27 – இன்னுயிராய் ஜனித்தாய்
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 27
மதியம் செய்த உணவே மீதம் இருந்ததால் வெளியே உண்ணாமல் கடற்கரையிலிருந்து நேராக வீட்டிற்கு வந்திருந்தனர்.
சபரிநாதன் உண்டு முடித்து அவர் அறைக்குள் சென்று விட, வருணா கடற்கரையில் விளையாடிய அலுப்பில் விரைவிலேயே தூங்கியிருந்தாள்.
இரவு உண்டு முடித்ததும் ஒதுங்க வைக்கத் துர்காவிற்கு உதவி செய்வது நித்திலனின் வழக்கம் என்பதால் அன்றும் அதே போல் துர்கா பாத்திரங்களைக் கழுவி தர, அதை வாங்கித் துடைத்து அடுக்கி வைத்துக் கொண்டிருந்தான்.
எப்போதும் பேசிக் கொண்டே தான் வேலை செய்வார்கள்.
அன்றைய பொழுதில் மகள் செய்த சேட்டை, அலுவலகத்தில் நடந்த பழைய சுவாரஸ்யமான சம்பவங்கள் என்று பேச்சுக்கள் ஓடும்.
ஆனால் இன்றோ துர்கா மகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்க, மகள் பற்றிய பேச்சை எப்போதும் ஆர்வமாகக் கேட்பவனோ அவளின் பேச்சில் கவனம் வைக்காமல் ஏனோ தானோ என்று ‘ம்ம்’ கொட்டிக் கொண்டிருந்தான்.
அவனின் கவனம் தன் பேச்சில் இல்லை என்பதைக் கவனித்தவள், என்ன செய்கிறான் என்று திரும்பிப் பார்க்க அவனின் கைகள் தான் வேலை செய்து கொண்டிருந்ததே தவிர அவனின் சிந்தனை எங்கோ இருந்தது.
“என்னாச்சு? எதுவும் பிரச்சனையா?” என்ற கேள்வியில் அவனின் சிந்தனையைக் கலைத்தான்.
“ஹான்… என்ன துர்கா?” என்று கேட்டவன் சில நொடிகள் தடுமாறித்தான் போனான்.
“பீச்சிலிருந்து வந்ததிலிருந்து ஒரு மாதிரி இருக்கீங்களே… என்னன்னு கேட்டேன்…” என்றாள்.
தன் எண்ணயோட்டத்தை என்னவென்று சொல்வான்?
அதை அறிந்தால் துர்கா என்ன சொல்வாளோ என்று நினைத்தவன் தன் நினைப்பை தனக்குள்ளேயே புதைத்துக் கொள்ள முடிவெடுத்தான்.
“ஒன்னுமில்லை துர்கா… இன்னைக்கு நீங்களே க்ளீன் பண்ணிடுறீங்களா?” என்று கேட்டவனை யோசனையுடன் பார்த்தாலும், சம்மதமாகத் தலையை அசைக்க, அடுத்த நிமிடம் அங்கிருந்து விரைந்து சென்றுவிட்டான்.
‘என்னானது?’ என்று புரியாமல் வேலையை முடித்து விட்டுத் துர்கா படுக்கையறைக்கு வந்த போது, கட்டிலில் நெற்றியில் கை வைத்துக் கண்களை மறைத்த படி படுத்திருந்தான் நித்திலன்.
அவன் அருகில் வருணா அசந்து உறங்கிக் கொண்டிருந்தாள்.
வெளியே சென்று விட்டு வந்த அலுப்பில் தூங்கிவிட்டான் போலும் என்று நினைத்து அவளும் வருணாவிற்கு அந்தப் பக்கம் படுக்கையில் சாய்ந்தாள்.
அவள் படுத்த சில நொடிகளில் நித்திலனின் விழிகள் விழித்துக் கொண்டன.
லேசாகத் திரும்பிப் பார்க்க, துர்கா அவனுக்கு முதுகை காட்டிக் கொண்டு படுத்திருந்தாள்.
அவனுக்கு அவளிடம் பேசவேண்டும் போல் இருந்தது.
ஆனால் என்ன பேசுவது என்று தெரியவில்லை.
தன் மனதில் இருப்பதைச் சொல்லலாமா? என்று நினைத்தான். ஆனால் சொன்னால் துர்கா எப்படி எடுத்துக் கொள்வாளோ என்று தயக்கமாக இருந்தது.
தான் அதீத உரிமை எடுத்துக் கொள்ளாமல் விலகி இருப்பதால் தான் தன்னிடம் இயல்பாகப் பேசி பழகுகிறாள். இதுவே தன் மனம் செல்லும் பாதை அறிந்தால் எப்படி நடந்து கொள்வாளோ என்று தோன்றியது.
மாலை தன் கை பற்றி நடந்தாளே அதனால் அவள் ஒன்றும் நினைத்துக் கொள்ள மாட்டாள் என்றும் தோன்றியது.
ஆனால் கை பற்றியதை நீ எப்படிப் பெரிதாக எடுத்துக் கொள்ளலாம் என்று ஒருவேளை துர்கா தன்னை விட்டு விலக ஆரம்பித்து விட்டால்? என்று தோன்றியதுமே அவனால் அதற்கு மேல் படுத்திருக்க முடியவில்லை.
அந்தப் பஞ்சு மெத்தையே பாறாங்கல் போல் உறுத்துவதாகத் தோன்ற எழுந்துவிட்டான்.
துர்காவின் முதுகை வெறித்துப் பார்த்தபடி சில நொடிகள் இருந்தவன், அதுவே ஒரு வித அவஸ்தையை உண்டு பண்ண, எழுந்து பால்கனியில் சென்று நின்றான்.
வெளிக்காற்று முகத்தில் மோத, அதை அனுபவிக்க முயன்றான்.
ஆனால் மனதின் புழுக்கம் அவனை இயல்பாக இருக்க விடவில்லை. தூரத்தில் தெரிந்த சாலையில் வாகனங்கள் ஒளி வீசி விரைந்து கொண்டிருக்க, அதையே உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
தங்கள் வாழ்க்கையை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல அவனுக்கு உள்ளுக்குள் நிறைய ஆசைகளும், எதிர்பார்ப்புகளும் இருக்கவே செய்தன.
அதனைத் துர்காவிற்காகவே மறைத்து வைத்திருந்தான்.
ஆனால் இன்று அவன் மறைத்து வைத்த உணர்வுகள் உயிர்ப்பெற்று அவனின் மனதினை நிலையில்லாமல் உலாவ வைத்து விட்டிருந்தன.
“தூங்கலையா?” என்று அவனின் பின்னாலிருந்து குரல் கேட்க, திரும்பிப் பார்த்தான் நித்திலன்.
துர்கா பால்கனி கதவை பிடித்தபடி நின்று கொண்டிருந்தாள்.
“நீங்க தூங்கலையா?” பதிலுக்குக் கேட்டவனை முறைத்துப் பார்த்தாள்.
“நான் தானே முதலில் கேள்வி கேட்டேன். அதுக்கு முதலில் பதில் சொல்லுங்க…” என்றாள்.
அவள் காட்டும் கோபம் கூட அவனுக்கு இனித்தது.
“தூக்கம் வரலை…” என்றான்.
“ஏன்?”
“தெரியலை…”
“அதெப்படி தெரியாமல் இருக்கும்? ஒன்னு உடலில் பிரச்சனை இருந்தால் தூக்கம் வராது. இன்னொன்னு மனதில் பிரச்சனை இருந்தால் தூக்கம் வராது. உடலில் பிரச்சனை இல்லைன்னு நினைக்கிறேன். அப்போ மனதில் தான் பிரச்சனையா?” என்று கேட்டாள்.
“அப்படி எல்லாம் எதுவுமில்லை துர்கா…” என்றான் எங்கோ பார்த்துக் கொண்டு.
“உண்மையைச் சொல்வதாக இருந்தால் என் முகத்தைப் பார்த்து சொல்லியிருப்பீங்க…” என்றாள்.
அவன் அப்போதும் அவளைப் பார்க்காமல் அசையாமல் நிற்க, “என்னன்னு சொன்னால் தானே தெரியும்…” என்றாள்.
‘சொல்லிவிடு! சொல்லிவிடு!’ என்று மூளை கட்டளை இட்டாலும், ‘வேண்டாம்! வேண்டாம்!’ என்று பதறியது மனது.
மூளைக்கும் மனதிற்குமான போராட்டம் அவனைப் போட்டு உலுக்க, “ப்ளீஸ் துர்கா, என்னைத் தனியா விடுங்களேன்!” என்றான்.
அவளுக்குச் சுள்ளென்று கோபம் வந்தது.
“முதலில் என்னை இப்படி ‘ங்க’ போட்டு பேசுவதை நிறுத்துங்க. சும்மா மூன்றாம் மனுஷி கிட்ட பேசுற போல எப்பவும் அப்படிப் பேசிட்டு… இனி என்னை ஒருமையில் பேசுவதாக இருந்தால் என்கிட்ட பேசுங்க. இல்லனா பேசவே வேண்டாம்…” என்று கடுப்பாகச் சொன்னவள் வேகமாக அறைக்குள் சென்றுவிட்டாள்.
ஏற்கனவே மனதில் எதையோ போட்டுக் குழப்பிக் கொண்டிருப்பதையும் சொல்ல மறுக்கிறான். அதனுடன் அவன் பன்மையில் பேசுவதும் எரிச்சலை உண்டாக்கியிருக்க அதை அப்படியே அவனிடம் கொட்டிவிட்டிருந்தாள்.
ஆனால் நித்திலனின் மனமோ சில்லென்று குளிர்ந்து போனது.
அவளின் அந்தக் கோபம் அவனை வருத்தப்படுத்தவே இல்லை.
தானும் உள்ளே சென்றவன், படுக்கையில் கோபமாக அமர்ந்திருந்தவள் எதிரே நின்று, “நீங்க எனக்கு மூன்றாம் மனுஷி இல்லைனு நீங்க முதலில் நினைக்கிறீங்களா துர்கா?” என்று அழுத்தமாகக் கேட்டான்.
‘என்ன கேள்வி இது?’ என்று துர்கா பார்க்க,
“நீங்க எப்படி நினைக்கிறீங்கன்னு உங்களுக்குப் புரிந்தாலே… நான் ஏன் இன்னும் தூங்காமல் இப்படித் தவிக்கிறேன் என்பதும் புரியும் துர்கா…” என்றவன் படுக்கையில் விழுந்தான்.
இப்போது தூக்கம் வராமல் கணவனை வெறித்துக் கொண்டிருப்பது அவளின் முறை ஆகிற்று!
அவனுக்கு அவள் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிய வேண்டியது இருந்தது. அதனால் அப்படிப் பேசிவிட்டு படுத்துவிட்டான்.
அவளே யோசிக்கட்டும். தன் மனது அவளுக்குப் புரிகிறதா என்று பார்ப்போம் என்று நினைத்தான்.
‘என்ன சொல்கிறான் இவன்?’ என்று புரியாமல் சில நொடிகள் திகைத்து தான் போனாள்.
நித்திலன் தன்னைப் பன்மையில் பேசுவது பிடிக்காமல் தான் கடுப்படித்தாள்.
ஆனால் அதற்கு எதற்கு மூன்றாம் மனுஷியா இல்லையா என்று நீ என்ன நினைக்கிறாய் எனக் கேட்கிறான் என்று யோசித்தாள்.
அவள் சிந்தனை தான் கோபப்பட்ட காரணத்திலிருந்தே சிந்திக்கக் ஆரம்பித்தது.
பன்மையில் அழைக்க வேண்டாம் என்றால் வேறு எப்படி அவன் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய்? அவளின் மனமே உள்ளிருந்து கேள்வி எழுப்பியது.
ஒரு மனைவியிடம் எப்படி ஒரு கணவன் பேசுவானோ அப்படிப் பேச வேண்டும் என்று பதில் சொல்லும் போதே அந்த உண்மையை உணர்ந்தாள் துர்கா.
நண்பர்களாக இருக்க வேண்டும் என்று சொல்லித்தானே திருமணம் செய்து கொண்டேன். நண்பன் என்ற நிலையிலிருந்து எப்போது கணவன் என்ற நிலையில் நித்திலனை நினைக்க ஆரம்பித்தேன்?
தனக்குத்தானே கேட்டுக் கொண்டாள்.
எப்போது அவள் கழுத்தில் தாலி கட்டினானோ அந்த நொடியே கணவன் என்ற ஸ்தானத்தை அடைந்து விட்டான்.
தான்தான் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தடுமாறியிருக்கிறோம் என்று புரிந்தது.
அதே நேரம் எப்போது ஒரே அறைக்குள் அவனுடன் நம்பிக்கையுடன் இருந்து கொண்டாளோ அப்போதே தன் மனம் மாறத்தான் செய்திருக்கிறது. அதைத் தனக்குப் புரிந்து கொள்ளத்தான் இவ்வளவு நாட்கள் ஆகியிருக்கின்றன என்றும் புரிந்தது.
அவனுடன் இயல்பாகப் பேசி, அவன் வலியைக் கண்டு அவனுக்காக வருந்தி, அவனை ஹேமா பேசியதை தாங்க முடியாமல் துடித்து என அவன் மீது தன் மனம் சிறிது சிறிதாகச் சாயத் தொடங்கிய சமயங்களை நினைத்துப் பார்த்தாள்.
நேற்று கூட அவன் உதடுகள் தன் தோளை தீண்டிய போது தனக்குச் சிலிர்த்துப் போனதே தவிர, அருவருப்பையோ, பிடித்தமின்மையோ தரவில்லை என்பதும் அவளின் புலன்களுக்குப் புரிந்து போனது.
மாலை கூட அவன் கையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று தோன்றவில்லையே? இப்படியே அவன் கையைப் பற்றிக் கொண்டே அவனுடன் வெகுதூரம் செல்ல வேண்டும் என்ற ஆசை தானே கிளர்ந்தெழுந்தது.
அதை நினைத்ததும் நித்திலனின் இன்றைய பார்வையும், அவன் தூங்காமல் தவித்துப் பால்கனியில் நின்ற காரணமும் புரிய, படுத்திருந்த கணவனைத் திரும்பிப் பார்த்தாள்.
கையைக் கண்ணின் மீது வைத்து மறைத்துப் படுத்திருந்தான் என்றாலும் அவன் இன்னும் தூங்கவில்லை என்று புரிந்தது. அவன் கை லேசாகப் பதட்டத்துடன் ஆடிக் கொண்டிருந்தது.
மனைவியாகத் தன்னை எதிர்பார்க்கிறான். ஆனாலும் அதை நேரடியாகத் தன்னிடம் சொல்ல தயங்குகிறான் என்று அவளுக்குப் புரிந்தது.
ஆனாலும் அதை நேரடியாகக் கேட்காமல் தான் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறான் என்று தான் புரியவில்லை.
இதைப் பற்றி வெளிப்படையாகப் பேசவும் அவளுக்குத் தயக்கமாக இருந்தது.
இப்போது தான் என்ன செய்ய வேண்டும்? என்று தன்னையே கேட்டுக் கொண்டாள். பதில் தான் கிடைக்கவில்லை.
கண்களை மூடிப் படுத்திருந்தாலும் துர்காவின் பார்வை தன்னைத் தீண்டுவதை உணர்வே செய்தான் நித்திலன்.
அவளின் கோபத்தை வைத்தே அவனுக்கு என்ன தேவை என்பதை உணர்த்திவிட்டான்.
அவள் என்ன மனநிலையில் இருக்கிறாள் என்று தெரியாமல் அவளை அணுக அவனுக்கு விருப்பமிருக்கவில்லை.
அரைமணி நேரத்திற்கு மேலே துர்கா அப்படியே அமர்ந்திருப்பதை உணர்ந்தவன், கையை விலக்கி விழிகளைத் திறந்து பார்த்தான்.
கட்டிலில் சாய்ந்து முழங்கால்களைக் கைகளால் கட்டிக் கொண்டு அதில் முகத்தைச் சாய்த்து அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள் துர்கா.
அவளின் பார்வையை அந்த மெல்லிய ஒளியில் ஊடுருவி பார்க்க, அவளும் தயங்காமல் அவனின் விழிகளுடன் தன் விழியைக் கலக்க விட்டாள்.
“தூங்கலையா துர்கா?” அவள் கேட்ட கேள்வி திருப்பி அவளை நோக்கியே வந்தது.
“தூக்கம் வரலை…”
“ஏன்?”
“தெரியலை…”
அதே உரையாடல் மாற்றி நடந்தேறிக் கொண்டிருக்க, இருவருக்குமே சிரிப்பு வந்தது.
“உடம்பு சரியில்லையா? மனசு சரியில்லையா?” அவனின் கேள்வியில் முத்துப் பற்கள் பளீரென மின்ன சிரித்தாள்.
“ம்ம்ம்… புருஷன் தான் சரியில்லை…” என்ற துர்கா, அவனின் முகத்தைப் பார்க்காமல் வேகமாகக் கட்டிலில் அவனுக்கு முதுகை காட்டிக் கொண்டு படுத்துக் கொண்டாள்.
‘புருஷன்’ என்ற விளிப்பில் படுத்திருந்தவனோ பட்டென்று எழுந்து அமர்ந்தான்.
அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
தன்னைக் கணவனாக ஏற்றுக் கொண்டாள் என்று அதுவே புரியவைக்க, “துர்கா…” வியப்பாக விளித்தான்.
“நீங்க… நீங்க…” என்று அவன் இழுக்க,
“நான் மூன்றாம் மனுஷி இல்லை. உங்க மனுஷி!” என்று திரும்பிப் பார்க்காமலேயே சுள்ளென்று சொன்னாள்.
கூடவே அவளின் குரலில் ஒரு வித குழைவும், கிறக்கமும் சேர்ந்தே ஒலித்தன.
“துர்கா…” என்று காதலுடன் அழைத்தவன் குழந்தைக்கு அந்தப் பக்கமாகப் படுத்திருந்தவளின் தோளில் மெல்ல தன் கையை வைத்தான்.
அவனின் கை லேசாக நடுங்கிக் கொண்டிருந்ததைத் தன் தோளில் உணர்ந்தாள் துர்கா.
துர்காவின் உடல் சிலிர்த்து நடுங்க ஆரம்பித்தது.
“துர்கா, நான் அந்தப் பக்கம் வரட்டுமா?” ரகசியக் குரலில் கேட்டான்.
துர்காவால் பதிலே சொல்ல முடியவில்லை.
ஆனால் அவன் அருகில் வந்தால் தடுக்கும் எண்ணமும் அவளுக்கு இல்லை என்பதே திண்ணம்.
அவளிடமிருந்து பதில் வரவில்லை என்றதும், அவனின் முகம் சுருங்கியது.
அவள் வெட்கத்தை விட்டு வாவென்று எப்படி அழைப்பாள் என்பதை எல்லாம் அவன் யோசிக்கவில்லை.
அவளுக்கு விருப்பமில்லையோ என்று நினைத்தவன் தன் கையை அவள் தோளிலிருந்து எடுத்துவிட்டான்.
“ஸாரி துர்கா. இனி தொந்தரவு தர மாட்டேன்…” என்று சுணக்கமாகச் சொன்னவன், தளர்ந்து படுக்கையில் படுத்துக் கொண்டான்.
ஏமாற்றத்தை தாங்க முடியாத ஏக்க மூச்சு அவனிடமிருந்து பலமாக வெளிப்பட்டது.
‘திடீரென என்னானது?’ என்று புரியாமல் அவன் பக்கம் திரும்பிக் கேள்வியாகப் பார்த்தாள்.
அவனோ விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தான்.
“ஏன்?” தயக்கமாகக் கேட்டாள்.
அவள் கேள்வியில் விலுக்கென்று அவளைப் பார்த்தான்.
அவளின் கேள்விக்கான அர்த்தம் அவனுக்குப் புரியவில்லை.
“ஏன் ஸாரி சொன்னீங்கன்னு கேட்டேன்…” ஏன் தொந்தரவு தரமாட்டேன் என்று சொன்னாய் என்றா கேட்க முடியும் என்பதால் அப்படிக் கேட்டாள்.
“உங்களுக்குப் பிடிக்காம…” என்று அவன் ஆரம்பிக்கும் போதே அவளின் முறைப்பு பதிலாக வந்தது.
அந்த நிலையிலும் அவளின் முறைப்பை ரசித்தான்.
“உனக்குப் பிடிக்காம டச் செய்ததற்கு…” என்று ஒருமைக்கு மாறினான்.
“எனக்குப் பிடிக்கலைன்னு எப்போ சொன்னேன்?” அவனைப் பார்க்காமல் எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னாள்.
“துர்கா…” ஆவலாக அழைத்தவன், நடுவில் படுத்திருந்த வருணாவை தூக்கி ஓரமாகப் படுக்க வைக்கத் தூக்கினான்.
அவன் தூக்கியதும் வருணா சட்டென்று அழ ஆரம்பிக்க, அதை எதிர்பாராமல் திருட்டு முழி முழித்தான்.
“ஒன்னுமில்லைடா குட்டிம்மா. தூங்கு… தூங்கு…” என்று அதே இடத்தில் மீண்டும் படுக்க வைத்து தட்டிக் கொண்டான்.
அவனின் அவஸ்தையைப் பார்த்து துர்காவிற்குச் சிரிப்பாக வந்தது.
துர்கா சற்று சத்தமாகவே சிரித்து விட, அந்தச் சத்தத்தில் சிணுங்கிக் கொண்டிருந்த வருணா சத்தமாகவே அழ ஆரம்பித்தாள்.
‘ஏன் இப்படி?’ என்று மனைவியைப் பார்த்தவன், குழந்தையைத் தூக்கி தோளில் போட்டு தட்டிக் கொடுக்க ஆரம்பித்தான்.
இப்போதெல்லாம் இரவு அவன் தூக்கினால் வருணா அழுவதில்லை.
இரவில் அவள் அழுதால் துர்காவை எதிர்பார்க்காமல் அவனே தூங்க வைத்துவிடுவான்.
அவளைத் தட்டிக் கொடுத்து ஒரு வழியாகத் தூங்க வைத்தான்.
அவனையே காதலுடன் பார்த்துக் கொண்டு படுத்திருந்தாள் துர்கா.
குழந்தையைத் தூங்க வைத்து விட்டு கட்டிலை விட்டு இறங்கி மனைவியின் பக்கம் வந்தான் நித்திலன்.
அவளின் அருகில் நின்று அவளை நோக்கி கையை நீட்டினான்.
‘என்ன?’ என்பது போல் பார்த்தாலும், தயங்காமல் தன் கையை அவன் கையின் மீது வைத்தாள்.
அவளின் கையைத் தன் உதட்டின் அருகே கொண்டு சென்று மென்மையாக அதில் ஒரு முத்தம் வைத்தான்.
இருவருக்குமே சிலிர்த்தது.
“அங்கே போகலாமா துர்கா?” என்று பால்கனியைக் காட்டி மெல்லிய குரலில் கேட்டான்.
“ஏன்?”
“ஷ்ஷ்! இங்கே பேச வேண்டாம். குட்டிம்மா எழுந்துக்குவாள். அங்கே வா…” என்று உரிமையுடன் ஒருமை வந்தது.
துர்காவும் மகளைப் பார்த்து விட்டு அவன் கை பற்றியே எழுந்து நின்றாள்.
அவளின் கையை விடாமல் அழைத்துக் கொண்டு பால்கனிக்குச் சென்றான்.
குழந்தை எழுந்தாலும் பார்ப்பது போல் நின்று கொண்டவன் அவள் கையை மீண்டும் உதட்டில் வைத்து முத்தமிட்டான்.
இருவருக்கும் இடையே பேச்சற்ற மௌனம்.
அவளை அறிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தாலும், வேங்கையாகப் பாய நினைக்கவில்லை நித்திலன்.
“உன்கிட்ட நிறையப் பேசணும் போல இருக்கு துர்கா. ஆனால் எப்படிப் பேசுவதுன்னு தெரியலை…” என்று மெல்ல பேச்சை ஆரம்பித்தான்.
“என்ன பேசணும்? தயங்காம சொல்லுங்க…” என்றாள் துர்கா.
“அதுக்கு முன்னாடி நான் ஒரு விஷயம் கேட்கணும்…” என்றாள்.
“என்ன துர்கா?”
“ஏன் நான் சொன்ன பிறகும் வீம்புக்குனே என்னைப் பன்மையிலேயே கூப்பிட்டீங்க?” என்று கேட்டாள்.
“வீம்பு இல்லை துர்கா. உரிமை! நான் எதிர்பார்த்தது உரிமை! நாம நண்பர்களாக இருப்போம்னு சொல்லிட்டேன். அப்படி இருக்கும் போது எப்படி என் உரிமையை எடுத்துக்க முடியும்? அதோட நான் உரிமையோட கூப்பிட ஆரம்பிச்சா எங்கே என்னால் விலகி இருக்க முடியாதோன்னு ஒரு வித பயம் மனதில்!” என்றான்.
“ஆனா அந்த உரிமையை நானே கொடுத்த பிறகும் கூட நீங்க அப்படித்தான் கூப்பிட்டீங்க…”
“நீ என்னைக் கூப்பிட சொன்ன போது நீ பாராட்டியது நட்பை மட்டும் தானே துர்கா? அப்புறம் எப்படி?” என்று அவளிடமே கேட்டு வைத்தான்.
அவளுக்கு அவனின் மனநிலை புரிந்தது.
இப்போதும் கூட அவள் மனநிலையைக் காட்டிய பிறகு தானே ஒருமையில் அழைக்கத் துவங்கி இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டாள்.
“நீங்க ஏதோ பேசணும்னு சொன்னீங்க?” என்று கேட்டாள்.
“பேசணும்… ஆனா…” என்றவன் சிறிது தயங்கினான்.
“என்ன இருந்தாலும் சொல்லுங்க…” என்றாள்.
“என்னைப் பிடிச்சிருக்கா துர்கா? கணவனாக…” என்று கேட்டான்.
அவனுக்குப் பதில் சொல்லாமல் தங்கள் இணைந்திருந்த கைகளைக் குறிப்பாகப் பார்த்தாள்.
அவளின் பார்வையின் அர்த்தம் புரிந்தாலும் அவளின் வாயால் தெரிந்து கொள்ள நினைத்தான்.
“பிடிச்சிருக்கு…” என்று அவன் ஆசைப்பட்டதை அவளே சொன்னாள்.
அவனின் முகத்தில் என்றுமில்லாத மகிழ்ச்சி தாண்டவமாடியது.
மீண்டும் அவளின் கையில் தன் அதரங்களைப் பதித்தான். அவனின் இன்னொரு கையை அவள் தோளின் மீது வைத்தான்.
அவனுக்கு இசைந்து நின்றாள் துர்கா.
மெல்ல அவன் தன் முகத்தை அவளை நோக்கி கொண்டு சென்றான்.
“நாம பால்கனியில் இருக்கோம்…” என்றாள் தணிந்த குரலில்.
“ம்ம்…” என்றாலும் விலகாமல் தன் அதரங்களை அவளின் கன்னத்தில் மென்மையாகப் பதித்தான்.
காதல் முத்தமாக இல்லாமல் அன்பு முத்தமாக இருந்தது அம்முத்தம்.
முதல் இதழ் தீண்டல் இருவருக்குமே தடுமாற்றமாக இருந்தது.
அடுத்து அவனின் உதடுகள் காதலுடன் அவளின் உதட்டை நெருங்க, தன் கையை இடையிட்டு அவனுக்குத் தடையிட்டாள்.
“துர்கா…” தாபத்துடன் அழைத்தான்.
“இங்கே வேண்டாம். யாராவது பார்த்துடுவாங்களோன்னு எனக்குச் சங்கடமா இருக்கு…” என்று மெல்ல முனங்கினாள்.
“உள்ளே குட்டிம்மா இருக்காள் துர்கா. அவள் பார்த்துடுவாளோன்னு பயமாக இருக்கு…” என்றான்.
“அவள் தூங்குறாள்…” என்றாள்.
“இப்ப முழிச்சாளே… அது போல் முழிச்சுக்கிட்டால்…” என்று தயங்கியவனைக் கண்டு சிரித்தாள்.
அவளின் சிரிப்பை ஆசையாகப் பார்த்தான் நித்திலன்.
“நீ சிரிக்கும் போது ரொம்ப அழகா இருக்கத் துர்கா…” என்றான்.
“அது இப்பத்தான் தெரியுமா?” சலுகையாகக் கேட்டாள்.
“எப்பவோ தெரியும். ஆனாலும் நீ மனம் விட்டு சிரிக்கலையோன்னு தோணும். உன் சிரிப்பிலும் ஒரு இறுக்கம் இருக்கும். ஆனா இப்ப அந்த இறுக்கம் இல்லாமல் இயல்பாகச் சிரிக்கிற. பார்க்க பார்க்க பார்த்துட்டே இருக்கணும் போல இருக்கு….” என்றான்.
இப்போது அவளின் முகத்தில் வெட்கச் சிரிப்பு.
ஆசையாக, ஆர்வமாக, காதலாக, தாபமாகப் பார்த்தான்.
அவளின் தோளில் கை போட்டு லேசாக அணைத்த படி பால்கனியை விட்டு அறைக்குள் வந்தான்.
அவனின் பார்வை கட்டிலுக்குச் சென்றது.
வருணா நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தாள்.
“எழுந்திட மாட்டாளே?” மனைவியிடம் கேட்டு வைக்க, ‘தெரியலை’ என்பது போல் தோளை குலுக்கினாள்.
“துர்கா…” என்று மெல்ல அணைத்துக் கொண்டான்.
அவன் கைகள் அவளைச் சுற்றி வளைத்துக் கொண்டிருந்ததே தவிர அதற்கு மேல் முன்னேறவில்லை.
அவனிடம் ஒரு தயக்கம் இருப்பதைத் துர்காவால் உணர முடிந்தது.
ஏனென்று புரியவில்லை.
நெருக்கத்தைக் காட்டிய அதே நேரம் ஒருவித விலகலும் அவனிடம் தெரிய, காரணம் புரியாமல் குழம்பிப் போனாள் துர்கா.