4 – சிந்தையில் பதிந்த சித்திரமே
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 4
முதல் நாள் இரவு வழக்கம் போல் தன் வேலைகளை முடித்து விட்டுப் படுத்த கதிர்நிலவனுக்குக் காலையில் கண்விழிக்கவே முடியவில்லை.
நேற்றே உடல் எல்லாம் மிகுந்த அசதியாக இருந்தது. அதனுடனே தான் தன் வேலைகளைப் பார்த்தான்.
தூங்கி எழுந்தால் அசதி சரியாகிவிடும் என்று அவன் நினைத்ததற்கு மாறாக இரவில் அவனின் உடல் வலி கூடத்தான் செய்தது.
நள்ளிரவே லேசான சூட்டையும் உடலில் உணர்ந்தான். ஆனால் உடல் வலி எழ விடாமல் படுக்கையில் அசத்த, எழுந்து மருந்து எதுவும் எடுத்துக் கொள்ள முடியவில்லை.
நேரம் செல்ல செல்ல உடலில் சூடு அதிகரித்துக் கொண்டே சென்றது.
அரை உறக்கமும், விழிப்புமாகத் தான் இரவை கடத்தினான். காலையில் விடிந்து விட்டது என்ற உணர்வு இருந்தாலும் உடல் ஒத்துழைக்க மறுக்க, படுக்கையில் சுருண்டு படுத்துக் கொண்டான்.
உடல் சூடு இப்போது இன்னும் அதிகரித்து விட்டது புரிந்தது. எழுந்து ஏதாவது மாத்திரை போட்டால் தான் சரியாகும் என்று மூளை அறிவுறுத்தினாலும் அதைச் செயல்படுத்த முடியவில்லை.
மேலும் ஒரு மணி நேரம் கடந்த பிறகே மெல்ல அசைந்து போர்வையை விலக்கி விட்டுப் படுக்கையில் எழுந்து அமர்ந்தான்.
காற்றாடியின் காற்று குளிரை கூட்டுவது போல் இருந்தது. கட்டிலை விட்டு மெல்ல கீழே இறங்கி நின்றான். கால்கள் தள்ளாடுவது போல் இருந்தது. கட்டிலை பிடித்த படி சில நொடிகள் நின்று விட்டான்.
தலை பாரம் ஏறிக் கனத்தது. நெற்றியிலும், கழுத்திலும் கை வைத்துப் பார்த்தான். அனலாகக் கொதித்தது. தன்னை நிலைப்படுத்திக் கொள்ளச் சில நொடிகள் எடுத்துக் கொண்டு நகர்ந்து சென்று முதலில் காற்றாடியின் வேகத்தைக் குறைத்தான்.
உதடுகள் உலர்ந்து போயிருந்தது. தொண்டையும் வரண்டு எரிச்சலை கொடுத்தது. தண்ணீர் குடித்தால் தான் எரிச்சல் குறையும் என்று நினைத்த படி மெல்ல நடந்து சமையலறைக்குச் சென்றான்.
‘சுடுதண்ணீர் குடித்தால் தான் தொண்டைக்கு இதமாக இருக்கும்’ என்று நினைத்தவன் அடுப்பை பற்ற வைத்து தண்ணீரை சுட வைத்தான்.
தண்ணீர் காயும் நேரம் வரை கூட அவனால் சரியாக நிற்க முடியவில்லை. சமையல் மேடையில் சாய்ந்து நின்று கொண்டான். கண்களைத் திறந்து வைத்திருக்க முடியாமல் கண்கள் தீயாக எரிந்தன.
தண்ணீர் சுட்டதும் டம்ளரில் ஊற்றிக் கொண்டு சோஃபாவில் வந்து அமர்ந்து மிடறு மிடறாக அருந்தினான்.
வரண்டு போன தொண்டைக்குச் சுடுதண்ணீர் இதத்தைக் கொடுத்தது. தண்ணீரை குடித்து விட்டு அப்படியே சோஃபாவில் தலை சாய்த்து அமர்ந்து விட்டான்.
வயிற்றுக்கு ஏதாவது போட்டால் தான் மாத்திரை போட முடியும். ஆனால் வயிற்றுக்குப் போட உணவை தயார் செய்ய வேண்டுமே. அதற்குத் தன் உடலில் தெம்பு இருப்பது போல் அவனுக்குத் தெரியவில்லை.
சோர்வுடன் அமர்ந்திருந்தவனுக்குத் தன் அன்னையின் ஞாபகம் வந்தது. அவனுக்குக் காய்ச்சல் எப்போதும் அவ்வளவு சுலபமாக வந்து விடாது. ஆனால் வந்தால் அவனைப் படுத்தி எடுத்து விடும்.
இரண்டு நாட்கள் எழ கூட முடியாமல் கஷ்டப்பட்டுப் போவான். அப்போது எல்லாம் அவனின் அன்னை அவனைக் குழந்தையாய் தாங்குவார்.
லேசாக உடல் சுட ஆரம்பித்ததுமே கசாயம் வைத்துக் கொடுப்பார். காய்ச்சல் அதிகரித்துச் சிரமப்படும் போது வாய்க்கு இதமாகக் கஞ்சி, துவையல் அல்லது நொறுங்க பிசைந்த ரசம் சாதம் கொடுத்து குடிக்க வைத்து மாத்திரையும் போட வைப்பார்.
தலை பாரம் என்று சொன்னால் உடனே உப்பை வறுத்து ஒத்தடம் கொடுப்பார். இல்லை என்றால் ஆவி பிடிக்க வைப்பார். அவனை விட்டு அகலாமல் அருகில் இருந்து தலையை நீவி விட்டுக் கொண்டே இருப்பார்.
சோஃபாவில் சாய்ந்து அமர்ந்திருந்தவனுக்கு அன்னையின் இதமான தலை கோதலும், தலை வைத்து படுக்க அவரின் மடியையும் தேடி மனம் ஏங்கியது.
இருபத்தி எட்டு வயதை தொட்டுவிட்டாலும் சிறு குழந்தையாய் அன்னையின் அரவணைப்பை தேடினான் கதிர்நிலவன்.
உடல்நிலை நன்றாக இருக்கும் போது விட உடல்நிலை சரியில்லாத போது தான் அன்பான உறவுகள் அருகில் வேண்டும் என்று மனம் எதிர்பார்க்கும்.
கதிர்நிலவனும் இப்போது அதே மனநிலையில் தான் இருந்தான். அன்னையின் நினைவில் கண்களில் ஈரம் கோர்க்க ஆரம்பித்தது.
சில நொடிகள் அப்படியே அமர்ந்து விட்டான். உடல் படுக்கச் சொல்லி கெஞ்ச ஆரம்பிக்கவும் அசைந்து எழுந்து நேராக அமர்ந்தான்.
உடல் சரியில்லாத போது அவனுக்கு ஹோட்டல் உணவும் ஒற்றுக் கொள்ளாது என்பதால் தானே ஏதாவது செய்து சாப்பிட்டு மாத்திரை போட்டு விடலாம் என்று நினைத்து மெல்ல எழுந்து மீண்டும் சமையலறைக்குச் சென்றான்.
சற்று சிரமப்பட்டு, அடிக்கடி சமையல் மேடையில் சாய்ந்து நின்று சமாளித்து ஒரு வழியாகக் கஞ்சியை மட்டும் தயார் செய்தான்.
லேசாக ஆற வைத்தான். துவையல் இல்லாமல் கஞ்சியைக் குடிக்கக் கஷ்டமாக இருந்தாலும் வேறு வேலை செய்ய உடலில் வலு இல்லாததால் கஞ்சியை மட்டும் வலுக்கட்டாயமாகக் குடித்து முடித்தான்.
காய்ச்சல் மாத்திரை எடுத்து போட்டு விட்டுக் கட்டிலில் வந்து கால் நீட்டி அமர்ந்து கொண்டான்.
கல்லூரிக்குச் செல்லும் நேரம் வந்ததை உணர்ந்தவன் உடனே அலைபேசியில் கல்லூரி அலுவலகத்திற்கு அழைத்து விடுப்புச் சொன்னான்.
சற்று நேரத்தில் மீண்டும் படுத்தவன் தான். மாலை வரை அடித்துப் போட்டது போல் உறங்கினான்.
இரவு சரியாக உறங்காததும், மாத்திரை தன் வேலையைக் காட்டியதுமாக மதிய உணவுக்குக் கூட எழாமல் தூங்கினான்.
இந்த இடைப்பட்ட நேரத்தில் காய்ச்சல் குறைய ஆரம்பித்தது. ஆனால் மாலை ஆரம்பித்த நேரத்தில் மீண்டும் உடலில் சூடு ஏற ஆரம்பிக்க அதற்கு மேல் அவனால் உறங்கவும் முடியவில்லை, எழவும் முடியவில்லை.
சிரமத்துடன் அவன் அவதிப்பட்டுக் கொண்டு இருந்த போது தான் வீட்டின் அழைப்பு மணி அழைத்தது.
அழைப்பு மணி ஓசை காதில் கேட்டாலும் எழுந்து கொள்ளக் கையும், காலும் ஒத்துழைக்க மறுத்தது.
தலையை நிமிர்த்தினால் தலை சுற்றிக் கொண்டு மயக்கம் வருவது போல் இருந்தது.
வந்தவர்கள் வீட்டில் ஆள் இல்லை என்று நினைத்து சென்று விடட்டும் என்று நினைத்துக் கொண்டவன் எழுந்து கொள்ளும் முயற்சியைக் கைவிட்டு மீண்டும் படுத்துக் கொண்டான்.
ஆனால் மீண்டும் பத்து நிமிடங்கள் கடந்த பிறகும் அழைப்பு மணி ஒலிக்க, வெகுவாகச் சிரமப்பட்டுப் படுக்கையிலிருந்து எழுந்தான்.
காலையில் விட இப்போது காலை கீழே ஊன்ற முடியாத அளவு உடல் தள்ளாடியது. அப்போது மீண்டும் ஒரு முறை அழைப்பு மணி ஒலித்தது.
கூடவே “சார்… சார்…” என்ற பெண் குரலும் கேட்க,
அந்தக் குரலை அனுமானிக்க முயன்ற படி கட்டிலை பிடித்துக் கொண்டு நின்றான்.
தலையைச் சுற்றிக் கொண்டு வந்ததில் அவனால் குரலை பற்றியெல்லாம் யோசிக்க முடியவில்லை.
லேசான தடுமாற்றத்துடன் சுவற்றைப் பிடித்த படி சென்று கதவை லேசாகத் திறந்தான்.
கண்கள் சிவக்க, தலை முடி கலைந்திருக்க, சோர்வுடன் கதவை திறந்தவனைப் பதட்டத்துடன் பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள் நயனிகா.
அவளைக் கண்களைச் சுருக்கி பார்த்தவன், “என்ன?” என்றான்.
“உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு காலேஜில் சொன்னாங்க சார். அதான் பார்த்துட்டு போகலாம்னு…” என்று தயக்கத்துடன் சொன்னால் நயனிகா.
“ம்ப்ச்…” என்று சலித்துக் கொண்டவன், “பார்த்துட்ட இல்ல? போ…” என்றான் கடுப்பாக.
‘இங்கே மனுஷன் நிக்கக் கூடத் தடுமாற்றமா இருக்கு. இதில் இவள் வேற…’ என்று முனங்கி கொண்டவன் அடுத்து அவள் பேசும் முன் கதவை சாற்றிக் கதவின் மீதே சாய்ந்து நின்றான்.
அவனால் அடுத்த அடி கூட எடுத்து வைக்க முடியாத அளவு தலையைச் சுற்றிக் கொண்டு வந்தது.
வெளியே அவன் கதவை சாற்றிய வேகத்தில் விக்கித்து நின்றாள் நயனிகா.
அவன் உடல்நிலை சரியில்லாமல் தனியாகக் கஷ்டப்படுவானே. அவனுக்கு ஏதாவது உதவலாமே என்ற மனிதாபிமான அடிப்படையில் தான் கதவை திறக்க தாமதம் ஆனாலும் விடாமல் நின்று அழைத்துக் கொண்டிருந்தாள்.
அவன் வர வெகு நேரம் ஆகவுமே அவளின் தவிப்பு கூடிப் போனது. எழுந்து வர முடியாத அளவு கஷ்டப்படுகிறானோ என்று நினைத்துப் பதட்டம் கூடி போய் அவனை அழைத்த படியே அழைப்பு மணியை அழைத்துக் கொண்டே இருந்தாள்.
இப்போது என்னவென்றால் தான் சொல்ல வருவதைக் கூடச் சரியாகக் கேட்காமல் கதவை மூடிவிட்டானே என்று விக்கித்துப் போய் நின்றிருந்தாள்.
அப்போது ஏதோ வேலையாகக் கதவை திறந்து வந்த அபிராமி மகள் எதிர் வீட்டு கதவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு அவளிடம் வந்தார்.
“என்ன நயனி, எதுக்கு இங்கே நிற்கிற?” என்று கேட்டார்.
“சாருக்கு உடம்பு சரியில்லைன்னு இன்னைக்கு லீவ் போட்டுட்டார் மா. அதான் எப்படி இருக்கார்னு கேட்கலாம்னு கதவை தட்டினா, அதான் பார்த்துட்டேலே போன்னு சொல்லி திரும்பக் கதவை மூடிக்கிட்டார்…” என்றாள்.
“ஓ, சரி விடு. அந்தத் தம்பியைப் பத்தி தான் தெரியும்ல. அப்புறமும் ஏன் இங்கயே நிற்கிற? நீ வா, வீட்டுக்கு போவோம்…” என்று அழைத்தார்.
“இல்லமா, சாருக்கு ரொம்ப உடம்பு சரியில்லை போல. அவரால் நிற்க கூட முடியாததைப் பார்த்தேன். அவரை அப்படியே விட்டுட்டு போக மனசு வரலைமா…” என்றாள்.
“அந்தத் தம்பி தான் கதவை மூடுறாரே அப்படி இருக்கும் போது நாம என்ன செய்ய முடியும்? நீ வா…” என்று மகளின் கையைப் பிடித்து அழைத்தார்.
ஆனால் நயனிகாவிற்கு அந்த இடத்தை விட்டு நகர முடியவில்லை.
இப்படித் தனியாகக் கஷ்டப்படுவது அவனின் இயல்பாக இருக்கலாம். ஆனால் தனக்கு நன்கு தெரிந்த தன் ஆசிரியர் அப்படித் தனியாகக் கஷ்டப்படட்டும் என்று விட்டுவிட அவளுக்கு மனது வரவில்லை.
“கொஞ்சம் இருங்கமா…” என்று அன்னையின் கையை விலக்கியவள், “சார்…” என்று இப்போது கதவை தட்டினாள்.
“உங்களுக்கு ரொம்ப முடியலைன்னு பார்த்ததுமே தெரியுது சார். இந்த நிலையில் நீங்க இருக்கும் போது எப்படியோ இருங்கன்னு என்னால் விட்டுட்டு போக முடியாது. ப்ளீஸ் சார், கதவை திறங்க…” என்றாள்.
இன்னும் நகராமல் கதவில் சாய்ந்து நின்றிருந்தவனுக்கு அவளின் குரல் நன்கு கேட்டது.
“ஏய் நயனி, அந்தத் தம்பி திட்ட போகுது…” என்றார் அபிராமி.
ஆனால் அவளின் கெஞ்சல் அவனின் இளகிய மனதை அசைத்துப் பார்த்தது.
“பக்கத்து வீட்டுக்காரங்க உதவி தானே உங்களுக்குப் பிடிக்காது. நான் இப்போ உங்க ஸ்டுடெண்ட்டா வந்துருக்கேன். ப்ளீஸ் சார், கதவை திறங்க…” என்றாள்.
அதற்கு மேலும் அமைதியாக இருக்காமல் மீண்டும் கதவை திறந்தான்.
“காலையிலும், மதியமும் சாப்பிட்டீங்களா சார்? ஹாஸ்பிட்டல் போனீங்களா? உடம்புக்கு என்ன சார் செய்து?” அவன் கதவை திறந்ததும் எங்கே திரும்ப மூடி விடுவானோ என்று நினைத்து வேகமாகக் கேட்டாள்.
அங்கே அவளுடன் அவள் அன்னையும் நிற்பதை பார்த்துக் கொண்டே “ஃபீவர் தான். காலையில் கஞ்சி சாப்பிட்டேன். அதுக்குப் பிறகு தூங்கி இப்பத்தான் எழுந்தேன்…” என்று திணறலாகச் சொன்னவன் லேசாகத் தடுமாறி கதவை அழுந்த பிடித்துக் கொண்டு நின்றான்.
“அச்சோ! சார்…” என்று பதறி அவனைப் பிடிக்க வந்தாள்.
ஆனால் அவளைத் தொட விடாமல் ‘வேண்டாம்’ என்று தலையை அசைத்தவன், கதவை திறந்து வைத்து விட்டு மெல்ல நடந்து சோஃபாவில் சென்று அமர்ந்து கொண்டான்.
“மதியம் சாப்பிடாதது தலையைச் சுத்திக்கிட்டு வருமா இருக்கும். நான் போய் ரசம் சோறு எடுத்துட்டு வர்றேன். நீ போய்த் தம்பிக்கு தண்ணி எடுத்துக் கொடு…” என்று மகளிடம் சொல்லிவிட்டு வேகமாகத் தங்கள் வீட்டிற்குச் சென்றார் அபிராமி.
‘அச்சோ! நம்மக்கிட்ட சாப்பாடு வாங்க மாட்டாரே. இந்த அம்மா இப்போ சாப்பாடு எடுக்கப் போறாங்களே…’ என்று பதட்டத்துடன் நினைத்துக் கொண்டே அவனின் வீட்டிற்குள் நுழைந்தாள்.
“சார், தண்ணி எடுத்துட்டு வரட்டுமா?” தயக்கத்துடன் கேட்டாள்.
அவனால் பேச கூட முடியவில்லை. சோஃபாவில் கண்களை மூடி சாய்ந்து அமர்ந்திருந்தவன் “ம்ம்…” என்றான் முனங்கலாக.
உடனே சமையலறைக்கு ஓடினாள்.
அங்கே காலையில் அவன் சுட வைத்தது போக மீதம் இருந்த தண்ணீர் ஒரு பாத்திரத்தில் இருந்தது. அதை மீண்டும் குடிக்கும் சூட்டில் சுட வைத்து டம்ளரில் ஊற்றிக் கொண்டு எடுத்து வந்தாள்.
“சார், தண்ணி…” அவனின் முன் நின்று அழைக்க,
“வச்சுடு, எடுத்துக்கிறேன்…” என்றான்.
அவள் டீப்பாய் மீது வைத்ததும் நிமிர்ந்து அமர்ந்து இடது கையை நீட்டி டம்ளரை எடுத்து குடிக்க ஆரம்பித்தான்.
காலையிலிருந்து காய்ந்து போயிருந்த தொண்டையில் தண்ணீர் இறங்கியதும் இதமாக இருந்தது. அதனுடன் தலை சுற்றலும் சற்று குறைவது போல் இருந்தது.
தண்ணீரை குடித்து முடித்தவன், “தேங்க்ஸ்…” என்றான் அவளைப் பார்த்து.
“பரவாயில்லை சார். ஹாஸ்பிட்டல் போனீங்களா சார்?”
“இல்ல… ரொம்ப டயர்ட்டா இருந்தது, தூங்கிட்டேன்…” என்றான்.
“இப்ப காய்ச்சல் இருக்கா சார்?” என்று கேட்டவளுக்கு ‘ஆமாம்’ என்று தலையை அசைத்தான்.
அப்போது ரசம் சாதத்தை எடுத்துக் கொண்டு வந்த அபிராமி, “இதைக் கொஞ்சம் சாப்பிடுங்க தம்பி. கொஞ்சம் தெம்பா இருக்கும்…” என்று நீட்டினார்.
அவன் தயக்கமாக அவரைப் பார்க்க, “சந்தோஷமா பேசிட்டு இருக்கலைனாலும், இப்படி முடியாதப்ப உதவுவதற்குத் தான் அக்கம் பக்கம் ஆளுங்க இருக்குறது தம்பி. தயங்காம வாங்கிக்கோங்க…” என்றார் அபிராமி.
அதற்கு மேலும் தயங்கி கொண்டு இருக்காமல், “இப்படி டீப்பாய்ல வச்சுடுங்கமா. நான் கை கழுவிட்டு வர்றேன்…” என்று சொல்லிவிட்டு எழுந்தான்.
அவன் சாப்பிடுவதாகச் சொன்னதில் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டாள் நயனிகா.
“நடந்துடுவீங்களா சார்? இன்னும் தலை சுத்துதா?” என்று கேட்டாள்.
“இப்ப பரவாயில்லை நடந்துடுவேன்…” என்று சொல்லி விட்டு மெல்ல நடந்து சென்றான்.
அவன் கையைக் கழுவி விட்டு வந்து, ரசம் சாதத்தை எடுத்து உண்ண ஆரம்பித்தான்.
இப்போதும் அவனின் வலது கையை மறைவாகத்தான் வைத்திருந்தான். அதை யோசனையுடன் பார்த்தாலும் நயனிகா அப்போதைக்கு அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை
அபிராமி சாதத்தை நன்கு கரைத்து ஸ்பூன் போட்டு எடுத்து வந்ததால் அவனுக்கு உண்ண சுலபமாக இருந்தது.
மிளகும், பூண்டும் தட்டி போட்டு செய்த ரசத்தில் இருந்த காரம் காய்ச்சலில் கசந்த வாய்க்கு ருசியாக இருக்கப் பொறுமையாக உண்டான்.
அவனின் எதிரே நயனிகாவும், அபிராமியும் நின்ற படி இருந்தனர்.
அவர்களை அவன் உட்கார சொல்லியும் நின்றே இருந்தனர்.
“சாப்பிட்டு முடிச்சதும் ஹாஸ்பிட்டல் போயிட்டு வந்துடுங்க தம்பி. தயா வர இன்னும் லேட் ஆகும் நயனி. நீ தம்பி கூடத் துணைக்குப் போய்ட்டு வா…” என்றார் அபிராமி.
“இருக்கட்டும்ங்கமா. நானே போயிட்டு வந்துடுவேன். காலையில் ரொம்ப முடியாமத்தான் மாத்திரை மட்டும் போட்டுட்டுப் படுத்துட்டேன். இப்ப கொஞ்சம் பரவாயில்லை. நான் தனியா போயிடுவேன்…” என்றான்.
“பரவாயில்லைன்னு உங்க வாய் தான் சொல்லுது தம்பி. ஆனா உடல்நிலை சொல்லலை. இன்னும் உங்ககிட்ட தடுமாற்றம் இருக்கு. தனியா போய்த் தலை சுத்தி விழுந்தால் என்ன செய்றது? நயனிகா உங்க கூட வரட்டும். உங்க ஸ்டுடெண்ட் அவள். இந்த நேரத்தில் இந்த உதவி கூடச் செய்யலைனா எப்படி?” என்று பேசி அவனைச் சம்மதிக்க வைத்தார்.
அவனுக்கும் அதிகம் மறுப்பு சொல்ல முடியவில்லை. தன் உடல்நிலையும் அவர்களின் அக்கறையான பேச்சும், கவனிப்பும் அவனை மறுக்க விடவில்லை.
அவர்களைச் சோஃபாவில் அமர சொல்லிவிட்டு குளியலறைக்குச் சென்று முகம் கழுவினான். வெளியே வந்து அணிந்திருந்த இலகுவான உடையிலிருந்து பேண்ட், சட்டைக்கு மாறி வெளியே வந்தான்.
சற்று நேரத்தில் இருவரும் மருத்துவமனை கிளம்பினர். அபிராமி மின்தூக்கி வரை அவர்களுடன் வந்தார்.
“ரொம்பத் தேங்க்ஸ் மா. உங்க உதவியை என்னைக்கும் மறக்க மாட்டேன்…” என்றான்.
அதைச் சொல்லும் போது அவனின் குரல் நெகிழ்ந்திருந்ததை அன்னையும், மகளும் ஆச்சரியத்துடன் உணர்ந்தனர்.
“இருக்கட்டும் தம்பி. ஏதோ எங்களால் ஆனா சின்ன உதவி…” என்றார் அபிராமி.
அத்தனை சோர்விலும் அவரைப் பார்த்து லேசாகப் புன்முறுவல் பூத்தான் கதிர்நிலவன்.