5 – இன்னுயிராய் ஜனித்தாய்

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 5

நித்திலனின் உதவி சபரிநாதனுக்கு இன்றியமையாததாக அமைந்து போனது.

துர்கா மறுநாளே பெட்பேன் வாங்கி வைத்து விட்டாலும் மற்ற அவரின் தேவைக்கு ஓர் ஆண்மகனின் உதவி தேவையாகவே இருந்தது.

வேலைக்குச் சென்று விட்டு மாலையிலேயே வீட்டிற்கு வந்துவிடுவது நித்திலனின் வழக்கம்.

அவன் வரும் போதெல்லாம் துர்காவின் வீடு அமைதியாக இருக்கும்.

முன்பு மாலையானால் பேத்தியைத் தூக்கிக் கொண்டு கடை வீதிக்குச் செல்வதும், ஓய்வாகப் பேத்தியுடன் வீட்டுக்கு வெளியே இருக்கையை எடுத்துப்போட்டு அமர்ந்து கொள்வதும் அவரின் வழக்கம்.

ஆனால் இப்போதெல்லாம் அப்படி வெளியே வர முடிவதில்லை என்பதால் சபரிநாதனுமே சற்றுச் சோர்வாகத்தான் உணர்ந்தார்.

அவரிடம் அவ்வப்போது எட்டிப் பார்த்து நலம் விசாரிப்பான் நித்திலன்.

அன்று அவன் நலம் விசாரித்த போது சபரிநாதன் தெளிவாக இல்லை என்பது பார்த்ததுமே அவனுக்குப் புரிந்து போனது.

“என்ன அங்கிள் எப்படியோ இருக்கீங்க?” என்று விசாரித்தான்.

சபரிநாதன் தன்னை அங்கிள் என்று அழைத்தாலே போதுமானது என்று அவனிடம் தெரிவித்திருந்தார்.

நித்திலனின் அழைப்பு சில நாட்களாக அங்கிளாக மாறியிருந்தது.

“ஒன்னுமில்லை தம்பி…” என்றவரின் குரலில் விரக்தியும் கொட்டிக் கிடந்தது.

“ஏன் அங்கிள் இவ்வளவு விரக்தி?”

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“வீட்டுக்குள்ளயே அடைஞ்சி கிடப்பது எப்படியோ இருக்கு தம்பி. எங்கயாவது எழுந்து போகணும் போல இருக்கு. ஆனா இந்தக் கால்…” என்றவர் தன் காலை ஏக்கமாகப் பார்த்தார்.

“வெளியே போகணும்… அவ்வளவு தானே? இருங்க அங்கிள், இதோ வர்றேன்…” என்று சொல்லிவிட்டு தன் வீட்டிற்குச் சென்றவன் திரும்பி வரும் போது ஒரு மடக்கும் கட்டிலை எடுத்து வந்து துர்காவின் வீட்டின் வெளியே போட்டான்.

வீட்டிற்குள் சென்று சபரிநாதனை தூக்கிக் கொண்டு வந்து அந்தக் கட்டிலில் அமர வைக்க, அவரின் மனம் நெகிழ்ந்து போனது.

“ரொம்ப நன்றி தம்பி…” என்று அவனின் கையை வாஞ்சையுடன் பற்றிக் கொண்டார்.

“என்ன அங்கிள், இதுக்கெல்லாம் நன்றி சொல்லிக்கிட்டு? விடுங்க…” என்றவன் கட்டிலில் ஓர் ஓரமாக அமர்ந்து, அவரிடம் பேச ஆரம்பித்தான்.

வெளிக்காற்றைச் சுவாசித்து, வெளியே வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருப்பது சபரிநாதன் மனதிற்கு இதமாக இருந்தது.

மகளுடன் கடைக்குச் சென்றிருந்த துர்கா திரும்பி வரும் போதே தந்தை வெளியே அமர்ந்து நித்திலனுடன் சிரித்துப் பேசுவதை வியந்து பார்த்தாள்.

வீட்டிற்குள்ளேயே முடங்கிய தந்தையின் முகத்தில் சில நாட்களாக ஒளி மங்கியிருந்ததைக் கண்டு வருத்தப்பட்டிருக்கிறாள்.

இன்று அவரின் முகத்தில் ஒளி பிரகாசமாகப் பளபளப்பதை பார்த்து கனிவுற தந்தையைப் பார்த்தாள்.

“கடைக்குப் போய்ட்டு வந்துட்டியாமா?” சபரிநாதன் கேட்க,

“ஆமாப்பா. நீங்க வெளியே?”

“தம்பி தான் தூக்கிட்டு வந்து உட்கார வச்சாங்க…” என்றதும் துர்கா அவனுக்கு நன்றி சொல்ல போனாள்.

“ஐயோ! நன்றி மட்டும் சொல்லிடாதீங்க…” அவன் முந்திக் கொண்டு விளையாட்டாகச் சிரித்துக் கொண்டே சொல்ல, துர்காவின் இதழ்களிலும் புன்னகை அரும்பியது.

அப்போது துர்காவின் இடுப்பில் அமர்ந்திருந்த வருணா சட்டென்று நித்திலனிடம் தாவினாள்.

“ஹேய் குட்டிம்மா, வாங்க…” என்று ஆசையுடன் அவளைத் தூக்கிக் கொண்டான் நித்திலன்.

அவனின் மடியில் அமர்ந்து கொண்டவள் அவன் மீசையைப் பிடித்து இழுத்தாள்.

வலித்தது தான் என்றாலும் சந்தோஷமாகவே சிரித்தான் நித்திலன்.

அடுத்து அவனின் மடியில் நின்று கொண்டு தலைமுடியைப் பிடித்து இழுத்து விளையாட ஆரம்பித்தாள்.

“அடியே, அவருக்கு வலிக்கப் போகுது, விடு…” என்று அதட்டினாள் துர்கா.

“இருக்கட்டும்ங்க. குழந்தை இழுத்து அப்படி என்ன பெரிசா வலிக்கப் போகுது?” வருணா இழுப்பதற்கு வாகாகத் தலையைக் கொடுத்துக் கொண்டே சொன்னான்.

“குழந்தை தான். ஆனால் அவள் சுள்ளுன்னு பிடிச்சு இழுப்பாள். ரொம்ப வலிக்கும்…” என்றாள்.

“இந்தப் பிஞ்சு கையால் செய்யும் போது எவ்வளவு வேணும்னாலும் வாங்கிக்கலாம்ங்க…” என்றவன் குரலில் ஏதோ கலக்கம் தெரிவது போல் இருக்க, அவனின் முகத்தை யோசனையுடன் பார்த்தாள் துர்கா.

நித்திலன் முகத்தில் வாஞ்சையும், ஆசையும், பூரிப்பும், நெகிழ்வும் கொட்டிக் கிடந்தது.

எதற்காக இவன் இவ்வளவு உணர்ச்சி வசப்படுகிறான் என்பது போல் அவனை ஆராய்ச்சியாகப் பார்த்தாள்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

துர்காவின் பார்வையை எல்லாம் அவன் கண்டுகொள்ளவே இல்லை. அவனின் பார்வை குழந்தையை விட்டு இந்தப்பக்கம், அந்தப்பக்கம் அசையவில்லை.

மேலும் அவனைப் பற்றி ஆராய்ச்சி செய்யாமல் வீட்டிற்குள் சென்றாள் துர்கா.

குழந்தை சிரிக்கும் சப்தம் வீட்டிற்குள் வரை கேட்க, துர்காவின் முகமும் மலர்ந்தது.

மகள் சிரிப்பாள் தான். ஆனால் இவ்வளவு கலகலப்பாக அவள் சிரிப்பது இல்லை. அவளுடன் பொறுமையாக விளையாடவும் துர்காவிற்கு நேரம் இருப்பது இல்லை.

அதிலும் தந்தையும் கால் உடைந்ததில் சோர்வாக இருந்ததால் அவராலும் முன் போல் குழந்தையைப் பார்த்துக் கொள்ள முடிவது இல்லை.

அதனால் குழந்தையும் சுணங்கித்தான் போயிருந்தாள்.

ஆனால் நித்திலன் எப்போது குழந்தையைத் தூக்கினாலும் அவளிடம் அதீத குதூகலம் வருவதையும் அவள் உணர்ந்தே இருந்தாள்.

நித்திலன் காக்கும் கண்ணியம் அவனைப் பற்றித் தவறாக எதையும் மனதாலும் நினைக்க வைக்கவில்லை என்பதால் அவனை நம்பி குழந்தையை அவளால் விட முடிந்தது.

குழந்தை பற்றியும், நித்திலனின் குணத்தைப் பற்றியும் யோசித்துக் கொண்டே துர்கா வேலையாக இருந்த போது,

“ஹாய் நித்திலன்…” என்று வெளியே ஒரு புதுக் குரல் கேட்க, துர்கா லேசாக வியந்து கொண்டாள்.

புதிதாக ஒருவர் அவனைத் தேடி வந்திருப்பதே அவளுக்கு அதிசயமாக இருக்க, செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு வாசல் அருகில் சென்று பார்த்தாள்.

“வா முரளி…” என்று அங்கே நின்றிருந்தவனை வரவேற்றுக் கொண்டிருந்தான் நித்திலன்.

“இவன் என் ஃபிரண்டு முரளி அங்கிள். என் கூடத் தான் வேலை பார்க்கிறான்…” என்று சபரிநாதனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான்.

“வணக்கம் தம்பி…” சபரிநாதன் வரவேற்க,

“நீங்க தான் பக்கத்து வீட்டு அங்கிளா சார்? உங்களைப் பத்தியும் உங்க பேத்தியைப் பத்தியும் நித்திலன் சொல்லியிருக்கான். அதுவும் இவன் கூட ரொம்ப மாசமா வேலை பார்க்கிறேன். தன் வீட்டாரை பத்தி கூட அவன் அதிகம் பேசியது இல்லை. ஆனா இந்தக் கொஞ்சநாளா உங்களைப் பத்தியும் முக்கியமா இந்தக் குட்டி மேடமை பற்றியும் பேசாத நாள் இல்லை…” என்ற முரளி வருணாவின் கன்னத்தை லேசாக வருட, குழந்தை அவனின் கையைத் தட்டி விட்டது.

“ஹாஹா… குட்டிம்மா. அவனும் நல்லவன் தான்டா. அவன் வீட்டில் உன்னைப் போலவே ஒரு குட்டி மேடம் இருக்காங்க…” என்று சிரித்த படி நித்திலன் சொல்ல,

குழந்தை முரளியின் முகத்தை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் நித்திலனின் சிரிப்பையே பார்த்தாள்.

அவளின் பார்வையில் சொக்கிப் போனான் நித்திலன்.

அதிலும் அவள் தன்னிடம் மட்டும் காட்டும் ஒட்டுதலில் பெருமையாகக் கூட உணர்ந்தான்.

ஆசையாகக் குழந்தையைத் தழுவி கொண்டான்.

நண்பனின் பெருமையை யோசனையுடன் பார்த்தான் முரளி.

“உன் வீட்டுக்குப் போகலாமா நித்திலன்?” என்று முரளி கேட்க,

“வா முரளி…” என்று எழுந்த நித்திலன், “நான் போய்ப் பேசிட்டு வர்றேன் அங்கிள்…” என்று சபரிநாதனிடம் சொன்னான்.

“போய்ப் பேசிட்டு வாங்க தம்பி…” என்றார்.

“குட்டிம்மா, கொஞ்ச நேரம் தாத்தா பக்கத்தில் உட்கார்ந்து இருங்க. நான் இதோ வந்துடுறேன்…” குழந்தையைக் கட்டிலில் அமர வைக்க, அவளோ அவன் கையை விட்டு இறங்காமல் அழ ஆரம்பித்தாள்.

“தாத்தாக்கிட்ட வா பாப்பா…” என்று சபரிநாதன் அழைக்க, அவளோ நித்திலனின் சட்டையை இறுக்கமாக பற்றிக் கொண்டு அழுதாள்.

“அழாதீங்க குட்டிம்மா…” என்றான் நித்திலன்.

ஏனோ அவளின் அழுகையை அவனால் தாங்கவே முடியலை.

அவனின் முகத்தில் ஒருவித தவிப்பை பார்த்த துர்கா, “வீட்டுக்குத் தூக்கிட்டுப் போங்க. நான் கொஞ்ச நேரத்தில் வந்து அவளை வாங்கிக்கிறேன்…” என்றாள்.

“தேங்க்ஸ்ங்க…” என்ற நித்திலன், அவளை நன்றியுடன் பார்த்தான்.

“இவங்க தான் குட்டிம்மாவோட அம்மா முரளி…” என்று நண்பனுக்கு அறிமுகப்படுத்தினான்.

“வணக்கம்ங்க…” என்று இருவருமே சொன்னார்கள்.

முரளியின் பார்வை ஒரு நொடி துர்காவை ஆராய்ச்சியாகத் தழுவி மீண்டது.

முரளியை அழைத்துக் கொண்டு தன் வீடு சென்றான் நித்திலன்.

“என்னடா முரளி அதிசயமா என் வீட்டுப்பக்கம் வந்திருக்க?”

“வர வேண்டிய வேலை இருந்தால் வந்து தானே ஆகணும் நித்திலன். என் பொண்ணுக்கு இந்த வாரம் பிரத்டே வருதுன்னு சொன்னேனே. அதுக்குக் கூப்பிடத்தான் வந்தேன்…” என்றான் முரளி.

“அதான் ஆபிஸில் வைத்தே சொல்லிட்டீயே? இதுக்கு இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வரணுமா?”

“ஏன் நித்திலன் நான் உன் வீட்டுக்கு வரக் கூடாதா?”

“ச்சே ச்சே, நான் அப்படிச் சொல்லலை. உன் வீடு இங்கே இருந்து ரொம்பத் தூரம் இருக்கு. நாம எப்படியும் ஆபிஸில் பார்த்துக்கப் போறோம். அப்புறம் எதுக்கு நீ இவ்வளவு தூரம் அலையணும்னு தான் சொன்னேன்…”

“நான் இன்னைக்கு மெயினா வந்ததே இந்தச் சின்னக்குட்டியைப் பார்க்கத்தான்…” வருணாவை சுட்டிக் காட்டினான்.

“என்ன முரளி சொல்ற? இந்தக் குட்டிம்மாவை பார்க்க வந்தியா, ஏன்?” என்று கேட்டான்.

“பின்ன, உன் பேச்சு இப்ப எல்லாம் உன்னோட குட்டிம்மாவை சுத்தித்தான் அதிகமா இருக்கு. அப்படி உன் மனசை கவர்ந்த குட்டிம்மா யாருன்னு எப்படிப் பார்க்காமல் இருப்பது?” என்று கேட்டான் முரளி.

“ம்ம், அது என்னவோ எனக்கே தெரியலை முரளி. என் அண்ணா பசங்க கூட இவ்வளவு என்கிட்ட ஒட்டியது இல்லை. என் அண்ணியும் ஒட்ட விட்டது இல்லை. ஆனா இந்தச் சின்னக்குட்டி என் மனசை மொத்தமா அவள் பக்கம் சாய்த்துவிட்டாள்…” என்றவன் குழந்தையின் கையைப் பாசத்துடன் வருடி விட்டான்.

“இந்தக் குட்டியை உனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கா நித்திலன்?”

“இதென்ன கேள்வி முரளி? ரொம்ப ரொம்பப் பிடிச்சுருக்கு…” என்ற நண்பனை யோசனையுடன் பார்த்தான் முரளி.

நித்திலன் பற்றிய அனைத்து விஷயங்களும் அறிந்தவன் அவன்.

நித்திலன் இப்படியே காலம் முழுவதும் தனிமை வாசம் அனுபவிப்பானோ என்று நினைத்து வருந்தியிருக்கிறான்.

இப்போது புதிதாகக் குழந்தை வருணாவின் மீது அவனுக்கு வந்திருக்கும் பற்று! முரளியை வேறு கோணத்தில் இப்போது யோசிக்க வைத்துக் கொண்டிருந்தது.

ஆனால் உடனே தன் எண்ணத்தை அவனிடம் பகிர்ந்து கொள்ளாமல் அமைதியானான் முரளி.

அவனின் கண்கள் நித்திலன், வருணா மீது தான் இருந்தன. இருவரும் அவர்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டனர்.

குழந்தையின், மா, ஊ , ங்கா… பாஷை புரிந்தவன் போல் அவளுடன் ஏதோ பேச்சு வார்த்தை வைத்துக் கொண்டிருந்தான் நித்திலன்.

குழந்தை அம்மாவை ‘அம்மா’ என்று அழைப்பதை மட்டும் தான் தெளிவாகச் சொன்னாள். மற்ற வார்த்தைகளில் தெளிவு இருக்கவில்லை.

குழந்தையும் அவன் சொன்னது புரிந்தது போல் எதிர்வினை காட்டிக் கொண்டிருந்தது.

அவர்களின் அந்தச் செயல்! முரளியை ரசித்துப் பார்க்க வைத்தது.

“வீட்டில் ஒரு சின்னக் குழந்தை இருப்பதே தனிச் சுகம் தான், இல்ல நித்திலன்?”

“நிச்சயமா முரளி! அதிலும் என்னைப் போல வாழ்க்கை வரண்டு போனவங்களுக்கு ஒரு வரப்பிரசாதம்!” என்றவன் வருணாவின் பட்டுக் கன்னத்தில் மெல்லிய முத்தம் ஒன்றை வைத்தான்.

‘அந்த வரப்பிரசாதம் உனக்கே கிடைச்சா நல்லா இருக்கும் நித்திலன்…’ என்று தனக்குள் நினைத்துக் கொண்டான் முரளி.

“கண்ணும்மா, என்ன செய்றீங்க?” என்றபடி அப்போது வாசலில் இருந்து குரல் கொடுத்தாள் துர்கா.

“வாங்க…” என்று நித்திலன் எழுந்து நின்று வரவேற்க,

“காஃபி போட்டேன். உங்க ஃபிரண்டுக்கு கொடுங்க…” என்று தன் கையில் வைத்திருந்த காஃபி ட்ரேவை உள்ளே வராமல் நீட்டினாள் துர்கா.

அவள் உள்ளே வரமாட்டாள் என்று புரிந்தவன் அதன் பிறகு அழைக்கவில்லை.

“எதுக்குங்க இதெல்லாம்?” என்று கேட்டான்.

“இருக்கட்டும்ங்க. நீங்க எங்களுக்கு எவ்வளவோ உதவி செய்றீங்க. இது கூட நான் செய்யலைனா எப்படி? வாங்கிக்கோங்க..” என்றாள்.

வருணாவுடன் எழுந்து வந்து வாங்கினான்.

“பாப்பாவை என்கிட்ட கொடுங்க. நீங்க பேசிட்டு இருங்க…” என்று குழந்தையை வாங்க முயன்றாள்.

ஆனால் அவளின் மகளோ நித்திலனின் சட்டைக் காலரை பற்றிக் கொண்டு வர மாட்டேன் என்று வேகமாகத் தலையை அசைத்தாள்.

“வா பாப்பா. அவங்களுக்குத் தொந்தரவா இருக்கப் போகுது…” என்றழைக்க,

“ம்மா… ம்மா…” என்றவள் நித்திலனிடம் தான் ஒன்றிக் கொண்டாள்.

“அம்மாகிட்ட தான் வா…” என்று துர்கா சொல்ல,

“ம்மா…” என்றவள் நித்திலனின் முகத்தைப் பார்த்தாள்.

“உங்களையும் அம்மான்னு சொல்றா…” என்ற துர்கா சிறு புன்னகையுடன், “அவளுக்கு எல்லாமே அம்மா தான். அதை மட்டும் தான் தெளிவா சொல்ல வருதுன்னு என்னோட அப்பாவையும் ம்மான்னு தான் கூப்பிடுறா…” என்றாள்.

“நானும் அம்மாவா குட்டி?” என்று வாஞ்சையுடன் கேட்டவன், அவளின் கன்னத்தில் மென்மையாக முத்தம் ஒன்றை வைத்தான்.

கிளுங்கி சிரித்தாள் வருணா.

“வா கண்ணும்மா, வீட்டுக்குப் போவோம்…” துர்கா மீண்டும் அழைத்தும் அவள் வர மறுக்க,

“என்கிட்ட இருக்கட்டும். நானே கொண்டு வந்து விடுறேன்…” என்று நித்திலன் சொல்லவும், துர்கா அங்கிருந்து சென்று விட்டாள்.

அவர்களையே அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த முரளி, “பேசாம இந்தக் குட்டியையும் என் பொண்ணோட ப்ரத்டேக்கு கூட்டிட்டு வந்திடு நித்திலன்…” என்றான்.

“வரலாம் தான். ஆனா இந்த மேடத்தோட அம்மா விடணுமே? ஏதோ பக்கத்து வீடுன்னு இங்கே வரைக்கும் விட்டுருக்காங்க. ஆனா எல்லா விஷயத்திலும் அதை எதிர்பார்க்க முடியுமா என்ன?” என்றான் நித்திலன்.

“எதுக்கு இவ்வளவு யோசிக்கணும்? அவங்க அம்மாவையும் விஷேசத்துக்குக் கூப்பிடலாம்…” என்றான்.

“அவங்களா?” யோசனையுடன் முரளியைப் பார்த்தான்.

“ம்ம், ஆமா. அவங்களையும் நான் அழைக்கப் போறேன்…”

“ஆனா அவங்களை உனக்குப் பழக்கம் இல்லையே?”

“இனிமே பழகிட்டா போச்சு?”

“டேய்… அவங்க ரொம்ப மூடி டைப்…”

“இருந்துட்டுப் போகட்டுமே. இப்ப என்ன? கூப்பிட்டுப் பார்க்கிறேன். வரலைனா அதுக்கு வேற வழி பண்றேன்…” என்றான் முரளி.

“ஏய், நீ என்ன பண்ண போற? நீ ஏன் அவங்க விஷயத்தில் இவ்வளவு இன்ரெஸ்ட் காட்டுற?” என்று முரளியை ஒரு மாதிரியாகப் பார்த்தான்.

“ஏய் ச்சீ, நீ இவங்களைப் பற்றிச் சொன்னதை எல்லாம் நான் ஷாலினிகிட்ட சொன்னேன். அவளே இவங்களையும் கூப்பிட சொன்னாள். உனக்குச் சந்தேகமாக இருந்தால் நான் போன் போட்டு தர்றேன். நீயே பேசு…” என்ற முரளி தன் மனைவி ஷாலினிக்கு அழைக்கப் போனான்.

“டேய், வேண்டாம். நான் நம்புறேன். அவங்க வருவாங்களா இல்லையான்னு தெரியாது. எதுக்கும் கூப்பிட்டு பார். வரலைனா கம்பெல் பண்ணாதே!” என்றான் நித்திலன்.

“அதை நான் பார்த்துக்கிறேன்…” என்ற முரளி அடுத்தது துர்காவின் வீட்டிற்குத்தான் சென்றான்.

துர்காவை அழைக்க, அவளோ தயங்கினாள்.

உடனே தன் மனைவிக்கு அழைத்து அவளைத் துர்காவிடம் பேச வைத்தான்.

பேசிய சற்று நேரத்திலேயே துர்காவை சம்மதிக்க வைத்திருந்தாள் ஷாலினி.

தன் வாழ்க்கையில் மாற்றத்தை தரப் போகிறவர்களே ஷாலினியும், முரளியும் தான் என்று அறியாமல் அவர்கள் வீட்டுற்குச் செல்ல சம்மதம் சொல்லியிருந்தாள் துர்கா.