31 – மின்னல் பூவே

அத்தியாயம் – 31

திருமணத்தன்று வளர்மதி சொன்னது தான் நடந்திருந்தது.

உத்ராவின் காதல் விஷயம் தெரிந்தவர்கள் அவளின் பெற்றோரும், முகிலும் மட்டுமே.

திருமணத்தன்று மாடியில் முகில் அவளின் மீது குற்றச்சாட்டுகளை அள்ளி வீச, உத்ராவிற்கு வெறுத்துப் போனது.

அதனால் கீழே வந்ததும் அன்னை, தந்தையிடம் அவன் பேசியதை சொல்ல விருப்பம் இல்லாமல் ‘இன்னும் அவன் தன் காதலை மறுத்த காரணம் அப்படியே தான் இருக்கிறது’ என்று சொல்லி எனக்கு ‘இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை’ என்று மட்டும் சொல்லி மறுத்தாள்.

அதைக் கேட்டு அதிர்ந்த வீரபத்ரன், “என்னடா இப்படிச் சொல்ற? கமலி கூட அவருக்குக் கல்யாணம் என்று தெரிந்ததும் அப்படி வருத்தப்பட்டியே? நேத்து மண்டபம் கிளம்பி வர்றப்ப கூட அவ்வளவு கஷ்டப்பட்டியே டா. அப்போ இன்னும் உன் மனசில் முகில் தானே இருக்கார்? அப்படி இருக்கும் போது இப்போ அவரையே நீ கல்யாணம் செய்து கொள்ளும் வாய்ப்பு கிடைச்சுருக்கு. அதை ஏன் வேண்டாம்னு சொல்ற?” என்று கேட்டார்.

“என் மனசில் இருந்தால் மட்டும் போதுமா பா?” என்று வேதனையுடன் கேட்டவளைக் கவலையுடன் பார்த்தார்.

“நீ கேட்க வருவது எனக்கும் புரியுதுடா உத்ரா. முகில் மனசில் உனக்கு இடமில்லையேன்னு நீ கவலைப்படுற. ஆனா அதுக்காக என்னடா செய்ய முடியும்? அவரோட விருப்பு வெறுப்பு வேறயா இருக்கு. ஆனா அது மனித இயல்பு தானே டா?

உனக்கு அவரைப் பிடித்ததற்கு ஒரு காரணம் இருந்திருக்கும். அதே போல அவருக்கு உன்னைப் பிடிக்காததற்கு ஏதாவது காரணம் இருக்கலாம் இல்லையா? எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. அதனால் உனக்கும் என்னைப் பிடிக்கணும் என்று யாரும் யாரையும் கட்டாயப்படுத்த முடியாதே?” என்றார்.

“எனக்கும் அது புரியுது பா. ஆனா…” என்று தயங்கினாள் உத்ரா.

அவன் இன்று மாடியில் வைத்து அதிகமாகவே பேசிவிட்டான். ஆனால் அதைத் தந்தையிடம் அவளால் சொல்ல முடியவில்லை. சொல்ல அவளுக்குப் பயமும் இல்லை தான். ஆனால் சொன்னால் என்ன நடக்கும் என்று அவளுக்குத் தெரியும்.

அவன் பேசியது எல்லாம் தெரிந்தால் வீரபத்ரன் அவனை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார்.

நிற்க வைத்துக் கேள்வி கேட்பது மட்டுமில்லாமல் அடிக்கக் கூடத் தயங்க மாட்டார் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும்.

ஏற்கனவே கமலினி ஓடிப் போயிருந்த நிலையில் கலவரப்பட்டுப் போயிருக்கும் கல்யாண மண்டபம் மேலும் அதகளப்பட்டுப் போய்விடும் என்பதால் அவரிடம் உண்மையைச் சொல்லாமல் மறைத்தாள்.

“இதில் நீ தயங்க எந்த அவசியமும் இல்லை டா உத்ரா. நாம வழிய போய் எங்க பொண்ணு உங்க பையனை விரும்புறா, கட்டி வைங்க என்று நாம கேட்கவே இல்லை. அவங்களா விருப்பப்பட்டுக் கேட்கும் போது நாம வேண்டாம் என்று ஏன் சொல்லணும்?

இதுவே இந்த இடத்தில் வேற பையன் இருந்திருந்தால் நானே அவங்ககிட்ட இந்த அவசரக் கல்யாணம் எல்லாம் சரிவராது என்று சொல்லியிருப்பேன். இங்கே மாப்பிள்ளையா இருப்பது உன் மனசுக்குப் பிடிச்சவர்.

அவரை எப்படி இப்போ நான் வேண்டாம் என்று தட்டிக் கழிக்க முடியும்? அதையும் விட அப்பா அவங்க கேட்டதும் சம்மதம் சொல்ல இன்னும் ஒரு காரணம் இருக்கு…” என்ற தந்தையைக் கேள்வியாகப் பார்த்தாள்.

“நான் உனக்குக் கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்க்க போறதா சொன்னப்ப நீ அதை ஏத்துக்க முடியாமல் தவிச்ச. அதுலயே முகில் இன்னும் உன் மனசை விட்டுப் போகலை என்று எனக்குப் புரிந்தது. எனக்கு நல்லா தெரியும். நானே வேற மாப்பிள்ளை கொண்டு வந்து உன் கண்முன்னால் நிறுத்தினாலும் அதைக் கண்டிப்பா தட்டிக் கழிப்ப. இல்லையா உன் மனசு வேறு ஒருவரை ஏத்துக்கப் பல வருஷம் ஆகலாம். இல்லனா உன் மனசு மாறாமலேயே கூடப் போகலாம். இது தான் நடந்து இருக்கும்.

ஆனா இப்போ முகில் தான் உனக்கு எனக் கடவுள் செய்த முடிவு என்று தோணுது. இல்லனா, முகில் கல்யாணம் ஏன் நிக்கணும்? அதையும் விட அவங்க சொந்தங்களிலும் பொண்ணு இருக்கும் போது அதில் ஒரு பொண்ணைத் தேர்ந்தெடுக்காம உன்னை அவங்க ஏன் தேர்ந்தெடுக்கணும்?

இதை எல்லாம் விட முக்கியமாக முகில் இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லியிருக்கார். அது எப்படி?” என்று கேட்டார் வீரபத்ரன்.

“அது அவங்க அப்பா, அம்மாவுக்காக இருக்கலாம் அப்பா…” என்றாள்.

“இருக்கட்டுமே உத்ரா. கமலினியைக் கல்யாணம் பண்ணிக்கவும் அவங்க அப்பா, அம்மா பார்த்த பொண்ணு என்று தானே முகில் சம்மதம் சொல்லியிருப்பார். இப்பவும் அதே தான் நடந்திருக்கு. உன் கல்யாணம் காதல் கல்யாணமா இல்லைனா என்ன? நீ விரும்பியவரையே பெரியவங்க எல்லோரின் சம்மதத்தின் பேரிலும் கல்யாணம் பண்ணிக்கப் போறதாக நினைச்சுக்கோ…” என்றார்.

“முகிலை நினைச்சு நீ மனசுக்குள்ளேயே புழுங்கியது எல்லாம் போதும் உத்ரா. அவரைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதம் சொல்லு…” என்றார் அஜந்தா.

அன்னை, தந்தையின் பேச்சை பொறுமையாகக் கேட்டாலும் அவளால் திருமணத்திற்கு உடனே சம்மதம் சொல்ல முடியவில்லை.

அப்போது அங்கே வளர்மதியும், ரகுநாதனும் வந்தனர்.

“நீங்க சம்மதம் சொல்லவும் சொந்தக்காரங்ககிட்ட எல்லாம் பொண்ணு ரெடியாகிட்டு இருக்கு. வெயிட் பண்ணுங்க என்று சொல்லிட்டு வந்துருக்கேன் சம்பந்தி…” என்று ரகுநாதன் சொல்ல, வீரபத்ரனும் அஜந்தாவும் தயக்கத்துடன் அவரைப் பார்த்தனர்.

மகள் விரும்பியவன் தானே என்று அவர்கள் கேட்டதும் உடனே சரி எனச் சொல்லியிருக்கக் கூடாதோ என்று இப்போது வருந்தினார் வீரபத்ரன்.

அவர்களின் தயக்கத்தைக் கண்ட ரகுநாதன் “என்னாச்சு, எதுவும் பிரச்சனையா?” என்று பதட்டத்துடன் கேட்டார்.

“பொண்ணு இப்ப கல்யாணம் வேண்டாம். கொஞ்ச நாள் போகட்டும் என்று சொல்றாள்…” என்று சொன்னார் வீரபத்ரன்.

மகளின் மனதை கடைவிரிக்க அவருக்கு விருப்பம் இல்லை என்பதால் அப்படிச் சொல்லிச் சமாளிக்கப் பார்த்தார்.

“ஓ!” என்று தீனமான குரலில் கேட்ட ரகுநாதன் தொப்பென்று இருக்கையில் தளர்ந்து அமர்ந்து விட்டார்.

சில நொடிகள் முன்பு தான் மகனின் நின்ற திருமணம் நடக்கப் போகிறது என்று சந்தோஷப்பட்டார்.

அதற்குள் மீண்டும் இப்படியா என்று நினைத்தவர் தலையில் கைவைத்து அமர்ந்து விட்டார்.

நியாயமாகப் பெண்ணிடம் சம்மதம் கேட்காமல் எதற்கு நீங்கள் சம்மதம் சொன்னீர்கள் என்று தான் அவர் கோபப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதற்குக் கூடத் தெம்பு இல்லாமல் தளர்ந்து அமர்ந்து விட்டார் ரகுநாதன்.

அவர் அப்படிச் சண்டை பிடிக்காததே உத்ராவின் குடும்பத்தினருக்கு உறுத்தலாகப் போனது.

அவரை அப்படிக் கண்டு பதறி வளர்மதி அருகில் ஓட, மற்றவர்கள் இயலாமையுடன் அவரைப் பார்த்தனர்.

“என்னாச்சு உத்ரா, எங்க முகிலை உனக்குப் பிடிக்கலையா? இல்லை இப்போ கல்யாணம் பிடிக்கலையா?” என்று கணவனுக்கு ஆதரவாக நின்று கொண்டே கேட்டார் வளர்மதி.

“இப்போ கல்யாணம் வேண்டாம் என்று தான் யோசித்தேன் ஆன்ட்டி…” என்றாள் உத்ரா.

“நீ வேற யாரையும்…” என்று வளர்மதி தயக்கத்துடன் இழுக்க,

“அப்படி எல்லாம் இல்லை ஆன்ட்டி…” என்றாள்.

“ஓ! ஆனா எப்ப இருந்தாலும் கல்யாணம் செய்து கொள்வாய் தானே உத்ரா? அது இப்பயா இருந்துட்டு போகட்டுமே? ப்ளீஸ் கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லுமா. நாங்க சொந்தக்காரங்ககிட்ட வேற பொண்ணு பார்த்துட்டோம் என்று சொல்லிட்டோம்.

இப்போ போய்த் திரும்பச் சொந்தத்தில் எந்தப் பொண்ணை முடிக்கலாம் என்று கேட்டால் நல்லா இருக்காது மா. அதை விட இப்ப திரும்பக் கல்யாணம் நின்னா இன்னொரு கல்யாணத்துக்கு முகில் கண்டிப்பா சம்மதம் சொல்ல மாட்டான்.

அவனோட வாழ்க்கை இப்போ உன் கையில் இருக்குமா உத்ரா. அவன் வாழ்க்கை மட்டும் இல்லை. இதோ தளர்ந்து போய் உட்கார்ந்துட்டாரே இவரோட உயிரும் இப்போ உன் சம்மதத்தில் தான் இருக்கு உத்ரா.

காலையில் இருந்து மாத்தி மாத்தி மனதில் விழுந்த அடியில் மனுஷன் தளர்ந்து போயிட்டார். இவரை எனக்குக் காப்பாத்தி கொடும்மா. உன்னை எங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு என்று தான் வேற பொண்ணைத் தேடாம உன்னைத் தேடி வந்தோம்.

முகில் ரொம்ப நல்லவன் மா. அவனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் வாழ்க்கை வீணா போகும் என்று எந்தச் சூழ்நிலையிலும் நீ பயப்படும் நிலை வராது. ப்ளீஸ் மா. சீக்கிரம் யோசித்து உன் பதிலை சொல்லு…” என்று வளர்மதி கெஞ்சலாகக் கேட்க, உத்ராவிற்குச் சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை.

‘என்னுடனான திருமணத்தை வெறுப்பதே உங்கள் மகன் தான் என்று தெரியாமல் என்னிடம் வந்து கெஞ்சுகிறீர்களே ஆன்ட்டி’ என்று மனதில் விரக்தியுடன் சிரித்துக் கொண்டாள்.

‘உங்ககிட்ட நல்ல பிள்ளையா கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லிட்டு, என்னை மறுக்கச் சொல்லி, நீங்க இப்படிக் கெஞ்சுவதையும் பார்த்துக் கொண்டு இரக்கம் இல்லாத வில்லியா உங்கள் மகன் என்னை நிற்க வைத்து விட்டார் ஆன்ட்டி. உங்கள் மகனைப் பற்றிய இந்த உண்மை தெரிந்தால் நீங்க தாங்க மாட்டீங்க ஆன்ட்டி…’ என்று நினைத்துக் கொண்டு அமைதியாக இருந்தாள்.

அப்போது ரகுநாதன் படபடப்புடன் நெஞ்சை அழுத்திப் பிடித்துக் கொள்ள, அதைக் கண்ட வளர்மதி சற்றும் யோசிக்காமல் இன்னும் பதில் சொல்லாமல் இருந்த உத்ராவை பார்த்து “உன்னைக் கெஞ்சி கேட்குறேன் உத்ரா. கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லுமா…” என்று கைகூப்பிக் கேட்க, பதறி போனாள் உத்ரா.

“ஆன்ட்டி, என்ன காரியம் பண்றீங்க?” என்று வேகமாக வந்து அவரின் கையைப் பிடித்துக் கீழே இறக்கி விட்டாள்.

“எனக்கு வேற வழி தெரியலைமா…” என்ற வளர்மதியின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக, அதனைப் பொறுக்க முடியாத உத்ரா, “சரி ஆன்ட்டி, நான் உங்க மகனை கல்யாணம் பண்ணிக்கிறேன்…” என்று சம்மதம் சொல்லியிருந்தாள்.

அதைக் கேட்டதும் வளர்மதி கண்ணீரை துடைத்துக் கொண்டு, “ஏங்க உத்ரா கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லிட்டாள்ங்க. இப்ப போய் நெஞ்சை பிடிச்சுட்டு உட்கார்ந்து இருக்கீங்களே. வாங்க கல்யாண வேலையைப் பார்ப்போம்…” என்று கணவனைப் பரபரப்பாக அழைக்க, அப்போது தான் ரகுநாதனின் முகம் சற்றுத் தெளிந்தது.

“ரொம்ப நன்றிமா…” என்று ரகுநாதன் நெகிழ்வுடன் சொல்ல உத்ராவும் நெகிழ்ந்து போனாள்.

அதன் பிறகு திருமணம் அமைதியாக நடந்தேறியது.

இங்கே நடந்த பேச்சு வார்த்தை அவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது என்பதால் உத்ரா தான் அவள் திட்டப்படி திருமணத்தை நடத்திக் கொண்டாள் என்று அன்று கொந்தளித்துப் போனான் முகில்வண்ணன்.

இன்றோ அந்த உண்மை எல்லாம் தெரிய நிலை குலைந்து போனான்.

அந்த உண்மையும் தெரிந்ததில் தன் திருமணத்தில் உத்ரா எந்தக் குளறுபடியும் செய்யவில்லை என்று ஒரு புறம் நிம்மதி ஏற்பட்டது என்றால் இன்னொரு புறம் தன்னைத் திருமணம் செய்து கொள்ள முழுமூச்சாக மறுத்திருக்கிறாள் என்றால் தன்னை வெறுத்தே விட்டாளா? என்றும் நினைத்தான்.

தான்தான் அவளைத் திருமணத்திற்கு மறுப்பு சொல்ல சொன்னோம் என்பது எல்லாம் அவனுக்கு மறந்தே போயிருந்தது.

மனிதன் மனம் குரங்கு என்பதற்குச் சான்றாகி போனான் முகில்வண்ணன்.

அன்று இரவு இருவரும் தங்கள் வீடு திரும்பிய போது முகில்வண்ணனின் முகம் மிகவும் சோர்ந்து இருந்தது.

இரவு உணவை முடித்து விட்டே கிளம்பியதால் மறுநாளுக்குத் தேவையானதை எடுத்து வைக்கும் வேலை மட்டுமே உத்ராவிற்கு இருந்தது.

அவள் வந்ததும் அந்த வேலையை ஆரம்பிக்க, முகில் சோஃபாவில் அமர்ந்து விட்டான்.

அவள் வேலையை முடித்து விட்டு வந்த பிறகும் தொலைக்காட்சி கூடப் போடாமல் அப்படியே அமர்ந்திருக்க, அவனை யோசனையுடன் பார்த்துக் கொண்டே அறைக்குள் சென்றாள்.

இரவு உடை மாற்றி விட்டு படுக்கைக்கு வர, அப்போதும் அவன் அறைக்குள் வந்திருக்கவில்லை என்றதும் வெளியே வந்து பார்த்தாள்.

சுவரையே வெறித்த வண்ணம் அமர்ந்திருந்தான் முகில்வண்ணன். இன்னும் உடையைக் கூட அவன் மாற்றியிருக்கவில்லை.

அவனின் அருகில் வந்தவள், “முகில்…” என்றழைத்தாள்.

அவளின் அழைப்பு அவனைச் சென்றடையவில்லை.

“முகில், ஏன் இப்படி உட்கார்ந்து இருக்கீங்க?” என்று சோஃபாவிற்குப் பின்னால் நின்று அவனின் தோளில் கை வைத்து உலுக்கி கேட்டாள்.

“ஹான்… என்ன?” அவன் திடுக்கிட்டு கேட்க,

“தூங்க வரலையா?” என்று கேட்டதும், சோஃபாவில் இருந்து எழுந்தவன் உள்ளே சென்று படுக்கையில் படுத்துக் கொண்டான்.

அவனை வினோதமாகப் பார்த்தவள், “என்ன முகில் இது? ட்ரெஸ் மாத்தாம படுத்துட்டீங்க?” என்று கேட்டாள்.

உடனே எழுந்து உடையை மாற்றி விட்டு வந்து படுத்தான்.

சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளையான அவனின் செய்கையைப் புரியாமல் பார்த்தாள் உத்ரா.

“என்னாச்சுன்னு இப்போ இப்படி நடந்துகிறீங்க முகில்? என்ன விஷயம்னு எனக்குச் சொன்னால் தானே தெரியும்?” என்று அவனிடம் கேட்டாள்.

“அது…” என்று ஏதோ சொல்ல வந்தவன், “இல்லை, ஒன்னுமில்ல. நீ தூங்கு…” என்றவன் அவளுக்கு இடம் விட்டுக் கட்டிலின் உட்பக்கமாகப் படுத்துக் கொண்டான்.

உத்ராவும் குழப்பத்துடனே வந்து படுத்தாள்.

உத்ரா உறங்க முயன்று கண்களை மூட முகிலோ உறக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான்.

அவனின் மனது மிகவும் சஞ்சலப்பட்டுப் போயிருந்தது.

தப்பே செய்யாதவளை வார்த்தைகளால் கடித்துக் குதறி விட்டோம் என்ற எண்ணமும், அவளின் காதலை தானே சாகடித்து விட்டோமோ என்ற பயமுமாக அல்லாடினான்.

மனதின் உளைச்சல் அவனை நிம்மதியாக உறங்கவிடாமல் உறுத்தியது.

அவன் புரண்டு கொண்டே இருந்ததில் கட்டில் லேசாக அசைய, அதில் உத்ராவாலும் உறங்க முடியவில்லை.

அவன் மனதில் எதையோ நினைத்துக் குழப்பிக் கொள்கிறான் என்று புரிந்தது. என்னவென்று கேட்டாலும் சொல்லாதவனை என்ன செய்ய? என்று நினைத்தவள் கண் விழித்து அவனைப் பார்த்தாள்.

அப்போது அவனும் அவளின் புறம் திரும்ப, “நாளைக்கு வேலைக்குப் போகணும் முகில். தூங்குங்க…” என்றாள்.

“எனக்குத் தூக்கம் வரலை. நீ தூங்கு. நான் போய்க் கொஞ்ச நேரம் பால்கனியில் நின்னுட்டு வர்றேன்…” என்றவன் எழுந்து அமர்ந்தான்.

“மணி பதினொன்னு ஆச்சு முகில். இந்நேரம் அங்க போய் நின்னுட்டு அப்புறம் எப்ப தூங்குவீங்க? கண்ணை மூடி படுங்க. தூக்கம் வரும்…” என்றாள்.

“ம்ப்ச்… தூக்கம் வந்தால் தூங்கியிருக்க மாட்டேனா?” என்று சலித்துக் கொண்டான்.

“மனசுல எதையாவது போட்டு குழப்பிக்கிட்டு இருந்தால் எப்படித் தூக்கம் வரும்? எதைப் பத்தியும் நினைக்காம தூங்குங்க. தூக்கம் வரும். இல்லனா ஒன்னு செய்ங்க…” என்ற உத்ரா குறும்பாகச் சிரித்தாள்.

“உன் சிரிப்பே சரியில்லையே… என்ன விஷயம்?” என்று ஆர்வமாகக் கேட்டான்.

‘தன்னிடம் முதல் முறையாகக் குறும்பாகச் சிரிக்கிறாளே!’ என்று மனதில் குறித்துக் கொண்டான்.

“ஒரு பேய் உருவத்தை மனதில் நினைச்சுக்கோங்க. பயத்தில் தன்னால் உறக்கம் வந்திடும்…” என்று உதட்டில் புன்னகை நெளிய சொன்னாள்.

“தூக்கம் வருவதற்கு ஐடியா கேட்டால், அதை விடிய விடிய ஓட வைக்கிறதுக்கா ஐடியா சொல்ற?” என்று போலியாக முறைத்த வண்ணம் கேட்டான்.

“எனக்குத் தெரிந்த நல்ல ஐடியா இது தான் பா. வேணும் என்றால் ஃபாலோ பண்ணுங்க. இல்லை என்றால் விடிய விடிய புரண்டு கொண்டே இருங்க…” என்று அலுத்துக் கொண்டாள்.

அவளிடம் பேசிக் கொண்டிருக்கச் சுவாரஸ்யமாக இருக்க, மீண்டும் அவளின் முகம் பார்த்த படி படுக்கையில் படுத்துக் கொண்டான்.

“நீ சொன்ன ஐடியாவே ஃபாலோ பண்றேன். ஆனா அதில் ஒரே ஒரு மாற்றம் மட்டும் செய்யப் போறேன்…” என்றான்.

“என்ன செய்யப் போறீங்க?”

“பேய்க்குப் பதில் ஒரு தேவதையை மனதில் நினைச்சுக்கப் போறேன். அந்தத் தேவதை என்னைத் தாலாட்டி தூங்க வைக்கும்…” என்றான்.

“ஓ, யார் அந்தத் தேவதை?”

“என் பொண்டாட்டி தான்…” என்று சொல்லி உல்லாசமாகச் சிரித்தான்.

உத்ராவின் பேச்சு அப்படியே நின்று போனது.

ஆனால் அதைப் பற்றி இப்போது முகில் கவலையே படவில்லை.

அவள் தன்னிடம் சகஜமாகப் பேசிவிட்டாள் என்ற உற்சாகத்தில் இருந்தான். மதியத்தில் இருந்து அவனை ஆக்கிரமித்திருந்த சஞ்சலங்கள் அனைத்தும் பறந்து ஓட விடிவிளக்கின் ஒளியில் பளபளத்த மனைவியின் முகத்தை ஆசையாகப் பார்வையால் வருடினான்.

அவனின் பார்வையை எதிர்கொள்ளாமல் உத்ரா கண்களை மூடிக் கொண்டாள்.

அது இன்னும் அவனுக்கு வசதியாகப் போகச் சுதந்திரமாக மனைவியைச் சைட் அடித்தான்.

உத்ரா என் முகத்தை அப்படிப் பார்க்காதே என்று கடிந்து கொள்ளவும் இல்லை, முகத்தை அந்தப் பக்கம் திருப்பிக் கொள்ளவும் இல்லை என்றதும் சிறு நம்பிக்கை அவனின் மனதில் துளிர் விட்டது.

அந்த நம்பிக்கை தந்த தைரியத்தில் அவளின் முகத்தைப் பார்த்துக் கொண்டே நித்திரையைத் தழுவினான் முகில்வண்ணன்.