4 – வல்லினமாய் நீ! மெல்லினமாய் நான்!

அத்தியாயம் – 4

கேலியாக வரவேற்றக் கணவனைத் தானும் மேலிருந்து கீழாகப் பார்த்தாள் சக்தி.

இப்போதும் பட்டு வேட்டி, சட்டையில் தான் இருந்தான். சக்தியோ சேலை கட்ட சொல்லி ஜாடையாக முணுமுணுத்த மீனாம்பிகையின் பேச்சையும் கண்டுகொள்ளாமல் டீசர்ட்டும், ஜீன்ஸுமாக முதல் இரவு அறைக்குள் நுழைந்திருந்தாள்.

அதிலும் அவளின் டீசர்ட்டின் முன்பக்கத்தில் சிறுத்தை ஒன்று சீறி பாய்ந்து வரும் படம் இருந்தது. அதைத் தான் அவன் கேலியாகக் குறிப்பிட்டிருந்தான்.

“நான் சிறுத்தை சரி. இங்க யார் சிங்கம்?” என்று தானும் கேலியாகப் புருவம் உயர்த்திக் கேட்டாள்.

“இதுக்குப் பதில் சிங்கம் கர்ஜிக்கும் போது உனக்கே புரியும்…” என்றான்.

“அப்படிக் கத்தும்போது பார்ப்போம். கர்ஜித்தது சிங்கமா இல்ல, கழுதை கத்தலான்னு…” என்று அவனுக்குச் சளைக்காமல் பதில் சொன்னாள்.

“நீ ரொம்ப மாறிட்ட சக்தி. அந்தப் பழைய சக்தி எங்கே போனாள்?” என்று கேட்டான்.

“நேரத்துக்குத் தகுந்த மாதிரி மாறிக்க வேண்டியது தான். நீ மாறிய மாதிரி…” என்றாள் குத்தலாக.

“இன்னைக்கு முழுவதும் இப்படி மாத்தி மாத்தி குத்திக்காட்டிட்டு தான் இருக்கப் போறமா சக்தி?”

“பின்ன முதலிரவா கொண்டாட முடியும்?” என்று கேட்டவள் கட்டிலில் தூவியிருந்த பூக்களை முறைத்துப் பார்த்தாள்.

“ஏன் கொண்டாடினா என்ன தப்பு?” என்று கேட்டுக் கொண்டே கதவின் அருகில் நின்றிருந்த சக்தியின் அருகே நிதானமாக அடியெடுத்து வைத்து வந்தான்.

அவன் வருவதைப் பார்த்துக் கொண்டே அசையாமல் நின்றிருந்தாள் சக்தி.

அவள் சிறிதும் சலனமின்றி நின்று கொண்டிருப்பதைக் கண்டு வியந்தவன், “ஏற்கனவே இரண்டு வருஷத்தை வேஸ்ட் பண்ணிட்டோம். இப்போ முறைப்படி திரும்பத் தாலி கட்டிய பிறகும் ஒரு நாளையும் வேஸ்ட் பண்ண நான் தயாராயில்லை…” என்று சொல்லிக்கொண்டே அவளின் கையை மென்மையாக பற்றித் தன்னை நோக்கி இழுத்தான்.

இழுத்த வேகத்தில் தன் அணைப்பிற்குள்ளும் கொண்டு வந்திருந்தான்.

அவனின் கைகள் அவளைச் சுற்றி வளைத்து தனக்குள் அடக்கிக் கொள்ள முயன்றன.

எந்த எதிர்ப்பும் காட்டாமல் அவனின் அணைப்பில் அடங்கிய சக்தியின் உடல் மட்டும் இலகுத்தன்மையைக் காட்டாமல் விறைப்பாக இருந்தது.

“முதல் ராத்திரி அன்னைக்குச் சேலை கட்டணும்னு உனக்குத் தெரியாதா? ஏன் இந்த டிரெஸ் போட்டுட்டு வந்த?” என்று கேட்டுக்கொண்டே சட்டை மறைத்திருந்த அவளின் இடையை இதமாகப் பற்றினான்.

“இந்த நேரம் சேலை கட்டியிருந்தால் என் கை சட்டை மேலேயா இருந்திருக்கும்?” என்று ஏமாற்றமாகச் சொன்னவன் தானே அவளின் சட்டையை லேசாக மேலே உயர்த்திக் கையை நேரடியாக இடுப்பின் மீது வைத்தான்.

அவனின் கைகள் அவளின் வயிற்றின் மேல் ஊற ஆரம்பிக்க, அவனின் முகமோ சக்தியின் முகத்தை நோக்கிக் குனிந்தது.

அவன் செய்கை எதற்கும் சக்தியிடம் எந்த மறுப்பும் இல்லை. அதே நேரம் இளக்கமும் இல்லை.

அவளின் முகம் எஃகு இரும்பாக இறுகிப் போயிருந்தது.

அவனோ புத்தம் புதிய மனைவியின் அருகாமையில் இளமையின் உணர்வுகளுக்கு ஆட்பட்டிருந்தான்.

அவனின் ஆளுமைக்குள் அவளையும் கொண்டு வர முயன்று கொண்டிருந்தான்.

“உனக்கு நாம முதல் முறையாகக் கிஸ் பண்ணியது ஞாபகமிருக்கா சக்தி?” என்று கிறக்கமாகக் கேட்டுக் கொண்டே பழைய ஞாபகங்களையும் மீட்கும் பொருட்டு அவளின் பளபளத்த செவ்விதழ்களை நோக்கி தன் உதட்டை கொண்டு சென்றான்.

உதடும், உதடும் உரசி கொள்ள இருந்த நொடியில் சக்தியின் இதழ்கள் மெல்ல அசைய ஆரம்பித்தன.

அசைந்த அவ்விதழ்கள் உச்சரித்த வார்த்தைகளைக் கேட்டு மின்சாரம் பாய்ச்சியது போல் உதறி அவளைத் தள்ளி விட்டான் சர்வேஸ்வரன்.

“நீ தாலி கட்டின உடனே உன்கூடப் படுக்க வந்துருவேன்னு எப்படித் தப்புக்கணக்கு போட்ட சர்வேஸ்வரா?” என்ற வார்த்தைகளைச் சொன்னது அவள் தானா? என்பது போல் நம்ப முடியாமல் அவளைப் பார்த்தான்.

“ச்சீ.. ச்சீ… என்ன வார்த்தை பேசிட்ட…” என்று கையை உதறி, முகத்தைச் சுளித்து அருவெறுத்தான் சர்வேஸ்வரன்.

அவன் தள்ளி விட்டதில் தடுமாறி கதவை பிடித்து நின்று கொண்ட சக்தி இறுகிய முகத்துடன் அவனைப் பார்த்தாள்.

“உன்னால எப்படி அப்படிப் பேச முடிஞ்சது? படுக்க… ச்சை… ச்சை…” இன்னும் அந்த வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள முடியாமல் அருவெறுத்துப் போனான்.

“நான் சொன்னதே அருவெறுப்பா இருக்கா சர்வேஸ்வரா? அப்போ நீ என்னைத் தொட்டப்ப எனக்கு எப்படி இருந்திருக்கும்னு நீ நினைக்கிற? நான் ரசிச்சேன்னு நினைச்சியா? இல்லை… எனக்கும் அருவெறுப்பா தான் இருந்தது…” என்றாள்.

“பிடிக்கலைனா விலகி போக வேண்டியது தானே டி? அதுக்கு அப்படிப் பேசுவியா?” என்று கோபமாகக் கேட்டான்.

“நமக்கு எந்தச் சூழ்நிலையில் கல்யாணம் நடந்தது. நமக்குள்ள இதுக்கு முன்னாடி நடந்த பிரச்சனை என்னன்னு எல்லாம் தெரிஞ்சும் அதையெல்லாம் மறந்துட்டு என் பக்கத்தில் வந்தது நீ.

ஆனால் இன்னைக்குப் புதுசா ஒரு தாலியைக் கட்டியதும் அதையெல்லாம் கொஞ்சமும் நினைத்துப் பார்க்காம என் பக்கத்தில் வந்ததே உன் தப்பு. தப்பை உன் மேல வச்சுக்கிட்டு என்னையே குறை சொல்லுவியா?” என்று அவனை விடக் கோபமாகக் கேட்டாள்.

“போதும் நிறுத்து!” என்று கையை நீட்டி அவளின் பேச்சை நிறுத்தியவன் இடுப்பில் கையை ஊன்றி, ‘உஃப்’ என்று பெரிதாக மூச்சை இழுத்து விட்டு தலையையும் உலுக்கிக் கொண்டான்.

“நீ ஏன் இப்படி நடந்துகிற… ஏன் இப்படிப் பேசுறன்னு எல்லாமே… எல்லாமே எனக்குப் புரியுது. ஆக, இதுக்கு முன்னாடி நம்ம வாழ்க்கையில் நடந்த பிரச்சனை எல்லாமே அப்படியே தான் இருக்கு.

நீ எதையும் மறக்கலை. அப்படித்தானே? அப்படி மறக்காதவ இந்த ஊருக்கு, என் கண் முன்னாடி எதுக்கு வந்து நின்ன?” என்று கேட்டான்.

“ஓஹோ! நான் இந்த ஊருக்கு வந்து உன் முன்னாடி நடமாடியதும் உனக்காக வந்தேன்னு நினைச்சீயா? நெவர்! நான் உனக்காக வரலை…” என்று தலையை நிமிர்த்தி அலட்சியமாகச் சொன்னாள்.

அவளை அவன் கூர்மையாகப் பார்க்க,

“என்ன அப்படிப் பார்க்கிற? உனக்காக வராதவள் எப்படி இப்போ தாலி கட்டிக்கச் சம்மதிச்சேன்னு தானே யோசிக்கிற? இந்தத் தாலியை நான் கட்டிக்கிட்டது உன் கூடக் குடும்பம் நடத்த இல்லை. என் அப்பாவுக்காக மட்டும் தான் இந்தத் தாலியைக் கட்டிக்கிட்டேன்…” என்று பெண் சிங்கமாகக் கர்ஜித்தாள்.

“ஹா…ஹா…ஹா… நல்லாவே பேச கத்துக்கிட்ட சக்தியாரே. உன் ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு உணர்வுகளும் எனக்கு அத்துப்படி சக்தி.

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நான் உன்னைக் கட்டிப்பிடிச்சதும் நானே உன்னை உதறி தள்ளணும்னு சொன்னியே ஒரு வார்த்தை… அது என்னைக் காயப்படுத்த நீ சொல்லலை. உன்னை நீயே கட்டுப்படுத்திக்க என்னைக் காயப்படுத்த சொன்ன வார்த்தை.

அதே போல உன் அப்பாவுக்காகத் தாலியை நீ வாங்கிக்கிட்டதாகச் சொன்னதும் தப்பு. இந்தத் தாலி இந்த ஜென்மத்தில் என் கையால் தவிர வேற யார் கையாலும் நீ வாங்கிக்க மாட்ட.

அதனால் பஞ்சாயத்தில் நான் உன்னைக் கல்யாணம் பண்ணனும்னு சொன்னதும் இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விட நீ தயாரா இல்லை. அதனால் தான் பஞ்சாயத்தில் அவ்வளவு நேரம் சீறி பாய்ந்தவள் அதுக்குப் பிறகு அமைதியாகிட்ட.

தானா வந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கிட்ட. ஆனால் அதை வெளிப்படையாகச் சொல்ல உன் ஈகோ தடுக்குது. இது தான் உண்மை…” என்று அவளைப் பற்றி நன்றாக அறிந்தவன் போல அப்படியே சொன்னான் சர்வேஸ்வரன்.

அவன் சொன்னதைக் கேட்டு, அவன் அறியாத வண்ணம் உதட்டை கடித்துக் கொண்டாள் சக்தி.

காதல் பைத்தியக்கரமானது என்று பிரேமிடம் அவள் சொன்னதற்கான அர்த்தமும் இது தானே.

ஆனாலும் தன் தடுமாற்றத்தை அவனிடம் காட்ட விரும்பாதவள், “உன்னை நல்லவனாகக் காட்டிக்க என்னைக் கெட்டவளா ஆக்கப் பார்க்காதே…” என்று அவனின் பேச்சை அலட்சியப்படுத்த முயன்றாள்.

“உனக்கு உண்மையை ஏத்துக்க விருப்பமில்லைன்னு சொல்லு…” என்றவன், “உனக்கென்ன நான் உன்னைத் தொடக் கூடாது. அவ்வளவு தானே? இனி தொட மாட்டேன். அதனால் வார்த்தைகளை வரைமுறை இல்லாம அள்ளி வீசாம இரு…” என்றான் கண்டிப்புடன்.

“அப்புறம் சில விஷயங்களைத் தெளிவு படுத்த விரும்புறேன். இந்த ஊருக்குன்னு சில கட்டுப்பாடுகள் இருக்கு. அதுக்கு இந்த ஊருக்கு வாழ வந்திருக்கிற பொண்ணா, முக்கியமா என்னோட மனைவியா அதுக்கெல்லாம் கட்டுப்பட்டே ஆகணும்.

“முதலாவது இந்த உடை…” என்று அவளை நோக்கி கையை நீட்டி மேலிருந்து கீழ் வரை சுட்டிக்காட்டி, “இப்படி ட்ரெஸ் போட்டுக்கிட்டு நம்ம வீட்டு ஹாலுக்குக் கூட இனி வரக்கூடாது…” என்று சொல்ல,

“என் ட்ரெஸ் என் விருப்பம். இந்த ட்ரெஸ் தான் எனக்குக் கம்படெப்பிளா இருக்கும். உன் இஷ்டத்துக்கு எல்லாம் என்னை மாத்திக்க முடியாது…” என்றாள் சக்தி.

அலட்சியமாகத் தலையைத் திருப்பிக் கொண்டு சொன்னவளை உக்கிரமாகப் பார்த்தான் சர்வேஸ்வரன்.

“உன் விருப்பம், உன் இஷ்டத்தை எல்லாம் இந்த ரூமுக்குள்ள வச்சுக்கோ. வேற எங்கேயும் உன் விருப்பம் நடக்கக் கூடாது. நீ இந்த ஊர் நாட்டாமையோட பொண்டாட்டி. அதுக்குத் தகுந்த மாதிரி நீ இருந்து தான் ஆகணும். அதில் தான் என் கௌரவம் அடங்கி இருக்கு…” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

“உன் கௌரவம் எப்படிப் போனா எனக்கென்ன?” என்றாள்.

“இரு! நான் இன்னும் பேசி முடிக்கலை. ட்ரெஸ் விஷயமோ, இல்லை வேற ஏதாவது விஷயமோ இனி என் பொண்டாட்டியா எல்லா விஷயத்திலும் உன் கௌரவமும் அடங்கி இருக்கு.

இந்த ஊர் மக்கள் நாட்டாமை பொண்டாட்டியை மரியாதையா பார்ப்பாங்க, நடத்துவாங்க. உன் மரியாதை, உன் கௌரவம் எல்லாம் நீ நடந்து கொள்ளும் முறையில் தான் இருக்கு. உன் கௌரவம் எப்படி இருக்கணும்னு நீயே முடிவு பண்ணிக்கோ…” என்றான் முடிவாக.

‘நீ என்ன வேண்டுமென்றாலும் சொல்லிக் கொள்!’ என்பது போல் நின்றிருந்தாள் சக்தி.

‘நீ எப்படி நின்றாலும் பரவாயில்லை. நான் சொல்ல வேண்டியதை சொல்லியே தீருவேன்’ என்பது போல் பேசிக் கொண்டு போனான் சர்வேஸ்வரன்.

“இரண்டாவது என்னை ஒருமையில் அழைத்துப் பேசுவது, பேர் சொல்லி கூப்பிடுவது எல்லாத்தையும் இன்னையோட நிறுத்திக்கோ…” என்று சொல்ல,

“அப்படித்தான் கூப்பிடுவேன் சர்வேஸ்வரா…” என்றாள்.

“ஓகோ!” என்று சொல்லிக் கொண்டே அருகில் வந்தவன் அவளின் இரு கன்னங்களையும் தன் ஒற்றைக் கையால் அழுத்திப் பிடிக்க, அவளின் வாய் ‘ஓ’ வடிவத்தில் பிதுங்கியது.

அவன் பிடித்து அழுத்தியதில் கன்னங்கள் வலிக்க, அவனின் கையைத் தட்டி விட முயன்றாள்.

ஆனால் அவனின் பிடி வலுவாக இருக்க, கையைச் சிறிதும் அசைக்க முடியவில்லை.

அதனால் தன் இரண்டு கைகளாலும் “விடு” என்று வலியுடன் முனங்கி கொண்டே அவனின் கையைப் பிடித்து இழுக்க முயன்றாள்.

இரண்டு கைகளால் முயன்றும் அவனின் ஒற்றைக் கையை அவளால் விலக்கவே முடியவில்லை.

அவனின் கை வலிமையைக் கண்டு அந்த நிலையிலும் அவளின் கண்கள் வியப்பை பிரதிபலித்தன.

“விடு இல்லை. விடுங்க சொல்லு…” என்று சொல்லிக்கொண்டே இன்னும் தன் அழுத்தத்தைக் கூட்டினான்.

இப்போது வலியில் அவளின் கண்கள் கலங்கவே ஆரம்பித்தன.

“சர்வேஸ்வரா… ம்ம்.. சர்வேஸ்வரா… நான் உனக்குச் சர்வேஸ்வரா-வா டீ? நான் உன்னோட ஈஸ்வர் இல்லைன்னு சொல்லாம சொல்றீயா?

இல்லை ஈஸ்வர்னு கூப்பிட்டா எங்கே இப்போ நீ போட்டுருக்கிற முகமூடி கழண்டு விழுந்துடும்னு பயப்படுறீயா? எனக்கு என்னமோ இரண்டாவது தான் சரின்னு தோணுது. என்ன அப்படித்தானே?” என்று அவளின் கண்களைப் பார்த்துக் கொண்டே கேட்டான்.

அவனின் கண்களைச் சந்திக்க மறுத்து தன் கண்களை இறுக மூடிக் கொண்டாள் சக்தி.

மூடிய விழிகளில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் அவளின் கன்னத்தில் விழுந்தது.

அது வலியினாலா? இல்லை அவன் சுட்டிக்காட்டிய உண்மையினாலா?

அவளின் கன்னம் தொட்ட கண்ணீரை கண்டதும் தன் கை இறுக்கத்தை லேசாகத் தளர்த்தினான்.

கன்னத்தில் இருந்த விரலாலேயே கண்ணீரை துடைத்தவன், “நமக்கிடையே இதுக்கு முன்னாடி நடந்ததை எல்லாம் மறந்திடு சக்திமா. இரண்டு வருஷமா நமக்கிடையே வந்து போன இடைவெளியை மறந்திட்டு நாம லவ் பண்ணியதில் இருந்து இப்போ தான் கல்யாணம் பண்ணினோம்னு நினைச்சுக்கோ…” என்றான் மென்மையாக.

அவன் சொன்னதைக் கேட்டதும் பட்டென்று விழிகளைத் திறந்த சக்தி அவனைத் தீர்க்கமாகப் பார்த்தாள்.

அவளின் பார்வை அவனைக் குற்றம் சாட்டியது.

“என்ன சக்தி?” அவளின் பார்வையின் பொருளை கிரகிக்க முடியாமல் கேட்டான்.

“நமக்குள் இதுக்கு முன்னாடி நடந்த எதையும் நான் நினைச்சுப் பார்க்க தயாரா இல்லை. ஆனா…”

“ஆனா? என்ன ஆனா?”

“நீயும் நானும் சம்பந்தப்படாத பழைய விஷயம் எதையும் மறக்க தயாராயில்லை…” என்றாள் அழுத்தமாக.

அதில் அவனின் கண்ணில் உக்கிரம் ஏற, அவளைப் பிடித்திருந்த கையால் அவளை அப்படியே தள்ளிவிட்டான்.

“இதோ பார் சக்தி. இப்போ நீ என் பொண்டாட்டி. இந்த வீட்டோட மருமகள். என்னோட கௌரவம், உன்னோட கௌரவம் மட்டுமில்லை. இந்த வீட்டோட கௌரவமும் இந்த வீட்டு மருமகளான உன் கையில் தான் இருக்கு.

அதை ஒரு நிமிஷம் கூட மறந்துடாதே! அதை மறந்து ஏதாவது ஏடாகூடமா செய்தால் இந்தச் சர்வேஸ்வரனோட ருத்ரதாண்டவத்தைப் பார்க்க வேண்டியது வரும்…” என்று விரல் நீட்டி எச்சரித்தான்.

அவனின் உக்கிரத்தில் ஒரு நொடி மிரண்டவள், பின் ‘இப்பவே நீ ருத்ரதாண்டவம் ஆடியது போல் தான்டா இருக்கு. இதுக்கு எல்லாம் பயந்தா நான் நினைச்சு வந்த காரியம் எப்படி நடக்கும்?

ருத்ரதாண்டவம் மட்டுமில்லை, நீ கோரதாண்டவமே ஆடினால் கூட நான் கவலைப்பட மாட்டேன். இந்த ஊருக்கு வந்த காரியத்தை வெற்றிகரமா முடிக்காம நான் ஓயவும் மாட்டேன்…’ என்று உள்ளுக்குள் சூளுரைத்துக் கொண்டாள் சக்தி.