3 – வல்லினமாய் நீ! மெல்லினமாய் நான்!

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 3

பச்சை வண்ண பட்டுடுத்தி, மிதமான அலங்காரத்திலேயே அழகியாக ஜொலித்து, சற்று முன் கழுத்தில் குடியேறிய மங்களநாணுடன் மங்களகரமாக நின்றிருந்தாள் சக்தி.

அவளின் அருகில் பட்டுவேட்டியும், பட்டுசட்டையும் அணிந்து கம்பீரமாகவும், முகத்தில் நினைத்ததை முடித்துவிட்ட திருப்தியுமாக நின்றிருந்தான் சர்வேஸ்வரன்.

அவர்கள் இருவருக்கும் பின்னால் இன்னும் நடந்துவிட்டதை நம்ப முடியாத பாவனையுடன் நின்றிருந்தான் பிரேம்.

சர்வேஸ்வரனும், சக்தியும் மாலையுடன் தம்பதிகளாக அவனின் வீட்டு வாசலில் நிற்க, உறவு பெண்கள் ஆரத்தி சுற்றிக் கொண்டிருந்தனர்.

திடீர் திருமணம் என்றாலும், மாலை, உடை, ஊர் மக்கள் அனைவருக்கும் விருந்து என்ற அனைத்தும் உடனே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

ஊர் மக்கள் அனைவரும் முன்னின்று வேலையைப் பகிர்ந்து கொண்டதில் அந்தத் திடீர் திருமண ஏற்பாட்டில் ஒரு குறையும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

திருமண ஏற்பாட்டில் குறைவில்லை தான். ஆனால் திருமணத்தில்?

அங்கிருந்த அனைவரின் முகத்திலும் ஒருவித இறுக்கம் இருந்தது. அதிலும் சர்வேஸ்வரனின் அன்னை மீனாம்பிகை கண்ணீர் ததும்பிய விழிகளுடன் சக்தியை முறைத்துக் கொண்டிருந்தார்.

சக்தியோ ஒரு முடிவுக்கு வந்து விட்டவள் போல் சலனமில்லாமல் இருந்தாள்.

மணமக்களுக்கு ஆரத்தி எடுத்து முடித்ததும் வீட்டிற்குள் சென்றனர்.

அவ்வீடு சற்று பழமையான பெரிய வீடாக இருந்தது. வாசலில் இருந்து ஒரு ஓரத்தில் படிக்கட்டுகள் செல்ல, மேலேயும் அறைகள் இருந்தன.

பிரேமின் கண்கள் தான் வீட்டை அளவிட்டனவே தவிர, சக்தியின் கண்கள் சிறிதும் வீட்டை பார்வையிடவில்லை.

“மாப்ள, பொண்ணுக்குப் பாலும், பழமும் கொடுக்கணும்ல அயித்தை?” என்று உறவு பெண் ஒருத்தி மீனாம்பிகையிடம் கேட்க,

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“இதென்ன புதுசா கட்டிக்கிட்ட கல்யாணமா என்ன? புதுசா பாலும், பழமும் கொடுத்து முறை செய்ய? இப்ப ஊருக்காக நடந்த கல்யாணம் தானே… அதெல்லாம் ஒன்னும் வேணாம் போ…” என்று சிடுசிடுத்தார்.

‘வீட்டுக்குத் தெரியாம கல்யாணம் கட்டிக்கிட்டப்ப என்னென்ன முறையெல்லாம் முடிஞ்சதோ. இப்போ மொதல இருந்து பாலும், பழமும் கொடுக்கிறது ஒன்னு தான் குறைச்சல்…’ என்று தொடர்ந்து முணுமுணுக்கவும் செய்தார்.

அந்த முணுமுணுப்புச் சரியாக சக்தியின் காதில் விழ, அவரை உக்கிரமாகப் பார்த்தவள் அதே வேகத்தில் திரும்பி சர்வேஸ்வரனைப் பார்வையால் எரிக்க ஆரம்பித்தாள்.

“மெள்ள… மெள்ள… கண்ணுமுழி பிதுங்கி வெளியே குதிச்சுட போகுது. அப்புறம் உன் முறைப்பை எல்லாம் என்னோட வச்சுக்கோ. அம்மாவை முறைக்கிற வேலையெல்லாம் வச்சுக்காதே!” என்றான் கடுமையாக.

“நீங்களும் இப்படி மிரட்டுற வேலையெல்லாம் வேற யார்கிட்டயாவது வச்சுக்கோங்க. என்கிட்ட வேண்டாம்…” என்றாள் அலட்சியமாக.

இருவரும் அவர்களுக்குள் மெதுவாகப் பேசி முட்டிக்கொள்ள, “மருமவனே உங்க பொஞ்சாதிக்கிட்ட அப்படி என்ன ரகசியம் பேசுறீக? அதுவும் இம்புட்டு பேரு இங்கன கூடி நிக்கும் போது…” என்று ஒரு உறவினர் கேட்டு இருவரின் பேச்சையும் நிறுத்த,

“அது ஒன்னுமில்லை அயித்தை. உங்க வீட்டுக்கு முதல்முறையா வந்திருக்கேன். எனக்குப் பால், பழமெல்லாம் கொடுக்க மாட்டீங்களான்னு ஏ பொஞ்சாதி கேட்குறா…” என்று அவரிடம் சொல்லிவிட்டு சக்தியைப் பார்த்துக் கண்சிமிட்டினான்.

“பொண்ணே வாய்வுட்டு கேட்டுப்புட்ட பொறவும் கொடுக்காம இருந்தா நமக்கு மருவாதை இல்ல மதினி…” என்று அவர் மீனாம்பிகையிடம் சொல்ல,

“என்ன செய்யணுமோ அதை நீங்க எல்லாருமே செய்து போடுங்க மதினி…” என்று அந்தப் பெண்மணியிடம் சொல்லிவிட்டு அங்கிருந்த அறைக்குள் சென்று விட்டார்.

செல்லும் அன்னையை வருத்தத்துடன் பார்த்தான் சர்வேஸ்வரன்.

“நான் உன்கிட்ட கேட்டேனா? இப்ப எதுக்குத் தேவையில்லாம அவங்ககிட்ட உளறி வைக்கிற? உன் பாலும், பழத்தையும் நீயே குடி. எனக்கு ஒன்னும் வேணாம்…” என்றாள் சக்தி.

அவளை ஒரு பார்வை பார்த்தானே தவிர அவளுக்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை.

சற்று நேரத்தில் சர்வேஸ்வரனின் கையில் பால் கொடுக்கப்பட, பாலை சிறிது குடித்தவன் மீதியை சக்தியின் கையில் கொடுக்காமல் அவளின் வாயின் அருகில் கொண்டு செல்ல, உதடுகளைப் பிரிக்காமல் அடம்பிடித்தாள்.

“அட! பாரேன்… கொழுந்தனாரு அவரு பொஞ்சாதிக்கு அவரே ஊட்டி விடுறார்…” என்று ஒரு உறவு பெண் கேலியாகச் சொல்லிச் சிரிக்க, கூடி நின்றிருந்த பெண்களும் சிரிக்க ஆரம்பித்தனர்.

“நான் என் பொஞ்சாதிக்கு ஊட்டிவிடுறதில் அப்படி என்ன அதிசயம் மதினி? எங்க அண்ணாரு உங்களுக்கு ஊட்டி விடாததா?” என்று பதிலுக்கு அவன் அப்பெண்ணைக் கேலி செய்ய, வெட்கத்தில் நாணிக் கோணினாள் அவள்.

“குடி சக்தி, இல்லைனா இங்கே இருக்கிற எல்லாருக்கும் பதில் சொல்ல வேண்டியது வரும். இனிமேல் சில பேச்சுக்களுக்கு நாம இடமே கொடுக்கக் கூடாது…” என்று கண்டிப்புடன் அவளிடம் மெல்லிய குரலில் சொன்னவன் அவளின் உதட்டில் வைத்து டம்ளரை அழுத்தினான்.

வேறு வழியே இல்லாமல் உதடுகளைப் பிரித்துப் பாலை உறிஞ்சினாள்.

பழத்தையும் உண்டு முடித்ததும் சற்று நேரத்தில் விருந்து நடைப்பெற்றது.

விருந்து ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, அங்கே சென்று உபசரித்துக் கொண்டிருந்தான் சர்வேஸ்வரன்.

சக்தி மட்டும் தனியாக ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்க, அவளையே பார்த்தபடி பிரேம் இன்னொரு நாற்காலியில் அமர்ந்திருந்தான்.

“என்னை ஏன்டா இப்படிக் குறுகுறுன்னு பார்க்கிற?” என்று சக்தி கேட்க,

“நீ என்ன நினைச்சு இந்த முடிவுக்கு வந்தன்னு எனக்குப் புரியவே இல்லை சக்தி. உங்களுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிருச்சுன்னு சர்வேஸ் சொல்லிட்டு இருக்கார். அது உண்மையா? ஆனா அதை ஏன் இத்தனை நாளில் என்கிட்ட சொல்லலை?” என்று கேட்டான் .

சக்தி அவனுக்குப் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க,

“நீ பேசாமல் இருந்ததெல்லாம் போதும் சக்தி. வாயைத் திறந்து பேசு…” என்று பொறுமையற்றுச் சொன்னான் பிரேம்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“உனக்கு ஒரு விஷயம் தெரியுமா பிரேம்?” என்று அமைதியான குரலில் கேட்டாள்.

“என்னைக் கிண்டல் பண்றியா? எனக்கு ஒரு விஷயமும் தெரியலைன்னு தானே உன்கிட்ட கேட்டுட்டு இருக்கேன். என்கிட்ட வந்து ஒரு விஷயம் தெரியுமானு கேட்டுட்டு இருக்க?” என்று கடுப்பாகக் கத்தினான்.

“ஏய்! வால்யூமை குறைடா. எல்லாரும் நம்மளைத் திரும்பிப் பார்க்கிறாங்க…”

“அப்போ என் கடுப்பைக் கிளப்பாம என்ன விஷயம்னு சீக்கிரம் சொல்லு…”

“காதலைப் பத்தி நீ என்ன நினைக்கிற பிரேம்?” என்று கேட்டாள்.

“அந்தக் கழுதையைப் பத்தி நினைக்க என்ன இருக்கு? அதான் ஒரு கழுதையும் என்னைக் காதலிக்க மாட்டீங்குதே…” என்றான் சலிப்பாக.

“அந்தக் கழுதை வரும் போது போட்டுக் கொடுக்கிறேன்…” என்றாள் நக்கலாக.

“கழுதை வரும் போது போட்டுக் கொடுக்கலாம். இப்போ விஷயத்துக்கு வா…” என்றான்.

“காதல்! அது ஒரு பைத்தியக்கரமானது பிரேம். இவன் வேண்டாம் நமக்குச் சரிப்பட்டு வரமாட்டான்னு ஒரு மனசு சொல்லும். இல்லை அவன் எப்படியிருந்தாலும் அவன் தான் உன்னுடையவன். அவனை விடாதே! அவனைக் கெட்டியா பிடிச்சுக்கோன்னு இன்னொரு மனசு உள்ளே இருந்து பிச்சு எடுக்கும்.

சரிப்பட்டு வரமாட்டான்னு விட்டுவிடவும் முடியாது. இவன் தான் வேணும்னு பிடிச்சு வச்சுக்கவும் முடியாதுன்னு தடுமாறும் இருவேறு மனநிலையில் தான் நான் இருக்கேன்…” என்றாள்.

“இப்போ உன்கிட்ட காதலுக்கு டிக்ஸ்னரி சொல்லுன்னு நான் ஒன்னும் கேட்கலையே?” என்று பிரேம் கிண்டலாக உதட்டை சுளிக்க,

“மவனே! இங்கே ஒருத்தி எவ்வளவு பீலிங்கா பேசிட்டு இருக்கேன். நீ நக்கலா அடிக்கிற? உன்னை…” என்று பல்லைக் கடித்தாள் சக்தி.

“உன் பீலிங்ஸை எல்லாம் உன் புருஷன்கிட்ட காட்டு. இப்போ எனக்குத் தெரிய வேண்டியது ஒன்னே ஒன்னு தான். உங்களுக்கு முன்னாடியே கல்யாணம் நடந்துச்சா இல்லையா? முதலில் அதைச் சொல்லு…” என்றான்.

“நடந்துச்சு… நடந்துச்சு…”

“நடந்துச்சா? எப்போ?” நம்ப முடியாமல் அதிர்ந்து போய்க் கேட்டான்.

“அதான் அவனே சொன்னானே. நீ பெங்களூருக்கு ட்ரெயினிங் போனப்ப…”

“அடப்பாவிகளா! அப்போ அது உண்மைதானா? ஒரு மனுஷன் ஒரு மாசம் தானே ட்ரெயினிங் போனான். அதுக்குள்ள ஒரு கல்யாணத்தையே முடிச்சு வச்சுருக்கீங்களே…” என்று சொல்லிக் கொண்டே வந்தவன் சட்டென்று பேச்சை நிறுத்தி,

“அப்போ உன் தாலி எங்கே? இந்த இரண்டு வருஷத்தில் ஒரு நாள் கூட உன் கழுத்தில் நான் தாலியைப் பார்த்தது இல்லையே? ஒருவேளை வெளியே தெரியாம மறைச்சு வச்சியோ?” என்று சந்தேகமாகக் கேட்டான்.

“கட்டினால் தானே மறைக்கிறதுக்கு?” என்று கேட்டாள்.

“என்னது தாலி கட்டவே இல்லையா? அப்போ கல்யாணம் ஆகிருச்சுன்னு சொன்ன?” குழம்பிப் போய்க் கேட்டான்.

“ரிஜிஸ்டர் மேரேஜ்…” என்றாள்.

“ஓ!” என்றவன் சில நொடிகள் அமைதியாக இருந்தான்.

“இரண்டு வருஷம். முழுசா இரண்டு வருஷம். உன் கூடவே சுத்தின எனக்கு உன் கல்யாணம் விஷயம் தெரியலை. அப்போ உன் அப்பாவுக்கும் தெரிஞ்சிருக்காது. தெரிஞ்சா இரண்டு வருஷம் உன்னை இப்படியே விட்டுருப்பாரா? ஏன் இத்தனை நாள் மறைச்ச சக்தி?” என்று ஆதங்கமாகக் கேட்டான்.

“அப்பாவுக்குத் தெரியாதுன்னு உனக்கு யார் சொன்னா?” அசால்டாகத் திருப்பிக் கேட்டாள்.

“என்ன? உங்க அப்பாவுக்குத் தெரியுமா?” என்று திகைத்துப் போய்க் கேட்டான்.

“தெரியும்…” என்றாள் அமைதியாக.

“ஆனா எப்படி உங்க அப்பா உன்னை இப்படித் தனியா விட்டு வச்சார்?” என்று கேட்டான்.

“அது…” என்று சக்தி ஆரம்பிக்க,

“இன்னும் எவ்வளவு நேரம் பேசுவீங்க? சாப்பிட போக வேண்டாமா? பிரேம், போங்க போய்ச் சாப்பிடுங்க. நானும் சக்தியும் பின்னாடி வர்றோம்…” என்று சொல்லிக் கொண்டே அங்கே வந்தான் சர்வேஸ்வரன்.

“இல்லை… எனக்குப் பசிக்கலை. எனக்கு வேண்டாம்…” என்றான் பிரேம்.

“உன் ஃபிரண்டோட கல்யாண சாப்பாடு பிரேம். அதை மிஸ் பண்ணலாமா? போய்ச் சாப்பிடு பிரேம். சக்தி நீயே சொல்லு…” என்றான்.

“பொண்ணோட கல்யாண சாப்பாட்டைப் பெத்த அப்பாவே சாப்பிட முடியலை. அப்படி இருக்கும் போது நான் சாப்பிடாததெல்லாம் பெரிய விஷயமே இல்லை…” என்றான் பிரேம்.

“என் மாமனாருக்குத் தானே? அவருக்குத் தனி விருந்தே ஏற்பாடு பண்ணிட வேண்டியது தான்…” என்றான் சர்வேஸ்வரன்.

“அதெப்படி?” என்று பிரேம் மேலும் ஏதோ சொல்ல வர,

“பிரேம் போதும் பேச்சு. போய்ச் சாப்பிட்டு, நீ ஊருக்குக் கிளம்பு…” என்றாள் சக்தி.

“என்ன ஊருக்குக் கிளம்புறதா? என்ன விளையாடுறீயா? நாம இங்கே எதுக்கு வந்தோம்? நம்ம வந்த வேலை கொஞ்சம் கூட நடக்காம நான் மட்டும் எப்படி ஊருக்குக் கிளம்ப முடியும்?” என்று பதட்டமாகக் கேட்டான்.

“நீங்க வந்த வேலை நடக்காது பிரேம். நடக்க ஒருக்காலும் நான் விட மாட்டேன். நீங்க இந்த ஊரில் இருக்கணும்னா விருந்தாளியா எத்தனை நாள் வேணும்னாலும் இருக்கலாம். ஆனா அதுக்கு மேல வேற எதைப் பற்றியும் நீங்க பேசக் கூடாது!” என்று அவ்வளவு நேரம் இருந்த இலகுத்தன்மையைக் கைவிட்டு எச்சரித்தான் சர்வேஸ்வரன்.

அதில் பிரேம் அதிர்ந்து விழிக்க, “என் ஃபிரண்டை மிரட்டுற வேலையெல்லாம் வேண்டாம்…” என்று கண்டித்தாள் சக்தி.

“பிரேம் உனக்கு மட்டுமா ஃபிரண்ட்? எனக்கும் தானே ஃபிரண்ட். அதெல்லாம் அவர் கோவிச்சுக்க மாட்டார். அப்படித்தானே பிரேம்? நீங்க வாங்க பிரேம் சாப்பிட போகலாம்…” என்று சொல்லிக் கொண்டே மேலும் பேச்சை வளர்க்காமல் பிரேமின் தோளில் கைப்போட்டு அவனை விருந்து நடக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றான் சர்வேஸ்வரன்.

“என்ன சக்தியாரே, பிரேமை சாப்பிட வச்சுட்டேன். இப்ப நீங்க வந்தீங்கனா உங்களையும் சாப்பிட வச்சுடுவேன்…” என்று மீண்டும் சிறிது நேரத்தில் வந்து அவளை அழைத்தான்.

“எனக்கே சாப்பிட தெரியும். நீங்க உங்க வேலையைப் பார்த்துட்டுப் போங்க…” என்று எரிச்சலுடன் சொன்னாள்.

“இப்ப நாம இரண்டு பேரும் ஜோடி போட்டுக்கிட்டு சாப்பிடுவது தான்மா நம்ம வேலை…” என்று இலகுவாகச் சொன்னவன் அமர்ந்திருந்தவளின் கை பற்றி அழைத்தான்.

அவர்களைச் சற்று தூரத்திலிருந்து கண்ட மீனாம்பிகையின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

சக்தியை அழைக்கும் முன் அவரை அழைத்துக் கெஞ்சி சாப்பிட வைத்து விட்டுத்தான் வந்திருந்தான். ஆனாலும் இன்னும் அவருக்கு மகன் மேல் இருந்த கோபம் சற்றும் குறையவில்லை.

சக்தியுடன் சென்று ஜோடியாகப் பந்தியில் சர்வேஸ்வரன் அமரவும், தடபுடலாக இருவரையும் கவனிக்க ஆரம்பித்தனர்.

முதலில் இனிப்பு வகைகள் இலையில் வைக்க ஆரம்பிக்க, “சக்திக்கு கேசரி பிடிக்காது. அதை வைக்காதீங்க. அதுக்குப் பதில் லட்டு வைங்க…” என்று சர்வேஸ்வரன் சொல்ல, பரிமாறிக் கொண்டிருந்தவர்கள் மட்டுமின்றிப் பந்தியில் அமர்ந்திருந்தவர்களும் ‘ஆ’ என்று பார்த்தனர்.

“என்ன பெரியய்யா அப்படிப் பார்க்கிறீங்க? என் பொஞ்சாதிக்கு என்ன பிடிக்கும்னு எனக்குத் தெரியாதா என்ன?” என்று கேட்க, எதிர் பந்தியில் இருந்த அந்தப் பெரியவர், “சரிதான் தம்பி…” என்றவர் தன் இலையைக் கவனிக்க ஆரம்பித்தார்.

“இப்ப எதுக்கு நீங்க இவ்வளவு ஸீன் போட்டுட்டு இருக்கீங்க?” பல்லைக் கடித்துக் கொண்டு அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் முணுமுணுத்தாள் சக்தி.

“ஸீனா? லவ்வுமா லவ்வு! உனக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காதுன்னு இன்னும் நான் ஞாபகம் வச்சுருக்கேன்னு நீ பெருமை தான் படணும்…” என்றான்.

“பெருமையா?” என்றவள் அவனை ஏற இறங்க பார்த்து, “எனக்கு இப்ப உங்களைப் பார்த்தால் எருமை தான் ஞாபகம் வருது…” என்றாள் அலட்சியமாக.

“எருமையா? என்னடி கொழுப்பா?” என்று கடுப்புடன் கேட்டவன் உருவம் அவளின் பார்வைக்கு அப்படித்தான் தெரிந்தது.

முன் அவள் பார்த்ததை விட இப்போது ஆள் வாட்டசாட்டமாக ஆகியிருந்தான்.

சென்னையில் அவன் இருந்த தோற்றத்திற்கும், இப்போதைய அவனின் தோற்றத்திற்கும் அவளால் அறுபது வித்தியாசம் கூடச் சொல்ல முடியும்.

‘விவசாயம் தானே இவன் பார்க்கிறதாகக் கேள்விப்பட்டேன். இவன் உரத்தை நிலத்துக்குப் போட்டுருப்பானா? இல்லை இவனோட உடம்புக்குப் போட்டுருப்பானா?’ என்று நினைத்தாள்.

“எருமையைக் கூட ரசிக்கும் பொண்டாட்டி கிடைக்க நான் கொடுத்து வச்சுருக்கணும்…” அவளின் பார்வை அவனின் மீதே படிந்திருப்பதைச் சீண்டலாகச் சுட்டிக் காட்டினான்.

முறைப்பும், சீண்டலுமாகப் புதுமணத் தம்பதிகள் உணவை முடித்தனர்.

“ஊருக்குப் போய் உங்க அப்பாகிட்ட நான் என்ன பதில் சொல்லட்டும் சக்தி?” என்று ஊருக்குச் செல்ல தயாராக நின்றிருந்த பிரேம் கேட்டான்.

“நீ எதுவும் சொல்ல வேண்டாம் பிரேம். நானே அப்பா கிட்ட போன் பண்ணிப் பேசிக்கிறேன்…” என்றாள்.

“ம்ப்ச்… என்ன தான் செய்யப் போறீயோ, போ…” என்றான் சலிப்பாக.

“இந்த ஊருக்கு வந்த வேலையைப் பார்க்கப் போறேன் பிரேம். அதனால் கவலைப்படாம போய்ட்டு வா…”

“நீ எல்லாம் ஏதோ முடிவு பண்ணிட்டு பேசுற மாதிரி இருக்கு சக்தி. இனி எது செய்தாலும் கவனமா செய். உன் வாழ்க்கையும் இதில் அடங்கி இருக்கு…” என்று அக்கறையாகச் சொன்னான்.

“நான் பார்த்துக்கிறேன்…” என்று அவனின் கையை ஆறுதலாகப் பிடித்து அழுத்தி விடை கொடுத்தாள்.

நேரமும் கடந்தது. இரவும் வந்தது.

புதுமணத் தம்பதிகளுக்கான தனிமையும் கிடைத்தது.

தன் அறைக்குள் முதல்முறையாக நுழைந்த சக்தியைத் தலை முதல் கால் வரை ஆராய்ச்சியாகப் பார்த்து, “பெண் சிறுத்தை இந்தச் சிங்கத்துக்கிட்ட தனியா சிக்கிருச்சு போல?” என்று புருவம் உயர்த்திக் கேலியாகக் கேட்டு அவளை வரவேற்றான் சர்வேஸ்வரன்.