8 – ஈடில்லா எனதுயிரே
Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 8
காலை எட்டு மணி.
ராகவர்தினியும், மாதவனும் காவல் நிலையத்திற்கு எதிரே இருந்த ஒரு கடை வாசலில் நின்றிருந்தனர்.
இரவு பிரபஞ்சனிடம் பேசிய பிறகு அவன் தவறு செய்திருக்க மாட்டான் என்ற நம்பிக்கையில் அவனை வெளியே கொண்டு வர முடிவு செய்து தன் நண்பர்கள் மூலம் விசாரித்து ஒரு வழக்கறிஞரிடம் பேசி அழைத்து வந்திருந்தார் மாதவன்.
அவர் காவல்துறையினரிடம் தனியாகப் பேசி விட்டு வருகிறேன் என்று சொன்னதும் இருவரும் வெளியே காத்திருந்தனர்.
சற்று நேரத்தில் வழக்கறிஞர் வெளியே வர, “போலீஸ் என்ன சொல்றாங்க சார்? அத்தானை வெளியில் கொண்டு வர முடியுமா?” என்று ஆர்வமாக விசாரித்தாள் ராகவர்தினி.
“இந்தக் கேஸ்ல அவ்வளவு சீக்கிரம் வெளியே கொண்டு வர முடியாது மா. இப்பத்தான் எல்லா விவரமும் கேட்டுட்டு வந்துருக்கேன். பிரபஞ்சன்கிட்டயும் பேசினேன். அவர் தான் தவறு செய்யலைன்னு தான் சொல்றார். ஆனால் ஆதாரம் எல்லாம் அவருக்கு எதிராக இருக்கு. வெயிட் பண்ணுங்க. என்ன பண்ணலாம்னு பார்ப்போம்…” என்றார் வழக்கறிஞர் அருண்குமார்.
“ஏற்கனவே அத்தான் நைட் முழுவதும் ஸ்டேஷனில் இருந்துட்டார் சார். இன்னும் எப்படி வெயிட் செய்ய முடியும்? உடனே அத்தானை வெளியே கொண்டு வர ஏற்பாடு செய்ய முடியாதா?” என்று ஆதங்கமாகக் கேட்டாள்.
“இது சாதாரணக் கேஸ் இல்லைமா. பதினெட்டு வயதுக்குக் கீழ் உள்ள பொண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகச் சொல்லி போஸ்கோ சட்டத்தில் கைது செய்துருக்காங்க. சிறு பெண்ணிற்குப் பாலியல் தொந்தரவு கொடுத்தால் அந்தப் பெண் சொல்வதைத் தான் அப்படியே ஏற்றுக் கொள்வாங்க…”
“அது பொய் புகார் சார். அத்தான் அப்படிச் செய்யவே இல்லை…” என்றாள் அவரின் பேச்சின் ஊடாக இடையிட்டு.
“பொய் புகார்னு சொல்வதற்கு நம்மகிட்ட என்ன ஆதாரம் இருக்குமா? நீ அவர் மேல வச்சிருக்கும் நம்பிக்கை மட்டும் ஆதாரம் ஆகிட முடியாது..” என்றார் வழக்கறிஞர்.
“அத்தானும் தான் எந்தத் தப்பும் செய்யலைன்னு சொன்னார் சார்…”
“நான் சொல்றேன்னு தவறாக எடுத்துக்காதே மா. எந்தக் குற்றவாளியும் தன்னை அவ்வளவு சீக்கிரம் குற்றவாளின்னு வெளியே ஒப்புக்க மாட்டாங்க…”
“என்ன சார் நீங்களும் இப்படிச் சொல்றீங்க? நம்புங்க சார். என் அத்தான் அப்படிப்பட்டவர் இல்லை…” என்று படபடத்தாள் ராகவர்தினி.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“ராகா கொஞ்ச நேரம் அமைதியா இரு…” என்று மகளை அடக்கினார் மாதவன்.
“பிரபா மேலே குற்றம் சொல்ல போலீஸ் ஆதாரம் இருக்குனு சொன்னாங்க. அது என்ன ஆதாரம்னு போலீஸ் சொன்னாங்களா சார்? நைட் நாங்க போலீஸ்கிட்ட கேட்டதுக்கு யாரும் சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டாங்க. பிரபாவுக்கும் தெரியலை. உங்ககிட்டயாவது சொன்னாங்களா?” என்று விசாரித்தார்.
“பிரபஞ்சன் போன்ல இருந்து சில ஆபாச போட்டோ எல்லாம் அந்தப் பொண்ணு போனுக்கு அனுப்பி இருக்கார். அதோட அந்தப் பொண்ணுகிட்ட ஆபாசமா போனில் பேசினாராம். காலையில் சீக்கிரம் ஸ்கூல் வந்து அந்தப் பொண்ணை ஸ்டாப் ரூமுக்குத் தனியா கூப்பிட்டு பேசும் சாக்கில் ஆங்காங்கே கை வைப்பாராம். இது எல்லாம் அவர் மேல் அந்தப் பொண்ணு சொல்லியிருக்கிற கம்பளைன்ட்…” என்று அவர் காரணங்களைச் சொல்ல,
“அத்தனையும் பொய் சார்…” என்று முகம் சிவக்க கோபத்துடன் சொன்னாள் ராகவர்தினி.
“பொய்ன்னு நிரூபிக்க நம்மகிட்ட ஆதாரம் இல்லையே மா?” என்று கையை விரித்தார் அருண்குமார்.
“பிரபா மேல சுமத்திய குற்றத்துக்கு ஆதாரம் இருந்தால் இந்த விஷயத்தில் நான் தலையிடுவதாக இல்லைன்னு தான் நைட் வரை நினைச்சேன் சார். ஆனால் பிரபா முகத்தைப் பார்த்து பேசிய பிறகு அவன் குற்றவாளியா இருக்க முடியாதுன்னு தான் எனக்குத் தோனுது. இப்ப என்ன செய்யலாம்?” என்று வழக்கறிஞரிடம் கேட்டார் மாதவன்.
“நீங்க இரண்டு பேருமே பிரபஞ்சன் மேல வந்திருக்கிற புகார் பொய் என்று நம்புறீங்க. நான் பிரபஞ்சனிடம் பேசிய வரை அவரும் தவறு செய்யலைன்னு உறுதியா சொல்றார். நம்ம பக்கம் தவறு இல்லைனா அவர் மேல சுமத்தப்பட்ட புகார் பொய் என்று நாம நிரூபிக்கணும்.
அதுவும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம். இன்னும் சொல்ல போனால் இன்னும் இரண்டு நாளுக்குள் நாம நிரூபிச்சால் உடனே பிரபஞ்சனை வெளியே கொண்டு வர முடியும். ஏன்னா இந்த இரண்டு நாள் போலீஸ் கஸ்டடியில் வைத்து அவரை விசாரிப்பாங்க.
போலீஸில் விசாரிக்கும் போதே உண்மை வெளியே வந்து விட்டால் கேஸ் கோர்ட் வரை போகாது. ஆனால் அதற்குள் நம்மால் நிரூபிக்க முடியலைனா கேஸ் கோர்ட் போய்டும். அதுக்குப் பிறகு கோர்ட்ல வச்சு தான் நாம ஆதாரத்தைக் காட்டி வெளியே கொண்டு வர முடியும். அதுவரை அவர் ஜெயிலில் தான் இருந்தாகணும்.
ஒருவேளை நமக்கு ஆதாரம் கிடைக்கலைனா ஆறு மாதத்திற்கு அவரை ஜாமினில் கூட வெளியே கொண்டு வர முடியாது…” என்று வழக்கறிஞர் விளக்கமாகச் சொல்ல ராகவர்தினி திகைப்புடன் அவரைப் பார்த்தாள்.
அப்போ ஆதாரம் உடனே கிடைக்கலைனா அத்தான் ஆறு மாதங்கள் ஜெயிலில் இருந்தாகணுமா? என்று நினைத்தவளுக்கு மனம் கலங்கி போனது.
கூடவே ‘இந்த இரண்டு நாட்களில் ஆதாரம் கிடைக்கவில்லை என்றால் தானே அத்தான் ஜெயில் செல்ல வேண்டும். அதற்குள் ஆதாரத்தைக் கண்டு பிடித்தால் அத்தானை உடனே வெளியே கொண்டு வர முடியுமே…’ என்று நினைத்ததும் அவள் மனம் பரபரப்படைந்தது.
“இரண்டு நாளில் நிரூபித்தால் அத்தான் வெளியே வந்திருவார் தானே சார்?” உறுதிப்படுத்திக் கொள்ள மீண்டும் கேட்டாள்.
“ஆமாம் மா. வலுவான ஆதாரம் கிடைக்கணும். இல்லனா அந்தப் பொண்ணு சொன்னது பொய்யாக இருக்கும் பட்சத்தில் அந்தப் பொண்ணே தான் சொன்னது பொய்னு உண்மையை ஒப்புக் கொள்ளணும்…” என்றார் வழக்கறிஞர்.
“அந்தப் பொண்ணு யாருன்னு போலீஸ் சொன்னாங்களா சார்?” என்று பரபரப்புடன் கேட்டாள் ராகவர்தினி.
“இல்லை, சிலர் தங்கள் பெயர் வெளியே தெரிந்தால் அவமானம்னு பெயரை மறைக்கச் சொல்லி போலீஸ்கிட்ட கேட்பாங்க. அதுவும் பதினெட்டு வயதுக்குக் கீழ் உள்ள பொண்ணுனா அந்தப் பெண் கேட்டுக் கொண்டால் போலீஸ் அவங்க பெயரை வெளியே சொல்ல மாட்டாங்க…” என்றார்.
அப்புறம் எப்படித் தாங்கள் அந்தப் பெண்ணைப் பற்றித் தெரிந்து கொள்வது? அந்தப் பெண்ணிடமும் விசாரிப்பார்கள் தானே? அப்போது அவளைப் பற்றித் தெரிந்து கொள்ள வாய்ப்பு உண்டா? என்று ராகவர்தனி வழக்கறிஞரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்த போது காவல் நிலையத்தைத் தாண்டி இருந்த பேருந்து நிறுத்தத்திலிருந்து சலசலப்பு கேட்டது.
என்னவென்று மூவரும் திரும்பிப் பார்க்க, அப்போது தான் வந்து நின்றிருந்த அரசு பேருந்திலிருந்து பள்ளி மாணவ, மாணவிகள் இறங்கிக் கொண்டிருந்தனர்.
ஒருவர் இருவர் அல்ல, பலர்! சொல்லப் போனால் பேருந்து முழுவதுமே மாணவர்கள் தான் நிரம்பி இருந்தனர்.
அவர்கள் உடுத்தியிருந்த பள்ளி சீருடையைக் கண்ட ராகவர்தினி வியந்து போனாள்.
ஏனெனில் அவர்கள் பிரபஞ்சன் வேலை பார்க்கும் பள்ளி மாணவர்கள் உடுத்தும் சீருடை.
இவர்கள் இத்தனை பேர் ஏன் இங்கே வந்திருக்கிறார்கள் என்று அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அவர்கள் காவல் நிலைய வாயிலில் கூடினார்கள்.
முன்னால் நின்ற மாணவர்கள் அவர்களுக்குள் ஏதோ கலந்துரையாடிக் கொண்டிருக்க, பின்னால் வந்த ஒரு மாணவியை அழைத்தாள் ராகவர்தினி.
“நீங்க எல்லாம் ****** அந்த ஸ்கூல் ஸ்டூடண்ட் தானே? இங்கே எதுக்கு எல்லாரும் வந்திருக்கீங்க?” என்று விசாரித்தாள்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“எங்க கெமிஸ்ட்ரி சாரை போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டாங்க அக்கா. அவரை வெளியே விடச் சொல்லி போராட வந்திருக்கோம்…” என்றாள் அந்த மாணவி.
“கெமிஸ்ட்ரி சார்னா யார், பிரபஞ்சன் சாரா?” என்று கேட்க,
“ஆமாம் அக்கா, உங்களுக்கு அவரைத் தெரியுமா?” என்று கேட்டாள் மாணவி.
“அவர் என்னோட அத்தான்…” என்று ராகவர்தினி சொன்னதும்,
“அப்படியாக்கா?” என்று ஆச்சரியமாகக் கேட்ட மாணவி, “சார் ரொம்ப நல்லவர் அக்கா. எங்க எல்லாருக்கும் அவரை ரொம்பப் பிடிக்கும். அவர் மேல போய் யாரோ தவறா கேஸ் கொடுத்திருக்காங்க. நாங்களும் அவர்கிட்ட தானே அக்கா படிக்கிறோம். எங்களை எல்லாம் அவர் தவறாகக் கூடப் பார்த்தது இல்லை. அவர் மேல போய் இப்படி ஒரு கம்பளைண்ட் கொடுத்துருக்காங்க அக்கா. அதான் போராடி அவரை வெளியே கொண்டு வரப் போறோம்…” என்றாள் மாணவி.
“உங்க ஸ்கூல் பொண்ணு தான் அவர் மேல கம்பளைண்ட் கொடுத்தது. அந்தப் பொண்ணு யாருன்னு உனக்குத் தெரியுமா?” என்று கேட்டாள்.
“நான் ப்ளஸ் ஒன் படிக்கிறேன் கா. ப்ளஸ் டூ படிக்கிற பொண்ணு தான் கம்ளைண்ட் கொடுத்ததாகச் சொன்னாங்க. ஆனாலும் இன்னும் எனக்கு யாருன்னு தெரியலைக்கா. ப்ளஸ் டூ பொண்ணுங்ககிட்ட கேட்டால் தெரியும்…” என்றாள்.
“ப்ளஸ் டூ படிக்கிற பொண்ணுங்களும் வந்திருக்காங்களா?”
“ஆமாக்கா. கொஞ்ச பேர் வந்திருக்காங்க, மீதி பேர் பின்னால் அடுத்தப் பஸ்ஸில் வரப் போறாங்க. கொஞ்ச பேர் அவங்கவங்க சைக்கிளிலும் வந்துட்டு இருக்காங்க. ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிக்கிற எல்லாரும் சேர்ந்து தான் கா போராட்டம் பண்ணப் போறோம்…” என்றாள்.
“சரிம்மா, உனக்கு அந்தப் பொண்ணு யாருன்னு தெரிந்தால் என்கிட்ட வந்து சொல்றியா?” என்று கேட்டாள்.
“சரிக்கா…” என்று அந்த மாணவி சென்று விட,
“நீங்களே பார்த்தீங்களா சார். என் அத்தான் தவறாக நடந்து கொள்பவராக இருந்தால் அவருக்காக ஏன் இந்தப் பொண்ணுங்க எல்லாம் போராட வரப் போறாங்க?” என்று வழக்கறிஞரிடம் கேட்டாள்.
“உண்மை தான் மா…” என்று அவர் சொல்ல,
“இப்ப பிரபா மேல எனக்கு முழு நம்பிக்கையும் வந்திருச்சுமா ராகா…” என்றார் மாதவன்.
“போங்கப்பா, நீங்க கூடத் தவணை முறையில் தான் அத்தானை நம்பியிருக்கீங்க. அதுவும் அத்தையும், மாமாவும் சுத்தமா அவரை நம்பலை…” என்றாள் கோபமாக.
“என்னமா செய்வது? காலம் அப்படி இருக்கு. பிறந்த பச்சை குழந்தைகளைக் கூட விட்டு வைக்க மாட்டேங்கிறாங்க. சின்னப் பொண்ணுகளுக்கு நடக்கிற கொடுமைகளை எல்லாம் தினமும் பேப்பரில் பார்த்துட்டுத் தானே இருக்கோம். இப்ப நம்ம வீட்டிலேயே ஒரு பையன் மேல அப்படிப் புகார் வரவும் சட்டுன்னு அவனையும் குற்றவாளியாகத்தான் பார்க்க வேண்டியதாக இருக்கு…” என்றார் மாதவன்.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அடுத்தப் பேருந்திலிருந்தும் மாணவ, மாணவிகள் வந்து இறங்கி காவல்நிலைய வாசலில் குவிந்தார்கள்.
ஏற்கனவே வந்தவர்களிடம் என்னவென்று விசாரித்து அவர்களைப் போகச் சொல்லி போராடிக் கொண்டிருந்த காவல் துறையினர், இன்னும் கூட்டம் சேரவும் திண்டாடித்தான் போனார்கள்.
“வெளியே விடு… வெளியே விடு… எங்கள் பிரபஞ்சன் சாரை வெளியே விடு…” என்று மாணவர்கள் குரல் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
அவர்கள் குரலை கேட்டு உள்ளே இருந்த பிரபஞ்சன் வியந்து போனான்.
“என்ன மேடம் இது? இந்த வாத்தியார்கிட்ட படிக்கிற பிள்ளைங்க எல்லாம் சேர்ந்து போராட்டம் பண்ணிட்டு இருக்காங்க. போகச் சொன்னாலும் போக மாட்டேங்கிறாங்க…” என்று ஒரு பெண் கான்ஸ்டபிள், இன்ஸ்பெக்டரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
“அதான் நானும் யோசிச்சுட்டு இருக்கேன். இவங்க போராடும் அளவுக்கு இந்த வாத்தியார் அவ்வளவு நல்லவரா என்ன?” என்று கேட்ட இன்ஸ்பெக்டர் அங்கே இருந்த பிரபஞ்சனை ஆராய்ச்சியாகப் பார்த்தார்.
“இந்த வாத்தியாரும் நம்ம விசாரணையில் நான் எந்தத் தப்பும் செய்யலைன்னு சொன்னதைத் தவிர வேற பேசவே இல்லையே மேடம். அவர் போனிலிருந்து யாருக்கும் ஆபாச மெசேஜ் போன ஆதாரமும் இல்லை. போன் நம்பர் வழியாகவோ, வாட்ஸ்அப் வழியாகவோ போன் பேசிய ஹிஸ்ட்ரியும் இல்லை…” என்றார்.
“ம்ம், வாத்தியார் போனில் ஆதாரம் இல்லை. ஆனால் கம்பளைண்ட் கொடுத்த பொண்ணு போனில் வாட்ஸ்அப் வழியாகப் போட்டோ அனுப்பியதும், வாட்ஸ்அப் கால் செய்த ஆதாரமும் இருக்கே. ஒருவேளை வாத்தி அந்தப் பொண்ணுக்கு மெசேஜ், கால் செய்துட்டு அதை டெலிட் செய்திருக்கலாமே?” என்றார் இன்ஸ்பெக்டர்.
“இருக்கலாம் மேடம். ஆனாலும் இத்தனை ஸ்டூடெண்ட்ஸ் அவருக்கு ஆதரவா இருக்காங்கன்னா அதையும் யோசிக்கணும் மேடம். அதுவும் அவர்கிட்ட படிக்கிற பொண்ணுங்க எல்லாருமே வந்திருக்கிற மாதிரி இருக்கு. கம்பளைண்ட் கொடுத்த பொண்ணைத் தவிர…” என்றார் கான்ஸ்டபிள்.
“அப்படித்தான் தெரியுது. சரி, இங்கே கூட்டம் போட விடாம நீங்களும் சேர்ந்து அவங்களை இங்கிருந்து போகச் சொல்லுங்க…” என்றார் இன்ஸ்பெக்டர்.
“எஸ் மேடம்” என்ற கான்ஸ்டபிள் வெளியே சென்றார்.
அவர்கள் பேசியது பிரபஞ்சன் காதிலும் விழுந்தது. அவனின் மாணவர்கள் அவனுக்காகப் போராட வந்தது அவனின் மனதை நெகிழ வைத்தது.
ஏற்கனவே அவனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியிருந்தனர்.
ஒன்றுமே செய்யாத தவறுக்கு அவனும் தான் என்ன பதில் சொல்லியிருக்க முடியும்?
அவன் தான் எந்தத் தவறும் செய்யவில்லை. யாருக்கும் ஆபாசமான குறுந்தகவல் அனுப்பவில்லை, யாரிடமும் தவறாகப் பேசவில்லை என்று சொல்லி ஓய்ந்து போனான்.
ஆனால் அந்த மாணவி கைபேசியில் அதற்கான ஆதாரம் இருப்பதாகச் சொல்லி காவல்துறையினர் அவன் பேச்சை நம்பத் தயாராக இருக்கவில்லை.
தான் அனுப்பாமல் எப்படி இருக்க முடியும்? என்ற கேள்வி தான் அவனைக் குடைந்து கொண்டிருந்தது.
பள்ளியில் இருக்கும் போது தன் கைபேசியைத் தவறாகப் பயன்படுத்தியிருப்பார்களா? என்று யோசித்துப் பார்த்தான்.
வகுப்பறைக்குச் செல்லும் போது, ஆசிரியர் அறையில் இருக்கும் தன் மேஜை ட்ராயரில் தான் கைபேசியை வைத்து பூட்டி விட்டு செல்வான்.
பூட்டிய மேஜை ட்ராயரை எப்படித் திறந்து எடுத்து தவறாகப் பயன்படுத்தி இருக்க முடியும்? ஒருவேளை என்றாவது சரியாக மூடாமல் சென்று விட்டோமா என்ன? என்று பலவாறு யோசித்துப் பார்த்து விட்டான்.
ஆனால் விடை என்னவோ கிடைக்கவே இல்லை.
வழக்கறிஞரும் தன்னை நிரூபிக்க ஆதாரம் இல்லையென்றால் ஒன்றும் செய்ய முடியாது என்று தான் சொல்லி விட்டுச் சென்றிருந்தார்.
ஜெயிலில் இருந்து கொண்டு தன்னை எப்படி நிரூபிக்கப் போகிறோம்? என்று நினைக்கும் போதே அவனுக்கு மலைப்பாக இருந்தது.
இத்தனை குழப்பத்திலும் ராகவர்தினியும், மாதவன் மாமாவும் அவனுக்கு ஆதரவாக இருந்தது சற்று இதமாக உணர வைத்தது.
மாமாவிடம் சொல்லி எப்படித் தன் கைபேசியிலிருந்து, படமும், போன் காலும் சென்றது என்று விசாரிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் பிரபஞ்சன்.
அவன் சொல்வதற்கு முன்பே அதை விசாரிக்க ராகவர்தினி தயாராகி விட்டாள் என்று அவன் அறியவில்லை.
வெளியே காவல்துறையினர் எவ்வளவோ சொல்லியும் மாணவர்கள் யாரும் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்.
இன்று மற்ற மாணவிகளிடம் பள்ளியில் பிரபஞ்சனின் நடவடிக்கை எப்படி இருக்கும்? வேறு யாருக்கும் ஆபாச குறுந்தகவல் அனுப்புவானா? தவறாக நடக்க முயற்சி செய்வானா? என்று விசாரணை செய்வதாக இருந்தனர் காவல்துறையினர்.
ஆனால் அப்படி விசாரிக்கும் முன், அவர்கள் அனைவரும் இப்படிக் கூடி போராட்டம் செய்வதால் அது தடை பெற்றுப் போனது.
இவர்கள் இவ்வளவு பேர் சேர்ந்து போராடுவதே மற்ற மாணவிகளிடம் அவன் தவறாக நடக்க வாய்ப்பில்லை என்று காவல்துறையினருக்கு எடுத்துச் சொல்வதாக இருந்தது.
“இங்கே பாருங்க, உங்க கூடப் படிக்கிற பொண்ணுக்கிட்ட தான் உங்க வாத்தியார் தவறா நடந்திருக்கிறார். அந்தப் பொண்ணு தான் எங்ககிட்ட கம்பளைண்ட் கொடுத்திருக்கு. அப்படி இருக்கும் போது தவறு செய்த வாத்தியாருக்கு ஆதரவா நீங்க இங்கே போராட்டம் செய்வது சரியில்லை.
உங்களைச் சார்ந்த ஒரு பொண்ணுக்காக யோசிங்க. அந்தப் பொண்ணுக்கு நடந்தது நாளை உங்களுக்கும் நடந்தால் என்ன செய்ய முடியும்? இப்படிப்பட்ட வாத்தியாருங்களுக்கு எல்லாம் தண்டனை கிடைத்தால் தான் படிக்கிற பொண்ணுங்களைப் பாதுகாக்க முடியும். அதனால் இங்கே கூட்டம் போடாம கலைந்து போங்க…” என்று மாணவர்களிடம் பேசினார் இன்ஸ்பெக்டர்.
“எங்க யார்கிட்டயும் சார் அப்படி நடந்து கொள்ளவில்லை மேடம். நாங்க இத்தனை பேர் சொல்றோம் நம்ப மாட்டீங்களா? உங்ககிட்ட கம்பளைண்ட் செய்த பொண்ணு யாருன்னு சொல்லுங்க. நாங்களே அந்தப் பொண்ணு கிட்ட கேட்குறோம். அந்தப் பொண்ணு சொன்னது உண்மையா பொய்யான்னு தெரியாம இங்கே இருந்து போக மாட்டோம்…” என்றனர் மாணவிகள்.
“அந்தப் பொண்ணு தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. அதனால் அந்தப் பொண்ணு பெயரை வெளியே சொல்ல முடியாது…” என்று காவல் துறையினர் மறுக்க,
“அவங்க சொல்லலைனா என்ன? நம்ம கூட யார் யார் வரலைன்னு செக் பண்ணுங்க. அதை வச்சு கண்டுபிடிக்கலாம்…” என்று மாணவர்கள் முடிவு செய்ய, அதற்கு அவசியமே இல்லை என்பது போல்,
“நான் தான் கம்பளைண்ட் கொடுத்தேன். எனக்குப் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. பிரபஞ்சன் சார் என்கிட்ட தவறாக நடந்து கொண்டது உண்மை தான்…” என்று அப்போது தான் காரில் வந்து இறங்கிய பைரவி சொல்ல, மாணவ, மாணவிகள் அனைவரும் அவளை அதிர்ந்து போய்ப் பார்த்தனர்.
ஒரு ஓரமாக நின்றிருந்த மாதவனும், ராகவர்தினியும் ‘இவளா புகார் செய்தது?’ என்பது போல் அவளைப் பார்த்துக் கொண்டிருக்க,
மாணவர்களுடன் மாணவனாக நின்றிருந்த தீபக், பைரவியை நம்ப முடியாத பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.