6 – இன்னுயிராய் ஜனித்தாய்
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 6
“கிளம்பலாமாங்க?” என்று துர்காவின் வீட்டு வாசலின் முன் நின்று கேட்டான் நித்திலன்.
“இதோ வர்றேன்…” என்று உள்ளிருந்து குரல் கொடுத்த துர்கா, “எல்லாம் பக்கத்துலேயே எடுத்து வச்சுருக்கேன்பா. நான் சீக்கிரமே வந்துடுறேன்…” என்று தந்தையிடம் தெரிவித்தாள்.
“என்னைப் பத்தி கவலைப்படாதேமா. நீ தான் இது போல எந்த விஷேசத்துக்கும் போறது இல்லை. இன்னைக்காவது சந்தோஷமா போயிட்டு வா…” என்று அனுப்பி வைத்தார் சபரிநாதன்.
“சரிப்பா, போயிட்டு வர்றேன்…” என்று சொல்லிவிட்டு குழந்தையுடன் வெளியே வந்தாள் துர்கா.
“போயிட்டு வர்றோம் அங்கிள்…” வாசலிலிருந்த படியே உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தான் நித்திலன்.
“சரிங்க தம்பி. புது இடம், கொஞ்சம் பார்த்துக்கோங்க தம்பி…” என்றார்.
“பார்த்துக்கிறேன் அங்கிள். கவலைப்படாதீங்க…” என்றவன் ஆட்டோ அருகில் சென்றான்.
“நீங்க பின்னாடி உட்காருங்க…” என்றவன் தான் முன்னால் ஆட்டோ டிரைவர் அருகில் அமர்ந்து கொண்டான்.
அந்த நேரம் வருணா தூங்கிக் கொண்டிருந்ததால் ஆட்டோவில் அமைதியாக இருந்தது.
வருணாவை மடியில் படுக்க வைத்து அணைவாகப் பிடித்துக் கொண்டு வந்தாள் துர்கா.
“மெயின் ரோட்டில் முன்னாடி உட்கார முடியாது சார்…” என்று ஆட்டோ ட்ரைவர் சொல்ல, சங்கடமாகத் துர்காவைத் திரும்பிப் பார்த்தான் நித்திலன்.
இடைவெளி விட்டே என்றாலும் அவள் அருகில் அமர சங்கடப்பட்டே முன்னால் அமர்ந்தான். ஆட்டோ பிடிக்கும் போதே டிரைவரிடம் சொல்லவும் செய்திருந்தான்.
ஆனால் பிரதான சாலையில் காவல்துறையினர் வண்டியைத் தடுப்பார்கள் என்று டிரைவரும் சொல்லியிருந்தார்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
அதனால் அவனுக்கு வேறு வழி இருக்கவில்லை.
துர்காவும் சூழ்நிலை புரிந்து எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.
சொல்வதும் அபத்தம் என்ற புரிதல் அவளுக்கு இருந்தது.
ஆனாலும் சற்றுநேரத்தில் ஆட்டோ ட்ரைவர் வண்டியை நிறுத்தவும், தயக்கத்துடனே தான் பின்னால் வந்து அமர்ந்தான்.
விட்டால் வெளியே குதித்து விடுபவன் போல் தான் அமர்ந்து வந்தான் நித்திலன்.
அவனின் அந்தக் கண்ணியம் துர்காவின் கருத்தில் பதிந்தது.
தங்களைப் பற்றி எந்தத் தவறான பேச்சும் எழுந்து விடக்கூடாது என்று அவன் கவனத்துடன் நடந்து கொள்வது அவளுக்குப் புரியத்தான் செய்தது.
அவளும் அவ்வாறே தான் நடந்து கொண்டாள்.
தந்தையின் அறுவைசிகிச்சைக்கு ஆன செலவை இன்னும் அவனுக்கு அவள் கொடுத்திருக்கவில்லை.
அவனும் கேட்கவில்லை. ஆனால் இன்னும் கொடுக்காமல் இருக்கிறோமே என்ற உறுத்தல் அவளுக்கு இருந்தது.
அவளிடம் இருந்த நகையை அடகு வைக்கப் போக இன்னும் அவளுக்கு நேரம் வாய்க்கவில்லை.
தந்தையை அருகில் இருந்து பார்த்துக் கொள்ள வேண்டியது இருந்தது. அதோடு குழந்தையும் ஏனோ சில நாட்களாக அழுது கொண்டே இருந்தாள்.
அவளை வைத்துக் கொண்டு துர்காவால் அலைய முடியவில்லை.
அதனால் முரளியின் மனைவி ஷாலினியிடம் விஷேசத்திற்கு வரவில்லை என்று எவ்வளவோ மறுத்துப் பார்த்தாள்.
ஆனால் ஷாலினி காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை.
குழந்தைக்கும் ஒரு மாற்றம் தேவைப்படும் என்று அழைத்தாள். அதுவும் ஒரு முறை கூட நேரில் பார்க்காமல் உரிமையோடு விஷேசத்திற்கு அழைத்தது அவளை நெகிழ்த்தியிருந்தது.
சொந்த அத்தை, அதுவும் மாமியாரே, ‘என் வீட்டு விஷேசத்திற்கு நீ வர தேவையில்லை’ என்று சொல்லி விட்டுச் சென்றிருக்க, யாரென்று அறியாத ஒரு மூன்றாம் மனிதர் வலிந்து அழைத்துக் கொண்டிருந்தாள்.
அதுவும் அன்றோடு விட்டு விடாமல் அன்றே துர்காவின் அலைபேசி எண்ணை வாங்கி அடிக்கடி துர்காவிடம் பேச ஆரம்பித்தாள் ஷாலினி.
முகம் அறியாமல் காதல் மட்டுமல்ல நட்பும் மலரும் என்பதை நிரூபிப்பது போல் ஷாலினி துர்காவிடம் சில நாட்களிலேயே நட்பு பாராட்ட ஆரம்பித்தாள்.
வாழ்க்கையைத் தொலைத்து விட்டு வந்ததிலிருந்து துர்காவிற்கென்று ஒரு நெருங்கிய நட்பே இல்லாமல் போய்விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
படிக்கும் போது இருந்த நட்புகள் எல்லாம் படிப்பு முடிந்தவுடன் தொடர்பு இல்லாமல் போக, வாழ்க்கையைத் தொலைத்த பிறகு தானே யாரின் நட்பையும் நாடாமல் ஒதுங்கிக் கொண்டாள் துர்கா.
அவள் வாங்கிய பல வலி கொடுக்கும் சொற்கள் அவளை ஒதுங்க வைத்திருந்தது.
அதிலும் இரண்டு மாதத்திலேயே கணவனை இழந்தவள் என்ற முத்திரை குத்தி யாராவது மீண்டும் மீண்டும் அவளைக் காயப்படுத்த, காயங்கள் வேண்டாம்! காலம் தந்த வாழ்க்கையைக் கழித்தாலே போதும் என்ற நிலைக்கு வந்திருந்தாள்.
இப்போது ஷாலினிக்குத் தன்னைப் பற்றித் தெரியாமல் அழைத்திருக்கலாம் என்ற நினைப்பில் அவளே தன்னைப் பற்றி அவளிடம் பகிர்ந்து கொண்டாள்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
ஆனால் அவள் சொன்னதைப் பொறுமையாகக் கேட்ட ஷாலினி சொன்னது இன்னும் துர்காவின் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.
‘உன் கணவன் திருமணமான இரண்டு மாதத்திலேயே இறந்து போனது அவரோட துரதிஷ்டம். உன் கூட வாழ அவருக்குக் கொடுத்து வைக்கலை. அதுக்கு நீ என்ன பண்ண முடியும்? இதில் எங்கிருந்து ராசியானவள், ராசியில்லாதவள் வந்தது? இந்த மாதிரி மூடநம்பிக்கை எல்லாம் எனக்கோ, என் கணவருக்கோ இல்லை. அதனால் மனதை போட்டு குழம்பிக் கொள்ளாமல் எங்கள் மகள் பிறந்தநாளுக்கு வா…’ என்று துர்காவை அழைத்திருந்தாள்.
அவள் மீண்டும் மீண்டும் அழைத்த பிறகு மறுக்க முடியாமல் இதோ கிளம்பிவிட்டாள் துர்கா.
ஷாலினியைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் போதே மடியில் தூங்கிக் கொண்டு வந்த வருணா சிணுங்கிக் கொண்டே எழுந்துவிட்டாள்.
அவளைத் தூக்கி தோளில் போட்டு தட்டிக் கொடுத்தாள் துர்கா.
“என்ன குட்டிம்மா, எழுந்தாச்சா?” என்று நித்திலன் கேட்க, அப்போது தான் அவனும் ஆட்டோவில் தான் இருக்கிறான் என்பதை விழிகளை நன்றாகத் திறந்து பார்த்தாள் வருணா.
அவனைப் பார்த்தும் அவனைத் தூக்க சொல்லி கை நீட்ட, நித்திலனும் உடனே அவளைத் தூக்கிக் கொண்டான்.
அவனின் கைக்குச் சென்றதும் அவள் அழுகையை நிறுத்தி விட, இப்போதெல்லாம் மகள் அவனிடம் மிகவும் ஒட்டிக் கொள்வதை யோசனையுடன் பார்த்தாள் துர்கா.
அவளை மேலும் யோசிக்க விடாமல் முரளியின் வீடு வந்திருந்தது.
“இந்த வீடு தான், நிறுத்துங்க…” என்று நித்திலன் சொல்லவும், இப்போது தான் முதல் முதலாக ஷாலினி குடும்பத்தினரைப் பார்க்க போகிறோம் என்றதில் துர்காவிடம் லேசான பதட்டம் வந்தது.
ஆட்டோவை விட்டு இறங்கி நித்திலன் பணம் கொடுக்க, ஆட்டோவின் அருகில் நின்று தயக்கத்துடன் ஷாலினியின் வீட்டைப் பார்த்தாள்.
வீட்டுக் கதவு லேசாகத் திறந்து இருக்க, உள்ளே இருந்து பேச்சுக் குரல்கள் கேட்டுக் கொண்டிருந்தன.
நித்திலன் ஆட்டோக்குப் பணம் கொடுத்து முடித்த போது வேகமாக வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்தான் முரளி.
“வா நித்திலா, வாங்க துர்கா, ஹேய் குட்டி பேபி, வாங்க…” என்று மூவரையும் வரவேற்றான்.
“இன்னும் கேக் வெட்டலை தானே முரளி?” என்று நித்திலன் பேச்சுக் கொடுக்க, துர்கா லேசாகப் புன்னகைத்து விட்டு அமைதியாக இருந்தாள்.
“இன்னும் இல்லை நித்திலன். இன்னும் ஐஞ்சு நிமிஷத்தில் வெட்டுவோம். உள்ளே வாங்க, போவோம்…” என்று உள்ளே அழைத்துச் சென்றான்.
குழந்தையுடன் நித்திலன் முரளியுடன் நடக்க, அவர்களின் பின்னால் துர்கா சென்றாள்.
அவர்கள் உள்ளே நுழைந்ததும், வேகமாக அங்கே வந்தாள் ஷாலினி.
“நித்திலன் அண்ணா வாங்க. இவங்க தான் உங்கள் மனம் கவர்ந்த குட்டிம்மாவா?” என்று வருணாவின் கன்னத்தை லேசாக வருடியவள்,
“ஹாய் துர்கா, வா. கொஞ்சம் நேரமே வந்துருக்கக் கூடாது? அப்பா எப்படி இருக்காங்க? தனியா சமாளிச்சுப்பாங்க தானே?” என்று வெகுநாட்கள் பழகியவள் போல் படபடவென்று பேசி வரவேற்ற ஷாலினியைப் பார்த்து புன்முறுவல் பூத்தாள் துர்கா.
“அப்பா நல்ல இருக்கார்…” என்று மட்டும் சொன்னதும்,
“வா… வா… உள்ளே போகலாம், அண்ணா வாங்க, கேக் வெட்டலாம். கேக் வெட்டியதும் நாம சாவகாசமா பேசுவோம் துர்கா…” என்று மூவரையும் கேக் வெட்டும் இடத்திற்கு அழைத்துச் சென்றாள்.
அங்கே தன் உறவினருடன் இருந்த மகளைத் துர்காவிற்கு அறிமுகப்படுத்தி வைத்தாள்.
அங்கே வந்திருந்த ஒவ்வொருவரையும் துர்காவின் பார்வை சுற்றி வந்தது. அனைவருமே ஜெகஜோதியாக ஜொலித்தனர்.
துர்கா எப்போதும் போல் சிம்பிளாக வந்திருந்தாள்.
தான் அந்த இடத்தில் ஒட்டாத ஆள் போல் தெரிய, ஒதுங்கி நிற்க முயன்றாள் துர்கா.
“ஆன்ட்டி, இப்படி வந்து நில்லுங்க…” என்று அவளை ஒதுங்கி நிற்க விடாமல் ஒரு குட்டிப் பெண் ஆட்களோடு நிற்க வைத்தாள்.
அப்போது ஷாலினி அவளைப் பார்த்து ‘அங்கேயே நில்!’ என்பது போல் ஜாடை காட்ட, குட்டிப் பெண் ஷாலினியின் ஏற்பாடு என்று அவளுக்குப் புரிந்து போனது.
நொடியில் நெக்குருகி போனது துர்காவின் மனம்!
நித்திலன், வருணாவுடன் ஒரு பக்கம் நிற்க, அவர்களின் அருகிலேயே துர்காவை நிற்க வைத்து விட்டுப் போனாள் அந்தக் குட்டிப் பெண்.
அப்போது அவர்கள் மூவரும் ஒரே குடும்பம் போல் தெரிந்தனர். அதைத் துர்காவோ, நித்திலனோ உணரவே இல்லை.
சிறிது நேரத்தில் ‘ஹேப்பிப் பிரத்டே’ பாடல் அனைவரும் பாடி கை தட்ட, முரளி, ஷாலினியின் குழந்தை நேகா கேக்கை வெட்ட, வருணாவும் உற்சாகத்துடன் கை தட்டினாள்.
மகளின் உற்சாகத்தை ஆசையுடன் பார்த்தாள் துர்கா.
மகள் வந்திருக்கும் முதல் விஷேசம் இது. சுற்றிலும் கட்டியிருந்த பலூன்களையும், வண்ணத்தாள்களையும், அங்கே வந்திருந்த குழந்தைகளையும் பார்த்துச் சந்தோசமாக ஆர்ப்பரித்தாள் வருணா.
நித்திலன் கையில் அவள் துள்ளிக் குதித்தபடி சந்தோஷமாகக் கை தட்ட, அவனும் அவளின் சந்தோஷத்தை கண்டு பூரிப்படைந்தான்.
கேக் வெட்டியதும் ஒரு தட்டில் அனைவருக்கும் விநியோகம் செய்ய ஆரம்பித்தனர்.
நித்திலனிடம் ஒரு தட்டை கொடுக்க, கேக் துண்டை ஆர்வத்துடன் பார்த்தாள் வருணா.
“கேக் சாப்பிடுவோமா குட்டிம்மா?” என்று கேட்டுக் கொண்டே அங்கிருந்த ஒரு இருக்கையில் அவளுடன் அமர்ந்தான்.
“அவளை என்கிட்ட கொடுத்துட்டு நீங்க சாப்பிடுங்க…” என்று வருணாவை வாங்க கையை நீட்டினாள் துர்கா.
நித்திலனுக்குத் தானே குழந்தைக்கு ஊட்டி விட ஆசையாக இருந்தது.
ஆனால் தன் ஆசையைத் தனக்குள்ளேயே மறைத்துக் கொண்டு துர்காவிடம் குழந்தையை நீட்டினான்.
ஆனால் குழந்தையோ அன்னையிடம் போகாமல் அவன் மடியிலேயே உட்கார அடம்பிடிக்க ஆரம்பிக்க, சிலரின் கவனம் இவர்கள் புறம் திரும்ப ஆரம்பித்தது.
“சரி, அழாதே!” என்று மகளிடம் சொன்னவள், “நீங்களே ஊட்டுங்க…” என்று நித்திலனிடம் சொல்லிவிட்டு விலகி இன்னொரு இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
குழந்தைக்கு மகிழ்ச்சியுடன் ஊட்ட ஆரம்பித்தான் நித்திலன்.
துர்காவின் யோசனை படிந்த பார்வை இருவரின் மீதும் படிந்தது.
மகள் வர வர ரொம்ப அடம்பிடிக்கிறாள். நித்திலனை பார்த்து விட்டால் அவனைத் தவிர யாரிடமும் செல்வதில்லை. தன்னிடம் கூட!
இதெல்லாம் நல்லதிற்கா? கெட்டதிற்கா?
நித்திலனையும் அவளால் தவறாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.
அவன் இயல்பாகத்தான் நடந்து கொள்கிறான். தவறான பார்வையோ, செய்கையோ இல்லை என்பதால் அவனையும் ‘ஒதுங்கி நில்!’ என்று ஒதுக்கி நிறுத்த முடியவில்லை.
அவனின் நல்ல குணத்தை எல்லாம் பின்னுக்குத் தள்ளி அவனை ‘ஒதுங்கி நில்!’ என்று தானே இன்னும் சில நாட்களில் தள்ளி நிறுத்தப் போகிறோம் என்று அப்போது துர்கா நினைத்திருக்கவில்லை.
துர்கா தனது கேக் துண்டை உண்டு முடித்து விட்டு மகள் செய்யும் சேட்டைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
நித்திலன் பார்த்துப் பார்த்துக் கவனித்துப் பொறுமையுடன் குழந்தைக்கு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தான்.
ஆனாலும் தன் முகத்தில் எல்லாம் ஈஷி கொண்டதோடு மட்டுமில்லாமல் நித்திலனின் சட்டையையும் பாழாக்கிக் கொண்டிருந்தாள் வருணா.
நித்திலனும் அதற்காகச் சிறிதும் கவலைப்பட்டது போல் தெரியவில்லை. அவனின் முகத்தில் சந்தோஷமும், பூரிப்பும் தான் கூத்தாடியது.
துர்காவிற்குத் தான் பதறியது. ஆனாலும் எழுந்து சென்று மகளை அதட்ட முடியவில்லை.
புது இடத்தில் மற்றவர்களின் கவனம் தங்கள் மேல் திரும்புவதை அவள் விரும்பவில்லை. அதனால் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டாள்.
அதோடு இவனால் எப்படித் தன் மகளை இவ்வளவு பொறுமையாகக் கையாள முடிகிறது என்று தான் பார்த்துக் கொண்டிருந்தாள் துர்கா.
விருந்தினர்களைக் கவனித்து அவர்கள் அனைவருக்கும் கேக்கை கொடுத்துவிட்டு துர்காவின் அருகில் வந்தாள் ஷாலினி.
அவளும் நித்திலனையும், வருணாவையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்.
குறிப்பாக வருணாவுடன் இருக்கும் போது நித்திலனின் முகத்தில் வந்துபோகும் மாற்றங்களைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் சுற்றி உள்ளவர்களைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் தனக்கும் குழந்தைக்குமான உலகத்தில் மூழ்கிப் போனான் நித்திலன்.
“அப்புறம் துர்கா, உன் பொண்ணு ரொம்பத் துறுதுறுன்னு க்யூட்டா இருக்கா, அம்மாவை போல…” என்று மென்மையாகச் சிரித்தபடி ஷாலினி சொல்ல, துர்காவும் பதிலுக்கு அமைதியான சிரிப்பை மட்டும் பதிலாகத் தந்தாள்.
“நித்திலன் வேறு நபர்கள் யாரைப் பற்றியும் குறிப்பிட்டு பேசியதில்லைன்னு முரளி சொல்லுவார். ஆனா கொஞ்ச நாளா வருணா புராணம் தான் நித்திலன் வாயிலிருந்து வருதாம். முரளிக்கே ஆச்சரியம்!
அதான் எனக்கும் ஆர்வம் வந்து உங்களையும் பங்ஷனுக்கு அழைச்சுட்டு வரச் சொன்னேன். இப்ப உங்கிட்ட பேசியதும், உன்னையும் எனக்குப் பிடிச்சுப் போச்சு. இனி நாம ஃபிரண்ட்ஸ்” என்ற ஷாலினி துர்காவின் கைப்பற்றிக் குலுக்கினாள்.
“நாம தான் போனிலேயே ஃபிரண்ட்ஸ் ஆகிட்டோமே…” துர்கா சொல்ல,
“அப்படியா? ஆனா அப்படித் தெரியலையே?” என்று சந்தேகமாக இழுத்தாள் ஷாலினி.
“ஏன்?” கேள்வியுடன் பார்த்தாள்.
“ஃபிரண்ட் வீட்டில் அப்ப என்ன தயக்கம்? ஒதுங்கி ஒதுங்கி நிற்க நினைக்கிற…” உரிமையுடன் கேட்டாள்.
துர்கா தன் மென்மையான சிரிப்பை மட்டுமே பதிலாகக் கொடுக்க,
“சிரித்து மழுப்பக் கூடாது!” நண்பியாக அதட்டினாள்.
துர்காவின் சிரிப்பு லேசாக மறைந்தது.
“நான் பங்ஷன் எல்லாம் போய்ப் பல மாசம் ஆகுது ஷாலினி. என்னை யாரும் கூப்பிட மாட்டாங்க. நானும் போக ஆசைப்பட்டது இல்லை. நான் கடைசியா கொண்டாடிய பங்ஷன் என் கல்யாணம் தான்…” என்று மரத்துப் போன குரலில் சொன்ன துர்காவின் கையை ஆறுதலாக அழுத்தினாள் ஷாலினி.
“அங்கே பார் குட்டி நித்திலனை என்ன பாடுபடுத்துறாள்னு…” என்று அவள் மனதை திசை திருப்ப, வருணாவைக் கைக் காட்டினாள்.
அங்கே நித்திலனுக்கு ஊட்டி விடுகிறேன் என்று வருணா கேக்கை கையில் எடுத்து அவனின் உதடு, மீசை, கன்னம் எல்லாம் தடவி விட்டுக் கொண்டிருந்தாள்.
அவனும் ஏதோ அமிர்தம் கிடைத்தது போல் கண்களில் கனிவுடன் உதட்டில் பட்ட கேக்கை நாக்கை நீட்டி சுவைத்துக் கொண்டிருந்தான்.
அப்போது மகளின் செய்கையில் துர்கா பதறிப் போக, ஷாலினி கண்டதோ நித்திலனின் கண்கள் கலங்கியதைத்தான்!
சுற்றம் மறந்து குழந்தையிடம் லயித்திருந்தவன் கூடத் தன் கண்கள் கலங்கியதை உணர்ந்தானா என்று தெரியவில்லை.
துர்கா எழுந்து மகளைத் தூக்கச் செல்ல, அவளின் கைப் பற்றித் தடுத்தாள் ஷாலினி.
“நித்திலனே பேசாம இருக்காரே. விட்டுடு துர்கா. குழந்தை தானே…” என்றாள்.
“அவர் சட்டை எல்லாம் ஏற்கனவே பாழாக்கிட்டாள். இப்ப முகம் பூரா பூசி வைக்கிறா…” மகளின் செயல் பிடிக்காத பாவனையில் சொல்ல,
“கொஞ்ச நேரத்தில் அவளே ஃபோர் அடிச்சு விட்டுருவா…” என்று நித்திலனின் மனநிலையை மாற்ற விரும்பாமல் சொன்னாள் ஷாலினி.
துர்காவால் அதற்கு மேல் அமைதியாக இருக்க முடியும் என்று தோன்றவில்லை.
“நித்திலன் பற்றி நீ என்ன நினைக்கிற துர்கா?” என்று கேட்டு அவளின் கவனத்தைத் தன் புறம் திரும்பினாள் ஷாலினி.
‘என்ன அர்த்தத்தில் இந்தக் கேள்வியைக் கேட்கிறாய்?’ என்பதைப் போல் ஷாலினியைப் பார்த்தாள்.
‘என்ன மாதிரியாக நீ எடுத்துக் கொண்டாலும் சரி’ என்ற பாவனைக் காட்டினாள் ஷாலினி.
தாங்கள் சந்திக்கும் முதல் நாளே அந்தக் கேள்வியைக் கேட்க ஷாலினி விரும்பவில்லை தான்.
ஆனாலும் கேட்காமலும் அவளால் இருக்க முடியவில்லை.
“எங்களுக்கு நிறைய உதவி செய்திருக்காங்க. என்கிட்ட மத்த ஆம்பிளைங்க காட்டும் முகம் அவங்ககிட்ட இல்லை. வருணா மூலமா என்னை அணுக நினைக்கும் குணமும் இல்லை…” என்று இப்போது சொன்னவள் அறியவில்லை, தானே அவனிடம் குழந்தை மூலம் தன்னை அணுக நினைத்தாயா என்ற கேள்வியை அவன் முகத்தைப் பார்த்துக் கேட்கப் போகிறோம் என்று.
அவள் கேள்வியில் நித்திலனின் மனம் சுக்கல் சுக்கலாக உடைந்து போகும் என்பதையும் துர்கா அறியவில்லை.
அறியாமையால் அனர்த்தங்கள் நிகழப் போவதை நிகழ் காலத்தில் அங்கிருந்த யாரும் அறியத்தான் இல்லை.