6 – ஞாபகம் முழுவதும் நீயே
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம்– 6
வினய்யின் முதுகலைப் படிப்பு முடிய இன்னும் ஒரு வருடம் இருந்த நிலையில் அம்பிகா ஒரு நாள் தனியாகக் காரில் சென்றிருந்த போது விபத்து ஏற்பட உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்.
செய்தி அறிந்து அவசர அவசரமாகக் கிளம்பி வந்தான் வினய். அப்படி அவன் வந்து சேரவே மூன்று நாட்கள் ஆகின.
வந்தவன் பார்த்தது மரணத் தருவாயில் இருந்த தாயையும், மனைவியின் நிலை கண்டு துடித்துச் சுருண்டு போய் அமர்ந்திருந்த தந்தையையுமே.
மருத்துவமனையில் நுழைந்த வினய் “அம்மாவுக்கு என்னப்பா ஆச்சு? இப்ப எப்படி இருக்காங்க?” என்று கலங்கி விசாரித்தான்.
மனைவி அடிப்பட்ட இந்த மூன்று நாட்களில் தன் வேதனையை முழுவதும் தனக்குள் போட்டு புதைத்து, மகன் வரும் முன் தனியாகத் தவித்திருந்த ரங்கநாதன் அவன் வந்ததும் தன் தவிப்பை எல்லாம் கொட்டினார்.
“ஒரு தண்ணி லாரிகாரன் அம்மா போன காரில் மோதிட்டான். நம்ம வீட்டு ட்ரைவர் அங்கேயே இறந்துட்டான். அம்மா…அம்மா மட்டும் இப்பவோ, அப்பவோனு இருக்கா” எனப் பேச முடியாமல் திக்கி திணறிச் சொல்லிய ரங்கநாதன் கண்கள் கலங்கியிருந்தது.
ஆயிரம் உறவுகள் நலம் விசாரிக்க வந்தாலும் தன் நெருங்கிய உறவிடம் மட்டும் தானே உரிமையாகத் தன் கலக்கத்தைக் காட்டி கொள்ள முடியும்? மகனைப் பார்த்ததுமே அவரின் கண்கள் உடைப்பெடுத்தன.
கண் கலங்க தந்தை சொன்ன செய்தியில் முகம் இறுகிப் போனான் வினய். தன் கைகளை இறுக மூடியவன் கண்கள் கலங்கிச் சிவக்க ஆரம்பித்தது.
தந்தையைத் தேற்ற கூட முடியாமல் தனக்குள் இறுகிப் போனான். அன்னையின் நிலை அவனை உள்ளுக்குள் உடைத்துக் கொண்டிருந்தது.
அடுத்து அன்னையின் நிலை பற்றி மருத்துவரிடம் விசாரிக்கச் சென்றவன் மேலும் இறுகிப் போய்த் தான் வெளியே வந்தான்.
அவர் சொன்ன விஷயங்கள் காதுக்குள் சுழன்று வந்து அவன் மனதை சுருட்டிப் போட்டுக் கொண்டிருந்தது.
“ஸாரி மிஸ்டர்.வினய். உங்க அம்மா பைனல் ஸ்டேஜ்ல இருக்காங்க. நாங்களும் இந்த மூனு நாளா போராடி பார்த்துட்டோம். நோ யூஸ். ஏன்னா அவங்களுக்கு விபத்து நடந்தப்ப தலையில் அடிப்பட்டு நிறைய ரத்தம் போயிருக்கு. அதுவும் விபத்து நடந்து ரொம்ப நேரத்திற்குப் பிறகு தான் ஹாஸ்பிட்டலுக்கே கொண்டு வந்தாங்க.
அடிப்பட்டவர்களுக்கு உதவி செய்தா எங்க நம்ம அலைய வேண்டியிருக்குமோன்னு யாரும் சட்டுனு உதவி வராத ஊராச்சே. என்ன பண்றது? லேட்டானதால நிறைய ரத்தம் போய் இப்ப கோமால இருக்காங்க. ஆனா அவங்க கண் முழிக்கச் சான்ஸ் ரொம்ப ரொம்பக் கம்மி. மனசை தேத்திக்கோங்க வினய்” என்று சொன்ன மருத்துவரின் வார்த்தையில் உள்ளுக்குள் சுக்கு நூறாக உடைந்து போயிருந்தான்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
அம்பிகாவை அவனுக்கு மிக மிகப் பிடிக்கும். அவர் இப்போது இல்லாமல் போகப் போகிறார் என்பதை அவனால் தாங்கவே முடியவில்லை. மருத்துவரின் அனுமதி பெற்று அன்னையைச் சென்று பார்த்தான். மகனைப் பிரிய மனமில்லாமல் வெளிநாடு செல்லவே வேண்டாம் என்றவர் இப்போது மொத்தமாகப் பிரிந்து போய்க் கொண்டிருந்தார்.
போன முறை தான் ஊருக்கு வந்த பொழுது கூடத் தன்னை உச்சி முகர்ந்து வரவேற்றவர், இப்போது கண் திறந்து தன்னைப் பார்க்க கூட முடியாத நிலையில் இருக்கிறாரே என்று நினைத்தவனுக்குக் கதறி அழ தோன்றியது.
தனிமையில் அழவும் செய்தான். மகனைத் தேற்ற தான் தாயார் இல்லாமல் போனார். கோமா நிலையில் இருந்தவர் மகன் ஊர் வந்து சேர்ந்த இரண்டாம் நாள் உணர்வுக்கு வராமலேயே இறுதி பயணத்தை அடைந்தார்.
அந்த இரண்டு நாட்களும் அவர் எப்படியாவது பிழைத்து விட மாட்டாரா என்ற கணவன், மகன் ஆசையை நிராசையாக்கி அம்பிகா விண்ணுலகம் அடைய, ரங்கநாதனும், வினய்யும் நொறுங்கிப் போனார்கள்.
அம்பிகாவின் இழப்பில் இருந்து அவர்கள் மீண்டு வர பல நாட்கள் ஆனது. வீட்டின் தலைவி இல்லாமல் நாட்கள் ஏனோ தானோ சென்று கொண்டிருந்த ஒரு நாளில் தன் தந்தையிடம் வந்த வினய் “அப்பா நான் ஊருக்கு கிளம்பலாம்னு இருக்கேன்” என்று சுத்தி வளைக்காமல் பேச்சை ஆரம்பித்தான்.
மனைவியின் இழப்பில் இப்போது தான் மெல்ல மீண்டு வர முயன்று கொண்டிருந்தார்.
ஏதோ பழைய யோசனையில் அமர்ந்திருந்த ரங்கநாதனுக்கு முதலில் மகன் சொன்னதே மனதில் ஏறவில்லை. வினய்யைப் புரியாமல் பார்க்க… தந்தையின் பாவனையில் அவரை இரக்கத்துடன் பார்த்தவன் அவரின் அருகில் அமர்ந்து அவரின் ஒரு கையைப் பிடித்து “சாரிப்பா! அம்மா போனதை என்னாலயும் தாங்க முடியலை. ஆனா எனக்கு இன்னும் ஒரு வருஷம் படிப்பு இருக்கே?
எனக்கு அவங்க கொடுத்த லீவும் முடிய போகுது. அதான் நான் கிளம்பணும். ஆனா அதுக்கு முன்ன உங்களுக்கு விசா எடுக்க அப்ளே பண்ணனும். இனி நீங்களும் இங்க இருக்க வேண்டாம். நம்ம பேக்டரியை கை மாத்தி விட்டுட்டு நீங்களும் அங்கே என் கூட வந்துருங்க.
நான் இப்பயே பார்ட் டைம் ஜாப் பார்க்கிறேன். நீங்க வந்துட்டா இங்க கம்பெனி வித்த காசை வச்சு அங்கே நாமே தொழில் தொடங்கலாம். அது எல்லாம் செய்ய இன்னும் நாள் ஆகும் தான். ஆனா எப்படியும் செய்தே தான் ஆகணும்.
இங்க கம்பெனி விற்க ஏற்பாடு நடக்கும் போது நான் அங்க போய் நீங்களும் வந்து தங்குற மாதிரி வீடு ஏற்பாடு பண்ணி வைக்கிறேன். அதோட பிசினஸ் ஆரம்பிக்கவும் ஏற்பாடு பண்ணிறலாம்” என்று திட்டமிட்ட வினய்யை புதிதாகப் பார்ப்பது போல் பார்த்தார் ரங்கநாதன்.
“என்ன வினய் சொல்ற? நீ படிக்கக் கிளம்பணும்னா கிளம்பு. என்னை ஏன் கூப்பிடுற?” என்று புரியாமல் கேட்டார்.
“இனி நீங்க இங்க தனியா இருந்து என்ன செய்யப் போறீங்கப்பா?” என்று வினய் கேட்க… ரங்கநாதனுக்கு ‘மகன் என்ன பேசுகிறான்?’ என்று தான் தோன்றியது.
“என்ன தம்பி… நீ என்ன நினைச்சுக்கிட்டு இப்படிக் கேட்குறனு புரியல. இங்க எனக்கு உங்க அம்மா இல்லாம வெறுமை தான். ஆனா நான் ஆசை ஆசையா அங்குலம் அங்குலமா செதுக்கி உருவாக்கினது நம்ம கம்பெனி. கம்பெனியும், அதில் வேலை பார்க்கிற மக்களும் இருக்கிற வரை எனக்குத் தனிமை இல்லை.
நீ உன் படிப்பை முடிச்சுட்டு வந்து நம்ம கம்பெனியை என்னைவிட இன்னும் உயர்ந்த நிலைக்குக் கொண்டு போவன்னு கனவு கண்டுட்டு இருக்கேன். நீ என்னனா சர்வ சாதாரணமா கை மாத்தி விடு. அங்கே போய்க் கம்பெனி ஆரம்பிப்போம்னு சொல்ற?” என்று அழுத்தமாகக் கேட்டார்.
“என்ன கனவு கண்டுகிட்டு இருக்கீங்களா? நீங்க காண்கிறது வெறும் கனவா மட்டும் தான்ப்பா போகும். நான் இனி இந்த ஊரில் செட்டில் ஆகுறதா இல்லை. நான் படிப்பை முடிச்சுட்டு யூஎஸ்லேயே செட்டில் ஆகலாம்னு இருக்கேன்பா. இந்த விஷயத்தை நான் என் படிப்பு முடிஞ்சதும் சொல்லி அம்மாவையும், உங்களையும் அழைச்சிட்டு போயிறணும்னு நினைச்சேன்.
ஆனா அம்மாவை தான் கொஞ்சம் கூட இரக்கம் காட்டாத இந்த ஊரில் பறி கொடுத்துட்டு உட்கார்ந்து இருக்கோம். இப்ப நீங்களாவது எனக்கு வேணும்னு நினைக்கிறேன். அதனால நீங்க அங்க வந்து என் பக்கத்தில் இருங்க. அதான் எனக்கு நிம்மதி” என்றான்.
மகன் தன் மேல் காட்டும் அக்கறையில் மனம் நெகிழ்ந்தவர் “என்ன வினய் செய்றது? உங்க அம்மா விதி முடியணும்னு இருக்கு முடிஞ்சிருச்சு. ஆனா நான் இங்க இருந்தா எனக்கு என்ன ஆகப் போகுது? போற உசுரு எங்க இருந்தாலும் போகத் தான் செய்யும்? நீ தேவையில்லாம மனசை போட்டு குழப்பிக்காம போய்ப் படிப்பை முடிச்சுட்டு வா! அப்பா இங்க பத்திரமா இருப்பேன். என்னைப் பத்தி கவலைப் படாதே!” என்றார்.
அவரின் பதிலில் மெல்லிய கோபம் எழ “அப்பா நான் சொன்னது உங்களுக்குப் புரிஞ்சுதா? இல்லையா? எனக்கு இந்த ஊர் வேண்டாம். இனி இங்கே இருக்க வேண்டாம்ன்னு உறுதியா சொல்றேன். நீங்க என்னன்னா…. படிப்பை முடிச்சுட்டு வர சொல்றீங்க? நான் குழம்ப எல்லாம் இல்லை ரொம்பத் தெளிவா தான் இருக்கேன். நீங்க முதலில் நான் சொன்ன ஏற்பாட்டைச் செய்ய ஆரம்பிங்க.
இது எல்லாம் கொஞ்சம் கூட இரக்கம் இல்லாத ஊரு. ஒருத்தருக்கு அடிப்பட்டா உதவி செய்யணும்னு நினைக்காம, தங்களுக்குப் பிரச்சனை வந்துருமோன்னு பயந்து ஓடுற கூட்டம் எல்லாம். ரோட்டுல வண்டி ஓட்டுறவன் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் ஃப்லோ பண்ணாம கண்ட மாதிரி வண்டி ஓட்டி ஆளையே கொல்ற கூட்டம்ன்னு அது ஒருபக்கம். இந்த மாதிரி ஊர்ல நீங்க இன்னும் இருக்கணும்னு ஆசை படுறீங்களா?” என்று கோபத்துடன், தன் தாயின் இழப்பினால் ஏற்பட்ட பாதிப்புடன் கேட்டான்.
அவன் வருத்தம் புரிந்தாலும், இவனை இப்படியே விட்டால் சரி வராதே என்று நினைத்தவர் “உங்க அம்மாவை சீக்கிரம் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகாத வருத்தம் எனக்கும் இருக்கு வினய். அதுக்காக இந்த ஊரே வேண்டாம்னு இந்த ஊரை விட்டு ஓடவா முடியும்?” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவரைத் தடுத்து எதுவோ வினய் சொல்லவர “இரு… நான் சொல்லி முடிச்சுறேன். உனக்கு வெளிநாட்டில் செட்டில் ஆகுற ஆசையிருக்குனு புரியுது. ஆனா அதுக்காக இப்பயே நானும் எல்லாத்தையும் விட்டுட்டு வரணும்னா கஷ்டம்.
இப்போ நீ போ… நல்லபடியா படிச்சு முடி. நான் இங்கே பார்த்துக்கிறேன். நீ சொன்னது போலக் கம்பெனியை விக்கணும்னாலும் அதுக்கு நல்ல ஆளை தேடி தான் விற்க முடியும். நான் பார்த்துப் பார்த்து உருவாக்கின கம்பெனி அதை யார்கிட்டயோ ஏனோ தானோன்னு என்னால தூக்கி கொடுக்க முடியாது. நல்லா பார்த்துகிற ஆளு கிடைக்க டைம் வேணும். அதுனால நீ கிளம்பு. உன்னோட படிப்பு முடியுறப்ப நான் இங்க எல்லாம் முடிச்சு வைக்கிறேன்” என்று அவனைச் சமாளித்தார்.
ஆம்! அவர் சமாளிக்க மட்டும் தான் செய்தார். அவருக்குச் சிறிதும் தன் கம்பெனியையும், தன் சொந்த நாட்டை விட்டும் செல்ல சிறிதும் விருப்பம் இல்லை. வினய் இப்போது ஏதோ வருத்தத்தில் இப்படி முடிவெடுக்குறான். நாட்கள் சென்ற பிறகு அவன் மனம் மாறும். அப்போது அவனைச் சுலபமாகத் தன் வழிக்குக் கொண்டு வந்து விடலாம் என்று நினைத்தார்.
ஆனால் அவரின் மகனை அவ்வளவு சுலபமாக மனதை மாற்ற வைக்க முடியாது என்று அவர் சிறிதும் அறியவில்லை.
***
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
ரங்கநாதன் சொன்னது வினய்க்கு சரி என்று தோன்றியதால் அப்போதைக்குச் சமாதானம் ஆனவன் படிப்பை தொடர மீண்டும் அமெரிக்காவிற்குச் சென்று விட்டான்.
நாட்கள் ஓடின. வினய் ஊருக்கு சென்று ஒன்பது மாதம் ஆன நிலையில் இங்கே சென்னையில் உள்ள அவரின் கம்பெனி அலுவலகத்தில் சிறிது பதட்டமாக இருந்தார் ரங்கநாதன்.
அன்று காலை வினய் போனில் பேசிய விஷயம் தான் அவரை அப்படி ஆக்கியிருந்தது.
வினய் கேட்டது கம்பெனியை விற்பதை பற்றித்தான். தந்தை சொன்னபடி விற்க ஏற்பாடு செய்து விட்டாரா? தன்னுடன் இருக்க எப்போது வருகிறார்? என்று கேட்டவனுக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறிப் போனார்.
அவர் தான் மகனை மாற்றி விடலாம் என்ற நம்பிக்கையில் வழக்கமான தன் வேலையில் கவனமாக இருந்து, இன்னும் கம்பெனியை பெரிய அளவிற்குக் கொண்டு வரும் பொருட்டு, பெரிய ஆடர்கள் சில கையெழுத்திட்டிந்தாரே.
அதைச் சொன்னால் எங்கே படிப்பில் கவனம் செலுத்தாமல் டென்சன் ஆவானோ என்று அமைதியாக இருந்தார்.
முதலில் மகன் படிப்பை நல்ல படியாக முடிக்கட்டும். அப்புறம் எல்லாம் தெளிவாகப் பேசிக் கொள்ளலாம் என்று நினைத்தார்.
அப்படியும் சரி பட்டு வரவில்லை என்றால் ஏதாவது செய்து அவனை இங்கே வர வைத்துவிட வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தார்.
ஆனால் இருக்கும் இன்னும் மூன்று மாதத்தில் அவனை எப்படி இங்கேயே வர வைக்க முடியும் என்று யோசித்து வைக்கக் வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தவரின் கண்ணில் பட்டவள் தான் பவ்யா.
பவ்யா முதலில் ரங்கநாதன் கம்பெனியில் தான் அக்கொண்ட் பிரிவில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அந்தச் சமயத்தில் தான் ஒருநாள் ரங்கநாதன் காதில் பவ்யாவும், அவளின் தோழி யமுனாவும் பேசிக் கொண்டது விழுந்தது.
“ஹேய் யமுனா! நேத்து உன்னைப் பொண்ணு பார்க்க வர்றதா சொன்னியே என்னாச்சு?” என்று விசாரித்த பவ்யாவை பார்த்து அழகாகச் சிரித்த யமுனா “எல்லாம் ஒகே பவ்யா. இன்னும் ஒரு மாதத்தில் கல்யாணம் பிக்ஸ் பண்ணிருக்காங்க” என்றாள்.
“வாவ்…! சூப்பர் யமுனா! கன்கிராஸ்! ஆனா சீக்கிரமே கல்யாணம் வச்சுட்டாங்க. அவ்வளவு சீக்கிரம் எல்லா ஏற்பாடும் பண்ணிற முடியுமாப்பா?” என்று கேட்டாள். ஏனெனின் யமுனாவின் குடும்பம் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தது தான் என்பதால் ஒரு மாதத்தில் அனைத்தும் ஏற்பாடு பண்ணமுடியுமா என்ற அக்கறையில் கேட்டாள்.
பவ்யாவின் அக்கறை புரிந்த யமுனா மென்மையாகச் சிரித்து “முடியணும்பா. வேற வழி இல்லை. அப்பா எல்லா ஏற்பாடும் எப்படியும் பண்ணிருவேன்னு சொல்லிருக்கார். ஏன்னா மாப்பிள்ளை யூஎஸ்ல வேலை பார்க்கிறார். அவருக்கு அந்த நாள்ல தான் லீவ் கிடைச்சது. அதுக்குள்ள கல்யாணத்தை முடிச்சுட்டு எனக்கும் விசா எடுக்கணும் அப்ப தான் நானும் போக முடியும்” என்று காரணத்தை விளக்கினாள்.
“ஓ…! மாப்பிள்ளை வெளிநாட்டில் இருக்காரா யமுனா?” என்று சுரத்தையே இல்லாமல் கேட்டாள் பவ்யா.
“ஹேய்…! என்ன பவ்யா ஆச்சு? இவ்வளவு நேரம் நான் சொன்னதெல்லாம் ஆர்வமா கேட்டுட்டு இருந்த… இப்ப மாப்பிள்ளை யூஎஸ்ன்னு சொன்னதும் உன் முகம் சுருங்கிருச்சு? ஏன்ப்பா நான் அவ்வளவு தூரம் போறேன்னு கவலைப்படுறியா?” என்று கேட்டாள்.
“ம்ம்… அதுவும் தான்!” என்ற பவ்யா எதுவோ சொல்ல வந்தவள் பின்பு வேண்டாம் என்று முடிவு செய்து தன் முகத்தை மலர்ச்சியாக மாற்றிக் கொண்டு “நாம இந்தக் கம்பெனியில் தான் பழகினோம். ஒரு வருஷம் தான் நாம பழகியிருந்தாலும் நமக்குள்ள நல்ல நட்பு வந்துருச்சு. இனி நீ யூஎஸ் போய்ட்டா உன்னைப் பார்க்க முடியாதுல அதான். வேற ஒன்னும் இல்லை” என்று சமாளித்தாள்.
பவ்யா சொன்னதில் உண்மை இருந்தாலும் அவளுக்குத் தோழி அமெரிக்கா செல்வதில் விருப்பம் இல்லை. ஆனால் தன் விருப்பு வெறுப்பை அவள் மேல் திணிக்க முடியாதே? அதனால் தான் பேச்சை மாற்றினாள்.
கல்யாண கனவில் இருப்பவளிடம் போய்த் தன் எண்ணத்தைச் சொல்லி அவளைக் குழப்ப வேண்டாம் என்று நினைத்தாள்.
பவ்யா பிரிவை நினைத்து வருந்தவும் தானும் வருந்திய யமுனா “ஆமாப்பா எனக்கும் கஷ்டமா தான் இருக்கு. பேசாம நீயும் ஒரு அமெரிக்க மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிக்கோ. நாம ஒரே ஊரில் இருக்கலாம்” என்று ஏதோ ஐடியா கண்டு பிடித்தவள் போலச் சந்தோஷமாக யமுனா சொன்னதுக்கு மாறாக,
பவ்யாவின் முகம் பயத்தினால் வெளுத்துப் போனது. ஆனால் அதை உடனே மறைத்தவள் “இல்ல யமுனா… அது எல்லாம் எனக்குச் செட் ஆகாது. எனக்கு இங்கே தான் பிடிச்சிருக்கு. இனி என்ன நடந்தாலும் என் வாழ்க்கை இனி இங்கே தான். சரி அதெல்லாம் இருக்கட்டும் பிரேக் முடிஞ்சிருச்சு. நான் போய் வேலையைப் பார்க்கிறேன்” என்று அதற்கு மேலும் அந்தப் பேச்சை தொடர விரும்பாமல் அங்கிருந்து நகர்ந்தவள்
‘வெளிநாடா…? நானா…? போக மாட்டேன். போகவே மாட்டேன்?’ என்று மெல்லிய குரலில் முணுமுணுத்த படியே ரங்கநாதன் எதிரே அவளைக் கடந்து செல்வதைக் கூடக் கண்டு கொள்ளாமல் தன் இடத்தில் சென்று அமர்ந்தாள்.
ரங்கநாதன் தன் கேபினில் இருந்து வேறொரு வேலையாக வெளியே வந்தவர் காதில் தோழிகளின் பேச்சும், பவ்யாவின் முணுமுணுப்பும் விழ, அனைத்தையும் கேட்டுக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தார்.
அடுத்து வந்த ஒரு மாதத்தில் பவ்யாவின் மாமா வீட்டில் இருந்தார் ரங்கநாதன்.
இந்த ஒரு மாதத்தில் பவ்யாவை பற்றிய அனைத்து தகவல்களையும் சேகரித்து விட்டார்.
பவ்யாவிற்குத் தாய், தந்தை இப்போது இல்லை. அதனால் தாய் மாமா அமுதவனின் வீட்டில் தான் தற்போது இருந்தாள்.
தாய், தந்தையை இழந்து வந்தவளை அத்தை கனகதாராவும் அரவணைத்துக் கொண்டார் என்பதால் பவ்யாவிற்கு அந்த வீட்டில் எந்தவித குறையும் இல்லை.
தாய் மாமா மகள் மைத்ரி பவ்யாவை விட இரண்டு வயது இளையவளாக இருந்தாள். பவ்யாவிற்கு உற்ற தோழி போல இருப்பவள் அப்போது கல்லூரி இறுதி ஆண்டில் இருந்தாள்
பவ்யா இளங்கலை மட்டும் முடித்து விட்டு வேலையில் இருந்தாள். இத்தனை விஷயத்தை விட இன்னும் ஒரு விஷயத்தை நன்றாக அறிந்து வைத்திருந்தார் ரங்கநாதன். பவ்யா வெளிநாட்டு வாழ்வை அடியோடு வெறுப்பவள் என்று தான்.
ஆம்! பவ்யாவிற்கு வெளிநாட்டு வாழ்க்கையின் மீது தீராத வெறுப்பும், அதன் காரணமும் அவருக்குத் தெரிய வர அவள் தான் தன் மருமகள் என்று முடிவே செய்து விட்டார்.
இந்த முடிவுக்கு வர அவரின் முக்கியக் காரணம் வினய்யின் அன்பு மனது. ஆம்…! ஒருவரை அவனுக்குப் பிடித்துவிட்டால் அவரின் மீது அபரிமிதமான அன்பைச் செலுத்துவான்.
அவனுக்குத் திருமணம் முடித்து வைத்து பவ்யாவை அவனுக்குப் பிடிக்கும் போது, அவள் வெளிநாட்டு வாழ்க்கை வேண்டாம் என்று சொன்னால் மகன் மனைவிக்காக இங்கேயே இருந்து விடுவான் என்று நினைத்தார்.
அந்த நினைப்புடன் அவரின் மூளை பிசினஸ் மைண்டுடன் வேலை செய்ய ஆரம்பித்தது. அதனால் ஒரு முடிவுடன் பவ்யாவை பெண் கேட்க வந்திருந்தார்.
“வணக்கம் மிஸ்டர்.அமுதவன்! நான் ரங்கநாதன், பவ்யாவோட எம்.டி” என்று தன்னை அறிமுகப் படுத்தியவரை மரியாதையுடன் வரவேற்றார் அமுதவன்.
எம்.டி ஏன் தன் வீடு தேடி வந்திருக்கிறார்? என்று அவர் வருகையை எதிர்பார்க்காத பவ்யாவும் மனதில் நினைத்துக் கொண்டே அவரை வரவேற்றாள்.
அவளைப் பார்த்து மென்னகை புரிந்தவர் அடுத்துச் சொன்ன விஷயத்தில் அந்த வீட்டில் இருந்த அனைவரும் திகைத்து போய் நின்றார்கள்.
“நான் பவ்யாவை என் பையனுக்குப் பெண் கேட்டு வந்திருக்கேன்” என்று சொன்னவர் அவர்களின் திகைப்பை பார்த்துப் பேச்சை நிறுத்தினார்.
சிறிது நேரத்தில் தன்னைச் சமாளித்துக் கொண்டு “ஒரு பெரிய கம்பெனி ஓனர் எங்க வீட்டுப் பொண்ணைப் பெண் கேட்டு வந்தது சந்தோஷம் தான் சார். ஆனா சில விஷயங்களை நான் உங்களுக்குத் தெளிவு படுத்த விரும்புறேன். நானும் என் மனைவியும் பேங்க் மேனேஜரா இருக்கோம். என் தங்கச்சி பொண்ணு தான் பவ்யா. எனக்கு ஒரே பொண்ணு மைத்ரி படிச்சுட்டு இருக்கா.
பவ்யா என் தங்கச்சி பொண்ணுனாலும் இப்ப எங்க பொண்ணு தான். இரண்டு பேருக்கும் நாங்க செய்முறை எல்லாம் ஒன்னு போலத் தான் செய்ய நினைச்சிருக்கோம். ஆனா நீங்க ரொம்பப் பெரிய இடம். உங்க அளவுக்குச் செய்றது எப்படி?” என்று அமுதவன் தயங்கி நிறுத்த…
அவர் சொல்ல வந்ததைப் புரிந்து கொண்டு “என்னைத் தவறா நினைக்காதீங்க அமுதவன். நான் உங்க குடும்பத்தைப் பற்றி நல்லா விசாரிச்சுட்டு தான் வந்திருக்கேன். தங்கச்சி பொண்ணை உங்க பொண்ணா பார்த்துகிற உங்க நல்ல மனசு எனக்குப் பிடிச்சிருக்கு. அதை விடப் பவ்யாவின் குணம் பிடிச்சிருக்கு. தலைவி இல்லாத எங்க வீட்டுக்குப் பவ்யா தான் மருமகள் இடத்தில் இருந்து தலைவியா குடும்பத்தைக் கவனிக்கணும்.
அந்தக் குணம் பவ்யாகிட்ட இருக்குனு இத்தனை நாள் பார்த்துல தெரிஞ்சுகிட்டேன். சீர்வரிசை அது இதுன்னு இல்லாம பொண்ணை மட்டும் எங்க வீட்டுக்கு அனுப்பி வைச்சாலும் போதும்” என்று ரங்கநாதன் சொல்ல…
“இல்லைங்க எங்க பொண்ணை அப்படி வெறும் கையோட அனுப்ப மாட்டோம்” என்றார் கனகதாரா.
“இந்தப் பாசத்தை விட என்னங்க வேணும்? என் பையன் இப்ப அமெரிக்காலப் படிச்சுட்டு இருக்கான். படிப்பை முடிச்சதும் இங்க வந்து கம்பெனியை பார்த்துப்பான். அவன் வந்ததும் கல்யாணம் முடிச்சு வச்சுட்டா அவனுக்கு வீட்டில் அவன் அம்மா இல்லாத வெறுமை தெரியாது. அவனுக்கு இன்னும் அவனோட அம்மா இழப்பை தாங்க முடியாம தவிச்சுட்டு இருக்கான்.
மனைவினு ஒரு பொண்ணு வந்துட்டா அவனும் சந்தோஷமா இருப்பான். இது என் பையன் போட்டோ பாருங்க. நீங்களும் உங்க பொண்ணு போட்டோ ஒன்னு கொடுத்தா என் பையன்கிட்ட காட்டிருவேன். அப்புறம் பொண்ணு மாப்பிள்ளைக்குப் பிடிச்சிருச்சுனா மேற்கொண்டு பேசுவோம்” என்று வினய்யின் புகைப்படத்தைக் கொடுத்து விட்டு பவ்யாவின் புகைப்படத்தை வாங்கிக் கொண்டு சென்றார்.
அமுதவன், பவ்யாவின் விருப்பம் கேட்க “நீங்களும் அத்தையும் எனக்கு நல்லது தான் செய்வீங்க மாமா. நீங்க எது சரி என்று தோணுதுன்னு சொல்றீங்களோ அது தான் எனக்கு. என் விருப்பம்னு தனியா எதுவும் இல்லை” என்று முடித்துக் கொண்டாள்.
அவள் பேச்சில் தம்பதிகளுக்குச் சந்தோஷம் தான் என்றாலும், நன்றாக விசாரித்த பிறகே முடிவெடுக்க வேண்டும் என்று நினைத்தவர் ரங்கநாதன் குடும்பம் பற்றி விசாரித்து அவருக்குத் திருப்தி என்று தோன்றிய பிறகு தான் பவ்யாவிடம் வினய்யின் போட்டோவை காட்டினார்.
பவ்யாவிற்கு முதலில் வினய் அமெரிக்காவில் படிக்கிறான் என்று தெரிந்ததும் ஏதோ ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் அவன் இங்கே தான் வந்து கம்பெனியை பார்த்துக் கொள்ளப் போகிறான் என்று தெரிந்ததும் தன்னைச் சமாதானப் படுத்திக் கொண்டாள்.
இப்போது வினய்யின் புகைப்படத்தைப் பார்த்ததும் மிகவும் பிடித்து விட்டது. பவ்யாவிற்குப் பிடித்துப் போல வினய்க்கும் தன் மின்னஞ்சலில் வந்த பவ்யாவின் புகைப்படத்தைப் பார்த்ததுமே பிடித்து விட்டது.
இப்போ ஏன் கல்யாணம்? என்று கேட்டவனை ஏதேதோ சொல்லி அவனைச் சமாளித்து வினய்யை சம்மதிக்க வைத்திருந்தார் ரங்கநாதன்.
பவ்யாவின் வீட்டில் பேசிவிட்டு வந்ததும் அடுத்து வினய்யிடம் பேசினார். அவன் எடுத்ததுமே “எப்போ இங்கே வரப் போறீங்கபா? எனக்கு இங்கே ஸ்டூடென்ட் விசா முடிய போகுது. அதுக்குள்ள நீங்க இங்க வந்தா பிசினஸ் ஆரம்பிச்சுட்டு அதைக் காரணமா வச்சு நானும் விசா வாங்கிறலாம், ஆனா நீங்க ஒரு ஏற்பாடும் பண்ணின மாதிரி தெரியலை” என்று கேட்டான்.
‘இவன் ஒருத்தன் அதுலயே இருக்கான்’ என்று பல்லை கடித்தவர், “வர்றேன்… வர்றேன்…! நீ சொன்ன ஏற்பாடு எல்லாம் செய்துறலாம். ஆனா அதுக்கு முன்னாடி நீ கல்யாணம் பண்ணனும்” என்றார்.
“கல்யாணமா…? என்னப்பா சொல்றீங்க? இப்பயே எதுக்குக் கல்யாணம்?” என்று புரியாமல் கேட்ட வினய்க்கு, ‘ம்ம்… உன்னை இங்கேயே இருக்க வைக்க’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவர் “கல்யாணம் இப்ப பண்ணாம வேற எப்ப பண்றது வினய்? நீ அமெரிக்காலச் செட்டில் ஆகுற ஐடியால இருக்க. என்னையும் அங்க கூப்பிடுற. அப்படி இருக்குறப்ப உனக்கு ஒரு தமிழ்நாட்டுப் பொண்ணைக் கல்யாணம் பண்ணி வச்சுட்டு அப்புறம் அங்கேயே போய்ச் செட்டில் ஆகிறலாம்னு பார்க்கிறேன்.
அங்க போய்ட்டா அப்புறம் இங்க தொடர்பு விட்டு போய்ரும். எனக்கு நம்ம நாட்டு பொண்ணு தான் மருமகளா வரணும்னு நினைக்கிறேன். நீ என்ன நினைக்கிற? உனக்கு அமெரிக்காவை பிடிச்சு போன மாதிரி, அமெரிக்கப் பொண்ணைத் தான் பிடிக்குமா?” என்று அழுத்தத்துடன் கேட்டார்.
“நான் எப்போ இந்த ஊர் பொண்ணைப் பிடிக்கும்னு சொன்னேன்?” என்று வினய் கடுப்புடன் திருப்பிக் கேட்க…
‘ஹப்பா…! அப்படியும் சொல்லிருவியோனு தானே பயந்துட்டு இருந்தேன்’ என்று உள்ளுக்குள் நிம்மதி அடைந்தவர் பேச்சை தொடர்ந்தார்.
“அப்ப ஒன்னு செய்! பொண்ணு போட்டோ அனுப்புறேன் பாரு! உனக்குப் பிடிச்சிருந்தா மேற்கொண்டு பேசி முடிக்கிறேன். நீ படிப்பை முடிச்சுட்டு இங்கே வா! உன் கல்யாணத்தை முடிச்சுட்டு, மருமகளையும் கூட்டிட்டு போய் அங்க செட்டில் ஆகிருவோம்.
அதுக்கு முன்ன நாம குடும்பமா உங்க அம்மா வாழ்ந்த இந்த வீட்டுல கொஞ்ச நாளைக்கு இருப்போம். அங்க போய் இருக்கணும்னு ஆன பிறகு எனக்கு இதெல்லாம் செய்து பார்த்திரணும்னு ஆசையா இருக்கு. நீ வந்த பிறகு கொஞ்ச நாள் இங்க சந்தோஷமா இருந்துட்டு அப்புறம் எல்லாத்தையும் வித்துட்டு மூணு பேரும் சேர்ந்தே அங்க போய்ருவோம். என்ன சொல்ற?” என்று கேட்டார்.
குரலில் ஏற்ற இறக்கத்துடன் கெஞ்சலும், ஆசையாகவும் கேட்ட தந்தைக்கு மறுப்பு சொல்ல வினய்க்கு தோன்றவில்லை. அவரின் எண்ணமும் சரி என்றே தோன்றியது. ஏற்கனவே தன் தந்தைக்கு இங்கே வர முழுச் சம்மதமும் இல்லை என்று அறிந்திருந்தான். தனக்காகத் தான் சரி என்று சொல்கிறார் என்றும் புரிந்தது. அதனால் இதிலாவது அவர் இஷ்டம் போலச் செய்வோம் என்று நினைத்தவன் ‘சரி’ என்று சொன்னான்.
மகனின் சம்மதத்தில் மகிழ்ந்தவர், பவ்யாவை பற்றி அவளின் ‘வெளிநாட்டு வெறுப்பையும், அதன் காரணத்தையும் தவிர’ மற்ற விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.
விவரங்களை அறிந்து கொண்ட பிறகு பவ்யாவின் புகைப்படத்தைப் பார்த்தவனுக்கு அவளை வேண்டாம் என்று சொல்ல எந்த வித மறுப்பும் தோன்றாததால் திருமணத்திற்கு முழு மனதுடன் சம்மதம் சொன்னான். ஆனால் ஒரே ஒரு கண்டிஷனுடன். அது பவ்யாவிற்கு அமெரிக்காவில் செட்டில் ஆக முழுச் சம்மதமா என்று திருமணத்திற்கு முன்பே கேட்டு விட வேண்டும் என்று தான்.