27 – மின்னல் பூவே

அத்தியாயம் – 27

“சாமியை மனசில் நினைச்சுக்கிட்டுப் பாலை காய்ச்சு உத்ரா…” என்றார் அஜந்தா.

“சரிமா…” என்ற உத்ரா, கண்களை ஒரு நொடி மூடி இறைவனைத் தொழுது விட்டு, சந்தனப் பொட்டு வைத்திருந்த புதுப் பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து, அடுப்பை பற்ற வைத்தாள்.

சற்று நேரத்தில் பால் பொங்கி வர, அடுப்பை அமர்த்திவிட்டு பாலை இறக்கி வைத்தாள்.

பாலை இறைவன் முன் வைத்து குடும்பத்துடன் தொழுது விட்டு அனைவரும் பாலை குடித்து முடித்தனர்.

முகிலும், உத்ராவும் தனியே குடியிருக்கப் போகும் வீட்டில் அன்று பால் காய்ச்சினார்கள்.

அந்த வீட்டிற்குக் குடி வரும் தேதி குறித்ததும் அந்தத் தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பே வீட்டுப் பொருட்கள் எல்லாம் வாங்க ஆரம்பித்துவிட்டார் வீரபத்ரன்.

பொருட்கள் அனைத்தும் புது வீட்டில் இறக்கி வைத்து ஓரளவு அடுக்கியும் முடித்திருந்தார்.

அதனால் பால் காய்ச்சிய பிறகு அதிக வேலை இருக்கவில்லை.

“காலை டிஃபன் நாமே செய்துடலாமா? இல்லை வெளியே வாங்குவோமா?” என்று கேட்டார் ரகுநாதன்.

“வேற வேலை இல்லையேங்க. துணிகளைத் தான் அடுக்கி வைக்கணும். அதை உத்ராவும் முகிலும் பார்க்கட்டும். நானும், அண்ணியும் சமையல் வேலையை முடிச்சுடுறோம்…” என்றார் வளர்மதி.

“இல்லை அத்தை, நான் உங்க கூட வேலையை முடிக்கிறேன். அப்புறம் அடுக்கி வைக்கிறேன்…” என்றாள் உத்ரா.

“நாளைக்கு நீங்க இரண்டு பேருமே வேலைக்குப் போகணும் உத்ரா. இன்னைக்கு அந்த வேலையை முடிச்சா தான் நாளைக்கு உனக்கு ப்ரீயா இருக்கும். போ, போய் அடுக்கி வை. முகில் நீயும் போ…” என்று சோஃபாவில் அமர்ந்திருந்த மகனுக்கும் வேலை கொடுத்தார் வளர்மதி.

உடனே உள்ளே சென்று தன் உடைகளை அலமாரியில் அடுக்க ஆரம்பித்தான் முகில்வண்ணன்.

பின்னால் சென்ற உத்ரா உடைகளை எடுத்து வைக்காமல் நாற்காலியில் சென்று அமர்ந்து கொண்டாள்.

அவள் வந்து உடைகளை எடுத்து வைப்பாள் என்று அவன் நினைக்க, அவள் ஒன்றும் செய்யாமல் அமரவும் கேள்வியுடன் பார்த்தான்.

“ட்ரெஸ் எடுத்து வைக்கலை?” என்று கேட்கவும் செய்தான்.

“பெரியவங்க எல்லாம் கிளம்பியதும் எப்படியும் என்னைப் பக்கத்து ரூமுக்குத் துரத்தி விடப் போறீங்க. அதுக்கு எதுக்கு இங்கே ஒருமுறை அடுக்கி, அங்கே ஒருமுறை அடுக்கணும்? அப்புறமா நான் அங்கேயே அடுக்கிக்கிறேன்…” என்றாள்.

அப்படிச் சொன்னவளை கண்டு ஆச்சரியப்பட்டான் முகில்வண்ணன்.

வீட்டு பார்க்க முடிவு செய்த அன்று அவன் அப்படி நினைத்தான் தான். அவனின் நினைவை அவள் சரியாகச் சொல்லியது ஆச்சரியத்தைத் தந்தது.

ஆனால் அதே நேரம் இந்தக் கணம் அவளை வேறு அறைக்கு அனுப்ப அவனுக்கு விருப்பம் இல்லை என்பதே உண்மை.

அவளின் திமிர்த்தனம் அவனுக்குத் பிடிக்காது தான். அவள் மீது அவன் கோபமாக இருப்பதும் உண்மையே. ஆனால் அதையும் தாண்டி உத்ரா அவனின் மனதை ஆட்டிப்படைக்க ஆரம்பித்திருந்தாள்.

அவளின் மீது அவனுக்குச் சிறு சலனம் ஏற்பட்டு இருந்தது.

அந்தச் சலனம் அவனிடம் அவ்வப்போது ஒருவித இலகுத்தன்மையும் உண்டாக்கிக் கொண்டிருந்தது.

அந்த இலகுத்தன்மை அவளின் அருகாமையை அவனே அறியாமல் விரும்ப ஆரம்பித்தது.

அதனால் அவள் வேறு அறைக்குச் செல்வது பிடிக்காமல் போனது.

“என்னைப் பத்தி என்ன நினைச்சுட்டு இருக்க உத்ரா? நான் எப்போ உன்னை வேற ரூமுக்கு விரட்டி விடுவேன்னு சொன்னேன்? நீயா ஏதாவது கற்பனை பண்ணிட்டு என்னைக் கெட்டவன் ஆக்க வேண்டியது…” என்றான் கோபத்துடன்.

இப்போது அவனை ஆச்சரியத்துடன் பார்ப்பது அவளின் முறையானது.

அவனின் எண்ணப்போக்கை உத்ரா ஓரளவு கணித்தே வைத்திருந்தாள்.

அவனின் எண்ணத்திற்குத் தன்னை அவன் தனி அறையில் இருக்கச் சொல்லுவான் என்று அனுமானித்திருந்தாள்.

ஆனால் அவன் இப்போது இப்படிச் சொல்லுவான் என்று அவளும் எதிர்பார்க்கவில்லை.

“என்ன அப்படிப் பார்க்கிற? வந்து உன் துணிகளை எல்லாம் எடுத்து வை…” என்று அதையும் கோபமாகச் சொன்னவன், தன் துணிகளை அடுக்கும் வேலையைத் தொடர்ந்தான்.

அவனை வினோதமாகப் பார்த்து விட்டுத் தன்னுடையதையும் அடுக்க ஆரம்பித்தாள் உத்ரா.

இருவரும் துணிகளை அடுக்கி விட்டு வெளியே வந்ததும் காலை உணவு தயாராகியிருக்க அனைவரும் உண்டு முடித்தனர்.

அன்று மாலை வரை இரு வீட்டு பெரியவர்களும் அங்கே இருந்துவிட்டுக் கிளம்பிக் கொண்டிருந்தனர்.

அடுத்த ஞாயிறு அன்று வீரபத்ரன் ராணுவத்திற்குக் கிளம்புவதாக இருக்க, அதற்கு முதல் நாள் தங்கள் வீட்டிற்கு வரும் படி முகிலையும், உத்ராவையும் அழைத்திருந்தார்.

முகிலும் வருவதாக மாமனாரிடம் சொல்லியிருந்தான்.

“ஆபிஸ் பக்கத்தில் தானே இருக்குன்னு லேட் நைட் வீட்டுக்கு வராதே முகில். உனக்கும் தான் உத்ரா…” என்றார் வளர்மதி.

“சரி அத்தை…” என்றாள் உத்ரா.

“அம்மா எல்லாம் நான் பார்த்துக்கிறேன். ஏற்கனவே நீங்க நிறைய அட்வைஸ் பண்ணிட்டீங்க. இதுக்கு மேல சொன்னால்…” என்று அவன் முடிக்கும் முன்,

“சரி, சரி அழுதுடாதே முகில்…” என்று கேலியாக வளர்மதி சொல்ல…

“அம்மா…” என்று பல்லைக் கடித்தான்.

தாயும், மகனும் பேசுவதைக் கேட்டு மற்றவர்கள் லேசாகச் சிரித்தார்கள்.

“நான் இப்போ குடும்பஸ்தன் ஆகிட்டேன். இன்னும் என்னைச் சின்னப் பையன் மாதிரி கேலி பண்ணிட்டே இருக்காதீங்க…” என்றான்.

அவன் சிறுபையனாக அன்னையிடம் சலுகையுடன் பேசுவதைப் பார்த்துக் கொண்டே இருந்தாள் உத்ரா.

“குடும்பஸ்தன் ஆனது ஞாபகம் இருந்தால் சரிதான்…” என்றார் பூடகமாக.

அன்னை சொல்ல வருவது அவனுக்கும் புரிந்தது.

‘வாழ்க்கையை வாழ துவங்கு!’ என்று அன்னை சொல்வது நன்றாகவே புரிந்தது.

ஆனால்? என்று நினைத்தவன் லேசாகத் திரும்பி உத்ராவை பார்த்தான்.

அவளோ இப்போது அவளின் அன்னையிடம் ஏதோ மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தாள்.

ஒரு பெருமூச்சை இழுத்து விட்டவன், மீண்டும் பெரியவர்களின் புறம் திரும்பினான்.

மகளிடம் அவர்கள் தனியாகப் பேச பிரியப்படலாம் என்று நினைத்த ரகுநாதனும், வளர்மதியும் தாங்கள் முன்னால் நடப்பதாகச் சொல்லி நடக்க ஆரம்பித்தனர்.

“சரி மாப்பிள்ளை நாங்க கிளம்புறோம். நீங்க மறக்காம சனிக்கிழமை வந்திடுங்க…” என்று மீண்டும் ஞாபகப்படுத்தினார் வீரபத்ரன்.

“வந்திடுவோம் மாமா…” என்றான்.

“தனியா வேலை பார்க்க கஷ்டமா இருந்தால் வேலைக்கு ஆள் கூட வச்சுக்கோடா உத்ரா. தனியா கஷ்டப்படாதே…” என்று மகளிடம் சொன்னார்.

“கஷ்டம் எல்லாம் ஒன்னும் இருக்காது என்று தான் நினைக்கிறேன் பா. அப்படியும் என்னால் முடியலைனா ஆள் போட்டுக்கலாம். என்னைப் பற்றி நீங்க கவலையே பட வேண்டாம். நான் சமாளிச்சுப்பேன்…” என்றாள்.

மகளைப் பிரிய போகும் வருத்தம், முகில் அவளிடம் எப்படி நடந்து கொள்வானோ என்ற பயம், தனியாக மகள் குடும்பத்தை எப்படிக் கவனிக்கப் போகிறாளோ என்ற கவலை எல்லாம் வீரபத்ரன், அஜந்தாவின் முகத்தில் அப்படியே பிரதிபலித்தது.

அதனைக் கண்டுகொண்ட உத்ரா அவர்களின் அருகில் நெருங்கி இருவரின் தோளிலும் கை போட்டு, “ரொம்ப வருஷம் கழிச்சு நான் பக்கத்தில் இல்லாம நீங்க தனியா இருக்கப் போறீங்க. அந்த நேரத்தை எப்படிச் சந்தோஷமா கழிக்கிறது என்று யோசிக்காம என்னைப் பற்றி என்ன கவலையாம்… ம்ம்?” என்று குறும்பாகக் கேட்டாள்.

“அடிக்கழுதை…” என்று அவளின் தோளில் அடித்த அஜந்தா, “நீ இல்லாம நாங்க தனியா இருப்பது எவ்வளவு கஷ்டமான காரியம் என்று இந்தச் சில நாட்களிலேயே எங்களுக்குப் புரிந்து விட்டது உத்ரா மா. நீயும் சேர்த்து தான் நாங்க…” என்றவரின் கண்கள் கலங்க ஆரம்பித்தன.

“ஷ்ஷ்! அஜ்ஜு, என்ன இது பொண்ணுக்குத் தைரியம் சொல்றதை விட்டு அழுதுட்டு இருக்க?” என்று மனைவியை மென்மையாகக் கடிந்தாலும் வீரபத்ரன் குரலும் கரகரக்க தான் செய்தது.

“அய்ய, என்ன இது? எதுக்கு இப்ப சோக கீதம் வாசிக்கிறீங்க? நாம என்ன ரொம்பத் தூரத்திலா இருக்கப் போறோம்? அடிக்கடி பார்த்துக்கலாம்மா. அப்பா கூடப் பேச இருக்கவே இருக்கு வீடியோ கால். இனி நம்ம நேரத்தில் நைட் வீடியோ கால் பேசலாம்…” என்று உற்சாகமாகச் சொல்லி தேற்ற முயன்றாள் உத்ரா.

“ஆமா…” என்று அவளுடன் உற்சாகமாகச் சொன்ன அஜந்தா அப்போது தான் தங்களையே பார்த்த வண்ணம் முகில் சற்று தள்ளி நிற்பதை கண்டார்.

பெண்ணிற்குத் திருமணம் ஆகிவிட்டது. வேலைக்குச் செல்லும் கணவன், மனைவிக்கு இரவு தான் தங்களுக்கான நேரம் கிடைக்கும். அந்த நேரத்திலும் மகள் தங்களுடன் போனில் உரையாடுவது சரியாக இருக்காதே என்று நினைத்தார்.

அது ஞாபகத்தில் வந்ததும், “பேசலாம் உத்ரா. இனி நாம வேற நேரத்தில் பேசலாம். எப்ப என்று அப்புறம் அம்மா சொல்றேன். இப்போ கவனம். இந்த அப்பார்மெண்ட் பார்க்க சேஃப்டியா தான் இருக்கு. இருந்தாலும் கவனமாவே இரு…” என்றவர் மேலும் அறிவுரை சொல்ல முயல,

“அம்மா…” என்று அழுத்தி அழைத்தவள், கையைத் தூக்கி தன் புஜத்தில் தட்டிக் காட்டி, “ஒரு கை பார்த்துடலாம்…” என்றாள்.

“அதானே? அவள் என் பொண்ணு அஜ்ஜு…” என்ற வீரபத்ரன் மீசையை முறுக்கி கொண்டார்.

அவர்கள் பேசுவதைக் கேட்ட முகிலுக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஏதோ நண்பர்கள் பேசிக் கொள்வது போலப் பேசிக் கொண்டவர்களைப் பார்க்க அவனுக்குச் சுவாரஸ்யமாக இருந்தது.

அவனும் அவனின் அன்னையும் கூடச் சில நேரம் இப்படிப் பேசிக் கொள்வது உண்டு.

ஆனால் அவனின் தந்தையின் மீது ஒரு பயம் கலந்த மரியாதையில் அவரிடம் இப்படிப் பேசிக் கொண்டது எல்லாம் இல்லை.

சற்று நேரத்தில் அவர்கள் விடைபெற்றுக் கிளம்பினார்கள்.

அவர்கள் சென்றதும் வீடே வெகு அமைதியாக இருந்தது.

முகில்வண்ணன் தொலைக்காட்சியைப் போட்டு விட்டுச் சோஃபாவில் அமர்ந்து விட, உத்ரா அறைக்குள் சென்றாள்.

அன்னையும், அத்தையுமே நிறைய வேலைகள் செய்துவிட்டு சென்றுவிட்டதால் அவளுக்கு இப்போது ஒரு வேலையும் இருக்கவில்லை.

இரவு உணவு செய்யவும் இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள் மடிக்கணினியை எடுத்து வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.

சற்று நேரம் செய்தியைப் பார்த்து விட்டு வேறு சேனல் மாற்றிய முகில் ஒரு பாட்டு சேனலை வைத்தான்.

அப்போது ஒரு பாடல் ஒளிபரப்பு ஆக அப்பாடலைக் கண்டவன் அதை வைத்து விட்டு அந்தப் பாட்டில் மூழ்கிப் போனான்.

அன்று விருந்தில் உத்ரா பாடிய கண்ணாளனே என்ற பாடல் தான் ஓடிக்கொண்டிருந்தது.

அப்பாடலை கேட்டதும் உத்ராவின் ஞாபகமும் வந்தது.

அவனே வேண்டாம் என்று ஒதுக்கி வைக்க நினைத்தாலும் அவளின் ஒவ்வொரு செய்கையும் அவனை மிகவும் பாதித்தது.

மனைவியாகி விட்டவளை இனி ஒதுக்கியும் வைக்க முடியாது என்று அவனுக்குப் புரியத்தான் செய்தது.

ஆனாலும் இன்னும் அவன் கல்யாணம் நின்ற விஷயத்தில் உத்ராவின் பங்கு என்னவென்று அவனுக்குத் தெரிய வேண்டியது இருந்தது.

அதோடு அவளின் அடாவடி குணம் பிடிக்காமல் தான் அவள் காதலை நிராகரித்தான். இப்போது அதையும் தாண்டி அவளை ஏற்றுக்கொள்ள அவனுக்குக் கால அவகாசம் தேவைப்பட்டது.

அவளைப் பற்றி யோசித்துக் கொண்டே அவன் அமர்ந்து விட, அப்போது உள்ளே உத்ராவிற்கு ஒரு போன் அழைப்பு வந்தது.

யார் என்று உத்ரா எடுத்துப் பார்க்க, விமலா அழைத்துக் கொண்டிருந்தார்.

“ஹலோ சித்தி, எப்படி இருக்கீங்க?” என்று உடனே அழைப்பை ஏற்றுப் பேச ஆரம்பித்தாள் உத்ரா.

“இருக்கேன் உத்ரா. நீ எப்படி இருக்க? மாப்பிள்ளை நல்லா இருக்காரா?” என்று விசாரித்தார்.

“நாங்க நல்லா இருக்கோம் சித்தி. இன்னைக்குத்தான் நாங்க எங்க ஆபிஸ் பக்கத்தில் வீடு பார்த்து குடிவந்தோம்…”

“ம்ம், இப்போத்தான் அக்காகிட்ட பேசினேன். சொன்னாங்க உத்ரா…”

“சரி சித்தி, கமலி விஷயம் எதுவும் தெரிந்ததா?”

“அதைச் சொல்லத்தான் உன்னைக் கூப்பிட்டேன். நாளைக்குச் சாயந்தரம் கொஞ்சம் நேரில் வர முடியுமா உத்ரா?” என்று கேட்டார்.

“என்னாச்சு சித்தி? கமலி இருக்குற இடம் தெரிந்ததா? இல்ல, வேற எதுவும் பிரச்சனையா சித்தி?”

“என் பொண்ணே பெரிய பிரச்சனை தான். இதில் தனியா எங்கே இருந்து பிரச்சனை வரப் போகுது? அவள் இருக்குற இடம் தெரிந்துவிட்டது உத்ரா. இன்னும் சில விஷயம் எல்லாம் நேரில் பேசினால் தான் சரி வரும். வர முடியுமா? இல்ல மாப்பிள்ளை திட்டுவாரா?” என்று கேட்டார்.

‘போனில் பேச முடியாத அளவிற்கு அப்படி என்ன விஷயமாக இருக்கும்?’ என்று யோசனையானாள் உத்ரா.

அவள் பதில் சொல்ல நேரமாக “என்னமா, வர முடியாதா?” என்று தயக்கத்துடன் கேட்டார்.

“வர்றேன் சித்தி. எங்கே வீட்டுக்குத் தானே?”

“இல்லமா, கோவிலுக்கு வா…” என்று எந்தக் கோவில் என்று விவரம் சொன்னவர், “உத்ரா…” என்று தயக்கமாக அழைத்தார்.

“என்ன சித்தி, தயங்காம சொல்லுங்க…”

“உன் கூட மாப்பிள்ளையையும் கூட்டிட்டு வர்றீயா?”

“அவருமா? அவர் எதுக்குச் சித்தி?”

“அவர்கிட்ட நான் மன்னிப்பு கேட்கணும் மா. அதோட அவருக்கும் சில விஷயம் எல்லாம் தெரியணும். ப்ளீஸ் மா கூட்டிட்டு வர்றீயா?” என்று கெஞ்சலாகக் கேட்டார்.

என்ன விஷயம் என்று தெரியவில்லை என்றாலும் அவரின் கெஞ்சல் அவளை இளக்க, “சரி சித்தி, வர்றோம்…” என்றாள்.

“நல்லது மா. நாளைக்கு நேரில் பேசுவோம்…” என்று விமலா அழைப்பைத் துண்டித்தார்.

‘அவரிடம் முகிலை அழைத்துக் கொண்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டாலும் இப்போது அவனை என்ன சொல்லி அழைத்துப் போவது?’ என்று யோசித்தாள் உத்ரா.

‘அழைத்தாலும் வருவானா என்று தெரியவில்லையே’ என்று நினைத்தாள்.

அவனை எப்படி அழைத்துப் போவது என்று அவள் யோசித்துக் கொண்டிருக்க, வெளியே பாடல்களைப் பார்த்துக் கொண்டிருந்த முகில்வண்ணன், ரொம்ப நேரமாக உத்ரா வெளியே வரவில்லை என்றதும் எழுந்து அறைக்குள் வந்தான்.

தொலைகாட்சியைச் சப்தமாக வைத்திருந்ததாலும், யோசனையில் இருந்ததாலும் அறைக்குள் உத்ரா போன் பேசியதை அவன் கவனித்திருக்கவில்லை.

உள்ளே அவள் யோசனையுடன் அமர்ந்திருப்பதைக் கேள்வியுடன் பார்த்தவன், “என்ன விஷயம்?” என்று கேட்டான்.

அவனின் கேள்வியில் தன் யோசனையில் இருந்து வெளியே வந்தவள், ‘இவனிடம் இப்போதே கேட்டு விடலாமா?’ என்று நினைத்தாள்.

‘விமலா அழைத்தார் என்று சொன்னால் கோபத்தில் வர மாட்டேன் என்று சொல்வானோ?’ என்று நினைத்தவள் அந்த யோசனையைக் கைவிட்டாள்.

“ஒன்னுமில்லை, நைட் என்ன சமையல் செய்யலாம்?” என்று கேட்டாள்.

“அதையா அப்படித் தீவிரமா யோசிச்சுட்டு இருந்த? ஆமா உனக்குச் சமைக்கத் தெரியுமா?” என்று கேலியாகக் கேட்டான்.

“ஏன் சமைக்கத் தெரியலைனா நீங்க சமைக்கப் போறீங்களா? சமைத்துக் கொடுத்தால் நல்லது தான். நான் ஜாலியா உட்கார்ந்து சாப்பிடுவேன்…” என்று சப்புக் கொட்டி அவள் சொல்ல, முகிலின் முகம் இஞ்சி தின்ற குரங்காக மாறியது.

அவனுக்குத் தான் சமையலில் அ-னா, ஆ-னா கூடத் தெரியாதே. இவளுக்கும் தெரியவில்லை என்றால் அப்போ சாப்பாடுக்கு அதோகதி தானா? என்று மானசீகமாகத் தலையில் கை வைத்தான்.

அவனின் முழியைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தவள், “நீங்க ரொம்ப விவரமானவர் என்று நினைத்து வைத்திருந்தேன். ஆனா…” என்று அவள் முடிக்காமல் இழுக்க,

“ஹேய்… என்ன ஆனா? இப்ப என் விவரத்துக்கு என்ன குறைச்சல்?” என்று கேட்டான்.

“இல்லையா பின்ன? உங்க வீட்டில் நான் சில நாள் சமைச்சேன். அதையும் அத்தை உங்ககிட்ட சொன்னாங்க. அதை மறந்துட்டு இப்படி முழிச்சா நான் என்ன நினைக்க?” என்று கேலியாகக் கேட்டாள்.

‘அதானே? இப்படி மறந்து விட்டேனே’ என்று இப்போது பாவமாக முழித்தான்.

‘இப்ப எல்லாம் அவள் பக்கத்தில் நீ இருந்தாலே உன்னையே மறக்குற முகில். சூதானமா இருந்துக்கோ…’ என்று தனக்குத் தானே அறிவுறுத்திக் கொண்டு அறையை விட்டு வேகமாக வெளியேறினான்.

அவனின் ஓட்டத்தைப் பார்த்து உத்ராவிற்குச் சிரிப்பு வந்தாலும் நாளை என்ன செய்வது என்ற குழப்பத்தில் ஆழ்ந்து போனாள்.

ஆளுக்கு ஒரு பக்கமாக இருந்த வண்ணமே நேரம் கடந்திருக்க, இரவு உணவை உத்ரா தயாரிக்க, இருவரும் உண்டு முடித்தனர்.

உத்ரா மறுநாளுக்குத் தேவையானதை எடுத்து வைத்துக் கொண்டிருக்க, முகில் படுக்கச் சென்றிருந்தான்.

அனைத்தும் எடுத்து வைத்து விட்டு உள்ளே வந்த உத்ரா, அவன் படுத்திருக்கும் நிலையைப் பார்த்து முழித்தாள்.

அந்த அறையில் சுவர் ஓரமாகக் கட்டில் போடப்பட்டிருந்தது.

அவள் வழக்கமாகச் சுவர் பக்கம் படுத்துவிடுவாள் என்பதால் முகில் ஓரமாகப் படுத்துக்கொண்டான். முகில் நல்ல வளர்த்தி என்பதால் அவனுக்குச் சரியாக அந்தக் கட்டிலின் நீளம் இருந்தது.

படுத்ததும் தூக்கமும் வந்து விடக் கண் அசந்து இருந்தான்.

இப்போது அவனைத் தாண்டி அவள் ஏறி படுக்க வேண்டும். எப்படி என்று புரியாமல் நின்றுவிட்டாள்.

‘பேசாம இன்னொரு ரூம்ல போய்ப் படுப்போமா?’ என்று நினைத்தாள்.

ஆனால் அதற்கும் அவளுக்கு விருப்பம் வராமல் போக, மெல்ல அவனைத் தாண்டி சென்று விட நினைத்து அருகில் வந்து ஒருகாலை தூக்கி அவனின் அருகில் இருந்த சிறிய இடத்தில் வைத்தவள், அடுத்தக் காலை அவனைத் தாண்டி தூக்கி வைக்க நினைத்தாள்.

ஆனால் அதற்குள் முகில் உறக்கத்தில் லேசாகத் திரும்ப அதில் அவளின் கால் தடுக்கிவிட, நிற்கமுடியாமல் தடுமாறியவள் அவனின் மேலேயே விழுந்தாள்.

அவள் விழுந்த வேகத்தில், “ஆ…” என்று லேசாக அலறிய படி கண்விழித்தான்.

“ஸாரி… ஸாரி… தெரியாம…” என்று உத்ரா பதற, அவனின் ஆரம்பப் பயம் போய்க் கண்விழித்தவன் கண்ணில் முதலில் பட்டது அவளின் இடை தான்.

அவனின் மேலேயே குறுக்காக அவள் விழுந்திருக்க, அவள் அணிந்திருந்த நைட் சட்டை லேசாக உயர்ந்து அவளின் இடை தெரிந்தது.

அவன் மேலிருந்து எழ உத்ரா முயற்சி செய்ய, அவளின் இடையைக் கண்ட பதட்டத்தில் அவன் மீண்டும் நேராகத் திரும்பிப் படுத்தான்.

அதில் எழ முயன்றவள் மீண்டும் அவன் மீதே விழுந்து வைத்தாள். அதில் இன்னும் அவளின் சட்டை உயர்ந்து அவளின் இடை நன்றாகத் தெரிய ஆரம்பித்தது.

“அச்சோ! முகில் கொஞ்ச நேரம் அசையாம படுங்க…” என்று அதட்டியவள், வேகமாக அவனைத் தாண்டி அந்தப் பக்கம் சென்று விட்டாள்.

“ஷப்பா, இந்தப் பக்கம் வந்து படுக்க இத்தனை பாடு. இனி நீங்க சீக்கிரம் படுக்க வந்துட்டால் சுவர் பக்கமாகப் படுங்க முகில்…” என்று சொல்லிவிட்டு ஒன்றும் நடவாவது போல உத்ரா படுத்துவிட, முகிலோ இப்போது சட்டை மூடியிருந்த அவளின் இடையை ஏக்கமாகப் பார்த்தான்.

‘அவள் உதடு தான் என்னைக் கிறுக்குப் பிடிக்க வைத்தது என்று பார்த்தால் அவளின் இடுப்பு என்னைப் பைத்தியமா அலைய வச்சுடும் போலயே. மைதா மாவை பிசைந்து வயித்துப் பக்கம் ஒட்ட வச்சுக்கிட்டாளா என்ன?’ என்று நினைத்தான்.

அது மைதா மாவா? கோதுமை மாவா? இல்லை இரண்டும் கலந்த கலவையா? என்று அவனின் யோசனை ஏடாகூடமாகப் போக ஆரம்பித்தது.

அவள் மேலே விழுந்த போது அவன் உணர்ந்த மென்மை. அவளின் வாசம் அனைத்தும் அவனின் மனதை சலனப்படுத்தியது.

அவளின் அந்த மென்மையை இன்னும் உணர வேண்டும் என்ற ஆசையும் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.