5 – சிந்தையில் பதிந்த சித்திரமே
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 5
“ரொம்பக் குளிரா இருக்கா சார்?” என்று மின்தூக்கியில் செல்லும் போது கதிர்நிலவனிடம் கேட்டாள் நயனிகா.
முழுக்கை சட்டை அணிந்து இரண்டு கைகளையும் மறைத்துக் கொண்டு கைகள் இரண்டையுமே பேண்ட் பாக்கெட்டுக்குள் விட்டு நின்றிருந்தான்.
அவளின் பக்கமாக இருந்த அவனின் இடது கை லேசாக நடுங்கிக் கொண்டிருப்பதைக் கவனித்துக் கேட்டாள்.
“ம்ம், லேசான குளிர் தான்…” என்றான்.
“நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா சார்?” என்று கேட்டாள்.
அவளின் பக்கம் லேசாகக் கழுத்தை திருப்பிக் கேள்வியாகப் பார்த்தான்.
“நீங்க ஏன் லிப்ட் யூஸ் பண்ண மாட்டேங்கிறீங்க சார்? நீங்க லிப்டில் வருவதை இன்னைக்குத்தான் பார்க்கிறேன்…” என்றாள்.
“வேலை வேலைன்னு ஓடுறோமே தவிர உடலுக்கு அதிக உழைப்பு கொடுக்க முடிவதில்லை. அதான் கிடைக்கும் சந்தர்ப்பத்தை இது போல் படிகளில் செல்வது, நடப்பதுன்னு பயன்படுத்துவேன். வேற பெருசா காரணம் இல்லை…” என்று லேசாகத் தோளை குலுக்கினான்.
அவனைச் சங்கடமாகப் பார்த்தாள் நயனிகா.
தந்தை ஐந்தாவது மாடியில் வீடு வாங்கியதற்குச் சுணங்கியவள் அவள். ஒரு நாள் மின்தூக்கி வேலை செய்யவில்லை என்றாலும் படியில், அதுவும் ஐந்து மாடி அல்லவா ஏறி செல்ல வேண்டும் என்று அன்னையிடம் புலம்பி இருக்கிறாள்.
‘இவர் என்னடா என்றால் லிப்ட் இருந்துமே தினமும், அதுவும் காலை, மாலை என்று ஏறி இறங்குகிறாரே…’ என்று நினைத்தவள் அவனை ஓரவிழியால் பார்த்தாள்.
அவனின் கட்டுக்கோப்பான உடல் அவனின் முயற்சியின் பலனை காட்டிக் கொண்டிருக்க, ‘அதான் சார் தொப்பை எதுவும் இல்லாம அழகா சூப்பரா இருக்கார் போல…’ என்று எண்ணிக் கொண்டாள்.
மின்தூக்கியை விட்டு வெளியே வந்ததும் “ஆட்டோ பிடிச்சு ஹாஸ்பிட்டல் போயிடலாமா சார்?” என்று கேட்டாள்.
“ஆமா, என்னால் கார் ஓட்ட முடியும்னு தோணலை. கேட் கிட்ட நிற்கிற வாட்ச்மேன் கிட்ட சொல்லு. அவர் ஆட்டோ பிடிச்சுட்டு வரட்டும்…” என்றான்.
அவளும் காவலாளியிடம் சொல்லிவிட, அவர் ஆட்டோவை அழைத்துக் கொண்டு வந்தார்.
ஆட்டோ வரும் வரை கூட நிலையாக நிற்க முடியாமல் அங்கிருந்த தூணில் சாய்ந்து நின்று கொண்டான் கதிர்நிலவன்.
அவளின் முன் தான் தைரியமாகக் காட்டிக் கொண்டு பேசுகிறானே தவிர அவனால் ஒன்றுமே முடியவில்லை. அப்படியே கீழே அமர்ந்து கொள்ள வேண்டும் போல், படுத்துக் கொள்ள வேண்டும் போல் தோன்றியது.
வெளியே சொல்லாவிட்டாலும் அவள் துணைக்கு வருவது ஒரு தெம்பையும் கொடுத்தது.
என்றுமே உடல்நிலை சரியில்லை என்றால் தனியாகத் தான் மருத்துவமனை செல்வான். ஆனால் செல்லும் முன் மிகவும் சிரமப்பட்டுப் போவான்.
மயக்கம் வந்து எங்கேயாவது விழுந்தால் கூடத் தன்னைக் கேட்பார் யாரும் தனக்கு இல்லையே என்று அவனின் மனம் விசனப்பட்டுப் போகும்.
ஆனால் இன்றோ அப்படி எந்தச் சுணக்கமும் இல்லாமல் இருந்தான்.
ஆட்டோவில் மருத்துவமனை சென்று காத்திருந்து மருத்துவரை பார்த்து, அவனுக்கான மருந்தையும் வாங்கிக் கொடுத்து… என்று நயனிகா அவனுக்குப் பெரும் உதவியாக இருந்தாள்.
மீண்டும் ஆட்டோ பிடித்து இருவரும் வீட்டிற்கு வர, சோஃபாவில் சோர்ந்து அமர்ந்தவன், நன்றியுடன் நயனிகாவை பார்த்தான்.
தான் விரட்டி கதவை அடைத்தும் தனக்காகத் தன்னிடமே கெஞ்சி தானாக முன்வந்து உதவி செய்தவளின் மீது நன்றிவுணர்வு வந்தது.
“ரொம்ப நன்றி நயனிகா…” என்றான் ஆத்மார்த்தமாக.
“பரவாயில்லை சார். எங்க கதிர் சாருக்கு உடம்பு சரியில்லைனா பார்த்துட்டு சும்மா இருக்க முடியுமா சார்? நீங்க படுத்து ரெஸ்ட் எடுங்க சார். நைட்டுக்கு நான் சாப்பாடு கொண்டு வர்றேன்…” என்றாள்.
“இல்ல, வேண்டாம். நான் பார்த்துக்கிறேன். இதுவரை நீயும், உன் அம்மாவும் உதவி செய்ததே பெருசு…” என்று மறுத்தான்.
“அப்படி ஒன்னும் இதெல்லாம் பெரிய உதவி இல்லை தம்பி. நயனி சொன்ன மாதிரி அவள் நைட்டுக்கு சாப்பாடு கொண்டு வருவாள். மறுப்பு சொல்லாம சாப்பிடுங்க. இப்ப உங்களுக்கு ரெஸ்ட் தான் ரொம்ப முக்கியம். வேலை பார்த்து இன்னும் உடம்பை கெடுத்துக்க வேண்டாம் தம்பி. உங்க அம்மா இதைச் சொன்னா கேட்பீங்க தானே? என்னை உங்க அம்மா போல நினைச்சுக்கோங்க…” என்றபடி அங்கே வந்தார் அபிராமி.
‘அம்மா’ என்ற வார்த்தை அவனை அடித்து வீழ்த்த, மௌனமாய்த் தலையை மட்டுமே அவனால் அசைக்க முடிந்தது.
அன்று மட்டுமில்லை. மறுநாளும் மூன்று வேளையும் நயனிகாவின் வீட்டில் இருந்து தான் அவனுக்கு உணவு வந்தது. அவன் மறுநாள் மறுத்துப் பார்த்தும் அபிராமி விடவில்லை.
மூன்றாவது நாளே காய்ச்சல் குறைந்து தன் வேலைகளைத் தானே பார்த்துக் கொள்ளும் அளவு தேறியிருந்தான்.
அதன் பிறகு அபிராமியையும், நயனிகாவையும் பார்த்தால் எரிந்து விழாமல் சிறு புன்முறுவலுடன் கடந்து விடுவான்.
“இங்க அக்கம்பக்கத்தில் சொல்ற போல அந்தத் தம்பி இல்லை நயனி. நல்லவராத்தான் இருக்கார். யாரையும் ஒதுக்கி வைக்கணும் என்ற எண்ணத்தை விடத் தான் ஒதுங்கி கொள்வோம் என்ற எண்ணம் தான் அவரிடம் நிறையத் தெரியுது.
எனக்கு என்னமோ அந்தத் தம்பி தனக்குள்ளேயே ஒரு வட்டம் போட்டு அதுக்குள்ள இருந்துக்க நினைக்கிறார்னு தோணுது. அது எதனாலோ காயப்பட்டதால் இருக்கும்னு மனசுக்கு படுது. பாவம் அந்தத் தம்பி அப்படி என்ன காயப்பட்டுச்சோ…” என்று அபிராமி மகளிடம் சொன்னார்.
அது அவளுக்கும் அன்றே தோன்றியது தானே. அதனால் அன்னைக்கு ஆமோதிப்பாகத் தலையை அசைத்தாள் நயனிகா.
“காலேஜில் உங்களுக்குப் பிடிச்ச சார் யாருன்னு கேட்டால் கதிர்நிலவன் சார்ன்னு எல்லா ஸ்டுடெண்டும் சொல்ற அளவுக்கு எல்லார் மனதையும் கவர்ந்துட்டார்மா. ஆனா வீட்டில் தான் தன் கூண்டை விட்டு வெளியே வராம இங்கே இப்படி இருக்கார்…” என்றாள்.
“ம்ம், யாரையும் வெளி நடவடிக்கையை மட்டும் வச்சு அவங்க குணத்தை நிர்ணயிக்கக் கூடாதுன்னு சொல்றதுக்கு இந்தத் தம்பி எடுத்துக்காட்டா இருக்கார்…” என்றார் அபிராமி.
நாட்கள் அதன் வேகத்தில் சென்று கொண்டிருந்தது.
இன்னும் ஒருவாரத்தில் வருடந்தோரும் நடக்கும் கல்லூரி கலை விழா நடைபெறுவதாக இருந்தது.
ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு கல்லூரியில் சில கல்லூரிகள் சேர்ந்து போட்டி போல் கலை விழா நடைபெறும்.
இந்த வருடம் நயனிகா படிக்கும் கல்லூரியில் தான் விழா நடப்பதாக இருந்தது.
தங்கள் திறமையைக் காட்டும் முயற்சியுடன் மற்ற கல்லூரி மாணவ மாணவிகள் தங்கள் பங்களிப்பையும் வழங்குவதாக இருந்தனர்.
நயனிகா நடனம் ஆட பெயர் கொடுத்திருந்தாள்.
படிப்பு ஒரு பக்கம் சென்று கொண்டிருந்தாலும், கலை விழாவிற்கான பயிற்சியும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது.
விழாவிற்காகக் கதிர்நிலவனுக்கும் சில பொறுப்புகள் ஒதுக்கப்பட்டிருக்க, அவன் அந்த வேலையும் பார்த்துக் கொண்டிருந்தான்.
நாட்கள் நெருங்க கல்லூரி விழா கோலம் பூண்டது.
வெள்ளிக்கிழமையான அன்று தான் கல்லூரி விழா.
காலையில் நயனிகா வீட்டை விட்டு கிளம்பும் அதே நேரத்தில் தான் கதிர்நிலவனும் கிளம்பினான்.
அவனைப் பார்த்ததும் “குட்மார்னிங் சார்…” என்றாள்.
“குட்மார்னிங்… பங்சனுக்கு உன் வீட்டில் இருந்து யாரும் வரலையா?” என்று கேட்டான்.
இன்று மாணவர்கள் தங்கள் வீட்டில் இருந்து பெற்றவர்களையும், உடன் பிறந்தவர்களையும் அழைத்து வரலாம் என்பதால் கேட்டான்.
“என்னோட டான்ஸ் ஈவ்னிங் தான் சார். அப்போ வர்றேன்னு சொல்லிட்டாங்க…” என்றாள்.
“ஓகே…” என்றவன் அவளை விட்டு விலகி நடந்தான். இருவரும் அவரவர் வண்டியில் கல்லூரி சென்று சேர்ந்தனர்.
அன்று காலையில் இருந்தே நிகழ்ச்சி ஆரம்பித்து விட்டது.
மற்ற ஐந்து கல்லூரியுடன், இவர்களின் கல்லூரியையும் சேர்த்து மொத்தம் ஆறு கல்லூரியின் விழா என்பதால் மாணவர்கள் கூட்டம் அலை மோதியது.
கதிர்நிலவன் பாடல் பாடும் மாணவர்களுக்கான ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்ததால் அவன் அந்த வேலையில் இருந்தான்.
நயனிகா தன் தோழிகளுடன் சுற்றி வருவதும், அங்கே போட்டிருந்த சிறு உணவகங்களில் வாங்கி உண்பதும், சிறிது நேரம் ஆடல், பாடல், நாடகம் போன்ற நிகழ்ச்சிகளைப் பார்ப்பதுமாக வலம் வந்து கொண்டிருந்தாள்.
“அந்தப் பையன் சூப்பரா பாட்டு பாடினான்ல பானு. நல்ல குரல்வளம் அவனுக்கு. டிவி நிகழ்ச்சிக்குப் போனால் பர்ஸ்ட் பிரைஸ் வாங்கிப் பெரிய சிங்கர் ஆகக் கூடச் சான்ஸ் இருக்கு…” என்று ஒரு மாணவனின் பாட்டைக் கேட்டு விட்டுச் சிலாகித்துத் தோழியிடம் சொன்னாள் நயனிகா.
“அதுக்கு முன்னாடி ஒரு பையனும் பொண்ணும் பாடினாங்களே அவங்களும் நல்லா பாடினாங்க நயனி. பாரேன், இப்போ எல்லாம் நிறையத் திறமையானவங்க தன்னோட திறமையை சரியா பயன்படுத்திக்கிறாங்க…” என்றாள் பானு.
“ம்ம், ஆமா… சரி வா. பப்ஸ் வாங்கிச் சாப்பிட்டு வரலாம். பசிக்கிற மாதிரி இருக்கு…” என்று நயனிகா அழைக்க,
“காலையிலிருந்து நிறையச் சாப்பிட்டாச்சு நயனி. இன்னும் இரண்டு மணி நேரத்தில் நீ டான்ஸ் வேற ஆடணும். சாப்பிட்டு மேடையில் அசைய கூட முடியாம போயிட போகுது…” என்று கேலியாகக் கலாய்த்தபடி அவளுடன் எழுந்து சென்றாள் பானு.
“வாவ்! என்னோட மஞ்சக்காட்டு மைனா டான்ஸ் ஆடப்போகுதாம்டா. நான் இன்னைக்கு மேடைக்குப் பக்கத்துலயே குத்த வச்சுக்கிட்டு என் அழகு மயிலோட ஆட்டத்தைப் பார்க்க போறேன்டா…” என்று அவர்களுக்குப் பின்னால் ஒருவன் தன் நண்பனிடம் சொல்லிக் கொண்டே வர, நயனிகாவும், பானுவும் திரும்பி பார்த்தனர்.
“ஹாய் மஞ்சக்காட்டு மைனா… நான் கூடப் பாட்டு பாடுவேன். உனக்குப் பாட்டு பாடுறவனை எல்லாம் ரொம்பப் பிடிக்கும் போல. நானும் சூப்பரா பாடுவேன். கேட்குறயா?” என்று கேட்டவனை எரிச்சலுடன் பாரத்தாள் நயனிகா.
குறுந்தாடியும், பரட்டை தலையும், ஒற்றைக் காதில் பெரிய வளையமும். ஒரு கையில் இரும்பு காப்புமாக நின்று கொண்டிருந்தான் அந்த மாணவன். அவனின் நண்பனும் அதே போல் கோலத்தில் தான் இருந்தான்.
இருவரும் வேறு கல்லூரி மாணவர்கள் என்பது புரிந்தது.
இருவரின் கண்களிலும் அப்பட்டமாகத் துகிலுரியும் பார்வை தெரிய, தோழிகள் இருவரும் கூசி போயினர்.
“நயனி, வா போயிடலாம்…” என்று தோழியைப் பதட்டத்துடன் அழைத்தாள் பானு.
அவர்களின் பதட்டத்தையும், கூச்சத்தையும் ரசித்துப் பார்த்த மாணவர்கள் இருவரும் அலட்சியமாகச் சிரித்துக் கொண்டனர்.
மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா
மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போனா
காதல் கலவரம் பூக்கும் அது இரவினில் வெயிலும் தாக்கும்
பூக்கள் பொதுக்குழு கூட்டும் நீ தலைமை தாங்க கேட்கும்
கன்னியே காதலில் முத்தங்கள் முதலீடு
இரவெல்லாம் லாபமே இழப்பது கிடையாது…
என்று உதட்டை ஒரு மாதிரியாகச் சுளித்துக் கொண்டே பாடியவன், “இரவினில் வெயிலும் தாக்குமான்னு தெரிஞ்சிக்கலாமா என் மஞ்சக்காட்டு மைனாவே?” என்று வக்கிரமாகக் கண்ணடித்துக் கொண்டே நயனிகாவை பார்த்துக் கேட்டான்.
“ச்சீ, த்தூ… பே…” என்று அருவெறுப்பாக முகத்தைச் சுளித்த நயனிகா, “வாடி போகலாம்…” பானுவை இழுத்துக் கொண்டு வேகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.
“மச்சி, மஞ்சள் சுடிதார் போட்ட மஞ்சக் காட்டு மைனா உனக்கு. பச்சை சுடிதார் போட்ட பச்சைக்கிளி எனக்கு…” என்று பானுவை பார்த்து இன்னொருவன் கேலியாகச் சொல்ல,
“வாடா மச்சி… வாடா மச்சி… ஜோடி போட்டு ஜோடி சேர்ந்துக்கலாம்…” என்று இரண்டு மாணவர்களும் விடாமல் நயனிகாவையும், பானுவையும் பின் தொடர்ந்தனர்.
“அவனுங்க நம்ம பின்னாடியே வர்றானுங்க நயனி. எனக்குப் பயமா இருக்குடி. பார்க்க பொறுக்கிங்க மாதிரி இருக்கானுங்க…” என்று பதறினாள் பானு.
“பதறாதே பானு. காலேஜில் இத்தனை பேர் இருக்கும் போது இவனுங்களால் என்ன பண்ண முடியும்?”
“இத்தனை பேர் இருந்தும் தானே இவனுங்க தன்னோட பொறுக்கி தனத்தைக் காட்டுறானுங்க. எனக்கு ரொம்பப் பயமா இருக்குடி. பேசாம வீட்டுக்கு போயிடுவோமா?”
“டான்ஸ் ப்ரோகிராம் இருக்கே? அப்படி எல்லாம் போக முடியாது பானு. இப்போ என்னோட அம்மா, அப்பா வந்திடுவாங்க. அவங்க கூடப் போய் உட்கார்ந்துக்கலாம். அதுவரை இவனுங்க கண்ணில் மண்ணைத் தூவலாம் வா…” என்ற நயனி, பானுவை அழைத்துக் கொண்டு அங்கே இருந்த ஒரு கடையின் கூட்டத்திற்குள் கலந்தாள்.
அங்கேயும் அந்த மாணவர்கள் பின்னால் வர, “இவனுங்க விட மாட்டானுங்க போலயே…” என்ற பானுவின் கண்ணிலிருந்து கண்ணீரே வர ஆரம்பித்து விட்டது.
நயனிகாவும் விட்டால் அழுதுவிடுவோம் என்ற நிலையில் தான் இருந்தாள்.
ஆனாலும் தன்னைத் தைரியமாகக் காட்டிக் கொண்டு பானுவின் கையை இறுக பற்றிக் கொண்டவள் இன்னொரு கடையின் கூட்டத்திற்குள் நுழைந்து அப்படியே லேசாகக் குனிந்து கொண்டே அந்தக் கடையின் பின் பக்கம் சென்றாள்.
அப்போது ஒரு மாணவ நண்பர்கள் கூட்டம் நயனிகாவையும், பானுவையும் மறைத்து விட, பின்னால் வந்த இரண்டு மாணவர்களுக்கும் பின் தொடர முடியாமல் போனது.
“தப்பிச்சிட்டோம்டி…” என்று குதூகலித்த நயனிகா, “வா, மேடை பக்கத்தில் போயிடலாம்…” என்றாள்.
இருவரும் மேடையின் அருகே போய் அமர்ந்து கொண்டனர்.
அதன் பிறகு அந்த மாணவர்கள் தங்கள் கண்ணில் படவில்லை என்றதும் தோழிகள் இருவரும் நிம்மதி மூச்சு விட்டுக் கொண்டனர்.
நயனிகாவின் பெற்றோரும் வந்து விட, அதன் பிறகு எந்தப் பிரச்சனையும் நேரவில்லை.
அவளின் நடனம் முடிந்ததும் பெற்றோருடனே வீடு சென்று விட்டாள்.
நயனிகா அந்த மாணவர்கள் கேலி செய்த விஷயத்தைத் தன் பெற்றோரிடம் சொல்லாமல் மறைத்து விட்டாள்.
இன்று மட்டும் தானே அந்த மாணவர்கள் தன்னைப் பார்த்து கேலி செய்தனர். இனி வழக்கம் போல் தானே தான் கல்லூரிக்கு எந்தப் பிரச்சனையும் இல்லாமல் சென்று வருவோம் என்று நினைத்தவள் அதைப் பெரிய விஷயமாகவும் எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால் அது முற்று புள்ளி அல்ல. அந்த மாணவன் போட்ட கமா தான் என்று அறியாமல் போனாள் நயனிகா.
திங்கள் அன்று வழக்கம் போல நயனிகா கல்லூரி சென்ற போது தன்னை யாரோ பின் தொடர்வது போல் உணர்ந்தாள்.
ஆனால் அவள் சுற்றி முற்றிப் பார்த்த போது அப்படி யாரும் கண்ணில் படவில்லை.
அதனால் தன் கற்பனை தான் என்று நினைத்துக் கொண்டு கல்லூரி சென்று சேர்ந்தாள். வழக்கம் போல அன்றைய நாள் சென்றது.
மாலையில் கல்லூரியை விட்டு அவள் கிளம்பிய சிறிது நேரத்தில் ஒரு பைக் தன்னைப் பின் தொடர்வதைக் கண்டு கொண்டாள்.
‘அச்சோ! எவன் அவன் இப்படிப் பின்னாடியே வர்றான்? இவன் தான் காலையிலும் என் பின்னாடி வந்திருப்பானோ?’ என்று பதட்டத்துடன் சட்டென்று ஒரு தெருவிற்குள் வண்டியை விட்டாள்.
அந்தப் பைக்கும் அதே தெருவிற்குள் நுழைய, அவன் தன்னைத்தான் பின் தொடர்கிறான் என்று அவளுக்கு உறுதியாகி போனது.
அவள் உறுதி செய்த அதே நேரத்தில் வேகமாக வந்த பைக் அவளை வழி மறைத்துக் கொண்டு நின்றது.
அதிலிருந்து ஹெல்மட்டை கழட்டிக் கொண்டு இறங்கி வந்தான் அன்று கல்லூரியில் கலாட்டா செய்த மாணவன்.
“ஹாய் மஞ்சக்காட்டு மைனா. இல்லை… இல்லை… இன்னைக்குச் சிவப்பு கலர் ட்ரெஸ்ல போட்டுருக்க. அப்போ என்ன சொல்லி கூப்பிடலாம்…” என்று கேட்டுக் கொண்டே அவளின் வண்டியை பிடித்து அவளை நகர விடாமல் பிடித்துக் கொண்டான்.
கிளையில் காணும் கிளியின் மூக்கு
விடலைப் பெண்ணின் வெற்றிலை நாக்கு
புத்தம் புதிதாய் ரத்த ரோஜா
பூமி தொடாத பிள்ளையின் பாதம்
எல்லாச் சிவப்பும் உந்தன் கோபம்
எல்லாச் சிவப்பும் உந்தன் கோபம்
“ஹான் இந்தப் பாட்டு பொருத்தமா இருக்குல? எப்படிக் கப்புன்னு பாட்டைப் புடுச்சேன் பார்த்தியா? இனி என்ன பண்ற தினம் ஒரு கலர் ட்ரெஸ்ல வருவியாம். இந்த மாமா உனக்காகக் கலர் கலர் பாட்டா எடுத்து விடுவேனாம்…” என்று அவளின் கழுத்தில் இருந்து கீழ் வரை ஒரு மாதிரியாகப் பார்த்துக் கொண்டே சொன்னான்.
“ஏய். என்னடா திமிரா? ஒழுங்கா வழியை விடு. என்ன தைரியம் இருந்தா என்னை வழி மறைப்ப?” என்று உள்ளுக்குள் பயம் இருந்தாலும் வெளியே படபடவென்று கேட்டாள் நயனிகா.
“என்ன செல்லக்குட்டி இப்படிக் கோவிச்சுக்கிற? மாமா உன்னைப் பார்த்ததுமே உன் பார்வையில் பட்டுன்னு விழுந்துட்டேன்டா, ஹா… கீழே இல்லை. காதலில் விழுந்துட்டேன்னு சொன்னேன். மாமா உன் மேல காதலில் விழுந்த மாதிரி, நீயும் என் மேல காதலில் விழுவியாம். அப்புறமா நாம ஒருத்தர் மேல ஒருத்தர் விழுந்து விளையாடுவோமாம்…” என்று கண்சிமிட்டி சொன்னவனைப் பார்த்து பதறி போனாள்.
“இதோ பாரு. என் வழியை விட்டு போயிடு. இல்லனா…” என்ன சொல்வது என்று அறியாமல் தடுமாற்றத்துடன் அவனை மிரட்ட முயன்றாள்.
“உன் வழியை விட்டுப் போறதுகா காலையிலிருந்து நீ வரும் வழியைக் கண்டு பிடிச்சு உன் பின்னாடி சுத்துறேன்னு நினைச்ச? இதோ பார் நயனிகா, நான் உன்னை லவ் பண்றேன். நீயும் என்னை லவ் பண்ணனும். பண்ண மாட்டேன்னு சொன்னேன்னு வச்சுக்கோ… சங்கை அறுத்துடுவேன்…” என்று மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி அவன் மிரட்ட,
மிரண்டு அதிர்ந்து குலைநடுங்க நின்று போனாள் நயனிகா.