4 – இன்னுயிராய் ஜனித்தாய்

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 4

“உனக்கு என்ன வேணும் குட்டிம்மா? பிஸ்கட் சாப்பிடுவியா?” தன் கையில் இருந்த வருணாவிடம் கேட்டான் நித்திலன்.

வருணாவோ அந்தக் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தையும் கையை நீட்டிக் காட்டிக் கொண்டிருந்தாள்.

“இந்தப் பிஸ்கட் வாங்கிக்கிறயா?” எதை வாங்குவது என்று புரியாமல் ஒரு பிஸ்கட்டை கை காட்டிக் கேட்டான்.

அவளும் அந்தப் பிஸ்கட்டை பார்த்து சிரிக்க, அதையே வாங்கிக் கொண்டான்.

“அம்மாகிட்ட போகலாமா?” என்று குழந்தையிடம் கேட்க, அவளும் மருத்துவமனையை நோக்கி கையைக் காட்டினாள்.

இருவரும் மருத்துவமனைக்குள் சென்றனர்.

தன் கைகளில் பாந்தமாக இருந்து கொண்ட குழந்தையை அவனின் கண்கள் பாசத்துடன் தழுவி மீண்டன.

என்னவோ அவனையே அறியாமல் ஒரு ஒட்டுதல் வருணாவிடம் அவனுக்கு ஏற்பட்டது.

குழந்தையைத் தூக்கிக் கொள்ள வேண்டும். பாசம் காட்ட வேண்டும். பரிவுடன் வருட வேண்டும். கண் நிறைய நிரப்பிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவனை ஆட்கொள்ள ஆரம்பித்தது.

தான் செய்வது சரியா, தவறா என்று கூட யோசிக்கப் பயந்து அதை ஒதுக்கி வைத்தான் நித்திலன்.

“அந்தத் தம்பி இருப்பது நமக்கு உதவியா இருக்குலமா? மருத்துவமனை அறையில் மகளிடம் கேட்டார் சபரிநாதன்.

“ஆமா தான்பா. ஆனா அவருக்குத் தேவையில்லாம தொந்தரவு கொடுக்குறோமோன்னு சங்கடமா இருக்கு…” என்றாள் துர்கா.

“நானும் அப்படித்தான்மா நினைச்சேன். ஆனா நமக்கு உதவ வேற யாருமா வருவா? என் தங்கச்சியே விஷயம் தெரிஞ்சி கல்யாண வேலை இருக்கு… வர முடியாதுன்னு சொல்லலையா என்ன? அவ்வளவுதான்மா நம்பச் சொந்தபந்தம்.

இந்தத் தம்பியாவது நமக்கு உதவ வந்துச்சேன்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான். அதுவும் அந்தத் தம்பியும் ஒண்டி கட்டை. அதைத் தேடியும் சொந்தபந்தம்னு யாரும் வரக்காணோம். தனியா இருக்குற பிள்ளை ஒதுங்கிப் போக நினைக்காம உதவி பண்ண வருவதே பெரிய விஷயம் தான்…” என்றார் சபரிநாதன்.

தந்தையின் பேச்சை ஆமோதிப்பது போல் அமைதியாக இருந்தாள் துர்கா.

நித்திலனும், வருணாவும் கடைக்குப் போய்விட்டு வந்த போது அவனைப் பற்றித் தந்தையும், மகளும் பேசி முடித்திருந்தனர்.

“பிஸ்கட் எல்லாம் எதுக்குங்க?” மகளின் கையில் இருந்த பிஸ்கட் பாக்கெட்டை பார்த்துக் கேட்டாள் துர்கா.

“குழந்தையை முதல் முதலில் கடைக்குத் தூக்கிட்டுப் போனேன். ஒன்னுமே வாங்கிக் கொடுக்காமல் எப்படிங்க இருக்க முடியும்?” என்று கேட்டான்.

“உங்களுக்குத்தான் செலவு…”

“பத்து ரூபாய்ல என்னங்க பெரிய செலவு? விடுங்க…” என்றான் இலகுவாக.

“நீங்க மதியம் இங்கே இருப்பீங்களா?” துர்கா திடீரெனக் கேட்க,

“ஏங்க, என்ன விஷயம்?” யோசனையுடன் அவளைப் பார்த்தான்.

“நீங்க ஆப்ரேஷன்னுக்குக் கொடுத்த பணத்தை எடுத்துட்டு வரலாம்னு இருக்கேன். நான் வரும் வரை மட்டும் அப்பாவை பார்த்துக்க முடியுமா?” என்றாள்.

“என்ன அவசரம்ங்க? வீட்டுக்குப் போனபிறகு கூடக் கொடுக்கலாமே?”

“இல்லைங்க, உடனே கொடுத்து விடுவது தான் நல்லது. நான் போய் எடுத்துட்டு வர்றேன். அதுவரை அப்பாவை கொஞ்சம் பார்த்துக்கோங்க…” என்று குழந்தையுடன் துர்கா கிளம்ப,

“நகையைப் பத்திரமா எடுத்துட்டு போமா…” என்று மகளிடம் சொன்னார் சபரிநாதன்.

“சரிப்பா…” என்ற துர்கா வாசலை நோக்கி நடக்க,

“ஒரு நிமிஷம் நில்லுங்க. என்ன சார் சொல்றீங்க, நகை எதுக்கு?” துர்காவை நிறுத்தி வைத்துவிட்டுச் சபரிநாதனிடம் கேட்டான் நித்திலன்.

“அது வந்துங்க தம்பி…” என்று அவர் தயங்க, அவனின் பார்வை கேள்வியுடன் துர்காவின் புறம் திரும்பியது.

“உங்களுக்குப் பணம் கொடுக்க…” என்றாள் அவள்.

“ஓ! நகையை அடகு வச்சுக் கொடுக்கப் போறீங்களா?” என்றவனுக்கு மௌனத்தாலேயே பதில் சொன்னாள்.

“ஏங்க அவ்வளவு அவசரமா நகையை அடமானம் வச்சுப் பணத்தைக் கொடுங்கன்னு நான் கேட்கலையே?”

“நீங்க கேட்கலைங்கிறதுக்காக நாங்க கொடுக்காம இருக்க முடியாதேங்க? உங்க பணத்தைக் கொடுத்துட்டா எங்களுக்குக் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்…” என்றாள்.

“பணத்தைக் கொடுக்க வேண்டாம்னு நான் சொல்லலைங்க. கொடுங்க. ஆனா இப்ப வேண்டாம். எனக்கு இப்ப எதுவும் அவசர தேவையும் இல்லை. வீட்டுக்குப் போன பிறகு கூட மெதுவா கொடுங்க…” என்றான் நித்திலன்.

“இல்லங்க. அப்பயும் இப்படித்தான் பணம் புரட்டணும். அதை ஏன் தள்ளிப் போடணும்னு பார்க்கிறேன்…”

“நீங்க என்னை ரொம்பச் சங்கடப்படுத்துறீங்க. இவ்வளவு அவசர அவசரமா பணத்தை வாங்கினா ஏதோ வட்டிக்காரன் போல ஃபீல் ஆகுது. நீங்க மெதுவாகவே கொஞ்ச கொஞ்சமா கூடக் கொடுங்க போதும்! வாங்கிக்கிறேன்…” என்றான்.

துர்கா அவனுக்கு மறுப்பாக ஏதோ சொல்ல வர, “விடுமா துர்கா. தம்பி தான் இவ்வளவு சொல்லுதுல? வீட்டுக்குப் போய்க் கொடுத்துக்கலாம்…” என்றார் சபரிநாதன்.

தந்தையின் பேச்சுக்குச் செவி சாய்த்தாள் துர்கா.

அப்போது சபரிநாதனை பரிசோதிக்க வந்தார் ஒரு செவிலி. அதனால் அவர்களின் பேச்சு அத்துடன் நின்றது.

சபரிநாதனை பரிசோதித்து முடித்த செவிலியின் பார்வை யோசனையுடன் குழந்தையின் பக்கம் திரும்பியது.

“சின்னப் பிள்ளையை ஏன் ஹாஸ்பிட்டலிலேயே வச்சுருக்கீங்க? இன்பெக்சன் ஆகிட போகுது. வீட்டுல யார்கிட்டயாவது விட்டுட்டு வாங்க…” என்றார் செவிலி.

“வீட்டுல பார்த்துக்க யாருமில்லை சிஸ்டர்…” என்றாள் துர்கா.

“அப்போ நீங்க குழந்தையோட வீட்டில் இருந்துட்டு, உங்க ஹஸ்பெண்ட்டை உங்க அப்பாவுக்குத் துணையா இருக்கச் சொல்லுங்க…” என்று செவிலி சொன்னதும் அதிர்ந்தாள் துர்கா.

நித்திலனுக்கும் அதே அளவு அதிர்வு தான்.

“நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க சிஸ்டர். நான் அவங்க நெய்பர்…” என்று வேகமாக மறுத்தான் நித்திலன்.

“ஓ, சாரிங்க. எனக்குத் தெரியாது. ஆனாலும் குழந்தையை இங்கேயே வச்சுருக்கிறது நல்லது இல்லைங்க…” என்று சொல்லிவிட்டு அந்தச் செவிலி சென்று விட்டார்.

நித்திலன் சங்கடத்துடன் துர்காவைத் திரும்பி பார்க்க, அவள் இறுகிப் போய் அமர்ந்திருந்தாள்.

“ஸாரிங்க. அவங்க அப்படி நினைப்பாங்கன்னு எதிர்பார்க்கலை…” என்றவன் அவளை மேலும் சங்கடப்படுத்த விரும்பாமல் வெளியே சென்றுவிட்டான்.

அவனின் உள்ளமும் தவித்துப் போய்த் தான் இருந்தது.

‘ச்சை… இப்படி நினைச்சுட்டாங்களே…’ என்று வேதனையுடன் தலையைப் பிடித்துக் கொண்டு வெளியே இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

குழந்தையின் அருகாமை வேண்டும் என்று நினைத்து, தான் பெரிய முட்டாள்தனம் செய்து விட்டோமோ? என்று வருந்தினான்.

அவனால் அந்த வார்த்தையை ஜீரணிக்கவே முடியவில்லை.

‘ஹஸ்பெண்ட்’ என் பிறப்பில் அந்தப் பதவியே எனக்குக் கிடையாதே. அது தெரியாமல்… ம்ப்ச்… ம்ப்ச்…’ என்று விரக்தியுடன் சலித்துக் கொண்டான்.

‘பாவம், என்னால் அவங்களுக்கும் வருத்தம் வந்திருக்கும். பேசாமல் இங்கிருந்து போய் விடுவோமா?’ என்று நினைத்தவன் ஒரு முடிவுடன் மீண்டும் உள்ளே சென்றான்.

துர்கா மகளை அணைத்தபடி இறுகி போய் அமர்ந்திருக்க, மகளுக்கு ஏதோ தேறுதல் சொல்லிக் கொண்டிருந்தார் சபரிநாதன்.

“ஸாரி சார், ஸாரிங்க… என்னால் உங்களுக்குச் சங்கடம் வேண்டாம். நான் இங்கே இருந்து போயிடுறேன். உங்களுக்கு உதவியா இருக்கலாம்னு நினைச்சுத்தான் வந்தேன். ஆனால் என்னோட உதவியே உங்களுக்கு உபத்திரவமா மாறும் போது நான் இங்கே இருப்பது சரியில்லை. ஸாரி…” என்றவன் அதற்கு மேல் நிற்காமல் வாசலை நோக்கி நடக்க,

“ஒரு நிமிஷம்!” என்று அவனை நிறுத்தினாள் துர்கா.

“உங்க மனசுல என்மேல் ஏதாவது தப்பான எண்ணம் இருக்கா?” அவன் கண்களையே கூர்ந்து பார்த்துக் கேட்டாள்.

“அய்யோ! இல்லைங்க…” வேகமாகப் பதறி மறுத்த நித்திலனின் கண்களில் உண்மை இருந்தது.

அந்த உண்மையைக் கண்டாள் துர்கா.

“அப்போ ஏன் இந்தப் பதட்டம்? அமைதியா இருங்க. என் மனசிலும் கல்மிஷம் இல்லை. உங்க மனசிலும் கல்மிஷம் இல்லைங்கும் போது நாம ஏன் பதறணும்? நம்மைப் பற்றித் தெரியாதவங்க ஏதோ சொல்லிட்டாங்கிறதுக்காக நாம அதைப் பெருசா எடுத்துக்கத் தேவையில்லை…” என்று துர்கா தெளிவாக உரைக்க, நித்திலன் நிம்மதியடைந்தான்.

துர்கா எங்கே தன்னைத் தவறாக நினைத்திருப்பாளோ என்று பயந்து போயிருந்தான்.

அவள் தெளிவாகப் பேசியதில் அவனின் மனம் ஆசுவாசம் கொண்டது.

அவ்வளவு நேரமாக இறுகி போயிருந்த அவனின் உடலும் மெல்ல தளர்ந்தது.

அதன் பிறகு அமைதியாக நேரம் கடந்தது. குழந்தையைச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டும், அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்து கொண்டும் அங்கே இருந்தான் நித்திலன்.

இரவு உணவை அவர்களுக்கு வாங்கிக் கொடுத்து விட்டுத் துர்கா சாப்பிட ஏதுவாகக் குழந்தையை வாங்கிக் கொண்டவன் வருணாவின் கையை மெல்ல பாசமாக வருடினான்.

“அந்தச் சிஸ்டர் சொன்னதை யோசித்துப் பார்த்தீங்களா? குழந்தை இங்கேயே இருந்தால் இன்பெக்ஷன் ஆகிடும்னு சொன்னாங்களே? குழந்தையும் இங்கே இருக்க முடியாம அப்பப்போ ரொம்ப அழ வேற செய்றாள்…” என்று கேட்டான் நித்திலன்.

“எனக்கும் அவள் அழும் போது கஷ்டமாத்தான் இருக்கு. ஆனா அதுக்காக என்ன பண்ண முடியும்? அவளைப் பார்த்துக் கொள்ள யாரும் இல்லைங்கும் போது இங்கேயே வச்சுருந்துதான் சமாளிக்கணும்…” என்றாள் துர்கா.

“நைட் தான் பாப்பா தூங்க ரொம்பக் கஷ்டப்படுறாள். நீங்க வேணும்னா நைட் பாப்பா கூட வீட்டுக்குப் போயிட்டுக் காலையில் வாங்க. நான் சாரை பார்த்துக்கிறேன்…” என்றான்.

“இல்ல…” என்று துர்கா மறுக்க வர,

“எனக்குத் தொந்தரவு, பிரச்சனைன்னு எதுவும் இல்லைங்க. என் வீட்டுல தனியா படுத்திருப்பதற்குப் பதில் இங்கே படுக்கப் போறேன். பாப்பாவுக்காகத்தான் சொல்றேன். நேத்தும் அவள் சரியா தூங்கலை. இன்னைக்கும் தூங்கலைனா உங்களுக்கும் கஷ்டம், அவளுக்கும் கஷ்டம்…” என்றான்.

“தம்பி தான் இவ்வளவு தூரம் சொல்லுதேமா. நீ வீட்டுக்குப் போ. இன்னும் இரண்டு நாள் தானே ஹாஸ்பிட்டலில் இருக்கப் போறோம். அதுவரை சமாளிச்சுத்தான் ஆகணும்…” என்றார் சபரிநாதன்.

“சரிப்பா…” என்று தந்தையிடம் சொன்னவள், “தேங்க்ஸ்ங்க. மேலும் மேலும் எங்க நன்றி கடன் பெருசா ஆகிட்டே போகுது…” என்றாள் நித்திலனிடம்.

“மனுஷங்களுக்குள்ள ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்து கொள்வது இயல்பு தாங்க. அதைப் போய்ப் பெருசா பேசிக்கிட்டு…” என்றான் நித்திலன்.

“உங்களுக்குத் தான்ங்க அந்த இயல்பு…” என்ற துர்காவிற்குத் தன் உறவினர்களை நினைத்துக் கசப்பான புன்னகை எழுந்தது.

“விடுங்க, ஒருத்தர் மாதிரியே எல்லோரும் இருப்பது இல்லை தான்…” என்றான் சமாதானமாக.

அன்று இரவு துர்காவும், வருணாவும் வீட்டிற்குச் சென்று விட, நித்திலன் சபரிநாதனுக்குத் துணையாக மருத்துவமனையில் தங்கினான்.

அன்று மட்டுமில்லாமல் அடுத்த இரண்டு நாட்களும் கூட அவர்களுக்கு உதவியாக இருந்தான்.

அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறையும் எடுத்துக் கொண்டான்.

துர்கா ஆட்சேபித்த போது சமாளித்து வைத்தான்.

இரவு சபரிநாதனுடன் தங்கிக் கொண்டான்.

பகலில் வருணாவுடன் செலவழிக்க அவனுக்கு அதிக நேரம் கிடைத்தது.

பகலில் சாப்பிடும் போதும், தூங்கும் போது மட்டுமே தாயிடம் இருக்கும் வருணா, மற்ற நேரங்களில் நித்திலனுடன் தான் இருந்தாள்.

அவனும் வெளியே அழைத்துச் சென்று வேடிக்கை காட்டுவதும், கடைக்கு அழைத்துச் செல்வதுமாக இருக்க, அவனுடன் நன்றாகவே ஒட்டிக் கொண்டாள்.

அவளின் ஒட்டுதலில் நித்திலனின் மனம் நெகிழ்ந்து போயிருந்தது.

குழந்தையிடம் தான் அதிகம் ஒட்டுதல் காட்டுகிறோம் என்று புத்திக்குப் புரிந்தாலும் அதை மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது.

இன்னும் இன்னும் அக்குழந்தையுடன் பழக வேண்டும் என்ற ஆவலை தூண்டியது மனது.

மனது ஆட்டுவித்த திசையில் மனதை செலுத்தினான் நித்திலன்.

மூன்று நாட்களுக்குப் பிறகு சபரிநாதனை வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்று மருத்துவர்கள் சொல்லி விட, மீதமிருந்த மருத்துவமனை தொகையைத் தானே கட்டினாள் துர்கா.

நித்திலனும் அதில் தலையிடவில்லை.

வீடு வந்து சேர்ந்தார் சபரிநாதன்.

அவரை வீட்டில் விட்டதும் நித்திலன் தன் வீட்டிற்குச் சென்றுவிட்டான்.

அவன் சென்றதும் அந்தக் காம்பவுண்டில் இருந்த மற்ற குடித்தனக்காரர்கள் சபரிநாதனை நலம் விசாரிக்க வந்தனர்.

மற்ற இரண்டு வீட்டுக்காரர்கள் வந்ததும் கேட்டுவிட்டு போய்விட, வித்யா மட்டும் துர்காவுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

“ஹாஸ்பிட்டலில் இருந்தது சிரமமா இருந்திருக்கும் என்ன துர்கா?” நயமாகக் கேட்டாள் வித்யா.

“ஆமாக்கா. அதுவும் பாப்பாவையும் வச்சுக்கிட்டுத்தான் கொஞ்சம் சிரமமாகிருச்சு. ஆனாலும் பக்கத்து வீட்டுக்காரர் ரொம்ப உதவியா இருந்தார். அவருக்குத்தான் ரொம்ப நன்றி சொல்லணும்…” என்றாள் துர்கா.

“சரிதான். அந்த ஆளுக்கும் கேள்வி கேட்க யாருமில்லை. எல்லாத்துக்கும் வசதியாத்தான் இருந்திருக்கும்…” என்று வித்யா ஒரு மாதிரியான குரலில் சொல்ல, துர்காவின் முகம் மாறியது.

“நாங்க எல்லாம் இங்கே குடும்பமா இருக்கோம். வீட்டையும், பிள்ளைகளையும் விட்டுட்டு வர முடியலை. ஆனா அந்த ஆளுக்கு அப்படி இல்லையே? தனியா இருப்பதால் உதவி செய்ய வசதியா இருக்கும்னு சொன்னேன்…” என்று வித்யா உடனே சமாளிப்பாகச் சொல்ல, துர்காவிற்கு அவளின் சமாளிப்புப் புரியத்தான் செய்தது.

ஆனால் ஒன்றும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தாள்.

“என்னமா பண்றது. அப்படியாவது எங்களுக்கு உதவ ஒரு ஆள் கிடைச்சதே. இதுவே வருஷக்கணக்கா பழகினவங்க எல்லாம் எட்டிப் பார்க்க கூட வரலை. பழகினவங்களை விடப் பழகாதவங்க எவ்வளவோ மேல்னு அந்தத் தம்பி நிரூபிச்சுருக்கு…” என்றார் சபரிநாதன்.

ஒருவித குத்திக் காட்டுதல் தான்! அதைக் கேட்டதும் இப்போது முகம் மாறுவது வித்யாவின் முறையானது.

“பிள்ளைகளை வீட்டுப்பாடம் செய்யச் சொல்லிட்டு வந்தேன். அதுங்க எழுதுச்சுங்களா, விளையாடிட்டு இருக்குங்களான்னு தெரியலை. நான் போய்ப் பார்க்கிறேன் துர்கா…” என்ற வித்யா அதற்கு மேல் அங்கே இருக்காமல் நழுவிச் சென்றாள்.

“ஏன்பா?” அவள் சென்றதும் துர்கா தந்தையிடம் கேட்க,

“பின்ன என்னமா? உதவி செய்யலைனாலும் உதவி செய்தவங்களைக் குறை சொல்லாமல் இருக்கணும். அதுவும் அந்தப் பொண்ணு எந்த மாதிரி குத்தி பேசுது. அதைக் கேட்டுட்டு சும்மாவா இருக்கச் சொல்ற?

குட்ட குட்ட குனிஞ்சிட்டே இருந்தால் தரையில் தள்ளி நம்ம மேல ஏறி மிதிச்சுட்டு போயிட்டே இருப்பாங்கமா…” என்றார்.

தந்தை சொல்வதும் சரி என்று தான் அவளுக்கும் தோன்றியது.

ஆனாலும் வித்யா போன்ற ஆட்களிடம் அளந்து தான் பேச வேண்டும் என்பது அவளின் எண்ணம்.

“சும்மாவே ஆடுபவர்கள் காலில் சலங்கையும் கட்டக் கூடாதுபா…” என்று மட்டும் சொல்லிவிட்டு எழுந்து வேலையைப் பார்க்க சென்றாள் துர்கா.

தந்தை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்து வந்ததில் ஒரு திருப்தி இருந்தாலும், அதன் பிறகு தான் துர்காவிற்குச் சில சங்கடங்களும் உருவானது.

சபரிநாதனின் இயற்கை தேவைக்கு மருத்துவமனையில் இருந்த வரை மருத்துவமனை ஊழியர்களே உதவியதால் அவளுக்கு எந்தச் சங்கடமும் இருக்கவில்லை.

ஆனால் இங்கே வீட்டிலேயே கழிவறை இல்லாமல் வீட்டிற்கு வெளியே இருந்ததால் அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

ஒற்றை ஆளாகத் தனியாக அவரை வெளியே வரை அவளால் அழைத்துச் செல்ல முடியவில்லை.

அன்று இரவே சபரிநாதன் குளியலறைக்குச் செல்ல வேண்டும் மகளிடம் சொல்ல, அவரை முதலில் கை கொடுத்து தூக்கிப் பார்த்தாள்.

ஒரு கால் ஊன்ற முடியாத நிலையில் அவரை அவளால் தாங்கி பிடிக்க முடியாமல் தடுமாறிப் போனாள்.

“யாராவது ஆம்பளைங்களால தான் முடியும்மா. வயசான காலத்தில் உனக்கு வேற தொந்தரவு தர்றேன்…” என்று வருந்தினார் சபரிநாதன்.

“என்னப்பா தொந்தரவுன்னு எல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க? அப்படிச் சொல்லாதீங்கப்பா. எனக்குச் சங்கடமா இருக்கு. இருங்க, நான் போய் ஆள் யாராவது இருக்காங்களான்னு பார்த்துட்டு வர்றேன். நாளைக்கு ஒரு பெட்பேன் வாங்கிடலாம்…” என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தாள்.

அப்போது அந்தக் காம்பவுண்டில் இருக்கும் ஆண்கள் யாரும் கண்ணில் படவில்லை.

நித்திலன் வீடு வெளியே பூட்டியிருந்தது.

வித்யாவின் வீட்டின் வெளியே அவளின் கணவனின் செருப்புக் கிடந்தது. அவனைக் கூப்பிடலாமா? என்று நினைத்து அவர்களின் வீட்டை நோக்கி நடந்தாள்.

“அக்கா…” வித்யாவை வாசலில் நின்றபடியே அழைத்தாள்.

“என்ன துர்கா?” வெளியே வந்து கேட்டாள் வித்யா.

“அண்ணா வீட்டில் இருக்காரா? அப்பா பாத்ரூம் அழைச்சுட்டுப் போகணும் சொல்றார். என்னால் அப்பாவைத் தூக்கி அழைச்சுட்டு போக முடியலை. அண்ணா வந்தார்னா அப்பாவுக்குக் கொஞ்சம் உதவியா இருக்கும்…” என்று தயங்கிக் கொண்டே கேட்டாள்.

“அப்படியா? ஆனா அவர் தூங்கிட்டாரே துர்கா. தூக்கத்துல இருக்கும் போது எழுப்பினால் அவருக்குக் கோபம் வரும்…” என்று வித்யா சொல்ல,

“ஓ, சரிக்கா. நான் வேற யாராவது இருக்காங்களா பார்க்கிறேன்…” என்று துர்கா வீட்டிற்குத் திரும்ப,

“யாரு வித்யா?” என்று படுக்கையறையில் இருந்து வித்யாவின் கணவனின் குரல் தூக்கக் கலக்க குரலாக இல்லாமல் தெளிவாக வெளியே வரை கேட்டது.

துர்காவிற்குச் சுருக்கென்றது.

ஆள் முழித்திருக்கும் போதே தூங்கிவிட்டார் என்றிருக்கிறாரே? என்று வருத்தமாக நினைத்துக் கொண்டே தன் வீட்டை நோக்கி நடந்தாள்.

அப்போது காம்பவுண்டுக்குள் நுழைந்தான் நித்திலன்.

அவனைக் கண்டதும் அவளையே அறியாமல் பெரிய நிம்மதியே மனதில் வந்து அமர்ந்து கொள்ள, அவனிடம் விஷயத்தைச் சொன்னாள்.

சற்றும் தயங்காமல் உடனே உதவிக்கு வந்தான் நித்திலன்.