27 – இதயத்திரை விலகிடாதோ? (Final)

Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 27

“என்ன கல்யாணப் பெண்ணே, எப்படி இருக்க?”

“சூப்பரா இருக்கேன் யுவா. நீ எப்படி இருக்க?”

“நல்லா இருக்கேன் நந்தினி. அப்புறம் கல்யாண வாழ்க்கை எல்லாம் எப்படிப் போகுது?”

“ஸ்மூத்தா போகுது யுவா. நாளைக்கு நாங்க தனிக் குடித்தனம் போறோம். அந்த நியூஸ் சொல்லத்தான் கூப்பிட்டேன்…”

“என்ன தனிக் குடித்தனமா? நீ உங்க மாமனார், மாமியார் கூட ஒரே வீட்டில் இருக்கப் போறதாகத் தானே சொன்ன?”

“அப்படித்தான் முடிவு பண்ணிருந்தாங்க. ஆனா தினு இந்தக் கோவிட் நேரத்தில் ஹனிமூன் கூடப் போக முடியலை… வீட்டிலும் பிரைவசி இல்லைன்னு ஒரே புலம்பல். அதான் என்னோட மாமியார் நீங்க தனியா போய் இருடா மகனே. பிரைவசியும் ஆச்சு, தனிக் குடித்தனத்தை ஹனிமூனா மாத்திக்க வேண்டியது உன் சாமர்த்தியமுமாச்சுன்னு சொல்லிட்டாங்க…”

“ஓ, இதுவும் கூட நல்லது தான். தனியாக இருப்பது உங்களுக்குள் இன்னும் புரிதலை தரலாம்…” என்றாள் யுவஸ்ரீ.

“சரி, நாளைக்குப் பால் காய்ச்ச போறோம். அதுக்கு நீயும் சூர்யாவும் வாங்க யுவா. கல்யாணத்துக்குக் கூட நீ வரலை. இப்ப வாயேன். நாங்க ஆளுங்க யாரையும் கூப்பிடலை. என் பேரண்ட்ஸ், தினு பேரண்ட்ஸ் மட்டும் தான் இருப்போம்…” என்றழைத்தாள் நந்தினி.

“ஸாரி நந்தினி, நாளைக்கு விடியக்காலை கிளம்பி மதுரை போறோம். கொஞ்ச நாளைக்கு அங்கே இருந்துட்டு அப்படியே சேலத்துக்கு அம்மா வீட்டுக்கு போறோம். திரும்பி வர எப்படியும் ஒரு மாதம் ஆகும்…” என்றாள்.

“ஓ, சரி யுவா. போயிட்டு வாங்க. நீ ஊரில் இருந்து வந்த பிறகு ஒரு நாள் சந்திப்போம்…” என்றாள் நந்தினி.

“கண்டிப்பா நந்தினி…” என்று யுவஸ்ரீ சொல்ல, மேலும் சிறிது நேரம் அவர்களுக்குள் பேச்சு ஓடியது.

ஏப்ரல் மாதம் நடப்பதாக இருந்த தினேஷ், நந்தினியின் திருமணம் லாக்டவுனால் தள்ளி வைக்கப்பட்டுப் பத்து நாட்களுக்கு முன் தான் திருமணம் முடிந்திருந்தது.

கொரானா முதல் அலை ஓய்ந்து, லாக்டவுன் சற்றுத் தளர்வு பெற்றிருந்த காலகட்டம் அது.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

நந்தினியுடன் பேசி முடித்து விட்டு பால்கனிக்குச் சென்றாள் யுவஸ்ரீ.

அங்கே அவள் வழக்கமாக அமரும் ஊஞ்சலில் அமர்ந்திருந்தான் சூர்யா.

“சூர்யா, அது என் இடம்… எழுந்திருங்க…” என்று இடுப்பில் கை வைத்து முறைத்தபடி சொன்னாள்.

ஊஞ்சலிருந்து இறங்கியவன் தான் அமர்ந்திருந்த இடத்தைப் பார்த்தான்.

“அச்சோ! பொண்டாட்டி, இங்கே எழுதி வச்ச உன் பெயரை காணோம்டி. அப்போ அது உனக்குச் சொந்தமான இடம் இல்லை…” என்று கேலியாகச் சொன்னவன், மீண்டும் ஊஞ்சலில் ஏறி அமர்ந்து கொண்டான்.

“சூர்யா…” காலை உதைத்து சிணுங்கினாள்.

“அய்யோடா! என் பொண்டாட்டி விட்டால் அழுதிடுவாள் போலயே?” என்றவன், அவள் இடையில் கை கொடுத்து, தூக்கி தன் மடியில் அமர்த்திக் கொண்டான்.

“சூர்யா, என்ன பண்றீங்க? கூடை ஊஞ்சல் வெயிட் தாங்காமல் விழுந்திட போறோம்…” என்று அலறினாள்.

“பயப்படாதடி, விழ மாட்டோம். இந்த ரொமான்ஸை ரசிடி!” என்றவன், கால்களை அழுந்த கீழே ஊன்றி, மனைவியை வாகாக மடியில் அமர்த்தி, அவளின் வயிற்றைச் சுற்றி கையைப் போட்டவன், அப்படியே மெல்ல அவளின் வயிற்றை வருட ஆரம்பித்தான்.

“நம்ம பேபி என்ன செய்றாங்க?” மனைவியின் காதில் ரகசியமாகக் கேட்டான்.

“உங்க பேபி என்ன செய்றாங்கன்னு நீங்களே கேளுங்க…” என்றாள் பூரிப்பாக.

மனைவியின் வயிற்றில் ஐந்து மாத கருவாக இருந்த தன் மகவுவை தன் கையால் ஸ்பரிசிக்க முயன்றான் சூர்யா.

“ஹாய் பேபி… என்ன செய்றீங்க? இப்ப அப்பா, அம்மா, பேபி மூணு பேரும் ஊஞ்சல் ஆடுறோம். உனக்குப் பிடிச்சிருக்கா?” என்று குழந்தையிடம் பேச்சுக் கொடுத்தான்.

“அதெல்லாம் நம்ம பேபிக்கு பிடிக்கும்…” என்றாள்.

“அதானே பேபியோட அம்மா பாதி நேரம் குடியிருக்கும் இடமே இந்த ஊஞ்சல் தானே. அப்போ பேபிக்கும் பிடிக்கும்…” என்றான்.

“இப்ப உங்களுக்கும் தானே இந்த ஊஞ்சல் பிடிக்கும்?” என்று கேட்டாள்.

“பிடிக்க வைத்தவளே நீ தானே?” என்றவன் மனைவியின் கழுத்தில் முகத்தைப் புதைத்தான்.

ஒவ்வொரு நாட்களும் வேலை அனைத்தும் முடிந்ததும், இரவு படுப்பதற்கு முன் இருவரும் அந்த ஊஞ்சலில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது அவர்களின் வழக்கமாகவே மாறியிருந்தது.

அதிலும் கர்ப்பம் தரித்ததிலிருந்து மூன்று மாதங்கள் மசக்கையினால் யுவஸ்ரீ சாப்பிட முடியாமல் கஷ்டப்பட, அவளை ஊஞ்சலில் அமர வைத்து உணவை ஊட்டி விட்டு அவளை உண்ண வைப்பான்.

அது கொஞ்சம் உடலில் ஒட்ட, அதிலிருந்து தினமும் அவளின் சாப்பிடும் இடமே ஊஞ்சலாக மாறிப்போனது.

“யார்கிட்ட இவ்வளவு நேரம் பேசிட்டு இருந்த யுவா?” குழந்தையைப் பற்றிச் சிறிது நேரம் பேசியிருந்து விட்டு கேட்டான் சூர்யா.

“நந்தினி தான்…” என்றவள் அவள் அழைத்த விவரத்தை பகிர்ந்து கொண்டாள்.

“நாம கல்யாணத்துக்குப் போகலைல… அதான் பால் காய்ச்சும் பங்சனுக்கு வர முடியுமான்னு கேட்டாள். நாம ஊருக்கு போற விஷயத்தைச் சொல்லி, இன்னொரு முறை வர்றேன்னு சொல்லியிருக்கேன்…” என்றாள்.

“ம்ம், ஓகே! ஊருக்குப் போயிட்டு வந்த பிறகு பார்க்கலாம். நான் தினேஷ்கிட்ட போனில் பேசிக்கிறேன்…” என்றான்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

பத்து நாட்களுக்கு முன் நடந்த தினேஷ், நந்தினி திருமணத்திற்குச் சூர்யா, யுவஸ்ரீ இருவருமே செல்லவில்லை.

யுவஸ்ரீ கர்ப்பமாக இருந்ததால் கூட்டத்திற்கு அழைத்துச் செல்லாமல் அவனும் போகாமல் இருந்து கொண்டான்.

மனைவிக்காக அவனும் அதிகம் வெளியே செல்வதில்லை. தன் மூலமாக மனைவிக்கு நோய் பரவி விடுமோ என்ற பயத்தில் முடிந்த வரை அத்தியாவசிய தேவைக்குத் தவிர வேறு எதற்கும் அவன் வெளியே செல்வதில்லை.

யுவஸ்ரீ மருத்துவமனை பரிசோதனைக்குத் தவிர வேறு எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தாள்.

கர்ப்பம் தரித்திருக்கும் நிலையில் கொரானா நோய் அதிகமாகத் தாக்கும் வாய்ப்புள்ளது என்று கேள்விப்பட்டதிலிருந்து ஒவ்வொரு விஷயத்திலும் மனைவியைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டான் சூர்யா.

“நாளைக்கு ஊருக்குப் போக வேற எதுவும் வாங்கணுமா பொண்டாட்டி? வழியில் கடைங்க எல்லாம் சரியா இருக்குமோ இருக்காதோ… இப்பவே வாங்கி வச்சுக்கிட்டால் நல்லது…” என்றான்.

முன்பு கடைக்குப் போவதையே கேவலமாக நினைத்தவன், இப்போது வீட்டுக்குத் தேவையான பொருட்களை எல்லாம் தானே சென்று வாங்கினான். 

“ஒன்னும் வேண்டாம் சூர்யா. எல்லாம் எடுத்து வச்சாச்சு…” என்றாள்.

“இந்த நேரத்தில் உன்னை அலைய வைக்கக் கஷ்டமாத்தான் இருக்கு. ஆனா அம்மா, அப்பாவை ஏற்கெனவே தனியா விட்டுட்டோம். இப்ப போக முடியலைனா அப்புறம் எப்ப நேரில் போக முடியுமோ தெரியலை…”

“எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை சூர்யா. போயிட்டு வந்திடுவோம். நாம என்ன உடனேவா ஊர் திரும்பப் போறோம்? கொஞ்ச நாள் அங்கே இருப்போம்ல… அதனால் ட்ராவல் அலுப்பு எல்லாம் இருக்காது. அவங்களும் பாவம் தானே?”

“ம்ம், வரும் போது வேணும்னா அத்தையை நம்ம கூடக் கூட்டிட்டு வந்திடலாம். டெலிவரி சமயத்தில் நாம ஊருக்கு போக முடியாமல் போனால் அவங்க இங்கே இருப்பது நல்லது…”

“இல்லை சூர்யா. எனக்கு உங்க கூடத் தனியா இருக்கணும். டெலிவரி சமயம் அம்மாவை கார் பிடிச்சு வர சொல்லிடுவோம்…”

“ஏன்டி, நாம இவ்வளவு நாள் தனியாத்தானே இருந்தோம்?” என்றான் சீண்டலாக.

“அப்போ என் கூடத் தனியா இருந்து உங்களுக்குப் போர் அடிச்சுப் போயிருச்சா?” போர்க்கொடி தூக்கினாள் மனைவி.

“தனியா இருக்க நினைக்கலை… ஆனா இருந்தா நல்லா இருக்கும்னு தோனுது…” என்றான் நமட்டு சிரிப்புடன்.

“ஆமா இவர் பெரிய காதல் மன்னன் கமல்னு நினைப்பு. பேச்சை பார்…” நொடித்துக் கொண்டாள்.

“காதல் மன்னனில் அஜித் தானே? கமல்னு சொல்ற?” கேலியாகக் கேட்டான்.

“போதும் என்னைக் கேலி செய்தது. நீங்க தனியாத்தானே இருக்கணும்? அப்போ சேலம் போற போது என்னை எங்க அம்மா வீட்டில் விட்டுட்டு வந்திடுங்க. அப்புறம் நீங்க ஜாலியா தனியா இருக்கலாம்…” என்றாள்.

“என் பொண்டாட்டியை விட்டுட்டு எனக்கு ஜாலியா? உனக்கு ஏன்டி என் மேல இவ்வளவு காண்டு? உன்னை விட்டு ஒரு நிமிஷம் கூட இருக்க மாட்டேன். டெலிவரிக்கே உன்னை எங்கேயும் அனுப்புவதாக இல்லை. அம்மா வீட்டுக்குப் போகணும்னு சொன்னால் உதை தான் உனக்கு…” என்று மிரட்டியவன், ‘விட மாட்டேன்’ என்பது போல் மனைவியைச் சுற்றி வளைத்துக் கொண்டான்.

அவளைத் தனிமையில் தவிக்க விட்டு வெளியே சென்றவன், இப்பொழுது ஒரு நிமிடம் கூட அவளைப் பிரிய மறுத்ததை நினைத்து உள்ளம் பூரித்துப் போனாள் யுவஸ்ரீ.

பின்னால் கையை விட்டு கணவனின் பின் கழுத்து வரை வெட்டி விட்டிருந்த தலைமுடியைக் கலைத்து விட்டாள்.

லாக்டவுனில் இன்னும் நீளமாக வளர்ந்திருந்த முடியை பின் கழுத்தை மறைக்கும் அளவு வரை மட்டும் வெட்டி விட்டிருந்தான் சூர்யா.

“என் புருஷனை விட்டு நான் எங்கேயும் போகலை… போதுமா?” என்று கொஞ்சினாள்.

“தேங்க்ஸ்டி பொண்டாட்டி…” என்று அவள் கன்னத்தில் இதழ் பதித்தான்.

மறுநாள் காலை ஐந்து மணிக்கு எழுந்து குளித்து ஊருக்குக் கிளம்பினர்.

வீட்டை பூட்டி விட்டு கீழே வந்து, அங்கிருந்த காரின் கதவை மனைவிக்குத் திறந்து விட்டான் சூர்யா.

மனைவி கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரிந்த உடனே கார் வாங்க முடிவு செய்து வாங்கியும் விட்டான்.

கூட்டத்துடன் கலக்க விடாமல் மனைவியை அழைத்துச் செல்ல கார் தான் அவனுக்கு வசதியாக இருந்தது.

மனைவி வசதியாக அமர்ந்ததும் காரை எடுத்தவன், “தலைக்குப் பில்லோ வச்சுக்கோ பொண்டாட்டி. கொஞ்ச நேரம் தூங்கு. காலையில் சீக்கிரம் எழுந்துட்ட…” என்றான்.

“இப்ப தூக்கம் வரலை சூர்யா. கொஞ்ச நேரத்துக்குப் பிறகு தூங்குறேன்…” என்றாள்.

“சரி, அப்ப நான் பாட்டு போட்டு விடுறேன்…” என்றவன் பென்ட்ரைவில் சேகரித்து வைத்திருந்த பாடல்களை ஒலிக்க விட்டான்.

முதலில் ஒரு இளையராஜா பாட்டு பாட, அடுத்ததாக ஏ ஆர் ரகுமான் பாட்டு என்று மாறி மாறி பாட ஆரம்பித்தது.

பயணத்தின் போது அவளுக்கு இளையராஜா பாடல்கள் பிடிக்கும் என்றால், அவனுக்கு ஏ ஆர் ரஹ்மான் பாடல்கள் பிடிக்கும்.

அதனால் இருவரின் ரசனைக்கு ஏற்ப பாடல்களைத் தேர்வு செய்து மாற்றி மாற்றி ஒலிப்பது போல் சேகரித்து வைத்திருந்தனர்.

இருவரின் ரசனைகளும் வேறாக இருந்தாலும், இருவருமே அவரவர் ரசனையை ஏற்று ரசிக்கப் பழகியிருந்தனர்.

பயணத்தின் நடுவில் ஒரு இடத்தில் நிறுத்தியவன், “நீ காரிலேயே இரு பொண்டாட்டி. இதோ வந்திடுறேன்…” என்று இறங்கிச் சென்றான்.

திரும்பி வரும் போது அவன் கையில் ஒரு காஃபி இருந்தது.

“இந்தா காலையில் உனக்குக் காஃபி குடிச்சே ஆகணுமே, குடி…” என்று கொடுத்த கணவனைக் காதல் பொங்க பார்த்தாள் யுவஸ்ரீ.

திருமணம் முடிந்து முதல் முதலான பயணத்தின் போது அவளைக் கண்டு கொள்ளாமல் இறங்கி கடைக்குச் சென்றவன், இப்போது அவளுக்கு என்ன பிடிக்கும் என்று அறிந்து தானாகச் சென்று வாங்கி வந்த அவனின் மாற்றத்தை காதலுடன் பார்த்தாள்.

“என்னடி இது, கண்ணாலேயே ரொமான்ஸ் பண்ற?” சொக்கிப் போய்க் கேட்டான்.

“என் புருஷன், நான் ரொமான்ஸ் பண்றேன். உங்களுக்கு என்னவாம்?” என்றவள், முகத்தில் மாட்டியிருந்த மாஸ்க்கை கழற்றி, உதட்டை குவித்து முத்தத்தைப் பறக்க விட்டாள்.

பதிலுக்குத் தானும் மாஸ்க்கை கழற்றி, தன் உதடுகளைக் குவித்து மனைவி பறக்க விட்ட முத்தத்தைப் பெற்றுக் கொண்டான்.

“டச்சிங் டச்சிங் இல்லாமையே ரொமான்ஸ் எப்படிச் செய்வதுன்னு நல்லாவே கத்துக் கொடுக்கிறடி பொண்டாட்டி…” என்று கொஞ்சியவன், சானிடைசர் போட்டு கைகளைச் சுத்தப்படுத்தி விட்டு, அவளின் முகத்தைத் தீண்டிய முடிக்கற்றைகளைக் காதலுடன் ஒதுக்கி விட்டான்.

கணவனைப் பார்த்துக் கொண்டே காஃபியை பருகினாள் யுவஸ்ரீ.

அவள் காஃபியைக் குடித்து முடித்ததும், “கையை எங்கேயும் வச்சுடாதே!” என்று சொல்லிவிட்டு பேப்பர் கப்பை வாங்கிக் குப்பை தொட்டியில் போட்டு வந்தவன், “கைக்குச் சானிடைசர் போட்டுக்கோ…” என்று காரில் இருந்த சானிடைசரை தன் கைகளுக்கும் போட்டுக் கொண்டு, அவளின் கைகளிலும் போட்டான்.

காரை எடுத்தவன், மீண்டும் பயணத்தை ஆரம்பிக்க, ஹியரின் மேலிருந்த கணவனின் கையின் மீது தன் கையை வைத்து அழுத்திக் கொடுத்தாள் யுவஸ்ரீ.

அவளின் கையுடன் தன் கையைக் கோர்த்துக் கொண்டான் சூர்யா.

இருவரின் மனதுமே நிறைந்து போனது.

அந்த இனிமையான பயணத்தைப் போலவே, அவர்களின் வாழ்க்கைப் பயணமும் இனிமையாகப் பயணிக்கும் என்பதற்கு அப்பயணம் சான்றாகிப் போனது.