6 – ஈடில்லா எனதுயிரே
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 6
“இந்தப் பையைச் சோஃபா பக்கத்தில் வை மீரா…” என்று பரபரப்பாக அங்கும் இங்கும் நடந்த படி இருந்த கஸ்தூரி ஒரு பையை எதிரே வந்த மீராவிடம் நீட்டினார்.
“மண்டபத்துக்குப் போகச் சொல்லி வைத்திருக்கிற வண்டி சரியான நேரத்துக்கு வந்திடுமா மாதவா?” என்று சுபேசன் விசாரிக்க,
“வந்திடும் அத்தான். இரண்டு முறை போன் போட்டுக் கண்பார்ம் பண்ணிட்டேன்…” என்றார் மாதவன்.
“நல்லது மாதவா. அப்படியே காருக்கு பூ அலங்காரம் பார்க்க வந்த ஆளுங்க வேலையை முடிச்சுட்டாங்களா பார்த்திரு. நான் நம்ம கிளம்பும் நேரத்தை சம்பந்தி வீட்டுக்கு போன் செய்து சொல்லிட்டு வர்றேன்…”
“சரி அத்தான்…” என்ற மாதவன் வெளியே சென்றார்.
“தாம்பூல தட்டு ஒன்னு குறையுது. எங்கே வச்சேன்னு தெரியலையே?” சமையலறையில் நின்று புலம்பிக் கொண்டிருந்தார் கஸ்தூரி.
“அது மேல் செல்பில் இருக்கு, பாருங்க அத்தை…” என்று அலமாரியை எட்டிப் பார்த்து சொன்னாள் ராகவர்தினி.
“ஸ்டூலை எடுத்துட்டு வா ராகா. மேலே ஏறி எடுக்கலாம்…” என்றார்.
ராகவர்தினி ஸ்டூலை எடுத்து வந்ததும், கஸ்தூரி அதில் ஏறப் போக, “நீங்க இருங்க அத்தை. நான் எடுக்கிறேன்…” என்று அவரை நிறுத்தி விட்டு அவள் ஏறி எடுத்துக் கொடுத்து விட்டு கீழே இறங்கினாள்.
“நம்ம வாத்தி எங்கே அத்தை? நாமெல்லாம் இங்கே பரபரப்பா வேலை பார்த்துட்டு இருக்கோம். மாப்பிள்ளை சார் என்ன செய்றார்?” என்று கேட்டாள்.
“வெளியே வேலை இருந்ததுன்னு போயிட்டு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வீட்டுக்கு வந்தான் ராகா. நான் தான் குளிச்சி ரெடியாகி வான்னு சொல்லிவிட்டேன். ரெடியாகிட்டானான்னு தெரியலை…” என்றார்.
“நான் போய்ப் பார்த்துட்டு வர்றேன் அத்தை…” என்று சிட்டாகப் பறந்து மாடிக்கு சென்றாள்.
பிரபஞ்சனின் அறை கதவு மூடியிருக்க, கதவைத் தட்டினாள்.
“இதோ வர்றேன்…” என்று குரல் மட்டும் வெளியே கேட்டது.
“அத்தான் கதவைத் திறங்க…” என்று மீண்டும் கதவைத் தட்டினாள்.
“வெயிட் பண்ணு ராகா…” என்றவன் சில நொடிகளுக்குப் பிறகே கதவைத் திறந்தான்.
கதவைத் திறந்தவனை ஆவென்று பார்த்தாள் ராகவர்தினி.
“ஏய் ராக்கம்மா, என்ன வாயைப் பிளந்துட்டு பார்க்கிற?” என்று அவளின் முன் சொடக்கிட்டு கேட்டான்.
“மிஸ் பண்ணிட்டேன் அத்தான்…” முகத்தைச் சோகமாகச் சுருக்கிக் கொண்டு சொன்னாள்.
“எதை மிஸ் செய்த?”
“எதை இல்ல… யாரைன்னு கேளுங்க…”
“யாரை மிஸ் செய்த?”
“உங்களைத்தான்… ம்ப்ச்!” என்று சோகமாக உச்சுக் கொட்டினாள்.
“ஏய், என்ன உளர்ற?”
“உளறவில்லை என் அத்தானே… உண்மையைச் சொல்கிறேன். நீங்கள் இவ்வளவு அழகென்று நீங்கள் அழகு நிலையம் செல்வதற்கு முன் எனக்குத் தெரியாமல் போய்விட்டதே! தெரிந்திருந்தால் நானே உங்களைக் கொத்திக் கொண்டு போயிருப்பேனே. இப்போது நான் என்ன செய்வேன்? நான் ஏது செய்வேன்? ஓ…! கடவுளே!” என்று சுத்த தமிழில் பேசி நடித்தவளை முறைப்பாகப் பார்த்தான்.
“அட! சீ, நிறுத்து! நான் பார்லர் போன பிறகு அழகா இருக்கேன். போகாமல் இருந்தப்ப அழகு இல்லைன்னு என்ன நேக்கா சொல்ற. உன்னை எல்லாம்…” என்று அவள் தலையில் கொட்ட வந்தவன் கடைசி நொடியில் கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டான்.
“அடடா! என் ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே!” என்று வருத்தப்படுவது போல் நடித்தாள்.
“இப்ப எதுக்கு உன் நாடக கொட்டகையை இங்கே வந்து கட்டிட்டு இருக்க? போ… போய்த் தெருவில் உன் கொட்டகையைப் போடு, போணியாகும்…” என்றான் நக்கலாக.
“ம்க்கும்… உங்க கிட்ட போணியாகுமா என்ன?” என்று நொடித்துக் கொண்டாள்.
“ஆகாதுன்னு தெரியுதுல. அப்போ இடத்தைக் காலி செய்!” என்றான்.
“எனக்கு வேலையே இனி இங்கே தானே…” என்றவள் அவன் அறைக்குள் நுழைந்து சுற்றி முற்றி நோட்டமிட்டாள்.
“என்ன தேடுற ராகா?”
“மண்டபத்துக்குக் கொண்டு போற திங்க்ஸ் எல்லாம் எடுத்து வச்சுட்டீங்களா அத்தான்? ஈவ்னிங் எங்கேஜ்மெண்டுக்கு போடும் ட்ரெஸ் எங்கே இருக்கு?” என்று கேட்டாள்.
“எல்லாமே அதோ அங்கே இருக்கு பாரு…” என்று கட்டிலில் அந்தப் பக்கம் இருந்த ஒரு சூட்கேஸை சுட்டிக் காட்டினான்.
“எல்லாமே அப்போ ரெடியா அத்தான்? நான் எதுவும் எடுத்து வைக்கணுமா?”
“பேஸ்ட், பிரஸ், ஷேவிங் செட் மட்டும் தான் எடுத்து வைக்கணும். நான் எடுத்து வச்சுக்கிறேன்…” என்று அவன் சொல்லிக் கொண்டிருந்த போது அவனின் கைபேசி சிணுங்கியது.
“அக்காவாத்தான் இருக்கும். பேசுங்க… பேசுங்க…” என்றாள் கிண்டலாக.
“வேற யாராவதா கூட இருக்கும். நீ உடனே ஓட்ட ஆரம்பிக்காதே. கிளம்பு!” என்றவன் கைபேசியை எடுத்துப் பார்த்தவன், பின் ராகவர்தினியின் பக்கம் திரும்பவே இல்லை.
அதிலேயே அழைத்தது நந்திதா தான் என்று புரிந்து விட, நமட்டு சிரிப்புடன் அவனின் குளியலறைக்குள் நுழைந்தாள்.
அவள் ஏன் அங்கே போகிறாள் என்று பார்த்தாலும் அழைப்பை ஏற்று நந்திதாவுடன் மெதுவான குரலில் பேச ஆரம்பித்தான்.
“இன்னும் இரண்டு மணி நேரத்திற்குள் மண்டபம் வந்திடுவோம் நந்து. ஆமா நீ என்ன செய்ற?” என்று அவன் பேசிக் கொண்டிருக்க,
குளியலறையிலிருந்து அவனின் சோப், பேஸ்ட், பிரஸ், ஷேவிங் செட் என்று எல்லாவற்றையும் எடுத்து வந்து அதை வைக்க ஒரு சிறிய பையைத் தேடினாள்.
“நான் வந்து எடுத்து வச்சுக்குவேன் ராகா. நீ வச்சுடு…” போனில் பேசிக் கொண்டே அவளைக் கண்டவன் சொல்ல,
“இருக்கட்டும் அத்தான், நான் எடுத்து வைக்கிறேன்…” என்றாள்.
“ஆமா நந்து, என் திங்க்ஸ் எடுத்து வைக்க ஹெல்ப் செய்றேன்னு சொல்லி ராகா என் ரூமில் தான் இருக்காள். சரி நந்து, மண்டபத்தில் மீட் பண்ணுவோம். பை!” என்று அழைப்பை துண்டித்தான்.
“அக்காவுக்குக் கொஞ்ச நேரம் கூட உங்களை விட்டுட்டு இருக்க முடியலை போல அத்தான். வாங்க… வாங்க… சீக்கிரம் மண்டபத்துக்குக் கிளம்பலாம்…” என்று கேலியுடன் அவனை அவசரப்படுத்தினாள்.
“ஹேய் பொறு! நாம போய் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு தான் நந்துவை மண்டபத்துக்கு அழைச்சுட்டு வருவாங்க…” என்றான்.
“அதனால் தான் மண்டபத்துக்குக் கிளம்ப அவசரம் காட்டாம இருக்கீங்களா?” என்று கிண்டலாகக் கேட்டாள்.
“என்னை ஓட்டியது போதும். கீழே வேற வேலை இருந்தால் போய்ப் பார்…” என்று புன்முறுவலுடன் அவளை விரட்டினான்.
“பொழைச்சு போங்க…” என்று அலட்டலாகச் சொல்லி விட்டு கீழே சென்றாள்.
நேரம் செல்ல, முதலில் பிரபஞ்சனின் குடும்பம் மண்டபம் சென்று சேர்ந்தனர்.
அவர்கள் வந்த சிறிது நேரத்திற்குப் பிறகு நந்திதா வீட்டினரும் வந்து விட அந்த நொடியிலிருந்தே கல்யாணக் களை கட்ட ஆரம்பித்து விட்டது.
மாலை ஆறு மணியளவில் நிச்சயதார்த்தம் இருந்ததால் அனைவரும் தயாராகிக் கொண்டிருந்தனர்.
ஆறு மணியளவில் நந்திதா மேடைக்கு அழைத்து வரப்பட்டு நிச்சயதார்த்த சடங்கை ஆரம்பித்தனர்.
மாப்பிள்ளை வீட்டுச் சார்பில் எடுக்கப்பட்ட நிச்சயப்புடவையை நந்திதாவிடம் கொடுத்து கட்டிக் கொண்டு வரச் சொல்ல, அவள் உறவினர் பெண்கள் அறைக்குள் அழைத்துச் சென்றனர்.
அழகு நிலைய பெண்களின் உதவியுடன் அவள் புடவையைக் கட்டிக் கொண்டு வந்ததும், நந்திதாவை மேடையில் இருந்த இருக்கையில் அமர வைத்து விட்டு, பிரபஞ்சனை மேடைக்கு அழைத்தனர்.
பெண் வீட்டுச் சார்பில் அவனுக்கு மாலையிட்டு முடித்ததும், இரு வீட்டின் சார்பாக எடுத்திருந்த மோதிரத்தை மணமக்கள் கையில் கொடுத்தனர்.
நந்திதாவின் கையை மென்மையாக பற்றி அவளின் விரலில் புன்சிரிப்புடன் மோதிரத்தை மாட்டி விட்டான்.
அதே போல் நந்திதாவும் அவன் கையைப் பற்றி மோதிரத்தை போட போக, போட விடாமல் பிரபஞ்சன் பின்னால் இழுக்கப்பட்டான்.
அவன் பின்னால் போனதில் நந்திதா திகைத்து விழிக்க, திடீர் இழுப்பில் பிரபஞ்சன் புரியாமல் பின்னால் திரும்பி பார்க்க, ராகவர்தினி கண்சிமிட்டி சிரித்தாள்.
அவளுடன் அவனின் உறவு இளவட்டங்களும் சேர்ந்து தான் அவனை இழுத்துக் கொண்டிருந்தனர்.
“ஹேய் என்ன?” என்று பிரபஞ்சன் கேட்க,
“ஷ்ஷ்! உங்க கல்யாணம் முடியுற வரை இப்படித்தான். பேசாம இருங்க அத்தான்…” என்ற ராகவர்தினி, “அக்கோவ்! அவ்வளவு சீக்கிரம் எங்க அத்தானை உங்ககிட்ட ஒப்படைச்சிடுவோமா? எங்கே எங்க அத்தான் கிட்ட ‘வில் யூ மேரி மீ’ என்று கேளுங்க. அப்பத்தான் விடுவோம்…” என்றாள் கலாட்டாவாக.
“ஆமா… ஆமா…” அவளுடன் சேர்ந்து இளவட்டங்களும் கூவினர்.
நந்திதாவின் முகத்தில் நாணம் வந்து ஒட்டிக் கொள்ள, மறுப்பாகத் தலையை அசைத்து தனக்கு ஆதரவாகப் பிரபஞ்சனை பார்த்தாள்.
அவனும் அவளுக்கு ஆதரவு கரம் நீட்ட, “ராகா…” என்றழைத்து ஏதோ சொல்ல வர,
“நோ அத்தான், உங்களுக்காகத்தான் கேட்டுட்டு இருக்கோம். அங்கே பாருங்க, அக்கா முகத்தில் எவ்வளவு வெட்கம்! அதை ரசிப்பது மட்டும் தான் இப்ப உங்க வேலை…” என்றாள் ராகவர்தினி.
அவனும் நந்திதாவின் முகத்தை ரசித்துப் பார்த்து விட்டு கையை விரித்தான்.
“ராகா, ப்ளீஸ்! விட்டுட்டேன்…” என்று அவளிடம் நேரடியாகக் கேட்டாள் நந்திதா.
“என் செல்ல அக்கால? நான் சொன்னதை மட்டும் இப்ப கேளுங்க. அப்புறம் எங்க அத்தான் உங்களுக்கே உங்களுக்குத்தான்…” என்றாள் ராகவர்தினி.
சிறியவர்களின் கலாட்டாவை பெரியவர்கள் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“சும்மா சொல்லுங்க அக்கா…” என்று நந்திதா வீட்டு இளவட்டங்களும் சொல்ல… ராகவர்தினி பக்கமும் எல்லாரும் கூச்சலிட, வேறு வழியில்லாமல் மெல்ல உதடுகளைப் பிரித்துச் சொன்னாள் நந்திதா.
“வில் யூ மேரி மீ?” என்று நாணத்துடன் சொல்லி, பிரபஞ்சனின் பக்கம் மோதிரத்தை நீட்ட, “ஹோய்!” என்று இளவட்டங்கள் அனைவரும் ஆர்ப்பாட்டமாகக் கத்தி அவனைத் தங்கள் பிடியிலிருந்து விடுவித்தனர்.
பிரபஞ்சன் பூரிப்பும், சிரிப்புமாகத் தன் கையை நந்திதாவிடம் நீட்ட, அவளும் அவன் விரலில் மோதிரத்தை மாட்டி விட்டாள்.
“ஹேய்!” என்று கைதட்டி கொண்டாடினர் இளவட்டங்கள்.
“இனியும் ஒவ்வொரு விளையாட்டா வரும். இரண்டு பேரும் தயாரா இருங்க…” என்று சொல்லிவிட்டு மேடையை விட்டு கீழே இறங்கினாள் ராகவர்தினி.
“ராகா ரொம்பப் படுத்தி எடுத்துட்டாளோ?” பிரபஞ்சன், நந்திதாவிடம் ரகசியமாகக் கேட்டான்.
“ம்ம், ஆமாம். நீங்களும் அவளுக்கு ஆதரவா இருந்துட்டு எனக்குச் சப்போர்ட் செய்யலையே?” என்று சிணுங்கினாள் நந்திதா.
“நான் அவளுக்கு ஆதரவா இல்லை நந்து, எனக்கு ஆதரவா இருந்தேன்…” என்றவனைப் புரியாமல் முகம் நிமிர்த்திப் பார்த்தாள்.
“உன் வெட்கம் ரொம்ப அழகா இருந்தது நந்து. அதான் அதை ரசிக்க ஒரு சான்ஸ் கிடைத்ததும் விடமுடியலை…” என்றான் குறும்பாக.
“ஹய்யோ!” என்று மீண்டும் வெட்கப்பட்டாள் நந்திதா.
இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டதும், வந்திருந்த உறவினர்கள் எல்லாம் மணமக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அவர்கள் புகைப்படம் எடுத்ததும், மணமக்களை மட்டும் தனித்தனியாகவும், சேர்ந்தும் நிற்க வைத்து சில புகைப்படங்கள் எடுத்தார் புகைப்படக் கலைஞர்.
அது எடுத்து முடித்ததும், மணமக்களைச் சாப்பிட அழைத்துச் செல்ல, அவர்களுடன் ராகவர்தினியும் இளைஞர் பட்டாளமும் சென்றனர்.
“நீங்க எங்கே வர்றீங்க? நீங்களுமா இன்னும் சாப்பிடலை?” அவர்களை விசாரித்தான் பிரபஞ்சன்.
“அதெல்லாம் அப்பவே ஒரு வெட்டு வெட்டியாச்சு அத்தான்…” நாவை சப்பு கொட்டி சொன்னாள் ராகவர்தினி.
“அப்புறம் இன்னும் என்ன? இரண்டாவது ரவுண்டா?” என்று கேட்டான்.
“நோ அத்தான், இப்ப வருவதே எங்களுக்கு வேற ஒரு வேலை இருக்கு, அதைப் பார்க்கத்தான்…” என்று கண்சிமிட்டி சிரித்தாள்.
“ஏய், என்ன பண்ண போறீங்க?” என்று அரண்டு போய்க் கேட்டான்.
“இன்னும் கொஞ்ச நேரத்தில் நீங்களே பார்ப்பீங்க அத்தான்…” என்று குறும்புடன் சொன்னாள்.
“ஏடாகூடமா ஏதாவது செய்து வைக்காதே ராகா. சுத்தி நிறையப் பேர் இருக்காங்க…” என்றான் சிறு கண்டிப்புடன்.
“அத்தான் இன்னைக்கு நீங்க புது மாப்பிள்ளை மட்டும் தான். நோ வாத்தி அவதாரம். உங்க வாத்தி அவதாரத்தை நாளைக்கு வரை அடக்கி வைங்க…” என்று ராகா சொல்ல, அது நந்திதாவின் காதிலும் விழுந்தது.
அவர்களுக்குள் ஏதோ கலாட்டா என்று அமைதியாக இருந்தாள்.
“சொன்னா நீ அடங்க மாட்டியே ராக்கம்மா…” என்று சலிப்பாகச் சொன்னவன் அவள் போக்கில் விட்டுவிட்டான்.
மணமக்கள் இருவரும் பந்தியில் அமர, இருவருக்கும் பரிமாறி முடித்ததும், இருவரும் உணவில் கை வைக்க, “வெய்ட்! வெய்ட்!” என்றாள் ராகவர்தினி.
“இப்ப என்ன? சாப்பிட விடு ராகா. இவ்வளவு நேரம் நின்றிருந்தது டயர்டாகி பசிக்குது…” என்றான் பிரபஞ்சன்.
“சாப்பிடலாம் அத்தான். அதுக்கு முன்னாடி, உங்க இலையில் இருக்கும் ஸ்வீட் எடுத்து அக்காவுக்கு ஊட்டுங்க…” என்றாள்.
“ஹேய், அது நாளைக்குக் கல்யாணம் முடிந்த பிறகு பார்த்துக்கலாம்…” என்று மறுத்தான்.
“அது நீங்க தம்பதியா ஆன பிறகு நார்மலா நடக்கும் சடங்கு அத்தான். இப்ப நிச்சயம் முடிந்ததைச் செலிபிரேட் செய்ய நீங்க இனிப்பு கொடுங்க…” என்றாள் பிடிவாதமாக.
“ராகா, என்ன இது?” என்று அவன் மறுக்க,
“சொன்னா கேளுங்க அத்தான்…” என்றவள், “போட்டோகிராபர், இங்கே வாங்க. எங்க அத்தான் இப்ப அக்காவுக்கு ஊட்டி விடப் போறார். போட்டோ எடுங்க…” என்று அவரை விரட்டினாள்.
அவரும் தயாராக இருக்க, “ம்ம், லேட் பண்ணாதீங்க அத்தான்…” என்றாள்.
லேசான தயக்கமும், மனதிற்குள் எழுந்த ஆர்வமுமாகத் தன் இலையில் இருந்த இனிப்பை எடுத்து நந்திதாவிற்கு ஊட்டி விட்டான்.
“அக்கா, இப்ப நீங்க…” என்றாள் ராகவர்தினி.
நந்திதாவும் ஊட்ட, பிரபஞ்சன் மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டான்.
“இப்ப சாப்பிடலாம்ல பெரிய மனுஷி?” என்று ராகவர்தினியிடம் சலிப்பாகக் கேட்டான்.
“என்னமோ உங்களுக்குப் பிடிக்காத மாதிரி ஏன் இந்தச் சலிப்பு அத்தான்? அதெல்லாம் உங்க முகம் உங்க வெட்கத்தையும், சந்தோஷத்தையும் வெளிச்சம் போட்டு காட்டிருச்சு…” என்று அவனை வாரினாள்.
‘உன்கிட்ட இருந்து தப்பிக்க முடியுமா?’ என்று முணங்கிக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தான்.
ராகவர்தினி அவர்கள் சாப்பிட்டு முடிக்கட்டும் என்று தனது உறவு பட்டாளங்களுடன் டைனிங் ஹாலை விட்டு சென்று விட்டாள்.
பிரபஞ்சன் பாதிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே, வெளியே ஏதோ சலசலவென்று சப்தம் கேட்டது.
“என்ன சத்தம் அது?” என்று தன்னருகில் இருந்த நந்திதாவிடம் கேட்டான் பிரபஞ்சன்.
“தெரியலையே?” என்று அவள் உதட்டை பிதுக்க,
அப்போது, “அத்தான்…” என்று பதறி அங்கே ஓடி வந்தாள் ராகவர்தினி.
“என்னாச்சு, இவள் ஏன் இப்படி ஓடி வர்றா?” என்று அவன் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த போது அவளின் பின் மூன்று பெண் காவலர்கள் வந்து கொண்டிருந்தனர்.
போலீஸ் எதற்கு இங்கே வந்திருக்கிறார்கள் என்பது போல் கேள்வியாகப் பார்த்துக் கொண்டே தன் இருக்கையை விட்டு எழுந்தான் பிரபஞ்சன்.
அவனின் எதிரே வந்த ஒரு பெண் போலீஸ், “நீ தானே பிரபஞ்சன், *** ஸ்கூல் வாத்தியார்?” என்று கேட்டார்.
“ஆமா மேடம். என்னாச்சு? என்ன பிரச்சனை?” என்று கேட்டான்.
“நீ தான் பிரச்சனை. ஏன்யா நீ எல்லாம் ஒரு வாத்தியாரா? பிள்ளைங்க படிக்க வந்தால் படுக்க வாவென்று கூப்பிடுவியோ?” என்று கோபமாக அந்தப் பெண் போலீஸ் கேட்க, பிரபஞ்சன் தன் தலையில் இடி விழுந்தது போல் அவரைப் பார்த்தான்.
நந்திதா அதிர்ந்து அவனையும், போலீஸையும் பார்த்தாள்.
பிரபஞ்சனுக்கு உலகமே இருண்டு போனது போல் இருந்தது. அந்தப் போலீஸ் சொன்னதை நம்ப முடியாமல் உறைந்து போய் நின்றான் பிரபஞ்சன்.
“மேடம், நீங்க ஏதோ தப்பா புரிஞ்சிக்கிட்டு பேசுறீங்கன்னு நினைக்கிறேன். என் அத்தான் அப்படிப்பட்டவர் இல்லை…” என்று பதறி மறுத்தாள் ராகவர்தனி.
“ஏய், நீ யாருமா? எங்களுக்குக் கம்பளைண்ட் வந்திருக்கு. இவன் வாத்தியார் என்ற போர்வையில் அவன் கிட்ட படிக்க வந்த பொண்ணுங்களுக்கு எல்லாம் செக்ஸுவல் டார்ச்சர் கொடுத்திருக்கான். போ அந்தப் பக்கம்…” என்று ராகவர்தினியை விரட்டிய போலீஸ்,
“இந்தா வாத்தி, நீயே போலீஸ் ஸ்டேஷன் வர்றியா? நாங்க இழுத்துட்டு போகவா?” என்று கோபமாகப் பிரபஞ்சனைப் பார்த்து இரைந்தார்.
அவரின் கத்தலில் தான் நினைவு வந்தது போல் தலையைக் குலுக்கி அவரைப் பார்த்தான்.
“மேடம், நான் எந்தத் தவறும் செய்யலை. என்னை நம்புங்க…” என்றான்.
“எங்களுக்கு வந்திருக்கிற ஆதாரத்தை நம்பித்தான் வந்திருக்கோம். கிளம்பு ஸ்டேசனுக்கு என்ன இருந்தாலும் அங்கே எங்க விசாரணையில் வந்து பேசு…” என்று அதட்டினார்.
அவ்வளவு நேரம் அவன் அருகில் நின்றிருந்த நந்திதா சட்டென்று அவனை விட்டு விலகி நின்று அவனை அருவருப்பாகப் பார்த்தாள்.
அதிலேயே அவளின் எண்ணம் புரிந்து அடிபட்டது போல் அவளைப் பார்த்தான் பிரபஞ்சன். அவளின் அருவருப்பு பார்வை அவனைக் கொல்லாமல் கொன்றது.
“மேடம், என் அத்தான் ரொம்ப நல்லவர். அவர் பொண்ணுங்களைத் தவறா கூடப் பார்க்க மாட்டார். அவரை விட்டுடுங்க…” என்று கதறினாள் ராகவர்தினி.
“இப்ப நீ அந்தப் பக்கம் போறீயா இல்லையா?” என்று அதட்டியவர்,
“உன்கிட்ட படிக்கிற பொண்ணுக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்ததால் உன்னைப் போஸ்கோ சட்டத்தில் அரெஸ்ட் பண்றேன் பிரபஞ்சன். நட, போலீஸ் ஸ்டேஷனுக்கு…” என்று பிரபஞ்சனை அழுத்தமாக அழைத்தார் அந்தப் பெண் காவல்துறை அதிகாரி.