8 – இன்னுயிராய் ஜனித்தாய்
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 8
துர்காவிற்கு என்ன நடந்தது என்றே சில நொடிகள் புரியவில்லை.
சூழ்நிலை உறைத்த போது வித்யாவின் கணவன் கையினால் சூழப்பட்டிருந்தாள்.
அவனின் ஒரு கை துர்காவின் வாயை பொத்தியிருக்க, இன்னொரு கையினால் அவளின் இடையை வளைத்திருந்தான்.
உயிரே போனது போல் துடித்துப் போனாள் துர்கா.
அவனிடமிருந்து திமிறி இடையில் இருந்த அவனின் கையை எடுத்துவிட்டவள், அடுத்து வாயை அடைத்திருந்த கையை எடுக்கப் போனாள்.
ஆனால் அவன் வலுவாகப் பிடித்திருக்க, அவனின் கையைச் சிறிதும் அகற்ற முடியவில்லை.
அவனின் இன்னொரு கையினால் அவளின் இரு கைகளையும் ஒரு சேரப் பிடித்துக் கொள்ள, அவனிடம் சிறைப்பட்ட நிலைக்கு ஆளானாள்.
“ம்ம்ம்… ம்ம்ம்…” என்று மூடிய வாயிற்குள்ளிருந்து தனது எதிர்ப்பை தெரிவித்தாள்.
“இதோ பார், கொஞ்ச நேரம் அமைதியா இருந்தால் எனக்கும் சுகம், உனக்கும் சுகம். அதை விட்டு ஏதாவது பண்ணலாம்னு நினைச்சன்னு வச்சுக்கோ நார் நாரா கிழிச்சிடுவேன்…” என்று கடிந்த குரலில் சொன்னான் வித்யாவின் கணவன்.
துர்கா திமிறி தன் கையை விடுவிக்க முயல அவளால் முடியவே இல்லை.
அவளின் கண்களில் இருந்து சரசரவென்று கண்ணீர் இறங்கியது.
“ஒரு பிள்ளை பெத்தப் பிறகும் உன் உடம்பு சும்மா தளதளன்னு தான் இருக்கு…” என்று அவன் அவளின் கழுத்தில் முகத்தைப் புதைக்க, கழுத்தை வேகமாக இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாகத் திருப்பி அவனைத் தடுக்க முயன்றாள்.
அதில் கோபம் கொண்டவன், “ஏய், ரொம்பத்தான் பத்தினி வேஷம் போடாதேடி. அந்த நித்திலன் பயலுக்கு மட்டும் தான் உன் உடம்பை கொடுப்பியோ? நானும் ஆம்பிளை தான். அவனை விட நல்லாவே உனக்குச் சுகத்தைத் தருவேன்…” என்று தன் வக்கிரத்தைக் கொட்டினான்.
நித்திலனுடன் தன்னை இணைத்துப் பேசவுமே அவளின் மனம் ஆடிப் போனது.
அவனின் முகத்தை அவன் தன் உடலில் உரச விட, அருவருத்துப் போனாள்.
“என்ன உடம்புடி உன் உடம்பு. ஹப்பா! ஆளை தூக்குது. அதுதான் அந்த நித்திலன் பைய உன்னை விடாம சுத்தி வர்றானா? அதுசரி, அவன்கிட்ட படுக்க நீ போவியா, இல்லை அவன் உன் வீட்டுக்கு வருவானா? எனக்கு என்னமோ நீ தான் அவன் வீட்டுக்குப் போவன்னு தோணுது. அவன் வீட்டில் தான் யாருமில்ல. எப்படி விடிய விடிய அவன் வீட்டில் கொண்டாட்டம் தானோ?” என்று வாய்க்கு வந்த படி அவன் அசிங்கமாகப் பேசிக் கொண்டே போக, துர்காவிற்குக் கூசிப் போனது.
கூடவே அவளின் கண்கள் அவனிடமிருந்து தப்பிக்கும் மார்க்கத்தையும் தேடிக் கொண்டிருந்தது.
அவனிடமிருந்து தன் கையை விடுவிக்க முடியாமல் தவித்தபடி, சிறிது சிறிதாக அந்தக் குளியலறைக்குள் நகர்ந்து கொண்டே வந்தாள்.
அங்கே இருந்த ஜன்னலில் ஒரு செங்கல் எப்போதும் இருக்கும். அந்தச் செங்கலும் ஜன்னல் சுவரில் இடம் பற்றாமல் வெளியே நீட்டிக் கொண்டிருந்தது.
அந்தப் பக்கமாக நகர்ந்தவள் சட்டென்று தன் தலையைப் பின்னாலிருந்து ஓங்கி அவன் தலையில் முட்டினாள்.
அவள் முட்டிய வேகத்தில் அவன் தலை பின்னால் இருந்த செங்கலில் பலமாக மோத, ‘ஆஆ…’ என்ற கத்தலுடன் அவனின் பிடி தளர்ந்தது.
அவனின் பின் தலையிலிருந்து பொலபொலவென்று ரத்தம் வர ஆரம்பிக்க, “திமிர் பிடிச்ச நாயே…” என்று கத்தியபடி தன் தலையைப் பிடித்துக் கொண்டே மடங்கி அமர்ந்தான்.
“நீ தான்டா நாய்…” என்று காறி அவன் முகத்தில் உமிழ்ந்து விட்டு, வேகமாகக் குளியலறை கதவைத் திறந்து வெளியே ஓடினாள்.
சரியாக அந்த நேரம் குளியலறை நோக்கி வந்து கொண்டிருந்த நித்திலனை கண்டாள்.
வேர்க்க விறுவிறுக்கப் குளியலறையிலிருந்து ஓடி வந்தவளைப் புரியாமல் பார்த்தான்.
“என்னாச்சுங்க, ஏன் இப்படி வர்றீங்க?” என்று கேட்டவனுக்குப் பதில் சொல்லும் நிலையில் அவள் இல்லை.
அதே நேரம் குளியலறைக்குள் இருந்து முனங்கல் சத்தம் கேட்க, கேள்வியாக அவளைப் பார்த்தவன், குளியலறை நோக்கி ஓடினான்.
உள்ளே பின்னந்தலையில் ரத்தம் வழிய கிடந்தவனைப் பார்த்து அதிர்ந்து போனான்.
“ஏய், அவ உனக்கு மட்டும் தான் முந்தானையை விரிப்பாளோ? பெரிய பத்தினி மாதிரி என் மண்டையை உடைச்சுட்டுப் போறா…” என்று நித்திலனைப் பார்த்ததும் ஆத்திரமாகக் கத்தினான் வித்யாவின் கணவன்.
நித்திலனுக்கு நிலைமையின் வீரியம் புரிந்த அதே நேரத்தில் சுறுசுறுவெனக் கோபம் பொங்கியது.
தன்னையும், துர்காவையும் இணைத்து தவறாகப் பேசியதுடன், அவளிடம் தவறாகவும் நடக்க முயன்றிருக்கிறான் என்ற கோபத்தில் அவனை நெருங்கி சட்டையைப் பற்றித் தூக்கியவன், ‘பளார், பளார்’ என்று இரு கன்னங்களிலும் மாறி மாறி அறைய ஆரம்பித்தான்.
“டேய், விடுடா…” என்று கத்த ஆரம்பித்தான் வித்யாவின் கணவன்.
“என்ன தைரியம் இருந்தா அவங்க மேல கை வைக்க நினைச்சுருப்ப? எங்களுக்குள் இருப்பது வெறும் நட்புடா. அதை அசிங்கப்படுத்துற…” என்று நித்திலன் அவனை நெய்யப் புடைத்து விட்டான்.
வேகமாகத் திரும்பி அங்கே வந்த துர்கா, “போதும், விடுங்க. கண்ட நாயை அடிச்சு நீங்க கறைப்பட்டுக்க வேண்டாம். நல்லா விடிய போகுது. இது வெளியே தெரிவதில் எனக்கு விரும்பமில்லை…” என்று துர்கா சொல்லவும் தான் அவனை விட்டான் நித்திலன்.
மண்டை உடைந்ததுடன், நித்திலன் அடித்ததிலும் காயப்பட்ட வித்யாவின் கணவன் அங்கேயே மடங்கி விழுந்து கிடக்க, நித்திலனும், துர்காவும் அவரவர் வீட்டை நோக்கி நடந்தனர்.
நித்திலனின் மனம் இன்னும் பதைப்பதைத்துக் கொண்டிருக்க, துர்காவிற்கோ இன்னும் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.
“இங்கே நடந்தது வெளியே தெரிய வேண்டாம்…” என்று அவன் முகம் பார்க்காமல் சொல்லிவிட்டு வேகமாகத் தன் வீட்டிற்குச் சென்றுவிட்டாள்.
அன்றைய நாள் எப்படியோ ஓடி மறுநாளும் ஆகியிருந்தது.
இன்னும் துர்காவின் மனம் ஆறவே இல்லை. எப்போதும் இல்லாமல் ஒருவன் தன்னிடம் தவறாக நடக்க முயன்றான் என்பதில் அவளின் உடலும் உள்ளமும் நடுங்கிப் போயிருந்தது.
அதிலும் நித்திலனையும் தன்னையும் இணைத்துப் பேசியதில் ஒடுங்கிப் போயிருந்தாள்.
சபரிநாதனிடம் விவரத்தை சொல்லியிருந்தாள். அவரும் ஆடிப் போயிருந்தார்.
அன்று வித்யாவின் கணவன் குளியலறையில் அடிப்பட்டுக் கிடந்து அவனாக எழுந்து வீட்டிற்குச் சென்றவன் மனைவியிடம் என்ன சொன்னானோ தெரியவில்லை.
கணவனுக்கு ஓடி ஓடி மருத்துவம் பார்த்தாள் வித்யா.
பக்கத்து வீடுகளில் விசாரித்தவர்களிடம் குளியலறையில் தெரியாமல் வழுக்கி விழுந்து விட்டதாக அனைவரிடமும் தெரிவித்திருந்தாள்.
துர்கா அனைத்தையும் கவனித்தபடி இறுகிப் போய் நடமாடிக் கொண்டிருந்தாள்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு துர்கா வேலைக்குப் போய் விட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்த போது அவளைத் திருமணம் செய்து கொள் என்று வழி மறித்துத் தொந்தரவு செய்த குணா வெகுநாட்களுக்குப் பிறகு வழி மறைத்தான்.
துர்காவிற்குச் சலிப்பாக இருந்தது.
“என்ன டீச்சர் இப்படிப் பண்ணிட்டீங்க? நான் கேட்டப் போதே என்னைக் கல்யாணம் பண்ணிக்க நீங்க சம்மதம் சொல்லியிருந்தால் இப்போ உங்களுக்கு இப்படி ஒரு கெட்டப் பெயர் வந்திருக்காதுல?
ஊர், உலகமே சொன்னாலும் நான் உங்களை நம்புறேன் டீச்சர். நீங்க அப்படிப்பட்டவங்க இல்லைன்னு எனக்குத் தெரியும்…” என்று அவன் இஷ்டத்திற்குப் பேசிக் கொண்டே செல்ல,
‘இவனுக்கு என்ன மூளை குழம்பி விட்டதா? எதுக்குச் சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் உளறிக் கொண்டிருக்கிறான்?’ என்பதாக அவனைப் பார்த்தாள்.
“என்ன டீச்சர் அப்படிப் பார்க்கிறீங்க? இருந்தாலும் நீங்க கொஞ்சம் கவனமா இருந்திருக்கணும் டீச்சர். இப்படியா உங்க பேரை கெடுத்துக்கிற போல உங்க பக்கத்து வீட்டுக்காரன் கூடப் பழகுவீங்க?” என்று கேட்டவனை முறைத்தாள்.
“என்ன உளறிட்டு இருக்க? என்ன பேசுறோம்னு புரிஞ்சித்தான் பேசுறியா?” என்று கோபத்துடன் கேட்டாள்.
“டீச்சர் எனக்கு ஒன்னும் தெரியாதுன்னு நினைச்சீங்க போல இருக்கு. எனக்கு எல்லா விஷயமும் தெரியும் டீச்சர்…” என்றவனைக் குழப்பத்துடன் பார்த்தாள் துர்கா.
“என்ன விஷயம்?” சிடுசிடுப்பாகக் கேட்டாள்.
அவளுக்கு அவனுடன் நின்று பேசுவதே பிடிக்காத நிலையில் அவன் வளவளத்துக் கொண்டே போவது எரிச்சலை தந்தது.
“அதுதான் டீச்சர், உங்க பக்கத்து வீட்டுக்காரனை நீங்க வச்சிருக்கீங்களாமே? அந்த விஷயத்தைத்தான் சொல்றேன்…” என்றவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள்.
“ஏய், என்ன உளர்ற?” ஆத்திரத்துடன் கேட்டாள்.
“நான் உளறலை டீச்சர். உங்க காம்பவுண்டுல இருக்குற வித்யாங்கிற பொம்பள தான் ஊர் பூரா உளறி வச்சிட்டு இருக்கு. அது மட்டுமில்ல… அந்தப் பொம்பளயோட புருஷனை பாத்ரூம்ல வச்சு கையைப் பிடிச்சு இழுத்தீங்களாம்.
அந்த ஆள் முடியாதுன்னு சொன்னதுக்குச் செங்கலை வச்சு அந்த ஆள் மண்டையை உடைச்சிட்டீங்களாம். அந்தப் பொம்பள ஊர் எல்லாம் சொல்லிக்கிட்டு சுத்திட்டு இருக்கு. ஆனா நீங்க கவலைப்படாதீங்க. அதை எல்லாம் நான் நம்பலை.
“இந்தக் கெட்டப் பெயர் எல்லாம் உங்களுக்குத் தேவையா டீச்சர்? நான் கேட்ட போதே நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதம் சொல்லிருக்கலாமே? எவ்வளவு ஆசையா கேட்டேன். உங்க குழந்தைக்கு அப்பாவா இருக்குறேன்னு எல்லாம் சொன்னேன்னே டீச்சர்.
ஆனா நீங்க காதிலேயே வாங்கிக்கலை. வாங்கியிருந்தால் இந்த நேரம் நாம புருஷன் பொண்டாட்டியா ஆகியிருப்போம். உங்களுக்கும் கெட்டப் பெயர் வந்திருக்காது…” என்று குணா பேசிக் கொண்டே போக, துர்காவிற்கோ தலையைச் சுற்றிக் கொண்டு வந்தது.
வித்யாவின் அபாண்டமான குற்றச்சாட்டு அவளை உயிருடன் கொல்வதைப் போல் இருக்க, குணாவை வெறித்துப் பார்த்தாள்.
“இப்பயும் கூட ஒன்னும் கெட்டுப் போகலை டீச்சர். நீங்க சரின்னு ஒரு வார்த்தை சொல்லுங்க. நாம இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாம். அந்தப் பொம்பள பேசியதை எல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க…” என்றான்.
எதிரே அவள் உயிருடன் இறந்து கொண்டிருக்கிறாள் என்பதைக் கூட உணராமல் அவளை அடைந்து விடும் ஆசையில் பேசிக் கொண்டிருந்தான் குணா.
வெளியே நல்லவன் போல் பேசிக் கொண்டிருந்தாலும் குணாவின் பார்வையில் நிச்சயம் கண்ணியம் என்பது மருந்துக்குக் கூட இல்லை.
குணாவின் பேச்சோ, பார்வையோ துர்காவின் மனதிலேயே ஏறவில்லை.
அவள் மனதில் வித்யா சுமத்திய குற்றச்சாட்டு மட்டுமே ஓடிக் கொண்டிருந்தது.
உள்ளுக்குள் உடைந்து கொண்டிருந்தவள் தொடர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருந்த குணாவின் பேச்சை காதில் வாங்காமல் மரத்துப் போன மனதுடன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
“டீச்சர், பதில் சொல்லிட்டுப் போங்க… என்னைக்கு நம்ம கல்யாணத்தை வச்சுக்கலாம்?” என்று குணா கேட்டது அவள் காதிலேயே விழவில்லை.
வித்யாவின் கணவன் தன்னிடம் தவறாக நடக்க முயன்றது வெளியே தெரிய வந்தால் தேவையில்லாமல் பிரச்சனைகள் வரலாம் என்று நினைத்தே அவ்விஷயம் வெளியே தெரிய வேண்டாம் என்று நினைத்தாள்.
அவள் சொல்லை நித்திலனும் காப்பாற்றியிருந்தான்.
ஆனால் தான் மறைத்ததையே திரித்து வித்யா மொத்த பழியையும் தன் மேல் போட்டதை நினைத்து அவளின் உள்ளம் ஆட்டம் கண்டு போனது.
மனம் முழுவதும் நிரம்பி வழிந்த வேதனையுடன் வீடு வந்து சேர்ந்தவள் வீட்டிற்குள் சென்று கதவை அடைத்ததும் அதன் மேலேயே சாய்ந்து மடங்கி அமர்ந்து குமுறி அழ ஆரம்பித்தாள்.
வீட்டிற்குள் நுழைந்ததும் கதறி அழ ஆரம்பித்த மகளைக் கண்டு பயந்து போனார் சபரிநாதன்.
குழந்தையோ உள்ளறையில் தூங்கிக் கொண்டிருந்தாள்.
“எம்மா துர்கா, என்னாச்சுமா? எதுக்கு அழற?” என்று கேட்ட தந்தைக்குப் பதில் சொல்லும் நிலையில் இல்லை துர்கா.
“வேலைக்குப் போன இடத்தில் எதுவும் பிரச்சனையாமா? இருக்காதே… அங்க எல்லாம் உன்கிட்ட நல்லா பழகுறவங்க தானே. வர்ற வழியில் யாரும் பிரச்சனை செய்தாங்களா?” என்ற எந்தக் கேள்விக்கும் அவளிடமிருந்து பதில் வரவில்லை.
அவளின் கணவன் இறந்த அன்று அவள் இந்த மாதிரி அழுதாள். அதன் பிறகு இப்போது தான்.
ஆனால் இப்போது இப்படிக் கதறும் அளவிற்கு என்ன நடந்திருக்கும் என்று ஒன்றும் புரியாமல் முழித்தார் சபரிநாதன்.
“துர்கா, எம்மாடி…” என்று தவித்துப் போனார் அந்தத் தந்தை.
துர்கா தலையை நிமிர்த்தித் தந்தையைப் பார்க்கவும் இல்லை, தன் அழுகையை நிறுத்தவும் இல்லை.
அதே நேரம் அவளின் கதறல் ஒலி பக்கத்து வீடு வரை கேட்க, அதைக் கேட்டுக் கொண்டிருந்த நித்திலனும் தவித்துப் போனான்.
கடந்த இரண்டு நாட்களாகச் சபரிநாதனுடனோ, துர்காவுடனோ நித்திலன் எந்தப் பேச்சும் வைத்துக் கொள்ளவில்லை.
வித்யாவின் கணவன் இருவரையும் இணைத்துப் பேசியதை கேட்டதில் இருந்து அவனும் உடைந்து போயிருந்தான்.
தன்னால் தான் துர்காவிற்குக் கெட்டப் பெயர் வருகிறது என்று நினைத்தவன் ஒதுங்கிக் கொள்ள நினைத்தான்.
அவனுக்கு அது கஷ்டமாகவும் இல்லை. ஆனால் குழந்தை வருணாவை பார்க்காமல் இருப்பது தான் நரக வேதனையாக இருந்தது.
அந்த வேதனையையும் தான் தாங்கித்தான் ஆகவேண்டும் என்று பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துப் போனான்.
இப்போது துர்கா எதற்கு அழுது கொண்டிருக்கிறாள் என்று புரியாமல் தவிப்புடன் அங்கிருந்து எதுவும் பேச்சுச் சப்தம் வருகிறதா என்று கவனித்தான்.
“துர்கா, என்னன்னு சொல்லுமா. அப்பாவுக்குப் பயமா இருக்கு…” என்று தந்தை கேட்கவும், நடுங்கிய உதடுகளைப் பற்களால் அழுத்தி அழுகையைக் கட்டுப்படுத்தி விட்டு, அவரை நிமிர்ந்து பார்த்தாள்.
“நான் என்னப்பா தப்புச் செய்தேன்? நான் உண்டு என் வேலை உண்டுன்னு தானே இருக்கேன். அப்புறமும் ஏன்பா என்னைக் கழுகு போலக் கொத்தி கொத்தி திங்கிறாங்க?
மண்ணோட மண்ணா மக்கிப் போற இந்தச் சதை பிண்டம் மட்டும் தான் எல்லா ஆம்பிளைங்க கண்ணுக்கும் தெரியுமாபா? இந்தச் சதைக்குள் புதைந்து கிடக்கும் என் மனசு யாருக்குமே புரியாதாப்பா?” என்று ஆதங்கமும், ஏக்கமும், கோபமுமாக, அழுகையுமாகக் கேட்டாள் துர்கா.
“ஏன்மா இப்படி எல்லாம் பேசுற? திரும்ப யாராவது?” என்று மேலும் கேட்க முடியாமல் நடுங்கிப் போனார் சபரிநாதன்.
அவரிடம் குணா மூலமாகத் தான் அறிந்து கொண்டதை அப்படியே கொட்டினாள்.
அதைக் கேட்டவர் அதிர்ந்து போனார்.
‘இப்படியும் ஒரு பொம்பளையா?’ என்று வித்யாவை உள்ளுக்குள் சபித்துக் கொண்டார்.
அதே நேரம் அவள் சொன்னதைக் கேட்ட நித்திலனின் முகம் இறுகிப் போனது.
‘என்ன பெண் அவள்? கணவன் செய்த தவறை விட்டுவிட்டு, துர்காவையே பலிகெடா ஆக்கிவிட்டாளே’ என்று ஆத்திரத்துடன் கையை மடக்கிச் சுவற்றில் கோபத்துடன் ஒரு குத்து விட்டான்.
ஏனோ துர்காவிற்கு ஆறுதல் சொல்ல வேண்டும் போல் மனம் தவித்தது. அதைச் செய்ய முடியாது என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் மனம் திண்டாடியது.
நிலையில்லாமல் தவித்தபடி துர்காவின் அழுகை குரலைக் கேட்டுக் கொண்டிருந்தான் நித்திலன்.
“ஏன்பா என்மேல சேற்றை வாறி இறைக்கிறாங்க? என்னால முடியலைபா. ரொம்ப வலியா இருக்கு. இவங்க தான் இப்படினா, அந்தக் குணா ரொம்ப உத்தமன் போல எனக்கு வாழ்க்கை தர்றேன்னு சொல்றான்பா.
நான் என்ன அவன்கிட்ட வாழ்க்கைப் பிச்சையா கேட்டேன்? என் பிள்ளைக்கு அவன் அப்பாவா இருப்பானாம். அதைச் சொல்ல கூட அவனுக்குத் தகுதி இல்லைப்பா. அவன் கண் முழுவதும் அவ்வளவு வக்கிரம்பா. ரோட்டில் நடந்து போனா என் பிள்ளையைக் கூடத் தப்பா பார்க்க மாட்டான்னு நிச்சயம் இல்லப்பா.
அந்த மாதிரி வக்கிரத்தோட என்கிட்ட வந்து பேசுறான்பா. ஆனா அவனை ஒன்னும் செய்ய முடியாம நான் ஓடி வர வேண்டியதா இருக்குப்பா. வாழ்க்கை முழுக்க ஓடி ஓடியே ஓய்ந்து போயிடுவேனோ?” என்று பரிதாபமாகக் கேட்டுக் கொண்டிருந்த துர்காவின் குரலில் நித்திலன் மனம் உருகியது.
அவளுக்கும் தான் எத்தனை தொந்தரவுகள்? அவளால் நட்பாகக் கூட என்னிடம் பழக முடியாதவாறு செய்து விட்டார்களே? என்று அவளுக்காக வருத்தப்பட்டான்.
அதே நேரம் குணாவின் மீதும் அவனுக்குக் கோபம் வந்தது.
வருணாவிற்கு அவனைப் போல் ஒருவன் தகப்பனா? நினைக்கும் போதே அருவருப்பாக இருந்தது.
துர்காவிற்கு அவள் வேதனையிலிருந்து விடுதலை அளிக்க வேண்டும் போல் மனம் பரபரத்தது. ஆனால் அதைச் செய்ய முடியாத தன் நிலை பூதாகரமாக எழுந்து நின்று அவனை மிரட்டியது.
தன் யோசனை சென்ற திசையை நினைத்து மிரண்டவன், சட்டென்று தன் தலையைக் குலுக்கி, “மடையா! நீ அதுக்கு அருகதை இல்லாதவன்டா…” என்று பளிச்சென்று தன் கன்னத்தில் ஆத்திரத்துடன் தானே அறைந்து கொண்டான் நித்திலன்.