6 – உனதன்பில் உயிர்த்தேன்

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 6

ஒரு மாதிரியாகக் கைகளும், கால்களும் மடங்கித் தரையில் கிடந்தாள் தேன்மலர்.

அவளைப் பார்த்துப் பதறியவன், “ஏ புள்ள, இந்தா…” என்று அழைத்துப் பார்த்தான்.

அவளிடம் அசைவில்லை.

மயங்கிக் கிடக்கிறாளோ என்று நினைத்தவன் அடுப்படி சென்று தண்ணீர் எடுத்து வந்து அவளின் முகத்தில் தெளித்தான்.

அவளின் இமைகள் லேசாகச் சுருங்கின.

இன்னும் சிறிது தண்ணீரை அவளின் முகத்தில் தெளிக்க, இப்போது மெல்ல இமைகளைப் பிரித்து விழிகளை உருட்டி முழிக்க முயன்றாள்.

“இந்தா புள்ள, கண்ணைத் திற…” சத்தமாகக் குரல் கொடுக்கவும் நன்றாக விழிகளை விரித்து எதிரே இருந்தவனைப் பார்த்தவள் அவனை அங்கே எதிர்ப்பாராமல் எழுந்து அமர முயன்றாள்.

ஆனால் எவ்வளவு நேரம் கைகளையும், கால்களையும் முடக்கி கொண்டு படுத்திருந்தாளோ? இப்போது கை, கால்கள் சட்டென்று தன் வசத்திற்கு வராமல் மரத்து போயிருந்தன.

சில நொடிகள் செலவழித்துக் கை, கால்களை நீட்டி மடக்கி ரத்த ஓட்டத்தைச் சீராக்கியவள் எழுந்து நிற்க முயன்றாள்.

ஆனால் தலையைச் சுற்றிக் கொண்டு வர, மீண்டும் கீழேயே அமர்ந்துவிட்டாள்.

“எப்ப சாப்பிட்ட நீ?” அவளின் நிலையைப் பார்த்து யோசனையுடன் கேட்டான்.

பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தாள்.

அவளின் அன்னை உயிருடன் இருந்த போது சாப்பிட்டது. அதன் பிறகு இந்த இரண்டு நாட்களாக எதுவும் உண்ணவில்லை.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

அவளின் முகம் அதீத சோர்வில் இருக்க, “நீ சோத்தை கண்டே ரெண்டு நாளாவது இருக்கும் போலயே…” என்று சரியாகக் கணித்தான்.

“நீ சோறு உங்காம கிடந்தா போன உசுரு திரும்ப வந்துருமா? எழுந்திருச்சுச் சோத்தை போட்டு தின்னு. ஒத்த மனுசியா கிடக்க. உன்னைய நீயே தேன் பார்த்துக்கிடணும். அம்புட்டு நேரமும் ஒத்தாசைக்கு ஆளு ஓடி வருமா என்ன? ஒ நாயி இருக்கிறதால அது என்னைய கூட்டியாந்துச்சு. அதுவும் இல்லைனா தனியா கிடந்து என்ன ஆகியிருப்ப?” என்று கேட்டான்.

அவன் சொல்வதும் நியாயம் தான். இனி தன்னைச் சாப்பிட சொல்லவோ, ஏன் சாப்பிடாமல் இருக்கிறாய் என்று கேட்கவோ தனக்கு இனி யாரும் இல்லை. என்னை நானே தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற உண்மை முகத்தில் அறைய, சட்டென்று அன்னையின் நினைவில் அவள் கண்கள் உடைப்பெடுத்தன.

அவளின் கண்ணீரை வெறுமையாகப் பார்த்தான் வைரவேல்.

“உசுரு யாருக்கும் நிலையானது இல்ல. எம் பொஞ்சாதி மாதிரி, ஒ அம்மா மாதிரி இப்படித்தேன் பொசுக்குன்னு போய்ச் சேர்ந்து நமக்கு உசுரு வலியைக் கொடுப்பாக. நமக்கும் சாவலாம் போலத்தேன் இருக்கும். அதுக்காகச் சாமி தந்த உசுரை நாமளாவா விட முடியும்?

நீ இப்படிச் சோறு உங்காம கிடக்குறதை கண்டா ஒ அம்மா ஆத்மா கூடத் தாங்காது. சோறு பொங்குனயா இல்லையா?” என்று கேட்டவனை அமைதியாக முகம் நிமிர்த்திப் பார்த்தாள்.

அவள் கண்களில் இன்னும் மயக்கம் இருந்தது. அதைக் கண்டவனுக்கு அவள் ஒன்றும் செய்திருக்க மாட்டாள் என்று புரிந்து போனது. எழுந்து செய்யவும் அவளால் முடியாது என்பதும் புரிந்தது.

யோசனையாகச் சில நொடிகள் அவளைப் பார்த்துக் கொண்டு நின்றான்.

“இந்தா, இந்தத் தண்ணியைக் குடிச்சுப் போட்டு உட்கார்ந்திரு. நா போய் ஏ வீட்டுல இருந்து சோறு எடுத்தாறேன்…” என்று கையில் இருந்த தண்ணீர் செம்பை அவளிடம் நீட்டினான்.

அதை வாங்கிப் பருகியவள், “இல்ல, நானே சோறு பொங்கிக்கிறேன்…” என்றாள்.

“எங்கன, எம் முன்னாடி நிலையா அஞ்சு நிமிசம் நின்னு காட்டு பார்ப்போம்…” என்றான் கூர்மையாக.

அது முடியாமல் தானே அவன் முன் இவ்வளவு நேரம் எழுந்து நிற்க முடியாமல் அமர்ந்திருக்கிறாள் என்பதால் அவளின் தலை லேசாகத் தாழ்ந்தது.

“நிலையா உட்கார்ந்திருக்க முடியாம கண்ணு சொக்கி போய்க் கிடக்க. இது லட்சணத்துல சோறு பொங்க போறயாக்கும்?” என்று நக்கலாகக் கேட்டான்.

“நா போயி எடுத்தாறேன்…” என்றவன் வெளியே சென்று விட்டான்.

அவன் சென்றதும் அப்படியே சுவற்றில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.

மூடிய இமைகளைத் தாண்டி சூடாக இறங்கிய கண்ணீர் அவளின் கன்னத்தை நனைத்தது.

அன்னையின் திடீர் இழப்பு அவளை அதிகமாக உடைத்துப் போட்டிருந்தது. அதிலிருந்து அவளால் மீள முடியவில்லை. ஊன் உறக்கமில்லாமல் கிடந்தவளின் உடலிலும் சக்தி இல்லை. மனதிலும் சக்தியில்லை.

தனக்கு எதற்கு இந்தத் தனிமை வாழ்வு? அன்னை இல்லாமல் என்ன இருக்கு இந்த வாழ்க்கையில்? என்று நினைத்தவளுக்குக் கழிவிரக்கம் கசந்து வழிந்தது.

பேசாமல் தானும் செத்து விடலாமா? என்று தான் அந்த நேரம் அவளுக்குத் தோன்றியது.

அன்னையின் இழப்பினால் உண்டான மனகலக்கமும், தன்னிரக்கமும் போட்டிப் போட்டுக் கொண்டு வர, எதைப் பற்றியும் யோசிக்காமல் சட்டென்று அந்த முடிவை எடுத்தவள், உணர்ச்சி வேகத்தில் அதைச் செயல்படுத்தியே விடுவோம் என்று நினைத்து பட்டென்று விழிகளைத் திறந்தாள்.

அப்போது அவளின் எதிரே லேசாகத் தலையைச் சாய்த்து நாக்கை தொங்க போட்டுக் கொண்டு பரிதாபமாக அவளைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தது ராசு.

அதனிடமும் அதீத சோர்வை கண்டவளுக்குச் சட்டென்று இரக்கம் சுரந்து தன் தவறு புரிந்தது.

“எம்மை மன்னிச்சுடு ராசு. நா தேன் அம்மா செத்துப் போச்சுன்னு பட்டினி கிடந்தேன். ஆனா உம்மையும் சேர்த்து நா பட்டினி போட்டுருக்கப்படாது. என்னைய நம்பியிருக்கும் உம்மை விட்டுப்போட்டு நா சாக நினைச்சது தப்புத்தேன். மன்னிச்சுடு ராசு. இனி நா உமக்குத் துணை. எமக்கு நீரு துணை…” என்றவள் ராசுவின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

அதுவும் தன் முகத்தை அவள் முகத்துடன் உரசியது.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

வீட்டிற்குச் சென்ற வைரவேல் நேராக அடுப்படிக்குச் சென்றான்.

“என்ன ராசா, வவுறு பசிக்குதா?” என்று கூடத்தில் அமர்ந்திருந்த அப்பத்தா கேட்க,

“இல்ல அப்பத்தா…” என்றவன் சமையலறையில் மூடி வைத்திருந்த உணவு பாத்திரங்களை ஒவ்வொன்றாகத் திறந்து பார்த்தான்.

‘வவுறு பசிக்காதவன் என்னத்துக்குச் சாமான்களைப் போட்டு உருட்டிக்கிட்டு கிடக்கான்?’ என்று நினைத்த அப்பத்தா எழுந்து தானும் அடுப்படிக்கு சென்றார்.

உள்ளே ஒரு தூக்குவாளியில் சோற்றையும், அதன் மேல் ஓரமாகப் புடலங்காய் கூட்டையும் வைத்துவிட்டு, இன்னொரு சின்னத் தூக்குவாளியில் குழம்பை ஊற்றிக் கொண்டிருந்தவனைக் கேள்வியுடன் பார்த்தார்.

“யாருக்குய்யா தூக்குல சோத்தை எடுத்து வச்சுக்கிட்டு இருக்க?” என்று கேட்டார்.

“அதுதேன் அந்தத் தோப்புக்காரி மவளுக்கு அப்பத்தா. செத்த நேரத்துக்கு முன்ன என்ன ஆச்சுனா…” என்றவன் ராசு வந்து தன்னை அழைத்ததையும், தேன்மலர் வீட்டிற்குள் மயங்கிக் கிடந்ததையும் சொன்னான்.

“அவ ஆத்தா செத்ததுல இருந்தே சோறு திங்கலை போல அப்பத்தா. இன்னும் அர மயக்கமாத்தேன் கிடக்கா. அதுதேன் நா சோறு கொண்டு வாறேன்னு சொல்லிப் போட்டு வந்தேன்…” என்றவன் அப்போது தான் அப்பத்தா எதுவுமே பேசாமல் இருப்பதை உணர்ந்து திரும்பி பார்த்தான்.

அவன் பேச பேச அதிர்ந்து போய் நின்றிருந்தார் அப்பத்தா.

“என்ன அப்பத்தா?” அவரின் நிலையைக் கலைத்தான்.

“என்னய்யா இதெல்லாம்? நடக்குறது ஒன்னும் எம் மனசுக்கு ஒப்பலையே?” என்றார்.

“ஏன் அப்பத்தா, இதுல என்ன இருக்கு? ஒரு பொழுது சோறு கொடுக்குறதுல நாம என்ன குறையப் போறோம்?” என்று கேட்டான்.

“நீரு புரிஞ்சி தேன் பேசுறீராய்யா?அவளுக்கு நாம ஏன் செய்யணும்? நீரு ஏன் திரும்பத் திரும்ப அவ விசயத்துல தலையிடுறீரு? ஏற்கனவே நீரு காரியம் பண்ணி போட்டு வந்ததைப் பத்தி வூரே பேசுது.

இதுல இப்ப அவ தனியா இருக்கும் போது அவ வூட்டுக்கு போய்ட்டு வர்றீரு. உம்ம மாமனாரு சும்மாவே அதைப் பத்தி பேசிப் போட்டு போயிட்டாரு. அப்புறமும் ஏன்ய்யா உமக்கு இந்த வேண்டாத சோலி?” என்று ஆதங்கமாகக் கேட்டார்.

“வூரு பேசுறது, எம் மாமனாரு பேசுறது எல்லாம் கிடக்கட்டும்… நா தப்பு பண்ணி போடுவேனு நீரும் நினைக்கிறீரா அப்பத்தா?” என்று கூர்மையுடன் கேட்டான்.

கேள்வி கேட்ட பேரனுக்குச் சட்டென்று பதில் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தார் அப்பத்தா.

“அமைதியா இருந்தா என்ன அர்த்தம் அப்பத்தா? அப்ப எம் மேல உமக்கும் நம்பிக்கை இல்லையா அப்பத்தா? எம் மாமனாரு நினைக்கிறது போல, இவன் பொஞ்சாதியை இழந்தவன், அதனால சட்டுன்னு மனசு தடுமாறிப் போயி அந்தப் புள்ள மடியில போய் விழுந்துருவேன்னு நீரும் நினைக்கிறீரா?” கத்தியின் கூர்மையுடன் வந்து விழுந்த வார்த்தைகளில் அப்பத்தா விதிர்த்து தான் போனார்.

“என்னடா எம் மாமனாரு நினைப்பு இவனுக்கு எப்படித் தெரிஞ்சதுன்னு நினைக்கிறீரா அப்பத்தா? அவரு என்னைய திரும்பத் திரும்ப வந்து கேள்வி கேட்டதுலயே எமக்குப் புரிஞ்சி போச்சு அப்பத்தா. நா பொஞ்சாதியை இழந்தவன் தேன் அப்பத்தா. அதுக்காக எம் பொஞ்சாதி எப்ப சாவா… வேற ஒருத்தி மடியில போய் எப்ப விழலாம்னு காத்துக்கிடக்குறவன் நா இல்ல அப்பத்தா…” என்றவன் ஒவ்வொரு வார்த்தையும் தீர்க்கமாக வந்து விழுந்தன.

“இல்லைய்யா… நா அப்படி நினைக்கலை. வூரு வாயிக்கு நீர் ஏன் அவுலாவேன் என்ற நினைப்புத்தேன்யா எமக்கு…” என்றார் அப்பத்தா.

“வூரு வாய் என்னைக்குப் பேசாம இருந்திருக்கு? எதைப் பேசாம இருந்திருக்கு அப்பத்தா? நல்லா இருந்தாலும் பேசும், நல்லா இல்லைனாலும் பேசும். அதெல்லாம் பார்த்திட்டு இருந்தா நாம நம்மளா வாழவே முடியாது அப்பத்தா. என்னைய யாரு நம்புனாலும் பரவாயில்லை. நம்பலைனாலும் பரவாயில்லை. நீர் நம்புனா போதும் அப்பத்தா…” என்றான்.

“நா உம்மை நம்புறேன்யா…” என்றார் அப்பத்தா.

“அப்புறம் என்ன? விடும் அப்பத்தா. நா போயி அந்தப் புள்ளக்கு சோத்தை கொடுத்துப் போட்டு வாறேன்…” என்றவன் அதற்கு மேல் பேசிக் கொண்டு நிற்காமல் தூக்குச்சட்டியை எடுத்துக் கொண்டு தேன்மலரின் வீட்டிற்குச் சென்றான்.

வைரவேல் அவளின் வீட்டிற்குச் சென்ற போது கண்களில் கண்ணீருடன் ராசுவை கட்டிக் கொண்டிருப்பதைக் கண்டான்.

“இந்தா புள்ள, ஒ ராசுவுக்கும் சேர்த்துத்தேன் சோறு கொண்டாந்துருக்கேன். ரெண்டு பேரும் சாப்பிடுங்க. நா தூக்கை அப்புறமா வாங்கிக்கிறேன். மொதல கதவை சாத்தி வை. நா கிளம்புறேன்…” என்று அவளிடம் தூக்குச்சட்டியை நீட்டினான்.

அதை வாங்கிக் கீழே வைத்தவள், கண்ணில் நீர் மல்க அவனைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டாள்.

“ஏய், இந்தா புள்ள, ஒரு பொழுது சோறு கொடுத்ததுக்குப் போய்க் கையெடுத்து கும்பிட்டுக்கிட்டு கிடக்க? கையைக் கீழே இறக்கு…” என்றான் அவளின் எதிர்பாராத செயலில் உண்டான பதட்டத்துடன்.

“இது ஏ அம்மாவை நல்லபடியா கொண்டு போய்ச் சேர்த்ததுக்குயா. நீர் மட்டும் இல்லைனா அன்னைக்கு நா என்ன செய்துருப்பேனே தெரியலை. அன்னைக்கு எமக்கு ஏ அம்மா இப்போ உசுரோட இல்லைங்கிறதை தவிர எதுவும் தோணலை. அம்புட்டு பேரும் வேடிக்கை பார்த்தப்ப நீர் முன்ன நின்னு காரியத்தைச் செய்ததுக்கு நன்றியா…” என்றவள் மீண்டும் கையெடுத்து கும்பிட்டாள்.

“மனுசனுக்கு மனுசன் செய்ற ஒத்தாசை. அம்புட்டுத்தேன். கையைக் கீழே போடு… சோத்தை தின்னு. நா கிளம்புறேன்…” என்றவன் கிளம்பிவிட்டான்.

அவன் கிளம்பியதும், முதல் வேலையாக ராசுவிற்குச் சோறை போட்ட தேன்மலர், அது அவசர அவசரமாக உண்பதை இரக்கத்துடன் பார்த்தாள்.

அது உண்டு முடித்த பின் தான், தான் உண்ண ஆரம்பித்தாள். மனம் முழுவதும் நிரம்பிக் கிடந்த துக்கத்தில் ஒரு கவளம் உணவு கூட உள்ளே இறங்காமல் அடம்பிடித்தது.

ஆனாலும் எழுந்து வேலை செய்யவாவது தெம்பு வேண்டும் என்று நினைத்தவள், ஒவ்வொரு வாயையும் கஷ்டப்பட்டு விழுங்கி வைத்தாள் தேன்மலர்.

வீட்டிற்குச் செல்லும் வழி எல்லாம் வைரவேலுக்கு மாமனாரின் யோசனை வந்தது.

இப்போது தான் சோறு கொண்டு போய்க் கொடுத்ததும் அவருக்குத் தெரியவரும். மீண்டும் வீட்டில் வந்து பிரச்சனை பண்ணுவார். அப்படி அவர் வந்தால் இந்த முறை திரும்பி அதைப் பற்றிப் பேச முடியாதவாறு வாயடைக்கச் செய்ய வேண்டும் என்று நினைத்தபடி சென்றவன் இரவு உணவை முடித்துக் கொண்டு வெளியே இருந்த கட்டிலில் வந்து விழுந்தான்.

மாமனார் திரும்ப வந்து தன்னிடம் பிரச்சனை செய்வார் என்று தான் அவன் நினைத்திருந்தான்.

ஆனால் இந்த முறை அவனிடம் பேசாமல் வேறு வழியில் பிரச்சனையைப் கிளப்ப முடிவெடுக்கப் போகிறார் என்று அறியாமல் போனான்.

வைரவேல் கட்டிலில் வந்து படுத்ததை அவனின் வீட்டிற்கு எதிர்சாரியில் இருந்த வீடுகளில் மூன்று வீடு தள்ளி இருந்த வீட்டியிலிருந்த ஒருவன் ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

உடனே ஜன்னலை அடைத்து விட்டு தன் கைபேசியில் வைரவேலின் மாமனாருக்கு அழைத்தான்.

அந்தப் பக்கம் அழைப்பை எடுத்ததும் விஷயத்தைச் சொல்ல ஆரம்பித்தான்.

“இன்னைக்கு அந்தத் தோப்புக்காரி மவளுக்கு ஒம் மருமவன் தேன் சோறு கொண்டு போய்க் கொடுத்துருக்கான் மாமா…” என்று இவன் சொல்ல,

“ஒ, அம்புட்டு தொலவட்டுக்கு போயாச்சா?” என்று ஆத்திரத்துடன் கேட்டார் கோவிந்தன்.

“சோறு கொடுக்குறதுக்கு முன்ன ஒம் மருமவன் ரொம்ப நேரம் அவ வூட்டுக்குள்ளார போய் இருந்தான். சோறு கொடுத்துப் போட்டும் ரொம்ப நேரம் செண்டு தான் வெளியே வந்தான். இதெல்லாம் சரியாப்படலை மாமா. ஒரு கண்ணு ஒம் மருமவன் மேல வச்சுக்கோ…” என்றான்.

“ஒரு கண்ணு வச்சுருக்கிறதால தானே உம்மை எம் மருமவனைப் பத்தி எல்லாச் சேதியும் சொல்ல சொல்லியிருக்கேன் ராமரு. எம் மவ போய்ட்டா அவரு என்ன செய்தாலும் நா கண்டுக்கக் கூடாதுன்னு நினைப்பு இருக்கு போல. எம் மவ இல்லைனாலும் எம் மருமவன் அந்தஸ்து போயிடுமா என்ன?

அவரு என்ன செய்தாலும் பார்த்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டேன் ராமரு. எம் புள்ள இல்லனாலும் அவரு இந்த ஜென்மத்துல எம் மருமவன் தேன். எம் மவ செத்து ஒரு மாசம் தேன் ஆகிருக்கு. அதுக்குள்ளார அடுத்தப் பெண் சுகம் தேட ஆரம்பிச்சுட்டாரு. இந்த அசிங்கத்தை நா எங்கன போய்ச் சொல்ல?” என்று தன் தலையில் அடித்துக் கொண்டார் கோவிந்தன்.

“இருக்காதா மாமா? ஒம் மருமவன் ஒரு மாசம் பொஞ்சாதி சுகம் அனுபவிச்சுருக்கான். ஆசை அறுவது நாளு மோகம் முப்பது நாளுன்னு சொல்லுவாக. ஒம் மருமவன் மோகம் முப்பது நாளை அனுபவிச்சுட்டு, இப்ப ஆசை அறுவது நாளுக்கு வேற ஒருத்தியை தேடத்தேன் சொல்லும்.

அதுவும் தோப்புக்காரிகளைப் பத்தி நா சொல்லவே வேணாம். வூருக்கே தெரியும். ஆத்தாக்காரி உசுரோட இருக்கும் போதே மவக்காரி ஒம் மருமவனை வளைச்சுப் போட பார்த்தா. இப்போ ஆத்தாக்காரியும் இல்ல. இனி மவக்காரி ஆட்டம் அதிகமாத்தேன் இருக்கும்…” என்றான் ராமர்.

“அவ ஆட்டத்தை அடக்கணும் ராமரு. எம் மவ இருந்த எடத்துல நம்ம சாதி பொண்ணு தேன் இருக்கோணும். வேற எவளாவது வந்தா இந்தக் கோவிந்தன் சும்மா இருக்க மாட்டேன்…” என்று ஆத்திரமாகப் பல்லைக் கடித்துக் கொண்டார் கோவிந்தன்.

“அவ ஆட்டத்தை அடக்கோணும்னா கையைக் கட்டி வேடிக்கை பார்த்துட்டு இருந்தா மட்டும் போதாது மாமா. இறங்கி வேலை செய்யணும். இல்லனா அவ எல்லாம் அசர மாட்டா. அவ ஒம் மருமவன்கிட்ட போட்டுக் கொடுத்துட்டா அப்புறம் காரியமே கெட்டுது…”

“அதுவும் சரிதேன் ராமரு. அவகிட்ட சவகாசம் வச்சுக்காதீகன்னு எம் மருமவன்கிட்ட சொன்னா எங்கிட்ட தேன் சண்டைக்கு எகிறிக்கிட்டு வர்றாரு. இனி போய் நான் பேசினா எமக்கும், எம் மருமவனுக்கும் தேன் முட்டிக்கும். இல்ல, நா பேசுறேன்னே ஏதாவது செய்து வச்சுப் போடுவாரு. சூதானமாத்தேன் சோலியை முடிக்கணும்…”

“முடிச்சுப் போடலாம் மாமா. நா உம்ம பக்கம் நிக்கிறேன். ஆனா அதுக்குத் துணையா நீர் எம் பக்கம் நிக்கணும். அவளை நா ஒரு கை பார்த்துப் போடுவது எல்லாம் பெரிய விசயம் இல்ல மாமா. காரியத்தை முடிச்சதும் பிரச்சனை எதுவும் வந்தா நீர் தான் எம் பக்கம் நிக்கணும்…”

“நீ செய்ய வேண்டியதை செய்து போடு ராமரு. ஆகுறதை நா பார்த்துக்கிடுதேன்…” என்று மீசையை நீவி விட்டுக் கொண்டார் கோவிந்தன்.

“சரிதேன் மாமா, காரியத்தை முடிச்சுப்போட்டு சொல்றேன்…” என்றான் ராமர்.

“சரி ராமரு…” அழைப்பை துண்டித்தார் கோவிந்தன்.

‘தேனுமலரு… ஒ தேனுக்கேத்த வண்டு நாந்தேன்…’ என்று இங்கே ராமர் வக்கிரமாகச் சிரித்துக் கொண்டான்.

இங்கே இவர்கள் போடும் திட்டம் பற்றி அறியாமல் தேன்மலர் என்ற ஒருத்திக்கு உதவி செய்ததையே மறந்து, மனம் முழுவதும் மனைவியின் நினைவுகளைச் சுமந்தவனாக உறக்கம் வராமல் கயிற்றுக் கட்டிலில் வேதனையுடன் புரண்டு கொண்டு கிடந்தான் வைரவேல்.