5 – வல்லினமாய் நீ! மெல்லினமாய் நான்!

அத்தியாயம் – 5

“அம்மா ப்ளீஸ், நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க…” என்று கெஞ்சிய மகனின் முகத்தைப் பார்க்க பிடிக்காமல் திரும்பி நின்றிருந்தார் மீனாம்பிகை.

“அம்மா…” என்று சர்வேஸ்வரன் மீண்டும் அழைக்க, அவரோ இன்னும் இறுகி போய்த்தான் நின்றிருந்தார்.

“இந்த ஊருக்கு நாட்டாமையா பொறுப்பேத்து நம்ம வீட்டுக்கு மட்டுமில்லாம, இந்த ஊருக்கும் பேரு சொல்லும் பிள்ளையா என் புள்ள நிக்கிறான்னு இம்புட்டு நாளும் பெருமைபட்டுக்கிட்டுக் கிடந்தேன்.

ஆனா இப்போ ஒரே நாளுல எம்மவன் அவுலா ஊருக்கார வாயிக்கு மெல்ல ஆகிப்புட்டான்னு விசனப்பட வச்சுப்புட்டானே. இந்தக் கிரகத்தை நான் எங்கன போயி சொல்லுவேன்…” என்று புலம்ப ஆரம்பித்தார்.

“அம்மா இப்ப என்ன ஆகிப்போச்சுன்னு இப்படிப் புலம்புறீங்க? மனசுக்குப் பிடிச்சவளை கல்யாணம் தானே கட்டியிருக்கேன்…” என்றான்.

“ஓஹோ! நான் உமக்குப் பொண்ணு பார்த்து, சொந்தபந்தத்தைக் கூட்டிட்டு போய் நிச்சயம் பண்ணி, ஊரு சனத்துக்கு முறைப்படி கல்யாண பத்திரிகை கொடுத்து, பொண்ணழைப்பு, சீர் செனத்தி செஞ்சி, வந்தவகளை வாங்க, வாங்கன்னு வரவேத்தா உம்ம கல்யாணம் நடந்தது?” என்று நீட்டி முழங்கி எகத்தாளமாகக் கேட்டவர்,

“நீரு விருப்பப்பட்டீர்ன்னு உமக்குப் பிடிச்ச படிப்பா படிக்க வைச்சு, படிச்ச படிப்புக்கு வெளியூரு போயி சோலி பார்க்க ஆசைப்பட்டீர்னு அதுக்கும் அனுப்பி வச்சா, நீரு அப்பன், ஆத்தாளுக்கே தெரியாம கமுக்கமா கல்யாணம் கட்டியிருக்கீரு.

அதையும் ரெண்டு வருசம் கழிச்சித்தான், அதுவும் ஊரார் முன்னாடி சொல்றீரு. அப்போ உம்மைப் பெத்த அப்பன், ஆத்தாளுக்கு என்ன ராசா மதிப்பு?

ஆசை மவன் இப்படி எல்லாம் செஞ்சு பெத்தவக வயிறை எரிய விடுவான்னு முன்னாடியே தெரிஞ்சு தான் உம்ம அய்யன் முன்கூட்டியே போய்ச் சேர்ந்துட்டாரு போல. ஆனா எனக்குத் தான் அந்தக் கொடுப்பினை இல்லாம போச்சு…” என்று சொன்னவர் கண்ணீர் வடிக்க ஆரம்பித்தார்.

“அம்மா, என்னம்மா பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசுறீங்க? நான் வேணும்னே எதுவும் பண்ணலைமா. சூழ்நிலை அப்படி அமைஞ்சு போயிருச்சு…” என்றான்.

“அப்படி என்ன ராசா சூழ்நிலை? பெத்தவகளுக்குக் கூடத் தெரியாம கல்யாணம் கட்டும் அளவுக்கு?” என்று கேட்டார்.

“அதும்மா…” என்றவனால் மேலும் சொல்ல முடியவில்லை.

சில விஷயங்களை வெளியே சொல்ல முடிவதுமில்லை. அந்த நிலையில் தான் சர்வேஸ்வரனும் இருந்தான்.

“காரணத்தைக் கூடச் சொல்ல முடியாத அளவுக்கு எங்க ராசா என்னமோ பண்ணிருக்காருன்னு நினைக்கும் போது நெஞ்சு அடைக்குதுப்பு. நீ கட்டிட்டு வந்த மகராசி என்ன குலமோ, கோத்திரமோ, எப்படிப்பட்டவளோ? அதாவது உமக்குத் தெரியுமா, தெரியாதா?” என்று கேட்டார்.

“சக்தி குடும்பம் நல்ல குடும்பம் தான் மா. அவளும் ரொம்ப நல்ல பொண்ணு. என் மேல உள்ள மனஸ்தாபத்தில் கொஞ்சம் துடுக்குத்தனமா இருக்குறா…” என்றான்.

“நல்ல குடும்பமா இருந்தா சரி தான். ஏதோ அந்த வகையில் கொஞ்சம் திருப்தி பட்டுக்கிறேன். ஆனா உன் பொஞ்சாதியைக் கொஞ்சம் அடக்கியே வை. பேண்டு, சட்டையை மாட்டிக்கிட்டு ஆம்பளை பய கணக்கா சுத்துறா. அதெல்லாம் கொஞ்சமும் நல்லா இல்லை. நமக்குன்னு மட்டுமருவாதை எல்லாம் இருக்கு…” என்றார்.

“அதெல்லாம் நேத்து நைட்டே சொல்லிட்டேன் மா. அதைப் பத்தி நீங்க கவலைப்படாதீங்க…” என்ற மகனிடம், “சரி தான்” என்று சொல்லி விட்டு நகர்ந்தார் மீனாம்பிகை.

மகன் என்ன தான் சமாதானமாகப் பேச முயன்றிருந்தாலும் அவரால் சக்தியை அவ்வளவு சீக்கிரம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மகனின் திடீர் திருமணத்தையும் தான்.

அன்னை இன்று சில நிமிடங்கள் என்றாலும் தன்னிடம் முகம் கொடுத்து பேசினாரே என்ற நிம்மதியுடன் தனது அறைக்குச் சென்றான்.

அவர்களின் வீடு பழமையும், புதுமையும் கலந்ததாக இருந்தது. தரைத்தளத்தில் முழுவதும் பழமை மட்டுமே.

குளியலறை கூடத் தரைத்தளத்தில் வைத்துக் கொள்ளவில்லை. அதற்கு வீட்டின் பின்பக்கம் இருந்த கிணற்றடிக்குத் தான் செல்ல வேண்டும். கிணற்றை ஒட்டியே குளியலறை கட்டப்பட்டிருந்தது.

மேல் தளத்தில் மட்டும் மகனின் விருப்பத்திற்காக அவனின் அறையுடன் குளியலறை கட்டப்பட்டிருந்தது.

மகன் பள்ளிப்படிப்பை முடித்ததும் அனைவரும் கம்ப்யூட்டர் படிப்பை பெருமையாகப் பேசுவதைக் கேட்டு அவனும் அதைப் படிக்க விருப்பம் தெரிவிக்க, மதுரை கல்லூரியில் கணினி பிரிவில் பொறியியல் படிக்க வைத்தனர்.

படிப்பு முடிந்த கையுடன் சர்வேஸ்வரனுக்குச் சென்னையில் வேலை கிடைக்க, அவனை அவ்வளவு தூரம் அனுப்ப விருப்பமில்லை என்றாலும் அவனின் ஆசைக்காகவே அனுப்பி வைத்தனர்.

கிராமத்தை விட்டு வெளியே படிக்கச் செல்லவுமே அவனின் பேச்சு, வழக்கம் எல்லாம் மாற ஆரம்பித்தது. அதையும் கூட அவனின் பெற்றவர்கள் பெருமையாக நினைத்தது உண்டு.

அவன் வேலைக்குச் சென்ற பிறகும் இங்கே கிராமத்தில் அனைத்தும் நல்லபடியாகவே நடந்து கொண்டிருந்தது.

ஆனால் ஒரு நாள் நிலைமை மாறியது.

சர்வேஸ்வரனின் தந்தை திடீரென இறைவனடி சேர்ந்து விட, அப்போது இங்கே வந்த சர்வேஸ்வரனால் மீண்டும் சென்னைக்குச் செல்ல முடியாமல் போனது.

அவனின் தந்தை அந்த ஊர் நாட்டாமை என்பதால் பரம்பரை முறைப்படி அடுத்து அவன் நாட்டாமை ஆகவேண்டிய கட்டாயம் இருக்க, அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டான்.

அதோடு வீட்டிற்கு ஒரே மகனான அவன் தான் நிலம், சொத்துக்களை எல்லாம் பராமரிக்க வேண்டியது இருந்ததால் கணினி வேலையை விட்டுவிட்டு விவசாயியாக ஆகிப்போனான்.

சக்தி இன்றும் பேண்ட், டீசர்ட் மாட்டிக் கொண்டு கீழே இறங்கி வந்து விடுவாளோ என்ற எண்ணத்தில் வேகமாக மேலே சென்றான்.

ஆனால் அவன் நினைத்த படி இல்லாமல் சந்தன நிற புடவை கட்டி, தலைக்குக் குளித்து அதன் ஈரம் காயாமல் நுனியில் கொட்டிய நீர்துளிகளுடன் தலையை விரித்து விட்டு, ஜன்னல் அருகில் அவனுக்கு முதுகை காட்டிய படி நின்று கொண்டு யாரிடமோ மெல்லிய குரலில் கைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தாள்.

சில நொடிகளிலேயே அவள் யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாள் என்று புரிந்து போனது.

ஆனால் அதைப் பற்றி ஒன்றும் பெரிதாக நினைக்காமல் சேலை கட்டியிருந்த பின்னழகை ரசிக்க ஆரம்பித்தான் சர்வேஸ்வரன்.

எப்போதும் அவள் சேலை கட்டுவது எல்லாம் அதிசயமான ஒன்று தான்.

பெரும்பாலான நாட்கள் ஜீன்ஸ், டீசர்ட் தான் அவளின் உடையாக இருக்கும். அவ்வப்போது சல்வார் அணிவாள்.

இரண்டு வருடங்களுக்கு முன் அவள் சேலை கட்டிய தருணம் இன்றும் அவனுக்கு நினைவில் இருந்தது.

அந்நாள் தான் முதல் முதலாக அவர்கள் முத்தமிட்டுக் கொண்ட தருணமும் கூட என்பதால் அந்நினைவு அவனின் மனதில் பசுமையாக ஒளி வீசிக் கொண்டிருந்தது.

அதன் பிறகு நேற்று அவர்கள் திருமணத்திற்குத் தான் சேலை அணிந்திருந்தாள்.

நேற்று இரவு என்னதான் அவன் கண்டித்திருந்தாலும் அவனின் மீதிருக்கும் கோபத்தில் வீம்பிற்காக இன்றும் அவள் ஜீன்ஸ், டீசர்ட் மாட்டிக் கொள்வாள் என்று தான் நினைத்திருந்தான்.

அதனால் சேலை அணிவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை என்பதால் திடீரெனக் கிடைத்த அவளின் சேலை தரிசனத்தை ரசித்துப் பார்த்தான்.

“அப்பா, ஸாரிப்பா…” என்ற அவளின் மன்னிப்பு குரல் கேட்க, அவனின் கவனம் உரையாடல் பக்கம் திரும்பியது.

தங்களின் திடீர் திருமணத்திற்கு அவளின் தந்தையிடம் மன்னிப்பு கேட்கிறாள் என்று புரிந்தது.

“தேங்க்யூ பா… தேங்க்யூ சோ மச்… நீங்க என்ன சொல்லுவீங்களோனு பயந்துட்டே இருந்தேன். பிரேம் எங்க கல்யாணத்தை அவன் போனில் போட்டோ எடுத்தான் பா. அவன் உங்களைப் பார்க்க வரும் போது காட்டுவான். பாருங்க…” என்ற சக்தியின் உற்சாகக் குரலே அவளின் தந்தை தங்கள் திருமணத்தை ஏற்றுக்கொண்டார் என்பதை அவனுக்குத் தெரியப்படுத்தியது.

“ஓகேப்பா. டேப்லெட்ஸ் எல்லாம் சரியா சாப்பிடுங்க. நாம கூடிய சீக்கிரமே நேரில் பார்க்கலாம்…” என்று பேசி முடித்துவிட்டு திரும்பிய சக்தி அங்கே நின்று கொண்டிருந்த கணவனைக் கேள்வியுடன் பார்த்தாள்.

“உன் அப்பா என்ன சொன்னார்?” என்று கேட்டான்.

“உங்களைப் பார்த்தால் ரொம்ப நேரம் இங்கே நின்னுட்டு இருக்குற மாதிரி இருக்கு. அப்போ நான் பேசியதை கேட்டுயிருப்பீங்க தானே?” என்று கேட்டாள்.

“ஏன் நீ சொன்னா குறைஞ்சிடுவியா?”

“குறைந்து தான் போய்டுவேன்னு சொன்னா என்ன பண்ணுவீங்க?” என்று பதிலுக்குப் புருவம் உயர்த்திக் கேட்டவளை முறைத்தான்.

அவனின் முறைப்பு சற்று நேரத்தில் ரசனையாக மாறியது.

ஒருபக்க புருவத்தை உயர்த்தி, உதட்டை லேசாகச் சுழித்துக் கைகளைக் கம்பீரமாகக் கட்டிக்கொண்டு கேட்டவளை அவனால் ரசிக்கத்தான் முடிந்தது.

அவனின் பார்வையில் வித்தியாசத்தைக் கண்டவள்,“என்ன பார்வை? அப்படியே கண்ணுமுழியைத் தோண்டிடுவேன்…” என்றாள் மிரட்டலாக.

“ஆஹான்! அப்படியா? எங்கே நோண்டேன் பார்ப்போம்…” என்றவன் அவளை மெதுவாக நெருங்கினான்.

அவள் நின்றிருந்த ஜன்னல் அருகிலேயே அவளைச் சுற்றி கையை ஊன்றி சிறைபிடித்தவன், “ம்ம்ம்… இதோ உனக்கு வசதியா நிக்கிறேன். கண்ணை நோண்டு…” என்று கண்களைப் பெரிதாக விரித்துக் காட்டினான்.

அவனின் கண்களைக் கண்ணுற்றவளுக்கு அவனின் கண்களில் இருந்த காதல் தான் தெரிந்தது.

அக்காதல் அவளையும் மோனநிலைக்குத் தள்ள முயல, அதில் மூழ்கிவிடாமல் இருக்கத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளப் போராடிப் போனாள்.

அவளின் தடுமாற்றம் அவனுக்கும் புரிய, உதட்டோரம் புன்னகையை நெளிய விட்டுக் கொண்டான்.

“கட்டிய மனைவியைக் கைவளைவில் வச்சுக்கிட்டுக் கட்டுப்பாடா இருப்பது எவ்வளவு கஷ்டம்னு உனக்குத் தெரியுமா சக்தி?” என்று கிசுகிசுப்பான குரலில் கேட்டான்.

‘உன் மேல இருக்குற கோபத்தையும் இறுக்கி பிடிச்சுக்கிட்டு, உன் மேல உள்ள காதலையும் காட்டாமல் மறைத்து, என் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்துவது எவ்வளவு கஷ்டம்னு உனக்குப் புரியாது ஈஸ்வர்…’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் சக்தி.

தன் தடுமாற்றத்தை மறைக்கக் கண்களைச் சில நொடிகள் மூடி தன்னைக் கட்டுப்படுத்தி நிலைப்படுத்திக் கொண்டவள் தீர்க்கமாகக் கண்களைத் திறந்து பார்த்தாள்.

“நான் வந்த வேலை முடிந்ததும் இங்கே இருந்து போயிடுவேன். அதுக்குப் பிறகு உங்களுக்குன்னு ஒருத்தி வருவாள். அவளைக் கல்யாணம் பண்ணிட்டால் அப்புறம் நீங்க கட்டுப்பாடா இருக்க வேண்டிய அவசியம் வராது…” என்று அவனின் கண்களைப் பார்த்துக் கொண்டே நிதானமாகச் சொன்னாள்.

கேட்டவனின் முகத்தில் சுறுசுறுவென்று கோபம் ஏறியது.

“ஓஹோ! சக்தியார் அவ்வளவு பெரிய தியாகி ஆகிட்டாரோ?” என்று நக்கலாகக் கேட்டவன், ஆத்திரமாக அவளின் இரண்டு தோளில் மீதும் கைவைத்து அழுத்திப்பிடித்தான்.

“மனைவியாக இருந்தாலும் வேண்டாம்னு சொன்ன பிறகு வற்புறுத்த கூடாதுன்னு தான் நேத்து தள்ளிப் போனேன். என்னோட அந்த எண்ணத்தை மாத்த வச்சுடாதே!

எல்லா நேரமும் பொறுமையா போக நானும் பழைய சர்வேஸ்வரன் இல்லை. வார்த்தை வரம்பு மீறுச்சு…!” என்று அவன் எச்சரிக்க, அவளின் இதயம் அதிகவேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.

அவளைக் கடுமையாக எச்சரித்த வேகத்தில் தன் பிடியில் இருந்து அவளை உதறி தள்ள, ஜன்னலில் சென்று மோதி நின்றாள்.

“ம்ம், அப்புறம் உன் அப்பா எப்படி இருக்கார்? அவரோட ட்ரீட்மெண்ட் எல்லாம் எப்படிப் போயிட்டு இருக்கு?” என்று இதற்கு முன் ஒன்றுமே நடவாதது போலப் பேச்சை மாற்றினான்.

அவனின் கேள்வியில் அவளின் விழிகளில் வியப்பு வந்தது.

“என்ன அப்படிப் பார்க்கிற? உன் அப்பாவுக்கு உடம்பு சரியில்லாதது எல்லாம் எனக்கு எப்படித் தெரியும்னா?” என்று கேட்டான்.

அவளின் மௌனமே ‘ஆமாம்’ என்ற பதிலை அவனுக்குத் தந்தது.

“நீ இந்த ஊருக்கு வந்த அடுத்த நிமிஷம் உன்னைப் பத்தி விசாரிக்க ஆரம்பிச்சுட்டேன். நான் சென்னையிலிருந்து வந்து இரண்டு வருஷம் கழித்து என் ஊருக்கு நீ வந்துருக்கன்னா கண்டிப்பா அதுக்கு ஏதாவது காரணம் இருக்கும்னு யூகிச்சேன்.

என் மேல உள்ள காதலால் தான் வந்திருக்கியோன்னு நினைத்துக் கூடச் சந்தோஷப்பட்டிருக்கேன். ஆனா அது இல்லைன்னு எனக்கு உடனே தெரிய வந்துடுச்சு.

உன் அப்பா இப்ப எங்கே இருக்கார்? நீ எதுக்காக இந்த ஊருக்கு வந்த? எல்லா விவரமும் எனக்குத் தெரியும். நீ வந்த வேலை முடிந்தால் தானே நீ இங்கே இருந்து கிளம்ப முடியும்? நீ வந்த வேலை முடியாது. முடிய விடவும் மாட்டேன். நீயும் இங்கிருந்து போக முடியாது…” என்றான் கடுமையாக.

அவனின் கடுமையில் ஒரு நிமிடம் அரண்டு தான் போனாள் சக்தி. ஆனால் அடுத்த நிமிடமே தலையை உதறி சிலிர்த்தெழுந்தாள்.

“என்ன மிரட்டி பார்க்கிறயா சர்வேஸ்வரா? உன் அதட்டல் உருட்டலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன். நேத்து பிரேம்கிட்டயும், என்கிட்டயும் நீங்க வந்த வேலை முடிக்க விட மாட்டேன்னு நீ சொன்னப்பயே உனக்கு ஏதோ தெரிந்து இருக்குன்னு நினைச்சேன்.

உனக்குத் தெரிந்ததும் நல்லது தான். ஏன்னா அப்பத்தான் என் வேலை சீக்கிரம் முடியும். நானும் சீக்கிரம் இங்கிருந்து கிளம்ப முடியும்…” என்றாள் சக்தி.

“ஓஹோ! அப்படியா? அவ்வளவு நம்பிக்கையா? பார்ப்போம் சக்தியாரே! நீ நடத்திக் காட்ட வந்ததை நான் நடக்க விடாம செய்து காட்டுறேன்…” என்று சக்தியிடம் சவால் விட்டான் சர்வேஸ்வரன்.

‘நான் ஜெயித்துக் காட்டுகிறேன் பார்!’ என்பது போல வீராப்பாக நின்றிருந்தாள் சக்தி.