இவர்கள் இங்கே மருத்துவமனையில் இருந்ததை அன்னைக்குச் சொல்லி இருந்தான். அதை சூர்யாவின் அன்னை மாயாவிடம் கூறிக் கொண்டிருந்தார்.
அப்போது மாயாவும் சூர்யாவின் அன்னையிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
“சார்! ரொம்ப நல்லவங்க அம்மா. அவங்கள மாதிரி ஒருத்தர இந்த உலகத்துலயே பாக்க முடியாது. ஆ! அம்மா நேத்து யாரோ சந்திரான்னு சொன்னாங்க? யாரும்மா அது? சாரு வாய்லேர்ந்து முதல் தடவையா ஒரு பொண்ணு பேரு வருது?
“அவளை என்னால மறக்க முடியாது மாயா. பாவம் ரொம்ப நல்ல பொண்ணு. அவளை மாதிரி ஒருத்திய இந்த உலகத்துல பாக்கவே முடியாது.’
“சார்! அந்த பொண்ண ?”
“ஆமா மாயா ! எனக்கு தெரிஞ்சு ரெண்டு பேருமே ஒருத்தருக்கு ஒருத்தர் விரும்பினாங்க. இவனும் அவகிட்ட கேட்டுருக்கான். ஆனா என்ன காரணம்னு தெரியல. இவனை அவ புடிக்கல்லன்னு சொல்லிட்டாளாம் . அவ ஏன் அப்படி பேசினான்னு தெரியல”.
“நீங்க அவங்ககிட்ட கேட்கவேண்டியதுதானே ?”
“கேட்காம இருப்பேனா ?”
அவள் சொல்லிய பதிலை அவர் நினைவுக்கு கூர்ந்தார்.
அந்த சம்பவத்துக்குப் பிறகு சந்திரா இவர்கள் வீட்டிற்கு சுத்தமாக வருவதே இல்லை. அதன் காரணத்தை இருவருமே நன்கு புரிந்துக் கொண்டனர். சூர்யாவின் அன்னைக்கு அவளை பார்க்காமல் மனம் அடித்துக் கொண்டது. இருப்பினும் ஒருவாறாக மனதை தேற்றிக் கொள்ள ஆரம்பித்தார். ஆனால் எது எப்படி இருந்தாலும் அவருக்கு அவள் மறுத்ததற்கான காரணம் தெரிய வேண்டும். இவர்கள் இருவருமே ஒருவருக்கொருவர் நடந்துக் கொள்ளும் விதத்தை பார்த்து தெரிந்துக் கொண்டவராயிற்றே!
அதற்கான காரணங்கள் இருக்கத்தான் செய்தது. முதல் காரணம் சந்திரா எந்த விதமான தடையும் இன்றி வீட்டின் எல்லா பகுதிகளுக்கும் சென்று வந்தாள் . அதில் சூர்யாவின் அறையும் அடக்கம். முதலில் அவனுக்கு அடிபட்டிருந்தபோது போக ஆரம்பித்தது பின்னர் அவனுக்கு தேவையானதை செய்வது வரை அப்படியே பழக்கம் ஆனது. ஒரு முறை அவன் துணிகளை மடித்து அவன் கொண்டிருக்கும்போது அவன் சட்டை பட்டன் பிய்ந்துபோய் விட்டது.
“அம்மா ” அழைத்தான் மகன்.
“எதுக்கு அம்மா? அவங்க பிசியா இருப்பாங்க” கேட்டுக் கொண்டே அவன் வீட்டிற்குள் நுழைந்தாள் .
“இல்ல இதுக்குத்தான்”. “குடுங்க நான் தைக்கறேன்” அவன் கைகளில் இருந்து பிடுங்கி கொண்டாள் .
“உனக்கு இதெல்லாம் தெரியுமா ?” சந்தேகமாகக் கேட்டான்.
“என்னோட ட்ரெஸ்ஸே நான்தான் ஸ்டிட்ச் பண்ணறேன்”. சொல்லிக் கொண்டே ஊசி நூலை எடுத்து தைக்க ஆரம்பித்தாள்.
“நீ எதுக்கும்மா இதெல்லாம் செய்யற?” அவன் அன்னை கையை துடைத்துக் கொண்டே சமையல் அறையில் இருந்து வெளியில் வந்தார்.
“எங்கப்பாக்குணா நான் செய்ய மாட்டேனா ஆன்டி! இதுல என்ன இருக்கு?” அவள் சொன்னாலும் யோசனையுடனே அவர் பார்வை அவள் மீதிருந்தது.
அதேபோல ஒரு முறை, சூர்யா அலுவலக விஷயமாக ஜெய்ப்பூர் செல்ல வேண்டி இருந்தது. அங்கிருந்து அன்னைக்கு ஒரு புடவை வாங்கி வந்தான். கூடவே ஒரு சுடிதாரும் வந்தது.
“இது என்னடா?”
“ம்மா! இது அவங்க கிஃப்டா குடுதாங்கம்மா. உனக்கு தெரிஞ்சவங்க யாருக்காவது குடு”
“சரிடா, சுதாவுக்கு(மாமா பெண்) குடுத்துடறேன்”
அவனின் கண் பார்வையிலேயே அது அவனுக்கு பிடிக்கவில்லை என்று புரிந்துகொண்டாள் . இதை யாருக்காக வாங்கி வந்திருப்பான்? அன்றும் யோசனைதான்.
அதுவே சந்திரா, எக்ஸாம் ரிசல்ட் வந்துடுச்சு, என்று டான்சு ஆடிக் கொண்டே கையில் இனிப்புடன் வந்தாள் . வழக்கம்போலவே அவன் அறைக்கும் சென்று இனிப்புக் கொடுத்தாள் . கவனமாக அவன் பாதியை மட்டும் எடுத்துக் கொண்டான். மீதம் இருந்ததை அவள்தான் வாயில் போட்டுக் கொண்டாள் . இருவருக்குமே அதில் எதுவுமே வித்தியாசம் தெரியவில்லை போலும்.அப்போது அவன் கட்டிலில் இருந்த ட்ரெஸ்ஸை ஆசையாக எடுத்துப் பார்த்தாள் .
“இது யாருக்கு? ஆன்டி ” சூப்பரா இருக்கு.
மகனை பார்த்தாள் அன்னை. இவளுக்கே குடு என்று சைகை காட்டினான்.
“இதுவா, யாரோ இவன் ஊருக்கு போய் இருந்த இடத்தில கிஃப்டா குடுத்தாங்களாம் . நான் எங்க இதெல்லாம் போடப் போறேன்? நீ எடுத்துக்கறியா ? ” பெண்ணின் முகத்தை கூர்ந்து கவனித்தார் சூர்யாவின் அன்னை.
“ம்ம் ஓகே ! தங் யூ ஆன்டி” என்று அவளுக்கு முத்தத்தை வழங்கி விட்டு ஓடிச் சென்று அவனுக்கும் நன்றி கூறினாள் .
“ஏண்டி! வாங்கி தூக்கிட்டு வந்தது நான் . கடைசில எங்க அம்மாக்கு தாங்ஸ் ஸா ? “
அவன் கேட்டதன் அர்த்தம் சந்திராவுக்கு உண்மையாகத்தான் புரியவில்லையோ ? அதிலும் அந்த “டி ” என்ற பிரதேக வார்த்தை! அன்னை புரிந்துக் கொண்டுவிட்டார். அவளுக்குமே சந்திரா மருமகளாக வரக் கூடாதா என்ற ஏக்கம் அவளை பார்த்த முதல் நாளில் இருந்தே தான் வந்து விட்டதே. சிரித்துக் கொண்டே உள்ளே சென்று விட்டார்.
சந்திராவுக்கும் மகனுக்கும் நடுவில் ஏதோ ஒன்று இருக்கிறது. அவர்களுக்குள் தொடுவது, தட்டுவது, உரசி நிற்பது என்ற எதுவுமே தவறாகப் படவில்லை போலும்.
ஒருநாள் இருட்டிய பின் கரண்ட் இல்லை என்று சிலபேர் மாடியில் நின்றுக் கொண்டிருந்தனர். சந்திரா வந்து ஆன்டியை அழைத்துக் கொண்டு மாடிக்குச் சென்றாள் . தன் வீட்டிலேயே லாப்டாப்பில் படித்துக் கொண்டிருந்தவன், சார்ஜ் தீர்ந்து போகவும், சரி நாமும் அன்னையுடன் இருக்கலாம் என்று மாடிக்குச் சென்றான்.
அவன் சென்ற போது அவன் அன்னையும் சுந்தரியும் சீரியஸாக எதையோ பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். சந்திராவுக்கு அவர்களின் பேச்சு அலுப்பு தட்டியது. அறுவையாக இருந்தது. அதனால் அவர்களிடம் இருந்து நழுவி தனியாக நின்றுக் கொண்டாள் . தனிமை கிடைத்ததும் வழக்கம்போலவே அவளின் நாயகன் அவள் கண் முன் வந்து நின்றான். ஏதேதோ இனிய கற்பனைகள். அதிலும் அவன் அவளை அணைத்துக் காப்பாற்றியதே மனதில் வந்துக் கொண்டிருந்தது. அவனையே நினைத்துக் கொண்டிருந்தவள் கண் முன் அவனே நின்றிருந்தான். அவளுக்கு சற்று தூரம் தள்ளி அவன் நின்றிருந்தான். இனிய கற்பனைகளில் அவள் முகம் தானாகவே சிகப்பையும் அடக்க முடியாத புன்னகையையும் தத்தெடுத்துக் கொண்டது. அப்போதும் இவளை பார்த்து புருவத்தை உயர்த்தி என்னவென்றுக் கேட்டான். இவள் இல்லை என்று தலையாட்டினாள். இவற்றை எல்லாம் சூர்யாவின் அன்னை பார்த்துக் கொண்டிருந்தார். சுந்தரி முதுகின் பக்கம் நடந்ததால் அவளுக்கு இது எதுவும் தெரியவில்லை. அதே போல நல்ல வேளை மற்றவர்கள் யாரும் பரவில்லை என்று பெரு மூச்சு விட்டார்.
என்னதான் மனதில் இவருக்கு ஆசை இருந்தாலும் அதை இவர்களுக்கு நடுவே வளர விடுவது சரி அல்ல. எதுவாக இருந்தாலும் இரு வீட்டினரும் பேசி முடிவெடுக்க வேண்டும். அதற்க்கு முன் சூர்யா சந்திரா அவர்கள் இருவரும் பேசிக் கொள்ள வேண்டும். இருவரும் மனதில் இருப்பதை பகிர்ந்துக் கொள்ளட்டும். இருவருக்கும் சரி என்றால் அவர்கள் வீட்டில் சென்று தானே பேசலாம் என்று நினைத்தார்.
கீழே வீட்டிற்கு வந்தவர் தான் மனதில் நினைத்ததை மகனிடமும் சொன்னார்.
“என்ன சூர்யா வண்டி ஐ ஐ எம் க்கு போகுன்னு பார்த்தா, சந்திரனுக்கு போகுது?”
“என்னம்மா சொல்லற?”
என்ன மாடில நான் உன்ன பாக்கலைன்னு நினைச்சியா ? கண்டிப்பாக அதில் கண்டிப்பும் இருந்தது.
நீங்க ரெண்டு பெரும் பேசிஒரு முடிவுக்கு வாங்க. அப்புறம் அவங்க அப்பாகிட்ட நான் பேசறன்.
“அம்மா! நீ சொல்லறது சரிதான். ஆனா கல்யாணம்னா அப்பாவ பத்தின பேச்சு வராதாம்மா? நான் அதுக்கு என்ன பதில் சொல்லுவேன் ?”
“அது சரிதாண்டா! ஆனா என்னிக்கி இருந்தாலும் நாம் இந்த கேள்வியை எதிர்க்கொண்டுதானே ஆகணும் ?”
“நீ சொல்லறது சரிதான்மா. இப்போ சந்திராகிட்ட மட்டுனா நான் சொல்லிடுவேன் .ஆனா அவங்க அப்பாகிட்ட? எனக்குன்னு ஒரு ஸ்டேட்டஸ் வச்சுக்கிட்டு அப்போ நான் போய் கேட்கலாம். அதுவே இப்போ ?
எனக்குன்னு என்னம்மா தகுதி இருக்கு?எதுவா இருந்தாலும் நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க. நான் நிறைய யோசிக்கணும். எடுத்தோம் கவுதோன்னு என்னால முடிவெடுக்க முடியாது.
“நீ சொல்லறது எல்லாமே சரிதாண்டா கண்ணா. ஆனா அது வரைக்கும் நீங்க ரெண்டு பேரும் இப்படி நெருங்கி பழகறது சரி இல்ல”.
“ம்ம்! ஓகே மா”
அது சரி உனக்கு அவளை புடிச்சிருக்கா இல்லையானு நீ இன்னும் சொல்லவே இல்லையே ? என்கிட்ட !
“ம்மா போமா உனக்கு வேற வேலையே இல்ல !”சொல்லிக் கொண்டே அறைக்குள் சென்று கதவைச் சாத்தி கொண்டான்.
“என் மகனுக்கு கூட வெட்கப் படத் தெரியுமா?” தாயின் உள்ளம் பூரித்தது.
அடுத்த இரண்டு நாட்களில் அவன் மறுபடியும் ஊருக்கு செல்ல வேண்டி இருந்தது. அன்று இரவு அவனுக்கு ரயில். மாலை சொல்லிக் கொண்டே வீட்டிற்கு வந்தான். மகனின் அலுவல் விஷயத்தை தடுக்க வேண்டாம் என்று தனக்கு இருந்த வயிற்று வலியைப் பற்றி அவர் மகனிடம் எதுவும் கூறாமல் விட்டு விட்டார். ஆனால் மறுநாள் காலை காலைக் கடன் வரவில்லை. அத்தனை வலி. கீழ் முதுகில் இருந்து ஆரம்பித்த வலி நேரம் ஆக ஆக ஏறிக் கொண்டே போனது. பாத்ரூமில் இருந்தவருக்கு தலை சுற்ற ஆரம்பித்து விட்டது. மெதுவாக சுவற்றை பிடித்துக் கொண்டு வந்து வந்தவர் சந்திராவுக்கு கை பேசியில் அழைத்தார். அவரால் பேசக் கூட முடியவில்லை. கணேசனும் சந்திராவும் ஒடி வந்து பார்த்தனர். அவர் உடல் முழுவதும் வியர்வையில் நனைந்திருந்தது. அதே சமயம் உடல் நெருப்பாக கொதித்தது . வேகமாக ஒரு ஆட்டோ பிடித்து அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பார்த்ததில் அவருக்கு கிட்னியில் ஒரு பெரிய கல் இருப்பதாகவும் உடனே அதை நீக்க வேண்டும் என்றும் கூறி விட்டனர். பெங்களூரு சென்றிருந்த மகன் வர இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் என்பதால் சூர்யாவின் அன்னை காத்திருக்கலாம் என்றார். ஆனால் மருத்துவர் உடனே அதை நீக்க வேண்டும் என்று விட்டார்.
உடனே சந்திரா சூர்யாவுக்கு அழைத்து விஷயத்தை கூறி விட்டாள் . தனக்காக காத்திருக்க வேண்டாம் உடனே சிகிச்சை செய்யட்டும் என்று சொல்லி விட்டான் சூர்யா. அவளிடம் அப்படி சொல்லி விட்டானே தவிர பஸ்ஸில் வந்துக் கொண்டிருந்தவனுக்கு அன்னைக்கு ஏதாவது ஆகி விடுமோ என்று பயமாகவே இருந்தது. விஷயத்தைக் கேள்வி பட்டதில் இருந்து அவனுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. தலை பயங்கரமாக வலித்தது. பசியில் மயக்கம் வந்தது. ஆனால் உணவை பற்றிய நினைவு இல்லை. சென்னைக்கு வந்திறங்கியவன் நேராக வீட்டிற்கு ஓடி வந்து விட்டான். அப்போது அவன் அன்னை உறக்கத்தில் இருந்தார். சந்திராதான் கதவைத் திறந்தாள்.
“வாங்க சூர்யா”. அப்போதுதான் சந்திரா முகம் கழுவிக்கொண்டு வந்தாள் .
“என்னாச்சு சந்திரா ? என்ன திடீர்னு?”

“பதறாதீங்க. பொறுமையா இருங்க”.
“அவங்களுக்கு ரெண்டு நாளாவே வயத்தை வலி இருந்திருக்கு. அவங்க தான் சும்மா உடம்பு சூடுன்னு நினச்சு விட்டுட்டாங்க. நல்ல வேளை . சரியான சமயத்துல வந்ததால உடனே ஆபரேஷன் பண்ண முடிஞ்சது. அதுக்கு மேல அவங்களுக்கு சுகர் பிபி எதுவும் இல்லை . இல்லாட்டி ஆன்டி ரொம்ப கஷ்ட பட்டிருப்பாங்க ” சொல்லிக் கொண்டே மெடிக்கல் ரிப்போர்ட்டை காண்பித்தாள். அவன் அதை பார்த்துக் கொண்டிருந்தான்.அவனை பார்க்கவே பாவமாக இருந்தது. அவனும் சென்று முகம் கழுவி வந்தான். காபி குடித்தால் சற்று தேவலாம் போல இருந்தது. அவன் நினைக்கும்போதே இருவருக்கும் காபி வந்தவள்,
நீங்க வேணா கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க. நான் ஆன்டியோட இருக்கேன்.
“இட்ஸ் ஓகே சந்திரா. நான் பார்த்துக்கறேன். நீங்க வீட்டுக்குப் போங்க”
“இல்ல பரவால்ல. நான் ரெண்டு நாள் லீவு சொல்லிட்டேன். கொஞ்ச நேரம் இருந்துட்டு போறேன். நீங்க போய் தூங்குங்க”.
‘இல்ல சந்திரா. ஆபரேஷன் போதே நான் இல்லை . அம்மாவுக்கு உடம்புக்கு முடியாதபோது கூட இல்ல. நான் என்ன பையன்? அம்மாவோட முகத்த பார்த்தே கண்டுபுடிச்சிருக்க வேணாமா ?நெற்றியில் அடித்துக் கொண்டான்.
இவளுக்கு விசித்திரமாக இருந்தது.

“என்ன சூர்யா! இது ஒரு சின்ன விஷயம்தானே ? இதுக்கு போய் எதுக்கு ?”
“சின்ன விஷயமா ? நீங்க வந்து பார்த்திருக்கலைனா ?” பேசிக் கொண்டிருந்தவன் அவள் கையை பிடித்துக் கொண்டு குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்து விட்டான். இவளோ மெதுவாக அவன் தலை கோதினாள்.
அவனுக்கு சற்று சமாதானம் ஆனது. முகத்தை கழுவிக் கொண்டு வந்தவன், அன்னையின் அருகிலேயே நாற்காலியில் அமர்ந்தே தூங்கி ஆரம்பித்து விட்டான். மருந்தின் வீரியம், உடல் அசதியில் உறங்கி விட்ட அன்னை பார்த்தது, மடியில் சாய்ந்து தூங்கி கொண்டிருக்கும் மகனைத்தான். அசதியில் தூங்கி கொண்டிருக்கும் மகனை எழுப்ப விருப்பம் இல்லாதவர் அப்படியே ஆடாமல் அசையாமல் படுத்திருந்தார். ஏனோ அவருக்கு இப்போதும் அவன் கர்ப்ப பையில் இருப்பதாகத் தோன்றியது. அடுத்த சில நிமிடங்களில் வந்த சந்திரா அவனையும் எழுப்பி ஆன்டியையும் எழுப்பி அவருக்கு தேவையானதை எல்லாம் செய்துக் கொடுத்தாள் .
சூர்யா எழுந்து குளிக்கப் போனான்.
ஆன்டிக்கு ஹார்லிக்ஸை தேவையான சூட்டில் ஆத்திக் கொடுத்தவள்
” என்ன ஆன்டி? சூர்யாவுக்கு உங்க மேல ரொம்ப பாசமோ ? கைப்புள்ள குலுங்கி குலுங்கி அழுவுது?” அவள் கேலியாகச் சொன்னாள் .
“பொறந்ததுலேர்ந்து என் கூடவே இருந்துட்டான் இல்ல. அதான்’
“ஆன்டி! நான் ஒன்னு கேட்டா கோச்சுக்க மாட்டீங்களே ?”
“சொல்லுமா “
“இன்னும் அங்கிளுக்கு சொல்லலியே ?”
கொண்டு வந்த துணிகளை துவைக்கப் போட்டவன் “யாரும் யாருக்கும் சொல்ல வேண்டாம்”.
கோபத்துடன் கத்திவிட்டுச் சென்றவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் சந்திரா.
பூக்கள் பூக்கும்…………….