ANI 2
Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் 2
சாதாரணமான நட்பு, பாசம் என்று சொல்லிக்கொண்டு இருந்தவனின் மனதில் அவள் மீதான நேசமும் துளிர்க்க தொடங்கியது.
அவள் மீதான நேசம் தொடங்கிய கால கட்டத்தை நினைத்து பார்த்தான் அமுதன் .
அப்பொழுது அமுதனுக்கு பதினெட்டு வயது இருக்கும் அனுவிற்கு பதினாலு இருவருமே கலவன் பாடசாலை எனப்படும் ஆண், பெண் சேர்ந்து படிக்கும் பாடசாலையில் தான் படித்துக்கொண்டு இருந்தார்கள்.
அன்று காலைப் பிராத்தனை முடிந்தவுடன், மேடைக்கு வந்த பாடசாலை அதிபர் மாகாண ரீதியில் நடைபெற்ற பொது அறிவு சம்மந்தமான போட்டியில் தங்கள் பாடசாலை முதலாம் இடம் வந்துவிட்டதாகவும் அதற்கு முழுப்பொறுப்பு தங்கள் பாடசாலை மாணவி அனுஷா தான் எனவும் உரக்க சொல்ல,
மாணவர்களுக்கு தங்கள் பாடசாலை வென்று விட்டது எனும் உவகையுடன் மாணவர்களின் கரகோஷம் வானை பிளந்தது.
அதிபர் அனுஷாவை மேடைக்கு அழைக்க, வெள்ளைச் சீருடையில் ,இரட்டை பின்னல் முதுகு மட்டும் நீண்டு இருக்க, அதை மடித்து கறுத்த கலர் ரிப்பனினால் கட்டியிருந்தாள். நெற்றியிலும் கருப்பு பொட்டு, காலில் வெள்ளை நிற சப்பாத்தும் அணிந்து, பாடசாலை பச்சை வெள்ளை டையில் மாணவ தலைவி பட்சும் தொங்கிக்கொண்டு இருக்க, கரகோஷம் எழுப்பும் மாணவர்களுக்கு நெஞ்சில் ஒற்றைக்கையை வைத்து நன்றி சொல்லியபடி மேடையேறினாள்.
அமுதனுக்கு தன் பக்கத்துவீட்டு தோழி என்ற ரீதியிலே மற்றவர்களை விட சந்தோசம் கூடுதலாகவே இருந்தது.
அதிபர் அவளை பாராட்டி கையை கொடுத்து வாழ்த்து உரைத்தவர், பிரேயர் முடிந்துவிட்டது எல்லோரும் வகுப்பறைக்கு செல்லுமாறு வேண்டினார்.
மாணவர்கள் வகுப்பறைக்கு செல்லாமல் தனிப்பட்ட முறையில் அனுஷாவை பாராட்டவேண்டும் என்று குழுமி அவளுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.
அமுதனும் அவன் வகுப்பு தோழர்களும் அனுஷாவை பார்ப்பதற்கு அந்த கும்பலில் சேர்ந்தால் முதல் பாடவேளையை மிஸ் பண்ணிடுவோம். அந்த பாடத்தை மிஸ் பண்ணினால் அந்த ஆசிரியர் தண்டனை வழங்குவார்.
பெண்பிள்ளைகளுக்கு முன்னே அசிங்கமாகிவிடும் என்று அறிந்தவர்கள் ஒரு அழகான புத்திசாலியான பெண்ணை வாழ்த்த முடியாத ஏமாற்றத்தில் ஏக்க பெருமூச்சு விட்டபடியே அவளை கடந்து சென்றார்கள்.
அமுதனுக்கும் அவளுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என்று தோன்றினாலும் பாடசாலை முடிய வீட்டுக்கு போய் சொல்லிக்கொள்ளலாம் என்று இருந்தான்.
ஆனால் இடைவேளையின் பொழுது சாப்பிட்டு முடிந்தபின் அவனின் தோழர்கள் அமுதனை அவளிடம் அழைத்து சென்று தங்களை அறிமுகப்படுத்தி விடுமாறு நச்சரிக்க, அவர்களிடம் மறுத்துப்பார்த்தவன் அவர்கள் கூட்டிச்சென்று தான் ஆகணும் என்று அடம்பண்ண இவனும் வேறு வழியில்லாமல் அனுவிடம் கூட்டிச்சென்றான்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
அனுஷாவும் சாப்பிட்டு விட்டு தோழிகளுடன் கதை பேசிக்கொண்டு இருந்தவள், அமுதன் வகுப்பறையின் வாசலின் நின்றபடி அனு என்று கூப்பிட என்னடா என்று கேட்டபடி எழும்பி வெளியில் வந்தாள்.
அமுதன் இப்படி அடிக்கடி வந்து செல்வான். அவனுக்கு அவள் தான் பேங்க், கொப்பி முடிஞ்சுது காசு இருந்தால் தா என்று ஒருநாள் வருவான்.
இன்னுமொரு நாள் இந்த சீதா உப்பு சப்பு இல்லாமல் சாப்பாட்டை கட்டிவைச்சு இருக்கு அதை வாயில் வைக்க முடியலை கேண்டீனில் வேண்டி சாப்பிடணும் காசு வேண்டும் என்று வந்து நிற்பான்.
அப்படி வந்து போயே அனுஷாவின் மனதுக்குள் சலனத்தை ஏற்படுத்தினான். அப்படி ஏற்படுவதற்கு அவளின் வகுப்பு தோழிகளும் முக்கிய காரணம்.
அவர்களே அவனை ஹண்ட்ஸம் பாய், ஹோம்லி பாய் என்று சொன்னதோடு அவன் உன்னை பார்க்கிறதுக்கு தான் வாரான் சும்மா காரணம் சொல்லுறான் என்று தூண்டி விட்டுக்கொண்டே இருக்கவும், அனுஷாவிற்கு அப்படித்தான் போல என்று அவளாக முடிவுக்கு வந்துவிட்டாள்.
அறியாத வயதில் அவனே அவளுக்கு ஹீரோவாக தெரிய அன்றிலிருந்து அவளின் மனம் அவன் பால் சுருண்டது.
அமுதனுக்கு அப்படியொரு உணர்வும் தோன்றியிருக்க வில்லை. அவனுக்கு ஓசியில் காசு வேண்டும். அனுவிடம் அவனுக்கு திருப்ப கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவளும் கொடுத்த காசை திரும்ப கேட்கமாட்டாள். அந்த ஒரு காரணத்துக்காகவே அவளிடம் வருவான்.
இன்றும் காசு வேண்ட என்று தான் வந்து இருக்கிறான் என்று அனுஷா பெர்ஸ்சுடன் தான் வெளியே வந்தாள்.
வந்து பார்த்தால் ஒரு ஆறேழு பெடியன்கள். அவளை பார்த்து ஜொள்ளுவிட்டுக்கொண்டு நிற்க, அமுதன் அவர்களின் கூட்டத்து தலைவன் போல முன்னுக்கு நின்றான்.
அவள் அவனை முறைக்க,
அவளை பார்த்து ஹி ஹி என இழித்துக்கொண்டு “இதுங்க உன்னை பாராட்டோணுமாம் என்னை கூட்டிக்கொண்டு போக சொல்லி டார்ச்சர் பண்ணிச்சுங்க, அது தான் கூட்டிவந்தேன்” என்றவனை கண்டு,
“அதுங்க பொண்ணையே கண்டது இல்லை போல வெறிச்சு பார்க்குதுகள். அதுகளுக்கு மாமா வேலை பார்த்துட்டு அதை எப்படி சிம்பாளிக்க வெளியில் சொல்லுது பார் பக்கி’ என அவனுக்கு கேட்க்காதவாறு வாயிற்குள் முணுமுணுத்தவள்.
“ஹெலோ அண்ணாக்கள்..” என்றே உஷாராக ஆரம்பித்தாள் அனுஷா.
அவளின் அண்ணாவின் அமுதனின் நண்பர்கள் இதயம் எல்லாம் சுக்குநூறாக வெடித்தது.
அமுதனின் உற்ற நண்பனான கரண் மட்டும், அவளை எப்பொழுதும் தங்கையாக பார்ப்பவன், “சூப்பர் போ பரதேசிங்க மூஞ்சி பியூஸ் போயிட்டு” என்று நண்பர்களை கலாய்க்க,
அப்பொழுது தான் அமுதனுக்கு என்னையும் அண்ணா சொல்லிட்டாள் என உள்ளே குமுறியவனுக்கு அவள் எப்பொழுதுமே தங்கை என்ற இடத்தில வைக்காமல் அவளுக்கு வேறு இடத்தை கொடுத்துவிட்டோம் என்று மூளையில் உரைத்தது.
அதுவே அவனுக்கு முதல் விதை விழுந்த இடம்..
அவளின் கண்ணை பார்த்தே பேச முடியாமல் அவளை பார்க்கும் பார்வையில் தடுமாற்றம் தோன்றியது.
முதலில் வயதுக் கோளாறு என்று அதற்கு அவனே பெயர் சுட்டி கொண்டான்.
அவன் பாடசாலை முடிய பக்கத்துக்கு வீடு என்றாலும் அவளை அடிக்கடி சென்று பார்க்க முடியாமல் போகத்தான் அது வயதுக்கான ஈர்ப்பு இல்லை காதல் என்று தோன்றியது அமுதனுக்கு.
பிறகு அவளை எப்படியும் மதிலால் எட்டியாவது பார்த்து தாயிற்கு சந்தேகம் வராதவாறு சண்டையிழுப்பது போல ஒரு நாளும் ஒரு வார்த்தையாவது பேசிவிடுவான்.
இப்படித்தான் அவன் காதல் முளைத்து இப்பொழுது விருட்ஷம் ஆகி விட்டது.
அனுஷாவிற்கும் தோழிகளின் தூண்டுதலால் அன்றி தனக்கும் அவனை பிடிக்கும் என்று அறிந்துவிட்டாள்.
இரண்டுமே மற்றவர்களுக்கு தாங்கள் நேசிப்பது தெரியாது என்று கண்ணாமூச்சி ஆடிக்கொண்டு இருக்கின்றார்கள்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
அவள் ஓ/ல் 9A சித்தியடைந்ததை அமுதனிடமே முதலில் பகிர்ந்தாள். அது தான் அவளுக்கு என்ன ரிசல்ட் வரும் என்று பக்கத்தில் காத்திருந்த உமாவிற்கு தன்னையு மறந்து மகள் அமுதனிடம் சென்று சொல்ல அதுவே அவளுக்கு அவனை தன்னிலும் பார்க்க அவனை பிடிக்கும் என்று காட்டிக்கொடுத்தது.
நல்ல நாட்களுக்கு உடையெடுக்கும் பொழுது சீதா தனக்கு எடுக்கும் பொழுது அனுஷாவிற்கும் எடுக்க, அவளுக்கு அது நல்லாயிருக்காது இது நல்லாயிருக்கும் என்ற அமுதனின் கூடுதல் ஆர்வம். அவளை பற்றி எனக்கு தெரியாதா என்ற அமுதனின் முகபாவம் சீதாவிடம் காட்டிக்கொடுத்தது.
இரு தோழிகளும் தங்களுக்கு தெரிந்ததை மற்றவரிடம் சொல்லிவிட்டு எப்படியும் கத்தரிக்காய் முற்றினால் சந்தைக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில் அமைதியாகவே இருந்தார்கள்.