3 – ஞாபகம் முழுவதும் நீயே

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம்– 3

அன்று காலை அலுவலகத்தில் நுழைந்து தன் வேலைகளை ஆரம்பித்த வினய், சிறிது நேரம் கழித்துத் தன் இருக்கையில் இருந்து இரண்டு இருக்கை தள்ளி அமர்ந்திருக்கும் நண்பன் ரிதேஷ் என்ன செய்கின்றான் எனப் பார்த்தான்.

இந்தியாவின் வட மாநிலத்தைச் சேர்ந்தவன் தான் ரிதேஷ். அவன் அந்த அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன.

இந்த இரண்டு வருடத்தில் வினய்யும், ரிதேஷும் நல்ல நண்பர்கள் ஆகியிருந்தனர்.

ரிதேஷுக்கு ஹிந்தியும், ஆங்கிலமும் மட்டுமே தெரியும். ஆனால் அவனின் மனைவி ஷீலு ஹிந்தி பெண்ணாக இருந்தாலும் அவளின் கல்லூரி படிப்பு எல்லாம் சென்னையில் தான் என்பதால் அவள் தமிழ் நன்றாகப் பேசுவாள்.

வினய்யின் தோழமை கிடைத்த பிறகு எப்பொழுதாவது தன் வீட்டிற்கு வரும் வினய், ஷீலுவிடம் தமிழில் உரையாடுவதைப் பார்த்து, அவனுக்கும் தமிழில் உரையாட ஆசை வர, அதன் பிறகு தமிழில் பேசி தமிழைக் கொல்லும் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

ரிதேஷுக்குத் திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகின்றது. அவனின் ஷீலுவும் அதே ஊரில் வேறு அலுவலகத்தில் பணிபுரிகின்றாள்.

ஷீலு தற்போது ஆறுமாத கர்ப்பிணி. அவள் கர்ப்பம் உறுதியானதில் இருந்து ரிதேஷ் தலை, கால் தெரியாமல் தான் சுற்றிக்கொண்டிருக்கின்றான்.

ஷீலுவிற்குத் தலை சுத்தல், வாந்தி வந்தால் அவளை விட அதிகம் தவித்துப் போவது அவனாகத் தான் இருக்கும்.

அன்று வீட்டில் ஷீலு எப்படி எல்லாம் கஷ்டப்பட்டாள் என்று வினய்யின் காது தேயும் அளவிற்குச் சொல்லி புலம்புவான்.

இந்த ஆறு மாத காலமாக அவனின் அத்தனை புலம்பல்களையும் கேட்டுச் சலித்துப் போயிருந்தான் வினய்.

ஆனாலும் வினய்யே அறியாத ஒன்று! இந்த ஆறு மாதமாகக் கர்ப்ப காலத்தில் ஒரு பெண் படும் சுகமான அவஸ்தைகளை நண்பனின் பேச்சின் மூலமாக உள்ளுக்குள் உணர்ந்து கொண்டது. அதை ஆழ் மனம் நன்றாகவே பதிய வைத்துக்கொண்டதை அவன் அறியவேயில்லை.

எப்பொழுதும் வேலைக்கு வந்தவுடன் சில நொடிகள் தன்னிடம் பேசி செல்பவன் இன்று இன்னும் எதுவும் சொல்ல வராமல் இருக்கிறானே என நினைத்தபடி ரிதேஷைப் பார்க்க அவன் வேலையில் ஆழ்ந்திருப்பதாகத் தெரிந்தது.

‘என்ன இன்னைக்கு அய்யா ஓவரா வேலைல ஐக்கியமாகிட்டான்?’ என்று யோசனையுடன் பார்த்தவனுக்கு ரிதேஷிடம் தெரிந்த மாற்றம் புரிந்தது.

வேலையில் கவனமாக இருந்தாலும் அவன் முகம் அதிக மலர்ச்சியாகத் தெரிந்தது. ஏதோ கனவு காண்பவன் போல அவ்வப்போது உதட்டோரம் சின்னப் புன்னகைத் தவழ்ந்தபடி இருந்தது.

ரிதேஷை அப்படிப் பார்த்த வினய் ‘என்னடா பயபுள்ள கனவுல மிதக்கின்றான். என்ன விஷயமா இருக்கும்?’ என்று நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவன் நிமிர்ந்து வினய்யைப் பார்த்தான்.

அவன் நிமிர்ந்ததும் ‘என்ன சிரிக்கிற?’ என்று வினய் சைகையில் கேட்க… இடைவேளை நேரத்தில் சொல்வதாக அவனும் பதிலுக்குச் சைகைக் காட்டினான்.

‘சரி…’ என்று விட்டு இருவரும் வேலையில் கவனம் வைக்க ஆரம்பித்தனர்.

உணவு இடைவேளையில் முதலில் எழுந்த ரிதேஷ், வினய்யின் இருக்கை அருகில் வந்து அவனை அழைக்க, “சின்ன வேலை இருக்கு. முடிச்சுட்டு வர்றேன். நீ முன்னாடி போ…!” என்று அவனை அனுப்பி வைத்து விட்டு சிறிது நேரத்தில் தன் வேலை முடித்துவிட்டு உணவகம் சென்றான்.

ரிதேஷ் எங்கே இருக்கிறான் என்று பார்த்து அங்கே செல்ல “ஹேய் வினய்…! கம்…கம்…! உன்னகிட ஒரு ஹேப்பி நியூஸ் சொல்ல நின்ச்சா. நீ எவ்வு டைம் வையிட் செய்து வக்கிற?” என்று முகம் முழுவதும் சந்தோஷத்துடன் ஆர்ப்பாட்டமாகத் தன்னை வரவேற்ற ரிதேஷை புன்னகையுடன் வினய் எதிர்க்கொண்டாலும், அவனின் அரைகுறைத் தமிழில் என்றும் போல இன்றும் அரண்டு போனான்.

“அடப்பாவி…! உன்கிட்ட எத்தனை முறை சொல்றது…? தமிழை இப்படிக் கொலைப் பண்ணாதேனு? உனக்குத் தமிழ் வரலைனா அதை விட்டுறேன். அதை ஏன் இப்படித் தூக்குல தொங்க வைக்கிற?” என்று கேட்டபடி அவனின் எதிரே அமர்ந்தான்.

“என்கு தமிலு பேச புடுச்சுருக்கு வினய்” என்று ரிதேஷ் சொல்ல… வினய் இவன் திருந்தவே மாட்டான் என்று தலையில் லேசாக அடித்துக் கொண்டான்.

“சரி…! நீ கேட்க மாட்ட. சொல்லு…! அப்படி என்ன சந்தோஷமான விஷயம் ரிதேஷ்? இவ்வளவு சந்தோஷமா இருக்க? அதுவும் காலையிலிருந்து தன்னால சிரிச்சுக்கிற? என்னனு சொல்லு நானும் சந்தோஷப்படுறேன். ஆனா இங்கிலீஷ்லேயே சொல்லு. தமிழில் சொல்றேன்னு என்னைக் கடுப்படிக்க வச்சுராதே!” என்றான் வினய்.

“ஆமா… என்ன தமிலு கத்துக்க உட மட்ட நீ!” என்று சலித்த ரிதேஷ் ஆங்கிலத்திற்கு மாறினான். அடுத்து அவர்களின் உரையாடல் ஆங்கிலத்தில் தொடர்ந்தது. (நாம் தமிழிலேயே பார்க்கலாம்)

“என்ன ஹேப்பி நியூஸ் தெரியுமா? அத எப்படிச் சொல்றது வினய்? நான் நைட்ல இருந்து அப்படியே வானத்தில் பறக்குற மாதிரி பீல் பண்றேன். கேள்வி மட்டுமே பட்ட ஒரு விஷயத்தை நம்மளே உணர்ந்து அனுபவிக்கும் போது எப்படி இருக்கும்னு நேத்து தான் தெரிஞ்சுக்கிட்டேன்” என்று குரலில் லயிப்புடன் சொன்னான் ரிதேஷ்.

‘என்னடா இவன் ஓவரா உருகுறான்’ என்பது போல வினய் அவனைப் பார்க்க…

அவன் பார்வைப் புரிந்தது போல “ரொம்ப ஓவர்னு தோணுதோ? பரவாயில்லை நினைச்சுக்கோ. இப்ப நான் எதைப் பற்றியும் கவலைப்படுறதா இல்லை. ஏன்னா… நான் அவ்வளவு சந்தோஷமா இருக்கேன்” என்று இன்னும் என்ன விஷயம் என்று சொல்லாமல் ரிதேஷ் பேசிக் கொண்டே போக வினய்க்குப் பொறுமைப் பறக்க ஆரம்பித்தது.

வினய் அந்த இடத்தை விட்டு எழ போக, அவனின் கையைப் பிடித்து அமர வைத்த ரிதேஷ் “சொல்லங்குள்ள எங்க ஓடுட உட்கரு” என்று தமிழில் பேசி வினய்யிடம் முறைப்பு ஒன்றையும் வாங்கினான்.

அவனை முறைத்தபடியே அமர்ந்தவன் “பின்ன என்னடா…? சட்டுப்புட்டுன்னு விஷயத்தைச் சொல்றதை விட்டுட்டு ஜவ்வு போல இழுக்கிற?” என்று வினய் சலிப்பாகச் சொன்னான்.

“ஓகே…ஓகே மேன்…! சொல்றேன்…” என்று ஆங்கிலத்திற்குத் தாவியவன் “நேத்து என் குழந்தை ஷுலு வயித்துல அசைந்ததை உணர்ந்தேன் வினய். ஐஞ்சு மாசம் முடிஞ்சதில் இருந்து குழந்தை அசையுறதா சொல்லுவா. அப்பயிருந்து நானும் அவ வயித்துல கை வச்சுப் பார்ப்பேன். அப்போ எல்லாம் எனக்கு ஏமாற்றம் தான். ஷுலு அசையுதுன்னு சொல்லும் போதே கையை வச்சுப் பார்த்தாலும் அப்ப எல்லாம் குழந்தை எனக்குப் போக்குக் காட்டிட்டே இருந்தது.

நேத்துத் தான் இந்த அப்பன் பாவம்னு நினைச்சுதோ என்னமோ? நேத்து நான் கை வைச்ச உடனே குழந்தை அசைஞ்சது பாரு. ஃப்பா! என்ன ஒரு ஃபீல்! அப்ப அந்த நிமிஷம் எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? அப்படியே எனக்கு வானத்தில் பறக்குறது போல இருந்தது. இதோ இப்ப கூட இந்தக் கையில் இன்னும் குழந்தையோட ஸ்பரிசம் இருக்குற மாதிரியே ஃபீல் இருக்கு” என்று சொல்லி தன் வலது கையைத் தூக்கி காட்டினான்.

அவன் சொன்னதை எல்லாம் அவ்வளவு நேரம் அமைதியாகக் கேட்ட வினய், அவன் சொல்லி முடித்ததும் அவன் தூக்கி காட்டிய கையைப் பார்த்து விட்டு மனதிற்குள் தோளைக் குலுக்கி கொண்டான். ‘இதற்குப் போய்யா இவ்வளவு ஆர்ப்பாட்டம்?’ என்பது போல.

தான் சொன்னதை வினய் எப்படி எடுத்துக் கொண்டான் என்பதைக் கூடக் கண்டு கொள்ளாமல் தன் கையை மட்டும் பார்த்து “ஒரு அப்பா நிலையில் இருப்பவனுக்குத் தான் இது புரியும். இந்த நிலையை எனக்குக் கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்லணும். இந்த மாதிரி நான் தினமும் என் குழந்தையை உணர்ந்து ஃபீல் பண்ணனும். குழந்தைப் பிறந்த பிறகு அதைத் தொட்டுத் தடவி அதோட வளர்ச்சியைப் பார்த்து நான் ஆனந்தப் படணும்” என்று கனவுலகில் இருப்பவன் போலத் தன்போக்கில் சொல்லிக் கொண்டு போனான் ரிதேஷ்.

சிறிது நேரம் கழித்து நினைவுலகிற்கு வந்தது போல எதிரே இருந்த வினய்யைப் பார்த்தவன் “ஏன் வினய் நீ இன்னும் கல்யாணம் பண்ணிக்கலை? சீக்கிரம் கல்யாணம் பண்ணி ஒரு குழந்தைக்குத் தந்தையாகி பாரு. அந்த ஃபீல்லே தனிடா” என்றான்.

அவன் அப்படிச் சொன்னதும் வினய்க்குச் சுருக்கென மனதில் குத்தியது போல இருந்தது.

அந்தக் குத்தல் தன் குழந்தையை நினைத்து இல்லை. தன் நண்பனிடம் தனக்குத் திருமணம் ஆனதை இன்னும் சொல்லாமல் இருப்பதை நினைத்துத் தான் அந்தக் குத்தல்.

வினய் அந்தக் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடம் ஆன பிறகுதான் ரிதேஷ் இங்கே வேலையில் சேர்ந்தான். ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற பிணைப்பு முதலில் ஆரம்பித்துப் பின்பு தோழமைகளாக மாறியவர்கள்.

ரிதேஷுக்குத் திருமணம் நடக்கும் முன் அந்தத் தோழமை சாதாரணமாக இருந்தது, அவனின் திருமணத்திற்குப் பின்பு ரிதேஷின் வீடு வரை தொடர, அவனின் மனைவி ஷீலுவும் இப்போது வினய்க்குச் சகோதரி ஸ்தானத்தில் மட்டும் இல்லாது நல்ல தோழியாகவும் மாறி இருந்தாள்.

வினய்யும், ரிதேஷும் ஆரம்பத்தில் இருவரும் அதிகம் சொந்த விஷயங்களைப் பேசிக் கொள்வதில்லை. முடிந்தவரை ஒருவர் விஷயத்தில் மற்றவர் தேவையில்லாமல் தலையிடுவது இல்லை என்பதால் வினய்க்குத் திருமணம் ஆனது ரிதேஷுக்குத் தெரியாமலேயே போனது.

வினய்யும் வேண்டும் என்றே மறைக்க வேண்டும் என்று நினைத்தது இல்லை. இது போலத் திருமணம் உனக்கு எப்போது என்று ரிதேஷ் கேட்டதும் இல்லை. இவன் தானாகச் சொன்னதும் இல்லை.

ஒரு வருடம் முன் ரிதேஷ்க்குத் திருமணம் அவனின் சொந்த ஊரான மும்பையில் தான் நடந்தது. அப்போது அதற்குக் கூடச் செல்லாமல் இங்கேயே ஒரு பரிசு கொடுத்து வாழ்த்தியதோடு நிறுத்திக் கொண்டான்.

இப்போது தான் ஷீலு கர்ப்பம் தரித்ததில் இருந்து ரிதேஷ் அதிகம் அவளின் உடல் நிலை பற்றியும் தன் குழந்தையின் வரவை பெருமையாகப் பேசுவதும் நடக்கிறது.

ஆரம்பத்தில் அப்படி அவன் சொல்லும் போது ஏனோ தானோ என்று கேட்டுக் கொண்டிருந்த வினய்க்கு அவன் சந்தோஷமாகச் சொல்லும் போது அதைத் தடுக்கத் தோன்றாததால் அவன் சொல்லும் போதெல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொள்வான்.

இப்போதும் கூடத் தனக்குத் திருமணம் ஆகிவிட்டது என்று சொல்ல வாய் வரவில்லை.

சொன்னால் எங்கே ‘ஏன் பிரிந்திருக்கிறீங்க? ஏன் உன் குழந்தையைக் கூட இன்னும் பார்க்கவில்லை? இத்தனை நாளும் ஏன் என்னிடம் சொல்லவில்லை?’ என்று கேள்விகள் வளர்ந்து கொண்டே போகுமோ என்ற எண்ணம் தோன்ற அவனுக்குப் பதில் எதுவும் சொல்லாமல் “கிளம்பலாம் ரிதேஷ்…! வேலை இன்னும் நிறைய இருக்கு… போய் முடிக்கணும்” என்று சொல்லிவிட்டு உணவை வேகமாக முடித்துக் கொண்டு அங்கிருந்து நழுவி சென்றான் வினய்.

****

முதல் நாள் நவிதா பேசினதையே நினைத்து, இரவு முழுவதும் தூக்கத்தைத் தொலைத்து, கனவு கண்டு அலறி எழுந்து எனப் பவ்யா மனதளவில் துவண்டு போனாள். மறுநாள் வேலைக்குச் செல்லும் போது சோர்வாக உணர்ந்தாள்.

உள்ளுக்குள் உடைந்திருந்தாலும் முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் அலுவலக அறைக்குள் நுழைந்தவள், தன் சீட்டில் அமர்ந்து வேலையை ஆரம்பித்தவள் கண்கள் தன்னால் நவிதா எங்கே என்று தேடச் சொல்லின. ஒரே நாளில் தன் மனதை வார்த்தையால் உடைத்தவள் ஆகிற்றே!

நவிதா சிறிது தூரத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு அவளை வெறுமையான ஒரு பார்வைப் பார்த்துவிட்டு தன் வேலையைத் தொடர்ந்தவள், அவளாகத் தன்னிடம் பேச வரக் காத்திருந்தாள்.

மதிய இடைவேளையில் பவ்யா கவினைப் பார்க்க செல்லும் முன் மீண்டும் நவிதாவை நோட்டம் விட்டாள்.

அவள், இவள் ஒருத்தி அங்கே தான் இருக்கின்றாள் என்பதையே கண்டு கொள்ளாதது போலத் தன் மதிய உணவு உண்பதைப் பார்த்து விட்டு ஒரு புரியாத பார்வையை அவள் மீது செலுத்திவிட்டுக் கவினைப் பார்க்கச் சென்று விட்டாள்.

மாலை வேலை முடிந்து தன் பொருட்களை எல்லாம் எடுத்து வைத்துவிட்டு பவ்யா நிமிரும்போது எதிரே நவிதா நின்றிருந்தாள்.

“ஹாய் பவ்யா…! நான் எதுவும் கேட்பேன்னு நினைச்சுக் காலையில் இருந்து எதிர்பார்த்துக்கிட்டு இருந்த போல?” என நக்கல் போலக் கேட்டாள்.

பவ்யா பதில் பேச விருப்பம் இல்லாமல் முகத்தைச் சுளித்து ‘இப்ப என்ன?’ என்பது போலப் பார்த்து வைத்தாள்.

அவள் வாயை திறந்து பதில் சொல்லாத கடுப்பில் “இதோ இந்தத் திமிருக்குத் தான் எங்க பெரியம்மா உன்னை வேண்டாம்னு சொல்லிட்டாங்க” என்ற நவிதா சொல்லவும் கண்ணைச் சுருக்கி ‘என்ன சொல்ல வருகிறாய்?’ என்பது போலப் பார்த்தாள்.

அவள் பார்வையைக் கண்டு “என்ன… எங்க பெரியம்மா உன்னைப் பார்க்கவே இல்லை. அப்புறம் எப்படி வேண்டாம்னு சொன்னாங்கனு யோசிக்கிறியா?” என அவளாகக் கேட்டு விட்டு மேலும் பேசிக் கொண்டே போனாள்.

“நேத்து நான் உன்கிட்ட பேசணும்னு சொன்னப்ப நீ உடனே பதில் சொல்லாம திமிரா பதில் சொன்ன. அப்ப இருந்தே எனக்கே உன்னைப் பிடிக்கலை. அதோட சாயந்திரம் என்கிட்ட பேசும் போதும் நீ நடத்துகிட்டது பிடிக்கலை. ஆனா எங்க பெரியம்மாவுக்காக உன்கிட்ட பேசிட்டுப் போயிட்டேன். வீட்டில் போய் நீ நடந்துக்கிட்டதைச் சொல்லவும் எங்க பெரியம்மாவுக்கும் உன்னைப் பிடிக்கலை. வேணாம்னு சொல்லிட்டாங்க. காலையிலேயே இதைச் சொல்லிருப்பேன். ஆனா நீ நான் பேசுவேனா மாட்டேனானு பார்த்துக்கிட்டு இருந்த. அதான் உன்னை அலையவிட்டு இப்ப சொல்றேன்” என்று எதையோ சாதித்தது போலப் பெருமையாகச் சொன்னாள்.

அவள் பேசப் பேச தன் உணர்வுகள் எதையும் காட்டாமல் அமைதியாக இருந்த பவ்யாவின் மனது உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்தது.

தாங்கள் இருந்த அலுவலகத்தை ஒரு முறை பார்த்தாள். அவர்கள் தவிர இன்னும் இருவர் அங்கே வேலை பார்ப்பவர்கள் சென்றிருந்தார்கள். அதைக் கவனித்த பவ்யா நவிதாவைத் தீர்க்கமாகப் பார்த்து “நீயெல்லாம் படிச்ச பொண்ணு தானா…?” என்று அமைதியாகக் கேட்டாள்.

அவள் கேள்வியில் கோபம் அடைந்த நவிதா “ஹேய்…! என்ன…? என்னைப் பார்த்தா படிக்காம வேலைக்கு வந்தவப் போலயா இருக்கு?” என்று பொறிந்தாள்.

“ஹ்ம்ம்…! அப்படித் தான் எனக்குத் தெரியுது. கொஞ்சம் கூட அடுத்தவங்க விஷயத்தில் தலையிட கூடாதுனு நாகரீகம் தெரியலை. பேசும் வார்த்தை அடுத்தவங்க மனதைப் புண்படுத்துமா? இல்லை நாம பேசுற வார்த்தையால யாரும் பாதிக்கப்படுவாங்களா?

இப்படி எதுவும் கொஞ்சம் கூட யோசிக்கிற புத்தி கூட இல்லாம நீ நடந்துக்குறதைப் பார்த்தா எனக்கு நீ படிக்காதவ மாதிரி தான் தெரியுது. படிக்காதவங்க கூட உன்னை மாதிரி இப்படிப் பேசியிருக்க மாட்டாங்க. அவங்களுக்குக் கூட யார்க்கிட்ட எப்படி பேசணும்னு பண்பு தெரிந்து இருக்கும். ஆனா நீ படிச்சும் புத்தியை வளர்க்காம சைல்டிஸ்ஸா பிகேவ் பண்ணிட்டு இருக்குற” என்று பவ்யா கடுமையான முகத்துடன் சொல்ல…

நவிதாவின் முகம் வெளுத்தது. “ஹேய்…! என்ன ரொம்பப் பேசுற?” என்று அவள் மெல்லக் கத்த…

“ஸ்ஸ்…! இப்ப ஏன் இப்படிக் கத்துற? நான் உன் பக்கத்தில் தானே நிற்கிறேன். நீ தான் என்னைச் பேச வைக்கிற. நேத்து நீயா வந்த… பேசணும்னு சொன்ன… நான் என் சூழ்நிலையைச் சொன்னேன். அது உனக்குத் திமிரா தெரிஞ்சா நான் ஒன்னும் பண்ண முடியாது. அதோட ஈவ்னிங் வந்து என்ன பேச்சுப் பேசுற?

என்னைப் பற்றி அடுத்தவங்ககிட்ட விசாரிச்சதும் இல்லாம… என் பர்சனல் விஷயத்தில் தலையிட்டு… என்னமோ இங்க இரண்டாவது கல்யாணத்துக்குக் காத்துக்கிட்டு இருக்குறது போல… நீ பேசினது எல்லாம் நாகரீகமான செயலா என்ன? நேத்தே அப்படியே உன்னை அறையணும் போல இருந்துச்சு. ஆனா என்கிட்டே யாரும் இப்படிப் பேசாததால கொஞ்சம் ஷாக்காகிட்டேன். இல்லனா நேத்தே நீ கன்னம் வீங்கி தான் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்துருப்ப” என்றாள்.

பவ்யா எப்பொழுதும் அலுவலகத்தில் அதிகம் பேசுவதே இல்லை என்பதால் அவளின் இப்போதைய பதிலடியை எதிர்பார்க்காமல் திகைத்துப் போனாள்.

இன்று பவ்யா தன்னை அடிக்கடி பார்த்ததை வைத்து ஒருவேளை திருமணத்திற்கு விருப்பம் தான் போல… அதனால் தான் எப்போது பேச வருவேன் எனக் காத்திருக்கிறாள் என அவளாக நினைத்து ‘நல்லா காத்திரு…! நான் ஈவினிங் வரை பேச வர மாட்டேனே” என்று மனதிற்குள் குதூகலித்துக் கொண்டிருந்தாள்.

ஆனால் தன்னை இந்தத் தாக்குத் தாக்கத்தான் அவள் காத்திருந்தாள் என இப்பொழுது புரிய அரண்டு போனாள்.

ஆனாலும் “ச்சே…! நீ என்ன இப்படி வாயாடியா இருக்க? நல்ல வேளை என் அண்ணன் தப்பிச்சான்” என்று திரும்பவும் பவ்யாவைச் சீண்டி பார்த்தாள்.

“நான் இன்னொருவருடைய மனைவி. என்கிட்டே இப்படிப் பேச உனக்கு வெக்கமா இல்லை? ஒழுங்கா இங்க இருந்து போய்ரு. இல்லைனா நேத்து வாங்காத அடியை இன்னைக்கு வாங்கிருவ” என்று பவ்யா கோபமாகச் சொல்ல…

‘எங்கே நிஜமாக அடித்து விடுவாளோ?’ என நினைத்து அங்கிருந்து நகர்ந்து கொண்டே “வாழாவெட்டியா வாழும் போதே இந்தப் பேச்சுப் பேசுறா. இவ இப்படித் திமிரா பேசுறதால தான் அவன் புருஷனே விட்டுட்டு போய்ட்டான் போல?” என்று பவ்யா காதில் விழும் படி முணங்கிக் கொண்டே போனாள்.

அவள் பேசியது காதில் விழ அவ்வளவு நேரம் கோபத்தைப் பிரதிபலித்த பவ்யாவின் முகம் இப்பொழுது வேதனையால் வலியைக் காட்டியது.

‘வாழாவெட்டி’ என்ற சொல் சரியாக அவள் இதயத்தைச் சென்று தாக்கியது.

மனதைத் தாக்கிய வேதனையை அப்படியே தனக்குள் முழுங்கிவிட்டு வீட்டிற்குச் செல்லத் தயாரானாள்.

மகனுடன் வீட்டிற்குள் நுழைந்தவள் அவனை விளையாட விட்டு விட்டு பாலைச் சுட வைக்கச் செல்லும் முன் அவளின் தொலைபேசி ஒலித்தது. எடுத்துப் பேசியவள் சிறிது நேரத்தில் பதறினாள்.

“இப்ப எங்க இருக்கீங்க? வீட்டிலா…? ஹாஸ்பிட்டலிலா…?” என்று இவள் பதட்டத்துடன் கேட்க…

அந்தப் பக்கம் சொன்ன பதிலில் “இதோ வந்துறேன்…” என்று சொன்னவள் மகனுக்குப் பாலைக் கூடக் கொடுக்காமல் அவனைத் தூக்கிக் கொண்டு வீட்டையும் பூட்டி விட்டு திரும்ப வெளியில் கிளம்பினாள்.

விரைந்து சென்ற பவ்யா அவள் வீட்டில் இருந்து அரைமணிநேர பயணத்தில் பங்களா அமைப்பில் இருந்த அந்தப் பெரிய வீட்டின் கேட்டின் முன் வண்டியை நிறுத்தினாள். பவ்யாவைக் கண்டதும் அங்கிருந்த காவலாளி சல்யூட் அடித்துக் கேட்டை திறந்து விட, உள்ளே சென்று வண்டியை நிறுத்தி விட்டுக் கவினையும் தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் சென்றாள்.

“வாங்கம்மா… வாங்க…! ஐயா உள்ளே தான் படுத்திருக்கின்றார். போய்ப் பாருங்க…!” என்று அங்கே சமையல் வேலைச் செய்யும் பெண்மணி சொல்ல… உள்ளே விரைந்தாள். அங்கே கட்டிலில் ரங்கநாதன் காலில் சிறு கட்டுடன் படுக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தார்.

மருமகளைப் பார்த்ததும் “வாம்மா…! என்ன இப்படி மூச்சு வாங்குது? பதறி போய் வேகமா வந்தியா?” என ரங்கநாதன் விசாரிக்க…

“நான் வேகமா வந்தது இருக்கட்டும் மாமா. என்னாச்சு…? எப்படி அடிப்பட்டுச்சு?” என்று கேட்டாள்.

“அது ஒன்னும் இல்லம்மா… பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டேன். அதில் தான் கொஞ்சம் காலு பிசக்கிருச்சு. காலில் ரத்தம் கட்டிருக்கிறதால அதுக்குரிய பேண்டேஜ் போட்டுவிட்டார் டாக்டர்” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்க…

அப்போது அவர்களுக்குக் குடிக்க எடுத்து வந்த சமையல்காரம்மா அகிலம் “நடந்ததை மருமககிட்ட முழுசா சொல்லுங்கய்யா” என்றபடி வந்தார்.

அவர் சொன்னதைக் கேட்டு ‘இன்னும் என்ன?’ என்பது போலப் பவ்யா பார்த்தாள்.

அவள் பார்வைப் புரிந்து “இன்னைக்குனு பார்த்து ஐயா சீக்கிரமே வீட்டுக்கு வந்துட்டார். குளிக்கப் போனவர் பாத்ரூம்ல விழுந்து அரைமணி நேரம் ஆச்சும்மா. குளிக்கப் போய்ச் சோப் போடும் போது விழுந்திருக்கார். அவரால திரும்ப எழுந்திருக்க முடியல. சோப் வழுக்கி விட்டிருக்கு. நானும் அப்ப சமையல் செய்துட்டு இருந்தால இவர் கூப்பிட்டதே எனக்குக் கேட்கலை. விழுந்ததில் மயக்கம் வேற லேசா இருக்கவும் அப்படியே வலியோட உட்கார்ந்து இருக்கார்.

அப்புறம் இவ்வளவு நேரத்துல காபி குடிக்க வெளிய வர்ற அய்யாவை இன்னும் காணுமேனு அவர் ரூம் கதவை தட்டின பிறகு கொஞ்சம் தெளிச்சு உள்ள இருந்து விழுந்துட்டேன் கதவை திறக்க முடியலைன்னு சொன்னார். அப்புறம் வாட்ச்மேனைக் கூப்பிட்டு வந்து கதவு தாழ்பாள் இருக்குற பக்கமா மட்டும் கதவை ஓட்டைப் போட்டு திறந்து ஐயாவை மெதுவா வெளியே கூட்டிட்டு வந்தோம். டாக்டரை வர வச்சுக் கட்டு போட்டு ப்ரஷருக்கு ஒரு ஊசி போட்டுட்டுப் போய்ருக்கார். பிறகு தான் எனக்கு உங்க ஞாபகம் வந்து போன் போட்டு வர சொன்னேன்” என்று சொல்லி முடித்தார் அகிலம்.

அவர் சொன்னதைக் கேட்டு திகைத்து நின்று விட்டாள் பவ்யா.

அவள் திகைப்பை பார்த்து “இப்ப எதுக்கு அகிலம் எல்லாத்தையும் சொல்லிட்டு இருக்குற? பாரு… மருமக பயந்து போயிருச்சு” என்று ரங்கநாதன் சொல்ல…

“என்னங்கய்யா நீங்க பட்ட கஷ்டம் உங்க மருமகளுக்குத் தெரிய வேணாமா என்ன? இவ்வளவு பெரிய வீட்டுல ஒத்தை மனுஷனா கஷ்டப்பட்டுகிட்டு இருக்கீங்க. இப்ப நீங்க விழுந்தப்ப நான் இங்க இருந்ததால எங்க காணமேனு தேடி வந்தேன். ஒருவேளை நான் வீட்டுக்குப் போன பிறகு விழுந்து கிடந்திருந்தா என்னாகிருக்கும்? எனக்கு அதை நினைச்சே இன்னும் திக்குன்னு இருக்கு. நீங்க என்னன்னா ஏன் சொல்றன்னு கேட்குறீங்க?” என்று பல வருடங்களாக அங்கே வேலை பார்க்கும் அகிலம் மனம் பொறுக்காமல் தன் ஆதங்கத்தைக் கொட்டினார்.

“சரி… சரி அகிலம்… போ…! மருமக நிறைய மாசம் கழிச்சு இந்த வீட்டுக்கு வந்திருக்கா பாரு. போய் ஏதாவது சாப்பிட ரெடி பண்ணு!” என்று அவரை அனுப்பி வைத்தார்.

அவர் கொண்டுவந்த காபி, பாலை அங்கே வைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

பெரியவர்கள் பேசிக் கொண்டிருந்த பொழுது தன் தாயிடமிருந்து நழுவி இறங்கிய கவின், ரங்கநாதன் அமர்ந்திருந்த கட்டிலின் அருகில் நின்று அவர் காலில் இருந்த கட்டை வருட ஆரம்பித்தான்.

அதைக் கவனித்த ரங்கநாதன் “அடடே…! என் செல்ல ராஜா! தாத்தா காலைப் பார்த்துப் பயந்துட்டீங்களா? தாத்தாவுக்கு ஒன்னும் இல்லடா செல்லம். வாங்க…! வாங்க…! தாத்தாக்கிட்ட வாங்க…!” என்று லேசாகக குனிந்து அவனைத் தூக்கி தன் மடியில் அமர்த்திக் கொண்டார்.

அகிலத்திற்கு இருக்கும் தவிப்பு கூடத் தனக்கு இல்லையோ என நினைத்துக் குற்ற உணர்வில் மூழ்கி இருந்த பவ்யா பேச்சுச் சத்தத்தில் அப்பொழுது தான் நிமிர்ந்து மகனை தேடினாள்.

மகனும், தாத்தாவும் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டிருக்க “கவின் குட்டி இறங்குடா…! தாத்தாவுக்கு வலிக்கும்” என்றாள்.

“பரவாயில்லைமா… என் தங்கம் உட்கார்ந்து இருக்குறது எனக்கு வலிக்குமா என்ன? அவன் இங்கேயே இருக்கட்டும்” என்றார்.

கவின் தாத்தாவிடம் “ஊ… ஊவா…?” என ஊசி போட்டார்களா எனக் கேட்டுக் கொண்டிருக்க… “ஆமாடா குட்டி…!” எனப் பாவம் போலச் சொன்னார் ரங்கநாதன்.

அவர் சொன்னதும் அழுகைக்குத் தயாராகின அவனின் உதடுகள்.

உதட்டைப் பிதுக்கி “ம்மா… ஊ வாம்…” என்று தன் அன்னையிடம் ஊசி போட்டதைச் சொல்லி சிணுங்க ஆரம்பித்தான்.

“ஆமாடா செல்லம்! தாத்தாவுக்கு அடி பட்டிருக்குல? அதான் ஊசி போட்டுட்டாங்க. இங்க வா…! நாம தாத்தாவுக்குப் பால் குடிக்கக் கொடுப்போம்” என்று அவனை அழைத்துப் பால் கப்பை எடுத்து அவனிடம் நீட்ட, அன்னையுடன் சேர்ந்து அவனும் கப்பைப் பிடித்து ரங்கநாதனிடம் நீட்டினான்.

கப்பை வாங்கியவர் “தேங்யூடா செல்லம்! தாத்தா கூட நீங்களும் பாலைக் குடிப்பிங்கலாம். யார் முதலில் குடிக்கிறாங்கன்னு பார்க்கலாம்” என்று பேரனிடம் பேரம் பேச… அவனும் சமர்த்தாய் பாலை வாங்கிக் குடித்தான்.

பவ்யாவும் காபியைக் குடித்து முடித்திருக்க, அங்கிருந்த சேரில் தலைக் கவிழ்ந்து அமைதியாக அமர்ந்திருந்தாள்.

பின்பு மெல்ல நிமிர்ந்து “ஸாரி மாமா… வயசான காலத்தில் உங்களைத் தனியா விட்டுட்டு இருக்குறது தப்பு தான். இன்னைக்கு எதுவும் பிரச்சனை இல்லாம சின்ன அடியோட போய்ருச்சு. இதுவே பெரிசா எதுவும் ஆகிருந்தா என்னையே என்னால மன்னிச்சிருக்க முடியாது. நான் ஒன்னு நினைச்சு இந்த வீட்டில் இருந்து போனேன். ஆனா அது தப்போன்னு தோணுது. பேசாம நான் இங்கேயே வந்திரட்டுமா?” என்று மனம் வருந்தி கேட்டாள்.

“இல்லம்மா… வேண்டாம்… நீ அங்கேயே இரு!. நீ இங்க இருந்து என்ன சொல்லிட்டு போனியோ அது நடந்த பிறகு வா!” என்றார் ரங்கநாதன்.

அவர் அப்படிச் சொல்லவும் அதிர்ந்து போய் அவரைப் பார்த்தாள் பவ்யா.

அவர் சொன்னதை அவளால் நம்பக் கூட முடியவில்லை. முன்பு அவள் இங்கு இருந்து போவது பிடிக்காமல் அவளைத் தடுத்து நிறுத்த பார்த்தவர் அவர். அவரின் பேச்சையும் மீறி தான் இங்கிருந்து சென்றாள். இப்பொழுது அவரே வர வேண்டாம் என்று சொன்னதை அவளால் நம்பக் கூட முடியாமல் விழிகள் தெறிக்க அவரைப் பார்த்தாள்.