AO 1

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அன்பு 1                    

 விரன் மணிவாசகம் இஸ் ட்ராவலிங் டூ இந்தியா. சற்று நேரத்திற்கு முன்பு தன் முகநூல் பக்கத்தில் தான் இட்ட பதிவிற்கு, விருப்பக் குறிகளும், இதய குறிகளும் குவிந்த வண்ணம் இருக்க, 

ஹாப்பி ஜர்னி, சேஃப் ஜர்னி, வெல்கம் இந்தியா, சூப்பர், நைஸ், இந்தியால எந்த இடத்திற்கு வர்றீங்க?, பார்ப்போமா?, சந்திக்கலாமா?, மீட் பண்ணலாமா?, உங்களை நேரில் சந்திக்க விருப்பம், சென்னை வந்தா சொல்லுங்க, எங்க ஊருக்கு வர்றீங்களா? இப்படி நிறைய பதில்களும் குவிந்த வண்ணம் இருக்க, 

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கலிஃபோர்னியா மாநிலத்தில், சான்பிரான்சிஸ்கோ நகரத்தின் சர்வதேச விமான நிலையத்தில் இரவு நேரம் 8 மணியாகியிருக்க, விமானம் ஏறுவதற்காக காத்திருந்த நேரத்தில் தான், அந்த பதிவையும் இட்டுவிட்டு, அதற்கு வந்த பதில்களையும் நவிரன் பார்வையிட்டுக் கொண்டிருந்தான். 

முகநூலில் பழகியவர், பழக்கமில்லாதவர் என எத்தனையோ நபர்களின் பதில்கள் வந்தப்படி இருந்தாலும், அவன் எதிர்பார்த்த ஒரு நபரிடம் இருந்து பதிலோ, இல்லை குறுஞ்செய்தியோ, இல்லை அவன் பதிவிற்கு பிரத்யேகமான பதில் பதிவோ வராதது தான் அவனுக்கு வருத்தமாக இருந்தது. அவன் விமானம் ஏறுவதற்குள் அவன் மின்மினியிடம் இருந்து அவனுக்கான பதில் வந்துவிடுமா? என காத்திருந்தான்.

ஏனெனில் அவன் இப்போது இந்தியா செல்வதே அவளை காணத்தானே, ஆனால் மின்மினி என்ற பேரைத் தவிர அவளைப் பற்றி அவனுக்கு ஒன்றும் தெரியாது. அது கூட அவளின் உண்மை பெயர் தானா? அதுவும் தெரியாது. அவள் முகம் எப்படி இருக்கும்? என்று கூட அவன் அறியான். 

மூன்று வருடங்களுக்கு முன்பு தான் முகநூல் வழியாக அவள் அவனுக்கு அறிமுகமானாள். நட்பிற்கு அழைப்பு கொடுத்தது அவள் தான், அவள் அறிமுகத்திற்கு முன்பு வரை அவன் முகநூல் கணக்கில் இருந்தாலும், அதில் தன்னை அவ்வளவாக ஈடுபடுத்திக் கொண்டதில்லை,

வேலை நிமித்தமாக அவன் கலிஃபோர்னியா வந்து சில மாதங்களே ஆகியிருக்க, அங்கு தன்னை பொருத்திக் கொள்ளவே அவனுக்கு கொஞ்சம் காலம் பிடித்தது. பெற்றவர்களுக்கு ஒரே பிள்ளையான அவன், பெற்றவர்களை அடுத்தடுத்து இழக்கவும், மன மாற்றத்திற்காக அப்போது இந்த கலிபோர்னியா வேலையை ஒத்துக் கொண்டவன், திரும்ப இந்தியா செல்லும் எண்ணம் இல்லாமலே இங்கு ஒரு இயந்திர வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருந்தான். 

அப்படி தனியாக உணரும் நேரத்தில் தான் முகநூலில் சிறிது நேரம் செலவிடுவான். அதிலும் யாரோடும் தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்திகள் அனுப்பி அவன் பேசுவதில்லை, அவனுடன் நட்பாக இருக்கும் சில பேரின் பதிவிற்கு விருப்ப குறிகள் இடுவதும், தேவையென்றால் கருத்துக்களை பரிமாறிக் கொள்வதோடு சரி,

அப்படியிருக்க அவன் நட்பில் மின்மினி இணைந்த  பின் அனைத்தும் மாறிப் போனது, மின்மினி தன்  முகநூல் பக்கத்தில் தினமும் ஒரு கவிதையை பதிவிடுவாள். அவள் கவிதையை படிக்கவெனவே அவளுக்காக அங்கு சில வாசகர்கள் இருந்தனர். அடிக்கடி அவளின் கவிதைகள் கண்ணில் படவும் அவனுமே அதை ரசித்தவன், மறக்காமல் அதற்கு விருப்ப குறிகளை இட்டுவிடுவான். பின் தினமும் அவள் கவிதை பதிவிடும் நேரத்திற்காக காத்திருந்தான். பின் அவன் கருத்தைகளையும் தெரிவிக்க ஆரம்பித்தான். பின் கவிதையை பற்றியும் அது தொடர்பாகவும் அந்த பதிவிலேயே இருவரும் சிலவற்றை பேசிக் கொண்டனர்.

அதன்பின் மின்மினியே தான், “கவிதையை பத்தி இங்கேயே பேசலாம், ஏன் எல்லோரும் பார்க்கிறது போல கமெண்ட்ல பேசணும்,” என்று அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைத்தாள்.

அன்றிலிருந்து கவிதையை பற்றி குறுஞ்செய்திகள் அனுப்பி பேசிக் கொண்டவர்கள், பின் எதைப்பற்றி பேசுகிறோம் என்று அவர்களே உணராமல் அதிகம் பேசினர்.

அவன் தன்னைப் பற்றி தனிப்பட்ட விஷயங்களையும் பகிர்ந்துக் கொண்டான். ஆனால் அவளோ இப்போதைக்கு அவளைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டாம், நேரம் வரும்போது தானே சொல்கிறேன் என்றாள். அவனும் அதற்கு ஒத்துக் கொள்ளவே இருவரும் அப்படியே அவர்கள் நட்பை தொடர்ந்தனர். 

இப்படியே அவர்கள் நட்பு  இரண்டு வருடங்களாக நீடிக்க, கண்கள் பார்த்துக் கொள்ளவில்லை, காதால் அவர்கள் பேசி கேட்டதில்லை, நட்பென்ற பெயரில் இருவரும் கைகோர்த்ததில்லை, ஆனால் மனதிற்கு மிக மிக நெருக்கமாயினர். அப்படித்தான் நவிரன் உணர்ந்தான். 

அவர்கள் பேசாத விஷயங்களே இல்லை, கிடைக்கும் ஓய்வு நேரத்திலெல்லாம் அவர்களின் குறுஞ்செய்தி சம்பாஷணைகள் நடைபெறும், அந்த நேரங்களை நவிரன் மிகவுமே விரும்புவான். இப்படியே மின்மினியுடன் சென்று கொண்டிருந்த நட்பென்ற உறவு, காதல் என்ற உறவுக்கு  குடி பெயர்ந்ததை  அவன் மனம் சில நாட்களாக உணர ஆரம்பித்தது.

அவன் வெளிப்படையானவன், அவனைப் பற்றிய விஷயங்களையும் புகைப்படங்களையும் முகநூலிலேயே பதிவிட்டு விடுவான். அவனைப் பற்றி குறிப்பாக அவளிடம் ஒன்றும் சொல்வதிற்கில்லை, ஆனால் மின்மினி அப்படி இல்லை, ஆரம்பத்தில் சொன்னதையே இன்னும் கடைப்பிடித்தாள். இத்தனை நாள் நட்பில் அவளை பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவனுக்கு இருந்தது. அவன் கற்பனையில் இருக்கும் முகத்தோடு அவள் முகம் ஒத்து போகுமா? என்றெல்லாம் நினைத்து பார்த்து அவள் நினைப்பிலேயே மூழ்கி இருந்தான்.

அவளிடம் புகைப்படத்தை அனுப்புமாறு கேட்ட போது, நேரம் வரும்போது காட்டுகிறேன் என்றாள். சரி உன் குரலையாவது கேட்க வேண்டுமென்றால் அதற்கும் நேரம் வரட்டும் என்றாள்.

“என்னோட முகத்தை பார்த்தா தான், என்னோட குரலை கேட்டாத்தான் என்கூட பேசுவீங்கன்னா, அப்போ இதோட நம்ம பேசறதை நிறுத்திக்குவோம்,” என்று செய்தி அனுப்பினாள்.

இவனும் பதறி, “இல்லையில்லை நீ எப்போ உன்னோட முகத்தை எனக்கு காட்ட நினைக்கிறீயோ காட்டு, எப்போ நீ என்கிட்ட பேச நினைக்கிறீயோ அப்போ பேசலாம், உன்னைப்பத்தி எப்போ சொல்ல தோனுதோ சொல்லு, அதுவரைக்கும் நான் காத்திருப்பேன், ஆனா அதுவரைக்கும் என்னோட மனசை உன்கிட்ட மறைச்சு வைக்க முடியாது, ஐ லவ் யூ,” என்று குறுஞ்சய்தி அனுப்பி அவன் மனதை அவளிடம் வெளிப்படுத்த,

அவளோ வித்தியாசம் வித்தியாசமான சிரிக்கும் ஸ்மைலிகளை அவனுக்கு தொடர்ந்து அனுப்பிக் கொண்டே இருந்தாள்.

அவன் “எதற்காக இதை அனுப்புகிறாய்?” என்று கேட்க,

“என்னைப் பத்தி என்ன தெரியும்? நான் ஒருவேளை போலியான பெயர் கொண்ட  ஐ டியா கூட இருக்கலாம், பெண் பேர்ல இருக்க ஆணா கூட இருக்கலாம்,” என்ற செய்தியோடு திரும்ப சிரிப்பு ஸ்மைலியை அனுப்ப,

அவன் பதிலுக்கு இதய ஸ்மைலியை அனுப்பி, “ஆண் பேர்ல இருக்க போலி ஐ டின்னா அவங்க பெண்கள் கூட தான் கடலை போடுவாங்க, என்னை மாதிரி பசங்க கூட கிடையாது, அதுவுமில்லாம நாம வெட்டியா ஒன்னும் பேசலையே, நாம நிறைய விஷயங்களை பகிர்ந்துக்கிட்டோம், அதில் எல்லாமே இல்லன்னாலும் நிறைய விஷயம் ஒத்து போகுது, அதுவுமில்லாம என்னோட மனசு நீ பெண் என்று தான் சொல்லுது, அப்போ காதலிக்கிறதில் என்ன தப்பு?” என்றதற்கு திரும்ப ஒரு புன்னகைக்கும் ஸ்மைலியை அனுப்பினாள்.

அதன்பிறகும் அவர்கள் நட்பு குறுஞ்செய்தி மூலமாக தொடர்ந்தது. அதன்பின் “என்னை காதலிக்கிறாயா?” என்று கேட்டு அவனும் அவளை தொந்தரவு செய்யவில்லை, அவன் காதலை சொன்னானே என்று அவளும் அவனிடம் பேச தயக்கம் காட்டவில்லை. 

அவளிடம் அவன் காதலை சொல்லியதற்கான பதிலை மனம் எதிர்பார்த்து தான் இருந்தது. ஆனால் கேட்டால் நட்பை முறித்துக் கொள்வாளோ? என்று அவனுக்கு பயம், அதனால் அதைப்பற்றி கேட்கவில்லையென்றாலும், அவளது பேச்சில் அப்படி ஏதாவது கண்டுப்பிடிக்க முடிகிறதா? என்று பார்ப்பான். ஆனால் அவள் பேச்சில் அப்படி ஏதும் வெளிப்பட்டதில்லை, அவள் எப்போதும் போல அவனுடன் சாதாரணமாகவே தான் குறுஞ்செய்தி அனுப்பி பேசிக் கொண்டிருந்தாள். சரி அவள் சொன்ன நேரம் வரை காத்துக் கொண்டிருப்போம் என்று அவனும் அவளுடன் நட்பை தொடர்ந்துக் கொண்டிருந்தான்.

ஆனால் அனைத்தும் நன்றாக சென்று கொண்டிருக்க, அடுத்த ஒரு வருடத்தில் மின்மினி அவனுடன் பேசுவதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டு வந்தாள். கேட்டால்? வேலை அதிகம் முன் போல் முகநூல் பக்கம் அடிக்கடி வர முடிவதில்லை என்று காரணத்தை கூறினாள். அவனும் அந்த காரணத்தை ஏற்றுக் கொண்டான்.

ஆனால் அதன்பிறகு தான் அவள் குறிப்பிட்டு அவனை தவிர்க்கவே இவ்வாறு செய்வதாக அவனுக்கு தோன்றியது. அவளிடம் கேட்டால் அப்படியில்லையே, என்பது போல் தான் பதில் கூறினாள். ஆனால் இப்போது அதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, 

அவளிடம் காதலை சொன்ன போது கூட சாதாரணமாக ஏற்றுக் கொண்டு பேசிக் கொண்டிருந்தவள், இப்போது அவனை தவிர்ப்பது எதற்காகவாம்? அப்படி அவன் செய்த தவறு தான் என்ன? அவனுக்கே தெரியவில்லை, 

இப்போதெல்லாம் அவள் முற்றிலுமே அவனுடன் குறுஞ்செய்தி அனுப்பி பேசுவதை நிறுத்தியிருக்க, முகநூல் நட்பிலிருந்து விலகாமல் இருப்பது அதிசயம் தான், 

அவன் செய்த தவறு என்ன என்று குறுஞ்செய்தி அனுப்பி கேட்டால், “நீங்க என்ன செஞ்சீங்க? ஒன்னுமில்லையே, எனக்கு தான் கொஞ்சம் அதிக வேலை, முன்ன மாதிரி உங்க கூட பேச நேரமில்லை, புரிஞ்சுக்கோங்க,” என்று செய்தி அனுப்பிய பிறகும், அவளை தொந்தரவு செய்து, அவள் தன்னை முற்றிலும் வெறுக்கும் நிலையை உண்டாக்க அவன் விரும்பவில்லை, அதனால் விலகிக் கொண்டான்.

ஆனால் அவளை விட்டு விலக விலக தான், அவளைப் பார்க்கவும், அவளைப் பற்றி அறிந்துக் கொள்ளவும், அவள் முன் போய் நின்று தான் செய்த தவறு என்னவென்று கேட்கவும் தோன்றுகிறது. ஆனால் அது எப்படி முடியும்? அவளைப் பற்றி எவ்வாறு அறிந்துக் கொள்வது? என்று தெரியாமல் அவன் தவிக்க, அப்போது தான் அவளைப் பற்றி அறிந்துக் கொள்வதற்கான ஒரு விஷயம் அதே முகநூலில் அவன் கண்ணுக்கு தென்பட்டது.

அது ஒரு கல்லூரி மாணவியின் பதிவு, அந்த பெண் அவனுடன் முகநூலில் நட்பாக இருக்கிறாள். ஆனால் அவள் மின்மினியோடு நட்பில் இல்லை, அதனால் மின்மினி இந்த பதிவை பார்த்திருக்க இயலாது என்பது உறுதி.

அப்பெண் அவர்கள் கல்லூரியில் நடைப்பெற்ற கவிதை போட்டியில் பரிசு பெற்றவர்களின் கவிதைகளை பகிர்ந்திருந்தாள். ஆனால் அவர்கள் பெயர்களை அதில் அவள் குறிப்பிடவில்லை, அவள் பகிர்ந்துக் கொண்ட கவிதைகளில் மின்மினி தன் முகநூலில் பதிவிட்டிருந்த கவிதையும் இருந்தது. அப்படியென்றால் மின்மினி அந்த கல்லூரியில் தான் 

படிக்கிறாளா? இல்லை அவளுக்கும் அந்த கல்லூரிக்கும் ஏதாவது தொடர்பு இருக்க வேண்டும்,

மின்மினியை பற்றி அறிந்துக் கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு, அந்த பெண் பதிவிட்ட பதிவில், சிவசக்தி பெண்கள் கலை கல்லூரி, சென்னை என்று இருந்தது. அப்படியானால் மின்மினி சென்னையில் தான் இருக்கிறாள். உடனே அந்த கல்லூரியைப் பற்றி அறிந்துக் கொள்ள தன் நண்பன் மயூரனை அவன் தொடர்புக் கொண்டான்.

“ஹே மயூர், உனக்கு சென்னையில் சிவசக்தி காலேஜ் தெரியுமாடா?”

“ஹே ஏன் டா தெரியாது, அந்த காலேஜ்ல தான் புவி, ராகா, தவா 3 பேரும் படிக்கிறாங்க,”

“என்னடா சொல்ற, அந்த காலேஜ்லயா, நீ அடிக்கடி சொல்வியே அந்த 3 பெண்களா?”

“ஆமாம் டா, அவங்க 3 பேரும் தான் அந்த காலேஜ்ல எம்.ஏ. சோஷியாலஜி படிக்கிறாங்க, பைனல் இயர், ஆமாம் ஏன் அந்த காலேஜ் பத்தி விசாரிக்கிற?”

“அதை நேர்ல பார்க்கும் போது சொல்றேன்,”

“ஹே சூப்பர் டா, இந்தியா வரப் போறீயா? எப்போ வர?”

“சீக்கிரமே டா, கிளம்பும் முன்ன சொல்றேன்,” என்று சொல்லிவிட்டு அழைப்பை அணைத்தவன், உடனடியாக சென்னை செல்ல முடிவெடுத்தான்.

அவன் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தது எல்லாம் கோவையில் தான், பின் வேலைப் பார்த்தது டெல்லியில், அங்கு தான் அவனுக்கு மயூரன் நண்பன் ஆனான். சென்னைக்கு ஒரு நண்பனின் திருமணத்திற்கு மட்டுமே ஒரு முறை சென்றிருக்கிறான். அதனால் சென்னையை பற்றி அவன் அதிகம் அறிந்து வைத்திருந்ததில்லை, இப்போது மயூரன் டெல்லியில் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு, சென்னையில் தான் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். 

மயூரன் மற்றும் அவனது தோழிகள் அந்த மூவரின் உதவியோடு தான் மின்மினியை கண்டுபிடிக்க வேண்டும், நல்லவேளை அவன் மூன்று வருட ஒப்பந்தத்தின் பெயரில் தான் கலிஃபோர்னியா வந்திருந்தான். அது முடிய இரண்டு மாதங்களே இருந்தது. அதன்பின் இன்னும் சில வருடங்கள் இங்கேயே வேலை பார்க்கலாம் என்று தான் முதலில் யோசித்தான். ஆனால் இப்போது அந்த முடிவை மாற்றிக் கொண்டவன், இந்தியாவிற்கு அதிலும் குறிப்பாக சென்னைக்கு செல்ல வேண்டுமென்று முடிவெடுத்தான்.

அவன் வேலைப் பார்த்த நிறுவனம் அவன் வேலையை விட்டு செல்வதை விரும்பவில்லை. இன்னும் சம்பளத்தை ஏற்றிக் கொடுப்பதாக கூட கூறினர். ஆனால் அவன் விடாப்பிடியாக மறுக்க, பின் சென்னையில் இருக்கும் அவர்களது நிறுவனத்தில் வேலை கொடுப்பதாக சொல்லவும், அவனும் அதை ஏற்றுக் கொண்டு, இதோ சென்னை செல்வதற்கான ஏற்பாடுகள் செய்து இப்போது விமான நிலையத்தில் விமானம் ஏறுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறான்.

விமானத்தில் ஏற போர்டிங்கிற்கான அறிவிப்பை தன் அழகான குரலில் ஒரு பெண் வெளியிடவும், மீண்டும் தவிப்போடு நவிரன் தன் முகநூல் பக்கத்தை ஆராய, அதில் அவன் எதிர்பார்த்த மின்மினியின் பதிவு.

ஊஞ்சலாடும்..