5 – உனதன்பில் உயிர்த்தேன்

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 5

“எய்யா ராசு, நம்ம அம்மா நம்மை அனாதையா விட்டுப் போட்டு போயிருச்சுய்யா…” என்று ஆம்புலன்ஸை விட்டு இறங்கியதும் அங்கே நின்ற ராவுவை கட்டிக் கொண்டு அழுதாள் தேன்மலர்.

அவளின் அழுகையில் தவித்துப் போனது போலக் கண்களைச் சுற்றி சுழற்றிப் பார்த்தது ராசு.

பின்னால் தன் வண்டியில் வந்த வைரவேல் அவளின் அருகில் வந்தான்.

“வூட்டை திறக்க சாவி கொடு…” என்று மெல்லிய குரலில் கேட்டான்.

தன் உணர்வே இல்லாமல் தன்போக்கில் இடுப்பில் சொருகியிருந்த சாவியை எடுத்து அவனிடம் நீட்டினாள்.

அதை வாங்கிக் கொண்டு முன்னால் சென்றவன் வீட்டை திறந்து விட்டான்.

ஆம்புலன்ஸில் வந்த மருத்துவமனை ஊழியர்கள் நேற்று இந்நேரம் உயிரோடு இருந்த முத்தரசியை இன்று சடலமாக வண்டியிலிருந்து கீழே இறக்க, தேன்மலரின் கதறல் கூடியது.

முத்தரசியை அப்படிப் பார்த்ததும் தவிப்புடன் நிலையில்லாமல் துள்ளிக் குதித்த ராசு, ‘வவ்..வவ்…வவ்…” என்று தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது.

அதே நேரம் அதற்குள் விஷயம் கேள்விப்பட்டு ஊர்காரர்களும் சிலர் வர ஆரம்பித்திருந்தனர்.

ஆம்புலன்ஸ் ஊழியர்கள் முத்தரசியின் உடலை வீட்டிற்குச் சுமந்து சென்றனர்.

அதற்குள் வீட்டில் இருந்த பெஞ்சை எடுத்துக் கூடத்தில் போட்டிருந்தான் வைரவேல்.

முத்தரசியின் உடலை பெஞ்சில் கிடத்தி விட்டு ஊழியர்கள் செல்ல, பிணமாகக் கிடந்த அன்னையைக் கட்டிக் கொண்டு கதறி அழ ஆரம்பித்தாள் தேன்மலர்.

“திடீர்னு என்னாச்சு?” ஊர்மக்கள் துக்கம் விசாரிக்க, வைரவேல் நடந்ததைச் சொன்னான்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“திரும்ப ஜன்னி வரவும் டாக்டரு கையை விரிச்சுட்டார். நடுசாமமே உசுரு அடங்கிப் போச்சு. ஆஸ்பத்திரி வேலை எல்லாம் முடிச்சுட்டு ஒப்படைக்க விடிஞ்சி போயிருச்சு…” என்றான்.

பெண்கள் சிலர் தேன்மலருக்கு ஆதரவாகச் சென்று அமர்ந்தனர்.

ஆண் மக்கள் சிலரே வாசலில் நின்றிருந்தனர்.

“காரியமெல்லாம் பார்க்கணுமே யாரு பார்ப்பா?” என்று அங்கிருந்த ஒருவர் கேட்க, மற்ற யாரும் எதுவும் பேசாமல் அமைதியாகி போயினர்.

அங்கிருந்தவர்களை அமைதியாகப் பார்த்தான் வைரவேல். அவர்கள் நிற்கும் நிலையிலேயே யாரும் எதுவும் செய்ய மாட்டார்கள் என்பது உறுதியாகி போனது.

அவனின் பார்வை வீட்டிற்குள் அழுது கொண்டிருந்த தேன்மலரின் மீது படிந்தது.

அவள் தன் உணர்விலேயே இல்லை. அவளுக்கு இருந்த ஒரே ஒரு சொந்தமான அம்மாவும் இவ்வுலகை விட்டு செல்லவும் செய்வதறியாது தவிக்கும் பச்சைப் பிள்ளையென ஆகிப்போனாள்.

அவளின் துக்கத்தை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.

முத்தரசியின் இறுதி காரியத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டான்.

அதன் பிறகு அழுதே ஓய்ந்து போய்க் கிடந்தாள் தேன்மலர். அவளைத் தொந்தரவு செய்யாமல் இறுதி காரியங்களுக்கான ஏற்பாடு அனைத்தையும் செய்து முடித்தான் வைரவேல்.

மதியத்திற்கு மேல் உடலை எடுக்க, தேன்மலர் அழுத அழுகையில் கல் நெஞ்சமும் கரைந்து விடும். இறுதியாகத் தாயின் முகத்தைப் பார்த்து கதறி அழுதவளுக்கு மயக்கமே வந்துவிட்டிருந்தது.

உடன் இருந்த பெண்கள் தண்ணீர் தெளித்து அவளைத் தெளிய வைக்க, அன்னையை எடுத்துச் சென்றவர்கள் பக்கம் ஓடினாள்.

ராசு அவளுக்கு முன்னால் ஓடி முத்தரசியைத் தூக்கி சென்றவர்கள் கூடவே சென்றது.

அவர்களின் வயலை தாண்டி எடுத்துச் சென்றதும், அந்த இடத்திலேயே மடங்கி அமர்ந்து வாய் விட்டு உரக்க கதறி அழுதாள் தேன்மலர்.

பெண்கள் அவளைத் தாங்கி தூக்கிக் கொண்டு வந்து வீட்டில் விட்டனர்.

அதன் பிறகு என்ன நடந்தது என்பதே அவளின் ஞாபகத்தில் இல்லை.

பெண்கள் அவளைக் குளிக்கச் சொல்ல ஜடம் போல் தலைக்குக் குளித்து விட்டு வந்தாள்.

அவளின் நிலையைக் கண்டு ஒரு பெண்மணி வீட்டை கழுவி விட்டு, அவளுக்கு உண்ண உணவை செய்து வைத்தார்.

ஆனால் உணவு வேண்டாம் என்று மறுத்து விட்டு, அன்னை வழக்கமாகப் படுக்கும் இடத்தில் சுருண்டு படுத்துக் கொண்டாள்.

இரவு வரை அவளுடன் இரு பெண்கள் இருந்தனர். அவர்களும் அதற்கு மேல் தங்கள் குடும்பத்தைப் பார்க்க வேண்டும் என்று கிளம்பி விட்டனர்.

அந்த வீட்டிற்குள் அநாதரவாகக் கிடந்தாள் தேன்மலர்.

மயானத்தையே நீண்ட நேரம் சுற்றி சுற்றி வந்த ராசு அப்போது தான் வீடு வந்து சேர்ந்தது. அவள் சுருண்டு படுத்துக்கிடப்பதை பார்த்து அவளின் முகம் பார்த்த வண்ணம் தானும் படுத்துக் கொண்டது.

“இந்த அம்மாவுக்கு ஏன் ராசு இம்புட்டு அவசரம்? என்னைய தனியா விட்டுப் போக அதுக்கு எப்படி மனசு வந்துச்சு? இந்தக் காய்ச்சலு எல்லாம் என்னைய என்ன செய்யும்னு அம்மா கேட்டுச்சே.

ஆனா அந்தக் காய்ச்சலு அம்மாவையே இல்லாம ஆக்கிப்புடுச்சே. எமக்கு அம்புட்டும் ஏ அம்மா தானே ராசு. அது இல்லாம நா எப்படி வாழப் போறேன்? ம்மா… ஏன்மா என்னைய விட்டு போன?” என்று கேட்டவள் கதறி அழுதாள்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

படுத்திருந்த இடத்திலிருந்து எழுந்த ராசு அவளின் அருகில் சென்று ‘நானிருக்கிறேன் உனக்கு’ என்று தேற்றுவது போல் அவளின் கையில் தலை வைத்து படுத்துக் கொண்டது.

முத்தரசியின் இறுதி சடங்கு முடிந்ததும் வீட்டிற்கு வந்த வைரவேல் நேராக வீட்டின் பின் பக்கம் சென்று கிணற்றில் நீர் இறைத்துக் குளித்தான்.

இடுப்பில் கட்டிய துண்டுடன் வீட்டிற்குள் வந்தவன், நேராக அறைக்குச் சென்று உடையை மாற்றினான்.

அவன் செய்வதை எல்லாம் பார்த்துக் கொண்டு கூடத்தில் அமைதியாக அமர்ந்திருந்தார் அப்பத்தா.

உடையை மாற்றி விட்டு வெளியே வந்தவன் “சோறு போடும் அப்பத்தா. வயிறு தீயா காயிது…” என்றான்.

அப்பத்தா எழுந்து அவனுக்குத் தட்டில் உணவை வைத்துக் கொடுத்தார்.

அவன் உண்டு முடிக்கும் வரை அமைதியாக இருந்தார்.

உணவை முடித்தவன், “நா வயலு வரை போய்ட்டு வாறேன் அப்பத்தா. பூ லோடு கூலிக்கு வந்தவகளையே அனுப்ப சொல்லியிருந்தேன். அனுப்பிட்டாங்களா என்னன்னு பார்த்துப் போட்டு வாறேன்…” என்று வெளியே கிளம்பியவனை,

“எய்யா, செத்த நில்லு…” என்று நிறுத்தினார் அப்பத்தா.

“என்ன அப்பத்தா?”

“ராவுல ஏதோ அவசரம்னு அந்தத் தோப்புக்காரிக்கு ஒத்தாசை பண்ண போனீரு சரி, அதோட கிளம்பி வர வேண்டியது தானேய்யா? காலம்பரவரை ஆஸ்பத்திரியில இருந்து போட்டு, இப்போ காரியமும் நீரே பண்ணிப் போட்டு வந்துருக்கீரே… இதெல்லாம் என்னய்யா? அந்தப் புள்ள உன்னைய வூட்டுல கொண்டாந்து விட்டதுகே உம் மாமனாரு வரைக்கும் சேதி போயிருச்சு. இப்ப நீரு காரியமே பண்ணிப் போட்டு வந்த சேதி தெரிஞ்சா, என்ன ஆகும்னு யோசிச்சீரா?” என்று கேட்டார்.

“இதில் என்ன ஆக என்ன இருக்கு அப்பத்தா? எம் மாமனாருக்கு சேதி தெரிஞ்சா தேன் என்ன அப்பத்தா? நா என்ன தப்புக் காரியமா பண்ணிப் போட்டு வந்துருக்கேன்? கண்ணு முன்னாடி ஒரு உசுரு துடிச்சுக்கிட்டு இருந்தது.

அது பொழைச்சு வரட்டும்னு ஒத்தாசை பண்ணினேன். ஆனா அந்த உசுரு போயிருச்சு. ஒரு பொட்டை புள்ள ராவுல ஆத்தால இழந்துட்டு ஒத்தைல கதறி அழுதுச்சு. அந்தப் புள்ளய அப்படியே விட்டுப் போட்டு வர சொல்றீகளா?

நானும் ராவுல கிளம்பி வந்துருப்பேன்… அது ஆத்தா உசுரோட இருந்திருந்தா. ஆனா அதுக்குத் திரும்ப ஜன்னி வந்து உசுரு போயிரும்னு எதிர்பார்க்கவே இல்லை. அந்த நிலைமைல அந்தப் புள்ளய நா அப்படியே வுட்டுப் போட்டு வந்துருந்தா நா எல்லாம் மனுச பொறப்பே இல்லை அப்பத்தா…” என்றான்.

“அது சரிய்யா. ஆனா காரியம்?” அப்பத்தாவிற்கு ஏனோ அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

“சரியோ, தப்போ ஒரு விசயத்துல நா அங்கன முன்ன நின்னுப் போட்டேன் அப்பத்தா. அப்படி இருக்கும் போது அரையும், குறையுமா எப்படி அப்பத்தா விட்டு போட்டு வர முடியும்? அந்தப் புள்ளக்கு சொந்த பந்தம்னு இருந்திருந்தா, பொணத்தை வூட்டுக்குக் கொண்டாந்ததோட விலகி வந்துருப்பேன்.

அந்தப் புள்ள ஒத்தையா நின்னு கதறிக்கிட்டு இருக்கா. நம்ம வூரு ஆம்பளைக யாரும் காரியத்தைச் செய்ய மாட்டோம்னு வேடிக்கை பார்த்துக்கிட்டு நிக்கிறாக. அவுகளை மாதிரி எம்மையும் வேடிக்கை பார்க்க சொல்றீகளா? ஏற்கனவே மனுச பயலுகளுக்கு மனுச தன்மை செத்துப் போய்க்கிட்டு இருக்கு அப்பத்தா. அந்த மனுச பயலுகள்ல ஒருத்தனா என்னால இருக்க முடியாது அப்பத்தா…” என்றான் பட்டென்று.

அப்பத்தாவால் அதற்கு மேல் ஒன்றும் பேச முடியவில்லை. அமைதியாக நின்றார்.

“நீர் என்ன தேன் சொன்னாலும் இதை எல்லாம் எம்மால ஏத்துக்க முடியலை மாப்ள. நாம செய்ற ஒத்தாசை கூடத் தராதரம் பார்த்துத்தேன் செய்யணும்…” என்று சொல்லிக் கொண்டே அப்போது உள்ளே வந்தார் அவனின் மாமனார் கோவிந்தன்.

அவரைப் பார்த்துக் கண்களைச் சுருக்கினான் வைரவேல்.

“வாய்யா…” என்று அப்பத்தா வரவேற்க,

அதன் பிறகே “வாங்க மாமா…” என்று அவனும் கேள்வியுடன் பார்த்துக் கொண்டே வரவேற்றான்.

“என்னடா நேத்து தானே வந்துட்டுப் போட்டுப் போனான். அதுக்குள்ளார திரும்ப வந்துட்டானேன்னு நினைக்கிறீக போல?” என்று அவனிடம் கேட்டார்.

“அப்படி எல்லாம் இல்லைய்யா. இது உம்ம வூடு போல. எப்ப வேணும்னாலும் வரலாம்…” என்று பேரனுக்குப் பதில் அப்பத்தா தான் சொன்னார்.

வைரவேலுக்கு அவர் வந்த காரணம் புரிந்து போக, அவனின் முகம் இறுகிப் போனது.

அது அவருக்கும் புரிந்தாலும் அவனை விட இறுக்கமாக நின்றார் கோவிந்தன்.

“என்ன மாமா உம்மால ஏத்துக்கிட முடியலை?” என்று கேட்டான்.

“இதென்ன மாப்ள கேள்வி? நா வேற என்னத்தைச் சொல்ல போறேன். நீர் ஏன் அந்தத் தோப்புக்காரிக்குக் காரியம் செஞ்சிப்போட்டு வாறீரு?” என்று கேட்டார்.

“அப்பத்தாகிட்ட நா சொன்னதை எல்லாம் கேட்டுருப்பீரே மாமா? அதுக்கு மேல நீர் என்ன காரணம் எதிர்பார்க்கிறீரு?” தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு கேட்டான்.

“கோபப்படாதீக மாப்ள. வூருகாரவுக அம்புட்டு பேரும் வேடிக்கை பார்த்துட்டு போவும் போது நீரும் அது போல வர வேண்டியது தானே மாப்ள? அவ தராதரம் என்ன? நம்ம தராதரம் என்ன?” என்று கேட்டார்.

“உசுரு போனா அம்புட்டு பேரும் பொணம்தேன் மாமா. பொணத்துக்கிட்ட என்ன தராதரம் பார்க்க வேண்டி கிடக்கு?” என்று இப்போது வெளிப்படையாகவே கோபத்துடன் கேட்டான்.

“இது விதாண்டாவாதம் மாப்ள…” என்று அவரும் அடக்கப்பட்ட கோபத்துடன் சீறினார்.

“நீர் பேசுறது தேன் மாமா விதாண்டாவாதம். நா அப்படி என்ன செய்து போடுவேன்னு நீரு இப்படி என்னையவே வேவு பார்த்துக்கிட்டு இருக்கீரு?” என்று கேட்டான்.

“வேலு, போதும்! வாயை அடக்கும்யா!” என்று பேரனை சத்தம் போட்ட அப்பத்தா, “எய்யா நீரும் எதுக்கு இம்புட்டு கோபப்படுறீரு? ஏதோ அந்தப் பொட்டப்புள்ள அனாதையா நிக்கிதேன்னு எம் பேரன் காரியத்தை எடுத்துச் செய்து போட்டான். இனி என்ன அங்கன போயி ஒட்டு உறவுனா நிக்கப் போறான்? காரியம் முடிஞ்சது. அதோடு விட்டுப்புடும். இனி இது போல எதுவும் நடக்காது…” என்று கோவிந்தனிடம் சொல்லி அவரைச் சமாதானப்படுத்த முயன்றார்.

“நீர் சொன்னா சரிதேன் ஆத்தா. எல்லாம் நா நம்ம குடும்பக் கவுரதைக்காகத்தேன் யோசிக்கிறேன். சரி ஆத்தா, நா கிளம்புறேன். இங்கன பக்கத்துல ஒரு சோலி கிடக்கு. பார்த்துப்புட்டு வூரு போயி சேரணும்…” என்றார்.

“டீ தண்ணி வைக்கிறேன். குடிச்சுப் போட்டு போரும்யா…”

“இல்ல ஆத்தா, இப்பத்தேன் பக்கத்து வூரு டீ கடையில் குடிச்சேன். வாறேன் ஆத்தா, வாறேன் மாப்ள…” அதற்கு மேல் பேச்சை வளர்க்காமல் கிளம்பி விட்டார்.

“என்னய்யா நீ? உம் மாமனாருக்கிட்ட ஏன் அம்புட்டு வெடுக்கு வெடுக்குன்னு பேசுறீரு?” பேரனை கடிந்து கொண்டார் அப்பத்தா.

“நானாவா அப்பத்தா கோபப்படுறேன்? அவரு தானே என்னைய அப்படிப் பேச வைக்கிறாரு. அவரு ஏன் என்னைய வேவு பார்த்துக்கிட்டே இருக்காரு அப்பத்தா? நா என்ன செய்தா அவருக்கு என்ன? அப்படி நா என்ன செய்துபுடுவேன்னு அவரு பயப்படுறாரு?” என்று புரியாத குழப்பத்துடன் கேட்டான்.

அப்பத்தாவிற்குக் காரணம் புரியத்தான் செய்தது. ஆனால் அதைத் தான் சொன்னால் பேரன் மொத்தமாக மாமனாரையே வெறுத்து விடுவான் அல்லது தன்னைத் தானே வருத்திக் கொள்வான் என்று நினைத்தவர் அமைதியாக இருந்தார்.

“ச்சே, என்னமோ அப்பத்தா. ஏற்கனவே எம் பொஞ்சாதி போன துக்கமே எம் மனசை போட்டு அறுத்துக்கிட்டு கிடக்கு. இதுல இவரு வேற…” என்று அலுத்துக் கொண்டான்.

“விடும்யா. அவருக்கு என்ன ஆத்தாமையோ…” அப்பத்தா சொல்ல,

“சரி அப்பத்தா, நா வயலுக்குக் கிளம்புறேன்…” என்று கிளம்பிவிட்டான்.

வயலில் ஆட்கள் வீட்டுக்கு செல்ல தயாராக இருக்க, பூ லோடு சென்று விட்டதா என்று விசாரித்து அறிந்து கொண்டவன், அவர்களுக்குக் கூலியை கொடுத்து அனுப்பிவிட்டு நேராகக் கிணற்றடியில் சென்று அமர்ந்து விட்டான்.

அவனின் மனது மனைவியைச் சுற்றியே வலம் வந்தது. கூடவே அவளின் அப்பாவின் பேச்சை நினைத்து வருந்தி மனம் விட்டு பேசுவது போல மனைவியிடம் மனதிற்குள்ளேயே பேசினான்.

இருட்டும் நேரத்தில் வீட்டிற்குச் சென்றான்.

அன்றும் அவனுக்குக் குடிக்கத் தோன்றவில்லை. குழம்பிய மனதுடன் வீடு சென்று படுக்கையில் விழுந்தான்.

மறுநாளும் வழக்கம் போலத் தன் அன்றாட வேலைகளைப் பார்த்தான்.

தேன்மலருக்கு உதவி செய்ததுடன் வேலை முடிந்தது என அதன் பிறகு அவளை நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

தேன்மலர் அன்று வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை. ராசு அவ்வப்போது வெளியே வந்தாலும், அதிகமான நேரம் அவளுடனே இருந்தது.

கண்ணீரும், அழுகையும், புலம்பலுமாக அவளின் அன்றைய பொழுது சென்றிருந்தது. அவளை ஆற்றுவாரோ, தேற்றுவாரோ எவருமில்லை.

அவளின் புலம்பல்கள் எல்லாம் ராசுவிடம் மட்டுமே. அதுவும் அவள் பேசும் போதெல்லாம் அருகிலேயே அமர்ந்திருந்தது.

அன்று மாலை மயங்கிய நேரத்தில் வயலிருந்து தன் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தான் வைரவேல்.

அப்போது விடாமல் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. வயலை சுற்றி முற்றி பார்த்தான். தேன்மலரின் தோட்டத்திலிருந்து தான் சத்தம் வந்தது.

அவளின் நாய் தான் குரைக்கிறது என்று நினைத்தவன், பின் அதனைப் பொருட்படுத்தாமல் நடந்தான்.

ஆனால் அவன் நடக்க நடக்க நாயின் சத்தம் அருகில் கேட்பது போல் இருந்தது.

அடுத்தச் சில நொடிகளில் அவனின் பின்னால் ஓடி வந்தது. அதைப் பார்த்தவன், “ஏய், என்ன? போ…” என்று விரட்டி விட, அதுவோ அவனின் அருகில் வந்து அவன் வேஷ்டியை பிடித்து இழுத்தது.

“ஏய், எதுக்கு வேட்டியை பிடிச்சு இழுக்குற?” கடிக்கப் போகிறதோ என்று பதறி அவன் விடுவித்துக் கொள்ள முயன்றான்.

ஆனால் அவனைக் கடிக்க முயற்சி செய்யாமல் தொடர்ந்து வேஷ்டியை பிடித்து இழுத்தது.

“ச்சு… விடு… வேட்டியை அவுத்து விட்டுறாதே” என்று அதட்டினான்.

அதற்கு எல்லாம் அது அசரவே இல்லை. வேஷ்டியை பிடித்து இப்போது வீட்டின் பக்கம் இழுக்க ஆரம்பித்தது.

அப்போது தான் அது தன்னை வீட்டிற்கு அழைக்கிறது என்று அவனுக்குப் புரிந்தது.

“என்னைய எதுக்குக் கூப்பிடுற? என்னால வர முடியாது. விடு…” வெக்கென்று தன் வேஷ்டியை பிடித்து இழுத்தான்.

வேஷ்டியை விட்டு விட்டு அவனைப் பார்த்து, ‘வ்வ்வ்..வவ்…’ என்று குரைத்துக் கொண்டே அவனைச் சுற்றி சுற்றி வந்தது.

என்றும் இல்லாமல் ராசு அப்படிச் செய்வது அவனுக்கு யோசனையைக் கொடுத்தது.

யோசனையாக வீட்டின் பக்கம் பார்த்தான். தேன்மலரின் நடமாட்டம் எதுவும் வெளியே தெரியவில்லை.

ராசுவும் அவனுக்கு வழியை விடாமல் அவனையே சுற்றி வர, என்னவென்று பார்த்து விடுவோம் என்று நினைத்தான்.

“சரி, போ வாறேன்…” என்று அவன் வீட்டை நோக்கி நடக்கவும், வாலை ஆடிக் கொண்டே அவனை விட வேகமாக வீட்டிற்கு ஓடியது.

அவனுக்கு அங்கே செல்ல மனதே இல்லை. ஏற்கனவே அவளால் தான் தனக்குச் சில நாட்களாகப் பிரச்சனை நடக்கிறது என்று நினைத்தவனுக்கு மேலும் பிரச்சனையை வளர்த்துக் கொள்ள விருப்பமில்லை.

ஆனால் துக்கம் நடந்த வீடு. வயது பெண் தனியாக இருக்கிறாள். நாய் வந்து என்றும் இல்லாமல் அவனை அழைக்கிறது என்றால் என்னவோ என்று மனம் பதறியது.

அதனால் வேறு வழி இல்லாமல் சென்றான்.

வீட்டின் வாசல் கதவு லேசாகத் திறந்திருக்க, வெளியே நின்றே உள்ளே எட்டிப் பார்த்தான்.

ராசு அவனைப் பார்த்து குரைத்து உள்ளே வரச் சொன்னது.

கதவை விரிய திறந்து பார்த்தான். தேன்மலர் கண்ணில் தட்டுப்படவேயில்லை.

“ஏய், இந்தா புள்ள… எங்கன இருக்க?” என்று குரல் கொடுத்தான்.

உள்ளே இருந்து எந்தச் சத்தமும் வரவில்லை.

“எங்கன போனா இவ? இந்த நாய் எதுக்கு நம்மள கூட்டியாந்துச்சு?” என்று எரிச்சலுடன் புலம்பிக் கொண்டான்.

வெளியே ஓடி வந்த ராசு அவனின் வேஷ்டியை பிடித்து உள்ளே இழுத்தது.

“ஏய், விடு… நீ வேற சும்மா சும்மா வேட்டியை பிடிச்சு இழுத்துக்கிட்டு கிடக்க…” என்று கடுப்புடன் அதட்டினான். அதற்கு எல்லாம் அது மசியவே இல்லை.

தொடர்ந்து இழுக்க, வேறு வழியில்லாமல் உள்ளே சென்றான்.

ராசு அவனின் வேட்டியை பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளறைக்கு அழைத்துப் போனது.

அங்கே உள்ளறையில் இருந்த அன்னையின் புகைப்படத்தின் முன் உணர்வே இல்லாமல் தரையில் கிடந்தாள் தேன்மலர்.