கு,” என்றவள், “நீங்க போய் உட்காருங்க அத்தை, தவா அப்பா, அம்மாக்கூட வந்துட்டாங்க பாருங்க,” என்று சாம்பவியிடம் அவர்கள் இருக்கும் இடத்தை கைக்காட்டினாள்.
அவர் அந்தப்பக்கம் தன் பார்வையை திருப்பியதும், மயூரனை சென்று அமர சொல்லி கையசைவில் சொல்ல,
“இந்த புடவையில் அழகா இருக்க மயு!!” என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி கூறிவிட்டு சாம்பவியோடு அவன் அங்கிருந்து செல்ல, அவளுக்கு மூச்சு நின்று மூச்சு வந்தது.
அடுத்து சில நிமிடங்களில், “இப்படி என்னை தனியா விட்டுட்டு இந்த ரெண்டு எருமைங்களும் இன்னும் அங்க என்ன செய்யுதுங்க? யாராவது ஒருத்தர் இங்க வரலாமில்ல,” என்று ராகமயா புலம்பிய நேரம், யோகமித்ரன் வந்தான்.
“அடடே வாங்க யோகன்,” என்று ராகமயா அவனுக்கு பன்னீர் தெளித்து உற்சாகமாக வரவேற்றாள். சாம்பவி சௌந்தரியிடம் பேசிக் கொண்டிருக்க, மயூரனின் பார்வை அலைபேசியிலும் ராகமயாவிடமும் மாற்றி மாற்றி இருக்க, அவள் உற்சாகமாய் வரவேற்றது யாரென்று அவன் கேள்வியுடன் பார்த்திருந்தான்.
யோகமித்ரன் சுற்றி பார்வையை பதியவிட, அவன் யாரையோ தேடுகிறான் என்பதை உணர்ந்த ராகமயா, “கௌசல்யா மேமை தேட்றீங்களா? அவங்க விநாயகர் சன்னதிக்கு பின்னாடி உட்கார்ந்திருக்காங்க, இங்க ஐயர் அவங்களை அழைச்சிட்டு வரச் சொன்னதும் தான் வருவாங்க, நீங்க வேணும்னா அங்க போய் பார்க்கறீங்களா?” என்றுக் கேட்டாள்.
“இந்தப்பக்கம் தானே வரப் போறா, அப்பவே பார்த்துக்கிறேன்.” என்று அவளுக்கு பதில் கூறியவன், தவமலர் எங்கே இருக்கிறாள்? என்று அவளிடம் எப்படி கேட்பது? என்று தயக்கத்தோடு நின்றிருந்தான்.
அந்த நேரம் நவிரனும் திருமணத்திற்கு வருகை தர, அவனை பார்த்த ராகமயா தன் உற்சாகம் வடிய, “வாங்க,” என்று வரவேற்க, அவள் அழைத்தது அவளுக்கே கேட்டிருக்காது. அப்படியிருக்க அவன் காதில் மட்டும் அது எப்படி விழுந்திருக்கும்?
“என்னைப் பார்த்து ஏதாவது சொன்னீங்களா?” என்று அவன் கேட்க,
“வாங்கன்னு சொன்னேன்.” என்றாள்.
“நீங்க சொன்னது ஏனோ? ஏன் வந்தீங்கன்னு கேட்டது போல இருக்குங்க,” என்று அவன் கேட்க,
“அய்யோ அப்படி இல்ல, நீங்க இந்த கல்யாணத்துக்கு வருவீங்கன்னு எதிர்பார்க்கல, அதான் அப்படி,” என்று பதில் கூறினாள்.
“மயூர் தான் என்னை இன்வைட் செய்தான்.” என்று சொல்லி, இங்கே பார்த்தப்படி இருந்த மயூரனை பார்த்து இவன் கையசைக்க, அவனும் பதிலுக்கு கையசைத்தான்.
அடுத்து நவிரனும் யாரையோ தேடி பார்வையை சுழற்றியவன், “ஆமாம் தவா எங்க?” என்றுக் தயக்கமில்லாமல் கேட்டுவிட, அதுவரை அமைதியாக அவர்களை வேடிக்கைப் பார்த்தப்படியிருந்த யோகமித்ரன் அதிர்ச்சியானான்.
அன்று வீட்டில் மின்மினி பற்றி கல்லூரியில் அறிந்துக் கொண்டு வருகிறேன் என்று கூறியிருந்த தவமலர் இத்தனை நாளாகியும் இன்னும் தகவலை கூறாததால் இந்த திருமணத்தை சாக்காக வைத்து அவளிடம் கேட்க வேண்டுமென்றதற்காகவே நவிரன் வந்திருந்தான், அதனாலேயே தவமலரை பற்றிக் கேட்க,
யோகமித்ரனுக்கோ அவன் தவமலருக்கு முக்கியமானவனா? எதனால் வந்ததுமே அவளை தேடுகிறான் என்ற கேள்வி பிறக்க ஆரம்பித்துவிட்டது.
அதற்குள் மணப்பெண்ணை அழைத்து வரச் சொல்லி புரோகிதர் சொல்லியிருக்க, தனசேகரின் உறவுக்கார பெண்கள் இருவர் கௌசல்யாவை அழைத்து வந்தனர். அவர்களோடு புனர்வியும் தவமலரும் வந்து கொண்டிருக்க, ராகமயாவின் அருகில் நின்றிருந்த நவிரனை எதிர்பார்க்காததால் புனர்வி வியப்போடு அவனை பார்த்தப்படி வந்தாள்.
தவமலரும் நவிரனை கண்டவள், “ஹாய்” என்று கையசைத்தப்படி கொஞ்சம் வேகமாக அவன் அருகில் வந்தவள், “என்ன நவிரன், நீங்க கல்யாணத்துக்கு வருவீங்கன்னு தெரியாது. எப்போ வந்தீங்க?” என்று விசாரிக்க,
“மயூர் சொல்லித்தான் வந்தேன். முக்கியமாக உன்னை பார்க்க தான் வந்தேன். அதுவும் இப்போ தான்,” என்று அவளது கேள்விக்கு பதில் கூற,
இதுவரை தன்னை பார்த்தும் கண்டுக் கொள்ளாமல் நவிரனிடம் பேசிக் கொண்டிருந்த அவளையே பார்த்தப்படியிருந்த யோகமித்ரனுக்கு, இப்போது நவிரன் கூறியதை கேட்டதும், அவன் தவமலருக்கு என்ன வேண்டும்? என்று உடனே தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் வந்தது.
தான் வந்தது கூட தெரியாமல் தவமலரை பார்த்தப்படியிருந்த தன் அண்ணனை
கண்டு புன்னகைத்துக் கொண்ட கௌசல்யா, “மித்ரன் அண்ணா,” என்று சத்தமாக அழைக்கவும், அவளை திரும்பி பார்க்க,
“என்னை ஆசிர்வாதம் செய்ங்க ண்ணா.” என்று அவள் அவனது காலில் விழுந்தாள்.
“என்ன கௌசி இது என்னோட காலில் விழுந்துக்கிட்டு, உன்னோட நல்ல மனசுக்கு நீ நல்லா இருப்ப, எழுந்திரு.” என்று அவளை கைப்பிடித்து தூக்கியவன்,
“தனா நீ எப்போ வருவன்னு காத்திருக்கார், போ.” என்று அவளை அனுப்பி வைத்தான்.
மணப்பந்தலிலும் தன்னருகில் நிற்க வேண்டுமென்று கௌசல்யா மூவரிடமும் சொல்லியிருக்க, நவிரன் குறிப்பாக தன்னை பார்க்க வந்தது எதற்காக என்பது தவமலருக்கு தெரிந்ததால், “ஹே புவி, ராகா நீங்க ரெண்டுப்பேரும் மேம் கூட இருங்க, நவிரன்க்கிட்ட ஒரு விஷயம் பேசிட்டு வந்துட்றேன்.” என்று அவள் சொல்ல,
அது எதற்காக என்பது புனர்விக்கும் புரிந்ததால், “ஹே இது இப்போ ரொம்ப அவசியமா? வேணாம்னு ஒதுங்கி போன பெண்ணை இப்போ தேடிக் கண்டுபிடிக்கணும்னு என்னடி அவசியம்? எதுக்காக நீ அதுக்கு மெனக்கிட்ற? நான் தான் அன்னைக்கே இது உனக்கு தேவையில்லாததுன்னு சொன்னேனே? அப்படியும் விடாப்படியா அந்த பெண்ணை கண்டுபிடிக்கிறதில் நீயேன் ஆர்வம் காட்ற?” என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி கேட்க,
“பாவம் டீ நவிரன், நம்மக்கிட்ட உதவிக் கேட்டு வந்திருக்காங்க, செய்ய முடியாததா என்ன? செய்ய முடிஞ்சது தானே, இப்போ என்ன மின்மினியை நான் கண்டாப்பிடிச்சிட்டேன். எனக்கு தெரிஞ்ச விஷயத்தை சொல்ல போறேன். அவ்வளவு தான்,” என்றவள் நவிரனை அழைத்துக் கொண்டு கொஞ்சம் தள்ளிப் போக,
புனர்வியோடு செல்லவிருந்த ராகமயாவை, “ராகா கொஞ்சம் இருங்களேன்.” என்று நிறுத்திய யோகமித்ரன், அவள் கேள்வியாக பார்த்ததும்,
“நவிரன் யாருங்க? தவமலர்க்கு அவர் என்ன வேணும்?” என்றுக் கேட்க,
“எதுக்கு கேட்கிறீங்க?” என்று சந்தேக பார்வையோடு அவனிடம் பதில் கேள்வி கேட்டாள்.
“சும்மா தெரிஞ்சிக்க தான்,” என்று அவன் சொன்னதும்,
“சும்மா கூட எதுக்குங்க? அதான் அவளை பிடிக்கலன்னு சொல்லிட்டீங்கல்ல, அதுக்குப்பிறகும் ஏங்க அவளைப்பத்தி தெரிஞ்சிக்க நினைக்கறீங்க? தொந்தரவு செய்றீங்க? பேசாம விட்டுடங்களேன்.” என்று அவள் சொல்லவும், இவளுக்கு தவமலரே பரவாயில்லை என்றே அவனுக்கு தோன்றியது.
“நான் என்ன தொந்தரவு செஞ்சதா நினைக்கறீங்க? அன்னைக்கு திரும்ப கூப்பிட்டு மன்னிப்பு கேட்டது வேணும்னா தொந்தரவா இருக்கலாம், அடுத்தமுறை கௌசியை பார்க்க தான் காலேஜூக்கு வந்தேன். சரி தெரிஞ்ச பெண்ணாச்சே பேசலாம்னு நினைச்சு பேசினேன். இப்போ அவ என்னை திரும்பி பார்க்க கூட இல்ல, நான் ஏதாவது செஞ்சேனா? சரி நாம ஃப்ரண்டா ஆயிட்டோமேன்னு உங்கக்கிட்ட கேட்க நினைச்சேன். தப்புன்னா விட்டுடுங்க” என்று அவன் வருத்தமாக சொல்லவும்,
“சாரி நான் அப்படியிருக்க பேசியிருக்கக் கூடாது, நவிரன் புவியோட அத்தான் மயூரனோட ஃப்ரண்ட், கலிஃபோர்னியால இருந்து வந்து கொஞ்ச நாள் தான் ஆகுது, அவங்க காதலிக்கிற பெண்ணை பத்தி தெரிஞ்சிக்க வந்துருக்காங்க, அதாவது ஃபேஸ்புக் மூலம் பார்க்காத காதல், அதுக்கு எங்கக்கிட்ட உதவி கேட்ருக்காங்க, தவா தான் அந்த பெண்ணைப் பத்தி தகவல் சேகரிக்கிறா, அதான் நவிரன் அவளை பார்க்க நினைச்சதுக்கு காரணம், போதுமா உங்களுக்கு இந்த தகவல்? ஆனா உங்கக்கிட்ட இதெல்லாம் சொன்னேன்னு தெரிஞ்சா தவா என்னை துரத்தி துரத்தி அடிப்பா,” என்று சொல்லிவிட்டு சிரித்த நேரம் மயூரன் அங்கு வந்து நின்றான்.
கௌசல்யாவின் பின்னால் சென்ற புனர்வி அவளோடு மணப்பந்தல் அருகே சென்ற நேரம், தனசேகரின் அன்னை அவளின் கைப்பிடித்து அழைத்துச் சென்று கொஞ்சம் தள்ளி வந்ததும், “ஏன் ம்மா, நான் சொல்லித்தான் உனக்கு தெரியணும்னு இல்ல, நீயே புரிஞ்சிப்பன்னு பார்த்தேன். ஆனா நீ புரிஞ்சிக்கிட்ட மாதிரி தெரியலையே, இப்படி முகத்தை கூட மூடிக்காம, மணப்பந்தல்க்கிட்ட வர, கல்யாணத்துக்கு வந்தவங்க, அதை பார்ப்பாங்களா? இல்லை உன்னை பார்ப்பாங்களா? இப்பவே கொஞ்ச பேர் அடிக்கடி உன்னை தான் பார்த்துக்கிட்டு இருக்காங்க, இப்படி அவங்களுக்கெல்லாம் நீயேன் காட்சி பொருளா இருக்க ஆசைப்பட்ற? கௌசல்யா கூப்பிட்டா நாசூக்கா மறுத்துட்டு வீட்டுக்குள்ள இருக்காம, முன்ன கிளம்பி வந்துட்ட, இங்கப்பார் நீ ஒன்னும் மேடைக்கெல்லாம் வர வேண்டாம், எங்கேயாச்சும் ஓரமா இருந்து கல்யாணத்தை வேடிக்கைப் பாரு.” என்று தன் எண்ணத்தை கூறியவர் அங்கிருந்து செல்ல,
இப்படி வெளிப்படையாக அவர் பேசுவார் என்று எதிர்பார்க்காதவள், உடனே தன்னை சேர்ந்தவர்கள் இதைப் பார்த்துவிட்டார்களா? என்று பார்த்தாள். சாம்பவி, செல்லதுரை, சௌந்தரி மூன்று பேரும் ஏதோ பேசிக் கொண்டிருக்க, தவமலரோ நவிரனிடம் பேசிக் கொண்டிருந்தாள். மயூரன், ராகமயா, யோகமித்ரன் மூவரும் மண்டப்பத்திற்கு வெளியில் நிற்க, அவர்கள் யாரும் கவனிக்காத வண்ணம் அவள் அங்கிருந்து சென்றாள்.
மயூரனை எதிர்பார்க்காத ராகமயா அவனை அதிர்ச்சியோடு பார்க்க,
“ஹாய் நான் மயூரன், நீங்க?” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு கைநீட்டியவனை யோகமித்ரன் “யாரிவன்?” என்ற கேள்வியோடு பார்க்க,
“நான் சொல்லல, புனர்வியோட அத்தான், நவிரனோட ஃப்ரண்ட் மயூரன், இவர் தான்,” என்று ராகமயா சொல்லவும்,
“ஹாய், நான் யோகமித்ரன். கல்யாண பெண் கௌசல்யாவோட அண்ணன்.” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
கௌசல்யா, யோகமித்ரன் பற்றியும், அவன் தான் தவமலரை பெண் பார்க்க வந்தவன் என்பதையும், அடுத்தடுத்து அவர்களுக்குள் நடந்த சந்திப்பு பற்றியும் புனர்வி ஏற்கனவே மயூரனுக்கு தெரிவித்திருந்ததால்,
“ஓ புவி உங்களைப் பத்தி சொல்லியிருக்கா, ஆமாம் கல்யாண பெண்ணுக்கு அண்ணன் நீங்க, இங்க நிக்கலாமா? அங்க போய் நிக்கணுமில்ல, மச்சான் முறை செய்ய உங்களை கூப்பிடுவாங்க போங்க,” என்று யோகமித்ரனிடம் கூறினான்.
சிறிது நேரத்திற்கு முன்பு அவன் எப்படி தவித்தானோ, அதே தவிப்பை மயூரனிடம் கண்டதால், “சரி நீங்க பேசுங்க, நான் அவங்களா கூப்பிட்றதுக்குள்ள அங்க போய் நிக்கறேன்.” என்று புன்னகைத்தப்படி சொல்லிவிட்டு சென்றான்.
அவன் அப்படி சென்றதும், “ஆமாம் எதுக்கு இப்போ யோகனை துரத்தனீங்க?” என்று ராகமயா மயூரனிடம் கேட்டாள்.
“நான் எங்க துரத்தினேன்? கௌசல்யாவோட அண்ணனாச்சே, அவன் தான் இந்த கல்யாணத்தை எடுத்து நடத்தறதா புவி சொன்னா, அதான் அவன் அங்க முக்கியமா இருக்கணும்னு சொன்னேன். இதில் என்ன தப்பு?” என்றுக் கேட்டான்.
“சும்மா சொல்லாதீங்க, யோகன் என்னோட பேசிக்கிட்டு இருக்கவே தானே அவங்களை துரத்தி விட்டீங்க? ஆமாம் நீங்க என்னை வேவு பார்க்கறீங்களா?”
“நான் ஏன் உன்னை வேவு பார்க்கணும், நான் வந்தது கல்யாணத்துக்கு, நீ யாரோட பேசிட்டு இருக்கன்னு பார்க்க இல்ல, அதுவுமில்லாம நீ யோகமித்ரனோட பேசறத இங்க எல்லோரும் தான் பார்க்கிறாங்க? நான் பார்த்தது மட்டும் வேவு பார்க்கறதா?”
“சும்மா சமாளிக்காதீங்க, நீங்க நடந்துக்கிட்ட முறைக்கு யோகன் சிரிச்சிட்டு போறாங்க, நீங்க இப்படி நடந்துக்கிறது எனக்கு பிடிக்கல?”
“நான் எப்படி நடந்துக்கிட்டேன்?”
“அதை என்னோட வாயால சொல்ல விரும்பல, உங்களுக்கும் புவிக்கும் நிச்சயம் ஆகிடுச்சு, அதை மனசுல வச்சுக்கோங்க, அப்படியிருக்கும் போது இப்படில்லாம் நடந்துக்கிட்டா ரொம்ப தப்பு.”
“நான் என்ன டீ அப்படி தப்பா நடந்துக்கிட்டேன்.” அவன் கோபத்தோடு கேட்க,
சுற்றி யாராவது பார்க்கிறார்களா? என்று பார்த்தவள், “எதுக்கு டீ போட்டு பேசறீங்க?” என்று கோபத்தோடு கேட்டாள்.
“அது ஏதோ உரிமையில் என்னை அறியாம வந்துடுச்சு,” என்று அவன் சொன்னதற்கு,
“இந்த உரிமையா பேசறதோ, நினைக்கிறதோ தான் வேண்டாம்னு சொல்றேன். அப்புறம் எனக்கு போன் செய்றது, மெசேஜ் அனுப்புறது இதுவும் கூடாது.” என்று கண்டிப்போடு கூறினாள்.
“நல்லா இருக்கு இந்த நியாயம்? நான் போன் செய்யக் கூடாது, ஆனா நீ செய்யலாம், மெசேஜ் தட்டி கார் எடுத்துட்டு வாங்கன்னு சொல்லலாம், புவி நவிரனை அழைச்சிட்டு வர என்னை கூப்பிட்றா, நான் போக மாட்டேன்னு சொல்ல எனக்கு போன் போடலாம், நவிரன் புனர்விக்கிட்ட நடந்துக்கிட்டதுக்கு என்னை திட்ட போன் செய்யலாம், ஆனா நான் மட்டும் போன் செய்யக் கூடாதில்ல,”
“நான் போன் செஞ்சதும் மெசேஜ் செய்ததும் புவிக்காக தான், ஆனா அன்னைக்கு கார் எடுத்துட்டு வரச் சொல்லி மெசேஜ் செய்றதுக்கு முன்ன நீங்க தான் என்னோட ஃப்ரண்ட் நவிரன் கலிஃபோர்னியால இருந்து வரான், அவனுக்கு நம்ம விஷயம் தெரியும், உன்னோட போட்டோ கூட அவன்கிட்ட காண்பிச்சிருக்கேன், அதனால அவன் வந்து என்ன உளரிக் கொட்டுவான்னு தெரியலன்னு மெசெஜ் செஞ்சீங்க,
அதைப் பார்த்துட்டு யோசிச்சிட்டிருந்தப்ப புவி வந்து மொபைலை பிடுங்கினதும், அவ மெசேஜை பார்க்க கூடாதுன்னு தவிச்சது எனக்கு தான் தெரியும், அதேபோல நவிரனை கூப்பிட புவி என்னை கூட கூப்பிடவும், நவிரன் என்னை கண்டுப்பிடிச்சிடுவாங்களோன்னு பயந்தது எனக்கு தான் தெரியும், அதுமட்டுமா? நவிரனை எப்போ பார்த்தாலும் அந்த பயம் மனசுக்குள்ள இருக்கு, ஆனா நவிரனுக்கு என்னை தெரியாதோ? நீங்க சும்மா சொல்றீங்களோன்னு எனக்கு தோனுது,”
“நான் ஏன் சும்மா சொல்லப் போறேன் மயு,” என்றதற்கு,
“மயூ இல்ல ராகா,” என்று அவள் திருத்தினாள்.
“ம்ம் ராகா போதுமா? அன்னைக்கு கேரட் அல்வா கொடுக்க வந்தப்போ நவிர் பேசினதை கேட்டல்ல, அவன் என்ன சொன்னான்? நீ வேற ஒருப் பெண்ணை காதலிச்ச, அதை என்கிட்ட சொல்லியிருக்க, அவ போட்டோக் கூட என்கிட்ட காண்பிச்சிருக்கன்னு அவன் சொன்னதை நீ கேட்டீயா இல்லையா?”
“கேட்டேன், ஆனா நீங்க சொல்றதை பார்த்தா, அவங்களுக்கு என்னை அடையாளம் தெரிஞ்சிருக்கணுமே? ஆனா அப்படி தெரியலையே?”
“அதுவா உன்னோட போட்டோ காட்டினது நிஜம் தான், ஆனா நான் காட்டினது நாம ரெண்டுப்பேரும் சின்ன வயசுல எடுத்துக்கிட்டோமே அந்த போட்டோ, அதான் அவனுக்கு உன்னை அடையாளம் தெரியல, ஆனா உன்னோட பேரை நான் சொல்லியிருக்கேன், ஆனா அவன் அதை மறந்துட்டான் போல,” என்று அவன் சொன்னதும், அவனை வெட்டவா? குத்தவா? என்று பார்த்தாலும், அவளுக்கு இப்போது தான் கொஞ்சம் நிம்மதியானது.
“ரொம்ப நல்லது, நவிரன் மூலமா புவிக்கு ஏதாவது தெரிஞ்சிடுமோன்னு தான் ஒவ்வொரு நாளும் பயந்தேன். அப்படி இல்லன்னதும் சந்தோஷம், நீங்களும் புவிக்கும் நம்பிக்கையா நடந்துக்கோங்க, அது தான் நல்லது.”
“அப்படின்னா முதலில் நம்ம விஷயத்தை அவக்கிட்ட சொல்லணும், ஆனா நீ அதை அவக்கிட்ட மறைக்க பார்க்கிற, அப்போ யாரு அவக்கிட்ட நம்பிக்கையின்மை இல்லாம நடந்துக்கிறது?” என்று அவன் கேட்டதும், அந்த வார்த்தை அவள் கண்ணில் கண்ணீரை வரவழைத்தது.
“உன்னை காயப்படுத்த சொல்லல ராகா,” என்று அவன் சொல்ல,
“இங்கப்பாருங்க, நீங்க தான் என்கிட்ட என்னை காதலிக்கிறதா சொன்னீங்க, ஆனா நான் அதுக்கு என்னைக்குமே சம்மதம் சொன்னதில்ல, அதனால நான் புவிக்கு துரோகம் செய்யல, என்னைக்குமே நடக்காத விஷயத்தை நினைச்சுக்கிட்டு இருக்காம, நடக்க போறதை பாருங்க,” என்று சொல்லிவிட்டு சென்றுவிட,
“உன்னோட வாயால சம்மதம்னு சொன்னாதானா? மயு. உன்னோட மனசை என்னால புரிஞ்சிக்க முடியாதா என்ன?” என்றவன்,
“ம்ப்ச்” என்று உதட்டை பிதுக்கி சலித்தப்படி அங்கிருந்து சென்றான்.
இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த அதேநேரம் தவமலரோ நவிரனிடம், “கவிதைக்கு முதல் பரிசு வாங்கினவங்க எங்க காலேஜ் இல்லன்னு சொன்னேன் இல்ல நவிரன், ஆனா இப்போ கௌசல்யா மேம் மூலமா விசாரிச்சதில் அவங்க எங்க காலேஜை சேர்ந்தவங்க தான்னு தெரிய வந்தது, அதுவும் அவங்க பேர் மின்மினி தான், ஆனா அது கவிதை எழுதறதுக்காக அவங்க வச்ச புனைப் பெயர், இதில் இன்னொரு விஷயம் அவங்க எங்க டிபார்ட்மெண்ட் தான், ஆனா அவங்களை அவங்க தெரியப்படுத்திக்க விரும்பலையாம், அந்த கவிதை போட்டியில் கிடைத்த பரிசை ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கொடுத்திட சொல்லியிருக்காங்க, அதுவும் எங்க பிரின்சி மூலமா சாம்பவி அத்தைக்கிட்ட தான் கொடுக்க சொல்லியிருக்காங்க,” என்று தனக்கு கிடைத்த தகவல்களை அவனிடம் கூறியவள்,
“கவலைப்படாதீங்க, இத்தனையும் வச்சு பார்த்தா, நீங்க தேடி வந்த மின்மினி நமக்கு பக்கத்தில் தான் இருக்காங்கன்னு தோனுது, அவங்களை கண்டுப்பிடிக்கறதும் ஈஸின்னு தோனுது, இன்னும் சொல்லப் போனா, எனக்கு ஒரு ஆள் மேல சந்தேகம் இருக்கு,” என்று அவள் மனதில் ராகமயாவை நினைத்து சொல்ல,
“மின்மினி ராகமயாவா இருக்கும்னு நினைக்கிறீங்களா?” என்று கேட்டு நவிரன் அவளை அதிரவைத்தான்.
ஊஞ்சலாடும்..