9 – நெஞ்சம் வீழ்ந்தது உன்னில்

அத்தியாயம் – 9

“தர்மா தம்பி உன்னை விசாரிச்சார்மா சத்யா…” என்று அந்த ஞாயிறு இரவு படுக்கப் போகும் முன் தந்தை சொன்னதைக் கேட்டு நொடி பொழுது சத்யாவின் மனம் பரபரப்படைந்தது.

ஆனால் அடுத்த நிமிடமே மனதை இறுக்கி பிடித்தவள் “என்னவாம்பா…?” என முயன்று வரவழைத்த சாதாரணக் குரலில் கேட்டாள்.

“நீ இரண்டு வாரமா கடை பக்கம் வரலைல… அதான் எப்படி இருக்க, என்னனு விசாரிச்சார். வேற ஒன்னும் இல்லைம்மா…”

“ஓ…! சரிப்பா… நீங்க என்ன சொன்னீங்கபா?”

“நல்லா இருக்கா. இரண்டு வாரமா அவ தங்கச்சி கூட வெளியே போய்ட்டு வர்றா. அதான் கடை பக்கம் வரலைன்னு சொன்னேன். சரி அங்கிள்னு சொன்னார். அவ்வளவு தான்மா…”

“ஹ்ம்ம்…! சரிப்பா…” என்று மட்டும் சொன்னவள் அமைதியாக உள்ளே சென்று படுத்து விட்டாள்.

தானும் அவனைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று மனம் தவித்தது. ஆனால் ‘அவரைப் பற்றித் தான் எதுவும் தெரிந்து கொள்ளத் தேவையில்லை’ என மனதை இறுக்கி வைத்துக் கொண்டாள்.

சிறிது நாட்களே தெரிந்த ஒரு மனிதனை நினைத்து தன் மனம் தடுமாறுகிறது. அதுவும் அவனைப் பற்றி அவளுக்கு அதிக விவரமும் தெரியாது.

அவனின் பெயர் தர்மேந்திரன். டிரைவிங் ஸ்கூல் வைத்து நடத்துகின்றான். சொந்த ஊர் ஈரோடு. திருமணம் முடிந்த தங்கை இங்கே இருக்கிறாள். அவ்வளவு தான் அவனைப் பற்றி அவள் அறிந்த தகவல்கள். அவளுக்கு வேற என்ன அவனைப் பற்றித் தெரியும்?

அவனின் வயது கூட என்ன என்று தெரியாது. ஒருவேளை அவனுக்குத் தன்னை விடக் குறைந்த வயதாக இருந்தால்? குரலை வைத்து மட்டும் ஒருவரின் வயதை கணித்து விட முடியுமா?

வயது பற்றியே அவளுக்கு இன்னும் பெரிய குழப்பம் இருந்தது. தன்னை விடச் சிறியவனாக இருக்க வாய்ப்பு அதிகம் தான் என்று நினைத்தாள். ஒன்று அவளைச் சிறியவள் என்று நினைத்து ஒருமையில் பேசியதில்லை. பெயர் சொல்லி அழைத்தாலும் பன்மையை விடுவதில்லை.

இரண்டு அவனின் தொழில்! தற்போது தான் டிரைவிங் ஸ்கூல் ஆரம்பித்திருக்கிறான். பெரியவனாக இருந்தால் அப்போ இதற்கு முன்பு என்ன செய்திருப்பான்? சும்மாவா இருந்திருப்பான்?

ஒருவேளை தாமதமாகத் தொழில் ஆரம்பித்திருந்தால் ஏன் இவ்வளவு தாமதம்? அதே நேரம் என்னை விடப் பெரியவனாக இருந்தால் அவனுக்குத் திருமணம் கூட ஆகியிருக்கலாம். குழந்தைகள் கூட இருக்கலாம். தன்னிடம் பேசும் போது பரிவையும், கண்ணியத்தையும் காட்டினான். வேற தவறான செயல், பேச்சு எதுவுமே அவனிடம் இருந்ததில்லை. அதனால் தான் அவனிடம் தன் மனம் சலனப்பட்டதோ?

குழப்பங்களும், கேள்விகளுமாகக் குழம்பி தவித்தாள் சத்யவேணி. அவளின் குழப்பங்கள் வீட்டில் இருப்பவர்களையும் தாக்க ஆரம்பித்தது. ஏதோ சிந்தனையில் இருப்பவளை கண்டு ஏன் அப்படி இருக்கின்றாள் என்று கேள்வி கேட்டார்கள்.

இல்லையென்றால் அவளுக்கு எதுவும் பிரச்சனையோ என்று கவலை கொண்டார்கள். அவளின் நடவடிக்கையைப் பெற்றவர்களின் மனம் குறித்துக் கொண்டே தான் இருந்தது. எதற்குக் குழப்பம் என்று உறுதியாகத் தெரியாவிட்டாலும் குழம்பி தெளியட்டும் என்று காத்திருந்தார்கள் என்று சொன்னால் மிகையல்ல.

அந்தக் குழப்பங்களும், தவிப்புகளும், கேள்விகளும் தனக்குத் தேவையே இல்லை என்று அவள் அதிலிருந்து தப்பிக்க எடுத்த முடிவுதான் கடைக்குச் செல்லாமல் இருக்கும் முடிவு.

அவன் எதார்த்தமாக வந்து பேச, தானும் அவனிடம் பேசி நட்பு பாராட்ட, அது வெறும் நட்பாக மட்டுமில்லாமல் சலனத்திலும் கொண்டு போய்விட இத்தனை இன்னல்களும் தேவைதானா?

அதைவிடத் தான் இருக்கும் நிலையில் ஒருவரிடம் மனதை பறிக் கொடுப்பது நியாயமே இல்லை என்று நினைத்தாள். நடக்கவே நடக்காத ஒரு விஷயத்திற்கு ஏன் ஆசைப்பட வேண்டும்? தடுமாற வேண்டும்? பின் தவிக்க வேண்டும்? கண்ணீர் விட வேண்டும்?

இவை எவையுமே தேவையில்லை என்று நினைத்து, கடைக்குப் போவதை தவிர்க்க தங்கையையும் அழைத்துகொண்டு சிறிது நேரம் மட்டும் பூங்காவிற்குச் சென்றுவிட்டு வந்து, அதை ஒரு காரணமாகச் சொல்லி வீட்டிலேயே இருக்க ஆரம்பித்திருந்தாள்.

எதற்கும் ஆசைப்படாத மகள் புதிதாகப் பூங்காவிற்குப் போக ஆசைப்பட, அவள் சந்தோஷமாக இருந்தால் சரி என வசந்தாவும் அவள் விருப்பப்படி செய்யட்டும் என்று விட்டிருந்தார்.

அதற்கு அடுத்த ஞாயிறு சிறிது நேரம் மட்டும் சென்று விட்டு கிளம்பி விடுவோம் என்று நினைத்துக் கடையில் போய் அமர்ந்திருந்தாள்.

அவள் கடைக்கு வந்த சிறிது நேரத்திலேயே அங்கே வந்தான் தர்மா. அவனின் கண்கள் ஆவலாகச் சத்யாவின் முகத்தைத் தழுவின. இரண்டு வாரங்களுக்கும் சேர்த்துப் பார்ப்பது போல விடாமல் பார்த்தான். அந்த நேரத்தில் தியாகராஜனும் மகள் கடையில் இருப்பதால் வேறு வேலையாக வெளியே சென்றிருந்தார்.

அதில் அவன் தயங்கி பார்க்க தேவையே இல்லாமல் தயக்கமின்றி விடாமல் பார்த்தான்.

அந்த நண்பகல் நேரத்தில் அந்தச் சாலையில் வாகனங்கள் அதிகம் இல்லாமல் சிறிது அமைதியாகவே இருந்தது. கடைக்கும் சாலையோரத்தில் வண்டி நிறுத்தும் இடத்திற்கும் சிறிது இடைவெளி மட்டுமே இருந்தது.

தர்மா வண்டியை விட்டு இறங்கும் முன்னே அவனை உணர்ந்து விட்டாள் சத்யவேணி.

அவன் நடக்காமலேயே அவளை உணர வைத்தது அவனின் வாசனை.

வாசனை என்றால் உடலில் பயன்படுத்தும் வாசனை திரவியங்கள் அல்ல!

அவனின் வாசனை! எந்தச் செயற்கை பூச்சும் பூசாத இயற்கை வாசனை!

அன்று தான் அதை உணர்ந்தாள் சத்யா. முதல் சந்திப்பில் அவனின் உடலில் இருந்து வந்த வாசனையை அவனின் அடையாளமாக அவள் குறிப்பிட்டு சொன்ன பிறகு அவன் அதன் பிறகு மீண்டும் அந்த வாசனை திரவியங்கள் உபயோகித்த மாதிரியே தெரியவில்லை. அதை அவளும் கவனிக்கவில்லை.

கவனிக்கவில்லை என்பதை விட அவள் அதைக் கவனத்தில் வைத்துக் கொள்ள வில்லை. அடுத்தடுத்த முறைகள் அவனைச் சந்தித்த போது அவனின் வாசனையை அவளின் புலன்கள் இயல்பாக ஏற்றுக் கொண்டிருக்கின்றன.

அப்படி ஏற்று இது தான் அவனின் உடலின் வாசனை என்று அவள் மனம் ஏற்றுக் கொண்டதை கூடத் தான் கவனியாமல் இருந்திருந்தால் அப்போ எந்த அளவு அவனிடம் தன் மனம் தடுமாறி இருக்கிறது என்பதை எடுத்துக் காட்ட விதிர்த்துப் போனாள்.

அதே நேரம் ‘ஏன் அவன் வாசனை திரவியங்கள் பயன்படுத்தவில்லை? நான் இப்படி உணர வேண்டும் என்று தானோ?’ என்ற கேள்வி எழுந்து நின்றது.

வாகனத்தை விட்டு இறங்கி ஊன்றுகோலை ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து அவன் நடந்த போது டக் டக்கென வந்த சத்தம் அது அவளின் நெஞ்சிலேயே விழுந்தது போல அதிர்வாக உணர்ந்தாள்.

அதோடு என்றும் இல்லாமல் இன்று அவன் தன்னை ஊடுருவி பார்ப்பது போல ஒரு பிரமையும் உண்டானது.

அருகில் வந்து விட்டான். அருகில் வந்து விட்டான் என்று அவனின் நடையின் சத்தம் முரசு கொட்டி அறிவிக்கச் சத்யாவின் முகம் சிறிது சிறிதாக அவளின் இயல்பை தொலைத்து இறுகி கொண்டே போனது.

தர்மா வண்டியை நிறுத்தியதில் இருந்து அவளின் முகத்தில் வந்து போன வியப்பு, கலக்கம், குழப்பம் அதோடு சேர்ந்த பயம் என எல்லாவற்றையும் பார்த்துக் கிரகித்துக் கொண்டே வந்தவன் அவளின் முகம் இறுகி போகவும் ஏதோ உறுதியான நிறைவு உண்டாக அவனின் உதட்டில் புன்முறுவல் வந்து அமர்ந்து கொண்டது.

கடையின் முன் இருந்த மேஜையின் மீது லேசாகச் சாய்ந்து நின்றவன் எதுவும் பேசாமல் அவளின் முகத்தையே பார்த்தான்.

அவன் அருகில் தான் இருக்கிறான் என்று உணர்ந்தாலும் மேஜையின் அந்தப் பக்கம் அமர்ந்திருந்தவள் பேச வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இறுகிய முகத்துடன் இருந்தாள்.

சில நொடிகளுக்குப் பிறகு லேசாகத் தொண்டையைச் செருமியவன்‌ “எப்படி இருக்கச் சத்யா?” மிகவும் மென்மையாகக் கேட்டான்.

முதல் முறையாக ஒருமையில் அழைத்தான். அவனின் மென்மையான குரலும், ஒருமையான அழைப்பும் அவளுக்குள் ஏதோ செய்யத் தான் அமர்ந்திருந்த இருக்கையின் கைபிடியை அழுந்த பிடித்துக்கொண்டு “யார் நீங்க?” என அறியாதவள் போலக் கேட்டு வைத்தாள்.

அவளின் கேள்வியில் கண்களை விரித்து வியந்து பார்த்தவனுக்குக் கோபத்திற்குப் பதில் சிரிப்பு வந்தது.

“ஹா…ஹா‌…! சத்யா‌ நான் வந்ததை நிஜமாவே ‌கவனிக்கலையா? நம்ப முடியலையே… ஆச்சரியமா இருக்கே? என்ன சத்யா இது? நான் ஒருமையில் பேசினேன்னு இப்படி‌ சட்டுனு யாருன்னு கேட்டுட்ட…” என்று வியந்த குரலில் கேட்டாலும் அதில் கேலியும் இழைந்தோடியது.

“ஓ…! தர்மா‌ சார்ர்ரா? திடீர்னு ஒருமையில் பேசவும் யாரோனு நினைச்சேன்…” என அவன் முதலில் கேட்ட கேள்வியைக் காற்றில் விட்டவள் அந்தச் சாரில் அதிக அழுத்தம் கொடுத்து கேட்டாள்.

“தர்மா சார்ர்ர்ரே தான் சத்யா…” என அவளை விட அதிக அழுத்தம் கொடுத்து சொன்னவன் “எப்படியும் உன்னை விட எனக்கு நாலு, ஐஞ்சு வயசு அதிகம் இருக்கும். இப்போ எனக்கு முப்பத்தி இரண்டு நடக்குது. ஆரம்பத்தில் நாம புதுசா சந்திச்ச ஆளுங்க. அதனால் எடுத்ததும்‌ ஒருமையில் கூப்பிட வேண்டாம்னு நினைச்சேன். ஆனா நாம தான் இப்போ நெருங்கிட்டோமே.‌ இனியும் எதுக்கு ‘ங்க’ போட்டு தள்ளி நிக்கணும்?” என்று உரிமையுடன் கேட்டான்.

“நெருங்கிட்டோமா?” நெற்றியை சுருக்கி ஒரு மாதிரியாகக் கேட்டாள். அதோடு அவனின் வயதும் மனதின் ஓரத்தில் பதிந்து ஒரு திருப்தியை தந்தது.

“பின்ன இல்லையா சத்யா? எனக்காக நீ மெனக்கெட்டு உதவி செய்யும் போதே நமக்குள் நெருங்கிய நட்பு வந்திடுச்சு. அடுத்து நம்ம டிரைவிங் ஸ்கூலில் நடக்கப் போகும் புதிய முயற்சியைத் திறந்து வைக்கப் போறதே நீ தான். இதில் நம்ம நெருக்கம் இன்னும் தான் அதிகமாகிட்டு வருது…” என்று சகஜமாக உரையாடிக் கொண்டு போனவனை எப்படி நிறுத்த என அவள் யோசித்துக் கொண்டிருந்த போதே ஏதோ திறப்பு விழா என்று சொன்னதும் புரியாமல் முழித்தாள்.

“என்ன சொல்றீங்க? என்ன திறப்பு விழா? அதை ஏன் நான் திறந்து வைக்கணும்?” எனப் படபடப்பாகக் கேட்டாள்.

“என்ன சத்யா, மறந்துட்டியா? புதுசா மாற்றுத் திறனாளிகளுக்கு டிரைவிங் சொல்லி கொடுக்க வேலை நடந்துட்டு இருக்குனு சொன்னேனே? அதுக்கான திறப்பு விழா தான். கார் ரெடி ஆகிருச்சு. நீ வந்து திறந்து வைச்சுட்டா சந்தோஷமா இருக்கும்…” என்றான்.

அவன் சொன்ன பிறகு தான் அன்று அந்த வேலையாக அலைந்து கொண்டிருப்பதாகச் சொன்னது ஞாபகத்தில் வந்தது. அவனைப் பற்றிக் குழம்பி தவித்ததில் அவன் சொன்ன விஷயத்தையே மறந்திருந்தாள். இப்போது அவனே சொல்லவும் இப்படி ஒரு நல்ல விஷயத்தைப் போய் மறந்துட்டோமே என்று தன்னையே திட்டிக் கொண்டாள்.

“ஸாரி தர்மா சார்… மறந்துட்டேன். ரொம்பச் சிறப்பான விஷயம் செய்றீங்க தர்மா சார். அதை நான் மறந்தது ரொம்பத் தப்பு. சாரி சார்…” என்று குற்றவுணர்வுடன் சொன்னாள்.

அவள் மறந்ததாகச் சொன்னதும் அவனின் கண்ணில் வேதனை வந்து போனது. ஆனாலும் அதை அவளிடம் காட்டி கொள்ளாமல் “பரவாயில்லை சத்யா. திறப்பு விழா புதன் கிழமை சாயந்தரம் ஐஞ்சு மணிக்கு வச்சுக்கலாம்னு பார்க்கிறேன். உனக்கு ஓகே வா? ஸ்கூல் போயிட்டு வந்துடுறியா? இல்லை வேற நாளில் வைப்போமா?” என்று கேட்டான்.

“உங்களுக்கு வசதி படுற நாளில் வைங்க சார். இதில் என் அபிப்பிராயம் எதுக்கு?”

“இப்போ தான் சொன்னேனே சத்யா… நீ தான் திறந்து வைக்கணும். அதுக்கு உன் நேரமும், அபிப்பிராயம் தானே முக்கியம்?”

“நானா? நான் எதுக்கு?” வேகமாகத் தலையை ஆட்டி மறுத்தாள்.

“நான் ‘நீ, வா’ன்னு ஒருமையில் பேசுறது கோபமா சத்யா? அதான் இப்படி ஒட்டாம பேசுறீங்களா? நான் வேணும்னா இனி பன்மையிலேயே பேசுறேன்…” என்று வேண்டும் என்றே குரலில் இறுக்கத்தைக் காட்டி பேசினான்.

அதை உணர்ந்து, “சேச்சே…! கோபமெல்லாம் இல்லை தர்மா சார். அதான் என்னை விட மூத்தவர்னு சொன்னீங்களே. ஒருமையிலேயே பேசுங்க. திறப்பு விழாவை நான் ஏன் திறக்கணும்? யாராவது பெரிய ஆளுங்களைக் கூப்பிட்டு செய்ங்க. இல்லனா உங்க மனைவியைக் கூப்பிட்டு செய்ங்க. அதை விட்டு யாரோ ஒருத்தியான நான் எதுக்கு?” என்றாள்.

“நீ எனக்கு யாரோ இல்லை சத்யா…” என்று அழுத்தமாகச் சொன்னவன் அவளின் முகத்தைக் கூர்ந்து பார்த்தான். அவளின் முகம் நொடி பொழுது மலர்ந்து பின் சரியானதை பார்த்தவன், மென்மையாகச் சிரித்துக் கொண்டான்.

“அதோட எனக்கு இப்போதைக்கு மனைவின்னு யாரும் இல்லை…” என்றவனின் குரல் என்ன உணர்வு என்றே தெரியாத வகையில் ஒலித்தது.

அவன் சொன்னதைக் கேட்டு சத்யாவின் முகம் பளிச்சென ஒளிர்ந்தது போல் இருந்தது. ஆனால் அவனின் குரலின் தன்மை புரியாமல் குழம்பி போனாள். ‘ஏன் ஏதோ போலச் சொன்னான்?’ என்ற எண்ணம் ஓட அவளின் நெற்றிச் சுருங்கியது.

அதைக் கவனித்தவன் அவளை மேலும் யோசிக்க விடாது “எனக்கு நீ ரொம்ப முக்கியமானவள் தான் சத்யா. யாரோ ஒரு ஆளை அழைத்துத் திறப்பு விழா வைக்கிறதை விட என் நலம் விரும்பியான நீ வச்சா அதை விட எனக்கு வேற சந்தோஷம் கிடைக்காது சத்யா…” என்றவனின் குரல் உரிமையுடன் நெகிழ்ந்து குழைந்தது.

அவனின் ஒவ்வொரு வார்த்தையும் சத்யாவை ஏதோ செய்தது. தன்னை ஒரு முக்கியமான நபராகக் கருதி அவரின் நல்ல முயற்சி ஆரம்பிக்கத் தலைமை தாங்க அழைப்பது தனக்கு அவன் கொடுக்கும் முக்கியத்துவம் புரியா உணர்வில் ஆழ்த்தியது.

ஆனாலும் என்ற தயக்கம் உருவாக “ஆனா நா…நான் வேணாமே தர்மா சார்…” என்று தயக்கத்துடன் சொன்னாள்.

“நீ என் நலம் விரும்பி இல்லையா சத்யா?” சட்டென இறுகிய குரலில் கேட்டான்.

“அச்சோ…! நீங்க நல்லா இருக்கக் கூடாதுனு நினைப்பேனா சார். யாரும் நல்லா இருக்கக் கூடாதுனு நான் நினைக்க மாட்டேன் சார். அப்படி இருக்கும் போது உங்களைப் போய் அப்படி நினைப்பேனா?” என்று வேகமாகச் சொன்னாள்.

“அப்போ அ-னா ஆ-வனான்னு இழுக்காம கிளம்பி வா சத்யா. சரி சொல்லு என்னைக்கு வைத்துக் கொள்ளலாம்?” உரிமை இப்போது அதிகமாவே உறவாடியது.

அவன் உரிமை எடுத்துக் கொள்வதை அவளின் மனமும் விருப்பத்துடன் ஏற்றுக் கொண்டது.

“புதன் கிழமையே ஓகே தான் சார். அன்னைக்கே வர்றேன்…” என்று தன் சம்மதத்தைச் சொன்னாள்.

“ஓகே சத்யா…! அன்னைக்கே ரெடி பண்றேன். அப்படியே அம்மா, தங்கச்சியையும் கூப்பிட்டுட்டு வந்துரு. அதுக்குத் தனியா நான் அங்கிள்கிட்ட அழைப்பு விடுக்கிறேன்…” என்றான்.

“சரி தர்மா சார்…” என்று அவள் சொல்லவும்,

“இந்தச் சாரை விட்டுறேன். என்னை வாத்தியார்னு நினைத்து தானே நீ சார் சொல்ற? அப்போ நான் இந்த டீச்சரை இனி டீச்சரம்மானு தான் கூப்பிட போறேன். உனக்கு ஓகே தானே டீச்சரம்மா?” என்று சிரித்துக் கொண்டே கிண்டலாகக் கேட்டான்.

“நோ… நோ… தர்மா சார்…! சத்யானே கூப்பிடுங்க. நான் சாரை விட முடியாது தர்மா சார். முன்னாடி உங்க வேலையை வைத்து மரியாதைக்கு அப்படிக் கூப்பிட்டேன். ஆனா இப்போ என்னை விட மூத்தவர்னு தெரிந்த பிறகு இனி கண்டிப்பா சாரை விட முடியாது. என்னை இப்படியே விட்டுருங்க. ப்ளீஸ்…!” என்றாள் பிடிவாதத்துடன்.

தன் மனதை மறைக்கத்தான் சார் என்பதை இழுத்துப் பிடித்து வைத்துக் கொண்டாளோ?

அவளின் அந்தப் பிடிவாதத்தைப் பார்த்து “சரி… சரி… உன் இஷ்டம்…!” என்று விட்டுவிட்டான்.

“ஓகே சத்யா… நான் கிளம்புறேன். அப்பாகிட்ட அப்புறம் வந்து பேசுறேன்…” என்று விடை பெற்றுச் சென்றான்.

அவன் கிளம்பியதும் தனியாக அமர்ந்திருந்தவளுக்கு ‘என்ன முடிவு செய்து வைத்திருந்து விட்டு, தான் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறோம்?’ என்ற எண்ணம் வந்தது.

அவனை விட்டு விலக வேண்டும் என்று நினைத்தவளை சிறிது நேர பேச்சில் மீண்டும் சகஜமாகப் பேச வைத்துவிட்டு சென்று விட்டானே…

அதிலும் அவள் குழம்பி தவித்த வயது, மனைவி பற்றிய கேள்விக்கும் உரிய பதிலை ஏதோ அவளின் குழப்பத்தை மனதில் புகுந்து பார்த்து விட்டு அதைத் தீர்க்கவே வந்தவன் போலப் பதில் சொல்லிவிட்டு செல்கின்றானே…

ஆனாலும் ‘அவனுடனான இந்த நட்பு தொடர்வது நல்லதிற்கா? கெட்டதிற்கா?’ என்று மீண்டும் கேள்வி பிறந்தது.

‘எதுவாக இருந்தாலும் அதன் போக்கில் போகட்டும். என்னை மீறி அப்படி என்ன நடந்து விடும்?’ என்றும் ஒரு கட்டத்தில் நினைத்துக் கொண்டவளின் மனது சிறிது தெளிய ஆரம்பித்தது.